சொன்னவன் பழி குடுப்பான்
கதையாசிரியர்: வீ.அய்யனார்
கதைத்தொகுப்பு:
நகைச்சுவை
கதைப்பதிவு: August 9, 2026
பார்வையிட்டோர்: 3
(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஒழவன், மலயோரத்ல உழுதுகிட்டிருந்தா. அப்ப அங்கிட்டிருந்து ஒரு நரி வந்திச்சு. வந்து: அவங்கிட்டப் போயி, என்னாண்ணே வெதக்கிறேண்டு நரி கேட்டுச்சு. தண்ணியுமில்லாம – கஞ்சியுமில்லாம உழுதுகிட்டிருக்கவனுக்கு எவ்வளவு கோவம் வராது. கேக்கவும் -, கருவாடுங் கத்திரிக்காயும் வெதக்கிறேண்டு சொன்னா. அப்டியாண்ணே! அப்ப: வலது மாட்டக் கழத்தி விடு. நா-ங் கொஞ்ச நேரம் மேக்கால இழுக்றேண்டு சொல்லுச்சு. சொல்லவும், சரிண்ட்டு; வலத்து மாட்டக் கழத்தி விட்டுட்டு, நரிய வலத்ல மாட்டி உழுதா. கலப்பய நரி இழுக்க முடியாம முக்குது. முக்கவும், தாருக்கம்ப வச்சு, நாலு மாட்டு மாட்னா. மாட்டவும் பல்லு ஒடஞ்சு, ரத்தம் ஒழுகுது. முக்கிக்கிட்டு மொனங்கிக்கிட்டுப் போயி: ஒரு செடியடில் படுத்துக் கெடக்கு.
படுத்துக் கெடக்கயில், அங்கிட்டிருந்து ஒரு நரி ; என்னாண்ணே! வெத்தல – கித்தல பெருசா இருக்கே; என்னா விசேசம்ண்டு கேட்டுச்சு.
கேக்கவும், இந்த நரி! அதாண்ணே! அங்க ஒரு அண்ணே, கத்திரிக்காயும், கருவாடும் வெதக்கிறாரு. அவருகிட்டப் போயி; என்னா வெதக்கிறண்டு கேட்டே. கருவாடு வெதக்கிறேண்டு சொன்னாரு. அப்ப: வலத்து மாட்டக் கழத்திவிடு, அதுக்குப் பதிலா நா இழுக்குறேண்டு சொன்னே. கொஞ்ச நேரம் இழுத்தே. கருவாடு குடுத்தாரு. திண்டே! ஒரு பாக்கு வெத்தல குடுத்தாரு, செவக்கச் செவக்கப் போட்டுக்கிட்டு வந்து படுத்திருக்கேண்டு சொல்லுச்சு.
சொல்லவும், நானும் போறேண்ட்டு, புதுசா வந்த நரி போகுது. போயி: என்னாண்ணே வெதக்கிறண்டு கேட்டுச்சு. கேக்கவும், நம்ம என்னா பாடுபட்டு உழுதுகிட்டிருக்கோம். வக்காளி நரிக்கு மப்பப் பார்ராண்டு மனசில வச்சுக்கிட்டு, கருவாடும் கத்திரிக்காயும் வெதக்கிறேண்டு சொன்னா.
சொல்லவும், எடத்து மாட்டக் கழத்திவிடு, நா-ங் கொஞ்ச நேரங் கலப்பய இழுக்குறேண்டு சொல்லுச்சு. கழத்தி விட்டா, நரியப் பூட்னா. கலப்பய இழுத்துக்கிட்டே கருவாடத் தேடுது. ஒண்ணு கூடத் தட்டுப்படல. இருந்தாத்தான தட்டுப்படும். ரெண்டு சுத்துத் சுத்திச்சு. மூணாவது சுத்து, சுத்த முடியல. முக்குது. முக்கவும், கழத்தி விட்டு நாலு போடு போட்டா. போடவும், மொனங்கிக்கிட்டுப் போச்சு. போகயில, மொதல்ல அடிவாங்கின நரி, படுத்துக்கிட்டு; என்னாண்ணே, கருவாடு, வெத்தல எப்டிண்டு கேட்டுச்சு.
கேக்கவும், பரவாயில்லண்ட்டு, எனக்கென்னா! சொன்னவ் பழி குடுப்பர். எனக்கென்னா! சொன்னவ் பழி குடுப்பாண்டு சொல்லிக்கிட்டே காட்டுக்குள்ள ஓடிப் போச்சாம்.
– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், நகைசுவைக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசா பல்கலைக் கழகம், மதுரை.
தொடர்புள்ள சிறுகதைகள்
லார்ட் பெட்லிங்டனும் அப்புசாமியும்
ஜ.ரா.சுந்தரேசன்
August 19, 2026
வக்கணை
வீ.அய்யனார்
August 9, 2026
பங்கு – பாகம்
வீ.அய்யனார்
August 9, 2026