புகைச்சலாய்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 8, 2025
பார்வையிட்டோர்: 640 
 
 

ஏண்டா ஆறுச்சாமி என்ற தோட்டத்து தெக்கத்து காட்டை அப்படியே போட்டு வச்சிருக்க, ஏதாவது பயிர் பண்ணலாமுல்லை?

பண்ணொனுங்க மாமா, எங்க அப்பன் காலத்துல உழவோட்டி பயிர் பண்ணிட்டுதானே இருந்தோம், இப்ப முடியறதில்லை, நானும், மயிலாத்தாளும் கூலி வேலைக்கு போய் இதுகளை காப்பாத்தறதே பெரிய பாடா இருக்குது. இதுல இந்த காட்டை ரெடி பண்ணி பண்ணையம் பண்னறதுக்கு ரோசனையாத்தான் இருக்கு.

அப்ப நல்ல விலைக்கு வந்தா தள்ளி விட்டுடறதுதானே, தானும் பயனில்லாம, உனக்கும் பயனில்லாம என்னாத்துக்கு, சும்மா வச்சிருக்கறே?

அது எப்படீங்க மாமா விக்கறது? எனற பாட்டன் பூட்டன் காலத்துல இருந்து வழி வழியா வந்த சொத்து, நாளைக்கு என்ற குழந்தைகளுக்கு இதைய தவிர என்னத்தை விட்டுட்டு போகப்போறேன். அதுக காலத்துலயாவது பயிர் பண்ணூதுகளான்னு பார்க்கணும்.

ஆமா போ, நல்லது சொன்னாலும் கேக்க மாட்டே, உன்ற பொழப்பு இப்படி இருந்தா நான் என்ன செய்யட்டும் சொல்லு.

ஆறுச்சாமி மனைவி மயிலாத்தாளிடம் புலம்பி கொண்டிருந்தான்.

அந்த இடத்தை சும்மா ஏன் போட்டிருக்கேன்னு? நல்லுசாமி மாமன் கேட்டு கிட்டு இருக்கு.

யாரு உன்ற மாமனா? அதுக்கு நீ என்ன சொன்னே?

எங்க பயிர் பண்ணறது, வயித்துக்கும் வாயிக்குமே சரியா இருக்கும்போது.

உடனே உன் மாமன் இடத்தை விக்கிரியான்னு கேட்டுருக்குமே.

ஆமா கேட்டுச்ச, நான் முடியாதுன்னு சொல்லிபுட்டேன்.

சித்திரைக்கு நாம் அங்க போய் குடிசைய போட்டுக்கலாம், அங்கன இருந்து நம்ம காட்டை சீரு பண்ணி பார்ப்போம், முடியலையின்னா கூலிக்கு போலாம், இனி ஊருக்குள்ள இருக்க வேணாம்.

ஏன் புள்ளே இப்படி சொல்றே?

இல்லை நம்ம குழந்தைக கிட்ட காட்டை ஒப்படைக்கனும்னா நாம் அங்க போய் இருக்கறதுதான் சரி.

நல்லுசாமி ஆறுச்சாமியின் காட்டை பார்த்துக்கொண்டிருந்தார். பக்கத்தில் அவர் தோட்டத்தில் வேலை செய்யும் பெருமாள் நின்று கொண்டிருந்தார்.

ஆறுச்சாமி பொண்டாட்டி சாமார்த்தியக்காரிதான், பாரு வந்த ஒரு மாசத்துல காட்டை சீர் பண்ணிட்டு நடுவுல குடிசைய போட்டு உட்கார்ந்துட்டா பாரு.

ஆமா போங்க, உங்க வாயை சொல்லணும், பேசாம அந்த காட்டுல நாம புழங்கிட்டு இருந்தோம். தென்னம் மட்டை உரிக்க இடம் போட்டு வச்சிருந்தோம். சும்ம இருக்காம அவங்கிட்டே காட்டை பத்தி பேசி இப்ப வந்து உட்கார்ந்துட்டான்.

என்னடா ஆறுசசாமி எப்படியோ காட்டை ரெடி பண்ணிட்டே, என்ன போடப்போறே?

வெங்காயம் போடலாமுன்னு இருக்கேனுங்க, நாளைக்கு விதை வெங்காயத்தை நட்டு வச்சிடணும்னு இருக்கேன்.

ஏண்டா பயித்தியக்காரா, இப்ப வெங்காயம் போட்டா பனி சீசனுக்கு காய் பெருசாகுமாடா? இல்லைங்க, மயிலாத்தாதான் இந்த ஐடியா கொடுத்துதுங்க, என்னமோ போ பொண்டாட்டி பேச்சை கேட்டு ஆடறே, இது நல்லதுக்கில்லை, வெங்காயம் மார்கெட்டுல சீர் பட்டு கிடக்கு, கிழங்கு போட்டா காசு பாக்கலாம், ம்..இனி உன் பாடு..

வெங்காயம் எடுக்கும்போது மார்க்கெட்டில் வெங்காயம் டிமாண்ட் அதிகமாகி ஆறுச்சாமிக்கும், மயிலாத்தாளுக்கு கொள்ளை லாபம் கொடுத்தது. கிட்டத்தட்ட இந்த போகத்தில் அவன் கையில் கணிசமாக பணமும் சேர்ந்து விட்டது.

என்னடா ஆறுச்சாமி கடைசியில வெங்காயத்துல கொள்ளை லாபம் அடிச்சிட்டே கேட்ட மாமா நல்லுசாமியிடம் எல்லாம் மயிலாத்தா கொடுத்த ஐடியா.

கயிற்று கட்டிலில் உட்கார்ந்து ஆறுச்சாமி தோட்டத்தை தாண்டி தன் தோப்பிற்குள் பார்வையை ஓட்டியவர் அங்கு நான்கைந்து சிறுவர் சிறுமிகள் விளையாடுவதை பார்த்தார்.

யார்ரா என்ற தோட்டத்து பக்கம் விளையாண்டுகிட்டிருக்கறது ?

என்ர பசங்கதான் மாமா.

முதல்ல அவங்களை கூப்பிடுடா.

ஏனுங்க மாமா ஸ்கூலு லீவு விட்டுட்டாங்க, சித்த நேரம் மரத்து நிழல்லா விளையாடட்டுமே.

ஏண்டா என்ர தோட்டம் உன்ற புள்ளைங்க விளையாடற இடமாடா, மரியாதையா அவங்களை கூப்பிட்டுக்க.

ஏங்க மாமா இப்படி பேசறீங்க, இத்தனை வருசம் என்ற காட்டை நீங்கதான புழங்கிட்டிருந்தீங்க, நான் ஏதாவது சொல்லியிருக்கேனா?

ஏண்டா அதுக்கோசரம் உன்ற குழந்தைகளை என்ற தோட்டத்துக்குள்ள விளையாட உட்டுருவேன்னு சொல்லுவியா, மறுபடி சொல்றேன், மருவாதியா உன்ற புள்ளைங்களை கூப்பிட்டுக்க, இல்லையின்னா.

சத்தம் கேட்டு அங்கு வந்த மயிலாத்தாள்,

இப்ப என்ன குழந்தைகளை கூப்பிட்டுக்கணும் அவ்வளவுதான, டேய் குட்டிகளா வாங்க இங்கே.

என்னடா உன்ற பொண்டாட்டி வாய் நீளுது, சொல்லி வை ஒட்ட நறுக்கிடுவேன்,

ஏதோ வாய் கொடுக்க போன மயிலாத்தாளை இழுத்துக்கொண்டு அவன் குடிசையை நோக்கி இழுத்து சென்றான் ஆறுச்சாமி.

மறுநாள் நடை வழித்தடம் வழியாக சென்று கொண்டிருந்த ஆறுச்சாமியை அழைத்த நல்லுசாமி ஏண்டா ஆறுச்சாமி யாரை கேட்டுட்டு இது வழியா நடந்து போறே?

ஏங்க மாமா, இது எல்லோருக்கும் பொதுவான வழித்தடம்தானே, எல்லோருக்கும் பொதுன்னு யாரு சொன்னா? உங்க தோட்ட எல்லை அதோடதான முடியுது,

டேய் எங்கிட்ட சட்டம் பேசாதே, நாளையில இருந்து இது வழியா நடக்க கூடாது, மீறி நடந்தா பொலி போட்டுடுவேன்.

இது அநியாயம் மாமா பொது வழியில கூட நடக்க கூடாதுன்னா எப்படி? நான் நாளைக்கே போய் விஓ ஆபிஸ் போயி…

என்னடா கம்பிளெயிண்ட் பண்ணப்போறியா? போடா போ..

மறுநாள் இவர்கள் யாருமே நடக்க முடியாமல் அந்த வழி அடைக்கப்பட்டிருந்தது.

உங்க மாமனுக்கு உடம்பு முழுக்க பொறாமை, இப்ப நாம் சுத்திதான் போகணும், அந்த காட்டுலயும் மேட்டுலயும் புகுந்துதான் நாம குழந்தைங்க ஸ்கூலுக்கு போகணும்.

நாளைக்கு நான் போய் பஞ்சாயத்து ஆபிசுல ரிப்போர்ட் கொடுத்துட்டு வாறேன்.

அரசு ஊழியர்களின் ‘அதா இதா’ என்ற இழுத்தடிப்பு, வந்தவர்களுக்கு நல்லுசாமியின் கவனிப்பு..

ஆறுமாதமாய் சுற்றி காட்டு வழியாக நடந்து போய் பழகி விட்டார்கள் ஆறுச்சாமியும், அவன் குடும்பமும்.

துயரங்களை எப்பொழுதும் விழுங்கித்தானே பழக்கம் ஏழைகளுக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *