ஆதியும் ஈறுமானார்
கதையாசிரியர்: ஆத்மஜோதி நா.முத்தையா
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: July 21, 2026
பார்வையிட்டோர்: 234
(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

உலகத்தில் முதன்முதல் தோன்றிய பொருள் இறைவன். ஈறாக உள்ளவரும் அவரே. முன்னிலும் முன்னவனும் பின்னிலும் பின்னவனும் என்பதே மணிவாசகர் கருத்து.
“முன்னைப்பழம் பொருட்கு முன்னைப்பழம் பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே”
என்று பேசுவார் மணிவாசகர்.
பிருகுமுனிவர் என்றொருவர் இருந்தார். அவர் சிவனைத் தவிர வேறுயாரையும் வணங்காதவர். ஒருமுறை அர்த்தநாரீஸ்வராக விளங்கும் எம்பெருமானை வலம்வந்தார். இடப்பாகமாயிருக்கும் சக்தியை வணங்க மறுத்தார். இருவருக்குமிடையில் வண்டுருக் கொண்டு துளைத்தார். தேவி கவலை கொண்டாள். இறைவரிடம் முறையிட்டாள். தேவி தான் கொடுத்த சக்தியைத் திரும்பவும் பெற்றுக் கொண்டாள். முனிவரால் நடக்க முடியவில்லை. பெருமான் ஊன்றுகோல் அருளினார். அதனைப் பெற்று நடந்தார் முனிவர்.
தேவி இறைவனைப் பிரியாதிருத்தற்கு கேதாரநாதனைக் குறித்து தவம் செய்தாள். தேவியின் தவத்திற்கு இரங்கிய பெருமான் என்றும் இறைவனைப் பிரியாதிருக்கும் நிலையை அருளினார். தேவியின் வழியைப் பின்பற்றியே கணவனை என்றும் விட்டுப் பிரியாதிருக்கும் நிலையைப் பெறுவதற்காகப் பெண்கள் கௌரி நோன்பு நோற்றனர். கௌரி நோன்பு நோற்று எத்தனையோ தாய்மார் பிரிந்திருந்த கணவரைச் சேர்ந்திருக்கின்றனர்.
இமயமலையிலே திருக்கேதாரம் என்னும் தலம் உண்டு. இது ஒரு சிவத்தலம். பாண்டவர்கள் பூசித்த தலம். அங்குள்ள சிவலிங்கம் இரண்டு பேர் நின்றாலும் கட்டிப்பிடிக்க முடியாத பருமனுடையது. பாண்டவர்கள் இவ்வழியாகத்தான் கைலாயம் சென்றார்கள் என்பது ஐதீகம். திருக்கேதாரநாதரைப் பற்றி ஞானசம்பந்தரும் சுந்தரரும் பாடியுள்ளனர். சம்பந்தருடைய தேவாரப் பதிகங்கள் கேதாரமே என்று முடிவுபெறும். சுந்தரருடைய பாடல்கள் ‘திருக்கேதார மெனீரே’ என்று முடிவுறும். இங்குதான் சிவபெருமானைக் குறித்து உமாதேவியார் தவமிருந்தார் என்பது வரலாறு.
நீதி என்று கடவுளுக்கு ஒரு பெயருண்டு. மணிவாசகர்:
சோதியே சுடரே சூழொளி விளக்கே
சுரிகுழல் பனைமுலை மடந்தை
பாதியே பால்கொள் வெண்ணீற்றாய்
பங்கயத்து அரனுமாலறியா நீதியே
என்று குறிப்பிடுகின்றார்.
நீதியால் வாழமாட்டேன் நித்தலுந் தூயேனல்லேன்
ஓதியும் உணரமாட்டேன் உன்னையுள் வைக்கமாட்டேன்
என்பது அப்பர் வாக்கு.
சிலர் தாம் சொல்லுவதை உறுதிப்படுத்துவதற்காக “கடவுள் மேலாணை என்று கடவுளை முன்வைத்தே சத்தியஞ் செய்வதுண்டு. நெஞ்சம் எப்பொழுதும் அலைந்து திரிவது. அலைந்து திரியும்போது அதற்கு மனம் என்றுபெயர். அலைந்து திரியும் மனம் சிறிது நேரம் ஒடுங்கி நிற்குமானால் அப்போது புத்தி என்று பெயர் பெறுகிறது. ஒடுங்கிய புத்தியில் இறைநினைவு இடைவிடாது உண்டாகுமானால் அதற்கு சித்தம் என்று பெயர். இதனைத் தாயுமானவர் ‘சித்தமிசை குடிகொண்ட அறிவான பரதெய்வமே’ என்கின்றார்.
இன்னுஞ் சிலர் ‘உன்னாணை’ என்று சத்தியஞ் செய்வதுண்டு. இங்கே உன் என்றதற்குப் பகுதி ‘நீ’ என்பது. நீ என்பதும் கடவுளைக் குறிப்பதாகும். நான் என்ற அகங்காரம் ‘நீ’ என்று ஆகும்போது ஒருவன் தன்னை அறிந்தவனாகிறான். ‘தன்னை அறிந்தவன் தலைவனை அறிந்தவனாகின்றான’ என்ற வாக்கியமும் இதனை முன்னிட்டே எழுந்தது.
புண்டரீகன் என்பவன் பெற்றோருக்கு ஒரேயொரு பிள்ளை பெற்றார் செல்லம் கொடுத்தபடியினால் தீயகுணங்கள் அத்தனைக்கும் அடிமையானான். அழகிய மனைவி இருந்தும் தாசியின் வீடே கதி என்று வாழ்ந்தான். கையிலுள்ள பணமும் வற்ற வாலிபமிடுக்கும் வற்றியது.
மகனுடைய தீய குணங்களைக் கண்ணுற்ற பெற்றார் மகனோடு வாழ்வதில் பயன் ஏதுமில்லை என்று கருதி காசி யாத்திரை புறப்பட்டனர். இதனைக் கேள்வியுற்ற மகனும் மனைவியுடன் காசி யாத்திரை புறப்பட்டான். மகனும் மனைவியும் குதிரையில் ஏறிச் சென்றனர். வழியில் மாமன் மாமி நடந்து செல்வதை மனைவி கணவனுக்குக் கூறினாள். கணவனோ அந்தக் கிழங்கள் எக்கேடு கெட்டாயினும் போகட்டும். நீ பேசாமல் வா என்று தடுத்தான்.
புண்டரீகன் வழியைத் தவறவிட்டுவிட்டான். அவர்கள் சென்ற வழி ஒரு சத்திரத்தைச் சென்றடைந்தது. சத்திரத்தில் வெளிவிறாந்தையில் உலாவிக் கொண்டிருந்தான். பக்கத்தில் ஒரு முனிவருடைய ஆச்சிரமம் இருப்பது தெரிந்தது. சிறிது நேரத்தில் அவலட்சணமான முகங்களையுடைய மூன்று பெண்கள் அந்த ஆச்சிரமத்துள் புகுவதைக் கண்ணாரக் கண்டான்.
நேரம் இருட்டி விட்டது. இந்த நேரத்தில் இப்பெண்களுக்கு ஆச்சிரமத்தில் என்ன வேலை என்று சிந்தித்தான். எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணினான். இரவு முழுவதும் கண்ணோடு கண் மூடவில்லை. அதிகாலை நான்கு மணியிருக்கும். அவலட்சணமான முகத்துடன் புகுந்த பெண்கள் மூவரும் அதிசௌந்தரிய தேவதைகளாக வெளியே செல்வதைக் கண்டான். அக்கணமே அவர்களை நோக்கி ஓடினான். அவர்கள் மூவர் முன்னாலும் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான். நீங்கள் யார் அம்மா. உங்களுக்கு இங்கு என்ன வேலை. நீங்கள் வரும்போது அவலட்சண முகத்துடன் வந்தீர்களே. இப்பொழுது அதிசௌந்தரிய தேவதைகளாக மாறிவிட்டீர்கள். உங்களைப் பலமுறை வணங்குகிறேன். எனது சந்தேகங்களைப் போக்கியருள வேண்டும் என்று இரந்து நின்றான்.
மூவரும் தமக்குள் புன்னகைத்துக் கொண்டனர். அவர்களுக்குள் பெரியவளாக இருந்தவள் வாய் திறந்து பேசினாள். எனது பெயர் கங்கை. அடுத்தவள் யமுனை, அதற்கடுத்தவள் சரஸ்வதி. தினமும் ஆயிரக்கணக்கானோர் எங்களிடத்தே வந்து ஸ்நானம் செய்கின்றார்கள். அவர்களுடைய பாவங்களையெல்லாம் நாம் பெற்றுக் கொள்ளுகின்றோம். அந்தப் பாவங்களால் கோர உருவங்களைப் பெறுகிறோம். தினமும் நாம் ஏற்றுக் கொண்ட பாவங்களை இம்முனிவரது ஆச்சிரமத்தில் வந்து சேவை செய்வதால் அன்றே அவற்றைக் கழுவிக் கொள்கின்றோம்.
இம்முனிவர் யார்? இவர் செய்த விசேட தவம் யாது என்று புண்டரீகன் வினவினான். இம்முனிவரது பெயர் குக்குட முனிவர். அப்படி ஒன்றும் விசேட தவம் செய்தாரில்லை. ஆனால் தன்னைப் பெற்றதாய் தந்தையரையே தெய்வமாகக் கொண்டு அவர்களது சேவையே தனது வாழ்வின் குறிக்கோள் எனக் கொண்டு வாழ்ந்தவர். அதனாலேயே இவ்வளவு தபோவலிமையைப் பெற்றார் என்று மூவரும் கூறினர்.
அம்மையீர் எனது கண்களைத் திறந்து விட்டீர்கள். உங்களுக்கு நன்றி என்று கூறி சத்திரத்திற்கு ஓட்டமாக ஓடிச் சென்றான். மனைவியிடம் உற்றதையெல்லாம் உரைத்தான். இருவரும் பெற்றாரைத் தேடிச் சென்றனர். வழியில் வந்து கொண்டிருந்த பெற்றாரைக் குதிரையில் ஏற்றித் தாம் நடந்து சென்றனர். அன்று தொடக்கம் தாய் தந்தையரையே தெய்வமாகப் போற்றினர் இருவரும். தாய் தந்தையருடைய சேவையில் கண்ணனையே மறந்து விட்டான் புண்டரீகன்.
புண்டரீகனுடைய சேவையைப் பார்க்க கண்ணனே நேரில் வந்து விட்டான். பெற்றார் சேவையில் ஈடுபட்டிருந்த புண்டரீகன் தன்னைத் தேடி வந்த கண்ணனையே கவனிக்கவில்லை. கண்ணன் குரல் கொடுத்தான். புண்டரீகன் சொன்னான். நீ மாத்திரம் தெய்வம் அல்ல. இரு தெய்வங்களுக்குப் பூசை செய்து கொண்டிருக்கிறேன். அது முடியும்வரை இந்தச் செங்கல்லின் மீது நில்லும் என்று ஒரு செங்கல்லைத் தள்ளிவிட்டான். கண்ணன் புன்முறுவலுடன் செங்கல்லின் மீது ஏறி நின்று கொண்டான்.
பெற்றாருடைய பூசை முடிந்ததும் கண்ணனைப் பார்க்க வந்தான் புண்டரீகன். புண்டரீகனுடைய பக்தியை மெச்சிய கண்ணன் என்னவரம் வேண்டும் என்றான். கண்ணா அடியேனுக்கு அருள் செய்த இந்த இடத்திலேயே நீ அர்ச்சாவதாரமாய் விளங்க வேண்டும் என்றான். காலகதியில் அது பண்டரீபுரம் என வழங்கலாயிற்று.
இக்கருத்துக்களையெல்லாம் உள்ளடக்கிய அப்பர் பின்வரும் தேவாரத்தைப் பாடுகின்றார்:
நீதியால் நினைசெய் நெஞ்சே நிமலனை நித்த மாகப்
பாதியாம் உமைதன் னோடும் பாகமாய் நின்ற எந்தை
சோதியாய்ச் சுடர்விளக்காய்ச் சுண்ண வெண்ணீறு நாடி
ஆதியும் ஈறுமானார் அதிகை வீரட்ட னாரே.
– திருமுறைக் கதைகள், முதற்பதிப்பு: ஆவணி 1999, இந்து சமயப் பேரவை, கனடா.
தொடர்புள்ள சிறுகதைகள்
ஆமைக் கதை
ஆத்மஜோதி நா.முத்தையா
July 21, 2026
நரிக் கதை
ஆத்மஜோதி நா.முத்தையா
July 21, 2026
சிவராத்திரிக் கதை
ஆத்மஜோதி நா.முத்தையா
July 21, 2026