தொங்கோட்டம்
கதையாசிரியர்: வீ.அய்யனார்
கதைத்தொகுப்பு:
நகைச்சுவை
கதைப்பதிவு: August 9, 2026
பார்வையிட்டோர்: 2
(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு காட்ல, நரிக ஒண்ணு கூடி, ஒத்துமயா இருக்கணும்ண்டு பேசி முடிச்சு, அண்ணைக்கிருந்து ஒத்துமயா இருந்திச்சுக. இருக்கயில, தமக்குள்ள ஒரு தலவனத் தேந்தெடுக்கணும்ண்ட்டு, கூட்டம் போட்டுப் பேசி, ஒரு கெழட்டு நரியத் தலவனாத் தேர்ந்தெடுத்துச்சுக.
மாநாட்ல, நரிக என்னா பேசுதுண்டா, நமக்கு சரியான எர கெடைக்க மாட்டேங்குது. எப்பயும் எர கெடைக்கணும், கெடைக்கிற எர போதுமானதா இருக்க மாட்டேங்குது. கெடைக்கிற எரைகள்ல நண்டு நருக்ண்ட பண்டம். எலி, வாய்க்குப் பத்தல. பெரிய எர கெடைக்கணும். நம்ம ஒண்ணா இருந்து திங்கணும்ண்டு, நரிக தீர்மானம் போட்டுப் பேசுதுக.
பேசயில, தலைவன் நரி, இத ஒத்துக்கிட்டு, பெரிய எரயப் புடிக்கிறதுக்குத் திட்டம் போட்டுச்சுக. பெரிய எர எதுண்டு பாக்கயில, ஆனண்டு ஒரு நரி சொல்லுச்சு. எல்லா நரிகளும் ஆனயப் புடிக்கணும் ஆனயப் புடிக்கணும்ண்டு சத்தம் போட்டுச்சுக. ஆனயப் புடிக்கிறதுக்கு என்னா வழிண்டு பாத்துச்சுக. அதுல ஒரு நரி, ஆனயக் கண்ணி வச்சுப்புடிக்கணும்ண்டு, ஒரு நரி சொல்லுச்சு. சொல்லவும், இந்த ஒசனய ஏத்துக்கிட்டு, எல்லா நரிகளும், ஆனயப் புடிக்கப் போறோம்ண்ட்ற சந்தோசத்ல ஆரவாரஞ் செஞ்சு, ஆட்டம் போடுதுக. இத, ஒரு ஆன மறஞ்சு கேட்டுக்கிட்டிருந்திச்சு.
மறுநா, எல்லா நரிகளும் ஒண்ணு கூடி, ஆனக்கிக் கண்ணி வக்யப் போகுதுக, ஆனச் சருத்ல, கண்ணியக் கட்டி வச்சுட்டுப் போயி, பொதருக்குள்ள ஒளிஞ்சு, ஆன எப்ப வரும்ண்டு ஒக்காந்திருக்குக. மொதநா, நரிக பேச்சக் கேட்டுக்கிட்டிருந்த ஆன, அந்தச் சருத்து வழியா வருது. வந்து, கண்ணியப் பாத்திட்டு, இது நரிக செஞ்ச வேல்தாண்டு நெனச்சு கண்ணில ஒரு கால ஒட்டிக்கிட்டு, கண்ணில பட்டுக்கிட்டது போலப் படுத்துக்கிருச்சு. படுத்துக்கிறவும், கண்ணில, ஆன சிக்கிக்கிருச்சுண்டு நெனச்சு, பொதருக்குள்ள படுத்துக் கெடந்த நரிக ஓடுதுக. போயிப் பாக்கயில, ஆன படுத்துக் கெடக்குது. எல்லா நரிகளும் ஆனயத் திங்கணும்ண்டு ஆசயில ஓடி வருதுக.
கூட்டத்ல ஒரு கெழட்டு நரியும் வருது. அந்த நரி, மொத நாத்து ஒரு குட்டி போட்டிருக்கு. அந்தக் குட்டிக்கு, ராசாண்டு பேரு வச்சிருக்கு. அந்தக் கெழட்டு நரி, மத்த நரிக்கிட்ட, ஏ.. மக் ராசா பெறந்த பெறகு, நம்ம ஒத்துமயா இருக்கோம். மாநாடு போட்டிருக்கோம். பெரிய பெரிய சீவாத்திக எரையாக் கெடைக்குதுக. எம்மக் பெறந்த நேரம். நல்ல யோகம் அடிக்குதுண்டு பெருமயாச் சொல்லிக்கிட்டு, ஆனயத் திங்க, மத்த நரிக கூட ஓடியாருது.
ஓடியாந்து, ஆனயச் சுத்திக்கிட்டு வருதுக. பெரிய எரை கெடச்சிருக்குண்டு கெழக்க பாத்துத் தொழுது, ஆனயச் சுத்தி வரிசயா நிண்டு கடிக்குதுக. மொத்தமா நிண்டு கடிக்கயில, ஆன ரேசாப் பெரண்டுச்சு. பெரளவும் ஒரு வருச நரிக, ஆனக்கி அடில சிக்கி, நசுங்கிக் செத்துப் போச்சு. செத்தது போக, கையு போனதும், காலு போனதுமா ஓடுதுக.
தப்பிச்சு ஓடுற நரிகள்ல, அந்தக் கெழட்டு நரியும் ஓடுது. ஓடயில, அது சொல்லுச்சாம், எம்மகி, ராசா பெறந்த பெறகு தொங்கோட்டமும், தொருக்கு குசுவுமா இருக்குதுண்டு சொல்லிக்கிட்டு ஓடுச்சாம். இந்த நரி மாதிரி, நம்மளும், நல்லது கெடச்சா, நல்லதுங்கறது. கெட்டது கெடச்சா வையுறது. நம்மளப் போலதான் அதுகளும்.
– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், நகைசுவைக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசா பல்கலைக் கழகம், மதுரை.
தொடர்புள்ள சிறுகதைகள்
லார்ட் பெட்லிங்டனும் அப்புசாமியும்
ஜ.ரா.சுந்தரேசன்
August 19, 2026
வக்கணை
வீ.அய்யனார்
August 9, 2026
பங்கு – பாகம்
வீ.அய்யனார்
August 9, 2026