கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 7, 2024
பார்வையிட்டோர்: 2,686 
 
 

(1974ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவன் ஸ்தம்பித்து நின்றான். காலிங் பெல்லை அழுத்த உயர்ந்த கரம் அப்படியே அந்தரத்தில் நிற்கிறது. தன் காலின் கீழ் பூமி விலகிவிட்டதுபோல்… 

சாத்திக் கிடந்த கதவிடுக்கிலிருந்து நூல் வரிசையாய்க் கீழே விழுந்து கிடக்கும் மங்கிய விளக்கு வெளிச்சம். முற்றத்தில் தலையாட்டிக்கொண்டிருக்கும் மேரி கோல்ட் பூக்கள். 

அவன் சுதாரித்துக்கொண்டு மெல்லப் போர்ட்டிக்கோவில் கிடக்கும் காரைப் பிரதட்சணம் வைத்து, வீதியில் இறங்கினான். 

இருளை ஒளி தழுவி நிற்கும் மூவந்தி நேரம். நீரிலிருந்து எடுத்தெறியப்பட்ட மச்சமாய் அவன் நெஞ்சுக்குள் ஒரு படபடப்பு… மீண்டும் மீண்டும் செவியில் அந்த வார்த்தைகள் ஆவர்த்தனமாகி மனசை அலைக்கழித்துக்கொண்டிருக்கின்றன. 

நிசப்தமாய்க் கிடந்த வீடு… இரு பக்கத் தோப்புகளில் அடங்கி நிற்கும் மரங்களின் கிளைகள் ரோட்டின் நடுவில் மேலே கை கோர்த்து ஆட்டம் போட, கீழே தார் ரோட்டில் உதிர்ந்து கிடக்கும் சருகுகள்… மணமில்லாத ஊதா நிறப் பூக்கள்… இருளின் நிழல் மண்டிக் கிடந்ததால், காலம் இங்கே அசேதனமாகிவிட்டது போல… 

அங்குமிங்கும் முன் வாசல் கதவு எப்போதும் சாத்திக் கிடக்கும் ஒரு சில ஒற்றைப் பங்களாக்கள்… 

மப்பும் மந்தாரமும் நிறைந்து ஒருவித அசாந்திக்கு ஆட்பட்டுப் போய்க்கொண்டிருக்கும் நெஞ்சம்… 

சற்றுமுன் சீதாபதி சாரின் வீட்டுக்குள்ளிருந்து, செவியில் சொல்வதுபோல் மிக மிக அடக்கமாய்க கேட்ட அந்தக் குரல் ஸிந்துவுடையதுதானா? 

அவனால் நம்ப முடியவில்லை. இன்று காலை பதினொரு மணிக்கு ஆபீஸில் வைத்து அவள் தன்னிடம் சொன்னது என்ன, இப்போ இங்கே… 

அவனுக்கு வியர்த்துக் கொட்டியது. ஒரு சோக கானத்தின் முணுமுணுப்பாய் அவனைத் தழுவிக்கொண்டு ஓடியது. தென்றல்… வெளிறிப்போய்த் தெரியும் வானம்… 

எவ்வித முன்னறிவிப்புமின்றிப் பெய்யும் மழைபோல் திடும் திடும் என்று சம்பவிக்கும் நிகழ்ச்சிகளை மூளையில் அலச முடியாமல், அவன் இதய பாரம் அழுத்தியது. 

மனசில் மீண்டும் மீண்டும் ஸிந்துவின் ரகசியமான குரல்… 

ஏதோ ஒரு ஜென்மத்தில் நடந்ததுபோல் ஒரு காட்சி… 


ஆரம்பப் பள்ளியின் வகுப்பறை. மூன்றாம் வகுப்பா, நான்காவது வகுப்பா என்று சரியாகத் தெரியவில்லை. கரும் பலகையில் சாக்குக் கட்டியால் என்னவோ எழுதிப் போட்டுவிட்டு, ‘எல்லோரும் நோட் புஸ்தகத்தில் பார்த்து எழுதுங்கள்’ என்று உத்தரவு போட்ட பின், பிரம்பை மேஜைமீது சாட்சியாய் நிறுத்தி, நாற்காலியில் தூங்கி வழிந்துகொண்டிருக்கும் கோதண்டராமய்யர் சார். 

முன்னால் குறுக்கிலும் நெடுக்கிலும் கிடக்கும் பெஞ்சிகளில் நெருக்கியடித்துக் கொண்டு சிறுவர்கள், சிறுமிகள்… 

முதல் வரிசையில் குறுக்கே கிடந்த பெஞ்சியில் இடது முனையில் இவன். பிடிக்கு அகப்படாத ஒரு இஞ்சு நீளமே இருந்த காப்பிங் பென்சிலை – அதில் முனை வேறு தீர்ந்து விட்டதால் அடிக்கடி நாக்கு நுனியில் நனைத்து, நாக்கையும் நோட் புக்கில் அழுத்தி இழுக்கும் எழுத்தின் கோடுகளையும் ஊதா நிறமாக்கி – கருமமே 

கண்ணாயிருந்தான். இடப் பக்கம் நெடுகில் கிடந்த பெஞ்சியில் ஸிந்து, தலையில் இரட்டை ஜடைப் பின்னலுடன் ஒரு முயல் குட்டியைப்போல் உட்கார்ந்துகொண்டிருக்கிறாள். அவள் கையில், சுற்றிலும் ஆடு, மாடு, சிங்கம், புலி, யானை முதலிய மிருகங்களின் படம் போட்டிருந்த ஒரு மஞ்சள் நிற அழகான பெரிய பென்ஸில். பென்ஸிலின் கீழ் முனையில் பொன்னிறப் பூண் போட்டு ரத்த நிறத்தில் ஒரு துண்டு ரப்பர் துருத்திக்கொண்டு நிற்கிறது. 

இவன் நோட் புக்கில் அங்கங்கே ஊதா நிறக் கோடுகள் விழும் அதிசயத்தைச் சற்று நேரம் வைத்த விழி வாங்காமல் பார்த்து விட்டு ஸிந்து கேட்டாள்: ‘டேய் ரதீஷ். உன் பென்ஸிலை எனக்குத் தருவியா… பதிலுக்கு என் பென்ஸிலை உனக்குத் தாறேன்…’ 

அதைக் கேட்டபோது இவனுக்கு உள்ளுக்குள் சபலம்தான். ஆனால், ஒரு பயம். 

‘வேண்டாம், சார் அடிப்பார்…’ 

‘இல்லேடா, எனக்கு அந்த உன் பென்ஸில் வேணும், நல்ல நிறமா எழுதறது’ என்று சொல்லி அவன் கையிலிருந்த அந்தப் பென்ஸில் துண்டைப் பிடுங்கிக்கொண்டு, அவள் பென்ஸிலை அவன் கையில் திணித்தாள். 

மனசில் பயம் ஆயிரம் சிறகுகளால் அழுத்த, ஒரு விதக் குறுகுறுப்போடு அவன் அந்தப் பெரிய பென்ஸிலைக் கையில் வைத்து அதிசயமாய்ப் பார்வையிடத் தொடங்கினான். பக்கத்தில் இருந்த பயல்கள் ‘இதோ குரங்கு, சிங்கம், பசு, மாடு’ என்று பென்ஸிலை அங்குமிங்கும் புரட்டிப் பார்க்க நான் நீ என்று போட்டி… ஒரே கும்மாளம்… 

இந்தக் களேபரத்தில் கோதண்டராமய்யர் சார் துயில் கலைந்து நெற்றிக் கண்ணைத் திறக்கிறார். முதலில் அவர் விழிகளில் பட்டது முன் வரிசைப் பெஞ்சியில் பென்ஸிலும் கையுமாய் பரக்கப் பரக்கப் பார்த்துக்கொண்டிருக்கும் ரதீஷ்தான். 

‘டேய்… ரதீஷ்… என்னடா அங்கே அமர்க்களம்? எழுந்திரிச்சு நில்…’ என்று விட்டு அவர் பிரம்பைக் கையில் எடுத்துக்கொண்டு இவனை நோக்கி ஓடி வருகிறார். 

இவன் நடுநடுங்கியவாறு எழுந்து நிற்கிறான். 

அப்போது, ஸிந்து பக்கத்தில் உட்கார்ந்திருந்த கீதா, ‘ஸார், அது ஸிந்துவின் பென்ஸில் ஸார்’ என்று சொன்னாள். 

கோதண்டராமய்யர் சார் நரசிம்ம மூர்த்தியாகி விட்டார். 

‘என்னடா இது… பென்ஸிலை அந்தப் பெண்ணுகிட்டே இருந்தா திருடினே?’ என்று பிரம்பால் ஒரு விளாசு. 

சுரீரென்று விழுந்த அடியில் இவன் புழுவாய்த் துடித்தான். பயத்தால் நாக்கு தொண்டைக்குள் ஒட்டிக்கொண்டுவிட்டது. 

‘சார்… சார்… அடிக்காதீங்க சார். நான் திருடல்லே சார். அவதான் தந்தாள் சார்’ அழுகையின் இடையில் விக்கி விக்கி இவ்வளவும் எப்படியோ சொல்லி முடித்தான். 

இப்போது ஸிந்துவை நோக்கி, ‘என்ன ஸிந்து, நீயா கொடுத்தே?’ என்று சார் அதட்டிக் கேட்கிறார். அவர் கையில், எந்நேரமும் பாயத் தயாராகிப் பிடரியைக் குலுக்கிக்கொண்டு நிற்கிற பிரம்பு. 

ஸிந்துவின் முகம் வெள்ளைக் காகிதத்தைப்போல் வெளிறிப் போய்த் தெரிகிறது. 

‘ஆமா சார். நான்தான் என் பென்ஸிலை இவனுக்குக் கொடுத்து விட்டு பதிலுக்கு அவன் பென்ஸிலை வாங்கிக் கொண்டேன்’ என்று அவள் சொல்லுவாள் என்று எதிர்பார்த்துக் கொண்டு அவளையே பரிதாபமாய்ப் பார்த்தவாறு நிற்கிறான் அவன். அவள் கையில் இப்போது, தன் பென்ஸில் துண்டைக் காணவில்லை. ஒரு தடவைகூட கோதண்டராமய்யர் சார் அலறுகிறார். 

‘என்னடீ… நீதான் கொடுத்தியா?’ 

ஸிந்து பதில் எதுவும் சொல்லவில்லை. அவள் முகத்தில் ஒரு மிரட்சி, தலையை இடது பக்கத்தில் இருந்து வலது பக்கத்திற்கு ஒரு தடவை ஆட்டுகிறாள். 

இப்போது ரதீஷ்மீது அவர் பாய்கிறார். ‘பிளடி ராஸ்கல்… திருடினதுமில்லே, அவள்தான் கொடுத்தாள்னு பொய் வேறே சொல்றியா? உன்னை என்ன செய்கிறேன் பாரு…’ 

பிறகு அவன் கதறக் கதற அவர் பிரம்பு அவன் பிஞ்சு உடம்பில் எங்கெல்லாமோ விழுந்து பிடுங்குகிறது. பென்ஸிலை அவன் கையிலிருந்து பிடுங்கி ஸிந்துவின் கையில் கொடுக்கிறார்… 


ஒரு கார் பின்னாலிருந்து அவனைத் தொட்டுருமிக் கொண்டு செல்கிறது. ரோடில் சருகுகள் எழும்பி நாலா திசைகளிலும் பறந்து மெல்ல மெல்ல அடங்கியது. 

இப்போது வீதியில் இருள் முழுசாய் ஆக்கிரமித்துக்கொண்டு 

விட்டிருந்தது. அங்கங்கே கண் சிமிட்டும் சாலை விளக்குகள்… வானில் தேய் பிறை… 

ஹூம். ஸிந்து இப்போ எவ்வளவு அனாயாசமாகத் தன் மேலதிகாரியிடம் அவனைப்பற்றிச் சொல்கிறாள்… 

மீண்டும் மனசில் ஒரு மின்னல். 

பி.எஸ்.ஸி. இறுதியாண்டு தியரி கடைசிப் பரீட்சை முடிந்த நாள். 

‘என்ன ரதீஷ்… பரீட்சை எல்லாம் எப்படி?’ ஸிந்து இவனிடம் கேட்டாள். 

‘உம் பரவாயில்லே.’ 

‘எதுக்குப் பொய் சொல்றே? நீ என்னா என்னைப்போல் மக்கா? ஜமாய்த்திருப்பே…’ 

இவன் பதிலெதுவும் பேசவில்லை. மனசுக்குள் காரணம் தெரியாத ஏகாந்த உணர்வுகள். 

‘பீச்சுக்குப் போவோமா?’ ஸிந்துதான் கேட்டாள். அவள் விழிகளில் ஒரு ஏக்கம். 

‘இல்லை ஸிந்து. எனக்கு அடுத்த வரம் பிராக்டிக்கல் பரீட்சை இருக்குது. படிக்கணும்…’ 

‘உனக்கு எப்போ பார்த்தாலும் படிப்புத்தான்…’ அவள் எரிந்து விழுந்தாள். 

இவன் விடைபெற்றுக்கொண்டு திரும்பியபோது, ‘ரதீஷ், நான் நாளைக்கு ஊருக்குப் போய்விடுவேன். இனி நாம் என்னைக்குச் சந்திக்கப் போகிறோமோ; மறுக்காதே… உனக்கு… உனக்கு என்னுடைய பரிசு இது…’ என்று பெருமூச்செறிந்தவாறு, அவள் கையில் கிடந்த சதுரக் கைக்கடியாரத்தை இவன் கையில் கட்டினது பாதி கட்டாதது பாதியாக விடுவிடுவென்று நடந்து மறைந்து விட்டாள். 

ஒரு கணம் இவன் விக்கித்துப்போய் நின்றான். மனசில் பழைய நினைவுகள். அன்று பென்ஸில் விவகாரத்திலும் இப்படித்தானே? சே, அன்று அவள் வேண்டுமென்றே அப்படி நடந்து கொண்டிருக்க மாட்டாள். கோதண்டராமய்யர் சாரின் பிரம்புக்குப் பயப்படாமல் யாராவது இருக்க முடியுமா? ஏனோ அவளைத் தன்னால் வெறுத்து ஒதுக்க முடியாத – நிராகரிக்க முடியாத ஏதோ ஒன்று தன்னை அவள்பால் ஆகர்ஷிப்பதுபோல்… 

அப்படியென்றால் அவள்தான் கடற்கரைக்குக் கூப்பிட்டாளே. கூடப் போயிருக்கலாமே… 

தன் கோழைத்தனத்தை உள்ளுக்குள் சபித்தவாறு அவன் விடுதிக்குத் திரும்பினான். 

அடுத்த வாரம் பிராக்டிக்கல் பரீட்சை செய்து கொண்டிருக்கும்போது திடீரென்று லாபரட்டரியில் பியூன் வந்து பிரின்ஸிபால் அவனை அவசரமாய்க் கூப்பிடுவதாய் அறிவித்தான். 

மனசில் ஒரு தடுமாற்றம். படபடக்கும் நெஞ்சுடன் பிரின்ஸிபாலின் அறைக்குச் செல்கிறான். 

அங்கே ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். 

பிரின்ஸிபாலின் பார்வை ஏற இறங்க அவன்மீது மேய்ந்து கடைசியில் இவன் இடக்கை மணிக்கட்டில் வந்து நிலைக்கிறது. 

‘இந்தக் கைக்கடியாரம் ஏது?’ 

இவன் திடுக்கிட்டான். கண நேரம் மௌனம். பிறகு சொன்னான். 

‘ஸிந்து தந்தாள்…’ 

‘அவள் தந்தாளா… இல்லை நீ திருடினாயா?’ 

இவன் முகத்தில் ரத்தம் கும்மெனப் பிரவாகித்தது. 

சப் இன்ஸ்பெக்டரின் கையில் ஒரு கடிதம் இருந்து படபடக்கிறது. ‘ஸிந்துவின் அப்பா வேதமூர்த்தி புகார் செய்திருக்கிறார். அவர் மகளின் கைக்கடியாரம் திருட்டுப் போயிட்டதுண்ணு…’ 

நிஜத்தை எப்படிச் சொல்லி அவர்களை நம்ப வைப்பது என்று தெரியாமல் திருதிருவென்று விழித்துக்கொண்டு நிற்கிறான் அவன். கடைசியில், கொஞ்சம் நேரம் கேள்விக் கணைகளால் குடைந்தெடுத்தபின், பிரின்ஸிபால் சொன்னதன் பேரில், ஒரு எச்சரிக்கையோடு, கைக்கடிகாரத்தைக் கழற்றி வாங்கிவிட்டு அனுப்பினார் இன்ஸ்பெக்டர்… 


எதிரிலிருந்து ஒரு ஆட்டோ ரிக்ஷா கர்ண கடூரமாய்க் கத்தியவாறு அவனைக் கடந்து செல்கிறது. மறுபடியும் சருகுகள் காற்றில் குதித்து எழுந்து அடங்கின. வானில் நட்சத்திரப் பூக்கள். 

அதன் பிறகு, பத்து ஆண்டுகளுக்கு ஸிந்துவை அவன் பார்க்கவே இல்லை. பிறகு வேறு என்னவெல்லாமோ கோர்ஸ் பாஸாகி, எங்கெல்லாமோ வேலை பார்த்துவிட்டு, இரண்டு மாதங்களுக்கு முன் இந்த ஆபீஸில் வேலை மாற்றலாகி வரும்போதுதான் ஸிந்துவை மீண்டும் பார்க்கிறான். 

அடிக்கடி ஃபைல்களுடன் இவன் அறைக்கு வந்து கையொப்பம் வாங்கிச் செல்வாள். 

செக் புத்தகத்துடன் அக்கவுண்டு பதிவேடுகளுடன் வருவாள். 

ஓரிரு தடவை காரியாலய சம்பந்தமில்லாது அவள் என்னவோ தன்னிடம் பேச எத்தனித்தபோது, இவன் சாதுரியமாகப் பேச்சை ஆபீஸ் காரியங்களுக்கே திருப்பி விட்டான். அப்படி மிகுந்த எச்சரிக்கையோடுதான் இருந்தான் அவன். 

அவள் சற்றுமுன் சொன்ன வார்த்தைகள்… இன்று ஆபீஸில்… 

காலை பதினொரு மணி இருக்கும். 

‘சார் மூணு கம்பெனிகளுக்குத் தொண்ணூறு சதவிகித அட்வான்ஸ் பேமண்டு கொடுக்க வேண்டி இருக்குது. ஆனால், ஆர்.ஆர். இன்னும் நம் கைக்கு வந்து சேரவில்லை. தபாலில் அனுப்பியிருப்பதாக இப்போதான் டெலிகிராம் வந்திருக்குது. இந்த பட்ஜெட்டில் உட்படுத்தப்பட்டிருக்கும் தொகை இது. இன்றோடு இந்தப் பினான்ஷியல் இயர் முடிகிறதல்லவா. அதனால் ஒரு செல்ப் செக் எழுதி பாங்கியிலிருந்து காஷ் எடுத்து வெக்காட்டி, சரியான சமயத்தில் பேமண்டு கொடுக்க முடியாது; சாமான் எடுக்கும்போது டெமரேஜ் கொடுக்க வேண்டி வந்து விட்டால், நாம்தான் பதில் சொல்லியாகணும்.’ 

அவள் சொல்லிக்கொண்டே போனாள். இவன் மூளை சூடு கொண்ட பூனையாகப் பதுங்கிக்கொள்கிறது. 

‘அதெப்படி முடியும்?’ 

‘சார், இதில் பயப்பட ஒண்ணும் இல்லை. எல்லா ஆண்டு இறுதியும் இங்கே இதே வழக்கம்தான்.’ 

அவளைத் தலை உயர்த்திப் பார்த்தான். அவள் விழிகளைப் பார்க்கும்போது, அதை நம்பாமல் எப்படி இருக்க முடியும் என்ற ஒரு கசிவு இவன் நெஞ்சுக்குள்… இது ஏன்? 

‘எத்தனை ரூபாய் இப்போ ட்ரா பண்ணி வைக்கணும்?’ 

அவள் சம்பந்தப்பட்ட ஃபைலையும் மற்றத் தஸ்தாவேஜுகளையும் பரிசோதனை செய்துவிட்டு, ‘நாற்பத்தி ஐயாயிரத்தி இருநூற்று எழுபத்தியொரு ரூபாய் அறுபத்தி அஞ்சு பைசா சார்…’ என்றாள். 

‘எதுக்கும் டைரக்டரைக் கூப்பிட்டுக் கேட்டுவிடுகிறேன்…’ என்று அவன் போனைக் கையில் எடுத்தபோது ‘சீதாபதி ஊரில் இல்லை. டூர் ரிப்போர்ட் வந்ததே… இன்னிக்குச் சாயந்திரம்தான் வருவார் போலிருக்கு. அதுக்குள்ளே பாங்க் டயம் முடிந்து விடும். உங்களுக்குத்தான் செக் டிராயிங் பவர் உண்டாமே. பிறகென்ன…? சார் இதில் பயப்பட ஒண்ணும் இல்லை. நான் வேண்டுமானால் மாலையில் வீட்டுக்குப்போகும் வழியில் சீதாபதி சாரிடம் சொல்லிக்கொள்கிறேன்’ என்று கூறியவாறு செக் புக்கையும் பைலையும் அவன் முன்னால் மேஜைமீது வைத்தாள். 

‘சரி, சரி காஷ் சேப்பா இருக்கணும்… வவுச்சர் எங்கே?’ 

‘ஆர்.ஆர். இன்னம் வரல்லையே சார். ஒரு ஸர்ட்டிபிக்கேட் ஆப் பேமண்டு எழுதி வைத்துப் பாஸாக்கியிருக்கிறேன்.’ 

இவன் மனம் மறுபடியும் அலை பாய்ந்தது. இவளை நம்பலாமா? 

பள்ளியில்…? 

கோதண்டராமய்யர் சாரின் பிரம்பைப் பயந்து அப்படி மௌனம் சாதித்திருக்கலாம். 

காலேஜில்…? 

அவள் அப்பா விஷயம் அறிந்து வேண்டுமென்றே தன்னையும் அவளையும் பிரிக்கத் திட்டம் போட்டு அப்படி வேலை செய்திருக்கலாம். அவளை ஒருதடவைகூட ஏறெடுத்துப் பார்த்தான்… இந்த விழிகளை எப்படி நம்பாமல் இருக்க முடியும்? இவளை நம்பி மோசம் போவதில்கூட ஒரு… 

செக்கில் கையெழுத்தைப் போட்டுவிட்டு அவளிடம் கொடுத்தான். 


மாலையில் வீட்டுக்கு வந்து படுத்திருக்கும்போது, மனசில் மறுபடியும் மறுபடியும் நிறை மாத கர்ப்பச் சிசுவைப்போல் அந்த உறுத்தல், மீண்டும் தான் ஏமாற்றப்பட்டு விட்டோமோ என்று. ஒன்றில் பிழைத்தால் மூன்று என்பதைப்போல், இப்போது மூன்றாவது முறையாக இதில் தான் அகப்பட்டுக்கொண்டு விட்டால், இனி என்ன வேண்டுமானாலும் சம்பவிக்கலாம். தன் வாழ்வே பாழாகி விடலாம். ஒன்றிரண்டு ரூபாயா, முழுசாய் நாற்பத்தி ஐயாயிரத்துச் சொச்சம். 

அவனால் படுத்திருக்க முடியவில்லை. ‘வெளியே போய்விட்டு வருகிறேன்’ என்று மனைவி பரிமளாவிடம் சொல்லிவிட்டு, சீதாபதி சாரின் வீட்டுப் பக்கமாய் வந்தபோது, அவர் கார் போர்ட்டிகோவில் கிடப்பது தெரிகிறது… அவர் வந்து விட்டிருக்க வேண்டும். எதுக்கும் நடந்ததை அவரிடம் சொல்லி கிளாரிஃபை பண்ணி விடுவோம் என்று அணுகியபோது… 

‘பள்ளியில் பென்ஸில் திருடினான். காலேஜில் கைக்கடியாரத்தைத் திருடினான். இன்று ஆபீஸில்…’ 

அதை நினைக்க நினைக்க அவன் உடம்பு உதறல் எடுத்தது. இதற்குள் விஜிலன்ஸுக்கோ, ஆண்டி கரப்ஷனுக்கோ ரெஃபர் பண்ணியிருப்பாரோ என்னமோ. அப்படியென்றால், தான் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம். 

இவனுக்கு மறுபடியும் வியர்த்தது. 

நெஞ்சம் முழுவதும் ஸிந்துவின் விஸ்வரூபம். 

எதிரில் ஒரு டாக்ஸி வருகிறது… என்னவோ ஒரு தீர்மானத்திற்கு வந்தவனைப்போல் அவன் கை காட்டி டாக்ஸியை நிறுத்தினான். உள்ளே ஏறி உட்கார்ந்து கொண்டு பாண்ட்ஸ் ஜேபியிலிருந்து கைக்குட்டையை எடுத்து முகத்தை அழுத்தித் துடைத்து, முகத்தில் ஒரு சாதாரண பாவத்தைத் தோற்றுவிக்க முயற்சித்த வாறு டிரைவரிடம் ஸிந்துவின் முகவரியைச் சொன்னான். டிரைவர் அவனை ஒரு மாதிரிப் பார்ப்பதைக் கவனிக்காதது போல் இவன் உட்கார்ந்துகொண்டான். மணி ஒன்பது ஆகிக் கொண்டிருந்தது. 

டாக்ஸி நின்றது. அதை அனுப்பி விட்டு, அந்த வீட்டு நடைக்கு வந்து கதவைத் தட்டினான். சற்று நேரத்தில் கதவைத் திறந்த ஸிந்துவின் முகத்தில் அவனை அப்போது சற்றும் எதிர்பார்த்திராத ஆச்சரியக் குறி… 

அவன் ஒன்றும் பேசாமல் வீட்டுக்குள் நுழைந்தான். அவள் சொல்லுமுன் அங்கே கிடந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான். 

நிதானமாய் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்து இழுத்து விட்டுக் கேட்டான். 

‘வீட்டில் வேறு யாரும் இல்லையா?’ 

‘அவர் கிளப்புக்குப் போய் இருக்கிறார்.’ 

‘எப்போ வருவார்?’ 

‘சாதாரணமாக ராத்திரி அவர் வீடு திரும்புவது இல்லை…’ 

‘குழந்தைகள்?’ 

‘தூங்கி விட்டாங்க…’ 

ஒரு சில விநாடிகள் மௌனம். 

‘சரி’ என்று விட்டு அவன் எழுந்துபோய் வெளிக் கதவை அடைத்து உள்ளிருந்து தாழிட்டுவிட்டு ஸிந்துவை நோக்கித் திரும்பினான். 

– 25.04.1974 

– குமுதம் 16.05.1974

– இரண்டாவது முகம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 2012, கிழக்கு பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *