கான்சர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 24, 2026
பார்வையிட்டோர்: 47 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘சந்திரசேனா!’ 

இவன் எப்பிடி இஞ்சை வந்தான்? 

இவனை ஒன்பது மாதங்களாக பொலிஸ் தேடித்திரியுதே. அப்படி யிருந்தும் இவனால் எப்பிடி இஞ்சை வரமுடிஞ்சது? எவ்வளவு துணிச்சல் வேணும். 

பொலிஸ் நிலையத்துக்குப் பக்கத் திலைதான் மக்கள் வங்கித் தலைமை யகம். பட்டப்பகலில் பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள இடத்தில் இவன் நிற்கிறானே!. இவனுக்கு இங்கு என்ன வேலை? 

வங்கி பாதுகாப்பு உத்தியோகத்த ரோடை சிரித்துக் கதைத்துக் கொண்டிருக்கிறான். சந்திரசேனா. இவர்கள் இருவருக்கும்டையில் அப்படி என்ன தொடர்பு?. 

ஒருவேளை இந்தப் பாதுகாப்பு உத்தியோகத்தர் இவனுடைய உறவினராக இருக்கலாம் அல்லது இவனது நண்பனாக இருக்கலாம். அதைப்பற்றி நமக்கென்ன கவலை?. 

சுந்திரசேனா என்னைக் கண்டுவிட்டான். உடனே சிரித்தபடியே அவன் என்னை நோக்கி வந்துகொண்டிருக்கிறான். 

சந்திரசேனா தன்னைப்பற்றி எங்கள் அலுவலகத்தில் என்ன கதைக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள என்னிடம் வருகின்றானோ? அல்லது பண உதவி ஏதாவது கேட்க வருகின்றானோ?. 

சரி, எதுவாக இருந்தாலும் அவன் வந்தபிறகு தெரிந்து கொள்ளலாம்தானே. 

சந்திரசேனா எங்களது நிறுவனத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடைமையாற்றினான். இவன் துடிப்புள்ள, கடமையுணர்ச்சியுள்ள, எல்லோருடனும் இனிமையாகப்பழகும் சுபாவமுள்ளவனாகச் செயல்பட்டான். எல்லோரும் இவனைப் பாராட்டினார்கள். 

எங்கள் நிறுவனத்தின் தலைமை அலுவலகம், சாலையின் கிழக்குப்பக்கமாக அமைந்துள்ளது. நிறுவனத் தலைவரின் அலுவலகத்தின் அருகாமையில் பொதுமுகாமையாளரின் பணியகம், அதற்குப் பக்கத்தில் ஆய்வு, வினியோகப் பிரிவுகள். இவற்றை அண்டி களஞ்சியப்பிரிவு. 

சாலைக்கு மேற்கேயுள்ள கட்டடத்தொகுதியில் நிதிப்பிரிவு, வினியோகப் பிரிவு, இயக்கப்பிரிவு பொறியியல் பிரிவு, விளம்பரப்பிரிவு. 

எமது நிறுவனத்தில் இருநூற்றியெழுபது ஊழியர்கள் வேலைபார்கின்றனர். இவ்வளவு பாரிய நிறுவனத்திற்கு இரண்டேயிரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மாத்திரம்தான் சேவையாற்றுகின்றார்கள். 

தினசரி நுாற்றுக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வந்து போகின்றார்கள். தினசரி பல்லாயிரம் ரூபா புரளுகின்றது. பல லட்சம் ரூபா பெறுமதியான கச்சாப் படச்சுருள்களும், பல லட்சம் ரூபா பெறுமதியான திரைப்படச்சுருள் களும் இங்கு களஞ்சியப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்தப் பணியகத்தின் பாதுகாப்பு முக்கியம் வாய்ந்தது. பாதுகாப்பைப் பலப்படுத்த மேலும் இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களை உள்வாங்குவதற்காக செய்திப் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்பட்டது. 

இருநூறுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தன. பாதுகாப்பு உத்தியோகத் தர்களாய் இருவர் தெரிவு செய்யப்பட்டனர். இந்த இருவரில் சந்திரசேனா ஒருவர். 

இப்போ நான்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள். நால்வரில் சந்திரசேனாவும் மற்றொருவரும் தலைமை அலுவலகத்தில் கடமையாற்றுகின்றனர். மற்றைய இருவரும் சாலையின் மேற்குப்புறத்தில் கடைமையாற்றுகின்றனர். 

சந்திரசேனாவுக்கு இரவு வேலை, அடுத்தவாரம் பகல். 

குறுகிய காலத்தில் மூன்று பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் சந்திரசேனாவுக்கு மடக்கம். அதுமாத்திரமல்ல சில உத்தியோகத்தர்களும் அவனுக்கு கடும் மரியாதை. இதற்கு காரணம் அவனுக்கு மேலிடத்திலுள்ள செல்வாக்கு மாத்திரமல்ல அவனுக்கிருந்த பணபலமும்தான். 

ஏந்த நேரமும் அவன் கையில் ‘கோல்ட் லீவ் சிகரட் பைக்கற்”. சில நிர்வாக உத்தியோகத்தர்களும் அடிக்கடி அவனிடம் சிகரட் வாங்கிப் புகைப்பார்கள். 

கடமை முடிந்து மாலையானதும் அப்பிரதேசத்திலுள்ள பிரபலமான மதுச்சாலையில் அவனைக்காணலாம். அவனுடன் ஒருசில சக உத்தியோகத்தர்களையும் காணலாம். 

குறுகிய காலத்தில் எமது நிறுவனத்தில் அவனுக்குப் பெரும் செல்வாக்கு. 

“காலை ஒன்பது மணிக்கு மினிஸ்ரரை சந்தித்தேன். அவரது சிபார்சுக் கடிதம் என்கையில். பத்து மணிக்கு நேர்முகப்பரீட்சை. பதினொரு மணிக்கு என்கையில் நியமனக் கடிதம்’. 

போதை தலைக்கேறும்போது அவன் தனது சகாக்களுக்கு பெருமையுடன் கூறுவான். 

காலப்போக்கில் சந்திரசேனாவின் நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் ஏற்படுகிறது. அவனது நடை உடை பாவனையில் பாரிய மாற்றம். கடைமையில் இல்லாத வேளைகளில் காலையில் ஒரு உடை மாலையில் வேறு உடை. இரவு வேளைகளில் இன்னொரு உடை. எல்லாம் விலையுயர்ந்த உடைகள். 

வேலையில்லாத வேளைகளில் அவனைக் களஞ்சியப்பிரிவில் காணலாம். இப்பிரிவில் மூவர் கடைமையாற்றுகின்றனர். களஞ்சிய முகாமையாளரும் இரு சிற்றூழியர்களும் பணியாற்றுகின்றனர். 

களஞ்சியத்தில் நான்கு பிரிவுகள். ஒரு பிரிவில் திரைப்படம் காட்டும் “புறஜெக்ரர்”, சுருளின் உதிரிப்பாகங்கள், அதற்குப் பாவிக்கப்படும் கார்பன் குச்சிகள் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றை வெளிச் சந்தையில் கொளவனவு செய்யமுடியாது. அடுத்த பகுதியில் திரைப்படம் தயரிப்பதற்கான கச்சாப் படச்சுருள்கள் விற்கப்படுகின்றன. மற்றொரு பகுதியில் தயாரிக்கப்பட்ட புதிய படப்பெட்டிகள். அடுத்து படமாளிகைகளில் திரையிடப்பட்ட பின்னர் திருப்பிப் பெறப்பட்ட படச் சுருள்கள். 

களஞ்சியம்தான் இந்த நிறுவனத்தின் இதயம். இங்குதான் திரைப்படத் தயாரிப்பாளர்களும், திரைப்படம் திரையிடும் படமாளிகைகளின் உரிமை யாளர்களும் தினசரி வந்து போவார்கள். இங்குதான் படமாளிகைகளின் உரிமையாளர்களுடன் சந்திரசேனாவுக்கு நெருக்கமான உறவு ஏற்படுகிறது 

எந்தெந்தப் படமாளிகைகளுக்கு எந்தெந்தப் படங்கள் வழங்குவதென்று மூவர் கொண்ட குழு வைத்து ஏ, பீ, சீ என்ற அடிப்படையில் படங்களை ஒதுக்கீடு செய்து ஒரு பட்டியலைத்தயாரித்து திரைப்பட வினியோகஸ்தருக்கு வழங்கும். இந்தப் பட்டியலின் அடிப்படையில் வினியோக உத்தியோகத்தர் படங்களை படமாளிகை உரிமையாளர்களுக்கு விநியோகிப்பார். 

சந்திரசேனா விநியோக உத்தியோகத்தருடன் நல்ல ஒட்டு திரைப்பட ஒதுக்கீட்டுப் பட்டியலை சந்திரசேனா தந்திரமாகப் பார்த்துவிடுவான். எந்தெந்தப் படமாளிகைக்கு முதலாம், இரண்டாம், மூன்றாம்தர படங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்பதைத் தெரிந்து கொள்வான். 

திரைப்படப் பெட்டிகளைப் பெற்றுக்கொள்வதற்காக படமாளிகை உரிமை யாளர்கள் திரைப்பட நிறுவனத்திற்கு வருவார்கள். அவர்களை ஒவ்வொரு வராக பக்கத்திலுள்ள அரச திணைக்கள சிற்றுண்டிச் சாலைக்கு அழைத்துச் சென்று பேச்சு நடத்துவான். 

உனது படமாளிகைக்கு கூடிய வசூல் கிடைக்கக்கூடிய படம் தேவை யென்றால், நான் படவிநியோகத்தரிடம் கூறி படத்தைப் பெற்றுத்தரு வேன். அதற்கு வினியோகத்தருக்கு எவ்வளவு தொகைப் பணம் கொடுக்க வேண்டும் எனப் பேரம் பேசி ஆயிரக்கணக்கில் பணத்தைப் பெற்றுவிடுவான். இப்பேரம்பேச்சில் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை சந்திரசேனா சுருட்டிக்கொள்வான். 

ஊரில் சந்திரசேனா ஏழு வருடங்களாக ஒரு பெண்ணைக் காதலித்து வந்தான். இப்போ அப்பெண் ஆசிரியை. அவனுக்கு இப்போ வேறொரு பெண்ணுடன் பதிவுத்திருமணம் நடந்துவிட்டது. திரைப்பட நிறுவனத்தில் அவன் உயர் பதவியிலுள்ளான் என்று கூறி பெருமளவு சீதனத்துடன் பதிவுத்திருமணம் செய்து கொண்டான். 

சுந்திரசேனா வேறொரு பெண்ணைப் பதிவுத்திருமணம் செய்து கொண்டான் என்பதை அறிந்துகொண்ட அவனுடைய முன்னாள் காதலி நிறுவனத்திற்கு வந்து அழுது புலம்பி அட்டகாசம் செய்கின்றாள். 

மடைச்சி! இவ்வளவு காலமும் உன்னை உயிருக்கு உயிராய் காதலிச்ச நான் உன்னைக் கைவிடுவனெண்டு நினைக்கிறியா?” 

“நீ வேறொரு பெண்ணைக் கலியாணம் கட்டிட்டியே?’ 

“நான் அவளை விரும்பியா கட்டினன்?” 

“அப்போ?” வியப்புடன் அவனைக் கேட்கின்றாள். 

“என்ரை அப்பாதான் நான் ஒரு பெரிய அதிகாரியெண்டு பெண்ணையும் அவளுடைய வீட்டாரையும் ஏமாத்தி கொழுத்த சீதனத்துக்காக கட்டி வைத்தவை”. 

“அப்போ நீ இந்த சிக்கலிலை இருந்து எப்படி விடுபடப் போகிறாய்?” 

“நீ இருந்து பார் அவையாய் ‘டைவேஸ்’ கேப்பினம்”. 

“எப்பிடி?”. 

“நான் இந்த நிறுவனத்தில ஒரு பெரிய அதிகாரி எண்டுதான் நினைச்சுக் கொண்டிருக்கின. நான் ஒரு சிற்றூாழியன் எண்டு தெரிய வந்ததும் அவையாய் ‘டைவேஸ்’ எடுப்பினை. நீயும் நானும் கெதியிலை கல்யாணம் கட்டி சந்தோசமாய் குடும்பம் நடத்தத்தான் போறம்”. 

தனது காதலியை தேற்றி சிறிது பணமும் கொடுத்து அவளை அனுப்பி வைக்கிறான். 

தென்னிலங்கையின் கிராமங்களிலுள்ள சில உள்ளுர் படமாளிகைகளில் இரண்டு மூன்று மாதங்களில் பூர்த்தி செய்யப்பட்ட புதிய படங்கள் திரையிடப்படுகின்றன என்பது சில திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு தெரியவருகிறது. 

இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னரே தயாரிக்கப்பட்ட, தமது படங்களைத் திரையிடுவதற்காக ‘கியூ’ வரிசையில் காத்திருக்கும்பொழுது இரண்டு மூன்று மாதங்களில் பூர்த்தி செய்யப்பட்ட படங்களைத் திரையிடு வதற்கு திரைப்பட நிறுவனம் எவ்வாறு அனுமதி கொடுக்கமுடியுமென்று தயாரிப்பாளர்கள் போர்க்கொடி துாக்கினர். 

திகைப்படைந்த நிறுவனத்தலைமை உடனடியாக விசாரணையைத் தொடங்கியதுடன், பொலிஸிலும் முறைப்பாடு செய்தது. 

நிறுவனத்தின் உள்ளக விசாரணையும், பொலிஸ் விசாரணையும் ஆரம்பித்ததும் சந்திரசேனா தலைமறைவாகிவிட்டான். 

பொலிஸ் விசாரணை தீவிரமடைகின்றது. விசாரணையை தீவிரமாக நடாத்திக் கொண்டிருக்கும் உயர் பொலிஸ் அதிகாரி திடீரென இடமாற்றம் செய்யப்படுகின்றார். உயர் மட்டத்திலிருந்து வந்த கடுமையான அழுத்தம் காரணமாகத்தான் இந்த இடமாற்றம் செய்யப்பட்டது. 

திருட்டு, மோசடி சம்பந்தமான விசாரணை கிடப்பில் போடப்பட்டுவிட்டது. 

ஒன்பது மாதங்களாக தென்னிலங்கை காடுகளில் தலைமறைவாக இருந்த சந்திரசேனா, மக்கள் வங்கியின் பாதுகாப்பு உத்தியோகத்தராகக் கடைமையாற்றுகின்றான். 

சுந்திரசேனாவின் நெருங்கிய உறவினர் பெரும் செல்வாக்குடைய அமைச்சர், தர்மிஷ்ட அரசாங்கத்தில்.

– பாஞ்சான் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூன் 2016, இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம், இலங்கை.

நீர்வை பொன்னையன் (மார்ச் 24, 1930 - மார்ச் 26, 2020) ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, நாட்டார் கதை, இலக்கியக் கட்டுரைகள் எனப் பல எழுதியவர். ஐம்பது ஆண்டுகளாக இடதுசாரி அரசியலில் உறுதியாக நின்றவர். தனது கடைசிக் காலம் வரை எழுதிக் கொண்டிருந்தவர். வாழ்க்கைக் குறிப்பு யாழ்ப்பாணம் நீர்வேலியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் தொடக்கக் கல்வி கற்று பின்னர் 1951…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *