தியாகம்




சதுரங்க பட்டணத்தை சுந்தரபாண்டி என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு கதம்பா என்னும் அழகிய பெண் இருந்தாள்.
மந்திரி மகாதேவனுக்கு நிலவழகன் என்னும் மகன் இருந்தான். இருவரும் ஒன்றாகவே படித்தார்கள், இருவரும் சகல கலைகளிலும் சிறந்து விளங்கினர். பெரியவர்கள் ஆனதும் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார்கள்.
ஒருநாள் திடிரென்று பக்கத்து நாட்டு அரசன் பகை கொண்டு, இவர்கள் நாட்டை பிடித்து விட்டான், அவனிடம் இருந்து தம்பி ஓடிய நிலவழகன், கர்பமுற்ற கதம்பா இருவரும் காட்டுக்குள் சென்று
கால்போன வழியே நடந்து சென்றனர். பொழுது விடியும் நேரத்தில் அடுத்த ஊரை அடைந்தனர். அரசகுமாரிக்குப் பிரசவ வேதனை ஏற்பட்டது. அவளை ஒரு சத்திரத்தில் தங்க வைத்து விட்டு மருத்துவச்சியை அழைத்து வர ஊருக்குச் சென்றான்.
வெய்யிலும் கடுமையாகக் காய்ந்து கொண்டிருந்தது. புதிய ஊர் ஆனதால் எங்கே மருத்துவச்சி இருக்கிறாள் என்று தேடுவதிலேயே உச்சி வேளையாகி விட்டது. அவன் சோர்வடைந்து ஒரு வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து ஓய்வெடுத்தான்.
அந்த வீட்டுப் பெண் மந்திரா ஒரு மந்திரக்காரி. தற்செயலாக வாயிலுக்கு வந்து பார்த்தாள். நிலவழகன் முகத்தைப் பார்த்ததும் மயங்கினாள். யார் என்று அவனை விசாரித்தாள். தான் வந்த நோக்கத்தைச் சொன்னான்.
“”நல்லது! மருத்துவச்சிக்கு நான் ஏற்பாடு செய்து தருகிறேன். கவலையை விடுங்கள். நீங்கள் உள்ளே வந்து ஓய்வெடுங்கள்,” என்று அவனை உள்ளே அழைத்துச் சென்றாள் மந்திரக்காரி மந்திரா.
மனிதனை விலங்காகவோ விலங்கைப் பறவையாகவோ மனிதனாகவோ உருமாற்ற அறிந்தவள். அவள் நிலவழகனை தன்னுடனே வைத்துக் கொள்ளத் தீர்மானித்தாள். அவனை எருமைக்கடாவாக உருமாற்றி ஒரு கம்பத்தில் கட்டினாள்.
சத்திரத்தில் காதலனை எதிர்பார்த்திருந்த கதம்பாவுக்கு பிரசவ வேதனை அதிகரித்துக் கத்தினாள். அக்கம் பக்கம் இருந்தவர்கள் வந்து அவளுக்கு பிரசவம் பார்த்தனர். அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. அடுத்து என்ன செய்வது என்று அறியாமல் தவித்தாள்.
மருத்துவச்சியை அழைத்து வருவதாகச் சொல்லிச் சென்ற நிலவழகனைத் தேடிப் புறப்பட்டாள். எங்கும் அவன் அகப்படாததால் அந்த நாட்டின் மன்னனிடம் சென்று முறையிட்டாள்.
அரசன், மந்திரியிடம் நிலவழகனைத்கண்டு பிடித்துத் தரும் பொறுப்பை ஒப்படைத்தான். மந்திரி தன் ஆட்களுடன் ஊர் முழுவதும் தேடினான். பல நாட்கள் தேடியும் நிலவழகன் கிடைக்கவில்லை.
அரசனது முயற்சியும் பலன் தரவில்லை என்றதும், “”மன்னா இனி நான் கணவன் இல்லாமல் உயிர் வாழ விரும்பவில்லை. தயவு செய்த தீ வளர்த்து கொடுங்கள். அதில் பாய்ந்து நானும், குழந்தையும் உயிரை மாய்த்துக் கொள்கிறோம்,” என்றாள்.
மன்னன் வாழ்வதற்கான உதவி செய்வதாகச் சொல்லியும் அவள் பிடிவாதமாக இருந்தாள். வேறு வழியின்றி ஊரின் மத்தியிலுள்ள மைதானத்தில் தீ வளர்த்துக் கொடுக்கக் கட்டளையிட்டான் மன்னன்.
யாரோ ஒரு பெண் தன் குழந்தையுடன் தீயில் பாய இருக்கிறாள் என்னும் செய்தி ஊர் முழுவதும் பரவியது. மந்திரக்காரியும் அதை அறிந்தாள். அவள் தான் விரும்பிய சமயம் நிலவழகனை மனிதனாக உருமாற்றினாள்.
மற்ற நேரங்களில் எருமைக்கடாவாக உருமாற்றிக் கட்டி வைத்தாள். அன்று தாயும் குழந்தையும் தீயில் பாய இருக்கும் காட்சியை காண நிலவழகனை மனிதனாக்கி அழைத்துக் கொண்டு மைதானத்துக்கு வந்தாள்.
கொழுந்து விட்டு எரியும் தீயில் குழந்தையுடன் பாய இருந்த இளவரசியைக் கண்டதும் நிலவழகனுக்கு பழைய நினைவுகள் அனைத்தும் வந்தன. அவன் பெரும் சத்தமிட்டுக் கொண்டே கதம்பாவை தடுக்க ஓடிவந்தான். அதற்குள் அவள் தன் குழந்தையுடன் தீயில் பாய்ந்து விட்டாள்.
தன் தவறால் தானே தன் மனைவி குழந்தையுடன் உயிரை மாய்த்துக் கொண்டாள் என்று கருதி, அவனும் தீயில் பாய்ந்தான்.
இக்காட்சியைக் கண்ட மந்திரா தன் ஆசையின் காரணமாகத் தான் அப்பெண் தீயில் பாய நேர்ந்தது என்று வருந்தி அவளும் தீயில் பாய்ந்து உயிரை விட்டாள். அவர்கள் உயிரை மாய்த்துக் கொண்டதைப் பார்த்துக் கொண்டிருந்த மந்திரியும் தீயில் பாய்ந்து உயிரை விட்டான்.
நடந்த இச்செய்தியை அறிந்த அரசன், காளி கோயிலுக்குச் சென்றான். அம்பிகையின் முன் கரங்குவித்து, “”நீதி தவறாது ஆட்சி செய்யும் என் நகரத்தில் அநியாயமாக ஐந்து உயிர்கள் பலியாகிவிட்டன. தயவு செய்து அவர்களை உயிர்ப்பித்துக் கொடு. இல்லாவிட்டால் நானும் உன் காலடியில் உயிரை விடுவேன்,” என்று உடைவாளை எடுத்துத் தன் தலையைத் துண்டிக்க ஓங்கினான்.
மறுகணம் தேவி தோன்றி, “”மன்னா, குடிமக்களிடம் உனக்குள்ள நல்ல எண்ணத்தைப் பாராட்டுகிறேன். கவலைப்படாதே. அவர்கள் உயிர் பிழைத்து எழுவர், அத்துடன் உன்னுடைய உதவியால் நிலவழகன் தன் எதிரியுடன் போராடி, தன் நாட்டை மீட்டு நல்லாட்சி செய்வான்” என்று கூறி மறைந்தார். அவ்விதமே ஐவரும் உயிர் பெற்று எழுந்தனர்.
இப்போ உங்களிடம் ஒரு கேள்வி? தீயில் தன் உயிரைப் பலிகொடுத்த ஐவருள் யார் சிறந்தவர்?” என்று சொல்லுங்கள் பார்ப்போம்!