ஒளவையாரும் ஆராய்ச்சியாளர்களும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 3, 2026
பார்வையிட்டோர்: 12 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒருநாள் ஔவையார் ஓர் ஊர் வழியே சென்று» கொண்டிருந்தார். ஓரிடத்தில் பலபேர் உரையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசிக்கொள்வது எதைக் குறித்து என்று ஔவையார் சற்று நின்று உற்றுக்கேட்டார். அவர்கள் பேசிக்கொண்ட செய்தி சாதியைப் பற்றியது என்று தெரிந்தது. ஒருவர், “இவ் வுலகத்தில் நூற்றுக்கணக்கான சாதிகள் இருக் கின் றன,” என்றார். வேறொருவர், “ஆயிரக்கணக்கில் இருக்கின்றன,” என்றார். வேறொருவர், “தாழ்ந்த சாதியில் நூற்றைம்பதும் உயர்ந்த சாதியில் நூற்றைம் பதுமாக எல்லாச் சாதிகளையும் முந்நூறில் அடக்கி விடலாம்,” என்றார். 

ஒளவையாருக்கு இதற்குமேல் பொறுக்க முடிய வில்லை. அவர் அவர்களை நெருங்கி, “ஓ அன்பர்களே ! நீங்கள் பேசிக்கொள்வது முழுத் தவறு. இவ்வுலகத்தில் இரண்டே இரண்டு சாதிகள் தாம் இருக்கின்றன. ஏற்போர்க்கு அறஞ் செய்பவர்கள் உயர்ந்த சாதி, செய்யாதவர்கள் தாழ்ந்த சாதி. இந்த இரண்டு சாதி களைத் தவிர மற்றைச் சாதிகளெல்லாம் பொய்யானவை. அறநூல்களும் இவ்வாறுதான் உரைக்கின்றன. இதனை நீங்கள் இனிமேலாயினும் உணர்ந்து கொள்ளுங்கள்,” என்று கூறிச் சாதியிரண்டொழிய என்னும் பாட்டையும் பாடிவிட்டுச் சென்றார். 

இதனைக் கேட்டவர்கள் யாதும் மறுமொழி கூற முடியாமல் பேசாதிருந்தனர். அவர்கட்கு அவர்களுடைய சொற்போர் மிகுந்த நாணத்தைக் கொடுத்தது. அது முதல் அவர்கள் தங்களுடைய மனப்போக்கை மாற்றிக் கொண்டனர். 

“சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி.” 

(உரை.) சாற்றுங்கால் – சொல்லுமிடத்தில், மேதினியில் இந்த உலகத்தில், சாதி இரண்டு ஒழிய வேறு இல்லை-இரண்டு சாதிகளைத் தவிர வேறு சாதிகள் இல்லை. (அந்த இரண்டு சாதிகள் எவை யென்றால் ) நீதி வழுவா நெறிமுறையில்-நீதி தவறாத நல்ல வழியி லே முறைமையோடு, இட்டார் பெரி யோர் – இரவலர்க்குப் பொருள் முதலியவற்றைக் கொடுப் பவர்கள் உயர்ந்தவர்கள், இடாதார் இழிகுலத்தோர்- இரந்தவர் கட்கு யாதுங் கொடாதவர்கள் தாழ்த்த குலத்தினர், பட் டாங்கில் உள்ளபடி – அறநூலின் முடிபு இதுவேயாம். 

(கருத்து.) இரந்தவர்களுக்குப் பொருள் முதலியன கொடுப்பவர் உயர்ந்தவர்கள்; கொடாதவர்கள் தாழ்ந்தவர்கள். ஆக உலகில் இவ் இரு சாதிகளைத் தவிர வேறு இல்லை. 

– நல்வழி விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1956, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *