வம்சத்துவம்சம்
(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
நிச்சயமாக நீங்கள் அச்சப்பட்டே ஆக வேண்டும்!
நீங்கள் ஒரு ஹோமோவாக இல்லாவிட்டாலும், உங்கள் உடம்பில் எயிட்ஸ் கிருமிகள் இல்லாவிட்டாலும், நீங்கள் அச்சப்படவே வேண்டும் எதிர் காலத்துக்காக.
நீங்கள் ஒரு ஹோமோ வாக இருந்தாலும், அச்சப்பட்டே ஆக வேண்டும். ஏனென்றால், எயிட்ஸால் நீங்களும் இறக்குமுன், நானே உங்களைக் கொல்லப் போகிறேன்! ஹோமோக்களைப் பழி வாங்கத்தான் கடந்த ஒரு மாதமாகப் பேயாய் அலைகிறேன்!
நான் தற்கொலை செய்து ஒரு மாதம் இருக்கலாம். நான் என்னை அவ்வளவு அவசரப்பட்டுக் கொன்றிருக்கத் தேவை இல்லைதான். மரணம் என்னை மிகவும் நெருங்கித்தான் இருந்தது. என்றாலும்….. என்றாலும் என் நெஞ்சு என்னைச் சுட்டுவிட்டதே!
நெஞ்சே சுட்டுவிட்ட பிறகு, மரணத்தை எதிர்பார்த்து ஏன் கோழைத் தனமாகக் கிடக்க வேண்டும்? கோழைமை, வீரம் என்பன பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட எனக்கு நேரம் இருக்கவில்லையே! ஆஸ்பத்திரிக் கக்கூசுக்குள் போனேன்; என் இடையில் எப்போதுமே கிடந்த நூலைக் கழுத்தில் இறுக்கிக் கொண்டேன்.
மரண வேதனை இருந்ததெல்லாம் உண்மையா?…… மரணத்தைப் பற்றி நான் வைத்திருந்த நம்பிக்கை காரணமாக, அந்த வேதனை எனக்குத் தெரிந்திருக்கவில்லை போலும்.
ஹோமோக்களைப் பழி எடுப்பதற்காக நான் சாகவில்லை. செத்த பிறகுதான் என்னை நான் உணர்ந்தேன்! என் கதை எனக்குத் தெரியவந்தது! நான் நானாக மாறினேன்! பலன்:-
பழி வாங்கும் சபதம்!
ஒரு ஹோமோ மற்றைய ஹோமோக்களைப் பழி வாங்கப் புறப்பட்டேன்! சிரிப்பு வருகிறதா உங்களுக்கு? சிரித்துவிட்டுப் போங்களேன்! என் வரலாற்றைக் கேட்ட பிறகு சிரிப்பு வருகிறதா என்று பார்ப்போம்.
நீங்களும் ஒரு ஹோமோவா? அப்படியானால் உங்களை நான் கொல்ல வேண்டும்! கையும் மெய்யுமாக நான் உங்களைப் பிடிக்கும் வரையில் வேண்டுமானால் தப்பி இருப்பீர்கள்! எத்தனை நாள் உங்களால் பொய் வேஷமிட முடியும்?
அல்லது மரணத்துக்கு அஞ்சி மறுத்துவிடப் போகிறீர்கள்! மறுங்களேன்! எவ்வளவு காலத்துக்கு? என்றாவது ஒரு பொழுது என்னிடம் அகப்படத்தான் போகிறீர்கள்! சாகத்தான் போகிறீர்கள்! என்னை வெருளியாக நினைத்து மாட்டிக் கொள்ளாதீர்கள்!
ஆவி உளறுவதாகச் சமாதானப்பட்டுக் கொள்ள வேண்டாம்! பல்லாயிரம் பல்லாயிரம் ஆண்டுகளாக அலைந்து திரியும் எத்தனையோ ஆவிகளுடனெல்லாம் கதைத்துவிட்டேன் நான். அவற்றின் அனுபவங்களை எல்லாம் விஞ்ஞான காலத்து நீங்கள் நம்ப மாட்டீர்கள்! உங்கள் அனுபவம் உங்களை நெருங்கும் போது, அவற்றை உணரக்கூட நீங்கள் உயிரோடிருக்க மாட்டீர்கள்!
மாரடைப்பு புதியதா உங்களுக்கு? புரியாத நோய்களுக்குரிய பெயர் இதுதான்! ஆவிகளின் திட்டங்கள் இந்தப் பெயரில்தான் அரங்கேற்றப்படுகின்றன என்பதை அறிவீர்களா? இந்தப் பெயரில்தான் உங்களையும் நான் பழி வாங்கப் போகிறேன்! புளியமரத்துப் பேய், முனியாண்டிப் பேய், மோகினிப் பேய் என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்களே!
என் எச்சரிக்கையை நீங்கள் ஏற்று இன்றோடு திருந்தி விட்டீர்களானால், பிரச்சினையே இல்லை. ஆனாலும், ஹோமோப் பேராசைக்காரன் அவ்வளவு எளிதில் சூனியமாகிவிடுவானா?
குடிகாரன் திருந்துகிறான்; கூத்தியான் திருந்துகிறான்; திருடன் கூடத் திருந்துகிறான். ஹோமோ? நான் திருந்தவில்லையே! நீங்கள் மட்டும் திருந்தப் போகின்றீர்களா?
எனக்கும் சிரிப்பு வருகிறது! ஏனென்றால் நான் உங்கள் கூற்றை நம்பக் கஷ்ட்டமாக இருக்கின்றது! உங்களுக்கு நேர காலம் கிடையாது; இடம், சூழல் தெரியாது; சொத்தை, சூம்பல் புரியாது! பிறகெப்படித் திருந்துவது?…
இந்த ஆவியுலகத்துக்குள் பிரசவமான பிறகுதான் அரிய பல ஞானங்களை நான் அடைந்து கொண்டிருக்கிறேன். அன்றைய அற்பங்கள், இன்றைய அற்புதங்கள்! முன்னைய இருள்கள் இன்றைய தீட்சண்யங்கள்! இந்த ஆவிகள்தாம் குர்ஆனைப் பற்றிக் கூறுகின்றன! உங்களுக்கு ஆச்சரியமாக இல்லை?
ஹ்ம்!…. என்றோ நான் குடித்திருக்க வேண்டிய அமுத பானம்!
பச்! … வயிற்றையே இழந்த பிறகுதான் அமுதம் பற்றிக் கேள்விப்படுகிறேன்!….
மனிதப் பன்றியாய்ப் பூமிச் சாணத்தை நான் மேய்ந்து கொண்டிருந்த காலத்தில், இந்த மனித இலக்கணத்தைப் பற்றிய செய்தி ஓரளவு என் காதுகளிலும் விழுந்ததுதான்! அதன் இலக்கியங்களுடன் பழகியும் இருக்கிறேன். அப்படி இருந்தும் என் நரகமே என்னைத் தடுத்து வைத்திருந்தது!
இப்படி நரகம், சொர்க்கம் என்பன பற்றியெல்லாம் நான் பேசும் போது நீங்கள் உங்கள் முகங்களையே அவலட்சணப்படுத்திக் கொண்டீர்களானால், நீங்களும் என்னோடு சேர்ந்தவராகத்தான் இருக்க முடியும்! ஏனென்றால் என்னை என்றோ திருத்தியிருக்க வேண்டிய பிரம்பு, அந்தக் குர்ஆன் பல்கலைக் கழகத்தில்தான் இருந்திருக்கின்றது!
“அடப் பாவீ! அச்சொட்டாகக் கூறப்பட்டிருக்கிறதேடா! உயிரோடிருந்த காலத்தில் இதைப்பற்றி எல்லாம் தெரிந்துகொள்ளாமல் இருந்துவிட்டா இன்று இப்படிப் போனாய்?” என்று இங்கே ஆவிகள் என்னைக் கிண்டல் செய்கின்றன! ஆனால், இதே வினாவை அந்த ஆவிகளிடம் நான் கேட்டால் அவை என்ன சொல்லுமோ !……
ஹோமோக்களைக் கொன்றுவிடும்படி குர்ஆன் கூறுகிறதாமே? தறுதலைத்தனம் பிடித்த அப்படிப்பட்ட ஒரு சமூகத்தையே இறைவன் அழித்துவிட்டானாமே?…… கொஞ்சம் புரட்டிப் பாருங்கள்! ஹெறோல்ட், புஷ்ப்பா தங்கத்துரைகளை ஓட்டிவிட்டு, இரகஸியமாகவாவது கொஞ்சம் பார்த்துத் தொலையுங்கள் யான் பெற்ற இன்பம் நீங்கள் பெறாமலிருக்கவாவது!
குர்ஆன், படைத்தவனின் மொழி என்று ஆவிகள் போற்றுகின்றன. ஆவிகள் பொய் சொல்வதில்லை. கைவாறு போடும்; ஆனால் பொய் சொல்லா! இறை மொழி ஆனபடியால்தான், என்னை அம் மொழி நாடவும் இல்லை; நான் அதை நாடவும் இல்லை! இந்த ஆவிகள்கூட எப்படி அதைத் தெரிந்து கொண்டன? மனிதர்கள் ஓதும்போது கேட்டிருக்குமோ?….நான்கூட இனி மேல் கேட்கலாம். அதனால் நானும் ஒரு வேளை செத்த இந்த நிலையில், அதாவது இப்போதாவது, பிராயச்சித்தம் தேடப் பார்க்கலாம்!…
குர்ஆன் ஓதுபவர்கள் உரக்க ஓதட்டும்; சீரழிந்து திரியும் ஆவிகள், அதைக் கேட்டுப் பிராயச்சித்தம் பெறட்டும்!
என் விமோசனம் இருக்கட்டும்; உங்கள் விமோசனம் எப்படி? நீங்கள் இதுவரையிலும் ஒரு ஹோமோதான் என்றால், இனி மேலாவது திருந்துவீர்களா?
என்னால், நம்புவதற்குக் கஷ்ட்டமாகத்தான் இருக்கிறது! அவன் திருந்த மாட்டான், நோய் காவி, என்ற முடிவில்தானே அவனைக் கொன்றே போடும்படி குர்ஆன் கூறுகிறதாம்? நானும் இப்போது குர்ஆன் பக்கம்; ஜாக்கிரதை!
எயிட்ஸ் புதியதென்று நினைத்துக் கொண்டீர்களா? உங்களைப் போலத்தான் நானும் ஒரு முட்டாளாக இருந்தேன். இது கோடி காலத்து நச்சுப் பயிராம்! பாவம், இந்த ஆராய்ச்சியாளர்கள் இனித்தான் மருந்து கண்டு பிடிக்கப் போகிறார்களாம்! கழுத்தை நோக்கிக் கத்தியை வீசிவிட்டு இரத்தத்தை நிறுத்துவதற்காகத் துணியைத் தேடுகிறார்கள்!
நான் எப்படி ஹோமா றோமியோ ஆனேன்? திட்டவட்டம் இல்லை. ஆனால் சில சலனங்கள் புகைக் கோடுகளை இழுக்கின்றன.
பாலியத்து என் பக்கத்தில் என் பெற்றோர்கள் அசைகிறார்கள். இந்த அசைவுகளில்தாம் என் பிற்காலத்தைய ஆசைகள் ஜனித்திருக்குமோ?….. ஒரு பிஞ்சுத் தசையில் நஞ்சு ஏற்றப்படுவதை அவர்கள் உணராதவர்களாக இருந்திருக்கலாம். நான் பிறந்து கிடந்ததற்காக அவர்கள் தங்கள் இல்லறப் பொக்கிஷத்தைத் தியாகம் செய்திருக்க வேண்டும் என்று நான் கூறவில்லை. என்றாலும் அவர்கள் எனக்காகக் கூச்சப்பட்டிருக்கலாம்.
பாலிய காலத்து நினைவுகளில், சில நாய்களும் ஆடு, மாடுகளும் தடதடவென்று ஓடுகின்றன. இந்த மிருகங்களோ என் பெற்றார்களோ, என் ஹோமோத் தனங்களுக்குரிய தரிசு நிலங்களாக இருந்திருக்கலாமோ?
ஆறேழு வயதுகளில், என்னையொத்த தோழர்களுடன் தமாஷ் செய்ததாகவும் ஒரு நிழல் படிந்திருக்கிறது. ஆனால்,
ஆனால், இவ்வகை விஷயங்கள்கூடத் தங்களை ஹோமோவாக்கவில்லை என்று சில ஆவி நண்பர்கள் கூறுகிறார்கள்.
வாய் கூசும் வார்த்தைகளைப் பல மேதாவிகள் சர்வ சாதாரணமாக உபயோகித்தார்கள்.
அம்மா, ஆத்தா, அக்கா என்பது அவர்களின் அகராதிப் பெயர். இதன் கருத்துத் தாக்கம் என்னுள் ஒரு வேளை
வேளை ஆராயப்பட்டதால் நான் ஹோமோவாகி இருப்பேனா?….
அடுத்த, எதிர்த்த வீடுகளிலிருந்து புறப்பட்ட அண்ணாமார்கள், மாமாமார்கள், தாத்தாமார்கள் என்றொரு பட்டாளமே எனக்குள் ‘கருக்’ கென்று நினைவு தொடுக்கிறார்கள்! அவர்களுடைய மூப்புகள் என் பெற்றோர்களின் கண்களைக் கட்டிவிடும்! அவர்கள் தந்த இனிப்புகளும் சில்லறைகளும் என் வாயைக் கட்டிவிடும்! அந்தப் பட்டாளத்தின் உரசல்களும் உருவல்களும் ஊரடங்குச் சட்டங்களாக இருந்தனவே, அவைதாம் எனக்குச் சவக்கிடங்கு கிண்டினவா?…
எதுவாக இருந்தாலும், அவ்வாறாகத்தான் நான் வயதுக்கு வந்தேன். தனிக்காட்டு அராஜகமும் தொடர்ந்து கிடைத்தது.
குழந்தை அழுதால் சிரிக்கப் பழக்குகிறார்கள். முலைப்பாலை ஊட்டிய என் அம்மாவே, வெவ்வேறு பராக்குகளில் அப் பாலை மறக்கடிக்கவும் செய்தாள். இந்தச் சேர்க்கையைப் படித்துக் கொடுத்தவர்களோ கண்டு கொண்டவர்களோ அதை வளர வைத்தார்களே தவிர மறக்கடிக்கப் போதிக்க வில்லையே! பிறகெப்படி என்னால் மாற முடியும்?
வித்தியாசமான ஆண்களுடன் என்னை முதன்முதலில் கண்டுகொண்டவர் அப்பாதான். என்ன செய்துவிட்டார் என்று நினைக்கிறீர்கள்? ‘டேய்!’ என்று கூச்சலிட்டார். எழும்பி ஓடிவிட்டேன்! அவ்வளவுதான்!
இரண்டொரு நாள் என்னுடன் முகம் கொடுக்காமல் உலவினார். பிறகு சகஜமாகிவிட்டார்! ஒரு வேளை அவரும் தன் சிறு வயதில் இப்படித்தானோ?….
அவரே இரண்டாம் முறை கண்ட போது, இரண்டு தட்டுத் தட்டினார். மூன்றாம் முறை செம்மையாக உதைத்தார்! அப்போது என் அம்மாவும் மூக்கைச் சீறிச் சீறி அழுதார். அடுத்தடுத்த முறைகள் வரும்போதெல்லாம் வீட்டுக்குள் ‘ஷெல்’கள் அடிபட்டன. பிறகு பிறகு ஊர்ச் சந்திகள் கிசுகிசுக்கத் தொடங்கின. பரம சாதுவான என் அண்ணா, பிசாசு போல்
ஒரு நாள் வீட்டுக்குள் வந்தான். என்னை, என் பரட்டைத் தலையால் இழுத்துக் கொண்டு போய்க் குசினித் தூண் ஒன்றில் தூண் ஒன்றில் கட்டி வைத்து இரண்டு கண்களிலும் கொச்சிக்காய்த் தூள் தூவிக் கோப்பிக் கம்பை என் உடம்பிலேயே முறித்துப் போட்டுவிட்டு வெளியே போனான். அம்மாதான் அழுது, அவிழ்த்து, எண்ணெய் தடவிப் புலம்பி….
ஒன்றுமறியாத நான் எப்படித் திருந்தியிருக்க முடியும்? ஒரு குற்றமும் நான் செய்திருக்கவில்லையே! அண்ணாமார்,மாமாமார், தாத்தாமார்களை எல்லாம் இவர்கள் மிகவும் கனம் பண்ணுகிறவர்கள் ஆயிற்றே!…
அவர்களின் தண்டணைகளை நான் பெரிது படுத்தவே இல்லை. மற்றைய வீடுகளிலும் பிள்ளைகளை அடிக்கிறார்களே, இதற்குத்தானாக இருக்க வேண்டும்! அவர்கள் அலட்டியா கொள்கிறார்கள்? வீட்டுக்காரர்கள் கண்டித்தால் அதைப் பிள்ளைகள் பெரிதுபடுத்துவார்களா?…….
சரியான வழி முறைகளை அவர்கள் அணுகவில்லை என்று இப்போதுதான் தெரிகிறது. ‘யாரிடமிருந்து படித்தாய்?’ என்று ஒரு வார்த்தை வினவியிருந்தால் சொல்லியிருப்பேனே! அதிலிருந்து அவர்கள் பல பூகம்பங்களைச் சமாளித் திருக்கலாமே!…….
நீங்கள் அச்சப்பட்டே ஆக வேண்டும்! உங்கள் பிள்ளைகளைச் சுற்றி ஒரு கண் வேலி போட்டுக் கொள்ளுங்கள். வேலியில் எங்காவது பொத்தல் ஏற்பட்டதென்றால் உறுதியாகத் திருத்துங்கள். உங்களுடைய அறியாமையால் உங்கள் வம்சத்தையே துவம்சம் செய்து விடாதீர்கள்.
“இவனால நம்ம குடும்ப மானமே போகுதே!…. சீ!… இவன் புள்ளயா பன்டியா?” என்று என் அப்பாவைப் போல் கத்தாதீர்கள்.
”ஏன்டா இப்பிடியெல்லாங் கெட்டுப் போற?” என்று என் அம்மாவைப் போல் ஒப்பாரி வைக்காதீர்கள்.
“சீ! அந்தப் பயலோட சேந்தா நம்ம புள்ளயுங் கெட்டுக் குட்டிச் சுவராப் போய்றுவான்!” என்று ஊரார் என்னைத் தீட்டினார்கள்.
நீங்கள் ஒரு ஹோமோவா? “தம்பி! ஹி ஹி!…. கொஞ்சம் வர்றியா இப்படி?” என்று இனிமேல் இளியாதீர்கள்! கொன்று விடுவேன், கொன்று!
திருந்துவதைப் பற்றி நான் எந்தக் காலத்திலுமே உயிரோடு எண்ணிப் பார்த்ததே கிடையாது.
நான் சென்றவிடமெல்லாம் சிலேடை இருந்தது. பாடசாலையில் நான் ஒரு சுதந்திர மிருகம். எனக்கென்று ஒரு வட்டமே இருந்தது. ஒரு வாத்தியார்கூட எனக்கென்று மாலைகளில் ‘டியூஷன்’ வைக்கத் தொடங்கி விட்டார்!
புகைந்த ஊர் எரியக் கனன்றது. அதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது! நான் ஏன் ஊருக்கே பிரதிநிதியைப் போல் சீரழிந்தேன்? அண்ணாமார்,மாமாமார், தாத்தாமார், டியூஷன்மார், தோழன்மார் எல்லோரையுமே ஒதுக்கிவிட்டு என் தலையில் மட்டும் ஏன் பெற்றோலை ஊற்றினார்கள்?
அவர்களை விட நான்தான் அதிகம் ஊறிப் போனவன் போலத் தெரிந்ததோ?… அல்லது எனக்கு எதுவிதமான போர்வையும் கிடைக்க வில்லையோ?.. ஹோமோவுக்குள்ள இலக்கணங்கள் எனக்குத்தான் பொருந்தியிருந்தனவோ? அல்லது அவர்கள் உத்தரவு பெற்றவர்கள், நானது இல்லாதவனோ?…
எனக்கு வழி காட்டி வைத்த அந்த மூதாதைகளையும் நான் தேடிக் கொண்டுதான் திரிகிறேன்! என்னிடம் அவர்கள் இன்னும் அகப்படவில்லை. சிலர் செத்துப் போயிருக்கலாம். மீதிப்பட்டவர்களையும் நான் கொல்லாமல் விடப் போவதில்லை.
சிலரை நான் அதி சீக்கிரமாகவே பழி வாங்க வேண்டும்! அந்தக் காலத்தில், என்னைத் தாங்களல்லாத சிலரோடு கண்ட போது, தாங்கள்தாம் என் குருமார்கள் என்பதையும் மறந்து, என்னைப்பற்றி ஊர் முழுதுமே பறை அடித்த அதி தூயவர்கள் அவர்கள்!…….
அதி மோசமான வயதுக்கு நான் வந்துவிட்டேன். பதினேழு! நான் வீட்டைவிட்டே ஓடிப் போன வயது. அந்த ஓட்டம்தான் என்னை மகா மோசமாக்கி இருக்க வேண்டும்.
சிறு வயதில் இப்படியாக வீட்டை விட்டு ‘ட்றாவலிங்’ கிளம்பியவர்களுள் அநேகர், பிற்காலத்தில் பெரும்பெரும் புள்ளிகளாக மாறி இருக்கிறார்கள் என்று ஆவி நண்பர்கள் சத்தியம் செய்கிறார்கள். நான் என்னவானேன்? என்னையே ஒரு கரும் புள்ளியாக்கிக் கொண்டேன்.
வியாபாரம் தீர்ந்ததும் முதலாளி வீட்டுக்குப் பறக்கும் ஒரு சில்லறைக் கடை எனக்குப் புகலிடமாகக் கிடைத்தது. ஐந்து சிப்பந்திகளோடு நானும் ஆறாகச் சேர்ந்து விட்டேன். பகலில் அவர்கள் சிப்பந்திகள்; இரவில் சிப்பாய்கள்!
நாம் திருந்துவதற்குப் பல சந்தர்ப்பங்களை விதி தரத்தான் செய்கிறது- கெட்டுப் போவதற்குப் பலப்பல வாய்ப்புக்களைத் தருவதன் மூலம்.
கடையில் வாடிக் கிடந்த ஐந்து பேருமே, ஒருவருக்குத் தெரியாமல் ஒவ்வொருவராக எனக்குச் சக’பாடி’யானார்கள். அது வரையில் மேற்போக்காக நான் அறிந்து வைத்திருந்த இந்தக் கலையை ஆழமாக எனக்குப் பயிற்றித் தந்தவர், ஐந்து பேர்களுள் வயதாகிப் போய்க் கிடந்த சமையற்காரர்தான். நான் எயிட்ஸ காவியாக மாறியதற்குப் பேராசிரியர் இந்தப் பிற்போக்குவாதிதான்.
ஆறு மாதங்கள் வரையில் நான் அந்தக் கடையில் அனுபவம் பெற்ற பிறகு, தந்தையார் எப்படியோ என்னைக் கண்டுபிடித்து வீட்டுக்குக் கூட்டிப் போனார். அரையாண்டுப் பிரிவில் என்னைப் புதியவனாகவே என் வீட்டார் மதித்தார்கள். சிறியதொரு முதலீட்டால் அப்பா எனக்கொரு சில்லறைக் கடை போட்டுத் தந்தார்.
வீட்டாரின் புத்திமதிக் காற்று எப்போதும் வீசும். சாத்திர, சம்பிரதாய, கிரகதோஷ நீப்புக்கள் வேறு.
பன்றி, மலம் தின்னக் கூடாதென்று அவர்கள் பிரார்த்தித்தார்கள்!
மரபு ரீதியான கட்டுப்பாடுகள், நம் வாழ்க்கையுடன் பிணைந்து பண்பாடாகி விட்டிருக்கின்றன. இதனால்தான் சில உண்மைகளை வாய்விட்டு நம்மால் அலச முடியாமற் போகின்றது. அலச முனையும்போது, பண்பாட்டுக்கே வெட்கம் வந்து விடுகிறது! என் விஷயத்திலும் அப்படித்தான்.
விளக்கமான புத்திமதிகளைக் கூறவோ அறிவு பூர்வமான வழிகளைச் சுட்டிக் காட்டவோ அவர்களால் முடியாமற் போய்விட்டது; என்னாலும் திருந்த முடியாமற் போய்விட்டது.
சமூகத்தைக் குற்றம் சொல்வதில் அர்த்தம் இல்லைதான். ஏனென்றால் குர்ஆனில் சொல்லப்பட்ட மாதிரி அழிவுதான் சரியான முடிவு!
என் பெற்றோர்களும் அப்படித்தான் இருந்தார்களோ – அழிவை எதிர் பார்த்து,
ஆனால் இது வெளியே தெரிந்தால் எல்லாருக்கும் வெட்கம் என்ற பயம்தான் அவர்களுடைய நடவடிக்கைகளிலிருந்து வெளிப்பட்டது. நானும் கவனமாக இருந்தேன் விஷயம் வெளியே தெரியாமல்!
என்னைப் போன்ற கட்டாக் காலிகள் கட்டுப்படுவதற்குக் கல்யாணம் ஒன்றேதான் ஒரே வழி என்ற ஐதீகம் நம்மிடையே நிலவும் பாவத்தால்,என் பத்தொன்பதாவது வயதில் அந்த அபாண்டமும் நடந்து முடிந்தது!
ஐயோ! அவளையும் பிள்ளைகளையும் காவிகளாக்கும் சாவு மணி!
கல்யாணம் சொர்க்க நிச்சயமாம். அந்தச் சொர்க்கம்கூட என்னை நரகத்துக்குத்தானே நியமித்தது! எயிட்ஸுக்கு மனைவியாதல் என்பது எவ்வளவு பாரதூரமான தண்டனை!
இருதயம் உங்களுக்கு இருக்குமானால் உங்கள் உறுப்பையே நீங்கள் வெட்டிக்கொள்வீர்கள்!
உங்கள் மனைவி எப்படி?…. பாவம், அவளைக் கெடுத்து விடாதீர்கள். தற்பாதுகாப்புச் செய்து கொள்ளுங்கள்! அகப்பட்டீர்கள் என்றால் பழி வாங்கிவிடுவேன்!
என் மனைவி குரூபி அல்லள். அடங்காப் பிடாரியும் அல்லள். நல்ல குடும்பப் பெண். என் கொடுமைகளுக்கு ஏற்றபடி வளைந்து வாழ்ந்தாள். எனினும் அவள் எனக்கானதொரு கம்பியூட்டரைப் போல்தான் இருந்தாள்.
பாலிய இல்லறமோ என்றும்போல் வெளிப்பிரதேசத்தில் நடந்து கொண்டுதான் இருந்தது!
மலடி குழந்தை பெற்றது போல, என் மனைவியும் ஒரு பெண் குழந்தையைப் பெற்றாள். அதிலெல்லாம் எனக்கு எந்தவிதமான ஈடுபாடும் இருக்கவில்லை. பெண்ணையே வெறுக்கும் எனக்கு அப்படி ஒரு பெண் குழந்தை பிறந்ததென்பதுதான் ஆச்சரியம்!
மறுபடியும் வீட்டை விட்டு நான் ஓடிப் போனேன். ஓடிப் போவதற்குச் சரியான, வலுவான காரணம் எதுவும் இருந்ததாக எனக்குப் படவில்லை. ஏதோ ஒரு பூதம் என் பின்னால் இருந்து பிடரியைப் பிடித்துத் தள்ளிக் கொண்டிருந்தது என்றுதான் சொல்ல முடியும் சித்தம் போக்கே ஜீவன் போக்கு என்ற மாதிரி.
எனக்கு வெறுத்துப் போன பெண்ணுலகத்தைக் குழி பறித்துப் புதைத்த தன் பிறகு, அதன் மீது என் ஆண் சாம்ராஜ்யத்தை நிலை நிறுத்திப் பத்து வருஷங்களாக நான் இஷ்ட்டம் போல் அலைந்தேன். நீங்கள் ‘ட்றகியூலா’ப் படம் பார்திருக்கிறீர்கள்தானே? அந்த ‘ட்றகியூலா’ வின் இடத்தில் எயிட்ஸை வைத்துப் பாருங்கள். என்னையும் நினைத்துக் கொள்ளுங்கள்.
நீங்களும் ஒரு ஹோமோவாக இருந்தால், உங்களையே நினைத்துக் கொள்ளுங்கள்!
ஒரு வெளி நாட்டு எயிட்ஸைப் பிடித்துக் கொடுத்த கடற்கரை, என்னையும் பிடித்துக் கொடுத்து விட்டது! அமெரிக்கனை நான் அன்றைய சோதனையில் தோற்கடித்திருந்தேனாம்! இன்னும் ஓர் அரையாண்டுக்குள் நான் செத்துப் போவேன் என்றும் டாக்டர்மார் ஆண்டவனானார்கள்!
இவர்களுடைய ஆராய்ச்சிகளோ சாவுத் தீர்ப்போ ஒரு பொருட்டில்லை எனக்கு. ஒரு வார காலமாக அடைபட்டுக் கிடந்த உணர்வுதான் சித்திரவதை செய்தது. ‘ஓடிப் போ! ஓடிப் போ!’ என்று மறுபடியும் அந்தப் பூதம் தள்ளிக் கொண்டிருந்தது. ‘சாகும் வரையிலாவது அனுபவி!’ என்று என்னைக் குடைந்தெடுத்து விட்டது அது. உத்வேகம் கிடைத்த பிறகு அங்கிருந்து தப்பி ஓடுவது ஒன்றும் எனக்குப் பெரிதாக இருக்கவில்லை.
உலகமே எனக்கு அஞ்சியது என்பதைவிட, மாஸ் மீடியாக்கள் அச்சுறுத்தின என்பதுதான் பொருத்தமானது! என்னால் மூன்று சிறுவர்கள் அந்தக் குறுகிய காலகட்டத்தில் வைத்தியத்துக்குள் திணிக்கப்பட்டார்கள். நான்காவது ‘பயல்’ தான், என்னை நோக்கி ஓடி வந்துகொண்டிருந்த என் விதியை என் மீது படர விட்டான்!
அற்புதங்கள் என்று சொல்கிறார்களே, அப்படி ஏதாவது ஒன்று நடந்து, அந்தப் பயல் என்னிலிருந்து தப்பியிருக்கலாம். ஆனால் விதிக்கப்பட்டதிலிருந்து நான் எப்படித் தப்பிக்க இயலும்? மனிதன் தனக்குத்தானே இட்டுக்கொண்ட சட்டங்களைவிட, படைத்தவன் மனிதனுக்கு இட்டுள்ள சட்டங்கள் கொடியன; மிகக் கொடியன!
அந்தப் பாலகன் மூலமாகத்தான் நான் முதலும் கடைசியுமாகத் திருந்தினேன்! அவனால்தான் நான் இன்று ஹோமோக்களைப் பழி வாங்கும் எயிட்ஸ் ஆவியாகத் திரிகின்றேன்! தற்கொலையைப் பற்றியே கனவும் கண்டிராத சுயநலம் நான், அந்தச் சிறு பல்கலைக் கழகத்தால்தான் தற்கொலையையும் செய்து கொண்டேன்.
மாலைக் கருக்கலில் தனிப்பாதையில் வந்த அந்தச் சிறு மயிலிடம் நானே இறகு கேட்டுக் கொண்டு நிற்கவில்லை.. நான் இறகு பிடுங்கிய அந்த மயிலின் பிருஷ்ட்டப் பகுதியில் சிவப்புக் கோடொன்று எனக்காக என் விதியை எழுதி வடிந்தது. திரும்பிப் பார்த்தபோது, சட்ட விலங்குகள் எனக்காகத் திறந்து நின்றன.
என் கிருமிகளிலிருந்து அவனை விடுவிக்கப் பெரிய போராட்டம் ஆஸ்பத்திரியில் ஏற்கெனவே அவை இருப்பன தெரியாமல்.
ஆஸ்பத்திரிக்கு ஓடி வந்த அவனது குடும்பத்தவர்களைக் கண்ட போதுதான் என் குண்டலி குளிர்ந்தது; இறுகியது.
என் மனைவி!
”மகனே!” என்று அலறுகிறாள்….
என் பெற்றோர்கள்! அண்ணன்!….அது…. அண்ணியோ?…
இனி உங்களுக்கு யோசிக்க நேரமில்லை!…
என் மனைவி வேறு கல்யாணம் செய்து பெற்றெடுத்த பிள்ளையா?….
இல்லை! அவள் இன்னுமே பதிவிரதை!….
பத்திரிகை, தொலைக் காட்சி மூலமெல்லாம் என்னை என் குடும்பம் முன்பே அறிந்துகொண்டுதான் சும்மா இருந்தது போலும்! அதற்குரிய தண்டனை எவ்வளவு கொடியது!….
இனியும் உங்களை யோசிக்க விடக்கூடாது.
“தேவிடியா மவனே!” என்று மௌனத் தொண்டையில் உறுமினார் என் அப்பா. “உன்னோட புள்ளடா!…ஆறு வயஸ்லயே ஆம்புள்ளயா மாறிப் போன நீ பெத்த புள்ளடா!….”
இப்போது சிரிக்க முடிகிறதா உங்களால்?
நீங்கள் ஹோமோவாக இருப்பீர்களானால், உங்களை ஏன் நான் பழி வாங்கக் கூடாது என்று ஒரு காரணம் சொல்லுங்கள்?
– 1989 இன் இரண்டாம் காலாண்டுச் சிறுகதைத் தேர்வில் ‘தகவம்’ அமைப்பினால் இரண்டாம் பரிசுக்குரிய சிறுகதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
– திசை
– வெள்ளை மரம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 2001, துரைவி பதிப்பகம், கொழும்பு.