“ஆ” வில் ஐந்து

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 20, 2022
பார்வையிட்டோர்: 3,796 
 

“ஆ”

இது என்ன சத்தம் ஆண் குரல் போலும் இல்லை, பெண் குரலும் போல் இல்லை, அதுவும் இரவு பனிரெண்டு மணிக்கு மேல் !

அறைக்குள் படுத்திருந்தாலும் கதவு திறந்து வெளியே வர பயம். ஆனால் அந்த “ஆ” என்ற மயிர்க்கூச்செரியும் சத்தம், பக்கத்தில் படுத்திருந்த மனைவியை பார்த்தேன் ஹூஹூம் எந்த அயர்வுமில்லாமல் தூங்கிக்கொண்டிருந்தாள்.

சரி படுப்போம் பத்து நிமிடங்கள் கழிந்திருக்கும் மீண்டும் “ஆ”

சட்டென எழுந்தவன் மெல்ல அறையை விட்டு வெளியே வந்து மனைவியின் தூங்கிக்கொண்டிருக்கும் அறையை தாழ்ப்பாள் போட்டு விட்டு முன் அறைக்கு வந்து கதவை மெல்ல திறந்து சந்து வழியாக வெளியே பார்க்க “ஆ”

வீட்டு கதவின் முன்னால் ஒரு உருவம் நின்று கொண்டிருப்பது தெரிந்து சட்டென கதவை சாத்த முயற்சிக்கு முன் கதவு விறுக்கென திறக்கப்பட்டு வலுவான் ஒரு ஆணின் கை என் கழுத்தை இறுக்கியது சத்தம் “ஆ” என்று மட்டும் சத்தம் வெளியே வந்தது.

இனி அவ்வளவுதான் என் வாழ்க்கை முடிவுக்கு வந்து கை கால் ஓய்ந்து விழுகும்போது “ஆ”

இறுக்கி கொண்டிருந்தவன் பிடி தளர அப்படியே கீழே சரிந்தேன், அவன் மண்டையை பிடித்துக்கொண்டு இரத்தம் வழிவது அந்த மயக்கத்திலும் தெரிந்தது, கீழே விழுந்தான். அவனின் பின்னால் என் பக்கத்து வீட்டுக்காரர் ! அட!..இவர் எப்படி

அவர் என்னை மெல்ல எழுப்பி இப்ப ஒண்ணுமிலையே சார், ஆறுதல் படுத்தி கொண்டிருந்தார். அப்பொழுது, தட்..தட்..சத்தம் என் அறையில் இருந்து என் மனைவி ஞாபகம் வந்தது, “ஆ” கதவை தாழ்ப்பாள் போட்டிருந்தோமே, நல்ல வேளை, நினைக்கும்போதே பக்கத்து வீட்டுக்காரர் வேகமாக சென்று கதவை திறந்தார்.

ரொம்ப தேங்க்ஸ் சார் சரியான சமயத்துக்கு வந்தீங்க, மனைவி சொல்லி கொண்டே வெளியே வர நான் திகைத்தேன் எப்படி?

உள்ளிருந்து செல்லில் இருந்து நான்தான் போன் செய்தேன், பக்கத்து வீட்டுக்காரருக்கு,நல்ல வேளை உங்களை காப்பாற்றினார். நெகிழ்ச்சியுடன் அவரை பார்க்க….

“ஆ”…”ஆ” சத்தமிட்டுக்கொண்டே எழுந்தேன், மனைவி என்னை கிள்ளிக்கொண்டே இருந்தாள், எப்ப பாரு பன்னெண்டு மணி வரைக்கும் பேய் படம் பார்த்துட்டு தூங்கறது, அப்புறம் கனவு கண்டுட்டு “ஆ”ஆ ன்னு கத்தறது.இப்படி கிள்ளுனாத்தான் இராத்திரி தூக்கத்துல உளறதை நிறுத்துவீங்க.

நான் அவள் “கிள்ளிய இடத்தை தடவி விட்டுக்கொண்டிருந்தேன்.

“ஆ”

“ஆ” காலை பிடித்துக்கொண்டு நொண்டி ஆடினேன். என்னாச்சு, என்னாச்சு, கால்ல கல்லு விழுந்துடுச்சு, சொல்லிக்கொண்டே நொண்டினேன்.

என் மீது பரிதாப்ப்படுவதற்கு பதிலாக “ஒரு வேலை முழுசா செய்யறதுக்கு துப்பில்லை, இதுல கையில காலுல போட்டுகிட்டு என் உயிரை வாங்கறது.

“ஆ”..ஆ…. என் அரற்றலை தாங்காமல் வாங்க பக்கத்துல இருக்கற கிளினிக் போலாம்.

ஹலோ என்னாச்சு? டாகடர் எங்கள் குடும்ப நண்பர். ‘டாக்டர்’ என் கால்ல கல் விழுந்துடுச்சு வலியுடன் சொன்னேன்.

சாவகாசமாய் பார்த்தார் “அடடா சதையே வெளியே வந்துடுச்சே? இரத்தம் வேற நிறைய போயிருக்கும் போலிருக்கே, இருங்க ‘ஸ்டிச்’ பண்ணனுமா வேண்டாமான்னு பாக்கறேன்.

‘நத்திங்க் டு வொரி’ ‘ஸ்டிச்சிங்க்’ தேவையில்லே, மருந்து போட்டு கட்டிட்டேன், வலி இருந்தா மாத்திரை எழுதி தர்றேன் போட்டுங்குங்க..ஏதோ எழுதி மனைவியிடம் கொடுத்தார்.

பின் மனைவியிடம் கல் விழுந்துடுச்சு கல் விழுந்துடுச்சு அப்படீங்கறாரு, கல்லுகிட்ட இவருக்கு என்ன வேலை?

டாக்டர் எங்க வெட் கிரைண்டர்ல மாவை எடுத்துட்டு தண்ணியில ஊற வச்சுட்டு மெதுவா கழுவிக்கலாமுன்னு வெளியே வந்தேன். அதுக்குள்ள நான் கழுவறேன்னு அந்த கல்லை கழட்டி எடுத்தவரு அந்த இத்துணூண்டு கல்லை தூக்க முடியாம கால்ல போட்டுகிட்டு…

என்னம்மா நீங்க ஆம்பளைங்களை இப்படி எல்லாம் வேலை வாங்கலாமா?

சொல்லிக்கொண்டிருந்த டாக்டர் கோட்டில் இருந்து செல் போன் ஒலிக்க..

காதில் வைத்தவர் “சொல்லும்மா” அதற்கப்புறம். “சரிம்மா” “சரிம்மா” தலையாட்டிக்கொண்டிருந்தார்.

ஹி..ஹி..ஒண்ணுமில்லை கிளினிக் மூடிட்டு வரும்போது சந்தையில காய்கறிக வாங்கிட்டு வர சொல்றா என் சம்சாரம், சொல்லிக்கொண்டே இந்த பீஸை நர்ஸ்கிட்டே கொடுத்துடுங்க. பேப்பரில் ஏதோ எழுதி கொடுத்தார்.

“ஆ” அதிர்ச்சியாய் நின்றேன் “டாக்டர்” பீஸ் ஐநூறு போட்டிருக்கு

காய்கறிகள் விலை எல்லாம் கிர்ருன்னு ஏறிடுச்சே “ஏதோ ஞாபகத்தில் சொல்லிக்கொண்டே சென்றார்.

“ஆ”

“ஆ” வங்கியில் இருந்த அத்தனை பேரும் வாயை பிளந்து கொண்டு நின்றனர்.

ஒருத்தரும் இருந்த இடத்தை விட்டு அசையக்கூடாது. ஒரு அடி அசைஞ்சாலும் என் துப்பாக்கி அவங்க நெஞ்சை துளைச்சுடும்.

அவனின் கர்ண கடூரமான மிரட்டலில் அங்கிருந்த ஆறு ஊழியர்களுக் திகிலடித்து நின்றனர்.

கேசியர் உட்கார்ந்திருக்கும் அறைக்குள் நுழைந்தவன் “ம் குயிக் பணம் வச்சிருக்கற பீரோ சாவியை கொடு, சீக்கிரம், துப்பாக்கி முனையில் மிரட்டினான்.

கேசியர் துப்பாகியை முதன் முதலில் பார்க்கிறவர் “ஆ” என்று வாயை பிளந்து, அதை மூட முடியாமல் அவனுக்கு பதில் சொல்வதற்கு திணறினார்.

“சீக்கிரம் சொல்லு” சாவி எங்கே?

அவர் திணறலுடன் பக்கத்தில் இருந்த ஒரு அறையை காண்பிக்க..

‘ஏய்’ பொய் சொல்ல நினைச்ச உன்னை சுட்டுடுவேன், மிரட்டி கேசியரையும் எழுப்பி அவரின் முதுகில் துப்பாகியை வைத்து அழுத்திக்கொண்டு பக்கத்து அறைக்கு அழைத்து சென்றான்.

உள்ளே உட்கார்ந்திருந்த பெண் அதிகாரி கேசியரை முதலில் பார்த்தவர் பின்னால் துப்பாகியுடன் இவனை பார்த்ததும், சட்டென அவனுக்கும் பின்னால் கை காட்டி வேண்டாம் வேண்டாம் அவரை சுட்டுடாதீங்க என்றார்.

அந்த ஒரு நிமிடம் அவன் பின்னால் திரும்பி யார் என்று பார்க்க, சட்டென ஒரு அடி மண்டை மீது விழுக துப்பாக்கி பிடித்தவன் சுருண்டு விழுந்தான்.

அறையின் ஓரத்தில் மறைந்திருந்த இருவர் வெளியே வர கேசியர் திரு திருவென விழித்தார்.

என்ன கேசியர் சார் பயந்துட்டீங்களா? அங்க அவன் சத்தம் கேட்டவுடன் இங்கிருந்த இரண்டு பேர் அலர்ட்டாயிட்டாங்க.. எப்படியும் அவன் உள்ளே வந்துதான் ஆகணும், ரெடியாத்தான் இருந்தோம்..சொல்லிக்கொண்டே போனார்கள்..

கேசியரும் முன்னால் இருந்தவர்களும் “ஆ” என்று அவனை பார்த்த பொழுது திறந்த வாயை மூடுவதற்கு மூன்று மணி நேரம் ஆனது.

“ஆ”

இதுவரை சமதளத்தில் நடந்து வந்து கொண்டிருந்தவர்கள் திடீரென் அவர்களை ஒரு கம்பி தடுக்க அனவரும் அதில் உரசி நின்று பார்த்தால் !

“ஆ” வென வாயை திறந்து திகிலுடனும் ஆச்சர்யத்துடனும், பார்த்தனர்.கீழே படு பாதாளத்தில் ஆறு ஓடிக்கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டிருந்தனர்.

இங்கு பாருங்கள் இதுதான் உலகத்திலேயே மிகவும் ஆபத்தான இடம், இந்த மாதிரியான ஏற்பாடு இங்கு மட்டுமே உள்ளது.

இங்கிருந்து கொஞ்சம் தடுமாறி விழுந்தாலும் நம் உடம்பில் ஒரு துளி மிஞ்சுவதற்கு வழி இல்லை.

உண்மைதான் பார்த்துக்கொண்டிருந்த அத்தனைபேரும் அவர் சொல்வதை ஏற்றுக்கொண்டனர்.இப்பொழுது யாரும் அந்த ஓரத்தில் நிற்பதற்கு கூட அஞ்சி நின்றனர்.

எல்லோரும் அந்த கம்பியை விட்டு தள்ளி வந்து நின்று கொண்டனர். சுற்றுலா கைடு மட்டும் அதன் ஓரத்தில் நின்று கொண்டு எப்படி இருக்கிறது இந்த இடம்?

அப்பப்பா பயங்கரம் வாய் விட்டு சொல்லி திரும்பியவர்கள், மேற்கொண்டு அந்த “சுற்றுலா கைடின்” சத்தம் எதுவும் வராமல் இருக்க திரும்பி பார்த்தால்

“ஆ” அவரை காணவில்லை, அங்கிருந்தவர்கள் அனைவரும் ஐயோ என்று கத்தி கொண்டு ஓடிப்போய் பார்க்க “கைடை” காணவில்லை,அந்த குறுக்கு கம்பியையும் காணவில்லை..

“ஆ” மீண்டும் அனைவரிடமிருந்து கூவல் “இங்கிருந்த அந்த கிடு கிடு பள்ளம் எங்கே? திகைத்து போய் அந்த பள்ளம் இருந்த இடத்தை பார்க்க அது சம தளமாக இருந்தது.

“ஆ”….ஆ..ஆச்சர்யத்துடன் கூவினர் அனைவரும். எதிரில் அந்த கைடு நடந்து வந்து கொண்டிருந்தார்.

என்ன ஆச்சர்யமாகி விட்டீர்களா? இது விசேஷமாக 3டி மாடலில் உருவாக்கப்பட்டது. முதலில் நீங்கள் யோசித்திருக்க வேண்டும், எங்கும் சமதளமாய் இருக்கும் இடத்தில் திடீரென பெரும் பள்ளம் எப்படி ஏற்படும் என்று?

இருந்தாலும் உங்களை ஏமாற்றி வியக்க வைப்பதற்குத்தான் இந்த ஏற்பாடு.

அங்குள்ள அனைவரும் கைதட்டி ஏற்றுக்கொண்டனர்.

“ஆ”

“ஆ” வென வாயை பிளந்து கேட்டுக்கொண்டிருந்தேன், என் செல் போனை காதில் வைத்துக்கொண்டு..

அந்த பாதையில் போவோரும் வருவோரும் ஒரு மாதிரியாய் பார்த்துக்கொண்டு சென்றார்கள். அவர்கள் கிடக்கிறார்கள், இது மாதிரி அதிர்ஷ்டம் அவர்களுக்கு அடித்திருந்தால் தெரியும் காலையில் எழும்போதே எனக்கு பட்சி சொல்லியது, உனக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று. மனதுக்குள் பாராட்டிக்கொண்டேன்.

மீண்டும் என் செல் போன் கிண் கிணிக்க, இனிமையான பெண், சார் இன்னைக்கு காலையில் ஒன்பது மணிக்கு ஹோட்டல் கல்பனாவுக்கு வந்துடுங்க” குரலில் தேன் மழை சொட்டியது.

எனக்கு மலேசியா போவதற்கு இப்படி ஒரு வாய்ப்ப்பா?

அதுவும் காலையில் எட்டு மணிக்கு என் கைபேசி அழைப்பில் வந்தது. சார் உங்களை எங்கள் “டபாய்க்கும் குழு சார்பாக” ‘இலவசமாய் மலேசியாவுக்கு அனுப்பி வைப்பதற்கு தேர்ந்தெடுத்துள்ளோம். மேற்கொண்டு விவரங்களை மீண்டும் அறிவிக்கிறோம்.

காத்திருந்து இப்பொழுதுதான் ஹோட்டல் கல்பனாவுக்கு வர்ச்சொல்லி அழைத்திருக்கிறார்கள். போகவேண்டும்.

குளு குளுவென ஒரு அறையில் நானும் என்னைப்போல் பத்து பேரும் உட்கார வைக்கப்பட்டிருந்தோம். எங்களுக்கு முன்பாக அழகான (மிக குறைவான உடையில்) ஒரு பெண் மலேசியாவை பற்றி சொல்லிக்கொண்டிருந்தாள். எங்கள் குழு சார்பாக உங்களை அழைப்பதில் பெருமை கொள்வதாகவும், சொன்னாள்.

மலேசியாவுக்கு இலவசமாக அழைத்து சென்றாலும், அங்கு சில வசதிகள் செய்து தருவதற்கு மட்டும் சிறிய தொகை மட்டும் செலவிட வேண்டியதிருக்கும், அதுவும் நாங்கள் செய்து விடுவோம், இருந்தாலும், அதை கணக்கில் காட்ட சிரமம்

இருப்பதால் சிறிது தொகை கட்ட வேண்டும், குறைந்த பட்சம் ஐந்தாயிரம் தேவைப்படும்.

உட்கார்ந்திருந்த அனைவரும் யோசித்தனர். அந்த பெண் அழகாக சிரித்தாள். உடனே கட்ட சொல்லி உங்களை வற்புறுத்தவில்லை. நீங்கள் கட்டி பதிவு செய்து கொண்டீர்கள் என்றால் அடுத்த வாரமே உங்களை அனுப்பி வைக்க வசதியாய் இருக்கும்.

பத்து பேரும் ஒரு தீர்மானத்துடனும் ஐந்தாயிரம் புரட்ட எங்களுக்குள்

போட்டி போட்டுக்கொண்டோம்.(அந்த அழகிய பெண்ணுக்காகவும்)

பதிவு வேலைகள் ஜரூராக நடந்தன.

ஒரு வாரத்திற்கு மேல் ஆயிற்று இதுவரை எந்த பதிலும் இல்லை, ஒரு நாள் அந்த ஹோட்டலுக்கு சென்று (கொலை வெறியுடன்) விசாரித்தால்

“ஆ” அப்படி ஒரு குழுவே வரவில்லையாம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *