வர்ணமில்லா வானவில்…
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: பாக்யா
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 8, 2025
பார்வையிட்டோர்: 4,774
(2003ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12
அத்தியாயம்-10
கெஸ்ட் ஹவுஸின் உள்ளே…
‘என்ன இன்னும் காணோம் ?!’ – ஆகாஷ் கைக்கடிகாரத்தைப் பார்த்து பொறுமை இல்லாமல் முன்னும் பின்னும் நடந்தான்.
‘அரை மணி நேரத்தில் வரவேண்டியவள் ஏன் வரவில்லை.?’
கைபேசி எடுத்து எண்களை நசுக்கினான்.
எதிரில் மணி அடிக்கவில்லை.
சுகுமாரி தூக்கத்தில் தொந்தரவு கூடாது! என்று அணைத்து வைத்திருந்தாள்.
‘ச்..சே !’ – சலிப்புடன் அணைத்தான்.
மறுபடியும் முயற்சி செய்தான். மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்தான். கை வலித்தது.
‘ச்..சே !’ – சோர்ந்தான்.
என்ன ஆச்சு? எங்கே சென்றாள்? – யோசிக்க யோசிக்க குழப்பம் வந்தது.
வழியில் டாக்ஸி பழுது என்றால் அடுத்து பிடித்து வரவேண்டியதுதானே! கையோடு ஆள் போட்டு கபாலியைக் கொண்டு வரச் சொல்லி இருந்தால் இவ்வளவு தவிப்பு தேவை இல்லை. எங்கே அவன்? மணி பதினொன்றைத் தாண்டியும் காணோம்.? கைபேசி எண்களை அழுத்தினான்.
அதுவும் அணைக்கப் பட்டிருந்தது.
அதே நேரம். கபாலி பங்களா வாசலில் தன் ஹீரோ ஹோண்டாவை நிறுத்தினான்.
சுவாதீனமாக உள்ளே சென்றான்.
கூடத்தில் சுகுமாரி வாயில் பிளாஸ்திரி ஒட்டி, கைகள் கட்டப்பட்டு, கால்கள் பிணைக்கப்பட்டு மூலையோரத்தில் முடக்கி வைக்கப்பட்டிருந்தாள்.
ரவி, ஜெயபால், பக்கிரி நடுக்கூடத்தில் அமர்ந்து காவலுக்கு இருந்தார்கள்.
“ஆகாஷைக் கொண்டு வரலை?” – கபாலி அதிர்ச்சியுடன் கேட்டான்.
“அவன் தேவை இல்லை கபாலி”. – ஜெயபாலுக்குப் போதை.
“ஏன்??…”
“இவள்தான் தங்கசுரங்கம். அவன் எதுக்கு தேவை இல்லாம.”
“புத்திசாலித்தனமா பேசாதீங்க. ஆகாஷ் சாதாரண ஆளில்லே. அவன் உட்கார்ந்த இடத்திலிருந்தே எதிரியை அடிப்பான். அவனுக்கு நம்ம கூட மட்டும் பழக்கம்ன்னு நெனைக்காதீங்க. நம்மையே திருப்பி ரிவிட் அடிக்க எதிர் கோஷ்டியிலேயும் கொஞ்சம் பழக்கம் வைச்சிருக்கான்.”
“உனக்கு எப்புடி தெரியம் கபாலி?”
“பாம்பின் கால் பாம்பு அறியும்.!”
“அறியட்டும்.! நமக்குத் தேவை கொள்ளையடிக்காம சொத்து, பணம், நகை. அதுக்கு இவள் இருந்தா போதும்ங்குறது என் யோசனை. இதனாலதான் நம்ப கூட்டாளி டாக்ஸிக்காரனைப் புடிச்சி அவனுக்கு அம்பதுக்கு ஆயிரமா குடுத்து இவளைக் கூட்டி வந்தோம். நீ சொன்ன மாதிரி ஆகாஷ் சொன்ன நேரத்துக்குத் தயாரா கிளம்பி வர்றாள்.”- என்றான்.
“நீ சொல்றது சரி. நமக்கு இவள் இருந்தாப் போதும். ஆகாஷ் ஆபத்தான ஆள். அவனை வெளியில விடுறது தப்பு. அவனையும் கொண்டு வந்தா நமக்குத் தொந்தரவில்லே. நம்ம வேலை முடிஞ்சதும் ரெண்டு பேரையும் கொன்னு ஒரே குழியில புதைச்சு வைச்சோம்ன்னா.. அரியலூர் முந்திரி காட்டுக்குள்ள டிரைவருங்க பொணம் தோண்டி எடுத்தா மாதிரி பின்னால எவனாவது ஒரு இளிச்சவாயன் மாட்டினா இவன்தான் எல்லாரையும் கொன்னான்னு போலீஸ் அவன் தலையில கட்டும்.” என்றான்.
“இப்போ உனக்கு ஆகாஷ் வேணும் அவ்வளவுதானே?! நீ போய் அங்கே இல்லே, இங்கேன்னு சொன்னா தானா வருவான்.”
“அதுவும் நல்ல யோசனைதான்!”- கபாலிக்கு முகம் பளிச்சிட்டது.
“சரி. வர்றேன்.”- நகர்ந்தான்.
“ஒரு நிமிசம்!”- ஜெயபால் அவனை நிறுத்தினான்.
“என்ன?” – ஒரு அடி எடுத்து வைத்தவன் நின்றான்.
“சி…ன்ன உதவி..”
‘“சொல்லு ?’”
“எங்க மூணு பேருக்கும் ப..சி.”
“சாப்பிட பணம் வேணுமா ?”
“அந்த பசி இல்லே. இது வேற பசி.”
கபாலி அவர்களைப் புரியாமல் பார்த்தான்.
“ஒரு பொம்பளை இருக்க…ஆம்பளைங்க மூணு பேரும் சும்மா இருக்கிறது சரி இல்லே….”
அவன் சொன்னது புரிய..கபாலிக்குத் தூக்கிவாரிப் போட்டது.
“அடப்பாவிங்களா?!” – கூவினான்.
“என்ன பாவிங்களா? மண் தின்னுட்டுப் போறதை மனுசன் தின்னுட்டுப் போறான். இவளும் யோக்கியம் கெடையாது. புருசன் இருக்கும்போதே அடுத்த இடம் பாய்ஞ்சவள். இவள் இனிமே உயிராப் போகவும் வழி இல்லே. எங்களுக்கும் சந்தோசமா இருக்கும். அவளுக்கும் போற உயிர் திருப்தியாய் இருக்கும். நேத்திக்கு நீ இவளைக் கடத்தனும்ன்னு சொன்னதுமே நாங்க முடிவு பண்ணிட்டோம். ரவி வயக்கராவைத் தேடிப்புடிச்சி வாங்கி வந்துட்டான்.”
“டேய்! செத்துடுவாள்!”- கபாலி பதறினான்.
“ஆளைச் சாகடிக்காம உனக்குக் கையெழுத்துப் போட குத்துயிரும் குலையுருமாய்த் தர்றோம். இதுல இன்னொரு சவுகரியம். இப்படியே விட்டா முரண்டு செய்வாள். அப்படி செய்தால் துவண்டு வருவாள். அடுத்து இது இவள் செய்த புருச துரோகத்துக்குத் தண்டனைன்னு கூட வைச்சிக்கலாம்.”
கபாலிக்கு இதுவும் நியாயமாகப் பட்டது.
“சரி. அவள் வில்லி. ஜாக்கிரதை!”- எச்சரித்தான்.
பக்கிரிக்குச் சந்தோசம் தாங்க முடியவில்லை.
“நீ கவலைப் படாதே வாத்தியாரே. மூணு பேர் இருக்கோம் சமாளிச்சுக்குறோம். ஜமாய்ச்சிடுறோம்.!” என்றான் உற்சாகமாக.
“ஆனா ஒரே ஒரு நிபந்தனை.!”- திடீரென்று குரலைத் தாழ்த்தி சொன்னவன், “ஆகாஷை ரெண்டு மணி நேரம் தாமசமா கொண்டு வா. போதாது… அஞ்சு மணி நேரம் கழிச்சி கொண்டு வந்தாலும் சந்தோசம்.” – என்றான்.
“சரி. ” – கபாலி வெளியில் வந்தான்.
ஆகாசுக்கு அறையில் இருப்பு கொள்ளவில்லை.
சுகுமாரி கைபேசி வேலை செய்யவில்லை என்று தெரிந்ததுமே எங்கே தொலைந்தாள் ? – கடுப்பு.
கபாலி கைபேசியும் வேலை செய்யவில்லை தெரிந்ததும். இன்னும் எரிச்சல்.
‘தன் திட்டம் தெரிந்து ஆனந்தன் கரை வேட்டி உதவியுடன் காத்தவராயன் ஆட்களை வைத்து இருவரையும் கடத்தி விட்டானா ?!? – யோசிக்க மூளைக் குழம்பல்.
‘என்ன செய்யலாம். வழி ?’ என்று யோசிக்கும் போதுதான் இவன் கைபேசி அடித்தது.
எடுத்தான். கபாலி !
“என்ன கபாலி. எங்கே இருக்கே ?” – பரபரத்தான்.
“அச்சரப்பாக்கம் ஆலடிக்குப்பம் தலைவா.”
“ஏன்…??”
“சுகுமாரியை காத்தவராயன் ஆட்கள் கடத்த இருந்தாங்க. நான் தெரிஞ்சு சாமார்த்தியமா இங்கே கொண்டு வந்திருக்கேன். கைபேசி சத்தம் போட்டா புடிங்கிடுவானுங்கன்னு ஆஃப் பண்ணி வைச்சிருந்தேன்!” – உண்மையில் ஆகாஷ் தொடர்பு கொள்ளக் கூடாது என்று அணைத்து வைத்திருந்ததை மாற்றிச் சொன்னான்.
“ரொம்ப நல்லது. நான் எப்போ வர?”
“நான் இருக்கிற இடத்துக்குக் கார் வந்து நின்னா மத்தவங்களுக்குச் சந்தேகம் வரும். நானே வந்து என் வண்டியில உங்களைக் கூட்டி வர்றேன். எங்கே இருக்கீங்க?”
“கெஸ்ட் ஹவுஸ்லதான்.”
“உடனே வர்றேன்!” – அணைத்தான்.
அத்தியாயம்-11
பள்ளி விட்டு வந்த அருண், தருண், வீடு பூட்டி இருப்பதைப் பார்த்து வாசலில் அமர்ந்தார்கள்.
தூரத்தில் வரும்போதே கவனித்த ஆனந்தனுக்குச் சொரக்கென்றது.
ஏன் பிள்ளைகள் வாசலில் இருக்கிறார்கள்..? வீடு பூட்டி இருக்கிறது..?! சுகுமாரி எங்கே..?’ வேகமாக வந்தான்.
அருகில் வந்து, “அம்மா இல்லே…?” கேட்டான்.
“இல்லேப்பா…!!” அருண் பரிதாபமாகச் சொன்னான்.
பொழுதுக்கும் பள்ளியில் இருந்த பிள்ளைகள் வாடி வதங்கி இருந்தார்கள். அம்மாவைக் காணாததால் சோர்ந்திருந்தார்கள்.
‘பெற்ற குழந்தைகளைக் கூட கவனிக்காமல் கொண்டாட்டம்!’ ஆனந்தனுக்கு நினைக்கவே எரிச்சல், கசப்பாக இருந்தது.
விடுவிடுவென்று தன்னிடம் இருந்த சாவியால் வீட்டைத் திறந்தான்.
உள்ளே நுழைந்ததும்….”யூனிபார்மைக் கழற்றுங்கள்!” மகன்களிடம் சொன்னான்.
“அப்பா! காபி?” தருண் சட்டையைக் கழற்றிக் கொண்டே கேட்டான்.
பாவம் பசி. பள்ளி விட்டு வந்ததும் பிள்ளைகள் ஏதாவது தின்பார்கள். சுகுமாரி மகன்களுக்கு ஏதாவது செய்து வைத்திருப்பாள். எதுவும் செய்யவில்லை என்றால் பிஸ்கட் கொடுப்பாள்.
ஆனந்தன் குளிரூட்டுப் பெட்டியைத் திறந்தான்.
பிரிக்காமல் இருந்த மேரி பிஸ்கட்டை எடுத்து, “இந்தாங்க..” இருவரிடமும் கொடுத்தான்.
இருவரும் பிரித்துத் தின்றார்கள்.
இவன் மறுபடியும் குளிரூட்டுப் பெட்டியைத் திறந்து பால் பாக்கெட் எடுத்தான். பாத்திரத்தில் ஊற்றி காபி தயாரிக்க ஆரம்பித்தான்.
அருண், தருண் அடுப்படிக்கு வந்தார்கள்.
“அப்பா ! அம்மா எங்கே..?” அருண் கேட்டான்.
“தெரியலை..?!”
அழைப்பு மணி அடித்தது. அருண் வாசலுக்கு ஓடி திரும்பி வந்தான்.
“அப்பா ! யாரோ வந்திருக்காங்க..” சொன்னான்.
“யார்..?”
“தெரியலை..”
ஆனந்தன் அடுப்படியை விட்டு வாசலுக்கு விரைந்தான்.
அருணா, அவள் அப்பா, ஒரு இளைஞன்!
“வாங்க..” வரவேற்றான்.
“அவள் இல்லே..?!” அருணா உள்ளே நுழையும்போதே சூடானாள்.
“இல்லே..”
“எங்கே..?”
“தெரியலை. நான் வெளியில் போய் வர்றேன் வீடு பூட்டி இருக்கு. வாசலில் குழந்தைங்க பள்ளிக்கூடம் விட்டு வந்து நிக்கிறாங்க. ஆள் இல்லே. சுகுமாரி எங்கே போனாலும் பள்ளிக்கூடம் விடுவதற்குள் வந்துவிடுவாள். உட்காருங்க. காபி கலந்து வர்றேன்.” – உள்ளே சென்றான்.
‘வீட்டில் மனைவி இல்லை. காபி எப்படி?’ புரிந்து கொண்ட அருணா…
“உங்களுக்குச் சிரமம் வேணாம். நான் தயாரிக்கிறேன்.”அவன் பின்னால் சென்றாள்.
அவள் இப்படி சுதந்திரமாக வந்தது இவனுக்குப் பிடித்திருந்தது. மேலும் பெண் வர பிடித்துத் தள்ள முடியாது. ஒதுங்குவதுதான் முறை. ஒதுங்கினான்.
அருணா புடவையைத் தூக்கிச் சொருகிக் கொண்டு காபி தயாரித்தாள். ஆனந்தன் டம்ளர் எடுத்துக் கொடுத்து அவளுக்கு உதவினான்.
அருணா டம்ளர்களைத் தட்டில் வைத்து எல்லோருக்கும் காபி எடுத்து வந்தாள். முதலில் அருண், தருணுக்குக் கொடுத்தாள்.
“உங்களுக்கு அப்பாவைத் தெரியும். இவன் தம்பி. போன் பண்ணின ஆள்!” அவர்களுக்குக் காபி கொடுத்தக் கொண்டே ஆனந்தனுக்கு அவர்களை அறிமுகப்படுத்தினாள்.
“சுந்தரி எங்கே போயிருப்பாள்?” அவர்களுடன் அமர்ந்து காபி குடித்துக் கொண்டே கேட்டு யோசித்தாள்.
“என் வீட்டில இருக்கலாமா..?” சொல்லிக் கொண்டே எழுந்து சென்று தொலை பேசியைத் தொட்டாள். தொடர்பு கொண்டாள்.
மணி அடித்துக் கொண்டே இருந்தது.
“ஆகாஷ் ! போன் மாத்தலையே..” அங்கிருந்தபடியே திரும்பி ஆனந்தனைக் கேட்டாள்.
எப்படியும் இவளுக்கு அவளுடன் சண்டை போட வேண்டும் என்கிற உக்கிரம்!
மீண்டும் தொடர்பு கொண்டாள். மணி அடித்து ஓய்ந்தது.
“ரெண்டு பெரும் எங்கேயோ போயிருக்காங்க..” சொல்லிக் கொண்டே வந்து அமர்ந்தாள்.
“ஒருவேளை திருமணம் முடிக்க கோவில், ரிஜிஸ்டர் அலுவலகத்திற்குச் சென்றுவிட்டார்களா..?” இளைஞன் சந்தேகத்தை எழுப்பினான்.
ஆனந்தன், அருணாவிற்குச் சொரக்கென்றது. ஒருவரை ஒருவர் திகிலாய்ப் பார்த்தார்கள்.
‘எங்கே போய் யாரை, எப்படி விசாரிப்பது..?’ ஆனந்தனுக்குத் தவிப்பாக இருந்தது.
மெல்ல எழுந்த போனை எடுத்தான்.
எண்களை அழுத்தி, “நான் ஆனந்தன் பேசறேன் அழகுசுந்தரம்” என்றான்.
“சொல்லு..?”
“ஆகாஷ் மனைவி, மாமா வந்திருக்காங்க”
“சந்தோசம்!”
“ஆனாலும் ஆகாசும், சுகுமாரியும் வீட்டில் இல்லை”
“எங்கே..”
“காணோம்..”
“காணோமா..?”
“ஆமாம். யாராவது கடத்திட்டாங்களா..? ஓடிப்போய் திருமணம் முடித்து உல்லாசமா இருக்காங்களா.. தெரியலை”
“ஒன்னும் கவலைப்படாதே. நீ என்னிடம் விசயத்தைச் சொன்னதிலிருந்து என் ஆளை விட்டு கபாலி மேல் ஒரு கண் வைத்திருக்கச் சொல்லி இருக்கேன். அவன் உன் விசயத்தில் தப்பு தண்டா செய்தால் அவன் உடனே எனக்குத் தகவல் தெரிவிப்பான்.” என்று சொல்லும்போதே அழகுசுந்தரம் பாக்கெட்டில் இருந்த கைபேசி ஒலித்தது.
அந்த சத்தம் போனில் ஆனந்தனுக்கும் கேட்டது.
இணைப்பைத் துண்டிக்காமல் எடுத்த அவன், “இரு. என் ஆள்தான் பேசறான். என்ன சொல்றான் பார்க்கலாம்.” சொல்லி இணைப்பைத் துண்டித்தான்..!
அத்தியாயம்-12
ஆகாசும் கபாலியும் பங்களாவிற்குள் நுழைந்த போது சுகுமாரி வாயில் பிளாஸ்திரி ஒட்டப்பட்டு, கை கால்கள் கட்டப்பட்டு மிகவும் வாடிப்போய் அறையில் உள்ள கட்டிலில் கிடந்தாள். ஜாக்கெட் தாறுமாறாக கிழிந்திருந்தது. முகத்தில், நெஞ்சில், கை காலெல்லாம் கீறல். பற்குறி, நகக் குறி.
“என்னப்பா செய்ஞ்சீங்க?”- ஆகாஷ் அதிர்ந்து கேட்டான்.
“ஒன்னும் இல்லே தலைவா. அம்மா உடம்புக்குத் தீனி போடுறேன்னு பசங்க ஆசைப்பட்டாங்க. சரின்னு சம்மதிச்சு வந்தேன். போட்டிருப்பானுங்க.” – என்றான் கபாலி சர்வசாதாரணமாக.
“என்ன கபாலி சொல்றே?!” இவன் அதிர்ச்சியாய் அவனைத் திரும்பிப் பார்த்தான்.
“நீங்க கையெழுத்து வாங்குற வேலையைப் பாருங்க.” – பத்திரத்தைக் கொடுத்தான்.
வாங்கிக் கொண்ட ஆகாஷ், “சுகுமாரி!” – அவளை அசைத்து உசுப்பினான்.
கண் திறந்த அவள் இவனை மிரண்டு பார்த்தாள். சடக்கென்று கண்களில் கண்ணீர் துளிர்த்தது.
ஆகாஷ் மனம் இரங்கியது.
“கையெழுத்துப் போடு..” – அவள் முன் பத்திரத்தை நீட்டினான்.
அவள் ‘மாட்டேன்’ என்பதற்கடையாளமாய் தலையை இப்படியும் அப்படியும் பலமாக அசைத்தாள்.
“என் கண்ணுல்ல. கையெழுத்துப் போடு”
அவள் மறுபடியும் அப்படியே அசைத்தாள்.
“அடிச்சிட்டாங்களா ? அடாவடி செய்யாம போடும்மா.”
அவளிடம் மாற்றமில்லை.
“போடுடி…” – அதட்டினான்.
சுகுமாரி அவனை உக்கிரமாகப் பார்த்தாள்.
ஆகாசுக்குக் கோபம் வந்தது.
“போடுடா!?”- கபாலியைப் பார்த்து உரக்கச் சொன்னான்.
கபாலி போட வில்லை. பக்கரி அவள் தலையில் ஓங்கி மடேரென்று போட்டான்.
கையால் விட்ட அடிதான் என்றாலும் சுகுமாரிக்கு உயிர் போவது போலிருந்தது. பின் மண்டையில் அடி கண்களில் மினுக்கட்டாம் பூச்சிகள் பறந்தது.
“இன்னும் ரெண்டு போடு”
போட்டான்.
சுகுமாரி பல்லைக்கடித்துப் பொறுத்துக் கொண்டாள்.
“போதும் !” கை காட்டி அவனை அடக்கிய ஆகாஷ், “இனி அடிக்கச் சொல்ல மாட்டேன், கொல்லுவேன். எனக்கு உன் கையெழுத்து தேவை இல்லே. இடது கை பெருவிரல் ரேகை இருந்தா போதும். அதுக்கு நீ உசுரோட இருக்கனும்ன்னு அவசியமில்லே. பொணமாய் இருக்கலாம். உன் விரல்ல நாங்க மை வைச்சி தேவைப்பட்ட தாள்கள்ல வைச்சிக்கலாம்.”
இப்போதுதான் சுகுமாரிக்கு அடிவயிற்றில் பயம் வந்தது. முகம் வெளிறியது. என்றாலும் உடல் தலையை அசைத்து ‘உனக்கு ஆபத்து இவனுங்களை நம்பாதே!’ என்பதுபோல், “ம்ம் ம்ம்” என்று அசைந்தாள்.
தங்களைக் காட்டிக் கொடுத்துவிடுவாள் என்று பயந்த, “கபாலி என்ன முரண்டுறே?” – முதுகில் பலமாக அறைந்தான்.
ஏற்கனவே நொந்த உடம்பு. துடித்தாள்.
“உடம்பு சாக்கடை ஆனதோட இருக்கட்டும். ஏன் புண்ணும் ஆகனும். உயிர் போக வேணாம் கையெழுத்துப் போட்டுடும்மா.”
ஏற்கனவே வெறி நாய்கள் குதறிய குதறல். அடி சுகுமாரிக்கு அதற்கு மேல் தெம்பில்லை. அசையாமல் கிடந்தாள். முகத்தில் தளர்ச்சி வந்தது.
அதைக் கண்ட ஆகாஷ் முகத்தில் மலர்ச்சி வந்தது.
“கையெழுத்துப் போடுவா. கையை மட்டும் அவிழ்த்து விடு.”- என்றான்.
ஜெயபாலும் ரவியும் அவளை நிமிர்த்தி உட்கார வைத்து கை கட்டை அவிழ்த்தார்கள்.
”போடு.” ஆகாஷ் அவளை நெருங்கி வெற்றுப்பத்திரங்களை முன் வைத்து தன் பார்க்கர் பேனா மூடியைத் திறந்து நீட்டினான்.
சுகுமாரி ஒரு முடிவிற்கு வந்தவளாய் ஒவ்வொரு பத்திரத்தின் கீழும் பொறுமையாக கையெழுத்துப் போட்டாள். ஒன்று ஒன்றாக முடிக்க முடிக்க ஆத்திரம்.
கடைசி பத்திரத்தில் கையெழுத்துப் போட்ட அடுத்த வினாடி தன் பலத்தையெல்லாம் ஒன்று திரட்டி, பேனாவை இறுகப் பிடித்து, அருகில் குனிந்து தாட்களை எடுத்த ஆகாஷ் வயிற்றில் ஓங்கி சொருகினாள்.
யாருமே இதை எதிர்பார்க்கவில்லை.
“அடிப்பாவி!”- ஆகாஷ் வலியால் வயிற்றைப் பிடித்துக் கொண்டு கூவினான். பேனா குத்தி வெளிவந்த இடத்திலிருந்து இரத்தம் குபுகுபுவென்று கொட்டியது. இருந்த ஆத்திரம் கோபம் எல்லாம் வெறியாக மாறியது.
அடுத்த வினாடி அவள் மேல் பாய்ந்தான்.
சிறிது நேரத்தில் கபாலி கையில் பத்திரத்துடன் ஜெயபால், பக்கிரி, ரவியோடு பங்களா வாசல் கதவைத் திறந்தான்.
எதிரே நீட்டிய துப்பாக்கியுடன் சப்-இன்ஸ்பெக்டர். பின்னால் போலீஸ் படை. அருகில் அழகுசுந்தரம் அருணா ஆனந்தன் தர்மலிங்கம்.
கபாலி பத்திரத்தாட்களுடன் இரு கைகளையும் உயரே தூக்கினான்.
போலீஸ் அதிரடியாய் உள்ளே நுழைந்து கபாலிக்குப் பின் நின்ற ஜெயபால், ரவி, பக்கிரியைக் கைது செய்தது. உள்ளே சுகுமாரியும் ஆகாஷும் இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்கள்.
“எப்படி?”- என்பது போல் சப்-இன்ஸ்பெக்டர் கபாலியைப் பார்த்தார்.
“இந்த பத்திரத்துல கையெழுத்துப் போட்டதும் சுகுமாரி ஆகாஷ் வயித்துல பேனாவால குத்திட்டாள் சார். இவன் பதிலுக்கு அவள் மேல் பாய்ஞ்சு பக்கிரி கையில இருந்த கத்தியைப் புடுங்கி கொலை செய்ஞ்சான். நாங்க இவனை உருட்டுக் கட்டையால மண்டையில ஒன்னு போட்டு சாகடிச்சோம். இனி சொத்தெல்லாம் நமக்குன்னு நெனைச்சி வெளியேறும் போதுதான் நீங்க வந்துட்டீங்க.”
ஆனந்தனும் அருணாவும் அந்த பிணங்களையே வெறிக்கப் பார்த்தப்படி இருந்தார்கள்.
“என்னதான் உருண்டு பொரண்டாலும் உழைச்சவங்களுக்குத்தான் அது ஒட்டும்ங்குறது ரொம்ப சரி சார். இந்தாங்க உங்க மனைவி கையெழுத்துப் போட்டுக் கொடுத்த பத்திரம்.” – என்ற கபாலி தன் கையிலிருந்த தாட்களை ஆனந்தன் கையில் கொடுத்தான்.
வாங்கிக் கொண்ட அவன் சிலையாக நின்ற அருணா கையை ஆறுதலாகப் பற்றினான்.
முற்றும்
– ஏப்ரல் 2003ல் Top-1 பாக்யா மாத இதழில் பிரசுரமான குறுநாவல்.