வாசமில்லா மலரிது; வசந்தத்தை தேடுது…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 3, 2026
பார்வையிட்டோர்: 18 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

நான் அவனை பார்த்திருக்கக் கூடாது. அப்படி பார்த்தது தான் என்னை இன்றும் வருத்திக் கொண்டிருக்கிறது. அவன் என்ன செய்வான் ?அவனைச் சொல்லி குற்றமில்லை! எல்லாம் காலத்தின் குற்றம்!!

இப்படி ஏங்கச் சொல்லி நான் என் நண்பனுடைய சகோதரனுக்கு வக்காலத்து வாங்கவில்லை. இருந்தாலும் நான் அவனை பார்த்து விட்டேனே! எப்படி பார்க்காமல் வர முடியும்! எதை சொல்வது; ஒன்றாக கோலி விளையாடியது; அப்படி விளையாடும்போது ‘பாந்தா’ என்று அழைக்கப்படும் விளையாட்டையும் விளையாடுவோம்; அப்படி விளையாடும் போது கோலி குண்டினை  சரியாக அடித்து குழியில் தள்ளினால்  நமக்கு அதிக வெற்றிகள் கிடைக்கும்; அந்த வெற்றிகள் நமக்கு ‘கோலி குண்டுகளாக’ கிடைக்கும். அப்படி நிறைய கோலி குண்டுகளை சேகரித்து, அழகு பார்த்துக் கொண்டு இருந்த எனக்கு ஒரு நாள் பெரிய அதிர்ச்சி! அவ்வளவு கோலி வில்லைகளையும் என்னுடைய அம்மா தலையை சுற்றி விளையாடிக் கொண்டிருந்த என் நண்பர்களிடம் வீசி எறிந்தாள்.

பிறகு தான் தெரிகிறது; அந்த விளையாட்டு கூட ஒரு வகையில் சூதாட்டம் என்பது. என்ன பணத்திற்கு பதிலாக கோலி குண்டுகளை சேர்ப்பது என்பதும் அவ்வகையை சேர்ந்து தானே!

‘அவ்வாறு சேர்ந்து வைத்தது தான் என் குற்றம். அன்று கண்டித்தாள்! என்னுடைய அம்மா’ – அந்த வகையில் ஞானம் அவளுக்கு.

ஒருமுறை ‘நானும் அவனும்’ பம்பரம் விளையாடிக் கொண்டிருந்தபோது அதை நாங்கள் சுழற்றி அடித்து. வேகமாக அந்த வட்ட சதுரத்தில் இருக்கும் மற்ற பம்பரங்களில்  மேலே அடிக்க வேண்டும். அப்படி அடிக்கும் போது என்னுடைய பம்பரம்  சிதறி அருகே உள்ள சாக்கடையில் விழுந்தது. அதை எப்படி எடுப்பது என்பது எனக்கு தெரியவில்லை.

வீட்டுக்கு போனால் ‘அடி விழும்’ என்று எனக்காக ஒரு கையில் என்னை பிடித்துக் கொண்டு, மறு கையில்  என் நண்பன் சகோதரன் அந்த சாக்கடையில் தன் கையை  விட்டு ஒரு ஐந்து நிமிடம் துலாவி  கடைசியில் எடுத்து விட்டான்.

எப்படியோ இதுவும் வீட்டிற்கு தெரிந்து விட்டது. திரும்பவும் பழைய கதி தான். இப்படியாக எங்களுடைய விளையாட்டானது மாறி, மாறி காலத்திற்கு ஏற்ப உருமாற்றம் பெறும். இப்படியாக எங்களுடைய காலங்கள் பல வண்ணங்களாக கழிந்தது.

நாங்கள் விளையாடிய சிறு, சிறு விளையாட்டுகள் தான் அவை. ஐஸ்பாய், கிட்டி பல்லு,  கபடி , ‘பட்டம்’ விடுவது .

‘பாதி படிப்பு; பாதி விளையாட்டு’, என விளையாடி பள்ளியின் இறுதி படிப்பான எஸ் எஸ் எல் சி வரை வந்து விட்டோம்.

முழு ஆண்டு விடுமுறையில் பட்டம் விடும் விழா வந்துவிடும். அதற்கு ‘மாஜ்ஜா’ போடுவது என்ன? அதை ‘டீல்’ விடுவது என்ன? பிறகு அது அறுத்துக் கொண்டு போவது என்ன? இப்படியாக பட்டத்திற்கு பின்னே ஓடிய காலங்கள் பல.. பல..

எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக நாங்கள் வளர்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து இதையெல்லாம் ஒதுக்கிவிட்டு கல்லூரி செல்லச் செல்ல கிரிக்கெட்டும் எங்களை சும்மா விடவில்லை.

அந்த வேளச்சேரியில் விளையாடிய விளையாட்டுக்கள். இன்றும் எங்கள் மனதில் பசுமையாக இருக்கிறது. அது எப்போது வற்றும் என்பது தான் எங்களுக்கு கவலை..(சமூக ஆர்வலர்கள் மன்னிக்க…)

மற்றபடி சென்னையில் வெள்ளம் வந்தால் வேளச்சேரி வெள்ளைக் காடாகும். தாங்கள் இருந்த ஆதம்பாக்கமும் 4 அடி மூழ்கி விடும். இப்படித்தான் எங்கள் வீடும் தீவுகளாக மாறும். 

எங்களுக்கு அப்போதெல்லாம் ‘தனிமை’ என்றாலே போரடிக்கும். நண்பர்கள் இருந்தால் தான் எங்களுக்கு பொழுதே போகும். அரட்டை அடிப்பது என்பது எங்களுக்கெல்லாம் கதை விடுவது போன்று .இதற்கென்று ஒரு கதை விடுபவன் எங்களிடம் இருப்பான். அவன் அப்போதைய P T  சுவாமி மற்றும் தமிழ்வானன் ஆகியவர்களின் கதைகளை படித்து வைத்துக் கொண்டு ‘சுரேஷ்’, ‘வசந்த்’ என்று பெயரை மாற்றி, மாற்றி பொய் சொல்லி எங்களை எல்லாம் வசப் படுத்துவான்.

இதையெல்லாம் நான் ஏன் சொல்கிறேன் என்றால் இதையெல்லாம் செய்தவன் நான் பார்த்த அவனே தான். 

இப்போது அவனுக்கு வயது 45 இருக்கும். நாங்கள் சென்னையில் இருந்து இடம் பெயர்ந்து கும்பகோணம் வந்து விட்டோம். 

பிறகு வேலை கல்யாணம் குழந்தைகள் என 20 வருடங்கள் ஓடிவிட்டன. ஒரு நண்பனின் சகோதரனை 20 வருடங்கள் கழித்து  சந்திக்கும் போது ஏற்படக்கூடிய அந்த ‘குதூகலம்’ என்னிடம் இருந்தது. 

ஆனால் அதை அவன் நிராகரிக்கவும் இல்லை; மாறாக முழுமையாக ஏற்றுக் கொண்டதாகவும் தெரியவில்லை. 

அதற்குக் காரணம் அவனை சுற்றி அப்போது ஐந்து, ஆறு ஆண்கள் மற்றும் பெண்கள் இருந்தனர். 

நான் சந்தித்தது தற்செயலாக ஒரு ஹோட்டலில்… 

“என்ன எப்படி இருக்க!” அருகே சென்று கை கொடுத்தேன். ‘கை கொடுக்கும் கை’ அன்று சற்று தயங்கியது. 

அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வீட்டில் அப்பா, அண்ணன் என விசாரித்தேன். 

எல்லோரும் ஒன்றாக கூடி இருந்ததால், எல்லோரும் என்னை பார்த்து புன்னகை செய்தார்கள். 

“எங்கே இப்படி! வீட்டுக்கு வரலாமா?” 

“அடுத்த முறை பார்ப்போம்! இப்போது எங்களுக்கு வேலை இருக்கிறது”. 

“நாங்கள் ஒரு விழிப்புணர்வுக்காக இங்கே வந்திருக்கிறோம்” . 

“அது முடிந்து இன்றே சென்னை செல்ல வேண்டும்”.. 

அவனுடைய நிலைமையை என்னால் சரியாக புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் புரிந்து கொள்வது போல் நடித்துக் கொண்டு விடைபெற்றேன். 

பிறகு தான் தெரிந்தது அந்த விழிப்புணர்வு என்பது லாரி ஓட்டுனர்கள், ரயில்வேயில் வேலை செய்யும் கூலி ஆட்கள் மற்றும் ஒரு NGO  ஏற்பாடு செய்திருந்த ஒரு விழிப்புணர்வு முகாம். 

இந்த செய்திகள் எல்லாம் அடுத்த நாள் பத்திரிக்கையில் வந்தது… 

நான் இங்கே அவன் என்று கூறியது என்னுடைய நண்பனின் தம்பி. 

இதை நான் என் நண்பனிடம் கூறவில்லை. 

சில உண்மைகளை மறைத்தால் தான் ‘நட்பு’ கூட ஒன்றாக இருக்கிறது. 

அவனுடைய கதை என்பது உண்மையிலேயே “உருமாற்றம்”  பெற்று அந்த ஒரு “மாற்றம்”  மூலமாக பல உருமாறிய நண்பர்கள் அன்று ஒன்று கூடினர்  என்பதை என்னால் யூகிக்க  முடிந்தது. 

அவனுடைய கதையும் frank Kafka எழுதிய metamorphosis போலத்தான் இருந்தது, என்பதை அடுத்த வாரம் வந்த ஒரு வார இதழில் வந்த பேட்டியின் மூலமாக தெரிந்து கொண்டேன்.

நண்பர்களே நாம் ‘இதயம்’ கொண்டு சிந்திப்போம். வாழும் காலம் எவ்வளவு என்பது யாருக்குத்தான் தெரியும். 

‘இரக்கம்’ இல்லாத குடும்பம் ஒரு ‘நரகம்’. 

இந்த பூமியில் குடும்பத்திற்கு உள்ளேயே நரகங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. 

பெற்ற தாயோ, வளர்த்த தந்தையோ, உடன் பிறந்த சகோதரனோ, சகோதரியோ கூட நம்மை “கரப்பான் பூச்சியாக” நினைத்து விடுவார்கள் – இந்த சமுதாயத்திற்காக. 

நாம் தான் சுதாரித்து கொண்டு வாழ வேண்டி இருக்கிறது.

என்ன செய்வது காலத்தை நொந்து கொள்வதா ?

ஒரு வகையில் இவர்களை நான் பாராட்ட வேண்டும். 

காலத்தை கடிந்து கொள்ளாமல், எதிர்த்து போராடாமல், அதன் போக்கில் சென்று தங்களை ஆசுவாசுவாசப்படுத்திக் கொள்ள அவர்கள் நினைப்பது எந்த வகையிலும் “தவறு இல்லை”  என்று நான் கருதுகிறேன்.

புரிந்தவர்கள் புரிந்து கொள்ளுங்கள்! புரியாதவர்கள் புரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்!.

 

ராமன் செல்வராஜ் கோவில் நகரம் குடத்தையில் வசித்து வரும் இவர் விலங்கியலில் முதுகலை பட்டமும், வெகுஜன தொடர்பு மற்றும் பத்திரிகை துறையில் முதுகலை பட்டமும் பெற்றவர். தற்சமயம் EXNORA, 'உலக தமிழர் அறக்கட்டளை' போன்ற அமைப்புகளில் தன் பங்கை ஆற்றி வருகிறார். இவரது இலக்கியத் தொடர்பு என்பது ஒரு கவிதை மூலமாக 'கவிநானூறு' என்கிற இணையதளத்தில் தொடங்கியது. தொடர்ந்து கட்டுரைகளும் வேறுசில தளங்களில் வெளியாகின. செப்டம்பர் -17- 2025 முதல் கல்கி குழுமத்துக்காக…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *