வேஷங்களின் தூய்மை
(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஒரு சாதாரண நாளில்தான், எண்பத்து மூன்றுக்குப் பின் வழக்கமாகிவிட்ட ஒரு வகை வெறுப்புக்கிடையில்தான், அந்தச் சாதாரண உண்மை, உதரச் சிசு போல வெளிப்பட்டது.
வெளிப்பட்ட விதத்தை, அதே வெறுப்பின் பின்னணியில் தருவதுகூடப் பிழையோ என்று தோன்றுகிறது இப்போது!
எனினும், ஆத்ம ஆழ வெறுப்பில் நின்றுதானே சில வேளைகளில் ஆத்ம ஏக ஐக்கியம் பிறந்துவிடுகிறது?….
நான் படுக்கையறைக்குள்தான் நின்றிருந்தேன் அப்போது.
“கெதர கவ்த?” என்ற குரல் எனக்கு நன்றாகக் கேட்கத்தான் செய்தது. திடீரென அந்த வெறுப்புப் படர்ந்ததால் மறுமொழி பேசாமல் இருந்தேன்.
பிள்ளைகள் பாடசாலைக்குப் போயிருந்தனர். மனைவி குசினியில் இருந்தாள். அவள் அழைத்தது இவளுக்குக் கேட்டிராது. எனக்குக் கேட்டது; யாரென்றும் தெரியும்; ஆனால் இருதயம் மரத்துப் போயிருந்தது. கைப் புண் நாறுவதைப் போல அப்படியொரு வெறுப்பு.
ஐந்து வீடுகளுக்கு அப்பாலான குணசீலி அவள். குணமோ சீலமோ இருந்ததாகத் தெரியாததால் ஏற்பட்ட வெறுப்பு அது! ஐந்து தென்னைகளின் தாய்; மாப்பிள்ளையும் ஒரு தென்னை. எங்காவது கைப்பந்தாட்டம் ஆடப் போயிருந்தால் வெற்றியாவது கிடைத்திருக்கும். ஆனால் கிடைத்திருந்தது என்னமோ வெறி, என்ற என் கணக்கில் ஏற்பட்ட வெறுப்பு!
‘இவிங்களும் மனுஷெங்களாப் பொறந்துட்டாய்ங்களே! தென்னைக்கும் அவப் பேர்!’ என்ற வெறுப்பு.
“ஆச்சீ!… :கெதர கவ்த?” என்றாள் அவள் மறுபடியும்.
“யாரோ பேஸ்ற மாதிரி இருக்கே, கொஞ்சம் பாருங்களேன்….!” என்றாள் இவள், சட்டிக்குள் தலையை விட்டிருந்த குரலில்.
‘போய்ப் பாத்துக்க!’ என்று எனக்குள் மட்டும் கூறிவிட்டு நான் மேசையை அநாவசியமாக ஒழுங்குப் படுத்திக் கொண்டிருந்தேன்.
எண்பத்து மூன்று ஜூலைக்குப் பின் எனக்கு வேண்டப்படாதுபோன சில குடும்பங்களுள் இந்தக் குடும்பமும் ஒன்று; தலையாய ஒன்று.
மனிதர்களைப் புரிந்துகொள்ளத்தான் இம்மாதிரியான மனித காதகங்கள் வந்து சேர்கின்றதாக எனக்கோர் ஆறுதல்.
அதற்கு முன்னெல்லாம் நான் இவர்களுக்கு எவ்வளவோ மரியாதை கொடுத்து வந்திருந்தேன். அவையெல்லாம் எங்கே போயின?
எங்கள் பாதை ஆரம்பிக்கும் இடத்தில் ஒரு குடும்பம்; பெரேராக்கள். அவர்களுக்கும் இப்படித்தான் தென்னைமரப் பிள்ளைகள் பிரயோஜனமும் இல்லாமல் பிரச்சினையும் இல்லாமல். அவர்களும்கூட என்னவோ தமிழ் பேசும் ஜாதிகளுடன் ஒத்துப்போக முடியாத நோயாளிகள் மாதிரி; உயர் தனி இனம் மாதிரி. அவர்களுக்கும் ஒரு மேலதிக வீடு; அதில் ஒரு யாழ்ப்பாணக் குடும்பம். கலவரம் கனரகத்தில் வலுத்துவிட்டது. அந்தத் தமிழ்க் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டுமே என்ற தேவையற்ற பொறுப்பு அவர்களது விழிகளைப் பிதுக்கிவிட்டது. இரண்டு மூன்று நாள் காத்துப் பார்த்தார்கள். உள்ளூரில் எதுவுமே இல்லாதபோதிலும் அடுத்தடுத்த ஊர்களில் இருந்தவை இவர்களை நிம்மதியாக இருக்க விடவில்லை. மறு நாளே பொலீஸை அழைத்துவந்து இவர்களைப் பாதுகாப்பாக அகதி முகாமுக்கு அனுப்பி வைத்தார்கள். இப்போது அவர்களிடம் தமிழ்க் குடும்பம் இல்லாத நிம்மதி! என்றாலும், இப்படிப்பட்டவர்களைப் பற்றியெல்லாம் எங்களைப் போன்றவர்கள் அபிரிமிதமான மதிப்பு வைத்திருக்கிறோமே, அதெல்லாம் எங்கிருந்து வந்தது?
நாங்கள் முஸ்லிம்கள் என்றபடியால் தமிழர்களுக்கு எதிரியாக மாற முடியாது! அல்லது நடிக்க முடியாது! எல்லாருமே மனிதர்கள். அதன் பிறகுதான் கணிதக் கோடுகள். தமிழர்களுக்காகட்டும் சிங்களவர் களுக்காகட்டும் யாருக்காகவுமே ஆகட்டும், ஒரு சாராருக்கு நடந்த அநியாயம் மனித இனத்துக்கே நடந்த அநியாயம்தான்.
முஸ்லிம்கள் என்னவோ தொப்பி மேல் தொப்பி போட்டுக்கொண்டு ஹாய்யாக இருப்பதாகத்தான் தொப்பியில்லாப் பலரும் பொறாமைப் படுகிறார்கள்; தங்களைத் தாங்களே வழி புரட்டிக் கொள்கிறார்கள்.
பாதத்தில் முள் குத்தினால் பாதம் மட்டும்தான் வலிக்குமென்று இவர்கள் புதிய உடலியல் எழுதுகிறார்களோ என்னவோ!
கலவரம் அவர்களுக்கு மட்டுமில்லை; எங்களுக்குந்தான். எத்தனை எத்தனை மனானுபவங்கள்! கொலை செய்யப்படுவதாகக் கனவு கண்டு, அலறி எழுந்து, வெளிறிப்போன இரவுகள்தாம் எத்தனை! நானே கொலை செய்வதாகவும் கனவு கண்டு, வீறிட்டெழுந்து, என்னை நானே சாபமிட்டுக்கொண்ட இரவுகள்தாம் எத்தனை!…
நனவில் மாத்திரம் என்ன வாழ்ந்தது? நானொரு தமிழனாக இருப்பதாக, காடையர்கள் பலர் என்னைச் சூழ்ந்து மில்லி மீட்டர் மில்லி மீட்டராக உயிரோடு அரியப் போவதாக……
அல்லது நானே ஒரு காடையனாக மாறி, என் குழந்தையைத் தமிழனாகப் பாவித்துக் கால்கள் பிடித்துத் தூக்கி உயர ஆட்டி, அது பரிதாபமாக வீறிடும்போதே கழுத்தூடாகவோ நெஞ்சூடாகவோ அறுப்பதாகவோ அல்லது அப்படியே கொதிக்கும் தாரில் அமிழ்த்துவதாகவோ கற்பித்து……..
‘ஐயய்யோ!’ என மனம் வெறி பிடித்து வியர்த்த பகல்கள்தாம் எத்தனை!…
இப்படியாகவெல்லாம் மனிதமன யதார்த்தங்கள் இருக்கையில், எப்படி அவர்கள் முஸ்லிம்களைப்பற்றி அல்லது பிறிதொரு சாராரைப்பற்றி விரோதமாக நினைக்க முடிகிறது?
அரசியற் பரிணாமத்துக்கான சில அப்பாவிப் பலிகள் என்பதைத் தவிர, மனித மனத்தை மாசுபடுத்தும் வேறெதுவும் இருந்ததா? சில சக்திகள், கைக்கூலிகள், சந்தர்ப்ப வாதிகள் என்பதைத் தவிர வேறெதுவும் இருந்ததா?
ஒரு வட்டத்தின் பிரயோசனத்துக்கான கலவரம்தான் அது. அதன் பிறகும் இங்கே ஒற்றுமை நிலவத்தான் செய்கிறது! அந்தக் கலவர வேளையிற்கூட ஒற்றுமை நிலவத்தான் செய்தது.
அதை நினைக்கும் போதுதான் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது!
சந்தர்ப்பவாத அசூயைக்குள் விழுந்ததுதான் இந்தக் குடும்பம். உண்ட வீட்டுக்கே இரண்டகம் பேசிய குடும்பம்!
அதுதான் என் வெறுப்பின் பிரசவம்.
ஒரு விகிதத்துக்காக ஏனைய விகிதங்களையும் அதில் சேர்த்த வெறுப்பு!
தவறு புரிகிறது இப்போது. சர்வதேசப் பிரச்சினை ஒன்றை நான் தேசியப் பிரச்சினையாகக் குறுக நோக்கியதன் விளைவு!
“ஆச்சி!… ஆச்சீ?…..”
“எனவா!” என்ற மனைவி முன் பக்கமாக விரைந்தாள் – அறையைத் தாண்டும்போது “எரக்கமில்லாத மனுசன்!” என்றவாறு.
அந்த வசவு எனக்கு நிறைவாகவே இருந்தது!
அதன் பிறகு அவர்கள் பேசும் குரல்கள் தெளிவில்லாமல் கேட்கத் தொடங்கின.
குணசீலியின் கணவனுக்கும் மட்டக்களப்புக்கும் முன்னர் என்ன தொடர்பிருந்ததோ எனக்குத் தெரியாது. ஆனால் ஒரு காணி இருந்தது மட்டும் தெரியும். அதை ஒரு தமிழ்க் குடும்பம்தான் பராமரித்து வந்தது. எண்பத்து மூன்றுக்குப் பிறகு கடந்த ஒரு வருஷமாக இந்தாள் அந்தப் பக்கம் போனதாக இல்லை; எல்லாமே கடிதத்தில்தான். கறாராக உழைத்துத் தங்கள் உழைப்புக்குரியதை மட்டுமே எடுத்துக் கொண்டு மிகுதியை இந்தாளுக்கு அனுப்பி விடுவார்கள்.
அப்படி ஒரு கடித மொழி பெயர்ப்புக்காக, வாசிக்க அல்லது எழுத, இவள் வந்திருக்கலாம் என எண்ணிக்கொண்ட நான்,
‘இந்தக் குடும்பம் எப்படிப்பட்டதுன்னு தெரிஞ்சா இப்புடி ஒழைப் பாங்களா?….. இவுங்களக் கெடுக்கணும்னு நெனச்சி நான் ஒரு காய்தம் போட்டாப் போதும்!… சீ!… நமக்கெதுக்கு அந்த நாய் வேல!…’ என்றும் எண்ணிக்கொண்டேன்.
அப்படி எழுதியிருந்தாற்கூடப் பயன் இராதென்று இப்போது புரிகிறது எனக்கு!………
மனைவி பேனைக்காக உள்ளே வந்தாள்.
“காலைல எட்டு மணிக்கே காய்தம் எழுத வந்துட்டாளோ?… சுருக்கா எழுதிக் குடுங்க, போஸ்ட் பிந்தீறப் போகுது!…” என்று கொட்டிக் கொண்டேன் நான்.
“பாவம்பா!” என்றாள் அவள்.
“இவுங்களுக்குப் பாவப்படுறதுதாண்டி பாவம்! துரோகிக் கூட்டம்!”
பேனையுடன் வெளியேறிய இவளுக்கும் தெரியும் இவர்களைப்பற்றி. ஆனாலும் பெண்மையின் பலவீனம் அவளிடத்தில்.
இப்போது எனக்கு உரைக்கிறது – மனைவிதான் பலமானவளாக இருந்தாள் என்பது!
எத்தனை முரண்பாடுகள்! அந்த எண்பத்து மூன்றின் ஜூலைச் சம்பவங்கள் !…
சினிமாக் காட்சிகளோ புனைகதைக் காட்சிகளோ உயிர் பெற்றுலாவிய காலம் எனலாமா?
ஆதம் நபியின் மக்கட் பரிணாமத்தின் சுதந்திர வாழ்க்கை என்று வர்ணித்தால் என்னைக் குறை கூறுவார்களோ?
பெருகிய இரத்தத்தைக் கண்டும்கூட, ‘அட! இவர்களும் நம் இனமல்லவா!’ என்று தெரியாமற் போன காலம்!
செய்திகளில் முழுச் சத்தியமும் வெளிப்படவில்லை. காற்றுக்கூட அஞ்சிய மாதிரி! ஆனால் மனக் கற்பனைகளோ ஊகங்களோ ஸ்பரிசங்களோ எதற்கும் கட்டுப்படவில்லை.
இயற்கை அப்படியேதான் இருந்தது. இரவும் பகலும் வந்து போயின; பஞ்ச பூதங்கள் வழக்கப்படியே இயங்கின.
செயற்கை அல்லவா சீறிக்கொண்டிருந்தது! இயற்கை சீறினால் இந்தச் செயற்கைகள் என்னவாகும் என்ற பிரக்ஞை மிகப் பலருக்கு இருந்ததாகவும் தெரியவில்லை.
எங்கள் கிராமத்தில் அசம்பாவிதமாக எதுவும் நடக்கவில்லைதான். ஏழெட்டுக் குடும்பங்கள் அன்றும் இன்றும். யாழ்ப்பாணத்துக் குடும்பங்களும் இருந்தார்கள். சொற்களின் கொலைகள் இடம் பெற்றனவே தவிர வேறொன்றும் இல்லை.
பிரச்சினையே வராத காரணம், வாடகை வீடு எனலாம்.
வீடு எனலாம். ஏனெனில் வீட்டுச் சொந்தக்காரர்களே அவர்களைக் காப்பாற்றவேண்டிய நிர்ப்பந்தம். அடுத்தது, கிராமத்தின் பழக்கம் எனலாம்.
இருந்துநின்று பாதையில் போகும் போது “:தெமலா, கொட்டியா” என்பதோடு சரி,
என்னைக்கூடக் கலவரக் காலத்துக்கு முன்பே இவ்வாறு இவர்கள் தயார்ப்படுத்தி இருந்தார்கள்!
இதற்காக நான் என் தனித்துவத்தைக் காட்டப்போவதில்லை. ஒரு வேளை அது என் கோழைத்தனமாகவும் இருக்கலாம்; பாதுகாப்புக் காரணமாகவும் இருக்கலாம். பிஞ்சிலே பழுத்த அல்லது பயந்த ஞானமாகவும் இருக்கலாம்!
ஆனாலும் அந்த ஜூலையில் இரண்டு கொப்புளிப்புகள் எழுந்து அடங்கினதான் எங்கள் கிராமத்தில்.
எங்கள் வீட்டிலிருந்து குரவையிட்டால் கேட்குமளவுத் தொலைவில் இருந்தது கொமஸாரிஸ் மாத்தியாவின் வீடு. உள்ளுராட்சியின் பழைய கமிஷனர்; ஹியூபர்ட் மாத்தியா. அருமையான மனிதர். அண்டை அயலுக்குத் தெரியாமல், களனியில் இருந்த ஆறு யாழ்ப்பாண நண்பர்களை இவர் தம் வீட்டில் ஆறு நாட்களாகப் பாதுகாத்து வந்ததை எப்படியோ சில காடைகள் அறிந்துகொண்டன. ஊர்த் தமிழர்களைப்பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை! இவர்களை உடனடியாக வெளியேற்றாவிட்டால் கமிஷனரின் மதிப்புக்குக்கூட மரியாதை இராதென்று காடைகள் கூச்சலிட்டன.
கமிஷனருக்கு வேறு யோசனை ஏற்படாதபடி கூச்சலும் கலவரமும் அவரைத் தடுத்து விட்டன. அந்த ஆறு தமிழர்களும் பாதுகாப்பாக உப்பாலி விமானத்தில் போக நேர்ந்தது. அத்தோடு அந்தக் கொப்புளிப்பு அடங்கிப்போனது.
அடுத்ததுதான் எனக்கு இந்த வெறுப்பைச் சம்பாதித்துக் கொடுத்திருந்தது.
கொமஸாரிஸ் சம்பவத்துக்கு மறு நாள் ஊரடங்குச் சட்டம் சிறிது ஊரை மேய விட்டதில், நானும் அவசர அவசியங்களுக்காகப் பிரம்புக் கூடையுடன் கடைப்பக்கமாகப் போனேன்.
ஃபிரஷ் கம்பனிக்குச் சிறிது இப்பால், பாதையில், அடுத்தடுத்த கிராமத்துப் பையன்களோடு எங்கள் கிராமத்துப் பையன்களும் வித்தியாசமாக நின்றிருந்தார்கள். அந்த வீடு உட்புறமாகச் சாத்தப்பட்டிருந்தது. பறங்கிப் பெண்ணை முடித்திருந்த ஒரு தமிழ்க் கிறிஸ்த்தவரின் வீடு. :பிரஷ் கம்பனியில் அவர் சூப்பர்வைஸர்.
குணசீலியின் மூத்தவனும் நேர் இளையவனும் அங்கே உயரமாக நின்றிருந்தார்கள். நல்லவர்களின் அல்லது நசுக்கப்பட்டவர்களின் நாமத்துக்குத் தீயிடும் கூட்டமாக அது காணப்பட்டது. இவ்விருவருக்கும் அங்கென்ன வேலை என்று என் சந்தேகம் கிளர்ந்தது.
வீட்டோடு கொளுத்த வேண்டுமென்று ஒருவன் சூளுரைக்க, வீடு றாளஹாமிக்குரியதாகையால் உயிர்களைத்தான் எரிக்க வேண்டும் என்று வேறொருவன் தர்மம் எடுத்துரைக்க, அப்படியானால் மகள்காரியின் உடம்பை என்ன செய்வதென்று ஒரு பிடாரி எச்சில் துடிக்க, ஒரு சிரிப்பலை பரவ-
‘அட, இந்த நெட்டைகளுமா சிரித்து அனுபவிப்பது!….’
என் இரத்தமும் அடிக்கடி கொதிக்கக் கூடியதுதான். ஆனால் அது வீட்டுக்குள்தான் என்பதை எண்பத்து மூன்று உணர்த்தி இருந்ததே! கொதித்துப் போய் நிற்கும் அந்தத் தண்ணிகளுக்கிடையில் நான் கொதித்திருக்க முடியுமா?
அந்த சூப்பர்வைஸருக்கு முன்னமே வேலைத்தலத் தகராறு ஒன்று இருந்தது. ஒரு சோம்பேறிக்கு அவர் அடிக்கடி பாய் விரிக்கவில்லை என்ற குறை. தொழிற்சங்கமும் ஒரு மாதமாக ஒருஜாதி வேலை நிறுத்தத்தைச் சிவப்பித் திரிந்து தோற்றுப்போனது. அதன் பிரதிபிம்பம்தான் இந்தத் ‘தேசியக் காதல்’ என்பதை, அங்கு நின்றிருந்த பொடியன்களின் கூட்டம் எனக்கு விளக்கியிருந்தது.
நான் திரும்பி வந்தபோது, றாளஹாமி கூட்டத்தைக் கலைத்துக் கொண்டிருந்தார் கசிப்பின் உதவியோடு.
தாங்கள் தமிழரை அடிக்கப் போவதுமில்லை, றாளஹாமியிடம் அடிபடப் போவதுமில்லை என்பது தெரிந்த பொடிக் காடைகள், இன்னும் அதிகப்படியான அவீராவேஷங்களுடன் ‘பெறல்’ லெஸ்லியின் வீட்டுப் பக்கம் கலையத் தொடங்கின.
அப்போது அங்கே குணசீலியின் கணவனும் நின்றிருந்ததைக் கண்டேன்.
“தெமலாக்களைத் துண்டு துண்டாக வெட்டி நாய்களுக்குப் போட வேண்டும்!” என்றவன் அந்த மூத்தவன்தானா?…
“என் கையில் கிடைத்தால்!…. ஷ்ஷா!….” என்று பற்களை நெரித்தவன் அந்த இளையவன்தானா?…
“அப்போய்! :தெமலாக்களோடு எனக்கு நல்ல பரிச்சயம்! கெட்ட ஜாதிகள்..!” என்றவனும் தந்தைதானா?…
“ச்சீ…நன்றி கெட்ட ஜாதி!…..” என்று, வீட்டுக்கு வந்ததும் முதற் காரியமாக மனைவியிடம் அந்த வெறுப்பைத்தான் கொட்டிப் பங்கிட்டேன். “பொழைக்கிறது அவனுகளால! ஆனா பேச்சப் பாத்தீங்களா? இவிங்களே இப்புடீன்னா, மத்தவிங்கள எப்புடிக் குத்தஞ் சொல்றது?… கொமஸாரிஸ் மாத்தியாவுக்கும் பெரேரா மாதிரி ஆளுகளுக்குங் கூடக் கேவலமில்லியா?….”
“நேத்து அந்திக்கு என்னா நடந்திச்சி தெரியுமா?” என்று அவளும் அவிழ்த்து விட்டாள். “கொமஸாரிஸ் மாத்தியா ஊட்லருந்து அந்த ஆளுகளக் கூட்டிக்கிட்டுப் போற நேரம் குணசீலி ஊட்டுப் பக்கமாப் போனேன். றொபட் பொம்பள, மோட்டார் சைக்கிள் ஊட்டுக்காரி, கடக்காரி எல்லாரும் குணசீலியோட பேசிக்கிட்டு நிக்கிறாங்க. அப்ப குணசீலி சொல்றா, தமிழங்களோட ஒறவே வச்சிக்கிடக் கூடாதாம்! மஞ்சத் துண்டுக்குக் கூடக் கழுத்தறுக்கிறவுங்களாம்! கொழப்பமெல்லாம் முடிஞ்சொடன, மட்டக்களப்புக் காணிய அர வெலைக்காவது வித்துப்புட்டு இந்தப் பக்கமாத்தான் எதயாவது செய்யப் போறாங்களாம்!….”
இப்படியாக என்னளவில் இழிவடைந்து போன அந்தக் குடும்பம், ஒரு வருஷமாகியும் காணியை விற்ற மாதிரித் தெரியவில்லை. மாறாக உரம் போடவும் சம்பளம் கொடுக்கவும் மிச்சத்தை உடனடியாக அனுப்பி வைக்கவுமாகத்தான் எழுதிக் கொண்டிருந்தார்கள்!
தான் எழுதியிருந்தவற்றை இவள் அவளுக்கு மொழி மாற்றம் செய்துகொண்டிருந்த போது நான் முன்னறைக்குப் போக வேண்டிய ஒரு தேவை குறுக்கிட்டது.
அவள் என்னைக் கண்டதில் சிரிக்க நானும் மரியாதை பேண வேண்டி இருந்தது. ஏதோ ஒரு விகிதாசாரத்தில் நாம் முக மூடியும் அணிய வேண்டிய நிலை!
செலவைக் குறைக்க, இம்மாதம் அதிகமாகவே அனுப்பி வைக்க, சகலோர் சுகத்துக்கும் பிரார்த்திக்கவுமாகக் கடிதச் சாரம் காதில் விழுந்தது.
“அம்மே! …லியுமக் ஏ : கொல்லங்கென்!” (அவர்களிடமிருந்து ஒரு கடிதம்) என்றவாறு அவளது மகள் ஓடி வந்ததை ஜன்னலூடாகக் கண்டேன். மகிழ்ச்சிக் குரலில், அந்தக் கடிதத்தையும் வாசித்துச் சொல்லும்படி குணசீலி சொல்வது கேட்டது.
எங்கவூர்த் தபாற் சேவையின் ஜாதகம் இதுதான்! பதில் சொன்ன பிறகுதான் கேள்வியே பிறக்கும்!
“அன்புள்ள ஐயா, அம்மா, பிள்ளைகளுக்கு வணக்கம்!”
“ம்!”
“இதை எழுதும் போது என் கையும் மனமும் நடுங்குகின்றன!”
“….”
“போன கிழமை சில பெடியன்கள் இரவில் இங்கே வந்து எங்கள் வீட்டுக் கதவைத் தட்டினார்கள்.”
“அனே :தெய்யனே!… இத்திங்?…. (ஆண்டவனே! இனி?)’
“அவர்தான் திறந்தார்.”
“இ(ந்)தா!”
“என் தாலிக் கொடியைக் கேட்டார்கள்!”
“ஃபலன்ன கோ அனே! (பாருங்களேன்!)”
“அவர் சத்தம் போட்டார்! அவரைத் தலையிலே சுட்டார்கள்!’
“ஐயோ!…. ம:கே அம்மே!…”
“அவர் இறந்து விழுந்தார்!”
“அனே, அய்யே!… சிவா அய்யே!…”
குணசீலி அழத் தொடங்கியதில் மனைவி நிறுத்தினாள். அறை வாசலுக்கு நான் வந்தேன். மகளும் தாயை அண்டி முகம் சிலும்பி அழுவதைக் கண்டேன். கலங்கிய மனைவி அப்பாவிப் பற்களோடு என்னைக் கெஞ்சுவதாகப் பார்த்தாள்.
அழுகையின் சக்தி அல்லது சத்தியம் மகத்தானதுதான். அதைக் கண்ட பிறகு, என்னதான் வெறுப்பு மலையாண்டிருந்தாலும், மனித மனம் ஓர் ஐக்கியத்தைப் போர்த்துக் கொள்ளவே செய்கிறது. அதற்குள் கரைந்துவிடவும் இயற்கைப்படவே செய்கிறது.
இவள் கையிலிருந்த கடிதத்தைப் பிடுங்கி நான் எனக்குள் வாசித்தேன்.
“…மகன்மார் இருவரும் வெளிப்படவே, அவர்களையும் சுட்டுக் கொன்றுவிட்டார்கள். என் தாலிக் கொடியுடனும் நகைகளுடனும் ஓடி விட்டார்கள்! அவர்கள் புலிகளா திருடர்களா என்பதெல்லாம் தெரியாது. நான் யாருமில்லாத….”
எனக்குள் ஒரு காட்சி விரிந்தது.
இவர்களுடைய அழுகையொலி அக்கம் பக்கத்துப் பெண்கள் சிலரையும் குணசீலியின் ஏனைய குடும்ப அங்கத்தினர்களையும் பதறி இழுத்துவிட்டது.
குடும்ப உறவினர்கள் போன சோகம் தொனிக்க அவர்கள் அழுத வேளையில், குணசீலியின் கணவனை நான் உள்ளே அழைத்துப் போய்க் கடிதத்தை மொழி பெயர்த்துவிட்டு நிமிர்ந்த போது, ஏழு பேரும் என்னைச் சூழ்ந்து விம்மல்களை அடக்க முயன்றார்கள் என்று நினைவு. தாயைப் பிள்ளைகள் அழைத்துச் சென்றதோடு கூட்டமும் கசமுசப்புடன் கலைந்தது. தகப்பன் மாத்திரம் கடிதத்தை வெறித்த கண்ணீருடன் உட்கூடத்தில் அமர்ந்துவிட்டான்.
எனக்குள் அப்போதுதான் ஒரு விபரீதம் பூக்கத் தொடங்கியது – எனக்குள் ஒரு வருஷமாகப் பாசானாக இருந்த வெறுப்பின் மீது ஏதோ ஒரு ரசாயனம் விழுந்த மாதிரி.
சுயநல ஒப்பாரியா?
அப்படித் தெரியவில்லை….
மரணம் வெறிகளை வெற்றி கொள்ளுமா?
வெறி இருந்ததாகவே தெரியவில்லை.
மனைவி எழுதியிருந்த கடிதம் செல்லாக் காசைப் போல அவள் கையில் இருந்தது.வந்திருந்த கடிதம் குணசீலியின் கணவனுடைய கையில் செலவுப் பட்டியலைப் போல இருந்தது.
ஒரு தமிழன் விடாத கண்ணீரை, அல்லது நான் முஸ்லிம் விடாத கண்ணீரை, அந்தச் சிங்களவன் விட்டது எந்த நன்மையின் அறிகுறி? இன ஐக்கியம் ஆகாயத்திலிருந்து கொட்டி விட்டதா?
“என்னானாலும் பரவாயில்லை, நான் இன்றைக்கே மட்டக்களப்பு போக வேணும்!” என்று வைரப்பட்டார் மனிதர். “உங்களுக்கெல்லாம் தெரியாது, மாத்தியா! இவர்களின் கடிதம் வாசிப்பது நீங்கள்; இவர்களுக்கு எழுதுவதும் நீங்கள் உங்களிடம் கூட நாங்கள் மறைத்துவிட்டோம்! கடிதத்தில்கூட அது பற்றி எழுத வேண்டாமென்று அவர்களுக்குச் சொல்லியிருந்தோம்!”
“…..”
“எண்பத்து மூன்றில் கமிஷனர் வீட்டில் என்ன நடந்ததென்று உங்களுக்குத் தெரியும்! அதுவே எங்கள் வீட்டில் நடந்திருக்க முடியாது. எங்களையெல்லாம் வெட்டிப் போட்டிருப்பார்கள்!…. ஹிம் !… என்னென்ன வேஷத்தையெல்லாம் நாங்கள் போட வேண்டியிருந்தது!….”
“உங்கள் வீட்டில்?……..”
“ஆம்! இருபத்தாறு நாட்கள் இவர்கள் நாலு பேரும் என் வீட்டில்தான் இருந்தார்கள்!… வந்தவர்களால் போக முடியவில்லை…”
மனைவி கண்ணீர் விடுவது தெரிந்தது.
“இப்போ எல்லாமே நாசம், மாத்தியா! நாங்கள் அவர்களைக் காப்பாற்றினோம்! இப்போ அவர்களுடைய ஆட்களே…”
என்னால் கண்ணீர் விடவும் முடியவில்லை…….
அந்த நெடிய மனிதர் தன் பயணத்துக்காக எழுந்த போது என் மனமும் மௌனமாகவே தொடர்ந்தது.
– கலாசாரத் திணைக்களம், அகில இலங்கை ரீதியில், 1990ல் நடத்திய தமிழ்ச் சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசைப் பெற்ற சிறுகதை.
– கெட்டிகத்தா 1990 (சிறுகதை 1990).
– வெள்ளை மரம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 2001, துரைவி பதிப்பகம், கொழும்பு.