உன் கண்ணில் நீர் வழிந்தால்….
கதையாசிரியர்: காரை ஆடலரசன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
காதல்
கதைப்பதிவு: April 15, 2026
பார்வையிட்டோர்: 97
(2004ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9
அத்தியாயம் – 4

‘ச்சே! என்ன வாழ்க்கை! நம்மால் அவள் கண்ணில் நீர் வழியக் கூடாது என்று ஒதுங்கினால் குருட்டு பிள்ளையைப் பெற்று கண்களில் நீர்! ஹரியைப் பார்த்து ஆறுதல் சொல்லி விட்டு மீண்டுமொருமுறை மன்னிப்புக் கேட்க வேண்டும்!’ என்று இரவே துடித்த மனதை அடக்கிக் கொண்டு காலையில் குளித்துவிட்டு நேரத்தோடு கிளம்பிவிட்டான் சேகர்.
பள்ளிக்குப் பக்கத்தில் வீடு. போகிற போக்கில் அப்படியே இறங்கி ‘நலம் விசாரித்து விட்டு பணிக்குப் போகலாம்!’ என திட்டம்.
வண்டியில் ஏறி அமர்ந்ததும்…
‘தான் போய் பார்த்தால் சுமதியின் கணவன் குமார் ஏதாவது நினைத்துக் கொள்வானோ..?! கோபம் கொள்வானோ…?!’ மனதில் இனம்புரியாமல் ஒரு பயம் எழுந்தது.
அதே சமயம் பார்க்காமலிருந்து விட்டால்…?!
தினம் போகிற இடம்….என்றாவது ஒருநாள் அவன் கண்ணில் பட்டு…
“என்ன சார். பையனை அடிச்சிப் போட்டீங்க. ஆள் இருக்கானா இல்லையான்னு ஒரு நாளாவது வந்து விசாரிக்கவே இல்லே. பெரிய ஆள் அடிபட்டிருந்தாலாவது பார்க்காமலிருக்கலாம். பத்து வயசு பையன். பார்க்காமலிருக்கீங்களே… உங்களுக்குக் குழந்தைகள் மேல் அன்பு, அக்கறை இல்லையா..? இதுதானா மனிதாபிமானம்..? எப்படி நீங்களெல்லாம் பசங்களுக்குப் பாடம் சொல்லி கொடுக்குறீங்க…” என்று குறை பட்டால் முகத்தை எங்கு வைத்துக் கொள்ளவது…?
குமாரே கேட்கவில்லை என்றாலும்… சுமதி இதே கேள்விகளைக் கேட்கலாம். கேட்காவிட்டாலும் மனதில் நினைத்துக் கொள்ளலாம்.
‘வெறுப்பு, காழ்ப்பு அதனால் பார்க்க வரவில்லை. மனதில் எந்தவித கஷ்டமுமில்லை என்றால் தாராளமாக வந்து பார்ப்பதுதானே சரி என்று இப்படி தவறாக நினைத்து விட்டால்..?’ மனம் இப்படியும் நினைத்தது.
பத்து நாட்களாக இந்த வழியாகத்தான் பள்ளிக்குச் செல்கிறோம், வருகிறோம். அருகில் தான் வீடு. போகிற வழி. ஒரு நாளாவது சுமதி கண்ணில் படவில்லை ஏன்…? வீட்டை விட்டு அவள் வெளியில் வருவதில்லையா…? இல்லை அவள் வெளியில் தலை காட்டும் நேரம் நாம் செல்லவில்லையா…?
வண்டி அந்த தெருவில் திரும்பியது.
வாசலில் அமர்ந்திருந்த இரண்டு பாட்டிமார்கள்…
“இந்தப் பையன்தான் நேத்திக்கு ஹரி மேல வண்டியை விட்டுடுச்சு.” இவனைக் காட்டி பேசினார்கள்.
இந்த விபத்து எல்லோருக்கும் தெரிந்து விட்டது. அந்த அளவிற்கு ஹரி மேல் அனுதாபம். எல்லோரும் நேற்றே அவன் மருத்துவமனையிலிருந்து திரும்பியதும் வந்து விசாரித்திருப்பார்கள், பார்த்திருப்பார்கள். அதில் நேற்று விபத்தைப் பார்த்த கிழவி தன்னை அடையாளம் சொல்லி இருக்கும். அதனால் தான் இன்று தன்னைக் காட்டி இப்படி பேசுகிறார்கள்.
இன்னும் எந்தநாட்களுக்கு தன் மீது இந்த குரூர பார்வை வீசப் போகிறார்களோ? குற்றவாளியை நோக்கப் போகிறார்களோ…?! – இந்த நினைப்பே சேகருக்குச் சங்கடமாக இருந்தது.
சுமதி வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தி அழைப்பு மணி அழுத்தினான்.
சுமதிதான் திறந்தாள்.
திறந்தவள் ஒருகணம் திகைத்து, மறுகணம் சுதாரித்து…
“வாங்க… வாங்க….” சொன்னாள்.
“ஹரி எப்படி இருக்கான்…?”
“நல்லா இருக்கான்.”
“ஜுரம் வந்ததா..?”
”ராத்திரி கொஞ்சம் இருந்துச்சி. அப்புறம் மாத்திரைப் போட்டதும் சரியாய்ப் போச்சு.”
“எங்கே இருக்கான். பார்க்கலாமா…?” என்று இவன் கேட்டதும்தான்…
‘அடடே! வாசலில் நிறுத்தி பேசிக்கொண்டிருக்கிறோமே..!’ சுமதிக்குத் தன் தவறு தெரிந்தது.
“உள்ளேதான் இருக்கான். தாராளமா வாங்க…” மகிழ்ச்சியாக சொல்லி கதவு விரிய திறந்து நடந்தாள்.
பின் தொடர்ந்தான்.
“என்னடா இப்படி ஆகிப்போச்சேன்னு ராத்திரி முழுக்க மனசே சரி இல்லே…” சொல்லிக் கொண்டே சென்றான்.
ஹரி கட்டிலில் நெஞ்சுவரை போர்வை போர்த்தி படுத்திருந்தான்.
ஆள் வரும் அரவம் கேட்டோ…இல்லை இவன் குரல் கேட்டோ…
“யாரும்மா அது …?” கேட்டான்.
“நேத்திக்கு ஒருத்தர் வண்டியில அடிபட்டீல்லே. அவர் உன்னைப் பார்க்க வந்திருக்கார் ஹரி!” சொல்லிக் கொண்டே சுமதி அவன் தலை மாட்டில் நின்றாள்.
சேகர் பையனை நெருங்கி…
“அடி பலமா ஹரி…?” கேட்டான்.
அவன் இவன் குரல் வந்த திசையைப் பார்த்து…
“கால் வீங்கி வலிக்குது சார். இப்போ மட்டுமில்ல. ராத்திரி பூரா வலி. என்னால தூங்க முடியல. அம்மாவும் தூங்கலை…” அவன் வார்த்தைகளிலும் முகத்திலும் அதற்கான வேதனை தெரிந்தது.
“மன்னிச்சுக்கோ ஹரி….”
“உங்க மேல தப்பில்லே சார். எனக்குத்தான் உள்ளே இருக்க பிடிக்காமல் வெளியே வந்தேன்…” சொன்னான்.
“என் மேலேயும் தப்பிருக்கு. நானும் சாலையை சரியாய்ப் பார்த்து வந்திருக்கனும்.”
சேகர் கட்டிலில் அமர்ந்து அவன் தலையைப் பாசமாகத் தொட்டான்.
தடவினான்.
‘ஒரு முழு பையன். பார்வை குறை…!’ மனசு பச்சாதாபப்பட்டது.
“நல்ல வேலை இன்னும் கொஞ்ச நேரம் தாமதிச்சி வந்தீங்கன்னா… நாங்க மருத்துவமனைக்கு கிளம்பி போயிருப்போம். அம்மா! போக வேணாம்மா…” பரிதாபமாக சொன்னான். குரல் கெஞ்சியது.
“அங்கே போனாத்தானே ஹரி குணமாகும்…” – சுமதி.
“சார்! ஊசி போடுவாங்க. மருந்து எரியுது சார்…” – தப்பிக்க இவனிடம் தாவினான்.
”ஊசி இன்னைக்குப் போடமாட்டாங்க. கால்ல மருந்து தடவி, மாத்திரை மட்டும் கொடுப்பாங்க. வேலைக்கு நேரமாச்சு. நான் புறப்படுறேன் ஹரி.”
“கொஞ்சம் இருங்க. காபி எடுத்து வர்றேன்.”
“வேணாம்…” சொல்லியும் அவள் கேட்காமல் உள்ளே சென்றாள்.
சுமதி – குமார் ஜோடியாக சுவரில் இருந்தார்கள்.
“ஹரி அப்பா எங்கே..?….” சேகர் காபியுடன் திரும்பியவளைப் பார்த்துக் கேட்டான்.
“அவர் அலுவலகம் போயாச்சு” நீட்டினாள்.
குடித்தான்.
“ஹரி! எழுந்திரு…” மகனை எழுப்பினாள்.
எழுந்தான்.
சேகர் குடித்து முடித்து கிளம்பினான்.
வாசல் வரை வழியனுப்ப வந்தவளிடம்…
“ஹரிக்கு பிறவியிலேயே பார்வை இல்லையா சுமதி..?”
“இல்லே…”
“புரியல…?!”
“பிறந்து ரெண்டு வயசு வரை குழந்தை நல்லா இருந்தான். அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமாய் மங்கி… இப்போ ரொம்ப குறைவா இருக்கு. இதுவும் எத்தினி நாள்ன்னு சொல்ல முடியாது. அப்படியே மறைஞ்சு சுத்தமா போயிடும்…”
“ம…மருத்துவம்..?…”
“எல்லாம் பார்த்தாச்சு…”
“என்ன சொல்றாங்க…?”
“அவ்வளவுதான் சரி செய்ய முடியாது சொல்றார். நீங்க இங்கே எப்படி..?” சுமதி பேச்சை மாற்றினாள்.
“எனக்கு இந்த பள்ளிக்கூடத்துலதான் வேலை…”
“அப்படியா…?”
“பட்டப்படிப்பு முடிச்சதும்….பி.எட். போனேன். எங்கெங்கேயோ வேலை. பத்து நாட்களுக்கு முன் இங்கே மாற்றல்.”
“குடும்பத்தோடு இங்கே வந்தாச்சா…?”
“இல்ல…”
“சாப்பாடு..?”
“ஹோட்டல்…”
“தங்கல்…?”
“மாதாக்கோயில் வீதியில் உள்ள ஜெயக்குமார் வில்லா. சேவல் பண்ணை!”
“அம்மா! சாரை உங்களுக்குத் தெரியுமா…?” ஹரியின் குரல் அருகில் கேட்டது.
“தெரியும்…”
“எப்படி…?”
“நானும் இவரும் கல்லூரியில் ஒண்ணா படிச்சோம்…”
சேகர் கை கடிகாரத்தைப் பார்த்தான்.
“எனக்கு நேரமாச்சு கிளம்பறேன். வர்றேன் ஹரி” பதிலை எதிர் பார்க்காமல் வீட்டை விட்டு இறங்கினான்.
சுமதி மகனை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றாலும்.. மனமெல்லாம் சேகரைச் சுற்றியது.
‘குடும்பம் அழைத்து வரவில்லையா..? ஏன்..? திருமணம் ஆகிவிட்டதா இல்லையா..? சம்பாத்தியத்திற்குப் பிறகுதான் திருமணம் அப்பா சொன்னது பதிந்து… முடித்திருப்பாரா..?’ – சுற்றியது.
பள்ளியில் சேகருக்கும் இவளைப் பற்றி யோசனை. ‘நல்லவிதமாக வாழட்டுமென்று விலகினால்… வேதனைக் குழந்தை!’ மனசு வலித்தது.
அத்தியாயம் – 5
இரவு 8.00 மணிக்கு குமார் வீட்டிற்கு வந்தபோது ஹரி தூங்கி போயிருந்தான்.
சுமதி அவனுக்கருகில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள். சுமதி அவனுக்கு நிழலாக இருக்க வேண்டிய கட்டாயத்தால் எப்போதும் அவன் கூடவே இருப்பாள்.
“சுமதி! மருத்துவமனைக்குப் போனீயா…?”
“போனோம். ஒன்னும் பிரச்சனை இல்லே…”
“பசிக்குது சுமதி”
“தயாராய் இருக்கு வாங்க…” எழுந்தாள்.
அவன் அறைக்குச் சென்று ஆடைகள் கலைந்து லுங்கிக்கு மாறி முகம், கை கால் கழுவி… அமர்ந்தான்.
பரிமாறினாள்.
இவளும் பரிமாறிக்கொண்டு சாப்பிட்டாள்.
“ஹரி சாப்பிட்டானா…?”
“வழக்கம் போல் ஏழைரைக்கு முடிச்சிட்டான்.”
‘சேகர் வந்து விசாரித்து சென்றது! சொல்லலாமா…?’ – உள்ளுக்குள் வந்தது.
வேணாம்! – விலக்கினாள்.
பத்து மணிக்கு இவள் படுக்கையில் வந்து படுத்தாள்.
குமார் தொட…விலக்கினாள்.
“இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படி…”
“இவன் ஒருத்தனே போதும். அடுத்ததும்….அப்படியானால்….என்னால தாங்கி முடியாது…!”
“இது அனாவசிய பயம் சுமதி. நமக்குப் பிற்பாடு இவனுக்குத் துணை வேணும்”
“ஆணோ பொண்ணோ… இவனுக்குத் துணையாய் இருப்பாங்கன்னு எப்படி சொல்றீங்க..? பாரம்ன்னு எங்காவது விடுதியில் சேர்த்திடுவாங்க…”
ஹரியைப் பரிசோதித்த மருத்துவர் இவர்களைப் பார்த்து கேட்ட முதல் கேள்வி…
“நீங்க ரெண்டு பேரும் நெருங்கின சொந்தமா..?”
“ஆமாம் . தாய்மாமன்! ஏன் சார்…?”
“அக்கா பொண்ணைக் கட்டிக்கிறது, தங்கச்சிப் பொண்ணைக் கட்டிக்கிறது, தாய் மாமனைத் திருமணம் செய்துகிறதுன்னு இப்படி இந்த நெருங்கிய உறவு முறை திருமணம் செய்து சம்மந்தம் வைச்சிக்கிட்டா நூத்துல அஞ்சு குழந்தைங்க ஊனம், ஊமை, செவிடு, குருடாய்ப் பிறக்க வாய்ப்பிருக்கு. உங்க குழந்தைக்கும் அந்த பாதிப்புதான். பார்வை கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து… ஒரு கட்டத்தில் அது சுத்தமாய் தெரியாமல் போகும். இதை சரி செய்ய முடியாது. கண்தானம் மூலமாகவும் குணப்படுத்துறது சிரமம்…” டாக்டர் சொன்னதைக் கேட்டு கணவனும் மனைவியும் நொறுங்கிப் போனார்கள்.
அந்த ஒரு டாக்டர் என்று மட்டுமில்லை. கண் சம்பந்தமாய் பெரிய பெரிய மருத்துவர்களைப் பார்த்தும்… எல்லோரும் இதே பதிலைத்தான் சொன்னார்கள்.
பெற்ற வயிறு எப்படித்தாங்கும்…?
இவனுக்குப் பிறகு எந்தக் குழந்தையும் வேண்டாம்! என்று கணவன் மனைவி இருவருமே முடிவெடுத்தார்கள். சுமதி அதில் உறுதியாய் இருந்தாள்.
ஆனாலும் இப்படி அடிக்கடி கணவன் தொல்லை…
பாவம் ஆண்கள் எத்தனை நாட்களுக்குத்தான் கட்டுப்பாடாக இருப்பார்கள்…?
சுமதி சுருண்டு படுத்திருக்கும் கணவன் பக்கம் திரும்பி படுத்து…
“என்னங்க…?” அழைத்தாள்.
அவன் பதில் பேசாமல் இவளை பாவமாகப் பார்த்தான்.
“கஷ்டமா இருக்கா…?”
“ம்ம்ம்….உனக்கு…?”
“இல்லே…”
“ஏன்…?”
“அன்னைக்கே இந்த நினைப்பெல்லாம் செத்துப் போச்சு. இவனுக்கு நாம ஒவ்வொரு நிமிசமும் கண்ணாய் இருக்கனும் எனக்கிற நினைப்பில் எல்லாம் மரத்துப் போச்சு!”
“….”
“குமார்…!”
“சொல்லு சுமதி..?….”
“நான் குடும்பக்கட்டுப்பாடு செய்துக்கிறேன்.”
“வேணாம்…”
“உங்களுக்கும் கஷ்டம் தீரும். எனக்கும் இன்னோன்னு பொறக்காதுன்னு நிம்மதி..!”
“சுமதி எனக்கும் உன்னைப் போல தாம்பத்தியத்து மேல் ஆசை, அக்கறை இல்லே. நமக்குப் பிற்பாடு ஹரிக்கு துணை வேண்டிதான்…”
“விஷப் பரீட்சை வேணாம்ங்க. குடும்ப கட்டுப்பாடு பண்ணிக்கிறேன்.”
“வேணாம். தள்ளியே படுத்துகிறேன்!”
‘காலம் மாறும். மனைவி மனசு மாறும். கு.க விற்கு அனுமதித்து கதவைச் சாத்திவிட்டால்…நம் நினைப்பிற்கு சாத்தியம் இல்லாமல் போகும்!’ நினைப்பில் தள்ளிப் படுத்தான்.
மறுநாள் சேகர் பள்ளிக்கூடம் செல்லும்போது தன் வீட்டு வாசலிலேயே குமார் நின்றிருந்தான்.
அன்றைக்கு மருத்துவமனையில் பார்த்தது. தற்போது அவனை விசாரிக்காமல் தாண்டி செல்வது முறையாகாது! நினைத்த சேகர்… எதிரே வண்டியை நிறுத்தி இறங்கினான்.
“வணக்கம் சார்…” சொன்னான்.
அவனுக்கு சட்டென்று நினைவு வந்து விட்டது.
“அடடே! வாங்க சார்” என்றான்.
“சார்! அன்னைக்குத் தெரியாம….”
“வருத்தப்படாதீங்க சார். நானும் அதை அன்னைக்கே மறந்துட்டேன். வாங்க உள்ளே…” அழைத்தான்.
சென்றார்கள்.
“இதுக்காகவா இவ்வளவு தூரம் வந்தீங்க…?”
அமர்ந்தார்கள்.
“நான் இந்த பள்ளிக்கூடத்துலதான் ஆசிரியராய் இருக்கேன். அதான் அன்னைக்கு வரும்போது…”
“சரி விடுங்க சார்.”
“சுமதி…”
வந்தவள் ஆளைப் பார்த்ததும் துணுக்குற்றாள்.
“சாரை தெரியுதா…?”
“இவர் வண்டியிலதானே ஹரி விழுந்தான். நேத்திக்கே பள்ளிக்கூடம் போகும்போது இதே நேரம் வந்து விசாரிச்சுட்டுப் போனார்.”
“அடடே! அப்படியா..?” குமார் முகத்தில் மலர்ச்சி.
”சார் ஹரி.”
“பக்கத்து வீட்டு மாமி அழைச்சுக்கிட்டு கோயிலுக்குப் போயிருக்காங்க….”
“சாருக்கு காபி எடுத்து வா சுமதி”
சென்றாள்.
அவள் செல்லவும்…ஹரியும் பாட்டியும் வீட்டிற்குள் நுழைந்தார்கள்.
“ஹரி!” சேகர் அழைத்தான்.
“ஹை அங்கிள்!” அவன் அடையாளம் கண்டு கொண்டான்.
“தம்பி! அன்னைக்கு கர்ணம் தப்பினால் மரணம் கதை. சரியா பிரேக் போட்டு நிறுத்திட்டீங்க…” அன்றைக்கு அலறிக்கொண்டு ஓடிவந்த பாட்டி. சொன்னாள்.
“ஹரி! கால் எப்படி இருக்கு…?”
“வீக்கம் வடிஞ்சி நடக்கிறேன். அதான் பாட்டியோட கோவிலுக்குப் போனேன்.” சொன்னான்.
காபி வந்தது.
முடித்து விட்டு அவர்களிடமிருந்து விடைபெற்றான்.
இந்த சந்திப்பு சேகர் மனசுக்குள் இருந்த இறுக்கத்தை தளர்த்தியது.
அத்தியாயம் – 6
நேற்றைய சந்திப்பின் எதிரொலி… சேகர் – குமார் இருவரும் அடிக்கடி வெளியில் சந்திக்கும்போது பரஸ்பரம் புன்னகை, வணக்கம் சொல்லிக்கொண்டார்கள்.
சேகர் இரண்டு மூன்று நாட்கள் தொடர்ச்சியாக ஹரியை சென்று விசாரித்து வர… அதுவே தினசரி வழக்கமானது.
ஹரி இவனிடம் ஒட்டுதலாகப் பழகினான்.
சேகர் பள்ளி விட்டதும் மாலை வேளையில் போய் ஹரியை விசாரித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.
இதுவரை… தாய், தந்தை, அக்கம் பக்கம் வீடுகள் என்று பழகிய ஹரிக்கு சேகரின் புது வரவு விசாரிப்பு மகிழ்ச்சியாக இருந்தது.
சுமதியும் முன்னைவிட தெளிவாக இருந்தாள். ஆனாலும் விளக்கின் அடியில் இருக்கும் சிறு நிழல் போல் ஒரு மெல்லிய சோகம் அவளுக்குள் இருக்கத்தான் செய்தது.
மகன் கவலை இருக்கத்தான் செய்யும்! – சேகருக்குப் புரிந்தது.
தங்களுடைய சிறு வயது ஞாபகங்ககள், படித்தது, பார்த்தது, கேட்டது என்று சேகரும் சுமதியும் தினம் தினம் பேச எவ்வளவோ விசயங்கள் இருந்தன. சமயத்தில் பேச்சு ஹரியையும் தொட்டுச் செல்லும்.
மகனின் குறை பற்றி பேசும்போது ஹரி கேட்டால் வருத்தப்படுவானென்று சுமதி ஆரம்பத்தில் பயந்து தயங்க செய்தால். இவன்தான் பயம் போக்கினான்.
இப்படி பயந்து ஒளிந்து பேசினால்தான் தன் குறை பெரிதென்று நினைத்து ஹரி வேதனைப் படுவான். அதற்குப் பதில் அவன் இருக்கும்போது இதுபற்றி பேசி… இது ஒன்றும் பெரிதில்லை. உன்னைப்போல் உலகில் நிறைய பேர்கள் இருக்கிறார்கள். பிரெய்லி எழுத்து துணையுடன் அதிகம் படித்து முன்னேறுகிறார்கள், நிறைய சாகசங்கள் செய்கிறார்கள் என்று இவன் எடுத்துச் சொல்ல… அந்தத் தயக்கமும் அவளிடமிருந்து மெல்ல மெல்ல கரைந்து போயிற்று. அதனால் ஹரியைப் பற்றி இவனால் தாராளமாகப் பேச முடிந்தது.
“சுமதி! ஹரியை வீட்டுக்குள்ளேயே அடைச்சு வைச்சுக்காம வெளியில் அழைத்துக் கொண்டு செல்ல வேண்டியதுதானே. அன்னைக்கு மருத்துவமனைக்கு அழைத்து சென்றது போல தினம் வெளியில் அழைத்துச் சென்றால் அவனுக்கும் ஒரு மாறுதலாக இருக்கும்.” சொன்னான்.
“அழைத்துப் போய் பிரயோஜனம்…?”
“இருக்கு சுமதி. அவனுக்கு உடன் இருக்கும் நாமதான் கண்கள். நம்மால அவனுக்கு வீட்டுக்கு வெளியே நடக்கிறது தெரியனும். ஒலிகளைக் காதால் கேட்கும்போது.. இது கார், அது லாரி, அது குயில், இது குருவின்னு எல்லாம் சொல்லிக் கொடுக்கனும். அவன் எல்லாத்தையும் ஏற்கனவே பார்த்திருப்பதால் அவனுக்கு எல்லாம் புரியும் தெரியும். வீட்டுக்குள்ளேயே அடைச்சு வைச்சு கிணற்றுத் தவளையாய் வளர்த்தால் அவனுக்கு உலகம் தெரியாது.”
“நானும் இப்படி நினைச்சேன் சேகர். ஆனா…பார்க்கும் மக்கள் உச் கொட்டுவாங்க விசாரிப்பாங்க. அது இவன் மனசைப் பாதிக்கும்ன்னு அந்த யோசனையை விட்டேன்.” சொன்னாள்.
“அப்படி கேட்கிறவங்க கேட்டுப் போகட்டும். அதுக்காக நம்ம குழந்தையை நாம சரியா வளர்க்காம விடுறது நியாயமா..? நீ அழைச்சுப் போ. கடற்கரை காட்டு. மணல் காட்டு, குழந்தையை விளையாட விடு. அவனையும் இந்த உலகத்துல சகஜமாய் நடமாட விடு. அவன் எல்லாத்தையும் கத்துக்குவான். உனக்கொன்னு தெரியுமா.. ஊனமுள்ள குழந்தைகளுக்குப் புத்தி கூர்மை அதிகம்.”
சேகர் சொல்லக் சொல்ல சுமதி நியாயம் உணர்ந்தாள்.
‘நாம் பெற்றோம், வளர்த்தோம். இப்படி ஆகிப் போய்விட்டதென்று இடிந்து போய் ஓடி ஓடிப்போய் மருத்துவம் பார்த்து கடைசியில் இதுதான் முடிவு என்று மனம் உடைந்து வேறு எதைப்பற்றியும் யோசிக்காமல் அவனுக்குக் கண்ணுக்குக் கண்ணாக இருக்க வேண்டும் என்று கவனத்திலேயே வேறு எதைப் பற்றியும் சிந்திக்காமல் விட்டு விட்டோம்…!’ என்று சுமதி தன் தவறு உணர்ந்தாள்.
சேகர் அறிவுரை சொன்னதோடு நிறுத்தாமல் அருகிலுள்ள தோப்பு, விளையாட்டு மைதானம், பூங்காவிற்கும் அழைத்துச் சென்றான்.
மாலை 4.30க்குப் பள்ளி விட்டதும் ஒரு மணி நேரத்தை ஹரியோடு கழித்தான். தனி ஆள். வேலை விட்டதும் வேறு வேலை இல்லை என்பதால். இவனுக்கும் இது ஒரு பொழுது போக்காக இருந்தது.
ஹரி அதி புத்திசாலியாக இருந்தான். சேகர் எதைச் சொன்னாலும் சரியாய்ப் புரிந்து கொண்டு மறக்காமலிருந்தான்.
சேகர் வீட்டிற்கு வந்தாலே ஹரி கண்டுபிடித்து விடுவான்.
“எப்படி ஹரி…?” கேட்டால்…
“அம்மா அதிராம நடந்து வருவாங்க. அப்பா கொஞ்சம் வேகம். நீங்க நிதானம், பாட்டி காலைத் தேய்ச்சு வரும்… எல்லாம் ஒலி, சத்தம்தான் அங்கிள். எனக்கு இந்த வீடு அத்துப்படி. எத்தனை அடியில் எது எது இருக்குன்னு எனக்கு எல்லாம் தெரியும். நீங்க வந்த பிறகு எனக்கு இன்னும் நல்லா வெளி உலகம் தெரியுது.” என்பான். இதையெல்லாம் விட ஹரி தன் தகப்பனிடம்…
“சேகர் அங்கிள் ரொம்ப நல்லவர்ப்பா. அந்த விபத்து என்னையும் அவரையும் இணைக்கத்தான் நடந்திருக்கு. என்னை வெளியில அழைச்சுப் போனால் அது என்ன இது என்னன்னு எவ்வளவு கேட்டாலும் சலிக்காம பதில் சொல்லுவார்ப்பா. அவருக்கு ரொம்ப இளகிய மனசு. என் மேல அதிக அக்கறை.” சொல்லும்போது… குமாருக்கும் அவன் மேல் மதிப்பும் மரியாதையும் அதிகமானது.
“ஹரியை பிரெய்லி பள்ளியில் படிக்க வைக்கலாம்!” என்று சேகர் யோசனை கூறிய போது….
சுமதிக்குத்தான்… அவனைப் பிரிய மனமில்லை பயப்பட்டாள்.
ஆனால் குமார் விருப்பப்பட்டான். தன் குழந்தை வளர்ந்து பெரிய ஆளாக வர வேண்டுமென்று ஆசைப்பட்டான்.
சுமதி தன் மகனை அப்படி படிக்கவைக்க விருப்பப்படவில்லை என்றாலும்… அவனுக்கு நிறைய சொல்லிக் கொடுத்தாள். பேனாவால் தமிழ், ஆங்கில எழுத்துக்களை எல்லாம் எழுத கற்றுக் கொடுத்திருந்தாள்.
சேகர் இந்த குடும்பத்தில் ஒருவனாகிவிட்டான். தினம் வந்து போகும் மனிதனாகி விட்டான்.
பிள்ளையின் வளர்ச்சி, மலர்ச்சி பெற்றவர்களுக்கு நிறைய பிடித்துப் போயிற்று.
ஹரி தாய், தகப்பனைவிட சேகரிடம் ஒட்டுறவாகிப்போய் விட்டான்.
“எப்படி…?” குமார், சுமதியுமே அவனிடம் கேட்டார்கள்.
“நீங்க அவனை குழந்தையாய் நினைச்சுப் பழகுறீங்க. பார்வை இல்லாதவன்னு பொத்திப் பொத்தி வளர்க்குறீங்க. நான் இதையெல்லாம் விலக்கிட்டு ஒரு சராசரி குழந்தையாய் நினைச்சுப் பேசறேன், பழகுறேன், கவனமா ஓடவிடுறேன், நடக்க விடுறேன். கூண்டுக்குள் இருந்த கிளியாய் வளர்ந்த ஹரி இப்போ வெளியில் நடமாடும் சுதந்திரப்பறவையாய் நடமாடும்போது… என்னோடு அதிக ஒட்டுதலாய் இருக்கான்.” என்றான்.
சுமதிக்கு… சேகர் திருமணம், குடும்பத்தைப் பற்றி அறிய ஆசை. இவன் ஹரி மேல் உள்ள அக்கறையால்தான் இங்கு அடிக்கடி வருகிறானா…? இல்லை அந்த சாக்கில் தன் நினைவில் வருகின்றானா…? என்கிற யோசனை வேறு.
தெரிந்து கொள்ள ஆசைப்பட்டாள். அதற்கான சமய சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தாள். இன்றைக்கு அமைந்தது.
மாலை பள்ளி விட்டு இவன் வரும் நேரம் ஹரி பக்கத்து வீட்டு பங்கஜம் மாமியோடு கோவிலுக்குச் சென்றிருந்தான்.
சங்கட சதுர்த்தி என்று மாமி அவனை 4.00 மணிக்கே அழைத்துச் சென்றிருந்தாள்.
சேகர் 4.15 க்கு பள்ளி விட்டு 4.30க்கெல்லாம் ஆஜரானான்.
“ஹரி!” அழைத்து வாசல் ஏறினான்.
“இல்லே கோவிலுக்குப் போயிருக்கான். இப்ப வந்துடுவான்.”
“சரி. நான் வர்றேன்.” திரும்பினான்.
“ஏன் வேலையா..?…திரும்புறீங்க…?”
“இல்லே…”
“உள்ளே வந்து உட்காருங்க. கொஞ்சம் பேசனும்…”
சென்று அமர்ந்தான்.
“கலியாணம் முடிச்சாச்சா…?” நேரடியாகவே விசயத்திற்கு வந்தாள்.
“ஏன்…?”
“தெரிஞ்சுக்க ஆசை.”
“திருமணம் அவசியமா…?”
“புரியல…?!”
“எனக்கு அவசியமா தோணல…”
“காரணம்…?”
“அதான் சொல்லிட்டேனே.. அவசியமில்லே…”
“இப்படியே இருக்கப் போறீங்களா…?”
“இருக்கிறதுல தப்பில்லையே…?!”
“என்னைக் காதலிக்கும்போது கலியாணம் கட்டிக்க ஆசைப் பட்டீங்க….?”
“அது அப்போ…!”
“இப்போ தேவை இல்லையா…?”
“ஆமாம்!”
“அப்படின்னா… நீங்க இன்னும் நம்ம காதலை மறக்கல. அந்த வேகம் தாக்கம் இப்படி இருக்கீங்க…”
“இல்லே சுமதி மறந்துட்டேன்.”
“மறக்கல. அதான் இப்படி இருக்கீங்க. இப்போ ஹரி சாக்குல இங்கே வர்றீங்க…”
“உன் நெனப்பு தப்பு. இதுதான் உன் நினைப்புன்னா நான் வரல”
“சேகர்!”
“ஹரி பாவம். புருசன், பொஞ்சாதி ரெண்டுபேரும் மகனை நினைச்சு வருத்தப் படுறீங்க. என் வரவு இதுக்கெல்லாம் சின்ன மருந்தாய் இருக்கும் என்கிறதுதான் என் நினைப்பு மத்தபடி வேற எதுவும் கிடையாது. திருமணம் என்பது என் சொந்த விருப்பு வெறுப்பு. அதில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது. முடிவெடுக்க வேண்டியவன் நான் மட்டும்தான். இதை என் அப்பா, அம்மாகிட்டேயும் சொல்லியாச்சு. உன்கிட்டேயும் சொல்லிட்டேன். தயவு செய்து என்னை யாரும் வற்புறுத்தவேணாம்!” சொல்லிவிட்டு விடு விடுவென்று வெளியே வந்தான்.
வாசலில்… பங்கஜம் பாட்டி, ஹரி!
– தொடரும்…
![]() |
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க... |
