பூதத்தின் போணிக் கூடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: August 9, 2026
பார்வையிட்டோர்:
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல ஒரு வெறகு வெட்டியர். அவனுக்கு ஒரு மக இருந்தா. வயசுப் பிள்ளைய, ஒத்தயில வீட்ல விட்டுட்டுப் போகப் பயந்து, வெறகு வெட்ட மகளயும் கூட்டிக்கிட்டு போயிருவர். பாவம்! வெறகு வெட்டி வித்தாத்தா கஞ்சி. 

ஒருநா, மகளயுங் காட்டுக்குக் கூட்டிட்டுப் போயி, மகள், ஒரு மரத்தடியில ஒக்கார வச்சுட்டு, புருசனும் – பொஞ்சாதியும் ஆளுக்கொரு பக்கம் வெறகு வெட்டப் போயிட்டாங்க. ரொம்ப நேரமாயிருச்சு. இந்த பிள்ள நல்லா ஒரங்கிட்டா. ஒரங்கவும், அந்தச் சமயத்ல, அந்தக் காட்ல, இருந்த பூதம் அந்தப் பக்கமா காட்டச் சுத்திப் பாக்க வருது. வரயில, பிள்ள படுத்துக் கெடக்குறதப் பாக்குது. ஒடனே! தூக்கித் தன்னோட கொகைக்குக் கொண்டு போயிருச்சு. 

பகலெல்லாம் வெறகு வெட்டிட்டு, சாயங்கலாம் வந்து பாத்திருக்காங்க. மகளக் காணம். பொண்டாட்டிய வீட்டுக்குப் போகச் சொல்லிட்டு, அந்தக் காட்டு வழியா வெறகு வெட்டியா போறா. போறா …. போறா….. ரவ்வெல்லாம் போறா. விடியப் போறபோது பாத்தா, அந்தப் பூதம் வாழுற மலயில இருக்கா. அந்த மலயில – ஒரு பெரிய கொக இருக்கு. அந்தக் கொகைக்குள்ள போயி எட்டிப் பாத்தா. அங்க பதினோரு பொண்ணுக இருக்குது. அந்தப் பதினொண்ணுல ஒண்ணா, வெறகு வெட்டியா மகளும் இருக்கா. தகப்பனப் பாத்ததும், K அப்பா!! அப்பா!! அப்பாண்டு சத்தம் போட்டா. 

அப்ப பூதம், கொகய விட்டுக் காட்டச் சுத்திப் பாக்க, வெளிய போயிருச்சு. அதனால் எல்லாப் பிள்ளைகளும் ஓடியாந்து, வெறகு வெட்டியானச் சுத்தி நிண்டுகிட்டு இருந்துச்சுக. கொஞ்ச நேரத்ல், பூதந்திரும்பி வருது. வந்ததும், வராததுமா இந்தப் பிள்ளைக ஓடி, எங்ஙப்பா வந்திருக்காங்கண்டு பூதத்துக்கிட்ட சொல்லுச்சுக. அப்டியா! அப்ப கூட்டிக்கிட்டு வாங்கண்டு பூதஞ் சொல்லுச்சு. எல்லாருமா ஓடிப்போயி வெறகு வெட்டியானக் கூட்டிக்கிட்டு வந்தாங்க. நல்லா சோறு போட்டு, ரெண்டு நா, அவன நல்லா வச்சிருந்துச்சு பூதம். ரெண்டு நா, களிஞ்சுச்சு. வெறகு வெட்டியர், ஊருக்குப் போகணும்ண்டு பூதத்துக்கிட்டச் சொன்னா. 

மூணு பூசணி வெதையக் குடுத்து, எங்காவது நட்டு வச்சு, காக்கிற பூசணிக்காய வச்சுப் பொளச்சிக்கிறச் சொல்லி, வெற்கு வெட்டியான அனுப்புச்சு வச்சது பூதம்.

மகளப் பாத்த சந்தோசத்ல வெறகு வெட்டியர் நேரா வீட்டுக்கு வர்ரர். வீட்டுக்கு வந்து, பூதங் குடுத்தப் பூசணி வெதைய, குப்ப மேட்ல நட்டுவச்சா. அந்த வெத மொளச்சு, நூறு பூசணிக்கா காச்சிருச்சு. எல்லாப் பூசணிக் காய்களயும் புடுங்கி, மூட்டையில கட்டி, செட்டியார் கடக்கிக் கொண்டுகிட்டுப் போயி குடுத்திட்டு, பதிலுக்கு அரிசிய வாங்கிக்கிட்டு வந்து, ஆக்கிச் சாப்பிட்டுட்டுப் புருசனும் – பொஞ்சாதியும் படுத்துக்கிட்டாங்க. 

வெறகு வெட்டியர், குடுத்த பூசணிக்காய ஒடச்சுப் பாக்கயில பூராம் பவுனா இருக்கு. மிச்சமிருக்கிற பூசணிக்காய்களயும் வெறகு வெட்டியாங்கிட்டயிருந்து வாங்கிக்கிட்டு, ஒரு மூட அரிசியும், அம்பது ரூபாயுஞ் செட்டியாரு குடுத்தாரு. 

ரெண்டு பேருமா ஆக்கிச் சாப்பிட்டுக்கிட்டிருக்காங்க. கொஞ்ச நாள்ல அரிசி தீந்து போச்சு. ரெண்டு நா, பட்டினி கெடந்து பாத்தாங்க முடியல. சரிண்ட்டு – மககிட்டத் திரும்பயும் போறா. அப்பா வந்துட்டாருண்ட்டு எல்லாப் பிள்ளைகளும் சந்தோசமா இருக்காங்க. நல்லாச் சாப்பிட்டா. ஊருக்குப் போகணும்ண்டு, பூதங்கிட்டச் சொல்றா. 

பூதம், ஒரு டப்பாவக் குடுத்து, நீ போற வழில ஒரு கொளமிருக்கு. அந்தக் கொளத்துக் கரயில, ஒரு பெரிய ஆலாமரம். ஆலாமரத்துக் கீழ ஒக்காந்து, எலயப் போட்டுக்கிட்டு, டப்பாவ தொறந்துவிடுண்டு, பூதஞ் சொல்லி அனுப்பி வக்கிது. 

வேகமா வாரா, அகோரப் பசி. ஆலாமரத்துக்குக் கீழ ஒக்காந்தா எலயப் போட்டா. டப்பாவ தொறந்து விட்டா. 

டப்பாவுக்குள்ள இருந்து ஒரு பொண்ணு வெளிய வந்து, ஆறு வகக் காய்கரியோட சோறு போட்டுச்சு. நல்லாச் சாப்பிட்டா. திரும்பவும் டப்பாவ (போணிக்கூடு) எடுத்துக்கிட்டு, வீட்டுக்கு வந்தா. 

வீட்டுக்கு வந்ததும், பொண்டாட்டிய, வீட்டக் கூட்றிண்டு சொன்னா. எலயப் போட்டுட்டு, டப்பாவ தொறந்து விட்டா. ஆறு வகைக் காய்கறியோட சோறு போட்டுச்சு. சாப்பிட்டாங்க, படுத்து ஒரங்கிட்டாங்க. 

விடிஞ்சுச்சு, தமுக்கடிக்கிறவனக் கூப்பிட்டா. போல கோயில்ல, வெறகு வெட்டியா, பந்தி வக்கிறாண்டு ஊர் முழுசுஞ் சாட்டச் சொன்னா. இதென்னடா ஆச்சரியம், வெற்கு வெட்டியானுக்கு ஏதுடா? இவ்வளவு பணமண்டு, ஊரே ஆச்சரியப்பட்டு நிக்கிது. 

சரி வாங்கடா! என்னா நடக்குதுண்டு பாப்போம்ண்டு, ஊர்ல எல்லாரும் வெளியேறிப் போறாங்க. ஒண்ணுமே இல்ல. சட்டி இல்ல – பொட்டி இல்ல அடுப்பு இல்ல அரிசி இல்ல, வெறகு  வெட்டியா நம்மள ஏச்சுப்பிட்டாண்டாண்டு பேசிக்கிட்டு ஒக்காந்திருக்காங்க. 

அப்ப வெறகு வெட்டியா போறா. எல்லாரையும் வருசயா ஒக்காரச் சொல்றா இதையும் பாப்போம்ண்டு, எல்லாரும் வரிசயா ஒக்காந்தாங்க. 

எல்லாரும் ஒக்காந்த பெறகு, வெறகு வெட்டியா, பையாப் போணிக் கூட்டத் தொறந்து விட்டா. அதுக்குள்ளயிருந்த பொண்ணு வெளியேறி, எல்லாத்துக்கும் ஒரு பக்கமா இருந்து பந்தி வக்கிது. இதக் கவனிச்ச செட்டியாருவெறகு வெட்டியாங்கிட்டப் போணிக்கூட்ட வாங்கிப்பிட்டாரு. 

அங்க செட்டியாரு, ஆறு வகக் காய்கறியோட சாப்பிடுராரு. இங்க வெறகு வெட்டியர், சும்மா பட்டினியா கெடக்கா.

என்னா செய்யுறுதிண்ட்டு, திருப்பியும் மககிட்டப் போறா. மககிட்ட ரெண்டு நா இருந்தா. மூணாவது நா, பூதத்துகிட்டப் போயி, நா ஊருக்குப் போறேண்டு சொன்னா. 

இவ், என்னடா பெரிய ஏமாளிப் பயலா இருப்பர் போல இருக்கு. இந்தத் தடவ இவனுக்கு நல்லா பாடங் கற்பிக்கணும்ண்டு, பூதம் நெனக்கிது. 

திருப்பியும், ஒரு போணிக்கூட்ட கையில குடுத்து அனுப்பி வச்சுச்சு. அதே மாதிரி, கொளத்தங் கரயில ஒக்காந்து எலயப் போட்டு, ரொம்ப ஆசயோட தொறந்து விட்டா. தொறந்து விடவும், 

அதுக்குள்ள இருந்து, செருப்பும் வெளக்கமாறும் வெளியேறி, சும்மா அடி பிடுச்சுருச்சு. அடுச்சா இன்ன அளவிலதா அடிக்குதுண்டு சொல்ல முடியல. 

அடிய வாங்கிக்கிட்டு, நேரா வீட்டுக்கு வாரர். வந்ததும் வராததுமா, பொண்டாட்டியப் பாய விரிடிண்டு சொன்னா. பாய விருச்சா போணிக்கூட்ட தொறந்து விட்டுட்டா. அதுக்குள்ள இருந்து செருப்பும் வெளக்கமாறும் வெளியேறி, புருச்- பொண்டாட்டி ரெண்டு பேத்தையும் அடி பிடிச்சிருச்சு. அடிய வாங்கிக்கிட்டுப் படுத்துக்கிட்டாங்க. 

அண்ணிக்கு விடியவும், நேரா செட்டியாரு வீட்டுக்கு, வெறகு வெட்டியா போனா. செட்டியாரு கடையில ஒக்காந்து இருந்தாரு. செட்டியாரே!! சாப்பாட்டுக்குக் கொஞ்சம் அரிசி வேணும்ண்டு கேட்டா. 

அண்ணைக்கே குடுத்துட்டேனடா! இப்ப எங்கடா இருக்கு அரிசி? அரிசியுமில்ல ஒண்ணுமில்ல. போ-போண்டு சொல்லிட்டாரு. 

போணிக்கூட்டத் தொறந்து விட்டுட்டா. செட்டியாரப் புடுச்சு அடுச்சிருச்சு. அடி பொறுக்க மாட்டம செட்டியாரு, அங்கயும் இங்கயும் ஓடுராரு. அப்பயும் அடிய விடல. 

ஏலே!! நா வாங்குனதெல்லாம் குடுத்திருரேண்டா, அடிய நிறுத்தச் சொல்லுடாண்டு, செட்டியாரு அனத்துராரு. மொதல்ல பூசணிக்காய குடு! குடுத்திட்டாரு. போணிக்கூட்ட குடு! குடுத்திட்டாரு எல்லாத்தையும் வாங்கிக்கிட்டா. நேரா வீட்டுக்கு வந்து, திருந்தி நல்லாப் பொளச்சானாம். 

– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், நகைசுவைக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசா பல்கலைக் கழகம், மதுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *