கமலா மாமி தேங்காய் பர்பி செய்கிறாள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 25, 2026
பார்வையிட்டோர்: 60 

காலையில் எழுந்திருக்கும் போதே கமலா மாமிக்கு பரபரப்பாக இருந்தது. அன்று ஜூன் மாதம் இருபத்திஐந்தாம் தேதி. மாமியின் பேரன் சத்யாவிற்கு அன்று தான் எட்டாவது பிறந்த நாள். இன்று ஸ்ரமத்தைப்பாராமல் தேங்காய் பர்பி பண்ண வேண்டும். உடல் சற்றே அசதியாக இருந்த போதும் பேரனுக்கு இனிப்புப் பலகாரத்தைத் தானே செய்து அவன் அதை ருசித்துச் சாப்பிடுவதை கண் குளிரப்பார்க்க வேண்டும். மாமியின் ஆத்துக்காரர் பாலசுந்தரம் தவறி மூன்று ஆண்டுகள் ஓடி விட்டன. மாமி தனது கணவர் மட்டும் ஒரே மகனுடன் வாழ்ந்த வீட்டில் தான் இன்னமும் வாழ்ந்து கொண்டு இருந்தார்.

மும்பையில் முலுண்ட் பகுதியில் முரா ரோட்டில் தான் மாமியின் வாசம். மாமி இருந்த அடுக்கு மாடிக்குடியிருப்பின் பெயர் ஜீவன் நிவாஸ். ஒண்ணாம் மாடியில் தான் வீடு. ஒரு ரூம் மட்டும் ஒரு பெட் ரூம் மற்றும் கிச்சன். ஒரே மகன் தியாகராஜன் கோல்கேட் கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தான். அவன் மனைவி ராதா. திருமணம் ஆனதுமே வீடு சிறியது என்பதால் அவர்களைத் தனிக்குடித்தனம் வைத்து விட்டனர் பாலசுந்தரம் தம்பதியினர். நல்ல காலம். பாலசுந்தரம் பேரன் முகத்தைப்பார்த்து அவனுடன் விளையாடின பிறகு தான் கண்ணை மூடினார்.

முலுண்ட் லால் பகதூர் சாஸ்திரி ரோட்டிற்கு பக்கத்தில் உள்ள வீணா நகரில் தான் தியாகுவும் ராதாவும் வசித்து வந்தனர். ராதாவின் தாய் தந்தை சற்றே தள்ளி யோகி ஹில்ஸ் பகுதியில் வசித்து வர வாழ்க்கை சுமுகமாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. முதலில் வாடகை வீட்டில் இருந்த தியாகு பின்னர் அதே பகுதியில் சொந்த வீடு வாங்க முற்பட்ட போது பாலசுந்தரமும் கமலாவும் அதற்கு தங்களது பூரண சம்மதத்தைத் தெரிவித்தனர். தனது பென்ஷன் மற்றும் வங்கியில் இருந்த பிக்ஸ்ட் டெபாசிட்களை உடைத்து கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து லக்ஷத்திற்கான ஏற்பாடை பாலசுந்தரம் செய்தும் விட்டார்.

ஆனால் ராதாவிற்கும் சரி தியாகுவிற்கும் சரி மூன்று பெட் ரூம் , ஹால் , மற்றும் சமையல் அறை உள்ள வீடு தான் தேவை. பம்பாயில் வீடு வாங்குவது என்பது சாமான்யப்பட்ட வேலை இல்லை. ராதா கிண்டர் கர்டென் ஸ்கூலில் ஆசிரியை. சம்பளம் சுமார் தான். கிட்டத்தட்ட ஒரு கோடியே முப்பது லக்ஷம் என்றவுடன் அயர்ந்து விட்டனர் பாலசுந்தரமும் கமலாவும்.

‘டேய் ராஜா இப்போதைக்கு உங்கள் இருவருக்கும் ஒரு பெட் ரூம் ஹால் கிட்சன் உள்ள வீடு போறாதா விரலுக்கு ஏத்த வீக்கம் வேண்டும் கண்ணா’ என்று பாலசுந்தரம் மகனிடம் சொல்லிப்பார்த்தார். எக்காரணம் கொண்டும் மாமனாரிடம் கடன் கேட்காதே என்று வேறு மகனிடம் வேண்டுகோள் விடுத்தார். ராதாவும் தியாகுவும் மசியவேயில்லை.

‘அப்பா நீங்கள் எந்த காலத்தில் இருக்கிறீர்கள்? நீங்களும் அம்மாவும் எங்களுடன் தங்க வேண்டும் என்றால் இடம் வேண்டாமா?’ என்றான் தியாகு எரிச்சலுடன்.

ராதா ஒரு யோசனை கூறினாள்.

‘அப்பா நீங்கள் முரா ரோடு வீட்டை விற்று விட்டால் கணிசமான தொகை கிடைக்கும். வங்கியில் கடன் எடுக்க வேண்டும் என்றாலும் சற்று கம்மியாக எடுத்தால் போதும்’ ராதாவின் வேண்டுகோளை எக்காரணம் கொண்டும் பாலசுந்தரம் ஏற்பதாக இல்லை.

கமலா மாமி கூட கணவரிடம் மன்றாடிப்பார்த்தாள். ‘கமலா உனக்கு விவரம் பத்தாது. இன்னிக்கு நம்மளை சேர்ந்து இருக்கலாம் என்று கூப்பிடுறவா நாளைக்கு இதே மாதிரி இருப்பா என்கிறதுக்கு எந்த விதமான காரண்டீயும் கிடையாது. நாளைக்கே நமக்கு உடல் நிலை சோர்ந்து போய்விட்டாலோ வியாதி வந்தாலோ நாம அவாளுக்குச் சுமையாகத்தான் தெரிவோம். தூரத்துப்பச்சை கண்ணுக்கு குளுமை என்று கேள்விப்பட்டிருக்கியோன்னோ?’ மனைவியிடம் கறார் ஆக கேட்டார் பாலசுந்தரம்.

மாமனார் திட்டவட்டமாக மறுத்து விட்டதில் ராதாவிற்கு வருத்தம் அதிகம். இந்த விஷயத்தைப் பெரிசு படுத்தி ராதா கணவனுக்குத் தூபம் போட்டு அப்பா பிள்ளைக்கு நடுவில் ஒரு வித மனக்கசப்பு ஏற்பட்டது என்னவோ நிஜம்.

அதனால் தான் பாலசுந்தரம் மகன் மருமகள் வீட்டிற்கு அதிகம் போவதில்லை. கமலாவைக் கூப்பிட்டு ‘கமலா இதோ பாரு. உன் பேரில் வங்கியில் மூன்று லக்ஷம் போட்டு வச்சிருக்கேன். நாமினேஷன் தியாகு பேரில். நாளைக்கு எனக்கு எதாவது ஒன்னு அப்படினா இதில் இருந்து பணத்தை எடுத்து என் கடைசிக்காரியங்களுக்குச் செய்தால் போதும். இந்த வீட்டை உன் பேருக்கு மாத்தி நாமினேஷன் தியாகு பெயரில் கொடுத்திருக்கேன். எல்லா விவரமும் இந்த பச்சை போல்டரில் இருக்கு. பேந்த பேந்த முழிக்காதே. தியாகுவிடமும் இதை நான் சொல்லியாச்சு’ அவர் முடித்த போது கண் கலங்கிய கமலா ‘என்னன்னா நாளும் கிழமையுமா ஒரு பிராமணர் இப்படித்தான் பேசுவாரா?’ என்று வருத்தம் தொனித்த குரலில் கூறிய போது ‘அடி போடி ப்பைத்தியக்காரி. நெருப்புன்னா வாய் வெந்துருமா என்ன’ என்று மனைவியை அதட்டினார் அவர்.

கமலா கடைசிக்காலம் வரை இந்த வீட்டில் தான் வசிக்க வேண்டும் என்று பாலசுந்தரம் திட்டவட்டமாகக்கூறி விட்டார். கமலாவிற்கு நீரிழிவும் உயர் ரத்த அழுத்தமும் இருந்தது. ஆனால் இரண்டும் கண்ட்ரோலில் இருந்தது. மாமியும் மாத்திரை மருந்துகளை ஒழுங்காகச் சாப்பிட்டு உணவுக்கட்டுப்பாடு மேற்கொண்டு ஜாக்கிரதை ஆக இருந்தாள்.

ஆனாலும் பாலசுந்தரம் ஒரு நாள் பட்டென்று தூக்கத்திலேயே போய் விட்டார். அவருக்கு வியாதி வெக்கை ஒன்றும் இல்லா விட்டாலும் அவர் திடுதிடுப்பென்று தவறியது எல்லோருக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

பாலசுந்தரம் தவறிய பின் வாரத்திற்கு ஒரு முறை தியாகுவும் ராதாவும் மாமியை வந்து பார்த்தனர். நாளாவட்டத்தில் ஒரு வாரம் என்பது படிப்படியாகக்குறைந்து மாதம் ஒரு முறை என்று ஆனது.

ஆனால் கமலா மாமி கோவில் குளம் பூஜை புனஸ்காரம் என்று நாட்களைக் கழித்து வந்தாள். முலுண்ட்டில் பால்ராஜேஸ்வர் சிவன் ஆலயம் அதன் எதிரில் கிருஷ்ணர் கோவில் மற்றும் சந்தோஷி தாயின் கோவில் நேரு ரோட்டில் முருகன் ஆலயம் ராகவேந்திர மடம் சந்நியாசி மடம் என்று கோவிலுக்குச் செல்வதில் நேரம் போனதே தெரியவில்லை. காலம் அதன் போக்கில் போய்க்கொண்டு தான் இருந்தது. மாமிக்கு நட்பு வட்டாரம் குறைவு-ஆர் ஆர் டீ ரோட்டில் வசித்து வந்த இந்திரா மாமியும் காளிதாஸ் ஹால் அருகில் வசித்து வந்த பங்கஜம் மாமியும் கமலா மாமிக்கு நெருங்கிய தோழிகள் எனலாம். ஒரு ஆபத்து அவசரம் என்றால் இந்த மூவரும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அந்த வகையில் கமலா மாமி அதிர்ஷ்ட சாலி தான்.

தேங்காயைத் துருவி வைத்துக்கொண்டு சீனிப்பாகு வைக்க ஆயத்தம் செய்த கமலா மாமி மகனை அலைபேசியில் தொடர்பு கொண்டாள் ‘தியாகு கண்ணா இன்னிக்கு சத்தியாவிற்கு பிறந்த நாள். அவனுக்கு ஆசை ஆசையாகத் தேங்காய் பர்பி செய்துண்டு இருக்கேன். இன்னிக்கு சாயங்காலம் உங்காத்துக்கு வரேன்’ என்று கமலா கூறிய போது தியாகு உடனடியாக பதில் ஏதும் கூறவில்லை. பத்து செகன்டுகள் கழித்து ‘அம்மா இன்னிக்கு சாயங்காலம் நாங்க மூணு பேரும் வெளியே போறோம். நீ பர்பி பண்ணி வை. நான் சனிக் கிழமை வந்து வாங்கிண்டு போறேம்மா’ என்றான் தியாகு.

‘சரிப்பா அப்படியே ஆகட்டும்’என்று போனைத் துண்டித்தாள் கமலா மாமி. ஆனால் பர்பி பண்ணினதுமே மாமிக்கு இருப்பு கொள்ளவில்லை. சர்ப்ரைஸ் ஆக இருக்கட்டும் என்று சாயந்திரம் ஆறரை மணி அளவில் மாமி தெரிந்த ஆட்டோக்காரனைக் கூப்பிட்டு வீணா நகர் வந்து அடைந்தாள். மின்தூக்கியில் ஐந்தாம் எண் பொத்தானை அமுக்கி தியாகு வீட்டின் வாசலில் வந்த போது ஒரே செருப்பாக இருந்தது. ராதாவின் தந்தை குரல் கேட்டது. கமலா மாமிக்கு புரிய நேரம் ஆகவில்லை. தியாகு மகன் சத்யாவின் பிறந்த நாளைக்கொண்டாட பார்ட்டி ஏற்பாடு செய்து உள்ளான். தியாகுவிற்கு தாயரைக்கூப்பிட இஷ்ட மில்லை போல அல்லது மருமகள் ராதாவிற்கு மாமியார் வருவது பிடிக்கவில்லையோ என்னவோ.

சிறிது நேரம் என்ன பண்ணுவதென்று தெரியாமல் முழித்த கமலா மாமி தேங்காய் பர்பி டப்பாவுடன் மின்தூக்கியை நோக்கி த் திரும்பிய போது சோமட்டோ என்ற பெயர் பொறிக்கப்பட்ட டீஷர்ட்டுடன் ஒரு பையன் வெளியே வந்தான். அவன் கை நிறைய்ய பார்சல்கள்.

‘தம்பி ஒரு நிமிடம். இந்த டப்பாவை உன்னோட பார்சலோட சேர்த்துக்கொடுத்து விடுவாயா. ப்ளீஸ்’ என்ற கமலா மாமியை புரியாமல் பார்த்த அந்த பையன் மௌனமாக மாமியிடம் இருந்து அந்த பர்பிகள் அடங்கிய டப்பாவை வாங்கிக்கொண்டான். அதற்குள் மாமி மின்தூக்கியில் நுழைந்து கீழ்தளத்திற்கு போய் ஆட்டோவில் ஏறி வீடு நோக்கி பயணிக்கத் துவங்கினாள். மனம் கனத்துப் போய் இருந்தது. மாமியையும் அறியாமல் அவள் கண்களில் வழிந்த நீரை புடவைத் தலைப்பால் துடைத்துக்கொண்டாள் கமலா மாமி. வெளியே இருட்டத் துவங்கி விட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *