உறங்கும் போதும் கற்கிறேன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: July 17, 2026
பார்வையிட்டோர்: 16 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

உச்சி வெய்யில் மண்டையை பிளக்கும் அளவுக்கு அடித்துக் கொண்டு இருந்தது. நெடுஞ்சாலையில் போகும் வாகனங்கள் உள்ளே குளிர்சாதனம் வேலைசெய்தாலும், வெளியே பார்த்த போது, தொலைவில் கானல் நீர் அலை அலையாக தெரிந்தது.

நாசரும், லாசரும் ஒரு மகிழ்வுந்துவின் பின் இருக்கையில் இருந்தனர். ஓட்டுனருக்கு அருகில் இருக்கும் இருக்கையில் யாரும் இல்லை. ஓட்டுநர் வண்டியை சீரான வேகத்தில் ஓட்டிக்கொண்டே இருந்தார்.

சாலை காலியாகத் தானே இருக்கு. கொஞ்சம் வேகமா போகலாமே அண்ணா, என்று கேட்டான் நாசர்.

அவருக்குத் தெரியாதா? நீ இப்ப சீக்கிரம் போய், அவசரமா செய்ய வேண்டிய வேலை எதுவும் இருக்குமா என்ன? மெதுவாகவே போகலாம், என்றான் லாசர்.

ஓட்டுநர் சொன்னார். சார். இந்த மாதிரி வெய்யில் அதிகமா இருக்கும் போது சாலையும் சூடா இருக்கும். நாம போற வேகத்தால டயர் நல்லா சூடாகி இருக்கும். சில சமயம் உராய்வு ஏற்பட்டால், டயர் வெடிக்க வாய்ப்பு உள்ளது. நான் சவுதியில் வேலை செய்த பொழுது கற்றுக்கொண்ட ஒரு சில பாடங்களில் இதுவும் ஒன்று என்றார்.

அண்ணா, நீங்க சவுதியில் எங்க இருந்திங்க. என்ன வேலை செஞ்சீங்க? என்று கேட்டான் நாசர்.

அஞ்சு வருஷம். ஜேட்டா நகரத்தில் ஓட்டுனரா வேலை பார்த்தேன். நெடுந்தூர பாலைவனத்து சாலைகளில் 200 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் வண்டிகள் விபத்தில் சிக்கினால் உயிர் பிழைப்பது அரிது. அங்கே, சாலை வசதிகள் மிகவும் நன்றாக இருக்கும் போதே, நிலை அப்படி. நம் ஊர் சாலைகள் தரம் குறைவாக இருப்பதால், “மித வேகம் மிக்க நன்று” என்பதே சரி என்றார் ஓட்டுநர்.

நீங்கள் சவுதியில் வண்டி ஒட்டியதற்கும், இங்கே வண்டி ஓட்டுவதற்கு உள்ள வித்தியாசம் என்ன அண்ணா? என்று கேட்டான் லாசர்.

நான் வெளிநாட்டிற்கு போகும் முன்பே இங்கே ஓட்டுநர் வேலை தான் பார்த்தேன். அப்போது சாலைகள் அகலம் குறைவாக இருந்தது. ஆனால், இருபுறமும் நல்ல நிழல் தரும் மரங்கள் இருக்கும். அவற்றினூடே வண்டி ஓட்டுவது மனதிற்கு மகிழ்ச்சியை தரும்.

ஆனால் இப்போது சாலை விரிவாக்கம் செய்வதால், மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு சாலைகள் அகலமாக இருக்கிறது. ஒரு ஜீவன் இல்லாத

உலகத்தில் சஞ்சாரம் செய்வது போல் இருக்கு. இதையே, ஒரு கவிஞர் சொன்னார், “நெடுஞ்சாலைக் கொன்ற மரங்கள்”, என்று.

மரம் போனா நிழல் மட்டும் போகல. மனசோட குளிர்ச்சியும் போச்சு.

அவ்வாறு அவர் சொல்லும் போது, ஓட்டுனருடைய கண்கள் பணித்திருந்தது. வண்டியை ஓரம் கட்டி நிறுத்தினார். கண்கள் கலங்கி விட்டதால், பாதை மறைக்கிறது. சற்று ஓய்வெடுத்து விட்டு போகலாம் என்றார். அப்படியே சாய்த்து படுத்தவர். உடனே உறங்கிவிட்டார்.

அப்போது, நாசர் கேட்டான். என்னடா, இவர் இப்படி அடிச்சிப் போட்ட மாதிரி தூங்குறார்?

லாசர் சொன்னான். இதைத்தான் திருவள்ளுவர் சொன்னார்.

“உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு”.

குறளை சொன்னா மட்டும் போதுமா,விளக்கமும் சொல்லுப்பா?

அதாவது, உறக்கம், தூக்கம். இரண்டுக்கும் இருக்கும் வேறுபாடு, சாதாரண தூக்கம், ஆழ்ந்த தூக்கம். இந்த சாதாரண தூக்கம் வழக்கமாக நடப்பது. ஆனால் ஆழ்ந்த தூக்கம் என்பது உறக்கம். இதில் கனவு வரும். இதைத் தான், வள்ளுவர், ஒருவன் செயலில்லாமல் தூங்குவதைப் போன்றது சாக்காடு; அவன் மீண்டும் உறக்கத்திலிருந்து விழித்துக் கொள்வது போல்வதே பிறப்பு. அதாவது, தூக்கம் = தற்காலிக சாவு. விழிப்பு = மறுபிறப்பு, என்றான் லாசர்.

ஆமாம்பா, திருக்குர்ஆன் கூட தூக்கத்தை மனித உடலுக்குத் தேவையான ஒரு பெரும் அருளாகவும், களைப்பை நீக்கும் ஓய்வாகவும் விவரிக்கிறது. அதில் நபிகள் சொல்றாங்க,

“உங்கள் உறக்கத்தை (தூக்கத்தை) ஓய்வாகவும் ஆக்கினோம்.” (அல்குர்ஆன் 78:9)

அதாவது, இஸ்லாமிய பார்வையில், உறக்கம் என்பது விழிப்புணர்வு இல்லாத தற்காலிக ஆன்மீக நிலை, அதாவது ‘தற்காலிக மரணம்’ (Wafat) ஆகும். தூக்கத்தின் போது உடலை விட்டு உயிர் பிரியாது என்றாலும், ஆன்மா தற்காலிகமாகப் படைத்தவனிடம் உயர்த்தப்படுகிறது.

இப்படி இறைவன் சொன்ன கருத்தை, வள்ளுவர் சொல்லி இருக்கிறார் இல்ல, என்றான் நாசர்.

இதையே தான், பைபிளின் படி, ‘உறக்கம்’ (Sleep) என்பது உடலின் இயல்பான ஓய்வுக்கான நிலையாகவும், ‘தூக்கம்’ என்பது மன அமைதியுடன் கூடிய ஆவிக்குரிய இளைப்பாறுதலாகவும் பார்க்கப்படுகின்றன. உறக்கம் உடல் தேய்மானத்தைப் போக்கத் தரப்படும் ஒரு பரிசு, ஆனால் தூக்கம் என்பது கடவுளின் மீது கொள்ளும் அசைக்க முடியாத நம்பிக்கையின் வெளிப்பாடு, என்றான் லாசர்.

அப்போது விழித்த ஓட்டுநர், இதையே, மகாபாரதக் கதையில் பாண்டவர்களின் மூத்தவனான தர்மனிடம் “உறங்கும் போதும் கண்கள் மூடாத உயிரினம் எது?” என்று ஒரு கேள்வியை வைக்க அதற்கு, “மீன்” என்று பதில் சொல்லி அசத்துவான் தர்மன், என்றார்.

அண்ணா, நீங்க தூங்கி கிட்டு தானே இருந்தீங்க, நாங்க பேசுறத எப்படி சொல்றீங்க. என்று கேட்டனர்.

நான் உறங்கும் போதும் கற்கிறேன், என்றார் ஓட்டுநர். அது எப்படின்னே?

அதாவது, தூக்கம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் தேவை. தூங்கும்போதும் இதயம் துடிப்பது, மூச்சு விடுவது, உணவுப் பாதையில் உணவு செரிப்பது, ஹார்மோன்கள் சுரப்பது ஆகிய அனைத்தும் நடந்து கொண்டேதான் இருக்கும்.

மூளையைப் பொறுத்து வரை சில இயக்கங்கள் செயல்படும். சில செயல்படாது.

மூளை நரம்புகளைப் புதுப்பித்தல், தூங்கும் நேரத்தில் நடக்கும்.

தூங்கும்போது மட்டும் சுரக்கும் ஹார்மோன்கள் உண்டு.

தூக்கத்தின் தொடக்க நிலையான “ரெம்”, தூக்கநிலையில் மூளை நன்கு செயல்படும். கனவுகளும் அப்போது வரும். அப்போது நாம் கற்றுக் கொள்ள நிறைய கிடைக்கும்.

ரெம் நிலை, ரெம் அல்லாத நிலை என்று தூக்கம் மாறி மாறி இருக்கும். மொத்தத்தில் தூக்கத்திலும் நம் உடல் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

தூக்கம் இல்லையென்றால் நம் உடலின் அனைத்து உறுப்புக்களிளும் செயற்படும் தன்மை குறையும், என்றார் ஓட்டுநர்.

அண்ணே, அசத்துறீங்களே..! நீங்க உண்மையிலேயே ஓட்டுநர் மட்டும் தானா? இல்ல….

தம்பி. நான் ஒரு பட்டதாரி. வீட்டு நிலைமையால் வெளிநாட்டுக்கு வேலைக்குப் போனேன். என் இளமைக் காலம் அங்கே கழிந்து விட்டது. நான் திரும்பி வந்த போது, வயதின் காரணமாக, அரசு வேலைக்கான வாய்ப்புகள் இல்லாமல் போனது. எனக்குத் தெரிந்த ஓட்டுநர் வேலையை திறம்பட செய்து வருகிறேன். இந்த ஒரு வேலையில் மட்டுமே, தூங்கும் போது கற்க நிறய இருக்கு, என்றார் ஓட்டுநர்.

என்னன்னே சொல்றீங்க.

ஆமாம் தம்பி. நீங்க உங்க வேலையில், ஒரே மாதிரியான நபர்களையே, நீங்க தினமும் பார்த்துக்கொண்டே இருப்பீர்கள். ஆனால், இந்த ஓட்டுநர் வேலையில், தினமும், பலவகையான மனிதர்கள்.நல்லவர்கள், கெட்டவர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள், பாமரர்கள், காசு இருந்தும்

கஞ்சனாக இருப்பவர்கள், காசு இல்லாவிட்டாலும் தயாள குணம் உடையவர்கள், இப்படி பயணிகள் பல விதம்.

அவர்கள், நான் தூங்கி விட்டதாக நினைத்து அவர்கள் பேசும்போது, சில வெளியே சொல்லக் கூடாத செய்திகளை பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். அதே சமயம் என் கண்கள் உறங்கிக் கொண்டு தான் இருக்கும். ஒரு சில வேஷதாரிகளின் நயவஞ்சக செயல்களை நடைபெறாமல் தடுத்தும் இருக்கிறேன். ஒரு சிலர் போலீசாரிடம் மாட்டிக்கொள்ளவும் செய்திருக்கிறேன், என்றார் ஓட்டுநர்.

அண்ணே..! நீங்க, ரொம்ப டர்..ர் ..ர் ..ரா … இருப்பீங்க போல, என்றனர் இருவரும்.

நீங்க நல்லவங்க தானே! ஏன் பயப்படுறீங்க. உட்காருங்க. போகலாம் என்றார்.

ஒரே ஒரு லாஸ்ட் கேள்வி.! அது எப்படிண்ணே! தூங்கும்போதே உங்களால, “கேக்க அதாவது கற்க” முடியுது.

கொஞ்சம் சொல்லுங்கண்ணே! … மண்டை காயுது.

தம்பிகளா..!

நாம் தினசரி பயன்படுத்தும் கைபேசி, கணினி போன்ற கருவிகளின் பயன்பாடு பற்றி நமக்கு ஓரளவேனும் தெரியும் இல்லையா?

“இப்ப நீங்க உங்க கைபேசியை உபயோகிக்கல, ஆனா, ஒரு பொருளை வாங்குவது பற்றி பேசிக்கிறீங்க..!” நீங்க அடுத்த முறை கைபேசியை திறந்தவுடன் என்ன வரும்?

அந்த பொருளைப் பற்றிய விளம்பரங்கள், அமேசான் தளத்திலிருந்து ஆஃப்ரிக்க காடுகள் வரை வந்துகிட்டே இருக்கும்.

இப்ப நீங்க பேசுனத, அவங்க எப்படி தெரிஞ்சுக்கிட்டாங்க?

அது தெரியலையே.!

இப்ப நீங்க இங்கிருந்து பேசுறத, வெளியூர்ல இருக்குறவங்க எப்படி கேக்குறாங்க?

அது என்னாண்ணே..!, “போன்ல, மைக் இருக்கு, ஸ்பீக்கர் இருக்கு. மைக் நாம் பேசுறத ரெகார்ட் பன்னி அங்க அனுப்புது. அங்க போய், ஸ்பீக்கர் மூலம் சொல்லிடும்”. அதையே தான் அங்கிருந்து இங்கேயும் செய்யுது. இதுல என்ன இருக்கு.

அதுல தான் இருக்கு.

மைக் என்ன செய்யும்?

மைக் நாம் பேசுறத ரெகார்ட் பன்னி அங்க அனுப்புது. அங்க போய், ஸ்பீக்கர் மூலம் சொல்லிடும்.

இதே வேலையை தான், நீங்க போன் யூஸ் பண்ணாத போதும், இந்த மைக் செல் போன் கம்பெனி காரனுக்கு செய்யுது. நாம பேசுற எல்லா ரகசியங்களும், போன் பக்கத்தில் இருந்தால், அது அமைதியா பதிவு பன்னி அனுப்பி கிட்டே இருக்கும். அவன் தேவையானதை எடுத்து வேனுங்கிறவனுக்கு அனுப்புறான், அதாவது வித்துடுவான். உங்க அந்தரங்க விஷயங்கள் கூட அவனுக்குத் தெரியும். ஆனால், அதை வித்தால், விளைவுகள் கடுமையா இருக்கும் என்பதால், இன்னும் செய்ய வில்லை. ஆனால், அவையும், ரகசியத்துக்கு உட்பட்டது இல்லை. என்னைக்கு வெளியே வரும். யார் மூலம் வரும் என்று தெரியாது, என்றார் ஓட்டுநர்.

அப்படின்னா, அதே டெக்நிக் தானா..!

ஆமாம்பா தம்பிகளா..! நான் உறங்கும் போதும் கண்கள் மூடாத “மீன்”…!

போவலாமா?

எங்கண்ணா? …. மாமியார் வீட்டுக்குத் தான்.

நீங்க ரெண்டு பேரும் யாரு?

உங்க உண்மையான பேர் என்ன?

எல்லாம் தெரிஞ்சு போச்சு..!

உங்க ‘ லக்ககேஜ, வைக்கும்போதே சந்தேகம் வந்தது. ஸ்கேன் பன்னிட்டேன். முட்டாள் பொடிப் பசங்களா? உழைத்து சம்பாதிங்கடா?

போதை மருந்து கடத்துறீங்களா? விடமாட்டேண்டா..! என்றார்.

இருவரும் ஓட யத்தனித்தனர்.

சைரன் சத்தம் வந்தது.

போலீஸ் வண்டி வந்து சுற்றி வளைத்து. கையில் காப்பு போட்டனர். இருவரும் ஏற்றப்பட்டனர். போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

மறுநாள் செய்தித்தாளில் செய்தி வந்தது.

“ஓட்டுநரின் சாகசம். பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பிடிபட்டது”.

அடுத்த சவாரிக்காக காத்திருந்தார் ஓட்டுநர்.., அதாவது அடுத்த பாடத்தை கற்க காத்துக் கொண்டிருந்தார்.

ஓட்டுநர் வேலை கேவலம் இல்ல. அவமானம் இல்ல. ஒரு அனுபவ பல்கலைக்கழகம். Office-ல ஒரே மாதிரி ஆளுங்க. Road-ல தினம் ஒரு உலகம். அதான் ஓட்டுநர் ஒரு PhD.

நீ தூங்குறன்னு நினைச்சா, யாரோ விழிச்சிருக்காங்க.

Phone மைக் மாதிரி, சமூகத்துலயும் “கேக்குற காது” இருக்கு.

தப்பு பண்ணா, “உறங்கும் போதும் கற்கிறேன்”னு ஒருத்தன் பிடிச்சுடுவான்.

அதனால தம்பிகளா, மித வேகம் மிக்க நன்று.

நேர்மையான வழி மிக மிக நன்று.

ஓட்டுநர் தூங்கல. ஊரையே முழிச்சிருக்க வச்சிருக்கார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *