தீராதுயரம்
கதையாசிரியர்: எஸ்.ராமமூர்த்தி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: July 29, 2026
பார்வையிட்டோர்: 18

முனுசுபிள்ளை பேரன் போசுக்கும், அன்னாராணி அண்ணனுக்கும் நல்லகாலம் பிறந்ததோ இல்லையோ.. ஆனால், ஒன்று மட்டும் நடந்தது.புத்தாண்டு என்ற பெயரில், அமீனாபோல வந்து, வாசலில் நின்றது சித்திரை.
புதுவருஷம் பிறந்ததும் போதும், சீதேவியாக வீட்டுக்குள் வந்த நெல்மணிகளுக்கு, நிம்மதியே போனதுதான் மிச்சம் .முழுசா மூனுமாசங்கூட வீட்டில் இருக்கவிடவில்லை.வியாபாரிகள் மூலம்,மூட்டைகளில் கட்டி விரட்டி கொண்டிருந்தார்கள்(“அட பாவிகளா..”).
கையிலும் பையிலும் காசு இருந்தா சும்மா இருக்க விடுமா,அதெப்படி முடியும்?.
கிராமந்தோறும் திருவிழாக்கள் களைகட்டின. மறுபுறம் வாழைமரங்களும், மாவிலை தோரணங்களும் சிற்சில வீடுகளுக்கு முன்பு, புதிதாக தோன்றி, அமர்களபடுத்தின.
‘உங்களுக்கு இளைச்சவங்களா நாங்க` என்ற இறுமாப்பில்,ஜமீன் குடும்பங்களை நிகர்த்த தத்துபிள்ளை வீட்டிலும், நெல்அவிப்பதும் அரைப்பதுமாக விழா முஸ்தீபுகள் வேகமெடுத்திருந்தன.
வைகாசி மாததின் கடைசி தருவாய்…
அழைத்தால்கூட, யார் வீட்டுக்கும் போகாத அழகையா, வடக்கிவீட்டு வாசலை, அழையா விருந்தாளியாக சென்று மிதித்தார்.
“வாங்க… வீட்லெ எல்லாரும் செளக்கியமா? திடீர்னு வந்திருக்கீங்க.. என்ன விசேஷம்?” என வினாவையும், கையிலே காபி கிண்ணத்தையும் நீட்டியபடி நின்றாள் பெருமாள்.
வளா கொழகொழா’பேர்வழிகளுக்கு அப்பாற்பட்ட அழகையாவிடம், பதிலை வாங்க படாதபாடுபட்டாள் (‘அய்யோ…தாவு தீந்து போச்சு’) காதில், சேதியை வாங்காமல் போவதில்லை என்ற முடிவோடு நின்றவள் ‘வாயிலயென்ன கொலுகட்டையா இருக்கு’ என, முகம்பூராவும் முறுவல்ரேகை படர, ஒருவித நளினத்தோடு கேட்டாள்.
“எல்லாம் நல்ல விஷயமாத்தான்.. உன்னோட பேரபுள்ளைய, ஏம்பேத்திக்கு மாப்பிள்ளை கேட்டுட்டு போலாமேனு வந்தேன்”.
“அதுக்கென்ன உங்களுக்கு கொடுக்காமையா.. ஆனாயென்ன.. உங்க ரெண்டாவது பேத்தி வளந்து வாட்டசாட்டமா, லட்சணகட்டியா இருக்காளாமே.. சொல்றாங்க, ஆனா, நீங்க கேக்க வந்த பயலுக்கு, இடுப்புல இன்னும் டவுசரே நிக்க மாட்டேங்கிதே. இந்த மாதிரி சமயத்துலே, எப்டி கல்யாணம் பண்ண முடியும்..?அதான் யோசிக்கிறேன்..இவனுக்கு ஏத்த மாதிரி, உங்க வழியிலே வேற ஏதாவது பொண்ணுக இருக்காளுகளா?”
“அதுக்கென்ன.. நம்மூரு காலனியில, அன்னம்மாமக எழுவக்கா இருக்கா, கேட்டுவேனா பாருங்களே. ‘கக்கூசுக்கு கூட்டிட்டு போகலாம்..வரலாம். உங்களுக்கும் பொழுது போன மாதிரி போய்டும்ல” என,உதறிய துண்டை தோளில் போட்டுகொண்டு ‘வரட்டா’ என, ஊரை பார்த்து நடந்து விட்டார்.
வரவேற்பு வாயிலில், வெள்ளியில் வார்க்கபட்ட வெற்றிலை பெட்டியோடும், வாய் முழுக்க எச்சிலோடுமிருந்த அழகம்மாள் ‘போனது என்னாச்சு, என்ன சொன்னாங்க?’ என்று கேட்டாள்.
அழகையா வாயிலிருந்து விஷயம் வருமென்றால், வார்த்தைகள் விவகாரமாக வந்து விழுந்தன. விவரமாக இதை காதில் வாங்கிகொண்டவள் ‘அதுசரி…இது உனக்கு சரிப்பட்டு வராதுபோல, உன்னோட மச்சான் தோது இருப்பான், அவனை கூட்டிட்டு போயி கேட்டு பாக்குறியா?பெருமாளு அவனுக்கு சொந்தகாரி வேற, எப்டியாவது பேசி முடிச்சிடுவான்’என்று, நம்பிக்கைமுலாம் பூசி யோசனை சொன்னாள்.
சரி...அப்டியே பண்றேன் என்றவர், மூன்று நாட்களுக்கு பிறகு தோதுவுடன், வடக்கி வீட்டிற்குள் மீண்டும் நுழைந்தார். பேசினார்கள்…பேசினார்கள்..மனபாடம் செய்து ஒப்பிப்பது போல, பழைய பல்லவியையே பாடினாள் பெருமாள்.
‘யாருடியது… நம்ம வெள்ளைகட்டை மாதிரி இருக்கான்’ என குரல் கொடுத்தாள், படுக்கையிலிருந்து எழுந்த காளியம்மாள்.
“ஆமா சித்தப்பாதான் வந்திருக்கு” ரமேஷை கொடுத்தே ஆகனுமாம், இல்லாட்டா இந்த இடத்தை விட்டு நகரமாட்டேன்னு சொல்லுது”.
“ஏன்டி…நீ இல்லேன்னா சொன்னே, அந்த பொண்ணு கெடைக்க,, இந்த அரைடவுசரு கொடுத்து வச்சிருப்பாம்போலடி” என பேச்சோடு பேச்சாக, பூடகமாக சம்மதத்தை சொல்லிவிட்டாள். அதேநேரம், ஈரதுணியோடு வந்த ராஜாராம்பாண்டியனும் ‘மேகலாதான் பொண்ணுனா, நாளைக்கே கூட கல்லாணத்தை வச்சுக்கலாம்’ என்று, விருந்துக்கு தயாரானவரைபோல தலையாட்டினார்.
`ரொம்ப நல்லதா போச்சு, நல்ல நாளா பாத்துட்டுவாரோம்’ என்ற தோது, அழகையாவுடன் வீடு வந்து சேர்ந்தனர்.இருவரின் முகத்தை பார்த்து, குறிப்பால் உணர்ந்த அழகம்மாள், ‘அடியே எங்கேடி போய் தொலைஞ்சீங்க, அய்யாமாருக்கு காபி கொண்டாங்கடி’ என்று குரல் கொடுத்தாள்.
சிறிது நேரத்தில், பன்னு போன்ற கன்னங்களோடும், பர்பி இதழ்களோடும் வந்த மேகலா ‘அய்யா காபி’ என்று தம்ளரை நீட்டினாள்.
‘கலா எப்படிமா இருக்கே’ என, பேத்தியிடம் வாஞ்சையோடு நலம் விசாரித்த தோது ‘கொஞ்ச நாளைக்கு அடுப்புகிட்டேலாம் போகாதே, தத்துபுள்ளையே காபி கேட்டாலும், இதான் உடம்புக்கு நல்லதுனு, பச்சை தண்ணிய கொடுத்து சமாளி, சரியா..?’
’சரிய்ய்யா..’ என்று ஓடியவள், அவனது பார்வையை அனாமத்தாக விட்டுவிட்டு, பொம்மை செய்வதற்காக, கண்மாய்கரையில் கிடந்த களிமண்ணுக்கு துணையாக, உட்கார்ந்து விட்டாள்.
ஒரு சுபமுகூர்த்த நாளில்,மணவிழா ஏற்பாடுகள் நடந்தன. எட்டு கண்ணும் விட்டெறியுமளவுக்கு, ஏற்பாடுகளில் தீவிரம் காட்டினர்
மாப்பிள்ளை மற்றும் பெண்ணின் ஊருக்கிடையேயிருந்த, கிட்டதட்ட இரண்டு கிலோ மீட்டர் தூரத்தை, மாவிலை தோரணங்களும் வெட்டி கோர்க்கபட்ட கலர் காகிதங்களும் அலங்கரித்தன. மூத்தவளுக்கு மணமேடையாகயிருந்த, அதே புதுவீட்டு திண்ணை, மணப்பந்தல் மேடையானது. ஒரு வாரம் திருவிழாபோல மணவிழா நடந்தது.. முடிந்தது.
ஒருகாசும் ரெண்டு காசும், செல்லுபடியான அந்த காலக்கட்டத்தில், ஏழு லட்ச ரூபாய் மொய்யாக வந்தது. மொத்தத்தையும் வாங்கி கொண்ட முத்துஉடையணன், புகுந்த வீடுகளில் செய்யபோகும் பஜனைகளுக்கு தட்சணை வைப்பதற்காக, தனது காரில் புறப்பட்டுவிட்டார் (`அவ்வளவு சூடாவா இருந்தாரு…விசேஷ வீட்ல இவுக வெட்டி முறிச்சதுக்கு, இருக்காதோ பின்னே..’)
“வாரேன் போறேன்னு ஒரு வார்த்தையில்லை…”வருசங்கள் ’எனக்கென்ன ஆத்திரம்’என காலம் கடந்தது. ரமேஷ்-மணிமேகலை தம்பதிக்கு, தலா இரண்டு வருட இடைவெளிகளில், மூன்று பெண் குழந்தைகள் பிறந்தன. கன்னங்களின் கிண்ணத்தின் வழியாக, வழிந்துவிடும் அளவுக்கு அழகு, சற்றும் குற்றம் குறையில்லாத சர்வாங்கசுந்தரிகளாக வளர்ந்தனர்.
அடுத்தடுத்து ஐந்து தலைமுறைகள்,ஆண்டு அனுபவிக்கும் ஆஸ்தி இருந்தும்,சோத்துக்கு கேடாக இருக்க விரும்பாத ரமேஷ். சொந்தமாக காரை வாங்கி, வாடகைக்கு விட்டு வருவாய் பார்த்தான். வருவாய் வீடு வந்து சேர்ந்ததோ,வாயில் தண்ணீராக போனதோ..அது தெரியவில்லை.
ஆனால்,கணவனிடமிருந்து, பைசா காசை மனைவி எதிர்பார்க்கவில்லை. அதேவேளை, அந்த பரோபகாரியும் கொடுக்கவுமில்லை. ஆனால்,எதிர் வீட்டிலிருந்த செல்லி மட்டும் கேட்டேவிட்டாள்.அந்த வாய் எப்படி சும்மா கிடக்கும்..
“ஏம்மா கேள்விபட்டியா, உம்புருசன் தண்ணியடிக்குதின்னு சொல்றாகளே”.
“தண்ணிங்குடிக்கிறது தப்பாத்தை.. மத்தவங்கமாதிரியில்லை அவரு..பச்சை தண்ணியகூட,காசு குடுத்துதான் வாங்கி குடிப்பாரு, அதனால, நானும் எதுவும் கேக்குறதில்லை…தண்ணிதானே, குடிச்சுகட்டும்னு விட்டுட்டேன்”.
“படிச்சபுள்ளையாச்சே நீ, உனக்கு தெரியாம இருக்குமா” என்றவள், கட்டுசெட்டான அந்த உடம்பை அங்கலாய்த்தபடி, வாசல் வழியை இடைவிடாமல் நிரப்பி கொண்டு,வீட்டுக்குள் நுழைந்துவிட்டாள்.
இதில் எதையுமே காதில் வாங்கி கொள்ளாமல் காலம் கடந்தது…
நம்பிக்கை, அழகானவள் என்ற பொருளுகேற்ப நாமகரணத்தை கொண்ட மூத்தமகள் நதியா, படித்து பட்டம் பெற்றாள். தனது விடாமுயற்சியால்,விஞ்ஞானிகளை உருவாக்கும் ஐஐடியில், பேராசிரியையாக பணியில் அமர்ந்தாள். சூரியனின் மனைவியின் பெயரை கொண்ட இரண்டாவது மகள், குடும்ப நிர்வாகத்தை கவனித்தாள். அவள் மட்டும், சமையலறைக்குள் போகாமல் இருந்திருந்தால், அதோகதிதான். பசிக்கும் போதெல்லாம் ‘ஏன் பசிக்கிறாய்’ என, பாழாய்போன பல வயிறுகள் அடிவாங்கியே வீங்கி போயிருக்கும் மகள். முதலிரண்டை தவிர மூன்றாவதுமகள் புத்திசாலி. திருமண தோடர்பான அவளது சரியான முடிவு அவளை, ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு அழைத்து சென்றுள்ளது.
உடம்பு என்பது மேகலாவின் வம்சாவளியில் கனவுகளை சுமக்கும் காற்றடைத்த பையாகதான் இருந்தது. ஆனால், கனவுகளின் அழகை நம்பிய மேகலாவுக்கு எதிர்காலம் சாத்தியமானது. லட்சங்களில் ஊதியம்பெறும் குழந்தைகள் மூலம் எதை எதையோ சாதிக்க நினைத்த ரமேஷ்,கற்பனை மற்றும் கனவுகளின் கலவைகளை சுமந்த கண்களோடு இரவு வீட்டுக்குள் நுழைந்தான்.
ஒருநாள் வழக்கம்போல் விடிந்தது. அதற்கு என்ன கேடு.ஆனால், விடிவதற்கு முன்பே எழுந்து நடைபயிற்சிக்கு செல்லும் ரமேஷ், உறக்கத்திலிருந்து விழிக்கவில்லை
வழக்கம்போல், முதல் கப் காபியை அப்பாவுக்குதான் கொடுப்பாள் சரண்யா. எப்போதும் காபிக்காக எதிரே நிற்பவர் வராததால், படுக்கையறைக்குள் நுழைந்தாள். அப்பா அப்பா என்று அழைத்தும் எழாததால், முகத்தைதொட்டு திருப்ப முயன்றாள். ஆனால் தலை, ஸ்மரணையற்று சரிந்தது. விக்கித்து போனவள், ‘அப்பா…’ என்ற கூக்குரலுடன், காபி குவளையுடன் கீழே சரிந்தாள். ‘என்னடியாச்சு..’ என்று ஓடிவந்த மேகலா, கணவனின் நிலையை பார்த்து மூர்ச்சையாகிவிட்டாள்.
மாதங்கள் கடந்தது..இன்னும் நிதானமான நிலைக்கு திரும்பவில்லை. நோயும் பாயுமாய் படுக்கையில் கிடக்கிறாள்.’பெத்த புள்ளைங்க நல்லா இருக்கிறத பாக்காம போய்ட்டீகளே’என்று புலம்புகிறாள். எந்த ஆறுதலையும் மேகலாவின இதயம் ஏற்றுகொண்டு இயல்பு நிலைக்கு திரும்ப மறுக்கிறது.
சிரிக்கும்போது மின்னல் தெறித்துவிழும் அவள் கண்களில் ஜீவகளை இல்லை. நெற்றிபரப்பில் கோலமிடும் அவளது கூந்ந்தல்கூட, சொல்லொணாதுயரத்தில், தன்னை குறுக்கிகொண்டு, வடிவமேயின்றி கொண்டையாக குத்திட்டு நிற்கிறது. பொன்மாங்கல்யமும், வண்ணபூச்சரமும், மஞ்சளும் குங்குமமும் தந்த உன்னை, என்னால் எப்படி மறக்க முடியும் என்கிறது, மரண வேதனையிலுள்ள அவளது முகம்.
தொடர்புள்ள சிறுகதைகள்
பாரத்தை சுமப்பது சுகமா! பாரமாக இருப்பது சுகமா!
உரு.வளவன்
July 29, 2026
நீ என் மகனல்ல
என்.ஸ்ரீதரன்
July 29, 2026
நோன்பு
ஜே.எம்.சாலி
July 29, 2026