நீலகண்டன் ஹோட்டல்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம் த்ரில்லர்
கதைப்பதிவு: December 7, 2024
பார்வையிட்டோர்: 12,540
(1958ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12
7. பைத்தியக்காரியா? பதிதையா?
அன்றையத்தினம் தமயந்தி தோட்டத்தில் ஒரு மேடைமீது உட்கார்ந்து நீலகண்டனோடு பேசிக்கொண்டு இருந்தாள். அவள் சொல்லுவதை எல்லாம், ரொம்பப் பவ்யமாகக் கேட்டுக் கொண்டு இருந்தார் நீலகண்டன். அவளுடைய பேச்சு ராணி பவானியின் பக்கம் திரும்பியது.
“அடேயப்பா! அவளைப் பார்த்தால் எனக்குப் பயமாக இருக்கிறது! பிரேதத்தைப் போல, வாயடைத்துப் போய் விரைப்பாக நடமாடிக் கொண்டு திரிகிறாள்! எவ்வளவு ஜம்பம்! அவளும், என்னைப் போல் மனுஷி என்று தான் நினைக்கிறேன்!” என்றாள் தமயந்தி.
அதைக்கேட்ட நீலகண்டன் சிரித்தபடி, “நிச்சயமாக! சில விஷயங்களில் அவள் தங்கமானவள். ஒருவிதத்தில் பைத்தியக்காரி என்றாலும், நல்லவள்!” என்றார்.
தமயந்தி அவரை வெறிக்கப் பார்த்தபடி, “பைத்தியக் காரியா? அவள் அப்படித் தோன்றவில்லையே–“ என்று கேட்டாள்.
“நான் அந்த வார்த்தையை உபயோகித்திருக்கக் கூடாது. நியாயமாக அவள் இருக்க வேண்டிய அளவு புத்திசாலித்தனமாக அவள் இல்லை!” என்று பூசி மெழுகினார் நீலகண்டன்.
அவர் பேசிய தோரணையிலிருந்து ஏதோ விசேஷமிருக்கிறது என்று யூகித்துக் கொண்டாள் தமயந்தி.
“அவள் நல்ல பெண்மணி தானே?” என்று வற்புறுத்திக் கேட்டாள் தமயந்தி.
அவளுக்கு எப்படி பதில் சொல்லுவதென்று புரியாமல் தவித்தார் நீலகண்டன்.
உடனே தமயந்தி, “மழுப்பாதீர்கள், நீலகண்டன்! எனக்கு இருபத்தோரு வயதாகிறது. ஒருதாய் கூட தன் மகளிடம் கூறக் கூச்சப்படும் விஷயங்களை நான் தெரிந்து வைத்திருக்கிறேன்! அவள் நல்லவள் இல்லையா?” என்று கேட்டாள்.
“அவளைப்பற்றி எனக்கு அவ்வளவு அதிகமாகத் தெரியாது–” என்று ஆரம்பித்தார் நீலகண்டன்.
‘பொன்னம்பலம் அவளுடைய காதலனா?” என்று முரட்டுத்தனமாகக் கேட்டாள் தமயந்தி. இந்தக் கேள்வியைக் கேட்டதும் நீலகண்டன் பயங்கர அதிர்ச்சி அடைந்ததைக் கண்ட தமயந்தி மீண்டும் சிரித்தாள்.
“அன்புள்ள நீலகண்டரே! முதல் தடவையாக உங்கள் குழந்தை செய்யும் துஷ்டத்தனத்தைப் பார்ப்பவர்போல் பதறிப் போகாதீர்கள்! நான் உயர்தரக் கல்வி படிப்பவள். அதோடு உடற்கூறு சாஸ்திரத்தை ஆராய்ச்சி செய்து வருபவள்! என்னிடம் நீங்கள் கூச்சப்படத் தேவை! இல்லை. பவானி அவனுடைய ஆசை நாயகிதானே?” என்று தமயந்தி கேட்டாள்.
“இல்லை!” என்று சற்று பலமாகவே கத்திச் சொன்னார் நீலகண்டன். அதற்கு மேல், அந்த விஷயத்தைத் தொடரக் கூடாதென்று, புத்திசாலித்தனமாக நிறுத்திக்கொண்டாள் தமயந்தி.
“உங்களுக்கு பொன்னம்பலத்தைப் பிடிக்கவில்லையா, அம்மா?’ என்று கேட்டார் நீலகண்டன்.
பிடிக்கவில்லை என்று அவள் சொல்வாள் என்று எதிர்பார்த்த நீலகண்டத்திற்கு, அவள் அலட்சியமாகத் தோளை உலுக்கியதும் ஆச்சரியமாக இருந்தது.
“எனக்கே தெரியவில்லை! பொன்னம்பலம் பார்வைக்கு அழகாகத்தான் இருக்கிறான். ஆனால், அவன் ஒரு பயங்கரமான இளைஞன். ஆனால் பயங்கரமான இளைஞர்கள் தான், நல்லவர்களை விட, சுவாரசியமானவர்களாய் இருக்கிறார்கள்! எனக்குத் தெரிந்த ஒரு பெண் சேலத்தில் இருக்கிறாள். அவள் சொல்லுவது இதுதான்: உலகத்தில் “விசேஷ சமாச்சாரம்” என்பது ஒன்றே ஒன்று தான்; அதுதான் கெட்ட சமாச்சாரம்! உலகத்தில் ருசிகரமான மனிதர்கள் என்பவர்கள் ஒரே ஒரு பிரிவினர்தான்; அவர்கள் தான் கெட்டவர்கள்! ஒரு மகான் இறந்தால் மூன்று வரிகளில் செய்தியைப் பிரசுரிக்கும் தினசரிப் பத்திரிகை, ஒரு கொலைகாரன் ஒரு படுகொலை செய்தால் அதை ஒரு பக்கம் நிறைய பிரசுரம் செய்வதை, அந்தப்பெண் உதாரணமாகச் சுட்டிக் காட்டுவாள்!”
“நீங்கள் எந்த முடிவுக்கு வருகிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லையே, அம்மா!” என்று வியப்போடு கூறினார் நீலகண்டன்.
“அதாவது, ஒரு மனிதன் அபாயகரமானவன் என்பதற்காக, அவனை நான் வெறுப்பதில்லை!”
இதைக்கேட்ட நீலகண்டன் அவளை வேதனை யோடு பார்த்தபடி, “எனக்கு பொன்னம்பலத்தைப் பிடிக்க வில்லை! ஒருக்கால் நான் அசாதாரணமானவனாக இருக்கலாம். நீங்கள் அவனை விரும்புவதையும், அவனை என்னுடைய ஓட்டலில் சந்திக்க நேரிட்டதையும் எண்ணினால் எனக்கு வேதனையாக இருக்கிறது!’ என்றார்.
“அவன் அப்படித்தானே?” என்று நேரடியாகக் கேட்டாள் தமயந்தி.
“அவன் எப்படித்தானே?” என்று புரியாமல் கேட்டார் நீலகண்டன்.
“அவன் ராணி பவானியின் காதலன் தானே?”
‘ஆமாம்’ என்று சொல்லி விடாமல் இருக்க, அவர் வெகு பாடுபட வேண்டியிருந்தது. பவானியைக் காப்பாற்ற நீலகண்டன் எதற்காக இப்பாடுபடுகிறார் என்று தமயந்திக்கு வியப்பாக இருந்தது. எக்காரணத்தாலோ, அவர் தடுமாறிப் போய் உண்மையைச் சொல்லிவிடக் கூடுமென்று அவளுக்குத் தோன்றியது.
உண்மையிலேயே, பவானியின் விஷயத்தில் அவளுக்கு அவ்வளவு சிரத்தைக் கிடையாது. அப்படியிருக்க, அந்தக் கேவலமான ஆராய்ச்சியில், தன் மனம் ஏன் அவ்வளவு தூரம் லயித்திருக்கிறது என்றும் அவளுக்கு வியப்பாக இருந்தது. பேச்சை வேறு விஷயத்திற்கு மாற்ற எண்ணி, தாடிக்காரக் கிழவனைப்பற்றி அவரிடம் விசாரித்தாள்.
“எனக்கு முழுவிவரமும் தெரியாது” என்று கூறிய நீலகண்டன், “அவன் யாரோ ஒரு நாடோடி. அந்தக் கிழவனைப் பற்றிக் கவலைப்படாதீர்கள், அம்மா! அவன் இறந்து எவ்வளவோ காலமாகிவிட்டது. இங்கு ஓய்வுக்காக தங்க வந்த பத்திரிகைக்காரர்கள் அவனுக்கு மீண்டும் புனர் ஜன்மம் கொடுக்க முயற்சித்து இருக்கிறார்கள்!” என்றார்.
அந்தச் சமயம், ஓட்டல் வாசலில் ஒரு சாரட் வண்டி வந்து நின்றது. அதிலிருந்து ஒரு வாட்டசாட்டமான மனிதன் இறங்கி, கையிலே ஒரு தோல் பெட்டியைப் பிடித்தபடி ஓட்டலுக்குள் நுழைந்தான். அவன் ஹாலுக்குள் நுழையும் வரை, அவனையே வெறிக்கப் பார்த்துக் கொண்டு இருந்தார் நீலகண்டன்.
“அவர் யார்?” என்று தமயந்தி கேட்டாள்.
“எனக்குத் தெரியவில்லை, அம்மா! சென்ற வருஷம் இங்கு வந்து தங்கியிருந்த ஒரு மனிதர்போல் இருக்கிறார். நான் போய் பார்க்கிறேன்!” என்று கூறிவிட்டு, வேகமாக தோட்டத்தைக் கடந்து உள்ளே நுழைந்தார்.
வந்திருந்த மனிதர்
மனிதர் வாட்டசாட்டமாக, நாகரிக உடையில் காணப்பட்டார். அவரை நெருங்கிப் பார்த்ததும், அவர் யாரென்று நீலகண்டனுக்குப் புரிந்துவிட்டது.
“நீங்கள் தம்பித்துரை அல்லவா?’
ஆம்; அவர் துப்பறியும் தம்பித்துரையே தான். நீலகண்டனுக்கு ஒருவரை ஒரு முறை பார்த்தால், அந்த முகம் இலேசில் மறப்பதில்லை.
தம்பித்துரை ரொம்பவும் கம்பீரமான மனிதர். அதிகாரத்தின் மனித உருவம் தான் தம்பித்துரை என்றால் அது மிகையாகாது.
போலீஸ் இலாக்காவில் அவர் பதவி வகித்தபோது கான்ஸ்டபிளில் இருந்து, சப்–இன்ஸ்பெக்டர் வரை எல்லோரும் அவரிடம் நடுங்குவார்கள். கொழும்புத் தெருக்களில் நடமாடும் குற்றவாளிகள், அவர் வருகிறார் என்று அறிந்தால் மாயமாய் மறைந்து விடுவார்கள்.
“நீலகண்டன்! உங்களை வந்து பார்க்கவேண்டும் என்று நினைத்தேன். இந்தியா பூராவும் நான் சுற்றி வந்து விட்டேன். ஆனால் ஒரு இடத்தில் கூட, உங்களுடைய வானப்பிரகாசம் போன்ற ஒரு ஓட்டலை நான் பார்க்கவில்லை!” என்றார் தம்பித்துரை.
சென்ற தடவை அவர் வந்தபோது, திடீரென்று சொல்லிக் கொள்ளாமல் ஓட்டல் பாக்கியை வேலைக் காரனிடம் கொடுத்துவிட்டு, மாயமாய் மறைந்து விட்டதை நினைத்ததும் நீலகண்டத்திற்கு வியப்பாக இருந்தது. அந்தச் சமயத்தில், சென்னையைச் சேர்ந்த போலீஸ் பிரதம அதிகாரிகள் மூன்று பேர் வானப்பிரகாச ஓட்டலில் தங்கி இருந்து, அந்தக் கிழவனின் மாய நடவடிக்கைகளைப் பற்றி ஆராய்ச்சி நடத்திக் கொண்டு இருந்தனர். அந்தச் சமயத்தில் தான், அந்தத் தாடிக்காரக் கிழவன் வீடுவீடாக நள்ளிரவில் புகுந்து, திருடுவதற்குப் பதிலாக தான் திருடியவற்றை திருப்பிக் கொண்டு போய் வைத்துக் கொண்டு இருந்தான்!
தம்பித்துரைக்கு மனோவசிய சாஸ்திரமும் தெரிந்திருக்க வேண்டும். ஏனென்றால், அவர் உடனே கலகலவென்று சிரித்து, “நான் ரொம்ப அவசரமாக புறப்பட்டுச் சென்றுவிட்டேனே என்று யோசித்துக் கொண்டு இருக்கிறீர்கள் அல்லவா? ஆமாம். அப்படித்தான் செய்தேன்; அந்தக் கிழவனைப் பற்றி ஆராய்ச்சி நடத்தவே இங்கு வந்திருந்தேன். ஆனால் சென்னைப் போலீஸ் அதிகாரிகள், நான் ஏன் இந்த விவகாரத்தில் தலையை நீட்டுகிறேன் என்று நினைத்ததைப் போல் தோன்றியது! என்றார்.
“இல்லை; நீங்கள் வந்ததைப் பற்றி அவர்கள் அப்படி நினைத்ததாகத் தெரியவில்லை. இந்தத் தடவை கூட, நீங்கள் கொஞ்சம் முன்பு வந்திருக்க வேண்டும்; இங்கு ஒரு தீ விபத்து ஏற்பட்டது!” என்றார் நீலகண்டன்.
“ராஜா பகதூர் வீட்டில் தானே? நான் அதைப்பற்றிக் கேள்விப்பட்டேன். பாவம், வீடு முழுவதும் எரிந்து விட்டதா?”
“ஆம், பூராவும் எரிந்து விட்டது. அந்த வீட்டினர் எல்லோரும் இங்கு தான் தங்கி இருக்கிறார்கள்.”
“ராஜா பகதூர் குடும்பத்தினரா?”
“அந்தக் குடும்பத்தினரும்–இன்னும் ஒரு ஆளும்”
“இன்னும் ஒரு ஆளா?” என்று கேட்ட தம்பித்துரை, “அந்த ஆள் யார்?” என்று விசாரித்தார்.
“அந்த ஆளை உங்களுக்குத் தெரியுமென்று நான் நினைக்கவில்லை. அந்த நபர் ராஜா பகதூரின் நண்பன்!” என்றார் நீலகண்டன்.
“யார்; அவர்களோடு, சுற்றுப்பிரயாணம் செய்த ஆளா?” என்று விடாமல் கேட்டார் தம்பித்துரை.
தம்பித்துரை கேள்வி கேட்ட தோரணை, ஒரு போலீஸ்காரர் குறுக்கு விசாரணை செய்வது போல் இருந்தது.
“அவன் தான் என்று நினைக்கிறேன்!” என்று உற்சாகமில்லாமல் கூறினார் நீலகண்டன்.
“அந்தக் கனவானின் பெயர் பொன்னம்பலம் அல்லவா?” என்று மீண்டும் கேட்ட தம்பித்துரை, நீலகண்டத்தின் போக்கில் ஏற்பட்ட மாறுதல் கண்டு, “என்னிடம் இதுதான் ஒரு சங்கடம்; ஒரு காலத்தில் போலீஸ்காரனாக வேலை பார்த்ததால், எந்த நேரத்திலும் போலீஸ்காரனாகவே நடக்க நேரிடுகிறது. சாதாரணமாக ரெயில்வே ஸ்டேஷனுக்கு வழி கேட்டால் கூட என்னால் போலீஸ் தோரணையில் தான் கேட்க முடிகிறது. யாரை வழி கேட்கிறேனோ, அந்த நபர் எனக்கு வழியைக் காட்டாவிட்டால் அவனை லாக்கப்பில் அடைத்து விடுவேன் என்று மிரட்டுவதைப் போல் தான் இருக்கும் என் கேள்வி” என்று சிரித்தார்.
நீலகண்டன் அதற்கு எந்தவிதப் பதிலும் சொல்லாமல் புன்னகை பூத்தார்.
“எனக்கு ஒரு பெரிய அறையாக ஏற்பாடு செய்து கொடுங்கள். இங்கு வந்ததும், என் சொந்த வீட்டிற்கே திரும்பி வந்ததைப் போன்ற உணர்ச்சி ஏற்படுகிறது! ம்… அந்தக் கிழவன் சமாச்சாரம் என்ன? அவன் நடவடிக்கை ரொம்ப விசித்திரமாக இருக்கிறதே? ஒரு வருஷத்திற்கு முன்னால் திருடிய சொத்துக்களை மீண்டும் திருப்பிக் கொண்டு போய் வைப்பதற்காக ஒருவன் வீட்டை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைகிறான் என்றால் அது கேள்விப்படாத அதிசயமாய் இருக்கிறது!” என்றார் தம்பித்துரை.
“அதிசயந்தான்” என்று ஒப்புக்கொண்டார் நீலகண்டன்.
“இந்தக் கிழவன் விஷயத்தில் எனக்கு அளவு கடந்த அக்கறை ஏற்பட்டிருக்கிறது. அவனுடைய செய்கை, ஒரு வீரசாகஸச் செயலாக இருக்கிறது! அவனை நேரில் பார்க்க வேண்டுமென்று ஆசையாய் இருக்கிறது!” என்றார் தம்பித்துரை.
அவர் பேசுவதைக் கேட்க, நீலகண்டனுக்கு வேடிக்கையாக இருந்தது. “உங்களுக்கு ஆசையாக இருக்கிறதா? இன்னும் ஏராளமான பேர்களுக்கும், அவனை நேரில் சந்திக்க ஆசையாகத்தான் இருக்கிறது. அவர்களில் நானும் ஒருவன்”
தான் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதையெல்லாம், நீலகண்டன் ஒரு நடிப்பாகத்தான் கருதுகிறாரென்று தம்பித்துரை புரிந்துகொண்டார். அது அவருக்கு வியப்பாக இருந்தது. இம்மாதிரி நாட்டுப்புறம் போன்ற ஊர்களில் வசிப்பவர்கள் சாதாரணமாக உணர்ச்சி மழுங்கிப் போய்த்தான் இருக்கிறார்கள். அதனால் தான், யாராவது உணர்ச்சியுடன் பேசினால், அந்தப் பேச்சு உள்ளத்திலிருந்து வராமல் உதட்டிலிருந்து வருவதாகவே நினைக்கிறார்கள்!
தம்பித்துரை மீண்டும் கிழவனின் பிரச்னையைப் பற்றி விரிவாக பேச ஆரம்பித்தார். அவர் பேசிய தோரணை, ஒரு பெரிய போலீஸ் அதிகாரி, தனக்குக் கீழ்ப்பட்ட ஒரு அதிகாரிக்கு, விஷயத்தை எடுத்து கூறுவது போலிருந்தது: “இதுதான் இப்பொழுது நடந்து வரும் விவகாரம்; இந்த வட்டாரத்தில் தொடர்ச்சியாக பல இடங்களில் யாரோ வீட்டை உடைத்துக்கொண்டு நுழைகிறார்கள். கிட்டதட்ட ஆறேழு வீடுகள் அம்மாதிரி உடைக்கப்பட்டு இருக்கின்றன. விலை மதிப்புள்ள சாமான்கள் திருடப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு வழக்கிலும் திருட்டு நடந்த இடத்தருகே அந்தக் கிழவனைப் பார்த்ததாக சாட்சியங்கள் இருந்தன–”
“நேரடியாகப் பார்த்தவர்களும் இருக்கிறார்கள். அல்லது தாங்கள் பார்த்ததாக நினைப்பவர்களும் இருக்கிறார்கள்” என்றார் நீலகண்டன். அவரது குரலில் கிண்டல் தொனித்தது.
தம்பித்துரை புன்னகையுடன், “அது முக்கியமல்ல! நீங்கள் நினைப்பதைப் போலவே வைத்துக் கொள்ளுவோம்!–அது இருக்கட்டும்; கடைசி திருட்டைப் பற்றி விசாரணை நடந்து கொண்டு இருக்கும் பொழுதே, கிழவன் மீண்டும் தன் வேலையை தொடங்குகிறான்; திருடுவதற்காக அல்ல-திருடிய பொருள்களை, எடுத்த இடத்திலேயே திருப்பிக் கொண்டுபோய் வைப்பதற்காக! ஒரு வீட்டில் ஒரு சுவரொட்டி அலமாரியிலிருந்து அவன் சாமான்களைத் திருடி இருக்கிறான். அந்த வீட்டுக்காரர்கள் வீட்டை ரிப்பேர் செய்யும் பொழுது, அந்த அலமாரியை மூடிவிட்டார்கள். அதனால், அந்தக் கிழவன், அந்த அலமாரி இருந்த இடத்தருகே ஒரு நாற்காலியை நகர்த்திப் போட்டு சாமான்களை வைத்து விட்டு வந்திருக்கிறான்! இது எனக்கு ரொம்ப புதுமையாக இருக்கிறது, நீலகண்டன்!” என்றார்.
“எல்லோருக்கும் புதுமையாகத்தான் இருக்கிறது!” என்று ஆயாசத்துடன் கூறிய நீலகண்டன், “உங்களுக்கு இதெல்லாம் புதுமையாகத் தோன்றுகிறது. ஆனால் சென்ற ஒரு வருஷமாக என்னை இதே ஹோட்டலில் ஏராளமான பேர் சந்தித்து, இதே விஷயத்தை திரும்ப திரும்பக் கேட்கிறார்கள். விசாரணைக்கு வரும் போலீஸாரும் சரி; வினோத யாத்திரை கிளம்பும் வீணர்களும் சரி; இடைவிடாமல் படையெடுக்கும் பத்திரிகை நிருபர்களும் சரி, என்னை இதே கேள்வியைத் தான் திரும்ப திரும்பக் கேட்கிறார்கள்” என்றார்.
“அதனால், உங்களுக்கு இந்த விஷயம் அலுத்துப் போய்விட்டதா?” என்று சிரித்தார் தம்பித்துரை.
“எப்பொழுதாவது கிளம்பி வந்து, எதைப் பற்றியாவது, ஏதாவது ஒரு கேள்வி கேட்டுவிட்டு போவதென்றால் ரொம்ப ருசிகரமாகத்தான் இருக்கும்!’
“நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது, நீலகண்டன்! நான் திடீர் திடீரென்று வந்து, எதையாவது இரண்டு கேள்வியைக் கேட்டு விட்டு, திரும்பிச் செல்வதை நீங்கள் இடித்துக் காட்டுகிறீர்கள்! நான் இனிமேல் அப்படி செய்யப்போவதில்லை. இங்கேயே கொஞ்ச காலம் தங்கியிருக்கப் போகிறேன். நான் கொழும்புக்குச் செல்வதற்கு இன்னும் கொஞ்சம் காலம் ஆகும்.”
“அப்படியானால், அந்தக் கிழவனை நீங்களே நேரில் சந்திக்கலாம்!” என்றார் நீலகண்டன்.
“ஏன்? நிச்சயம் பார்க்கமுடியும் என்றே நினைக்கிறேன்! சிரிக்காதீர்கள், நீலகண்டன்!”
அந்தச் சமயத்தில், குஞ்சம்மாள் ஏதோ வேலையாக அந்தப் பக்கம் சென்றாள்.
“இந்த அம்மாள் இன்னும் வேலையில் இருக்கிறாளா?” என்று மகிழ்ச்சியோடு விசாரித்தார் தம்பித்துரை. ஏனென்றால் குஞ்சம்மாளை தம்பித் துரைக்கு ரொம்பப் பிடிக்கும்.
தன்னுடைய அறைக்குச் சென்றதும், தம்பித்துரை முதல் வேலையாக குஞ்சம்மாளைத் தான் தேடினார். குஞ்சம்மாளைக் காணவில்லை. அந்தப் “பருவப் பெண் வேலைக்காரி தான்” இருந்தாள். அவள் கூறிய பதில், தம்பித்துரைக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
“டவுனுக்குப் போயிருக்கிறாளா? ஏன்?” என்று சீறினார்.
அந்தச் சமயத்தில், ஹோட்டல் சிப்பந்தியான ராமையா முன் வந்து, குஞ்சம்மாளை ராணி பவானி தான் ஏதோ வேலையாக அனுப்பி இருக்கிறாளென்று கூறினான். அந்த வேலை ரொம்பவும் முக்கியமாக இருக்கக் கூடுமென்றும் அதனால் தான் நீலகண்டத்தின் வண்டியில் அவள் ஏறிக்கொண்டு போயிருப்பதாகவும் ராமையா விளக்கம் கொடுத்தான்.
நீலகண்டன் தம்பித்துரையை விட்டுப் பிரிந்ததும் நேராக தோட்டத்திற்கு சென்றார். ஆனால், அதற்குள் தமயந்தி எங்கோ எழுந்து சென்றுவிட்டாள். அப்பொழுது, பொன்னம்பலம் அங்கு வந்து கொண்டு இருந்தான்.
“உங்களுடன் பேசிக்கொண்டு இருந்த பெண் எங்கே? உங்கள் இருவரையும், நான் மேல் மாடியில் இருந்தபடி கவனித்தேன். ஆனால் நான் இறங்கி வருவதற்குள் அவள் மாயமாய் மறைந்து விட்டாள்” என்றான் பொன்னம்பலம்.
“அவளை நான் மறைத்து வைத்திருக்கிறேன்!” என்று கிண்டல் செய்தார் நீலகண்டம்.
பொன்னம்பலம் புன்னகை பூத்தபடி, “என் உயிரைக் காப்பாற்றியதற்கு நான் உமக்கு நன்றி கூறவில்லை அல்லவா? என்னை அலாக்காகத் தூக்கிக் கொண்டு வந்தீர்களென்று எல்லோரும் சொல்கிறார்கள்!” என்றான்.
“நான் அப்படி எதுவும் செய்யவில்லை. ராஜாபகதூர் தான் உன்னை வெளியே தூக்கிக் கொண்டு வந்தார்!” என்று சுருக்கமாகக் கூறினார் நீலகண்டன்.
இதைக் கேட்டதும் பொன்னம்பலத்தின் முகத்தில் கலவரம் படர்ந்தது.
“அவரா? அறைக்குள்ளிருந்து என்னை தூக்கி வந்தாரா?”
“அறைக்குள்ளிருந்து நான் தான் உன்னைத் தூக்கி வந்தேன். வெளியே வந்ததும் உன்னை ராஜா சாகிப்பிடம் ஒப்படைத்து விட்டேன்”
“அவர் நான் படுத்திருந்த அறைக்குள் போகவே இல்லையே?” என்று பரபரப்புடன் கேட்டான் பொன்னம்பலம்.
“இல்லை, அவர் போகவில்லை”
இருவரும் தோட்டத்தில் சிறிது தூரம் மௌனமாக நடந்து சென்றனர்.
பிறகு, பொன்னம்பலம் மெதுவாக, “யார்–ம்– பவானியைக் கண்டுபிடித்து தூக்கி வந்தது? நீர்தானா?” என்று கேட்டான்.
நீலகண்டன் தலையாட்டினார்.
பொன்னம்பலம் சட்டென்று நின்று நீலகண்டத்தின் முகத்தைப் பார்த்தபடி, “எங்கிருந்து அவளைத் தூக்கி வந்தீர்?” என்று கேட்டான்.
“அவள் அறைக்கு வெளியே வராந்தாவில் கிடந்தாள்!”
பொன்னம்பலம் நீலகண்டத்தை உற்றுப் பார்த்தபடி, “உண்மையாகவா? அவள் அறைக்கு வெளியிலேயா? அவள் எப்படி அங்கே வந்தாள்?” என்று கேள்வி மேல் கேள்வியாக அடுக்கிக் கொண்டு போனான்.
அந்தச் சமயத்தில், செல்வராஜ் அங்கு வந்ததால் அவர்கள் பேச்சு தடைபட்டது.
பொன்னம்பலம் தன் அறைக்குக் கிளம்பினான். அவன் சென்ற பிறகு, செல்வராஜ் நீலகண்டனின் பக்கம் திரும்பி, “அவனைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள், நீலகண்டன்?” என்று கேட்டான்.
“ரொம்ப நல்ல மனிதன், சிலோனிலிருந்து வந்தவனா அவன்?” என்று கேட்டார் நீலகண்டன்.
“அப்படித்தான் சொல்லிக் கொள்ளுகிறான்!” என்றான் செல்வராஜ்.
“அவன் அங்கிருந்து கிளம்பியது, சிலோனுக்கே பெரிய நஷ்டம்!” என்றார் நீலகண்டன்.
செல்வராஜ் கொஞ்ச நேரம் வரை அவர் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தான். அவரிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டுமென்று அவனுக்கு ஒரே தவிப்பாக இருந்தது. அந்தக் கேள்விக்கு அவர் கூறும் பதிலில் தான் பல முக்கிய விஷயங்கள் அடங்கியிருந்தன.
“நீலகண்டன்! உங்களை நேரடியாக ஒரு கேள்வி கேட்கப் போகின்றேன். தீ விபத்தின்போது, நீங்கள் பொன்னம்பலத்தின் அறையில் நுழைந்தீர்களே, அப்பொழுது அங்கு யாரும் இருந்தார்களா– பொன்னம்பலத்தைத் தவிர?”
நீலகண்டன் அவன் முகத்தையே உற்றுப் பார்த்தபடி, “இல்லை; அங்கு வேறு யாருமில்லை!” என்றார்.
“உங்களுக்கு நிச்சயமாகத் தெரியுமா?”
“நிச்சயமாகத் தெரியும்!”
அதைத் தொடர்ந்து அடுத்துவரும் கேள்வி களுக்குப் பதில் சொல்ல தயாராக இருந்தார் நீலகண்டன்.
“நீங்கள் ராணிசாகிப்பை எந்த இடத்தில் கண்டு பிடித்தீர்கள்?”
அந்தக் கேள்விக்கு பதில் சொல்வதற்கு முன்னால் வெகு நேரம் வரை செல்வராஜின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தார் நீலகண்டன்.
“வராந்தாவில் சுவற்றில் சாய்ந்தபடி கிடந்தாள்!”
“ராஜாபகதூரிடம் சொல்லும் பொழுது, அவள் ஜன்னலுக்கடியில் கிடந்ததாகச் சொன்னீர்களே?”
“ஜன்னலுக்கடியில் சுவற்றில் சாய்ந்தபடி கிடந்தாள்!” என்று நிதானமாகக் கூறினார் நீலகண்டன்.
செல்வராஜ் இலேசாகப் புன்னகை பூத்தபடி, “நீங்கள் ரொம்ப நல்லவர், இதே கேள்வியை ராஜாபகதூர் உங்களிடம் கேட்கக்கூடும். அப்பொழுது நீங்கள்–நீங்கள் அவருடைய மனம் குழம்பிப் போகாமல் பதில் சொன்னால் நான் ரொம்பவும் நன்றி பாராட்டுவேன்!” என்றான்.
தீ விபத்து நடந்ததில் இருந்து ராஜாபகதூர் நிம்மதி இல்லாமல் சதா சர்வகாலமும் ஆழ்ந்த சிந்தனையில் லயித்திருந்தார். தீ விபத்திலிருந்து மீட்கப்பட்ட பழங்காலப் பொருட்கள் பலவற்றை அடுக்கி வைப்பதிலும், அவற்றை திரும்பத் திரும்ப எடுத்துப் பார்ப்பதிலுமே அவர் பொழுது கழிந்து கொண்டு இருந்தது. வெளிப் பார்வைக்கு அவர் தன் சொத்தைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டு இருப்பதாய் தோன்றிய போதிலும், உள்ளுக்குள் ஒரு மாளாத மனோ வேதனையில் சிக்கி அவஸ்தைப்படுகிறார் என்று செல்வராஜ் புரிந்து கொண்டான்.
அன்றையத் தினம் செல்வராஜ் ராஜாபகதூரைச் சந்திக்கச் சென்ற பொழுது, அவர் சென்னை போலீஸ் அதிகாரி ஒருவரோடு பேசிக்கொண்டு இருந்தார். சிங்கப்பூர், இலங்கை, சீனா, திபேத்து, பஞ்சாப் முதலிய பல இடங்களிலிருந்து பல அபூர்வமான பொருள்களையும், சரித்திர சம்பந்தமான அதிசயப் பொருள்களையும் ராஜாபகதூர் வாங்கி சேமித்து வைத்திருந்தார். பல நாடுகளைச் சேர்ந்த பட்டாக்கத்திகளும், குத்துவாள்களும், பிச்சுவாக்களும் அவரிடமிருந்தன. அந்த ஆயுதங்களில் சில விலை மதிப்பிட முடியாதவை. அவற்றை அந்தப் போலீஸ் அதிகாரியிடம் காண்பித்துக் கொண்டு இருந்தார் ராஜாபகதூர். செல்வராஜ் அங்கு சென்றபொழுது, சிங்கள நாட்டு குத்துவாள் ஒன்றை அந்த அதிகாரிக்குக் காண்பித்து விவரித்துக் கொண்டு இருந்தார். அந்தக் கத்தி, சரித்திரப் பிரசித்தி வாய்ந்தது. அது நீளமாகவும், பிரம்பைப் போல் துவளும் சக்தி பெற்றும் விளங்கியது. பல காலமான போதிலும் கூட அது க்ஷவரக் கத்தியைப் போல் ரொம்பக் கூர்மையாக இருந்தது.
அந்தக் குத்துவாளின் சரித்திரப் பின்னணியில் கீழ்க்கண்ட பகுதியை ராஜாபகதூர் அந்தப் போலீஸ் அதிகாரியிடம் கூறிக்கொண்டு இருந்தார்.
“…இந்தக் குத்துவாள் சிங்களத்தை கி.மு.15வது ஆண்டில் அரசாட்சி செய்த குடக்கண்ணதீசன் என்ற மன்னனுடையது. அவன் பட்டத்திற்கு வருவதற்கு முன்னால் ராணி அனுலா என்ற சிங்கள ராணியை இந்தக் குத்துவாளால் தான் குத்திக் கொலை செய்து தீயில் தூக்கி வீசி எறிந்தான். ராணி அனுலா பத்தொன்பது ஆண்டுகள் ஈழநாட்டை மிகக் கேவலமாக ஆண்டு வந்தாள். ஒருவர் பின் ஒருவராக முப்பத்திரண்டு கணவன்மார்களை மணந்து தன் ஆசை தீர்ந்ததும் ஒவ்வொருவரையும் நயவஞ்சகமாகக் கொலை செய்து கொன்று தீர்த்தவள் அவள். அப்படிப்பட்ட துரோக அரக்கியை, இந்தக் குத்துவாளைச் செருகித்தான் கொன்றான் குடக்கண்ணதீசன்…
அதற்குமேல், அந்த வரலாற்றை கேட்டுக்கொண்டு நிற்க சகிக்காத செல்வராஜ், “சாப்பிடப் போகலாம், வாருங்கள்” என்று தன் மைத்துனரை அழைத்தான்.
குடக்கண்ணதீசனின் குத்துவாளை அதன் உறையில் போட்டு கட்டி வைத்துவிட்டு, தன் மைத்துன னோடு புறப்பட்டார் ராஜாபகதூர்.
இருவரும், சாப்பாட்டுக் கூடத்தை அடைந்த பொழுது அங்கு யாருமில்லை.
“பவானியைப் பார்த்தீர்களா?” என்று கேட்டான் செல்வராஜ்.
“இல்லை!” என்று கச்சிதமாகக் கூறினார் ராஜா பகதூர்.
“ஏன்?”
இந்தக் கேள்விக்கு ராஜாபகதூர் பதிலளிக்க வில்லை. செல்வராஜின் உள்ளம் சோர்வடைந்தது.
“உங்களுக்குள் ஏதாவது சண்டையா?” என்று கேட்டான்.
“நான் அவளைப் பார்க்கவில்லை–அவ்வளவுதான்!” என்று பொறுமையிழந்து கூறிய ராஜாபகதூர், “அப்படிச் செய்வது தான் சரியென்று எனக்குத் தோன்றுகிறது” என்றார்.
பிறகு சாப்பாடு முடியும் வரை செல்வராஜ் அவரிடம் எந்தவிதப் பேச்சும் கொடுக்கவில்லை. சாப்பிட்டு முடிந்ததும், அவரோடு நேராக அவருடைய அறைக்குச் சென்றான். உள்ளே நுழைந்ததும் கதவைத் தாளிட்டு விட்டு அவர் முகத்தைப் பார்த்தான்.
“அப்படிச் செய்வது தான் சரியென்று, ஏன் உங்களுக்குத் தோன்றுகிறது? உங்களுக்குள் என்ன தகராறு?’
ராஜாபகதூர் நிம்மதியில்லாமல் ஜன்னலருகே சென்று, வான வெளியில் திரண்டு நின்ற மேகக் கூட்டத்தை வெறிக்கப் பார்த்துக் கொண்டு இருந்தார். பிறகு மெதுவான குரலில் பேச ஆரம்பித்தார்:
“என்ன நினைப்பதென்றே எனக்குத் தெரியவில்லை–இதைப் போன்ற அனுபவம் இதற்கு முன்னால் எனக்கு ஏற்பட்டு இருக்கிறது என்பது, உனக்கே தெரியும், செல்வராஜ்! இப்பொழுது காணும் அறிகுறிகள், முன்னால் நான் கண்டவைகளைப் போலவே இருக்கிறது……”
பவானியின் சகோதரனான செல்வராஜ் தன் தைரியத்தை எல்லாம் வரவழைத்துக் கொண்டு மைத்துனரோடு பேச ஆரம்பித்தான்: “பவானியைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்–அவள் பொன்னம்பலத்தின் அறையில் இருந்தாளென்று சொல்கிறீர்களா? வெறும் வாக்கு ஜாலங்களால் நாம் ஒருவரையொருவர் ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று தெளிவாகச் சொல்லுங்கள்!”
ராஜாபகதூர் சிறிது தயங்கினார்: “எனக்குத் தெரியாது. அவள் புடவை ஒரு பக்கம் கருகியிருந்தது. வெளி வராந்தாவில் அவள் கிடந்திருந்தால் அது கருகி இருக்க முடியாது. தீயின் மத்தியிலே தான் அவள் கிடந்திருக்க வேண்டும். பொன்னம்பலத்தின் அறையில் மட்டும் தான் அப்பொழுது தீப்பிடித்திருந்தது. அவளை அங்கிருந்து தான் நீலகண்டன் தூக்கி வந்திருக்க வேண்டும்–நான் ஒரு மடையனல்ல!”
ராஜாபகதூர் மடையரல்ல; இருந்தாலும் அவரால் நிச்சயமாக தீர்மானிக்க முடியவில்லை. இன்னவிதமாகத் தான் நடந்திருக்குமென்று அவர் மனதில் அசைக்க முடியாத சந்தேகம் எழுந்த போதிலும் அந்த சந்தேகத்தை மாத்திரம் வைத்துக் கொண்டு பவானியின் மீது அவ்வளவு பயங்கரக் குற்றசாட்டை சுமத்த முடியாது. அதுவும், தன் மைத்துனனிடம் தெளிவான பாஷையில் “உன் சகோதரி ஒரு நடத்தை கெட்டவள்” என்று கூறக்கூடிய நெஞ்சழுத்தம் அவருக்குக் கிடையாது. அதோடு, இம்மாதிரிக் கேவல விஷயங்களை அமளிக் குமளிபடுத்தக் கூடாதென்ற எண்ணமும் அவருக்கு உண்டு.
வேதனையோடு அவர் செல்வராஜின் முகத்தைப் பார்த்தபடி, “எதற்காக வராந்தாவில் பவானி கிடக்க வேண்டும்? அதுவும், பொன்னம்பலத்தின் அறைக்கு வெளியே?” என்று கேட்டார்.
“அவள் தடுமாறிப்போய் இருக்கலாம்” என்றான் செல்வராஜ். ராஜாபகதூர் ஓர் அவநம்பிக்கையுடன் சிரித்தார். செல்வராஜ் அவசரமாக, “நான் கூடத்தான் தீப்பிடித்த செய்தி கேட்டதும் தடுமாறிப் போய் விட்டேன். அது போகட்டும், நாம் வெளிப்படையாகப் பேசலாம். நீங்கள் சாட்டும் குற்றம்?” என்று ஏதோ ஆரம்பித்தான்.
“நான் யாரையும் குற்றம் சாட்டவில்லை. நடந்த நிகழ்ச்சிகள் எல்லாம் நிலைதடுமாறச் செய்கின்றன என்று தான் கூறுகிறேன்”
ராஜாபகதூரால் இன்னும் நிச்சயமாகக் குற்றம் சாட்ட முடியவில்லை என்று செல்வராஜ் புரிந்து கொண்டான். அவர் ஒரு நிச்சயமான முடிவுக்கு வந்துவிட்டால், பெரிய தொந்தரவு ஏற்படும். அவர் ரொம்ப ரோஷக்காரர். அந்த ரோஷம், ரொம்பவும் பயங்கரமான முறையிலே உருப்பெற்றுக் கிளம்பும்.
“நீலகண்டன் சொல்லுகிறார்–” என்று ஆரம்பித்தான் செல்வராஜ்.
“நீலகண்டன் சொல்லும் எதையும், தக்க சாட்சியம் இல்லாமல் நான் நம்பத் தயாராக இல்லை! அவர் சொல்வது போல, பவானி அந்த ஜன்னலின் கீழ் படுத்திருந்தாளானால் நான் அவளைப் பார்த்திருக்க முடியும். முதலில் நான் அங்கு சென்றபொழுது அவள் அங்கு இல்லை!”
“உங்களுக்குப் பொன்னம்பலத்தைப் பிடிக்கும் என்று நினைத்தேன்……” என்று தயக்கத்தோடு நிறுத்தினான் செல்வராஜ்.
ராஜாபகதூர் தன் மைத்துனனைக் கடைக்கண்ணால் ஒரு பார்வை பார்த்தார்.
“ஆம்; அவனை எனக்குப் பிடிக்கும். ரொம்ப மரியாதையாகத் தான் நடந்து கொண்டான். ஆனால் பிறன் மனைவியை நாடி அலைபவன் தன் உண்மை சொரூபத்தை வெளிக்காண்பித்துக் கொள்ளமாட்டான், செல்வராஜ்! அவன் ஒரு அயோக்கியன். இவ்வளவு காலம் அவனுடைய நடவடிக்கை எல்லாம் வெறும் நடிப்பாகத்தான் இருந்தது!” என்று கூறும்பொழுதே ஆத்திரத்தால் ராஜாபகதூருக்கு மூச்சுத்திணறியது.
“சரி, விஷயத்தை அந்த நிலையிலேயே விட்டு வைப்போம்– அதாவது சந்தேக நிலையிலேயே!” என்று அவசரமாகக் கூறிய செல்வராஜ், “மேற்கொண்டு ருஜுக்கள் கிடைக்கும் வரை ஒன்றும் பேசவேண்டாம். இதற்கிடையில் பொன்னம்பலம் வேறெதுவும் செய்யமாட்டான். நீங்கள் நீலகண்டன் சொல்வதை நம்பத் தயார் தானே?” என்று கேட்டான்.
“நீ நம்புகிறாயா?” என்று மடக்கினார் ராஜாபகதூர்.
“மனப்பூர்வமாக நம்புகிறேன்!” என்றான் செல்வராஜ். அம்மாதிரி சொல்வதற்கு, அவனால் சுலபத்தில் முடியவில்லை. தனக்கு ஏற்பட்ட திணறலைக் கண்டு அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது!
8. பின் தொடரும் துரை! பின் வாங்காத ராணி!
அன்றைய தினம் வானப்பிரகாசம் ஹோட்டலில் ஒரு சிறு தகராறு நடந்தது. ஹோட்டல் சிப்பந்தியான ராமையா, அளவு கடந்த ஆத்திரத்தோடு நீலகண்டனிடம் புகார் செய்து கொண்டு இருந்தான். அவனுக்கு ஐம்பத்தைந்து வயது இருக்கலாம்.
அவன் கூறியதையெல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டு இருந்தார் நீலகண்டன்.
“நீ வேறு என்ன தவறு செய்தாய்?” என்று திருப்பிக் கேட்டார்.
“ஒன்றுமே செய்யவில்லை” என்று கத்திய ராமையா, “காபியை கண்ணாடி டம்ளரில் நிரப்பி, ஒரு தட்டில் வைத்து எடுத்துப்போனேன். அது தவறிப்போய் கீழே விழுந்தது; நான் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்திருக்க வேண்டுமென்று ஒப்புக்கொள்கிறேன். என்ன நடந்ததென்று நான் புரிந்து கொள்வதற்கு முன்னால், அவன் என் தவடையில் ஓங்கி இரண்டு குத்துக்கள் விட்டான். நான் தடுமாறிக் கீழே விழுந்து விட்டேன்” என்றான்.
“நான் பொன்னம்பலத்திடம் பேசுகிறேன்” என்றார் நீலகண்டன்.
“பேசப் போகிறீர்களா!” என்று ஆத்திரத்தால் நடுங்கியபடி கூறிய ராமையா, “நான் குடும்பஸ்தனாக மாத்திரம் இல்லாவிட்டால், அவன் மண்டையைச் சிதறடித்திருப்பேன்” என்றான்.
நீலகண்டன் அவனைக் கூர்மையாகப் பார்த்தபடி, “ராமையா! உன் வாழ்க்கையைச் சீர்செய்து கொள்ள நான் உனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்து இருக்கிறேன். நீ ஐந்து முறை சிறை சென்றவன். இந்த உலகத்தில், யாருமே வேலை கொடுக்க மாட்டார்கள். உனக்கு நான் வேலை கொடுத்ததும் அல்லாமல், நிறைய சம்பளமும் கொடுக்கிறேன். அவனிடம் பேசுகிறேனென்று மீண்டும் சொல்கிறேன். ஹோட்டல் சிப்பந்தியை இங்கு வருபவர்கள் அடிப்பதற்கு உரிமையில்லை. இன்னொரு தடவை அவன் உன்னிடம் அம்மாதிரி நடந்து கொண்டால், உன்னை நான் சும்மா இருக்கச் சொல்லவில்லை. ஆனால், மறுபடியும் அவன் அப்படி நடந்து கொள்ள மாட்டானென்று நினைக்கிறேன்!” என்றார்.
அந்தச் சமயத்தில் பொன்னம்பலம் அந்தப் பக்கமாகச் சென்றான். அவனை வழி மறித்து நின்றபடி நீலகண்டன், “கை ரொம்ப நீளுகிறது போல் இருக்கிறதே, பொன்னம்பலம்!” என்று ஒரு தினுசாகக் கேட்டார். அந்தக் குரலில், ஒரு பயமுறுத்தல் தொனித்தது.
பொன்னம்பலம் ஒரு விநாடி அவரை வெறிக்கப் பார்த்தான். பிறகு, கடகடவென்று விழுந்து விழுந்து சிரித்தான்: “ஓ! உமது அழகான வேலைக்காரன் ராமையாவைப் பற்றிச் சொல்லுகிறீர்களா? அந்த மிருகம் என்ன செய்தான் தெரியுமா? என்னுடைய அழகான ஆடையை விகாரப்படுத்தி விட்டான்.”
“உன்னுடைய அழகான முகத்தையும் அவன் விகாரப்படுத்தாமல் விட்டானே என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவன் ஒரு முரடன். அந்தக் காலத்தில், குத்துச் சண்டைகளில் பங்கெடுத்துக் கொண்டு திரிந்தவன். உன்னுடைய நிலையில் நானிருந்தால் அவனிடம் வாலாட்ட மாட்டேன்!” என்று நிதானமாகக் கூறினார் நீலகண்டன்.
வெளியே சென்றிருந்த குஞ்சம்மாள், நீலகண்டனுக்குத் தெரியாமல் பின்பக்கமாக உள்ளே வந்தாள்.
அவளைப் பார்த்ததும் ராணி பவானி பரபரப்புடன், “பணத்தை வாங்கி வந்தாயா?” என்று மெதுவான குரலில் கேட்டாள்.
குஞ்சம்மாள் ஒரு பச்சைச் சிரிப்புடன், ஒரு கத்தை நோட்டுகளை அவளிடம் கொடுத்தாள்.
“எனக்காக பணம் வாங்கி வரப்போனதாய் நீ யாரிடமும் சொல்லவில்லையே?” என்று கேட்டாள் பவானி.
“இல்லை! நான் டவுனுக்குப் போயிருந்தேன் என்று மாத்திரம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், எதற்காக என்று தெரியாது!”
அன்று காலை முழுவதும், பவானியின் மனம் திகிலடைந்து இருந்தது. தான் பணம் வாங்கப்போன விஷயத்தை குஞ்சம்மாள், ராஜாபகதூரிடம் சொல்லி விட்டால் அது பேராபத்தாக முடியும் என்று அவளுக்குத் தெரியும். எதற்காக நாலாயிரம் ரூபாய் வங்கியிலிருந்து வாங்கி வரச் சொன்னாள் என்று ராஜா பகதூர் கேட்டால் பவானியால் என்ன பதில் சொல்ல முடியும்……அதற்குப் பொருத்தமான ஒரு பொய்யைக் கூட, அவள் தயார் செய்து வைத்துக் கொள்ளவில்லை.
“தீ விபத்து சமயத்தில் நீ எங்கேயிருந்தாய் குஞ்சம்மாள்?” என்று கேட்டாள் பவானி.
மீண்டும் ஒரு பச்சை சிரிப்புடன் குஞ்சம்மாள், “தீ விபத்தின் பொழுது நான் தோட்டத்தில் நின்று கொண்டு இருந்தேன்” என்றாள்.
ராணி பவானி யோசனையோடு அவளைப் பார்த்தபடி, “எனக்கு அங்கு நடந்ததெல்லாம் அவ்வளவாக நினைவில்லை. நானிங்கு படுக்கையில் கிடத்தப்பட்டு இருந்தேன் என்பதைத் தவிர, அன்று நடந்தது எதுவும் எனக்குத் தெரியாது” என்றாள்.
“நீலகண்டன் தான் உங்களைக் காப்பாற்றினார்” என்றாள் குஞ்சம்மாள்.
“அவர் என்னை எங்கிருந்து தூக்கி வந்தார்?”
குஞ்சம்மாள் மெதுவாக இருமிக் கொண்டாள்! “அவர் தான் உங்களைக் காப்பாற்றினார்” என்று சொன்னதையே திருப்பிச் சொன்னாள்.
“அது சரி–” என்று பொறுமையிழந்து கூறிய பவானி, “எந்த இடத்திலிருந்து என்னைக் காப்பாற்றினார்?” என்று கேட்டாள்.
குஞ்சம்மாள் மீண்டும் இருமிக் கொண்டாள்: “அதாவது– ம்….வராந்தாவில் நீங்கள் மயங்கிக் கிடந்ததாய் சொல்லிக் கொள்கிறார்கள்” என்று மரியாதையாகக் கூறினாள். அவள் பேசிய தோரணை, பவானியை என்னவோ செய்தது.
குஞ்சம்மாள் தொடர்ந்து, “ஊரில், பலர் பலவிதமாகப் பேசுவார்கள். ஆனால், அதையெல்லாம் நாம் பொருட்படுத்தக் கூடாது” என்றாள்.
“யார், எப்படிப் பேசுகிறார்கள்?” என்று ஆத்திரமாகக் கேட்டாள் பவானி. அந்தக் கேள்வி, ரொம்பவும் நளினமானது. அதற்குப் பதில் சொல்லாமல் சாதுரியமாகத் தப்பித்துக் கொள்ள நினைத்தாள் குஞ்சம்மாள்:
“வம்புக்காரர்கள் பேசுவதை எல்லாம், நாம் காது கொடுத்து கேட்கக் கூடாது!”
ராணி பவானி ஒரு புன்னகை பூத்துக்கொண்டாள். இந்த வேலைக்காரிகள் எல்லாம் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அவள் கவலைப்பட ஆரம்பித்தால் அதற்கு ஒரு முடிவே இருக்காது.
முதல் நாள் பகல் பூராவும் படுக்கையிலேயே படுத்துக்கிடந்தாள் பவானி. மண்டையைப் பிளப்பது போன்ற தலைவலி அவளை வாட்டிக் கொண்டு இருந்தது. நடந்துபோன விஷயங்களை எல்லாம் ஞாபகப் படுத்தி பார்க்க, மனக்கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்திப் பார்க்க அவள் தவித்துக் கொண்டு இருந்தாள்……எப்படிப்பட்ட பைத்தியக்காரத்தனமான வேலை செய்துவிட்டாள்! எவ்வளவு முட்டாள்தனமாக அலட்சிய புத்தியுடன் நடந்து கொண்டுவிட்டாள்! ஒரு வடிகட்டிய பைத்தியக்காரி கூட, அப்படிப்பட்ட ஆபத்திற்கு தலை கொடுத்து இருக்கமாட்டாள்! அவள் பரவச நித்திரையில் இருந்தபொழுதே தீப்பிடித்திருக்க வேண்டும். அந்தப் புகை சூழ்ந்ததால், அவள் மூர்ச்சை அடைந்திருக்க வேண்டும். ஒரு விஷயம் மாத்திரம், அவளுக்கு நினைவிருந்தது: யாரோ ஒரு ஆள், குழந்தையை வாரி எடுப்பது போல், தரையில் கிடந்த தன்னை வாரி எடுத்தார்.
அந்தச் சமயத்தில் ராஜா பகதூரின் குரலைக் கேட்ட நினைவும் அவளுக்கிருந்தது. அதன் பிறகு வானப் பிரகாசம் ஹோட்டலுக்கு, தான் அழைத்து வரப்பட்டது கூட இலேசாக அவளுக்கு நினைவிருந்தது. ஆனால், எதுவுமே அவளுக்குத் தெளிவாக நினைவில்லை. நடந்த விஷயங்களை எல்லாம் ஒன்றாகத் தொகுத்துப் பார்க்கக்கூட அவளால் முடியவில்லை .
அவள் வராந்தாவில் கிடந்ததாக குஞ்சம்மாள் கூறிய பொழுது கூட அவநம்பிக்கையோடு தான் அதைக் கூறினாள்.
அப்படியானால், ராஜா பகதூருக்கு எந்த அளவுக்கு விஷயம் தெரியும்? அதை நினைத்துத் தான் அவள் மனம் பரிதவித்தது. அவளுக்கு ராஜா பகதூரிடம் நிறைய அன்பு இருந்தது; அவரிடம் அளவு கடந்த அக்கரையும் இருந்தது. ஆனால், பொன்னம்பலம்?–அந்தச் சமயத்தில் தன்னை யாரோ கவனித்துக் கொண்டு இருப்பதைப் போன்ற உள்ளுணர்வு அவளுக்கு ஏற்பட்டது. மெதுவாகத் திரும்பிப் பார்த்தாள். வாசற்படியிலே, அவளையே வெறிக்கப் பார்த்தபடி ராஜாபகதூர் நின்று கொண்டு இருந்தார். தீ விபத்துக்குப் பிறகு, முதல் தடவையாக அவளை அன்று தான் சந்தித்தார். தன்னை எதிர் நோக்கியிருந்த கடுஞ்சோதனைக்குத் தன்னை தயார் செய்து கொண்டாள் பவானி.
“உனக்கு உடம்பு குணமாகிவிட்டதா?” என்று கேட்டார் ராஜாபகதூர். அவர் குரல் வறண்டிருந்தது. சிகரெட் பிடித்துக் கொண்டு இருந்த அவருடைய கை, அவரை, அறியாமல் இலேசாக நடுங்கியது.
“வெறும் அதிர்ச்சி தான் ஏற்பட்டிருந்தது. இப்பொழுது பரவாயில்லை” என்றாள் பவானி. அவளுடைய குரல், அவளுக்கே விசித்திரமாக இருந்தது.
“இன்னும் சில தினங்கள் நாம் இங்கு தான் தங்கியிருக்க வேண்டும்” என்றார் ராஜாபகதூர்.
“இங்கு சௌகரியமாகத் தான் இருக்கிறது” என்று மெல்லிய குரலில் கூறினாள் பவானி.
ராஜாபகதூர் அவளிடமிருந்து பேச்சைப் பறித்து, அவளுக்கு எதிராகவே உபயோகிக்க வேண்டுமென்று தான் வந்திருந்தார். ஆனால், அவள் உஷாராகவே பேசினாள். எனவே அவராகவே பேச்சை ஆரம்பித்தார்.
“இன்று காலை பூராவும் நான் பொன்னம்பலத்தைப் பார்க்கவே இல்லை. அவன் டவுனுக்குப் போகப்போகிறான் என்று நினைக்கிறேன்!” என்றார் ராஜாபகதூர்.
“எனக்குத் தெரியாது!” என்று விறைப்பாகக் கூறிய பவானி, “அவன் தன் மனம்போன போக்கில் நடந்து கொள்ளுவான்” என்றாள்.
ஒரு விநாடி அவளை வெறிக்கப் பார்த்த ராஜாபகதூர், “தன் மனம்போன போக்கில் தான் அவன் நடந்து கொண்டு வருகிறான்” என்றார்.
பவானி மிகச் சிரமப்பட்டு ஒரு புன்னகையைத் தருவித்துக் கொண்டு, “அவனை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், போகச் சொல்லி விடுவது தானே?” என்று கேட்டாள்.
“இது ஒரு ஹோட்டல். அவன் இஷ்டப்பட்டால் இங்கு தங்க முடியும். அவன் இங்கு தங்க விரும்பினால் நாம் டவுனுக்குப் போய் விட நேரிடுமென்று நினைக்கிறேன்!” என்றார் ராஜாபகதூர்.
அவருடைய பேச்சு, ஒரு நெருக்கடியான நிலைமையை ஏற்படுத்தி விட்டது. இந்த நிலைமையில், பவானி எதிர்த்துப் போராடத் தவறிவிட்டால் அவள் மீதுள்ள சந்தேகம் ஊர்ஜிதமாகிவிடும். ஆகவே எதிர்த்துப் போராட தீர்மானித்தாள்.
“ஏன்?” என்று கேட்டாள்.
ராஜாபகதூர் அவளை வெறிக்கப் பார்த்தார். தம் யோசனைக்கு அவள் ஒப்புக்கொள்வாளென்று தான் அவர் நினைத்திருந்தார்.
“உனக்கு இந்த யோசனை தோன்றவில்லையா?” என்று ஒரு தினுசாகக் கேட்டார் ராஜாபகதூர்.
‘இல்லை’ என்ற பாவனையில் தலையாட்டினாள் பவானி.
அந்தச் சரியான நேரத்தில், நீலகண்டன் உள்ளே நுழைந்தார்.
“நீலகண்டன்! நான் டவுனுக்குப் போகிறேன். என்னுடைய அறை இனி எனக்குத் தேவையில்லை” என்றார் ராஜாபகதூர்.
நீலகண்டன் ராணி சாகிப்பின் பக்கம் திரும்பிப் பார்த்தார்.
பவானி புன்னகையுடன், “நான் போகவில்லை, நீலகண்டன்! நான் இன்னும் கொஞ்ச காலம் இங்கு தங்கியிருக்கப் போகிறேன். அன்றிரவு நீங்கள் என்னை தீயிலிருந்து காப்பாற்றியதற்கு நான் நன்றி கூட கூறவில்லை!” என்றாள்.
இந்த சந்தர்ப்பத்தை விட்டுவிட்டால், தான் பேசுவதற்கு வேறு சந்தர்ப்பம் கிடைக்காதென்று அவளுக்குத் தெரியும். வேண்டுமென்றே, தன் கணவன் முகத்தைப் பார்த்தபடி–நீலகண்டனிடம், “நீலகண்டன்! நீங்கள் என்னை எங்கே கண்டுபிடித்துக் காப்பாற்றினீர்கள் ?” என்று கேட்டாள்.
ராஜாபகதூரின் பார்வை நீலகண்டன் முகத்திலேயே லயித்திருந்தது.
“மாடி வராந்தாவில் ஒரு ஜன்னலுக்கடியில் மயக்கத்துடன் நீங்கள் சாய்ந்து கிடந்தீர்கள்!” என்றார் நீலகண்டன்.
அவர் கூறியதை ராஜாபகதூர் அநேகமாக நம்பியதைப் போலவே பவானிக்குத் தோன்றியது. தனக்கெழுந்த ஒரு நிம்மதிப் பெருமூச்சை மிகச் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள் பவானி.
பிறகு சர்வ சாதாரணமாக பேச ஆரம்பித்தாள்; “புகையின் நெடியில், நான் விழித்துக் கொண்டேன் என்று நினைக்கிறேன். பிறகு எல்லோரையும் எழுப்பி விடுவதற்காக, என் அறையிலிருந்து கிளம்பி ஓடி வந்தேன். அப்பொழுது, மயக்கமடைந்து விழுந்திருக்கிறேன். ரொம்ப பைத்தியக்காரத்தனம்…ம்; இப்பொழுது மணி என்ன?”
“உன் கைக்கடிகாரம் எங்கே?” என்று கேட்டார் ராஜாபகதூர்.
தம்பதிகளுக்கிடையே ஒரு சச்சரவு ஏற்பட்ட பொழுது, ஸ்விட்சர்லாந்து தேசத்திலிருந்து பவானிக்கு ஒரு கைக்கடிகாரத்தைத் தருவித்து கொடுத்திருந்தார்! அந்தக் கடிகாரம் அவளிடமில்லை. அந்தக் கடிகாரத்தைக் காணோமென்று ராஜாபகதூர் அவ்வளவு ஆத்திரமாகக் கேட்டது பவானிக்கு வியப்பாக இருந்தது. ஆனால் ராஜாபகதூரைப் பொறுத்த வரையில், தன்னால் கொடுக்கப்பட்ட சாமானுக்கு அளவு கடந்த முக்கியத்துவம் கொடுப்பது அவரது சுபாவம்!
“நெருப்பு எப்படிப் பிடித்தது?” என்று பேச்சை மாற்றினாள் பவானி.
“யாரோ-பொன்னம்பலமாகத்தான் இருக்கும்–தான் பிடித்த சிகரெட் துண்டை அலட்சியமாக விட்டெறிந்ததால் தான் நெருப்பு பிடித்ததென்று சொல்லுகிறார்கள்” என்று நிதானமாகக் கூறினார் ராஜாபகதூர்.
“சிகரெட்டை கட்டிலின் அருகே இருந்த குப்பைக் கூடையில் தான் அவன் வீசி எறிந்திருக்கக் கூடும்!” என்று தன்னையறியாமல் கூறினாள் பவானி.
ராஜா பகதூரின் மனம் தீவிரமாக வேலை செய்தது. குப்பைக் கூடையில் தான் சிகரெட்டை வீசியெறிந்தான் என்று அவளுக்கு எப்படித் தெரிந்தது? அந்தக் குப்பைக் கூடை அவன் கட்டிலருகே இருந்தது அவளுக்கு எப்படித் தெரியும்? இந்த யோசனையோடு, ராஜாபகதூர் அந்த இடத்தை விட்டுக் கிளம்பினார்.
கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் அவர் நீலகண்டனைச் சந்தித்த பொழுது, “நீலகண்டன்! உங்களிடம் ஒரு விஷயம் சொல்ல மறந்து விட்டேன். தீப்பிடித்த அன்றிரவு தாடிக் கிழவனை, என் பங்களா அருகில் பார்த்திருக்கிறார்கள்” என்றார்.
“அவனை நாம் சுட்டுக் கொன்றிருக்க வேண்டும்!” என்று கூறிய நீலகண்டன், “அவனைப் பார்த்ததாகவோ, அவன் தப்பி ஓடிவிட்டதாகவோ, எப்பொழுதும் தான் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்!” என்று சலிப்புடன் கூறினார்.
“இதில் விசேஷம் என்னவென்றால், முன்பு திருட்டுப்போன தங்கக் கோப்பை திரும்பவும் கொண்டு வந்து வைக்கப்பட்டு இருந்தது ” என்றார் ராஜாபகதூர்.
நீலகண்டன் வாயைப் பிளந்தபடி அவரைப் பார்த்துக் கொண்டு இருந்து விட்டு, “இது விசித்திரமாக இருக்கிறதே! இந்த ஆளை ஒரு பைத்தியம் என்று வேறு சொல்கிறார்கள்! உண்மையில், அந்தக் கிழவன் கதையை நான் நம்பவில்லை. அந்தக் கிழவன், ஆஸ்பத்திரியை விட்டு தப்பிய அன்றிரவே இறந்து விட்டான் என்று நினைக்கிறேன். இப்பொழுது நடைபெறும் நிகழ்ச்சிகள் எல்லாம் யாரோ ஒரு குறும்புக்காரனால் நடத்தப் பெறும் நாடகம்” என்றார்.
“அவனை நீங்கள் பார்த்ததே இல்லையா?” என்று கேட்டார் ராஜாபகதூர். ‘இல்லை’ என்ற பாவனையில் தலையை ஆட்டினார் நீலகண்டன்.
அந்த இடத்தை விட்டு புறப்பட்ட ராஜாபகதூர், எதையோ நினைத்துக்கொண்டு, மறுபடியும் திரும்பி வந்தார். வேறொரு முக்கியமான கேள்வியை நீலகண்டனிடம் கேட்க வேண்டும் என்று தான் நினைத்திருந்தார். அப்படிப்பட்ட கேள்வியைக் கேட்பது எவ்வளவு கேவலமானது என்று அவர் கருதிப்பார்க்கவே இல்லை. தனக்கு அப்பொழுது ஏற்பட்டிருந்த சந்தேகத்தைத் தீர்த்துக் கொண்டால் போதுமென்று தான் தோன்றியது.
“அன்றிரவு நடந்த நிகழ்ச்சியைப் பற்றி நீங்கள் என்னிடம் கூறிய தகவல் சரியானது தானே?” என்று கேட்டார் ராஜாபகதூர்.
“சரியான தகவல் தான்!” என்று உறுதியாகக் கூறினார் நீலகண்டன்.
அந்தச் சமயத்தில், குஞ்சம்மாள் அங்கு வந்தாள். ராஜாபகதூர் தன் அறைக்குப் புறப்பட்டுச் சென்றார்.
“நெருப்பிலிருந்து சாமான்களைக் காப்பாற்றியவர்களுக்கெல்லாம் பரிசு கொடுத்தார்கள். ஆனால், எனக்கு மாத்திரம் எந்தவிதப் பரிசும் கொடுக்கவில்லை!” என்று முனகினாள் குஞ்சம்மாள்.
அவள் சொல்வது பொய்யென்று சீறி விழுந்தார் நீலகண்டன். “நீ நெருப்பின் பக்கம் போயிருக்கவே மாட்டாய்!”
அந்தச் சமயத்தில் துப்பறியும் தம்பித்துரை அந்த வழியாக எங்கோ குறுக்கே நடந்து சென்றார்.
“அவர்கூட என்னைப் பார்த்தார்!” என்று தம்பித்துரையை சாட்சியாகக் கூறினாள் குஞ்சம்மாள்.
“யார்–தம்பித்துரையா?–அவர் தீ விபத்து நடந்த அன்றிரவு இந்த ஊரிலேயே இல்லை! மறுநாள் காலை தான் அவர் தாம்பரத்திற்கே வந்து சேர்ந்தார்! பொய் சொல்லி, காசு சம்பாதிக்க ஆசைப்படாதே!” என்று கடுமையாகக் கூறினார் நீலகண்டன்.
“இந்த தம்பித்துரை அன்றிரவு அங்கே நின்றார்! என் கண்ணால் பார்த்தேன்! அவர் அந்த அவர்–அவர் பெயரென்ன?–அவர் கூடப் பார்த்தார்!” என்றாள்.
“எந்த ‘அவர்-பெயர்-என்ன’வைச் சொல்லுகிறாய்?”
“அவர்தான், ராணியம்மாளின் தம்பி!”
“யார், செல்வராஜா?”
அந்தச் சமயத்தில், செல்வராஜே அங்கு வந்தான். நீலகண்டன் அவனை நெருங்கி “தீ விபத்து நடந்த தினத்தில் தம்பித்துரையை அங்கு பார்த்தாயா?” என்று கேட்டார்.
“தம்பித்துரை யாரென்றே எனக்குத் தெரியாது” என்று ஆரம்பித்த செல்வராஜ், பிறகு சட்டென்று, “அந்த வாட்டசாட்டமான ஆளைச் சொல்கிறீர்களா? ஆம்; அவரை அங்கு பார்த்தேன்!” என்றான்.
“ஆனால் மறுதினம் காலையில் தானே அவர் இங்கு வந்தார்?” என்று தடுமாறிப்போய் கேட்ட நீலகண்டன், “அவரிடம் தீ விபத்தைப் பற்றி நான் பேசிய பொழுது கூட, அப்பொழுது தான் அதைப்பற்றி கேள்விப்படுபவர் போல் பேசினார்!” என்றார்.
“தீ விபத்து நடந்த அன்றிரவு அவர் இங்கு இருந்தார்” என்று நிதானமாகக் கூறிய செல்வராஜ், “உங்களுக்கு இன்னொரு விஷயமும் சொல்கிறேன், நீலகண்டன்! வடநாட்டில் நாங்கள் சென்ற இடத்தில் எல்லாம் அந்த ஆள் எதிர்ப்பட்டார். எங்களை நிழல்போல பின்தொடர்ந்து வந்தார். ஏனென்று எங்களுக்கே புரியவில்லை!” என்றான் செல்வராஜ்.
“தீ விபத்து சமயத்தில் அந்த ஆள் இங்கு இருந்தாரா?” என்று மீண்டும் கேட்டார் நீலகண்டன்.
செல்வராஜ் மெதுவாகத் தலையாட்டியபடி, “இன்னொன்றும் சொல்லுகிறேன், நீலகண்டன்! நான் இதை ராஜாபகதூரிடம் கூடச் சொல்லவில்லை. தீ விபத்து ஏற்படுவதற்கு முன்னால், அந்த நபர் பங்களாவையே வெறிக்கப் பார்த்தபடி சிறிது தூரத்தில் நின்று கொண்டு இருந்தார். நான் சாப்பாட்டிற்குச் செல்வதற்கு முன்னால் அதைப் பார்த்தேன். கொழும்பு நகரத்தைச் சேர்ந்த ஒரு துப்பறிவாளர் எதற்காக தாம்பரம் வரவேண்டுமென்றும், எங்கள் வீட்டையே கவனித்துக் கொண்டு இருக்க வேண்டுமென்றும் எனக்குப் புரியவில்லை!” என்றான்.
நீலகண்டனும் அதை யோசித்தார். “எனக்கு இந்த தம்பித்துரை விவகாரமே புரியவில்லை” என்று முடிவாகக் கூறிய நீலகண்டன், “கொஞ்ச காலத்திற்கு முன்னால் அந்த ஆள் இங்கு வந்திருந்தார். சில தினங்கள் தான் இங்கு தங்கியிருந்தார். அப்பொழுது, அவர் என்னையே கண்காணித்துக் கொண்டு இருப்பது போன்ற உணர்ச்சி எனக்கு ஏற்பட்டது. அதோடு, இங்கு தங்கியிருந்த வாடிக்கைக்காரர்களையும், அவர் விசித்திரமாகக் கண்காணித்து வந்தார்!” என்றார்.
சிறிது நேரம் வரை, இருவரும் பேசவில்லை.
“ராணி சாகிப்பை பார்த்தீர்களா?” என்று திடீரெனக் கேட்டான் செல்வராஜ்.
“தோட்டத்துப் பக்கம் பார்த்தேன் என்று நினைக்கிறேன்”
“தமயந்தியும் அங்குதான் இருக்கிறாளா?”
“இல்லை, தன்னுடைய அறையிலிருக்கிறாள் என்று நினைக்கிறேன். அவளைப் பார்க்க வேண்டுமா?’
“ஹீஹீம்–இல்லை” என்று மழுப்பிய செல்வராஜ், “அவள் இன்று மாலை தாம்பரம் காட்டுக்குள் செல்லப் போவதாய் சொன்னாள். அங்கு போவது ஆபத்தாயிற்றே என்று நினைத்தேன்….” என்றான்.
நீலகண்டன் புன்னகை பூத்தபடி, “அந்தக் குகையில் வசிக்கும் கிழவனை நினைத்து பயப்படுகிறாயா?” என்று கேட்டார்.
“இல்லை, இல்லை! ஆனால்–ம்–இருந்தாலும் அநாவசியமான ஆபத்துக்களில் தலை கொடுக்கக் கூடாதல்லவா–ம்”
“தமயந்தி, உனது நெடுநாளைய சிநேகிதியா?’ என்று நையாண்டியாகக் கேட்டார் நீலகண்டன்.
“இல்லை–அது உங்களுக்கே தெரியும்” என்றான் செல்வராஜ்.
நீலகண்டன் ஒரு பெருமூச்சு விட்டபடி, “நான் கிழவனுக்காக பயப்படவில்லை; குமரனுக்காகத்தான் பயப்படுகிறேன்! அந்தப் பெண்ணை பத்திரமாக ஊருக்கு அனுப்பும் பொறுப்பு என்னைச் சேர்ந்தது. அது உனக்குத் தெரியுமென்று நினைக்கிறேன்” என்றார்.
செல்வராஜ் அவரை விசித்திரமாகப் பார்த்தபடி, “நீங்கள் ஒரு விசித்திரமான ஆசாமி! தமயந்தியை நீங்கள் பொறுப்போடு கவனித்து வருகிறீர்கள் என்பதை அறிய எனக்கு எவ்வளவோ மகிழ்ச்சியாக இருக்கிறது.”
“அவளுக்காக, இந்த உலகத்தில் நான் எதையும் செய்யத் தயாராய் இருக்கிறேன்!” என்று வெட்கத்துடன் கூறினான் செல்வராஜ்.
நீலகண்டன் தனக்குள் புன்னகை பூத்துக் கொண்டார்.
அங்கிருந்து கிளம்பி, செல்வராஜ் தன் மைத்துனரின் அருகில் சென்றான்.
ராஜாபகதூர், அப்பொழுது ஏதோ கடிதங்கள் எழுதிக்கொண்டு இருந்தார். அவர் முகம் வெளுத்து, இறங்கிப் போயிருந்தது. பவானியை அவர் சந்தித்தாரா என்று செல்வராஜ் கேட்ட பொழுது ராஜாபகதூர் எரிச்சலாகத்தான் பதில் பேசினார். “பவானியா? அவளோடு இரண்டொரு நிமிஷம் தான் பேசிக் கொண்டு இருந்தேன். அவளுக்கு உடல் நிலை சரியில்லை!” என்றார்.
“நீங்கள் டவுனுக்குப் போவதாகவல்லவோ நினைத்தேன்” என்றான் செல்வராஜ்.
“போகிறேன்–ஆனால் இப்பொழுதல்ல! நான் மாத்திரம் தான் டவுனுக்குப் போவேன். பவானி இங்கேயே தங்கியிருப்பாள்!” என்று கூறிய ராஜாபகதூர், “செல்வராஜ்! பவானி காணாமல் போட்டு விட்ட வைரகங்கணம் உனக்கு நினைவிருக்கிறதா?” என்று கேட்டார்.
செல்வராஜ் வியப்போடு, “அதைத் திருடிய நபர் யாரென்று தெரிந்துவிட்டதா?” என்று கேட்டான்.
“தெரிந்துவிட்டது–பொன்னம்பலந்தான்!”
அதைக் கேட்டதும் செல்வராஜ் பிரமைதட்டிப் போனவனாய்: “இருக்காது! அந்தக் கங்கணத்தை பவானி அவனுக்குக் கொடுத்திருக்க முடியாது–அதற்கு அவசியமும் இல்லை-” என்றான்.
“பவானி அவனிடம் கொடுக்கவில்லை– அவனாகவே எடுத்துக் கொண்டான்” என்று நிதானமாகக் கூறினார் ராஜாபகதூர். அவர் கூறிய வார்த்தைகளின் உள் அர்த்தம் செல்வராஜுக்கு முதலில் புரியவில்லை.
“தாளிடப்பட்டிருந்த அவளுடைய படுக்கை அறைக்குள் பொன்னம்பலம் எப்படி-” என்று சட்டென்று நிறுத்திக் கொண்டான் செல்வராஜ்.
“அதுதான் விஷயம்!” என்று நிதானமாகக் கூறிய ராஜாபகதூர், “இதையும் பார்” என்று கூறியபடி ஸ்விட்சர்லாந்து தேசத்திலிருந்து தருவித்த கைக்கடிகாரத்தை அவனிடம் எடுத்துக் கொடுத்தார். அந்தக் கடிகாரம், முன்பொரு சச்சரவு நடந்த சமயத்தில் ராஜாபகதூரால் பவானிக்குப் பரிசாக அளிக்கப்பட்டது. அந்த கடிகாரத்தில், கரி படிந்திருந்தது. அதன் மேற்பக்கத்து கண்ணாடி தூள் தூளாக வெடித்திருந்தது.
“இந்தக் கடிகாரத்தை விபத்து நடந்த அன்றிரவு பவானி தன் கையில் கட்டிக் கொண்டு இருந்தாள். இது, பொன்னம்பலத்தின் அறையில் இருந்த மேஜை மீது, தீ விபத்தின் போது இருந்திருக்கிறது!” என்றார் ராஜாபகதூர்.
செல்வராஜ் மௌனமாக இருந்தான். அவன் மனதிலும் பயங்கரமான சந்தேகம் எழுந்திருந்தது. இருந்த போதிலும், அந்த சந்தேகத்தைப் போராடி விரட்டி விடவே ஆசைப்பட்டான்: “நீங்கள் ஏன் பவானியையே கேட்கக் கூடாது?” என்று வேதனையோடு கூறினான்.
“எத்தனைப் பொய்களைத்தான் என்னைக் கேட்கச் சொல்லுகிறாய்? எந்த விஷயத்தைப் பற்றி நீ அவளிடம் கேள்வி கேட்டாலும், உடனே அதற்கு சமாதானம் சொல்லிவிடுவாள்!” என்றார் ராஜாபகதூர்.
செல்வராஜ் விடாப்பிடியாக, “இந்தச் சமயத்தில் உண்மை கூட உங்களுக்குப் பொய்யாகத் தான் தோன்றும், ராஜாபகதூர்!” என்றான்.
ராஜாபகதூர் எந்தவிதப் பதிலும் சொல்லவில்லை. செல்வராஜின் மனப்போக்கு அவருக்கு ஏமாற்றத்தை அளித்தது. தனது சந்தேகத்தை ஊர்ஜிதம் செய்து பேசக்கூடிய ஆள் அவருக்குத் தேவையாக இருந்தது. ஆனால், அதைத் தன் மனைவியின் சகோதரனிடம் இருந்தே, எதிர்பார்க்க முடியாதென்று அவருக்குத் தெரியும். இருந்த போதிலும், அவன் இன்னும் கொஞ்சம் வேதாந்த மனப்பான்மையுடன் பெரும் போக்கில் பேசி இருக்கலாம் என்று நினைத்தார் ராஜாபகதூர்.
“இந்த வைரகங்கணத்தின் விஷயம் என்ன?” என்று கேட்ட செல்வராஜ், “இந்த விஷயம் பவானிக்குக் கட்டாயம் தெரியவேண்டும். அவளை அறியாமல் அவள் இல்லாதபோது–அந்த வைரகங்கணம் திருட்டுப் போயிருக்கும் என்று நினைக்கிறேன்!” என்றான்.
“இந்த விஷயத்தை நீயே அவளிடம் தெரிவிப்பது நல்லது. என்னைப் பொறுத்தவரை, பொன்னம்பலத்தின் விஷயத்தில் எனக்குப் பெருத்த அவநம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.”
ராஜாபகதூரின் அறையை விட்டு வெளியே வந்த பொழுது, பொன்னம்பலம் தனது அறை வாசற்படியில் நின்று கொண்டு இருப்பதைக் கவனித்தான் செல்வராஜ்.
செல்வராஜ் வருவதைக் கண்டதும், பொன்னம்பலம் சட்டென்று தன்னுடைய அறைக்குள் நுழைந்து, கதவைச் சாத்திக்கொண்டான். அந்தச் சமயத்தில், பவானியின் உறவினர் யாரையும் அவன் சந்திக்கத் தயாராயில்லை. முட்டாள்தனமாக, ஒரு சங்கடமான சமயத்தில் பவானியைப் பார்ப்பதற்கு அவன் ஏற்பாடு செய்திருந்தான்.
தனது அறைக்குள்ளிருந்து, பின்புற தாழ்வாரத்தின் பக்கம் சென்றான் பொன்னம்பலம்.
தாழ்வாரத்தின் மற்றொரு புறத்திலே, தனது அறைக்கு வெளியே ஒரு நாற்காலியைத் தூக்கிப்போட்டு அதில் அமர்ந்தபடி தமயந்தி ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டு இருந்தாள். அவளிடம் பேச்சுக் கொடுக்க முயன்ற பொன்னம்பலம் தனது முயற்சியில் தோல்வி அடைந்தான். கையில் வைத்திருந்த புத்தகத்தை நாற்காலி மீது போட்டு விட்டு, தமயந்தி எழுந்தாள்.
“எங்கே இவ்வளவு அவசரமாகக் கிளம்புகிறாய்?” என்று கேட்டபடி, நாற்காலியில் கிடந்த புத்தகத்தை எடுத்துப் பார்த்தான் பொன்னம்பலம்.
தமயந்தி அதற்கு எந்தவித பதிலும் சொல்லவில்லை. ஆனால், தன் அறைக்குள் நுழைந்து, கதவையும், ஜன்னலையும் சாத்திக் கொண்டாள். அவளுடைய நடத்தை, அவனுக்கு ரொம்ப திருப்தி அளித்தது. தன்னைப் பார்த்து அவள் பயப்படுகிறாள் என்று புரிந்து கொண்டான். அது, அவனது துஷ்டத்தனமான எண்ணங்களுக்கு தென்பு கொடுப்பதாக இருந்தது. அதோடு, தன்னைக் கண்டு அவள் மிரளுவது அவனுக்குப் பெருமையாகவும் இருந்தது. தன்னை லட்சியம் செய்யாமல் புறக்கணித்து விட்டுச் செல்லும் பெண்களைப் பார்க்கும் பொழுது தான், அவனுக்கு வெறுப்பாக இருக்கும்–அப்படிப்பட்ட பெண்களிடம், தான் வாலாட்ட முடியாதென்று அவனுக்குத் தெரியும்.
பொன்னம்பலம் மாடியை விட்டிறங்கி தோட்டத்திற்கு நடந்தான். தோட்டத்திலிருந்த ஒரு சிறு “சவுக்கண்டி”யில்தான் பவானியை சந்திக்க ஏற்பாடு செய்திருந்தான்.
பொன்னம்பலம் சவுக்கண்டியை அடைந்தபொழுது பவானி, அவனுக்காகத் தயாராய் காத்திருந்தாள். ஒரு வார்த்தை கூடப் பேசாமல், அவன் கையில் ஒரு கத்தை கரன்ஸி நோட்டுகளைக் கொடுத்தாள்.
பவானியின் பார்வை, அவன் முகத்தின் மீதே லயித்திருந்தது. அதில், இலேசான ஆத்திரமும் குடிகொண்டு இருந்தது.
“நான் டவுனுக்குச் சென்றதும் இந்த தொகைக்கு ஏற்பாடு செய்து உனக்குத் திருப்பி அனுப்பி விடுகிறேன்” என்று கூறிய பொன்னம்பலம், அந்த நோட்டுகளைப் பத்திரமாக சட்டைப் பையில் வைத்துக் கொண்டு, “பவானி! நேற்றுப் பூராவும் நான் உன்னைச் சந்திக்கவில்லை……அதோடு அன்றிரவு நடந்த நிகழ்ச்சி, ரொம்பப் பயங்கரம்!” என்றான்.
“ஏன் அப்படிச் செய்தேனென்று எனக்கே புரியவில்லை” என்று வேதனையுடன் கூறினாள் பவானி.
பொன்னம்பலம் புன்னகையுடன், “அதற்குக் காரணம் காதல் தான், கண்ணே!” என்றான்.
ராணிபவானி சிரித்தாள்: “ஈனச் செயல்களை மறைப்பதற்கு, பெரிய பெரிய வார்த்தைகளாக அடுக்கிப் பேசுவது உலகத்தார் வழக்கம்!” என்று கூறும்பொழுதே அவள் முகத்தில் நிலவிய புன்னகை மறைந்து ஒரு கடுகடுப்பு ஏற்பட்டது: “பொன்னம்பலம்! வாழ்க்கையிலே உன்னைப் போன்ற ஆட்களை நான் எப்பொழுதுமே வெறுத்து வந்திருக்கிறேன். நீ ஒரு ஏமாற்றுக்கள்ளன்! பிறரை ஏமாற்றிப் பிழைப்பதே உன் தொழில்” என்றாள்.
“என்னையா அப்படிச் சொல்லுகிறாய்?’
“உன்னைத்தான் சொல்லுகிறேன். உனக்கு, இலங்கையில் பெரிய எஸ்டேட் இருப்பதாக என்னிடம் புளுகினாய். அந்த எஸ்டேட்டின் உரிமையாளரான பணக்காரப் பொன்னம்பலம் வேறு; அன்னக் காவடியான நீ வேறு!” என்று ஆத்திரமாகக் கூறினாள்.
ஒரு விநாடி, பொன்னம்பலம் தடுமாறிப் போய்விட்டான். பிறகு, பேச்சை வேறு வழியில் திருப்பி சமாளிக்க முயன்றவனாய், தீ விபத்தைப்பற்றி பேச ஆரம்பித்தான். அவன் பேசும்பொழுது, ராஜாபகதூரை எண்ணி அவன் நடுங்குவது அவளுக்குத் தெளிவாகத் தெரிந்தது.
“ராஜா சாகிப்பை நினைத்து நீ பயப்படுகிறாய், பொன்னம்பலம்! அவர் சிங்கப்பூரில் இருந்தபொழுது ஒரு சர்க்கார் உத்தியோகஸ்தனையே துப்பாக்கியால் சுட்டுத்தள்ளி இருக்கிறார் என்றும் உனக்குச் சொன்னேனா?” என்று கேட்டாள் பவானி.
பொன்னம்பலம் அலட்சியமாக “ச்” கொட்டியபடி, “என்னை எத்தனையோ பேர் கொலை செய்திருக்கிறார்கள். அப்படியிருந்தும் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்! ஒரு சமயத்தில், ஒரு மனிதன் என்னைக் கொல்லுவதற்காக இந்த ஆசியாக் கண்டம் பூராவும் என்னை விரட்டிக் கொண்டு இருந்தான். கடைசியில் அலுத்துப் போய் திரும்பி விட்டான்” என்றான்.
“யார்? உன்னால் கெடுக்கப்பட்ட பெண்ணின் கணவனா அவன்?” என்று விசித்திரமாகக் கேட்டாள் ராணிபவானி.
“இந்த விஷயத்தில் அவன் என்னுடைய மாமனாரே தான்! ரொம்ப பயங்கரமான ஆள்!–ஆனால் தவறு என் மீது இல்லை. அவனுடைய மகள் அழகாக இருக்கிறாள் என்பதற்காக நான் திருமணம் செய்து கொண்டேன். ஆனால், அவளுக்கு மூளைக்கோளாறு இருந்திருக்கிறது. நான் மணக்கும் பொழுதே அவள் பைத்தியமாகத் தான் இருந்திருக்கிறாள். அவளை வைத்துக் குடும்பம் நடத்துவது அசாத்தியமாகி விட்டது. ஒரு சமயத்தில், என்னைக் கொலை செய்யக்கூட முயன்றாள். அதனால், நான் அவளைத் துரத்தி விடும்படி நேர்ந்தது..” என்று கூறியபடி பொன்னம்பலம் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்தான். அவனுடைய பார்வை, “வானப்பிரகாச”த்தின் பக்கம் திருட்டுத்தனமாகத் திரும்பியது.
“நீ போக வேண்டுமா?” என்று மரியாதையாகக் கேட்டாள்.
பொன்னம்பலம் தடுமாறிப் போனவனாய், “ஆமாம், ஒருவரைப் பார்க்க வருவதாய் சொல்லி இருக்கிறேன்–” என்றான்.
“உனக்கு செல்வராஜையும், ராஜாபகதூரையும் தவிர, தெரிந்தவர் யாருமில்லை. அவர்கள் இருவரோடும் உனக்கு இப்பொழுது பேச்சு வார்த்தைக் கிடையாது என்று நினைக்கிறேன்” என்று ஒரு தினுசாகக் கூறினாள் பவானி.
பொன்னம்பலம் சவுக்கண்டியை விட்டு மெதுவாக வெளியே வந்தான். அவன் நின்று கொண்டு இருந்த இடத்திலிருந்து பார்த்தால், வானப்பிரகாசம் ஹோட்டலில் மாடித்தாழ்வாரம் நன்றாகத் தெரியும். அந்த தாழ்வாரத்தில் நின்று கொண்டு தமயந்தி, தோட்டத்தில் யாரையோ தேடுவது போல் தோன்றியது.
தன்னை அவள் தேடவில்லை என்றும், செல்வ ராஜைத் தான் தேடுகிறாள் என்றும் பொன்னம்பலத்திற்கு நன்றாகத் தெரியும்.
“நீ போவதாக இருந்தால், போ!” என்று கடு கடுப்பாகக் கூறினாள் ராணிபவானி. அந்தக் குரலில், வெறுப்பு பிரதிபலித்தது: “உன்னைக் கண்டாலே எனக்கு எரிச்சலாக இருக்கிறது. நீ போகலாம்! நீ யாரையோ பார்க்கப் போவதாய் சொன்னாயல்லவா? ஒரு ஆளை! போய்ப் பார்!” என்று ஆத்திரமாகக் கூறினாள்.
“இன்றைய தினம் உன் மனம் ரொம்பவும் கெட்டிருக்கிறது, பவானி!” என்று வேதனைப்படுபவன் போல் கூற முயன்றான் பொன்னம்பலம். ஆனால், அவன் நடிக்கிறானென்று புரிந்து கொண்டாள் பவானி. அவனுடைய மனம் வேறு ஏதோ ஒரு விஷயத்தில் லயித்திருக்கிறதென்று அவளுக்குத் தெளிவாகத் தெரிந்தது. சட்டென்று தன்னையறியாமல் பொன்னம்பலம் துணுக்குற்று நிமிர்வதைக் கவனித்தாள் பவானி. சவுக்கண்டியை விட்டு அவளும் வெளியே வந்தாள்.
அந்தச் சமயத்தில், தோட்டத்தில்–சிறிது தூரத்திற்கு அப்பால் தமயந்தி நடந்து செல்வது தெரிந்தது. அவள் பார்வையை விட்டு மறையும் வரை, இருவரும் பேசவில்லை.
பிறகு–ராணிபவானி அளவுகடந்த வெறுப்புடன், “விஷயம் இது தானா? நீ இவ்வளவு கேவலமாக அலைபவன் என்று நான் நினைக்கவில்லை!” என்றாள்.
அவள் குரலில் தொனித்த அபாய அறிவிப்பை, அவன் புரிந்து கொண்டு இருக்க வேண்டும்.
“பொன்னம்பலம்! உன் நிலைமையில் நான் இருந்தால் ரொம்ப எச்சரிக்கையாக நடந்து கொள்வேன். செல்வராஜ் அவள் மீது உயிராக இருக்கிறான். அந்தப் பெண்ணிடம் வாலாட்டாதே. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு ஆண்கள், உன் குடலை உருவி மாலையாகப் போட்டுக் கொள்ள வேண்டுமென்று வெறி கொண்டு அலையும்படி செய்து விடாதே!’
“பொன்னம்பலம் ஒரு சிரிப்பைத் தருவித்துக் கொண்டு, “யாரைச் சொல்லுகிறாய்? தமயந்தியையா? உளறாதே; அவள் குழந்தை மாதிரி! ரொம்ப சுவாரசிய மானவள்தான்; இருந்தாலும்–” என்று நிறுத்தினான்.
“இருந்தாலும் உனது ரசனைக்கு ஏற்றவள் அல்ல” என்று ஒயிலாகக் கூறினாள் பவானி. தன்னுடைய மன உணர்ச்சியை எல்லாம் ரொம்பவும் அடக்கிக்கொண்டு, தேனொழுகப் பேசினாள். ஆனால் அவள் உள்ளத்தில் மறைந்திருந்த ஆத்திர வெறியை பொன்னம்பலம் உணர்ந்திருந்தானானால், நடுகடுங்கிப் போயிருப்பான்.
“நான் ஹோட்டலுக்குச் செல்கிறேன்” என்று பரபரப்புடன் கூறிய பொன்னம்பலம், “நம் இருவரையும் யாராவது சேர்த்து பார்த்துவிட்டால் ரொம்ப விசித்திரமாகப் போய்விடும்! இந்தப் பணத்திற்கு உனக்கு ரொம்பவும் நன்றி செலுத்துகிறேன்” என்றான்
“என்னிடமிருந்து எவ்வளவு பணம் கறந்து இருக்கிறாய்?”
இதைக் கேட்டதும் கதி கலங்கிப் போனவனாய் பவானியின் பக்கம் திரும்பிய பொன்னம்பலம், “இவ்வளவு கேவலமாகப் பேசாதே!” என்றான்.
“கிட்டத்தட்ட பதினையாயிரம் ரூபாய் கறந்து இருக்கிறாய்!” என்று அவனை லட்சியம் செய்யாமல் கூறிய ராணிபவானி, “இன்னும் என்னிடம் பத்தாயிரம் ரூபாய் தான் பாக்கி இருக்கிறது!” என்றாள்.
பொன்னம்பலம் அவளை வெறிக்கப் பார்த்தான். அவன் மனதில் ஏற்பட்ட திகைப்பு, மிகத் தெளிவாக அவன் முகத்திலே பிரதிபலித்தது. அதைப் பார்த்ததும் அவளுக்குச் சிரிப்பே வந்துவிட்டது.
“நான் பணக்காரி என்றும், என்னிடம் நிறைய ரொக்கம் இருக்கிறதென்றும் யாரோ உனக்குச் சொல்லி இருக்கிறார்கள்!– ஆனால், நான் பணக்காரியல்ல ராஜா பகதூரிடந்தான் நிறைய பணம் இருக்கிறது. என் கைச்செலவிற்கு, மாதா மாதம் அவர் ஏதோ பணம் கொடுப்பார்” என்றாள் பவானி.
அவளையே கூர்ந்து பார்த்தபடி நின்று கொண்டு இருந்தான் பொன்னம்பலம். அவள் பொய் சொல்லவில்லை என்று அவனுக்கு நன்றாகத் தெரிந்தது. அவள் கூறிய அந்த தகவல், அவனுக்கு ஒரு பேரிடியாக இருந்தது. நெருக்கடியான சமயம் ஏற்படும் பொழுது, ராணிபவானியை எப்படி எப்படியெல்லாமோ பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவன் மனக்கோட்டை கட்டியிருந்தான்…….
ராணிபவானி தொடர்ந்து பேசினாள்: “இன்று முதல் நான் எதைச் செய்தாலும், என் கண்ணைத் திறந்து கொண்டு தான் செய்கிறேன்” என்றாள்.
பொன்னம்பலம் சமாளித்தபடி, “உன்னிடம் பணமிருந்தாலும், இல்லாவிட்டாலும், எல்லாம் எனக்கு ஒன்று தான்–” என்று ஆரம்பித்தான்.
இரண்டாவது தடவையாக பவானி சிரித்தாள்:
“உன் பேச்சு நம்பத்தக்கதாக இல்லை. போய் வா, பொன்னம்பலம்–நான் ராஜா பகதூரை பார்க்கப் போகிறேன்”
பொன்னம்பலம் கடுகடுப்பாக அந்த இடத்தை விட்டுக் கிளம்பினான்.
ராணிபவானி மெதுவாக தன் அறைக்குச் சென்றாள். அங்கிருந்தபடி, தாழ்வாரத்தின் பக்கம் நடந்து சென்று, தோட்டத்தைப் பார்த்தாள். பொன்னம்பலத்தை அங்கு காணவில்லை. பிறகு மெதுவாக ராஜா பகதூரின் அறையை நோக்கி நடந்தாள். அவரை நேரில் சந்திப்பதற்கு இதுவரை பயந்து கொண்டு இருந்தாள்.
ராஜா பகதூரின் அறையில் பவானி நுழைந்த பொழுது, அவர் கட்டிலினருகில் நாற்காலியைப் போட்டு உட்கார்ந்து கொண்டு, கட்டில் மீது பரப்பி வைக்கப்பட்டு இருந்த சரித்திரகாலக் கத்திகளைப் பார்வையிட்டுக் கொண்டு இருந்தார். பவானி வரும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தார்.
“உன் உடம்பு இப்பொழுது குணமாகிவிட்டதா?” என்று தம் மனைவியைச் சாந்தமாகக் கேட்டார் ராஜா பகதூர்.
“இப்பொழுது ரொம்பத்தேவலை” என்று கூறிக் கொண்டே, ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அவருக்கருகில் உட்கார்ந்தாள் பவானி.
“ஏன் நீங்கள் ஒரு தினுசாக இருக்கிறீர்கள்?”
“ஒன்றுமில்லை” என்றார் ராஜாபகதூர். அவரது கரங்கள், அக்கத்திகளை ஒன்றாகக் குவித்துக் கொண்டு இருந்தன. அவர் மனம், அவற்றின் மீதே லயித்திருப்பது போல் தோன்றியது.
வெகு நேரம் வரை மௌனம் நிலவியது. பிறகு பவானியே பேச ஆரம்பித்தாள்.
“பெண்களைப் பற்றி உங்களுக்கு அதிகம் தெரியாதென்று நினைக்கிறேன்……”
“எனக்குத் தெரிய வேண்டிய அளவிற்குமேல், கொஞ்சம் அதிகமாகவே எனக்குத் தெரிந்திருக்கிறது” என்று அவள் பக்கம் திரும்பாமலேயே கூறினார் ராஜாபகதூர்.
“நான் இப்பொழுது. உங்கள் முதல் மனைவியைப் பற்றி பேசுகிறேன். அவளுடைய விவகாரம் ஒரு சிறு மனச்சபலமாகத்தான் இருந்திருக்க வேண்டும். அதை நீங்கள் பிரமாதப்படுத்தி பயங்கரமாக்கி விட்டீர்கள். அவளும், உங்களிடம் அளவு கடந்து அன்பு கொண்டு இருந்திருப்பாள்–என்னைப்போல” என்றாள்.
ராஜா பகதூர் சட்டென்று அவள் முகத்தை திரும்பிப் பார்த்தார். அவர் உதட்டிலே ஒரு புன்னகை படர்ந்தது: “உன்னைப்போல!” என்று திருப்பிக் கூறிய ராஜாபகதூர், “கேட்பதற்கு எவ்வளவு
மனோரஞ்சிதமாக இருக்கிறது தெரியுமா! என்னிடம் உயிருக்குயிராக இருந்து கொண்டே, வேறொருவனிடம் மனச்சபலம் கொள்ள முடியும் என்று உனக்குத் தோன்றுகிறதா?” என்று கேட்டார்.
‘ஆம்’ என்ற பாவனையில் மெதுவாகத் தலையசைத்தாள் பவானி.
“அந்த மனச்சபலம் எந்த அளவிற்குப் போக முடியும்?”
அந்தக் கேள்விக்கு அவள் பதில் சொல்லாமல் இருப்பதைக் கண்ட ராஜாபகதூர் தொடர்ந்து பேசினார்:
“அந்த மனிதனின் கட்டிலுக்கருகில் உள்ள மேஜை மீது, நள்ளிரவிலே தன்னுடைய கைக்கடிகாரத்தைக் கழற்றி வைப்பதோடு அந்தச் சபலம் நின்று விடுமா? அல்லது தன்னுடைய வைரகங்கணத்தை, அவன் தன்னையறியாமல், தன் அறைக்குள் நுழைந்து எடுத்துக் கொண்டு செல்ல அனுமதிப்பதுடன் அந்தச் சபலம் நின்று விடுமா?” இதைக் கேட்டதும், பேசவும் சக்தியற்றவளாய், கண்களை அகல விரித்தபடி, அவரையே வெறிக்கப் பார்த்துக் கொண்டு இருந்தாள் பவானி.
“உன்னுடைய வைரகங்கணத்தைத் திருடிப்போய் விற்றவன் பொன்னம்பலம் தான் என்று போலீசார் கண்டு பிடித்திருக்கிறார்கள்” என்று நிதானமாகக் கூறினார் ராஜாபகதூர்.
“இது அசாத்தியம்! நடக்க முடியாதது!” என்று மூச்சு வாங்கக் கூறினாள் ராணிபவானி.
ராஜாபகதூர் ஓர் இகழ்ச்சிப் புன்னகையுடன், “இது நடக்க முடியாதது தான்! நீ மாத்திரம் தனியாக உன் அறைக்குள் கதவைத் தாளிட்டுக்கொண்டு படுத்திருந்தாயானால் இது நடக்க முடியாதது தான்! ஆனால், வேறு சூழ்நிலைகளில் இது நடக்கக் கூடியது தான்” என்றார்.
விஷயத்தை சமாளிக்க, தான் துணிச்சலுடன் போராட வேண்டுமென்று முடிவு செய்த ராணிபவானி, “ரொம்ப பைத்தியக்காரத்தனமாகப் பேசுகிறீர்கள்! நீங்கள் உண்மையிலேயே என் ன்னையும், பொன்னம்பலத்தையும் சேர்த்து சந்தேகிக்கிறீர்கள் என்று நினைத்தால், நான் அடுத்த நிமிஷமே உங்களை விட்டுப் பிரிந்து விடுவேன்! ஆனால், நான் அப்படி நினைக்கவில்லை! வைரகங்கணத்தை அவன் தான் விற்றானென்று உங்களுக்கு யார் சொன்னது?” என்று கேட்டாள்.
“அதில் எனக்கு சந்தேகமே இல்லை!” என்று சட்டென்று கூறிய ராஜாபகதூர், ‘இந்த விவகாரத்தை அமர்க்களப்படுத்த நான் விரும்பவில்லை! பொன்னம்பலம் மரியாதையாகச் சென்னைக்குப் போய்விடட்டும். அவனை இத்துடன் நாம் தலை முழுகி விடுவோம்!” என்றார்.
ராணிபவானி கொஞ்சம் கூட அதிர்ச்சியடையாமல், ரொம்ப சாந்தமாகவே காணப்பட்டாள். அவள் முகத்திலே, புன்னகை கூட அரும்பியது! ராஜாபகதூர் தனது சந்தேகத்தை ஊர்ஜிதம் செய்து கொண்டு இருந்தாரானால், அவளுடைய நிதானத்தைக் கண்டு பிரமித்துப் போயிருப்பார்.
அவள் பேச ஆரம்பித்தபொழுது, அவள் குரல் சாதாரணமாகவே இருந்தது. ஓரளவு உற்சாகத்தோடு பேசினாள் என்று கூடச் சொல்லலாம்: “அவனைத் தலை முழுகிவிடுவது நமக்கு எந்தவிதத்திலும் நஷ்டமல்ல! அவன் இருப்பது எனக்கு ரொம்ப சங்கடமாக இருக்கிறது. என்னை விட, சந்தேகப்பிராணியான உங்களுக்கு அதிக சங்கடமாயிருக்கிறது” என்றாள்.
ராஜாபகதூர் அதற்கு ஒன்றும் சொல்லவில்லை. தொடர்ந்து பேசினாள் ராணிபவானி.
“அவனை ஏன் நீங்கள் போலீசில் ஒப்படைக்கக் கூடா டாது? எனக்கு, அதில் முழுச்சம்மதம் உண்டு!”
ராஜாபகதூரின் வரண்ட உதடுகளில் மீண்டும் ஒரு புன்னகை படர்ந்தது: “அவனை ஏன் போலீசில் ஒப்படைக்கக் கூடாது என்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன” என்று எச்சரிக்கையாகக் கூறினார்.
ராணிபவானி அறையை விட்டு எழுந்து, தாழ்வாரத்தின் பக்கம் நடந்தாள். அப்பொழுது அவள் பார்வை தோட்டத்தின் பக்கம் சென்றது. பொன்னம்பலம், வேகமாக ஒரு புதர் மறைவின் பக்கம் சென்று கொண்டு இருந்தான். முன்னால் சென்று கொண்டு இருக்கும் யாரையோ வழி மறிப்பதற்காக அவன் சென்று கொண்டு இருப்பதைப் போல் தெரிந்தது.
ராணிபவானி ஒரு நீண்ட பெருமூச்சுவிட்டாள்: “நான் என் அறையில் தானிருக்கிறேன். தேவையானால் கூப்பிடுங்கள்” என்றாள்.
அவள் கணவன் கூறிய பதில், அவள் காதில் விழக்கூட இல்லை.
பொன்னம்பலம் அவ்வளவு வேகமாக நடந்து சென்றிருக்க வேண்டியதில்லை, ஏனென்றால், அவன் எதிர்பார்த்துச் சென்ற அந்தப் பெண்மணி இன்னும் “வானப்பிரகாசம்” ஹோட்டலுக்குள் தான் இருந்தாள்!
9. தமயந்தியின் பருவமும் புருவமும்!
“வானப்பிரகாசம்” ஹோட்டல், தமயந்திக்கு ரொம்ப வசதியாகத்தான் இருந்தது. அதோடு, நீலகண்டன் அவளுக்கு வேண்டிய எல்லா வசதிகளையும் தவறாமல் செய்து கொடுத்து வந்தார். இருந்தபோதிலும், தன்னை ஒரு குழந்தை போல் பாவித்து அவர் நடத்துவதை அவளால் மனப்பூர்வமாக சகித்துக் கொள்ள முடியவில்லை.
அன்றைய தினம், தமயந்தி மாடியை விட்டிறங்கி தோட்டத்தின் பக்கம் நடந்த பொழுது நீலகண்டன், ஹோட்டல் மேஜையருகே உட்கார்ந்து கணக்குப் புத்தகங்களைப் புரட்டிக் கொண்டு இருந்தார். அவள் வந்த அரவம் கேட்டதும், “ரொம்ப தூரம் போகிறீர்களா, அம்மா?” என்று கேட்டார்.
“காட்டுக்குள் நுழைந்து யானைக் குட்டை வரை செல்லப் போகிறேன்!” என்றாள் தமயந்தி.
நீலகண்டன் மாடியை அண்ணார்து பார்த்து விட்டு, “செல்வராஜ் உங்களைத் தேடிக்கொண்டு இருந்தார்–நீங்கள் அவரோடு காட்டுக்குள் போவது நல்லது. நீங்கள் தனியாக அங்கு செல்வதை நான் விரும்பவில்லை!” என்று நிதானமாகக் கூறினார்.
தமயந்தி சந்தேகத்தோடு அவர் முகத்தைப் பார்த்தாள்.
அன்றுதான் முதல் தடவையாக, செல்வராஜை துணைக்கு அழைத்துச் செல்லும்படி நீலகண்டன் அவளிடம் சொல்லவில்லை. அவளுக்கு செல்வராஜைப் பிடிக்குமென்றாலும், வேறொருவர் கட்டாயத்தின் பேரில் அவனைத் துணை சேர்த்துக்கொண்டு போக அவள் தயாராயில்லை.
“நான் தனியாகத்தான் போகப்போகிறேன்” என்று சிறிது மமதையுடன் கூறினாள் தமயந்தி.
“சரியம்மா” என்று நீலகண்டன் பரிதாபமாகக் கூறியதும் அவளுக்கு வருத்தமாக இருந்தது. ஆனால் அதே சமயத்தில் கொஞ்சம் ஆத்திரமாகவும் இருந்தது. அவளுடைய வயதில், அவளை யாரும் அடக்கி ஆளுகிறார்கள் என்றாலும் அது சகிக்க முடியாத விஷயம் என்று அவளுக்குத் தோன்றியது.
தோட்டத்தின் வழியாக, காட்டுப்பக்கம் நடக்க ஆரம்பித்தாள் தமயந்தி. வழியில் அவள் ராஜாபகதூரின் தோட்டத்தைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. தோட்டத்திலே, ஒரு கோடியை நெருங்கியதும், அங்கு அடர்த்தியாக செடிகொடிகள் மண்டியிருந்தன. ராஜா பகதூரின் பாட்டன் காலத்தில், அங்கு இரும்பு ஆசனங்கள் போடப்பட்டு இருந்தன. அந்த ஆசனங்கள் எல்லாம் இப்பொழுது துருப்பிடித்துக் காணப்பட்ட போதிலும், அந்த இடம் மனோரம்மியமாக இருந்தது.
அந்த இடத்தை சிறிது தாண்டி காட்டிற்குள் நுழைவதற்காக ஒரு திருப்பத்தில் தமயந்தி திரும்பினாள். அங்கும், ஒரே அடர்த்தியாக செடி கொடிகள் மண்டிக்கிடந்தன. காட்டுக்குப் போவதாக செல்வராஜிடம் முன்பே கூறியிருந்ததால், அவன் எங்காவது தனக்காகக் காத்துக் கொண்டு இருப்பான் என்று எதிர்பார்த்தாள்.
அந்த திருப்பத்தில் திரும்பியதும், பொன்னம்பலம், அங்கு நிற்பதைக்கண்டு தமயந்தி சட்டென்று நின்றுவிட்டாள். பொன்னம்பலம், வேகமாக அவளை நோக்கி நடந்து வந்தான். திரும்பிச் செல்வதென்றாலும், அவ்வளவு சரியாகத் தோன்றவில்லை.
அவனைத்தாண்டி முன்னேறிச் செல்வதும் புத்திசாலித்தனமல்ல என்று அவளுக்குத் தோன்றியது. பேசாமல், நின்ற இடத்திலேயே நின்று கொண்டு இருந்தாள்.
“உன்னைத் தேடிக்கொண்டு, இந்தக் காடு பூராவும் அலைந்தேன்!” என்று நளினமாகக் கூறினான் பொன்னம்பலம்.
“நீங்கள் செல்வராஜைப் பார்த்தீர்களா?” என்று வேண்டுமென்றே கேட்டாள் தமயந்தி.
“இல்லை; அவன், ராஜாபகதூருடன் மாடியில் பேசிக்கொண்டு இருக்கிறான்” என்று புன்னகையுடன் கூறிய, பொன்னம்பலம்,
“இப்பொழுது எங்கே போகிறாய்?” என்று கேட்டான்.
“ஹோட்டலுக்குத்தான் திரும்பிச் செல்கிறேன்” என்று பவ்வியமாகவே புளுகினாள் தமயந்தி. இந்த நேரத்தில் அவனிடம் முரட்டுத் தனமாகப் பேசக்கூடாது என்று அவளுக்குத் தெரியும்.
“இன்றைய தினம், இந்தப்பக்கம் நடப்பது அவ்வளவு சுவாரசியமாகத் தெரியவில்லை” என்று கூறியபடி மெதுவாகத் திரும்பினாள் தமயந்தி. அதற்குள், பொன்னம்பலமும் அவளருகே நெருங்கி நடக்க ஆரம்பித்தான்.
“எனக்கு சுவாரசியமாகத்தான் இருக்கிறது” என்று மோகனச் சிரிப்புடன் கூறிய பொன்னம்பலம், “நான் ஆபத்தானவன் அல்ல! என்னைக் கண்டு, நீ ஏன் இப்படி பயப்படுகிறாய்?” என்று மிருதுவாகக் கேட்டான்.
“பயப்படுகிறேனா?….. உங்களைப் பார்த்தா? என்ன பைத்தியக்காரத்தனம்! ஏன் உங்களைப் பார்த்து நான் பயப்பட வேண்டும்?”
பொன்னம்பலம் மெதுவாக அவள் கரத்தைப் பற்றினான். அவனது பேச்சில் காணப்பட்ட மிருதுத்தன்மையில் மயங்கியோ என்னவோ, சில அடிதூரங்கள் நடக்கும் வரை, அவள் தன் கையை விடுவித்துக் கொள்ளவில்லை. பிறகு, அவள் தன் கையை விடுவித்துக் கொண்ட பொழுது, அவன் அதைத் தடை செய்திருந்தானானால், தமயந்தி உஷாராகியிருப்பாள். ஆனால், அவன் பேசாமல் தன் கையை எடுத்துக் கொண்டான். பிறகு, இலங்கையைப் பற்றியும் மற்றும் பல பொது விஷயங்களைப் பற்றியும் பேச ஆரம்பித்தான்……அவன் பேச்சு ரொம்ப சுவாரசியமாக இருந்தது. அவன் பழகும் முறையும் ரொம்ப பவ்வியமாக இருந்தது. அவள் எதிர்பார்த்ததற்கு நேர் விரோதமாக அவன் மிக அற்புதமாக நடந்து கொண்டான். இம்மாதிரி விவகாரங்களில், பொன்னம்பலம் ரொம்பவும் கைதேர்ந்தவன். அவனுடைய பேச்சில் எப்பொழுதும் ஒரு “தரம்” இருக்கும். கேட்பதற்கு அந்தப் பேச்சு சுவாரசியமாகவும் இருக்கும்.
புதர் மறைவில் கிடந்த பழங்கால இரும்பு ஆசனம் ஒன்றில் இருவரும் உட்கார்ந்தார்கள். நிர்சிந்தையாய், அங்குமிங்கும் ஓடியாடும் அணில்களை, ஆவலோடு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். அந்த நேரத்திலெல்லாம் பொன்னம்பலம், தமயந்தியின் போக்கை ஒரு ராஜ தந்திரியைப் போல கண்காணித்து வந்தான். இப்படிப்பட்ட விவகாரங்களில் எல்லாம், பொறுத்து ஆர அமற செயலாற்ற முனைவது பைத்தியக்காரத்தனம் என்று அவனுக்குத் தெரியும். ஏனென்றால், இந்த நேரத்தில், அவள் எக்காரணத்தாலோ மனம் மாறி அங்கு உட்கார்ந்திருக்கிறாள். அந்த மனமயக்கம் தெளிந்து, அவள் சிந்திக்க ஆரம்பித்து விட்டால், தன் ஜம்பம் சாயாதென்று அவனுக்குத் தெரியும்……
“நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய் என்று, உனக்கே தெரியுமோ என்னவோ?” என்று பொன்னம்பலம் மெதுவாக ஆரம்பித்தான்.
அதைக் கேட்டுத் தமயந்தி பயந்து விடவில்லை. தன்னுடைய அன்பைப் பெறத் தவித்த எவ்வளவோ இளைஞர்கள், அவளிடம் பேசியிருக்கிறார்கள். அவளுக்கு இளகிய இருதயம் இருந்ததால், இம்மாதிரிப் பேச்சுக்களை எல்லாம் கேட்டதும், அவள் ஆத்திரப்படுவதில்லை….
அவளுக்குப் பொன்னம்பலத்தைப் பிடிக்கவில்லை (இதைப் பல தடவை தனக்குத்தானே கூறிக் கொண்டாள்); ஆனால், அவன் ஓர் இளைஞன்; பார்ப்பதற்கும் அழகாக இருக்கிறான்; அதோடு, ஒரு கலைஞனின் உள்ளம் படைத்தவன் என்று கூட தமயந்திக்குத் தோன்றியது. அவனது புகழ் மாலை, அவள் உள்ளத்தை ஓரளவு கிறுகிறுக்கச் செய்கிறது. அதோடு, அவனுடைய சகவாசம் அவளுக்கு ஒருவித மனக்கிளுகிளுப்பையும் ஏற்படுத்தியது. மிக உயர்ந்த பண்பாடு உள்ள மாதரசிகளிடம் கூட, காதல் உணர்வைத் தோற்றுவிக்கும் சக்தி படைத்தவன் பொன்னம்பலம் என்று அவளுக்குத் தோன்றியது. இம்மாதிரி சந்தர்ப்பங்களில் சங்கட உணர்ச்சி கொண்டு நழுவப் பார்ப்பது, தன் மீதே தனக்கு நம்பிக்கையில்லை என்று காட்டிக்கொள்வதைப் போலாகும் என்று நினைத்தாள் தமயந்தி. அவளுக்கு, எப்பொழுதுமே தன்னுடைய சக்தியில் அளவு கடந்த நம்பிக்கை உண்டு. எப்படிப்பட்ட சூழ்நிலை தோன்றினாலும், தன்னால் சமாளித்துக் கொள்ள முடியுமென்று எல்லை மீறிய தன்னம்பிக்கை அவளுக்கு உண்டு. இந்த மனப்பிரமை பெண்களுக்கு ஏற்படும் பொழுது தான், அவர்களை நோக்கி ‘அழிவு’ பறந்தோடி வருகிறது…
அளவு கடந்த பரபரப்போடும், வெளிறிய முகத்துடனும், நிலை குலைந்த தோற்றத்துடனும் தமயந்தி தோட்டத்தில் தலைதெறிக்க ஓடுவதைப் பார்த்தாள் ராணிபவானி. அதைப் பார்த்து, அவள் ஆச்சரியமடையவில்லை. அதன் காரணம் என்னவென்று அவளுக்கு நன்றாகத் தெரியும். ஏனென்றால், புதர் மறைவில் நடந்த முடிவுபெறாத நாடகத்தை ராணிபவானி மிக உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு இருந்தாள். வேவு பார்ப்பதற்காக அவள் அந்தப் பக்கம் வரவில்லை. ஆனாலும், தன் கண்களால் அதைப் பார்த்தாள். தமயந்தியும் பொன்னம்பலமும் அமர்ந்திருந்த இடத்திற்குப் பின்னால் ஒரு சிறு நடைபாதை இருந்தது. அந்த நடைபாதையில் நின்றபடி தான், எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு இருந்தாள் ராணிபவானி.
சிறிது தூரம் ஓடியதும் தமயந்தி சற்று நின்று, பறந்து கிடந்த தன் கேசத்தைச் சரிப்படுத்திக் கொண்டாள். தன்னையும் ஒருவாறு திடப்படுத்திக் கொண்டாள்.
ஹோட்டலின் பின்புறத்தில் நின்று கொண்டு இருந்த நீலகண்டன், அவள் நடந்து வருவதைப் பார்த்த பொழுது, அவருக்கு எந்தவித மாறுதலும் தெரியவில்லை. ஆனால், தமயந்தி அவர் நின்று கொண்டு இருந்த பக்கம் செல்லாமல், வேறுபக்கம் திரும்பி நடக்க ஆரம்பித்தாள். நீலகண்டன் குறுக்கே நடந்து சென்று அவளை வழிமறித்து ஏதோ கேட்கப் போனார்.
அவள் முகம் சவத்தைப்போல் வெளுத்திருந்தது. அவள் கண்களில் மிரட்சி காணப்பட்டது; அவளுக்கு இலேசாக மூச்சு வாங்கிக் கொண்டு இருந்தது.
“நீங்கள் ஓடிவந்தீர்களா, அம்மா?”
“ஆமாம்” என்று தமயந்தி மூச்சுத்திணறக் கூறினாள்.
“எதையும் கண்டு பயந்து விட்டீர்களா?”
“இல்லை” என்ற பாவனையில் தலையசைத்த தமயந்தி, வேகமாக அவரைக் கடந்து உள்ளே ஓடி, மாடிப் படிக்கட்டுகளில் பரபரப்புடன் ஏறினாள். அவள், தன் பார்வையை விட்டு மறையும் வரை அவளையே வெறிக்கப் பார்த்துக் கொண்டு இருந்தார் நீலகண்டன். அவர் உதட்டிலிருந்த சிகரெட், அவரையறியாமல் கீழே விழுந்து விட்டது. வேகமாக ஹாலுக்குள் திரும்பிச் சென்று மணியடித்தார். வேலைக்காரனான ராமையா ஓடி வந்தான்.
“பொன்னம்பலத்தின் அறைக்குப் போ; அவன் அங்கு இருக்கிறானா என்று பார்!” என்றார்.
“நான் இப்பொழுது தான் மேலே சென்றிருந்தேன். அவன் அறையில் இல்லை. ஒரு மணி நேரத்திற்கு முன்னால் தோட்டத்துப் பக்கம் சென்றான்” என்றான் ராமையா.
நீலகண்டன் நிதானமாக வேறொரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தார். அந்தச் சமயத்தில், பொன்னம்பலம் தோட்டத்தில் இருந்து வந்து கொண்டு இருப்பது தெரிந்தது. அவன் வரட்டுமென்று தயாராகக் காத்திருந்தார் நீலகண்டன்.
பொன்னம்பலத்தின் கையில் ஒரு பட்டுக் கைக்குட்டை இருந்தது.
“இது உமது வாடிக்கைக்காரர்களில் ஒருவருடைய கைக்குட்டையாக இருக்கலாம்” என்று அந்தக் கைக்குட்டையை நீலகண்டத்திடம் கொடுத்தான் பொன்னம்பலம்.
“இது எங்கிருந்து அகப்பட்டது?” என்று அவன் முகத்தில் வைத்த விழி வாங்காமல் பார்த்தபடி கேட்டார் நீலகண்டன்.
“இது தோட்டத்தில் கிடந்தது; பார்வைக்கு, அந்தப் பெண்–அவள் பெயரென்ன; தமயந்தியா?–அவளுடையதாக இருக்கும்! அவளுடைய முன் எழுத்து இதில் தைக்கப்பட்டிருக்கிறது.”
“அவளை நீ பார்த்தாயா?” என்று கேட்டார் நீலகண்டன்.
“நான் யாரையோ பார்த்தேன். அது அவளாகவும் இருக்கலாம்” என்று பல்லையிளித்தபடி கூறிய பொன்னம்பலம், அவளுடைய புருவத்தை நீர் எப்போதாவது பார்த்திருக்கிறீரா?” என்று கேட்டான்.
“நீ சொல்வது எனக்குப் புரியவில்லையே. என்ன சொல்கிறாய்– அவளுடைய புருவமா?”
பொன்னம்பலம் அதற்கு எந்தவித விளக்கமும் கொடுக்கவில்லை. ஆனால் ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு படிக்கட்டில் ஏறி தன் அறையை நோக்கி நடந்தான். மேல் தளத்தை அடைந்ததும், மறுபடியும் குனிந்து, நீலகண்டனிடம், “இன்றிரவு நான் எனது செக் ஒன்றை எழுதிக் கொடுக்கிறேன். அதை நீர் எடுத்துக்கொண்டு எனக்கு ரொக்கம் கொடுக்க வேண்டியிருக்கும்–ம்…..அடுத்த தடவை அவளைப் பார்க்கும் பொழுது அவளுடைய புருவத்தை நன்றாகப் பாரும்” என்றான்.
அவன் பார்வையை விட்டு மறைந்ததும், அங்கு நின்று கொண்டு இருந்த ராமையா, “அவன் என்ன சொல்லுகிறான்? புருவமா? விசித்திரமாக இருக்கிறதே–” என்று ஆச்சரியப்பட ஆரம்பித்தான்.
“உன் வேலையைப் பார்த்துக்கொண்டு போ” என்று சீறினார் நீலகண்டன்.
தனது கையிலிருந்த கைக்குட்டையின் மீது அவர் பார்வை சென்றது. ஒரு விநாடி தயங்கினார். பிறகு, படிக்கட்டில் ஏறி, தமயந்தியின் அறைக் கதவை அடைந்தார். மெதுவாகக் கதவைத் தட்டினார்.
“யாரது?”
“நீலகண்டன் தான், அம்மா. உங்கள் கைக்குட்டை இதோ இருக்கிறது!”
ஒரு விநாடி தமயந்தி தயங்கினாள். பிறகு கதவை இலேசாகத் திறந்து, தன் கையை மாத்திரம் வெளியே நீட்டி, “தயவு செய்து கொடுங்கள்!” என்றாள்.
நீலகண்டன் அந்தக் கைக்குட்டையைக் கொடுத்தார். சட்டென்று தன் கரத்தை உள்ளே இழுத்துக் கொண்ட தமயந்தி, கதவை மீண்டும் சாத்தி உட்புறம் தாளிட்டுக் கொண்டாள். அவள் பேசியபொழுது, அவள் குரலில் அழுகை தொனித்தது. அவள் அழுது கொண்டுதான் இருக்கிறாளென்று நீலகண்டனுக்கு நிச்சயமாகத் தெரிந்தது. யோசனையோடு, கீழ்த்தளத்தில் உள்ள தன் அறையை அடைந்தார்.
புருவங்கள்? இதைச் சொல்லும் பொழுது, பொன்னம்பலத்தின் முகத்திலே ஒரு கொடூரமான மனத்திருப்தி காணப்பட்டது. அதன் மர்மம் என்ன?
நீலகண்டன் யோசனையோடு, தன் மேஜை மீது கிடந்த “செக்” புத்தகம் ஒன்றை புரட்டிக் கொண்டு இருந்தார். பிறகு திடீரென்று நிமிர்ந்து, எதிரிலுள்ள சுவரை வெறிக்கப் பார்த்தார். அவருக்கு, இப்பொழுது அந்த மர்மம் விளங்கிவிட்டது.
அந்தச் சமயத்தில், அறைக் கதவைத் திறந்து கொண்டு ராமையா உள்ளே வந்தான்.
“இன்ஸ்பெக்டர் பரஞ்சோதி சென்னையிலிருந்து டெலிபோனில் பேசுகிறார். இன்றிரவு, அவர் இங்கு வந்து தங்குவதற்கு அறை கிடைக்குமா என்று கேட்கிறார்” என்றான் ராமையா.
“இன்ஸ்பெக்டர் பரஞ்சோதி?” என்று மெதுவாகத் திருப்பிக் கூறிய நீலகண்டன், “ஓ; அதற்கென்ன! இடம் இருக்கிறது என்று சொல்!” என்றார்.
அந்தச் சமயத்தில், சென்னை பிரதம போலீஸ் காரியாலயத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் பரஞ்சோதிக்கு, தாம்பரத்தில் என்ன வேலை இருக்கக் கூடுமென்று நீலகண்டனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
– தொடரும்…
– நீலகண்டன் ஹோட்டல் (துப்பறியும் நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1958, பிரேமா பிரசுரம், சென்னை.