சொர்க்க பூமியில்
கதையாசிரியர்: செ.யோகநாதன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: August 8, 2026
பார்வையிட்டோர்: 94
(1967ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

”அம்மா, ஐயாவுக்குத்தான் லண்டன் பைத்தியம் பிடித் திருக்கிறதென்றால் அக்காவுக்கு மூளை எங்கே போய்விட் டது? நர்சுக்குப் படிப்பதென்றால் இங்கிலாந்துக்குத்தான் போய்ப் படிக்க வேண்டுமென்று ஒரு விதி இருக்கின்றதா? அதை இலங்கையில் படித்தால் என்ன? ஆகக் கறுப்பன் களுக்குத்தான் புண்ணும் சீழும் நோயும் வரும்; வெள்ளைத் தோல்க்காரனுக்கு அவை வருவதில்லை என்று அக்கா நினைத்திருக்கின்றாளா? அல்லது வெள்ளைக்காரனின் புண் ணும் சீழும் புனிதமானதென்று அக்கா கருதியிருக்கின்றாளா? என்றைக்கும் வெள்ளைக்காரனைத் தூக்கித் தலையிலை வைத்திருக்க விரும்புகின்ற எங்களுடைய அடிமைப்புத்தி தானே இன்றைக்கும் எங்களை மிகவும் கீழ்நிலையில் வைத் திருக்கின்றது. வெள்ளைக்காரன் தோலிருக்கச் சுளை விழுங்கு பவன். உங்களை அவன் நாயைவிடக் கேவலமாக மதிப் பான். நான் சொல்வது இப்போது உனக்கு விளங்காது. ஆனால் மெய்யோ பொய்யோ என்பதைப் பொறுத்திருந்து பார்.”
அற்புதராஜாவின் சொற்கள் ஆதிபுவனேஸ்வரியின் நெஞ்சிற்குள் இப்பொழுதும் உரத்துக் கேட்டன. முகத்தில் பொங்கிய வியர்வையை இடது கையால் துடைத்தபடியே கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்த ஆதிபுவனேஸ்வரி, அந்தச் சிறிய அறையின் ஜன்னலைத் திறந்து வெளியே தெரியும் லேடி வில்லிங்டன் ஆஸ்பத்திரியை ஒரு கணமே நோக்கி வீட்டு அறையின் இடது புற மூலையில் கிடந்த மரக்கட்டிலில் இருந்தாள். கிறீச்சிட்ட மரக்கட்டிலின் காலின் ஓரமாக றங்குப் பெட்டியை ஆதாரமாக அவள் வைத்திருந்தாள். பன்னிரண்டு மணித்தியால வேலை அவ ளுக்கு; இப்பொழுதுதான் ‘ஷிப்ற்’ ஆகி முடிந்திருக்கிறது. ஆஸ்பத்திரியின் மருந்து நெடி அவளின் உடலெங்கும் மணந்து, வேர்வைக் கசியலுடன் நாறி அவளுக்கே அரு வருப்பூட்ட, எழுந்து யூனிப்போமைக் கழற்ற ஆஸ்பத்திரி யின் எதிரேயுள்ள மணிக்கூடு ஐந்து மணி அடித்தது. அவள் தன் கையைப் பார்த்தாள்; பிறகு வெறுங்கையைப் பார்த்த கசப்பில் தன்னையே நொந்து, தான் கையில் கட்டியிருந்த அந்த அழகிய மணிக்கூட்டைத் தனது உடுப்பு தைப்பதற்கென விற்றதின் மிதமிஞ்சிய வறுமைக்காகத் தானே மனம் நொந்து அழுதாள். அவளின் தம்பி அற்புத ராஜா சொன்னது இரண்டு மாதங்கள் சென்றபின் அல்ல இரண்டே நாட்களில் அவளில் அறியக்கூடிய உண்மை யாயிற்று. தன்னுடைய சதையிருக்க, உயிரையே ஆங்கிலேய நிர்வாகம் உறிஞ்சுவதை மூன்றே நாட்களில் அவள் உணர்ந்துவிட்டாள்.
வெளியே ஒரே இரைச்சலாயிருந்தது. அது நித்திய நிகழ்ச்சி தான். ஆனால் வெறுப்புணர்ச்சி இன்று நெஞ்சுள் ஓயாது பிரவகிக்கின்றது. மத்தியானம் தின்ற ஜாம் பூசிய பழைய பாண் நெஞ்சை எரிப்பதும், குளிப்பதற்கு உடல் அலுப்பாயிருப்பதும், கலகலப்பாயிருப்பதற்கு லின்யூ இல்லாததும் தனிமையுணர்வையும் விரக்தியையும் அளித்த தோடு சிறிது நேரத்தில் பதனிடப்படாத பன்றியிறைச் சித் துண்டோடு தின்னப்போகும் பாணின் நினைவு ஆதி புவனேஸ்வரிக்கு வயிற்றைக் குமட்டும் உணர்ச்சியையும் இப்போது அளிக்கின்றது.
லின்யூ என்ற பர்மியச் சினேகிதியும் அவளோடு அந்த ஹாஸ்டலின் குச்சு அறையிலேயே இருக்கின்றாள். இருவருக்கும் ஒரே பொது மேசை; எட்டடி சதுர அளவுதான். அதில் சிலவேளை லின்யூவின் உடுப்புக்களும் கிடக்கும்.
ஆதிபுவனேஸ்வரி மேசையைப் பார்த்தாள். அரை நிர் வாணகோலப் பெண்ணொருத்தியின் புகைப்படமுள்ள புத் தகமொன்று கிடந்தது. அவ்வேளை லின்யூவும் முக்கால் நிர்வாணமாக அவள் மனக்கண்முன் வந்து நின்றாள். லின்யூ பர்மாக்காரி, லேடி வில்லிங்டன் ஆஸ்பத்திரிக்கு ஆதிபுவ னேஸ்வரியைப் போலவே அவளும் மருத்துவத் தாதியாகப் பயிற்சிபெற வந்தவள். அவர்களிருவரும் அதே அறையில் தான் வந்த இரண்டு மாதங்களாக இருக்கின்றார்கள். வந்த முதற் கிழமை லின்யூ மிகத் துக்கத்துடன் இருந்தாள். அவள் கடும் சமய நம்பிக்கையுள்ளவள். ஆனால் மூன்றாம் வாரம் அவையெல்லாம் பறந்து போயின. அவளே மாறிப் போனாள். வீட்டிற்குப் பணம் அனுப்புவதற்காகவும், தனது மேலதிக செலவுகளுக்காகவும் அவள் தன்னை நிர்வாண மாகப் படம்பிடிக்க ஒரு பிரபல புகைப்படக்காரன் ஒருவனோடு ஒப்பந்தம் எழுதிக் கொண்டாள்.
வெளியே கதவு தட்டிக் கேட்டது.
ஆதிபுவனேஸ்வரி எழுந்து கதவைத் திறந்தாள்.
“ஐ…ஐ ஆம்… ஸொரி மிஸ் ஆதி.”
லின்யூ தடுமாறிக்கொண்டு நின்றாள். கண்கள் சிவந்து கன்னங்களில் உராய்ந்த காயங்களுடன் குப்பென்று மது மணக்க, அவள் கதவைத் திறந்தவாறே ஆதிபுவனேஸ்வரி யின் தோளில் சாய்ந்தாள். ஆதிபுவனேஸ்வரிக்கு இதயம் வலித்து எரிய லின்யூவைக் கட்டிலிற் கிடத்தினாள்.
இருவரும் சில நிமிஷங்கள் ஒன்றும் பேசவில்லை.
லின்யூ இப்படி அலங்கோலத்துடன் வந்தது இன்றுதான் முதல் தடவை. மௌனமாகக் கட்டிலிற் கிடந்த லின்யூ திடீரென விம்மியழுதாள் :
“ஆதி, என்னைத் தவறாக நினைக்கவேண்டாம். நான் என்ன செய்வேன்? என்னுடைய இங்கிலீஸ் உனக்கு விளங்குகிறதா? விளங்கும்-விளங்கும். லின்யூ இப்படிக் கெட்டுப்போனாள், குடிக்கின்றாள் என்று நினைக்கின்றாயா? சத்தியமாகச் சொல்கிறேன். என்னை மறக்கத்தான் இதைச் செய்கிறேன். பர்மாவில் நான் கான் சாதியைச் சேர்ந்தவள். எங்கள் குடும்பத்தில் நாங்கள் பத்துப்பேர்-பத்துப் பேர். சாடின் நதிக்கரையில் நாங்கள் வசித்து வந்தோம்…”
அவளின் பிஞ்சு உடலில் எத்தனை காயங்கள்—அவை கேடுகெட்ட வெள்ளைக்கார நாய்கள், அவளைப் போதை ஏற்றிச் செய்த நயவஞ்சகக் காமாந்தகாரத்தால் ஏற்பட்ட பற்காயங்களும், நகக் காயங்களும்…… சீ பண்பாடற்ற காட்டு மிராண்டிகளே-
ஆதிபுவனேஸ்வரியின் கண்களில் வேதனையினால் அல்ல, சீற்றத்தால் கண்ணீர் துளும்பிற்று.
லின்யூ குலுங்கி குலுங்கி அழுதாள்…
“என்னைப் போதையேற்றி விட்டு… இப்படி… இப்படி… ஆதி என்னால் நானே சாகின்றேன். நாங்கள் கறுப்பிச்சிகள் என்று கூடப் பார்க்காமல் எங்களோடு தாங்கள் பழகுவதாகவும், அப்படிப் பழகுவதற்காக தங்கள்பால் நாங்கள் நன்றியுடையவர்களா யிருக்க வேண்டும் என்றும் எங்களுக்கு விரிவுரையாற்றுகின்ற டாக்டர் கூடச் சொன்னான் ஆதி……”
ஆதிபுவனேஸ்வரி லின்யூவைக் குளிப்பதற்காகக் கூட்டிச் சென்றாலும் அவளின் இதயம் நெருப்பாய், அனலாய் மாபெரும் தீக்குளம்பாய்த் தகித்துக் கொண்டிருந்தது. லின்யூவின் விசும்பலில் அற்புதராஜாவின் குரல் ஆதிபுவ னேஸ்வரிக்கு கேட்டுக் கொண்டிருந்தது.
அன்று ஆதிபுவனேஸ்வரிக்கு இரண்டு மணித்தியால ஓய்வுதான் இருந்தது. லின்யூ அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள்.
“புகைப்படம் என்பது அற்புதமான கலை. அதுவும் இயற்கை நிலையை புகைப்படம் எடுப்பது மிகவும் உன்னத மான கலையம்சம் நிரம்பியது” என்று சொல்லி லின்யூவை அழைத்துச் சென்று போதையேற்றிப் புகைப்படம் எடுத்து அவளைக் கெடுத்தவர்களில் ஒருவன் தனது ஆஸ்பத்திரி யிலேயே டாக்டராய் தங்களுக்கு விரிவுரையாளராய் இருப்பது ஆதிபுவனேஸ்வரிக்கு அருவருப்பை மூட்டியது.
அந்த டாக்டர் ஜோன்சன், தனிமனிதனின் உல்லாச வாழ்வுபற்றி என்ன அழகாகஅங்கு நடந்த கூட்டமொன்றில் பேசினான்!
வந்த அலுப்பில் எதிலும் அக்கறையற்றிருந்த ஆதி புவனேஸ்வரி தன் தகப்பன் எழுதியிருந்த கடிதத்தை அப்பொழுதுதான் படிப்பதற்காய் எடுத்தாள். அவளின் தகப்பன் ஆங்கிலத்தில் கடிதத்தை எழுதியிருந்தார். வாழ்க் கையின் நம்பிக்கைகளையும் அவள்மீது வைத்து அவளின் தகப்பன் நடேசன் எழுதிய அக்கடிதம் அவளில் வேதனைப் புழுக்களை நெளியவிட, எத்தனையோ மைல்களுக்கப்பால் ஆசையின் துடிப்போடும் வாத்சல்யத்தோடும் உள்ள அவள் தாயார் அன்னபாக்கியத்தையும் தம்பி அற்புதராஜாவையும் அவள் அவ்வேளை நினைத்துக் கொண்டாள்.
அவள் எஸ்.எஸ்.ஸி வரை படித்துவிட்டு வீட்டிலிருந்த போது அவளுடைய தந்தை நடேசன் அவளைச் சும்மாயிருக்க விடவில்லை. நடேசன் ஓய்வு பெற்ற சிறாப்பர். மீண்டும் எலிசபெத்ராணி இலங்கைக்கு அரசியாய் வந்தால்தான் இலங்கையில் நல்லாட்சி நிலவும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட அவர் ஓய்வு நேரமெல்லாம் தன் மகள் ஆதிபுவனேஸ்வரிக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுப் பதிலேயே செலவழித்தார். நாளெல்லாம் மகளோடு ஆங்கிலத்தில் கதைத்தார் ஆதிபுவனேஸ்வரியின் தாய் அன்னபாக்கியத்திற்கு இதெல்லாம் பிடிக்காது. காலை எழுந்து முகம் கழுவி திருநீறு பூசிக்கொண்டு ஆரம்பமாகும் வாழ்வு, இரவில் படுக்கைக்கு போகும்போது ‘முருகா’ என்று அலுப்பான கொட்டாவியுடன் கூறும் பஜனையுடன் முடிவடையும். கவுண் போடுவது, இங்கிலீஷ் நியாயங்கள் பேசுவது இவையெல்லாம் அவளுக்கு ஒத்துக்கொள்ளாது. ஆனால் என்ன பேச முயன்றாலும், அன்னபாக்கியத்தை நடே சன் தடுத்து விடுவார். “அன்னம், உனக்கொன்றும் இதைப் பற்றிவிளங்காது. நீ உன்னுடைய வேலைகளை போய்ச் செய். ஆதியும் உன்னைப்போல சமையலறையொன்றே தஞ்சமாகக் கொண்டு வாழப்பிறந்தவள் அல்ல. அவள் இங்கிலாந்து சீமைக்குப் போக என்றே பிறந்தவள்.”
பல நாட்களாக அந்த வீட்டில் ‘லண்டன்’ ‘நர்ஸ்’ என்ற பெயர்கள் அடிபட்ட போதும் அன்னபாக்கியம் அதனைப் பெரிய விஷயமாக மதிக்கவில்லை. ஆனால் நடேசன் கையில் பாஸ்போர்ட் புத்தகத்துடன் ஆதிபுவனேஸ்வரிக்கு கையில் ஊசி ஏற்றுவித்துக் கொண்டுவந்த போதுதான் அன்னபாக்கியம் திடுக்கிட்டாள்.
அன்று முழுவதும் அன்னபாக்கியம் அழுதாள்.
அற்புதராஜா தாயின் பக்கம்தான். அவன் தாயைச் சமாதானப்படுத்தப் படுத்த அவளின் அழுகை கூடிற்று.
”அம்மா, ஐயாவுக்குத்தான் லண்டன் பைத்தியம் பிடித் திருக்கிறதென்றால் அக்காவுக்கு மூளை எங்கேபோய்விட்டது? நர்சுக்குப் படிப்பதென்றால் இங்கிலாந்துக்குத்தான் போய்ப் படிக்கவேண்டுமென்று ஒரு விதி இருக்கிறதா?”
அவன் அக்காளுக்குத் தொடர்ந்து சொல்லிக்கொண் டிருக்கையிலே அங்கு வந்த நடேசன், அற்புதராஜாவை நெருப்புமிழும் கண்களால் பார்த்துவிட்டு அழுதுகொண் டிருந்த அன்னபாக்கியத்தின் பக்கத்தில் போனார்.
”அன்னம் நீயே நன்றாக யோசித்துப் பார். தங்கச்சி எங்களை விட்டு விட்டு நெடுந்தூரத்திற்கா போகப் போ கிறாள்? ஆதிக்கு வந்த ‘லக்’ வேறு யாருக்கு வரும். தங்கச்சி இப்பொழுது எங்கே போகப் போகின்றாள் ……லண்டனுக்கு. லண்டனில் கால் வைத்திருக்கிறதென்றால் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அது சொர்க்க அங்கு வாழுகின்ற ஒவ்வொருவனும் கார் வைத்திருக்கின் பூமி. றான். வீட்டுக்கு வீடு டெலிவிஷன் இருக்கின்றது. நேரத் திற்கு நேரம் உணவும், எல்லோருக்கும் தொழிலுமுள்ள பூ பூலோக சொர்க்கம் அங்கு தான் இருக்கின்றது. அங்கு போய்ப் படிப்பதென்றால் அதைவிடப் பெருமை என்ன இருக்கிறது…?”
நடேசன் இங்கிலீஷ் பத்திரிகை ஒன்றை எடுத்துப் பிறகு அதை மடித்து வைத்துவிட்டு அன்னபாக்கியத்திற்குக் கிட்டவாகப் போனார்.
“அன்னம், இங்கிலாந்துக்குப் போய் கோப்பை கழுவினா லேயே அதில் ஒரு தனிக் கௌரவம் இருக்கிறது. அங்கு ஆயிரம் ஆயிரமாகப் பணம் உழைக்கலாம் நீயே நினைத்துப் பார். என்னுடைய பென்சன் காசாலை மட்டும் இந்தக் குடும்பம் நடக்குமென்று நீ நினைக்கிறாயா? தங்கச்சி இங்கிலாந்துக்குப் போனாளென்றால் ஒரு வருஷத்திலை பத்தாயிரம் ரூபா உழைத்திடுவாள். எல்லாவற்றையும் விட நான் அதைத்தான் யோசிக்கிறேன்.’
அழுது பொருமிக்கிடக்கும் அன்னபாக்கியத்தின் முகத் தையே அவர் பார்த்தார். மூக்கில் மின்னும் வெறும் மூக்கு மின்னிதான் ஒரே அணிகலன் அவளுக்கு அவசிய தேவை என்று எல்லா நகைகளும் அடைவு கடைக்குப் போய் விட்டன.
“மூன்று வருஷங்களுக்குப்பிறகு வரப்போகின்ற சந்தோ ஷத்திற்காக இப்பொழுது கொஞ்சம் கஷ்டப்பட்டால் என்ன அன்னம்?” கடைசியில் அன்னபாக்கியமும் சம்மதித்து விட்டாள்.
விமானத்தில் பறந்து கொண்டிருந்த போது ஆதிபுவ னேஸ்வரியின் கற்பனைகள் பல்கிப் பெருகின – லண்டன் மாநகரில் அவள் தன்னுடைய வெள்ளைக்காரச் சிநேகிதி களோடு தேம்ஸ் நதிக்கரையோரமாக ஆனந்தமாய் உலாவி வருவாள். வஸந்த காலத்தின் இனிய வேளையிலே அவள் லண்டன் தியேட்டர்களிலும், சினிமா மண்டபங்களிலும் தன் ஓய்வுப்பொழுதைக் கழிப்பாள். தன்னுடைய கடமை யின் போது அவள் நோயாளிகளிடையே தாயைப் போல வார்த்தைகளாலும், செயல்களாலும் விளங்குவாள்… ஓ… அவை மிகவும் இனிய நாட்களாயிருக்கப் போகின்றன…
ஆனால் ஆதிபுவனேஸ்வரி விமானத்தில் இருந்து இறங்கிய பத்துப் பதினைந்து நிமிஷங்களுக்குள்ளேயே அவளுக்கு மனதிற்குள் கசப்புணர்ச்சி அரும்பலாயிற்று. அங்கு விமானத் தளத்தில் நின்ற வாடகைக்கார்கள் எதுவும் அவர்களை ஏற்றவில்லை. ஏனெனில் லின்யூவும், ஆதிபுவனேஸ்வரியும் கறுப்பினத்தவர்களாம். கறுப்பர்கள் என்றால் கூலி களாம். அவளின் தந்தை நடேசன் சொன்னதுபோல லண்டன் மாநகரில் வானை அளாவும் கட்டிடங்கள் இருந்தன ஏராளம் கார்கள் வீதியிலும், விற்பனை நிலையங்களிலும் காணப்பட்டன. ஆனால் இது மிகவும் சிலருக்குத்தான். போய் ஒருவாரம் முடிவதற்குள் அவளுக்கு இங்கிலாந்தின் உண்மையான சொரூபம் தெரிந்து விட்டது. அவளின் கண் களின் முன்பே மிகப் பசியுடன் பிச்சைக்காரர் திரிவதை, மாலை மயங்கிக் கொண்டு வருகையில் அரைகுறை ஆடை யுடன் விபச்சாரிகள் வாடிக்கைக்காரர்களை வீதியில் நின்று அழைப்பதை அவள் நேரே கண்டாள்.
“அற்புதராஜா சொன்னது எவ்வளவு உண்மை! கிழக்கு நாட்டில் இருக்கின்றவர்களை அங்கு அழைப்பித்து வேலையும் பயிற்சியும் கொடுப்பதாகச் சொல்லி மிக, இழிந்த கஷ்ட மான வேலைகளைத் தந்து உங்களை வெள்ளைக்காரர் நன்றாகச் சுரண்டுவார்கள். நான் சொல்வது பொய் என்று நீ நினைக்க லாம். இது ஒரு அப்பட்டமான சுரண்டலும், அநியாயமும் என்பதை நான் தத்துவத் தெளிவோடுதான் சொல்கிறேன்.”
அந்தக் குறுகிய அறையில் லின்யூவும், அவளும் மிகவும் கஷ்டப்பட்டே வாழ்ந்தனர். அங்கு தன் தேவைகளைச் சரிப்படுத்துவதற்காக தன் அழகிய மணிக்கூட்டையே அவள் விற்றாள். வந்த சில நாட்களால் தான் அவளுக்கு தனது சம்பளம் பதினைந்து பவுண் என்று தெரிந்தது. பதினைந்து பவுண் என்றால் இலங்கை நாணயப்படி நூற்றித் தொண்னூற்றி நான்கு ரூபா எழுபத்தைந்து சதம் வரும் ஆனால் அந்த வேலை? அவளுக்கு அங்குள்ள வீட்டு வேலைக் காரி ஒருத்தியைவிட மிகக் கேவலமான வேலைகளே ஆஸ்பத்திரியில் கொடுக்கப்பட்டன. அவர்களுக்கு மலசலப்பாத்திரங் களை நோயாளிகளுக்கு வைக்கும் வேலையே கொடுக்கப் பட்டதை அறிந்து, அதொன்றையே தானும் செய்தபோது லின்யூ முதல் நாள் அழுதே விட்டாள்!
அங்கு உணவு மிக மோசமாயிருந்தது. கிறிஸ்மஸ் தினத் தில் மட்டும்தான் அவர்களுக்கு விசேஷ உணவு. அதுவும் ஒரு முட்டையும் வதக்கிய பன்றியிறைச்சியும்தான். மற்ற நாட் களிலெல்லாம் உணவு மகாமட்டம்.
-அற்புதராஜா எவ்வளவு சரியாகச் சொன்னான்.
ஆஸ்பத்திரியிலும் நிம்மதியில்லாமல் ஹொஸ்டலிலும் நிம்மதியில்லாமலிருக்கையில் வீட்டிலிருந்து வரும் கடிதங்கள் அவளுக்கு தவிப்பை, மனக் கொதிப்பைத் தன்னில் தானே யொரு வெறுப்பைக் கொடுத்தன.
நடேசன் வீட்டு நிலவரங்களை விளக்கி எழுதுவார். கடன், மருத்துவச்செலவு, உணவுத்தேவை பற்றிய பட்டியல் களாய் கடிதங்கள் அங்கு வரும். சிலவேளை ஏயர் மெயில் கார்ட்டைக் கூட கடனில்தான் வாங்கி அனுப்புவதாக நடேசன் எழுதியிருப்பார்.
கடல் கடந்து, உறவு பிரிந்து, நம்பிக்கையைச் சுமந்து இங்கே வந்து விரக்தியின் தகிப்பில் கருகியதைத் தவிர ஆதிபுவனேஸ்வரி என்ன சந்தோஷத்தைக் கண்டாள்.
மீண்டும் ஆஸ்பத்திரிக்கு மனதில் வெறுப்புடன் ஆதிபுவ னேஸ்வரி புறப்பட்டாள். தொடர்ந்து பன்னிரெண்டு மணித்தியாலங்கள் அவள் ஆஸ்பத்திரியில் வேலை செய்தாக வேண்டும்; அதுவுமென்ன நோயாளிகளுக்கு பெட் பான்ஸ் தூக்கிவைப்பது, எடுப்பது, ஆஸ்பத்திரி வார்ட்டு களைத் துப்புரவு செய்வது அவ்வளவுதான்.
இவற்றிற்கு கடல்கடந்து இங்குவந்து வேலைக்காரியை விட நூறுமடங்கு கேவலமாக, கீழாக, தாங்கமுடியாத வேதனையோடு வேலை செய்வதற்குக் கூலி-நூற்றித்தொண் ணூற்றி நான்கு ரூபா எழுபத்தைந்து சதம்! சமத்துவ, ஜன நாயக, சுதந்திர தனிமனித உரிமைகளைப் பேணுகின்ற சொர்க்க பூமியில் இதுவே கறுப்பர்களுக்குக் கொடுக்கப்படக் கூடிய உச்ச சம்பளமாம்.
ஆஸ்பத்திரி வார்ட்டிற்குள் போன ஆதிபுவனேஸ்வரி மின்சாரவிசிறிபோல வேலையில் சுழன்று கொண்டிருந்தாள். பெட்பான்சை அகற்றிக் கொண்டிருந்தவள், திடீரென்று ஆங்கில நோய்க்குரல் ஒன்று கீறிச்சிட்டதைக் கேட்டுத் திடுக்கிட்டு நிமிர்ந்து முன்னே போக, ஒரு கால் முறிந்த ஆங்கிலச் சிறுவன் கட்டிலில் இருந்து உருண்டு விழுந்து நெற்றிப்பொட்டால் இரத்தம் வழிய நிலத்தில் கிடந்து காலொன்றை உதறி வலிப்பு வலித்தவனின் கோலத்தில் துடித்துக் கொண்டிருந்தான்.
ஆதிபுவனேஸ்வரி கணத்தில் நர்சானாள்.
விழுந்து கிடந்த அந்தச் சிறுவனை ஆதரவோடு தூக்கிக் கட்டிலிற் கிடத்தி விட்டு நெற்றிக் காயத்தைக் கழுவி அவள் மருந்து போடத் தயாராகையில்….
“ஐ ஸே.. யூ பிளாக் மொன்ஸ்ரர்…”
ஆஸ்பத்திரியின் மௌனத்தைத் தலைமை மருத்துவத் தாதி மேரியின் குரல் கலைத்தது. கோபத்துடன் அலறிக் கொண்டு வந்த மேரி, ஆதிபுவனேஸ்வரியை பின்சட்டையில் பிடித்து இழுத்துக் கீழே தள்ளிவிட்டு கோபம் பரபரத்துத் தடுமாறி ஆங்கிலத்தில் பொழிந்து தள்ளினாள்.
“உன்னுடைய கடமை, பெட் பான்ஸ்- இந்த மலசலக் கோப்பை தூக்குவதும், வார்ட்டைச் சுத்தமாக்குவதும்தான். வேறு எந்த வேலையும் நீ செய்ய வேண்டியதில்லை. அப்படிச் செய்தால் நான் உன்னை டிஸ்மிஸ் செய்வேன். முதலில் நீ ‘டிசிப்பிளின்’ பழகவேணும்.”
ஆதபுவனேஸ்வரிக்கு அந்த நிலைமையிலும் சிரிப்பு வந்தது.
“ஓ! டிசிப்பிளின் … மோரல்ஸ் … டெமோக்கிரசி…” அவளின் அந்தச் சிரிப்பு வெள்ளைக்கார மேரிக்கு ஆத்திரத் தை மூட்டியிருக்கவேண்டும். ‘நாயே நீ வெளியே போ…’ என்று தன் வாயைப் பிளந்து கைகளை நீட்டிக்கொண்டு முன்னே, ஆதிபுவனேஸ்வரிக்கு முன்னே வந்தாள்.
ஆதிபுவனேஸ்வரியின் மனதில் லின்யூவின் வஞ்சிக்கப் பட்ட வாழ்வு, அற்புதராஜாவின் உணர்ச்சி பொங்கும் குரல், தான் கறுப்பினத்தவள் என்ற தன் சுய கௌரவ மாகிய எல்லாம் அக்கணத்தில் விஸ்வரூபமெடுத்தன.
தனக்குக் கீழே, கட்டிலின் காலோடு கிடந்த அந்தப் பெட்பான்சை, மலசலப் பாத்திரத்தை அவளின் கண்கள் நோக்கின.
”சீ! வெள்ளைக்கார நாயே…”
கீழே கிடந்த மலப் பாத்திரத்தை தன்னை மறந்த ஆத்திரத்தில் மின்வெட்டில் தூக்கி மேரியின் முகத்தில் ஆதிபுவனேஸ்வரி வீசி எறிந்தாள்.
இனி அவள் அங்கே வேலை செய்யமாட்டாள்.
– 1967
– தேடுதல் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1983, நர்மதா பதிப்பகம், சென்னை.
![]() |
ஈழத்து எழுத்தாளர் செ.யோகநாதன் - எழுதியவர்: முல்லை அமுதன் - 05 February 2008 1942ல் பிறந்த செ.யோகநாதன் அவர்கள் மாரடைப்பால் இறக்கும் வரை நிறையவே எழுதிக்குவித்தவர். 1962ல் தன் முதல் சிறுகதையான ‘மனக்கோலத்தை’ எழுதியது முதல் தொடர்ந்து சிறுகதை, நாவல், குறுநாவல், சிறுவர் இலக்கியம், திரைப்படம், விமர்சனங்கள் என எழுத்தை விரிவுபடுத்தியவர். ஜெயகாந்தனின் ‘வாழ்க்கை அழைக்கிறது’ நாவலை ‘அக்கினிப் பிரவேசம்’ எனும் சிறுகதையை வாசித்தபோது ஏற்பட்ட அதிர்வலைகள் எனக்கு…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
நலம் தரும் நட்பு
அல்போன்ஸ் மோசஸ்
August 19, 2026
எமன் அக்காள் கழுதை
நாகரத்தினம் கிருஷ்ணா
August 19, 2026
அலைபேசியும் அழுக்கு வேஷ்டி தாத்தாவும்
முனைவர் வெங்கடேஷ் கணபதி
August 16, 2026
