நீதி தேவன் மரணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம் முத்தாரம்
கதைப்பதிவு: July 8, 2026
பார்வையிட்டோர்: 128 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தாய் மகளைக் கொன்றாள்; மகன் தாயைக் கொன்றான்; சட்டம் அவனைக் கொன்றது. பரிதாபத்திற்குரிய இந்த மூன்று சாவுக்குமான காரணத்தை, ‘நீதி தேவன் மரணம்’ சொல்லுகிறது…

குற்றவாளிக் கூண்டினை செய்யும் ஏழைகள்தானே அதில் கொண்டு வந்து நிறுத்தப்படுகின்றனர்! சட்டத்தின் துவாரங்களைக் கண்டு தப்பியோட முடியாது தண்டனையை ஏற்று தவிப்பவர்களும் அவர்கள் தானே! நீதிமன்றம் சாட்டும் குற்றச்சாட்டுகளை உடைத்தெறியும் சக்தி வாய்ந்த சம்மட்டி பணம்!…… அது ஏழைக்கு எட்டாக் கனியாயிற்றே! காலமெல்லாம் கண்களை கண்ணீரின் தொட்டியாக்கிக் கொண்டு, பசிப் பிணிக்கு மருந்தளவாவது உணவு கிடைக்காதா என்று தேடி அலைந்தவாறே மரணத்தை நோக்கிச் செல்லும் அந்த இனம், இடையிலே சந்தர்ப்பத்தாலோ, அல்லது சதிகாரர்களாலோ குற்றவாளிக் கூண்டிற்குள் அடைக்கப்படும் சம்பவம் சர்வ சாதாரணமானதுதானே! அத்தகைய சாதாரண சம்பவம் ஒன்றுதான் நீதிபதி மூர்த்தியின் முன்பு வந்த கொலை வழக்கு! குற்றம் சாட்டப்பட்டு நிற்கும் ‘சாம்பு’ வாலிபன்தான்; எனினும் வறுமையில் அடிபட்டவன் என்பதை அவனது தோற்றமே சொல்லியது. பருவத்தின் எழிலோடு விளங்க வேண்டிய வயது தான்… ஆயினும் ஏழ்மையின் கோலமும், ‘பசி’ அவன் உடலில் தோற்றுவித்துள்ள கோடுகளும் ஏராளம்! இல்லாமையின் இல்லமாக ஏழையின் உள்ளம் ஆகும்போது அவனைப் பார்க்கும் எல்லோரும் பொல்லாதான் என்று சொல்லும் தோற்றம் தானாகவே வந்து தவழும் போலும். அதனால்தான் நீதிமன்றத்திலிருந்த எவரும் அவன் பால் இரக்கம் காட்டினாரில்லை, ஒரே ஒரு முதியவரைத் தவிர. அவர் அவன் தந்தையுமல்ல… தமையனுமல்ல… வளர்த்தவர்! சாம்புவின் வாழ்க்கைக் குறிப்புகள்… வேறெவரும் அறியாத ரகசிய சம்பவங்கள் பல அவர் உள்ளத்தில் உறைந்துகிடந்தன!


இருபதாண்டுகளுக்கு முன்பு ஒரு நாள்…பறவைகள் தங்கள் படுக்கையிலிருந்து எழாத வேளை… விடி வெள்ளி தோன்று முன் அக்கிழவரின் துயிலை எழுப்பியது, குழந்தைகளின அழுகுரல்! ஊர்க்கோடியிலே, நகரத்தின் ஓசை தீண்டாத ஒதுக்குப்புறத்திலே இருந்த பழைய பனை ஓலை குடிசையினை சூழ்திருந்த அமைதியினைக் கிழித்துக் கொண்டு எழுந்த அக்குரல் கேட்டதும் கிழவர் அவசரமாக வெளிவந்தார்…. இருளை ஓட்ட ஒளி உரத்துவங்கவில்லை எனினும், ஓடிவரும் ஒரு உருவம் தெரிந்தது… நெருங்கிய அவ்வுருவத்தின் மார்பின் மீது மனித இனத்தின் புது மலர்கள் இரண்டு இருக்கக் கண்டார்! வந்தது ஓர் பெண்!

”யாரம்மா நீ ?” என்றார்.

“வஞ்சிக்கப்பட்ட அபலை ஐயா! காதல் அகராதியை ஒப்பு வித்துவிட்டு சாதல் வந்திடினும் கோதையே,உனைப் பிரியேன் – என்று கூறி, போதையூட்டும் மொழிகள் பேசி, பேதை என்னை காதற்பாதைக்கு அழைத்துச் சென்று, பாதியிலேயே கைவிட்டு விட்டு மறைந்தோடிவிட்டான் ஒரு மாபாதகன்! கொஞ்சிக் குலாவியதால் மிஞ்சியது இந்த இரு குழந்தைகளும், ‘விபசாரி’ என்ற பட்டமும்தான்! இழி சொல்லும் பழி சொல்லும் எனனைத் துரத்தியது!… ஓடிவந்தேன்… வாழ்க்கையின் எல்லையைத் தேடி ஓட நினைத்தேன்! ஆனால் இந்த இரு பிஞ்சுகளும் என் கால்களை இப்படித் திருப்பிவிட்டன! என் அறியாமையாலும் அகந்தையாலும் உருவாகிவிட்ட இந்த இரு செல்வங்களை அழிக்க மனமில்லாம ஓடுகிறேன்! என் ஓட்டத்தை தடுத்து நிறுத்தி வாட்டத்தை போக்கும் பெருந்தகையாளரை தேடி ஓடுகிறேன்!” என்றாள் கண்ணீரைத் துணைகொண்டு வந்த தோகையாள்.

“கெடுத்த கொடியோன் யாரம்மா?” என்றார் கிழவர்.

“சட்டத்தின் சந்து பொந்துகளைத் தேடி பட்டப் பகலிலே வெட்டி வீழ்த்துபவனையும், வந்து செத்தோரை வஞ்சிப்போனையும் தப்பியோடச் செய்யும் வழக்கறிஞன்… பெயர் ராமமூர்த்தி!”

“உன் பெயர் ?”

“விமலா”

இரட்டைக் குழந்தைகளோடு குடிசையுள் நுழைந்தாள்! குமுறிடும் அவள் நெஞ்சினை தன் அனுபவம் என்ற நீர் தெளித்து குளிரச் செய்தார் அக்கிழவர். கிழவரின் குடிசை அவளுக்கு நெடுநாள் தங்குமிடமாக அமையவில்லை. குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும்படி வேண்டிக் கொண்டு தன உறவினர் வீடு தேடி சென்னை புறப்பட்டாள். புறப்படுமுன் தன் இரட்டைக் குழந்தைகளையும் கண்ணீரால் கழுவிவிட்டுத்தான் புறப்பட்டாள்.

சென்னை… தனி ஒரு பெண் தன்மானத்துடன் வாழவிடாத நாகரீக நகரம்! விபசாரத்திற்கு வித்திடும் வித்தகர்கள் பலர் மலிந்த இடம்! கற்பை காசிற்கு ஏலம் போடும் சந்தை! நாகரீகத்தின் பெயரால் நாசவேலைகள் நடைபெறும் களம்!… அங்கு சென்ற விமலாவை உறவினர்கள் வரவேற்கவில்லை. மோசக் கருத்தைக் கொண்டோர் ஆசைக் கரம் நீட்டினர்! காசு படைத்தோரின் கட்டிலறை எப்போதும் காலியாகாதவாறு கண்காணித்துக் கொள்ளும் பொது நல ஊழியர்கள் அன்புமொழி பேசி வரவேற்றனர். அந்த அனாதை ரட்சகர்களின் பரோப காரத்திற்கு இரையாவதில் விமலாவிற்கு மனமில்லைதான்.. என்றாலும் விபச்சார வளர்ப்புக் கல்லூரியின் பேராசிரியர்கள் அல்லவா அவர்கள்! விமலா பலியானாள்!… அக்கலையுலகின் தேவியுமானாள்!

தன் குழந்தைகளுக்காக ரகசியமாய் பணம் அனுப்பி வந்தாள், தன் வாழ்க்கை நிலையைப்பற்றி கிழவரும் அறியாத வகையில், தன் குழந்தைகளைப்பற்றி எவரும் தெரிந்து கொள்ள முடியாத முறையில் நடந்து கொண்டாள். ஆனால் கிழவர் ஒரு முறை சென்னை வந்தார்… உண்மையை அறிந்தார்… ஊர் திரும்பினார்… குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு ஊர் ஊராய் சென்று பாடியும் ஆடியும் வாழ்க்கையை நடத்தத் துவங்கினார்!

ஆண்டுகள் பல உருண்டோடின! காலதேவன் தன் கைத்திறனைக் காட்ட ஆரம்பித்தான்! சாம்புவை ஆணழகனாகவும் சாரதாவை அழகிய ஆரணங்காகவும் உருவாக்கிவிட்டான்! ‘நாள்’ எனும் உளிகொண்டு உடலிலே ‘காலம்’ எனும் சிற்பி அழகை அமைக்க ஆரம்பித்துவிட்டான். கவர்ச்சிக்குக் கேட்பானேன்! நயன விழியெல்லாம் நளின மொழி பேசுவதும், குதலைமொழி தவமும் உதடெல்லாம் குறும்புப் புன்னகை உலாவுவதும், கன்னங்களில் எல்லாம் வண்ணம் நீந்துவதும் பருவத்தின் படைப்புகள் தானே! அழகு குடியேறிய உடலில் காந்த ஒளி வீசத்தானே செய்கிறது. பருவத்தின் கரம் பட்டதுமே கண்கவரும் பசுமை தானாக வந்து போர்த்திக் கொள்வதைக் காண்கிறோமே!

சாரதா பருவத்தின் மெருகு ஏறியிருந்தாள். அவளுக்கு இயற்கை அளித்திருந்த ஒரே ஆபரணம் ‘அழகு! தங்க நகை பூட்டி மகிழ தாய் இல்லையே என்ற இரக்கத்தினாலோ என்னவோ இயற்கை தன் ஆபரணத்தை குறையின்றி பூட்டியிருந்தாள்! காதலைப் பயிரிடும் காந்த ஒளியோடு விளங்கிய அவளை, ‘பணக்காட்’டிலே வளர்ந்த மிருகம் ஒன்று சுவைக்க விரும்பி வலை வீசியது! அதற்குத் தடையா யிருந்த கிழவரையும் சாம்புவையும் சிறையிலிட முயன்றது. முயற்சி பலனும் தந்தது! திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு சிறைக்கோட்டம் அனுப்பப்பட்டனர் இருவரும்!

‘சிறகொடிந்த பறவைதானே சாரதா’ – என்றெண்ணிய அம் மிருகத்தின் கரத்தில் படாது பறந்தோடிவிட்டது அப்பைங் கொடி!

எங்கே ஓடுவது?… வேடன் குறியிலிருந்து தப்பிய மாடப்புறா சுதந்திரமாகப் பறக்க முடியுமா?… வல்லூறு காத்திருக்கிறதே! சாரதாவின் நிலையும் அதுபோல்தான் ஆகியது! இரக்கம் காட்டியவரெல்லாம் ‘அரக்க’ எண்ணம் கொண்டவராகவே தென்பட்டனர்! பகலிலே பரிவு காட்டியவரெல்லாம் இரவு வந்ததும் பஞ்சணையைக் காட்டினர்! பாம்புக்கும் பருந்துக்கும் பயந்து பயந்து ஓடும் தேரையானாள்!

சிறைக் கதவு திறந்ததும் தங்கையைத் தேடி ஓடினான் சாம்பு! கிழவர் ஒரு பக்கம் ஓடினார்! சீமான்களின் கால் பந்துபோல் உருண்டோடிய சாரதாவின் இருப்பிடம் தெரியாமல் அலைந்தான்…சோகம் மேலிட்டதே யொழிய சோர்வு கொண்டா னில்லை! “சாரதா, சாரதா” என்று கூவியவாறே திரிந்தான்!… இருப்பிடம் தெரியவில்லை எனினும் பொறுப்பை மறந்தானில்லை! ஏக்கமும் துக்கமும் அவனை வாட்டிய அளவிற்கு வறுமையும் வதைத்தது!

ஆசைத் தங்கையைக் காண்போமா என்ற ஆவல் அவனை வெறியனாக்கியது…! கண்ணீரும் காயவில்லை…… கால்களும் ஓயவில்லை! தாயின் வயிற்றில் கருத்தரித்த நாள் முதல் தகாதான் இழைத்த கொடுமைவரை பிரியாது வாழ்ந்த தங்கை… வையகத்தில் அவனுக்கிருந்த ஒரே ஒரு சொத்து… பாசத்தால் தன்னைப் பின்னிக் கொண்டிருந்த அன்புக் கயிறு … அதை அறுத்துவிட்டானே சண்டாளன் என்று ஏங்கிய வாறே அலைந்தான். ஒரு கவளம் சோறாயினும் காத்திருந்து அளிக்கும் அன்புச் சசோதரி … வேங்கையால் விரட்டப்பட்ட அந்த புள்ளி மான் வேறெந்த மிருகத்திடம் சிக்கி சித்ரவதையுறுகிறதோ என்ற எண்ணம் அவன் நித்திரையை ஓட்டிவிட்டது! அலைந் தான்…’சாரதா, சாரதா’ என்று அலறியவாறே அலைந்தான்! அவன் குரல்தான் சில வேளைகளில் எதிரொலித்ததே யொழிய ‘சாம்பு’ என்ற அபயக் குரல் கேட்கவில்லை! அவன் பரிதாபத் தோற்றங் கண்டு யாராவது உணவிட்டால், வாங்கிய உணவு வாய்குப் போவதற்குள் ‘சாரதா’வின் நினைவு வந்துவிட்டால், அவள் பசியால் வாடுகிறாளோ என்று எண்ணி, உணவை ஏந்தியபடி ‘சாரதா, சாரதா’ என்று என்று கூவியவாறு ஓடுவான்! உணவு கீழே போகுமேயன்றி அவன் வயிற்றுக்குப் போகாது. நாயோடு எச்சல் இலைக்குப் போட்டியிடும் யாராயினும் அவன் விட்டால் கண்களுக்குப் பட்டு ‘தன் தங்கையும் எந்த நாயோடு போராடுகிறாளோ?’ -இப்படி நினைப்பான்; துடிப்பான்!

பாதையின் வளைவுகளையே தன் வாழ்க்கையின் வளைவுகள் என் றெண்ணி, போகும் இடமறியாது நடந்தான்… நம்பிக்கை எவ்வளவு பலம் பொருந்தியதாக இருந்தாலும் ‘நாள்’ எனும் ‘செல்’ ஏறி ஏறி அரித்துவிடும் போலும்! ஓர் இரவு… தளர்ந்திட்ட கால்கள் காட்டிய வழியே உலர்ந் திட்ட கண்களில் பட்டதையெல்லாம் உற்றுப் பார்த்துக் கொண்டே ‘கலைந்திட்ட’ வாழ்வை எண்ணி நடந்து சென்ற அவன் செவிகளில் வீழ்ந்தது ஓர் குரல்… ‘ஐயோ……ஐபோ…… என்னை விட்டுவீடு -‘ கிழித் திடும் மின்னலைப் போல அவன் காதிலே அக்குரல் பாய்ந்ததும் மின்சார அடிபட்டவன் போல் துடித்து குரல் வந்த திக்கு நோக்கி ‘சாரதா, சாரதா’ என்று அலறியவாறே ஓடினான்!… அவன் கால்கள் அவளை ஒரு மாடி வீட்டின் எதிரில் கொண்டுவந்துவிட்டன!

“சாரதா, சாரதா!” என்று அலறினான்!

“சாம்பு” என்று அலறிய சாரதாவின் பரிதாபக் குரல் கேட்டவுடன் துடிதுடித்தான். தாளிட்ட கதவு அவனைத் தடுத்து நிறுத்தியது!

மதயானை காலில் சிக்கிய மான் குட்டிபோல, காமுகன் கையில் சிக்கிய கன்னியவள் எழுப்பிய அபயக் குரல் அவனைக் தாக்கத் தான் செய்தது. மாடியை நோக்கியே நின்றிருந்த அவன் கண்களுக்கு அலங்கோலமாய் ஓடி வந்த சாரதா தென்பட்டாள்!

காமுகர்கள் கையில் சிக்கி கசங்கிய மலர் மாடியினின்றும் தரைநோக்கிச் சாய்ந்தது! துடி துடித்து கரம் நீட்டி தாங்கிட ஓடினான்! அதற்குள் தரையில் அவள் தலை மோதுண்டது!

எந்தத் தங்கையைத் தேடித் தேடி அலைந்தானோ, அந்த அன்புத் தங்கையைக் கண்டான் குங்குமக் குளத்தில்!

“சாம்பு!…வேலை தேடி…வந்தேன்!…ஆனால் விபசாரத்திற்குத் தூண்டினாள் வீட்டுக்காரி… கெஞ்சினேன்… விட்டாளில்லை… காமுகர்கள் கையிலே என்னைப் பூட்டி விட்டாள்… சாம்பு!…” என்று கூறியவாறே அவள் உயிர் ஓடி விட்டது!

கதவைத் திறந்துகொண்டு வீட்டுக்காரி வெளிவந்தாள். அவன் நெஞ்சமும் அப்போது தான் எரிமலைபோல் வெடித்தது. வெகுண்டெழுந்தான். தன் கரங்களால் அவள் கழுத்தை நெறித்தான்! நெறித்தான்! அவன் விரல்கள் புதையும் வரையில் நெறித்தான்! அவளும் நமனுலகு சென்றாள்!


சாம்பு தன் வாக்கு மூலத்தில் எதையும் மறைக்கவில்லை. மூலையில் உட்கார்ந்திருந்த கிழவர் “நீதிபதியவர்களே!…என் வாக்கு மூலத்தையும் பதிவு செய்து கொள்ளுங்கள்” என்று கூறவே அவரை சாட்சிக் கூண்டில் ஏற்றினார்கள்.

“சாம்பு கொலை செய்தான் ! அதை அவன் மறுக்கவில்லை… அவன் நிலைக்கு விரட்டப்படும் எவரும் அந்த முடிவிற்குத்தான் வருவர். ஆனால் அவன் யாரைக் கொன்றான் என்பது இது வரையில் அவனுக்குத் தெரியாது! அவன் கரங்களில் சிக்கிச் செத்தது அவனை ஈன்ற தாய்!”

“ஹா!” என்று அலறினர் அனைவரும்!

“ஆம்! தாயைத்தான் கொன்றான்! அவன் தாய் பெயர் விமலா! விமலாவும் அறியமாட்டாள் தன் சொந்த மகள் சாரதாவை தான் விபசாரத்தில் ஈடுபடுத்தி மரணத்தைத் தேடித் தந்தோம் – என்ற உண்மையை! விபசாரத்திற்கு விதை தூவிய விமலாவின் மீதும் நான் குறை சொல்ல மாட்டேன். அவளை அந்த எல்லைக்கு விரட்டியவன் ‘ராமமூர்த்தி’ என்ற ஓர் வழக்கறிஞன்! காதலி கர்ப்பமானாள் என்றதுமே கைவிட்டு விட்டான் அக்காதகன். அவர்களின் கள்ளக்காதலில் உற்பத்தியான இரட்டைக் குழந்தைகள் தான் சாம்பு-சாரதா! காலத்தின் சுழல் பெற்ற மகளையே கொல்லச் செய்தது, தாயை!… தாயையே கொல்லச் செய்தது தனையனை! இத்தனைக் கொலைகளுக்கும் காரணம் சந்தர்ப்பத்தால் உந்தப்பட்டவர்களல்ல… விமலாவைக் கைவிட்ட துரோகி ராமமூர்த்திதான்!” என்றார் கிழவர்!

நீதிபதியின் கண்கள் ஊற்றுகளாய் மாறின!

“சாம்புவிற்கு தூக்கு தண்டனை” என்ற தீர்ப்பைத் தந்தான்…எழுந்தான்…கிழவரை அவன் தேடினான்….

“கிழவரே…! பெற்ற மகளைத் தாய் கொன்றாள்!… தாயைத் தனையன் கொன்றான்! விசித்திரமல்ல. தனையனையே தந்தை கொன்றேன்! நான் தான் நீர் சொன்ன துரோகி ராமமூர்த்தி” என்றான்… சாய்ந்தான்!… மரணத்தின் வாயில் வீழ்ந்தான்!

– ஆகஸ்ட் 1956, முத்தாரம்.

ப.உ.சண்முகம் ப.உ.சண்முகம் (P. U. Shanmugam - பா.வு.சா) என்பவர் தமிழகத்தின் மிக முக்கிய திராவிட அரசியல் தலைவர்களில் ஒருவராகவும், முன்னாள் அமைச்சராகவும் விளங்கியவர். [1, 2] கலைஞர் மு. கருணாநிதி மற்றும் எம். ஜி. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) ஆகிய இருபெரும் தலைவர்களின் அமைச்சரவைகளிலும் இவர் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். [1] முக்கிய விவரங்கள் பிறப்பு: 15 ஆகத்து 1924, திருவண்ணாமலை இறப்பு: 11 ஏப்ரல் 2007 (வயது 82) அரசியல்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *