அவள் மிகப் பொல்லாதவள்
கதையாசிரியர்: அண்ணாதுரை சி.என்.
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: June 1, 2020
பார்வையிட்டோர்: 6,102
(1939ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“சரசா மிகப் பொல்லாதவள் ! படித்த பெண்! ஆகவே, அம்மா – எதைச் சொன்னாலும் குற்றங் கண்டு பிடிக்கிறாள்” என்று அந்த ஊர் குளத்தங்கரையில் குப்பம்மாள் கூறினாள்.

“ஆனால், சரசா, நல்ல அழகு ! தங்கப்பதுமை போன்றவள்! தாய்க்கு ஒரே மகள் ! தகப்பனுமில்லை, பாவம்! அவர்கள் சொத்தைப் பார்த்துக் கொள்ள, சரசாவிற்குப் புருஷன் எந்தச் சீமையிலிருந்து வருவானோ தெரியவில்லை” என்றாள் அன்னம்மாள்.
சரசுவின் கண்களைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு சினிமாவிலே, யாரது, அந்த தேவிகாராணியோ என்னமோ பேர் சொல்கிறார்களே, அதே கவனம் வருகிறதடி” என்றாள் சொர்ணம்.
“தேவிகையோ, ரேணுகாம்பாவோ, எனக்கு என்ன தெரியறது, அந்த இழவெல்லாம். சொர்ணம், கொஞ்சம் படிச்சவ.”
“இவளுக்குத் தெரியுது” என்றாள் குப்பம்மாள்.
“என்றைக்காவது சரசா, குளத்துக்கு வந்தால், எனக்கு ஒரு பாட்டு கவனத்துக்கு வருவதுண்டு” என்றாள் சொர்ணம்.
‘அது என்ன பாட்டம்மா, கொஞ்சம் சொல்லேன்” என்று எல்லோருமாகக் கேட்டனர்.
சொர்ணம், “தாமரை பூத்த குளத்தினிலே முகத் தாமரை தோன்றிட வந்தவளே!” என்று பாட ஆரம்பித் தாள் !
“பாட்டைப் பார்த்தியா, ரொம்ப ருசியா இருக்கிறதே” என்றனர் யாவரும்.
“ஆமாம், ஆமாம்! சீக்கிரம் வீடு போனால் தான் வீட்டிலே சாப்பாடு ருசியாக இருக்கும். எடுங்கள் குடத்தை. போவோம். சரசா பேச்சைப் பேசுவதென்றால் பொழுது போவதே தெரியாது” என்று அன்னம் கூறிட எல்லோருமாக குடங்களை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றனர்.
உள்ளபடியே சரசாவின் பேச்சை யார் பேச ஆரம்பித்தாலும் அன்னம் கூறியபடி பொழுது போவதே தெரியாது.
நடுத்தர உயரம்! கண் கவரும் சிகப்பு! காதுவரை நீண்டு செவ்வரி படர்ந்த சிங்காரக் கண்கள் ! கன்னங்கள், கண்ணாடி; புருவங்களோ, மதனன் வில்லே-யென்னலாம்! கொவ்வை இதழ் ! அக்கோமளவல்லிக்கு, முத்துப் பற்கள் அவை எப் போதோ சில சமயங்களே வெளியே தெரிந்து காண்போரை மயக்கிவிட்டு, மாயமாக மறைந்துவிடும்!
இன்பத்தின் உருவம் ! இயற்கையின் சித்திரம்! ஆனந்த ஒளி! என்றெல்லாம் சரசாவைப் பற்றிப் பேசிப் புகழாதவர்களே இல்லை எனலாம்.
அந்த சிற்றூருக்கு, சரசாதான் தாஜ்மகால்.
அவர்கள் குடும்பத்தின் கோகினூர் சரசாவே. சரசா விற்கு வயது 18. இருக்கும். தகப்பனார் சரசா சிறு பெண்ணாக இருக்கும்போதே இறந்துவிட்டார். தாய் சரசாவைக் கண்டு கண்டு பூரித்து தன் வாழ்வைத் தள்ளி வந்தாள்.
சரசாவின் அழகு வளர்ந்து கொண்டே வந்தது போலவே, அறிவும் வளர்ந்து கொண்டே வந்தது. அறிவு என்றால், அல்லி அரசாணி மாலையும், நல்லதங்காள் புலம்பலும், அந்தகனை மணந்த அற்புத வள்ளியின் கதையும் படிப்பது என்றல்ல பகுத்தறிவு!
பாவை பொன்போல இருந்தாள் ! அவளுடைய அறிவு, வைரம் போல மின்னிக் கொண்டிருந்தது. தாய் அந்தக் காலத்து நடத்தை, பழங்காலப் பேச்சு பேசிவருவாள். மகள், சிறு நகையுடன், ‘அம்மாவே அம்மா ! எங்கள் அம்மா கிரேதாயுகத்திலே பிறந்து வளர்ந்தவர்கள். ஏனம்மா! அண்டை வீட்டு அகிலாண்டம், எந்த அரச மரத்தை சுற்றினார்கள். எனக்கு காட்டமாட்டீர்களா? பக்கத்து வீட்டு பாலம்மா, புற்றுக்கு பால் ஊற்றவே ஒரு மாடு வாங்கலே என்று கேட்டு கேலி செய்து சிரிப்பாள், சரசா.
“நீ போடி அம்மா ! போக்கிரி! அரசமரம், ஆலமரம் இதெல்லாம் என்ன என்று உனக்கென்னடி தெரியும். பவுடரும், ரிப்பனும் வாராத காலத்திலே, வேப்ப மரத்துப் பெருமை எல்லோருக்கும் தெரிந்துதான் இருந்தது. உங்க அப்பா, இருக்கச்சே, இந்த வீடு, கோயில் மாதிரி இருக்கும் தெரியுமா ! நீ பிறந்துதான் அவரையும் உருட்டிவிட்டே. யாரும் இப்போ இங்கே வரக்கூடப் பயப்படுகிறார்கள். வெலாத் தம்மன் கோயில் பூஜாரி, நேத்து நீ தூங்கிக் கொண்டிருக்கும் போது வந்தான். இளநீர் அபிஷேகம் செய்யணுமாம், அம்மாவுக்கு” என்றான்.
“கொடுத்தனுப்பினாயா அம்மா! பத்தா, ஐந்தா? எவ்வளவு ரூபாயம்மா கொடுத்தாய்’ ‘ என்பாள் சரசா.
“சரசா, பொல்லாத பெண். அது என்னென்னமோ புத்தகம் படித்துவிட்டு, எதுக்கு பார்த்தாலும் காரணம் கேட்கிறாள்” என்று சரசாவின் தாயார், புரோகிதர் சுப்பய்யரிடம் சொல்வதுண்டு.
சுப்பய்யர், அந்த ஊர் புரோகிதர். அந்த வட்டாரத்திலே இருந்த எல்லா பணக்காரக் குடும்பமும், அவருடைய பஞ்சாங்கத்தினுள்ளே சுருட்டி மடக்கி வைத்துக் கொண்டிருந்தார். எஸ்ட்டேட் விஷயம் முதற்கொண்டு, வீட்டிலே எருமை வாங்குகிற விஷயம் வரையிலே, சுப்பு சாஸ்திரியைக் கலக்காமல் ஒரு காரியமும் நடப்பதில்லை. ஐயருக்கு அவ் வளவு செல்வாக்கு.
காலையிலே குளித்துவிட்டு விபூதி பூசி, கட்கத்திலே பஞ்சாங்கக் கட்டை வைத்துக் கொண்டு ஐயர் வெளியே கிளம்பினால் வீடு திரும்பி வரும் போது 12- மணிக்கு மேலே ஆகும். மடியிலே இரண்டோ மூணோ பணமும் இருக்கும்.
“கமலம்! அடி அம்மா கமலம்! தூங்கிட்டயோ ‘ என்று கதவைத் தட்டுவார், இருபத்தைந்து வயதான, அவளுடைய ஒரே மகள் – விதவை. கொட்டாவி விட்டுக் கொண்டே வந்து கதவைத் திறப்பாள்.
***
சரசாவைப்பற்றி, சிங்கார வேலுப்பிள்ளை கேள்விப் பட்டிருக்கிறார். பார்த்துமிருக்கிறார். சந்தைப் பேட்டை ஜெமீன்தாரர், சிங்கார வேலருக்கு சரசாவின் பேச்சை எடுத்தாலே, காயகல்பம் சாப்பிட்டது போல இருக்கும். எப்படி யாவது சரசாவைக் கலியாணம் செய்து கொள்ள வேண்டு மென்பது அவர் எண்ணம். மனைவி வைசூரியால் மாண்டு போன நாள் முதற்கொண்டு அவர் இதே எண்ணத்தில் இருந்தார். அவருக்கு வேதவல்லி வைப்பு! இருந்தாலும் வேதவல்லிக்கு வயது நாற்பதாகிவிட்டது!
சரசாவைப்போல சின்னஞ்சிறு குட்டி, தனக்கு மனைவியாக இருந்தால், இந்திர லோகத்திலும் இல்லாத ஆனந்தமாக இருக்கலாம் என்று அவர் எண்ணினார். வழக்கப்படி இதை புரோகிதரிடமும் சொன்னார்.
“குட்டி ரொம்ப அழகுதான்! ஆனால், பொல்லாத குட்டி. என் தலையைக் கண்டதும். வந்தாரம்மா புரோகிதர் ! வாழைக்கோ, வெண்டைக்காய்க்கோ என்று கேலி செய்யும். அவ, அம்மாவுக்கு நல்ல பக்தி. திதி திவசத்தின் போது மனங் குளிர தருமம் செய்வாள். நேமநிஷ்டை தவறுவதில்லை. அவ அம்மாகிட்ட நானும் ஏற்கனவே சொல்லியு-மிருக்கிறேன். உம்ம ஜாதகமும் இப்ப நன்னா இருக்கு! உமக்கு ஒரு புது பெண்ணாவது, புது மாடாவது, புது வேஷ்டியாவது, இன்னும் கொஞ்ச நாளிலே தானா வந்து சேரணும்” என்று புரோகிதர் சிங்கார வேலருக்கு தேன் மொழி கூறிவந்தார்.
“சாமி! அந்த அம்பிகையை நான் இந்த ஐம்பது வருஷமா மறந்ததில்லை. கும்பாபிஷேகம் ஒரு தடவைகூட செய்யாது விட்டதுமில்லை. பார்ப்போம், அம்பிகையின் அருள் எப்படி இருக்குமென்று” என்பார்.
“நாளைக்கு நானும் உம்ம பேருக்கு ஒரு இலட்சார்ச் சனை செய்யறதுன்னு நினைச்சுண்டே இருக்கேன்” என் பார் புரோகிதர்.
கணக்குப் பிள்ளையைக் கூப்பிட்டு, “ஐயருக்கு வேண்டியதைக் கொடு” என்று சிங்காரவேலு பிள்ளை கூறிவிட்டு நல்ல நரைமயிர் கருக்கும் தைலம் எங்கு விற்கிறது என்ற ஆராய்ச்சியிலே இருப்பார்.
எப்படியாவது இந்த இரண்டு குடும்பங்களையும் பிணைத்து விட்டால் தன்பாடு, கொண்டாட்டம் என்பது சாஸ்திரிகளின் எண்ணம். இரண்டு குடும்பத்திற்கும் ஏஜண்டாகவல்லவோ அவர் இருப்பார்.
ஒருநாள் மாலை சாஸ்திரியார், சரசாவின் தாயாருக்கு தூபம் போட்டுக் கொண்டிருந்தார். ஜாதகப் பலனைப் பற்றி சரமாரியாகக் கூறிக் கொண்டிருக்கையில், பொல்லாத சரசா வந்துவிட்டாள் அங்கே. “உமது ஜாதகக் கணிதத்தில், கமலா, கலியாணமான இரண்டாம் மாதம் தாலி அறுப்பாள் என்பது தெரியாமல் போனதேன்?” என்று இடித்தாள். சாஸ்திரிகள், பச்சைச் சிரிப்புடன், “விதிவசம் அம்மா ; ஆண்டவன் கூற்று” என்றார் . “உமது மகளுக்கு நடக்கவிருந்த வியத்தையே உம்மால் கண்டு பிடிக்க முடியாதபோது, என் ஜாதகப் பலனைப் பார்த்துச் சொல்ல வந்து விட்டீரே” என்று குத்தலாகக் கூறினாள் மங்கை.
“என்னமோ! நடந்தது நடந்துவிட்டது. என் மகள் கமலம், இப்போது ஏதோ, ஆண்டவனைத் துதித்துக் கொண்டு, சிவனே என்று காலந்தள்ளுகிறாள். அவள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்” என்று சற்று வருத்தத்துடன் கூறினார் சாஸ்திரி.
“பாபம்! கமலாவைப்பற்றி எண்ணினால் எனக்கு துக்கம் தொண்டையை அடைக்கிறது. பெண்ணின் குணத்திற்கென்ன! ரூபத்திற்கென்ன! எலுமிச்சம் பழம் போல இருக்கிறது குழந்தை ‘ என்றாள் சரசாவின் தாய்.
சரசா, புன்சிரிப்புடன், “அப்புறம், இன்னம் கொஞ்சம் வர்ணியுங்கள், கமலாவைப்பற்றி. அவள் கண்டது இது தானே.” என்றாள்.
“போடி, போக்கிரி சிறுக்கி! கமலா எவ்வளவு ஆச்சார அனுஷ்டானம் தவறாது இருக்கிறாள் பார்! ஒரு நாளாவது இவள் கோயில் போய் பூஜை செய்யாது இருக்கிறாளா? நீ நான் அந்த சங்கத்திற்குப் போகிறேன் ! இந்த சேரிக்குப் போகிறேன்” என்று குலத்தையே கெடுத்துக் கொண்டு வருகிறாய்” என்றாள்.
“கமலா, என் தோழி! அவள் விஷயத்தில் உங்களுக்கு இருப்பதைவிட எனக்கு அக்கரை அதிகம். நாளை மாலை மூன்று மணிக்கு, நான் உங்களுக்கு ஒரு ‘காட்சி’ காட்டப் போகிறேன் சாஸ்திரிவாள். நீர் இரவு முழுதும் குத்து விளக்கடியில் உட்கார்ந்து கொண்டு உமது பஞ்சாங்கக் கட்டை எல்லாம் புரட்டிப் புரட்டிப் பார்த்தாலும், நாளை என்ன காட்டப்போகிறேன் என்பதைக் கண்டு கொள்ள முடியாது. ‘கமலா, அழகி! கமலா ஒரு யுவதி! கமலா, ஒரு விதவை! அவள் என் அருமைத் தோழி! அவளை நீங்கள் முற்றும் தெரிந்து கொள்ளவில்லை. நான் தெரிந்து கொண்டேன் இன்று போய், நாளை வாரும்! உமது மனம் முதலில் மருண்டு பிறகு குளிரும் காட்சியைக் காண்பீர்’ என்று சரசா கூறி விட்டு, பெண்கள் முன்னேற்ற சங்கத்திற்குப் போய் விட்டாள்.
“இதோ பாருங்கள் ! கப் சிப்” என்று இந்த அறையில் இருக்க வேண்டும். நான் அறையை வெளிப்பக்கம் பூட்டி விடப்போகிறேன்” என்று கூறி சரசா சாஸ்திரிகளை ஒரு அறையில் பூட்டி விட்டாள். மறுநாள் மாலை சாஸ்திரிகளுக்கு கொஞ்சம் பயம், இந்தப் ‘போக்கிரிப்பெண்’ என்ன சூது செய்வாளோ என்று. சிறிது நேரத்திற்குப் பிறகு பக்கத்து அறையிலிருந்து இரு மங்கைகள் மகிழ்ச்சியுடன் சிரிக்கும் சத்தம் கேட்டது. உற்றுக் கேட்டார் . ஆம்! சந்தேகமில்லை. தன் மகள் கமலாவின் சிரிப்புதான். இதுவரை, கமலா அப்படி சிரித்தது, அவர் கேட்டதில்லை. விதவைக்கு சிரிப்பும், களிப்பும் ஏது?
“கண்ணே சரசா, நான் இன்றே பாக்கியசாலியானேன். உன்னை நான் என்றும் மறவேன்” என்றாள் கமலம்.
“என்னை மறந்தாலும் மறப்பாய் கமலா! ‘எதுகுல காம்போதி’யை மறப்பாயோ” என்றாள் சரசா.
“போ, கமலா உனக்கு எப்போதும் கேலி செய்வது தான் வேலை. எங்களவர், “எதுகுல காம்போதி” ஆலாபனம் செய்வதை ஒரு முறை கேட்ட யார்தான் மறந்துவிடுவார்கள்” என்றாள் கமலா.
“பிளேட்டிலே கொடுத்து விடச் சொல்லு . அவர் வெளியிலே போய் விட்டாலும், நீ போட்டுக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்” என்றாள் சரசா.
பக்கத்து அறையிலே இருந்த சாஸ்திரியாருக்கு ஒன்றுமே விளங்கவில்லை. நட்சத்திர பலன், நாழிகைக் கணக்கு, தர்ப்பையின் மகிமை தெரியுமே தவிர, எதுகுல காம்போதி, என்ன தெரியும்?
என்னடா சனியன், எதுகுல காம்போதி! எங்களவர் கிராமபோன் பிளேட் என்று எதை எதையோ குட்டிகள் பேசுகின்றனவே என்று எண்ணித் திகைத்தார்.
“சரசா, என் விஷயம், எல்லா பேப்பரிலுமா போட்டு விடுவார்கள்” என்று கேட்டாள் கமலம்! “தடையில்லாமல்! பிரபல சாஸ்திரியின் மகள் ஸ்ரீமதி கமலத்திற்கும், சிவன் கோயில் நாதஸ்வர வித்வான் சுப்பிரமணியப் பிள்ளைக்கும் சீர்திருத்தமணம். ஸ்ரீமதி சரசாவின் முயற்சியால் இனிது நடந்தேறியது. அதில் ஜில்லா முன்சீப், தோழர் கதிரேசன் அவர்கள் தலைமை வகித்தார்.” எனக் கொட்டை எழுத்தில், போட்டோவுடன் வெளிவரும்” என்று சரசா கூறி முடிப்பதற்குள், சாஸ்திரிகள், ‘அடிபாவி! குடிகெடுத்தாயே! நான் என்ன செய்வேன். கமலா, என்ன வேலையடி செய்தாய்” என்று ஓவென அலறினார்.
“ஒன்றுமில்லை! பயப்படாதே கமலா! உங்க அப்பா, சீர்திருத்தத்தைக் கண்டு பயந்து அலறுகிறார். அவ்வளவு தான். கொஞ்ச நேரம் சென்று சரியாகிவிடும். சட்டப்படி உன்னை ஒன்றும் செய்ய முடியாது” என்று சரசா கூறினாள். பக்கத்து அறையில் கதவை, படேர் படேர் என உதைத்தார் சாஸ்திரிகள். ‘நாசகாரப் பெண்ணே, திற கதவை . நாதஸ்வரக்காரனைக் கட்டிக் கொண்டாயா! இதற்குத்தானா நாள் தவறாமல் நீ சிவன் கோயில் போனாய். நாசமாய்ப் போனவளே! எங்காவது குளத்திலே, குட்டையிலே விழுந்து சாகக்கூடாதா! கொண்டுவந்து வைத்தாயே என்குடும்பத்தில் கொள்ளியை” என்று கோவெனக் கதறினார்.
“சாஸ்திரியாரே! சாந்தமடையும். எல்லாம் ஆண்டவன் செயல்’ என்றாள் சரசா.
“போதும்மா, உன் பேச்சு. நீ ரொம்ப நல்லவள். பிறந்தாயே இந்த ஊரில், என் குடி கெடுக்க” என்றார் சாஸ்திரியார்.
“ஓய் சாஸ்திரியாரே, உமது மகள் செய்ததில் என்ன தவறு கண்டுவிட்டீர்? அவள் வேறு ஜாதியாளை மணந்து கொண்டதற்காக இங்கு மல்லுக்கு நிற்கிறீரே, உமது சங்கம் என்ன! கமலாவுக்குத் தெரியாது – எனக்குமா தெரியாது என்று எண்ணுகிறீர். எங்கள் சங்கத்து வேவுகாரரிடம் உமது “ஜாதகம்’ அத்தனையும் இருக்கிறது. பேசுவது, வேத
வேதாந்தம்! வேஷமோ, சனாதனம். நடத்தை எப்படி? ஏன் சாஸ்திரிகளே, உமது வைப்பாட்டி வள்ளி, யார், எந்த இனம்! சொல்லட்டுமா கமலாவுக்கு!” என்று கோபத்துடன் கேட்டாள் சரசா. சாஸ்திரியார், “சிவ! சிவ! சம்போ மகாதேவா! உனக்கு என்ன அபசாரம் பண்ணினேனோ, என் தலையிலே இப்படி இடி விழுகிறதே” என்று அழுதார்.
“சரி, கேளும், மேலும் சில சேதியை. கமலாவும் சுப்பிரமணியமும் இன்றிரவே புறப்பட்டு சென்னை போகிறார்கள். அங்கேதான் குடி இருப்பார்கள். நானும் அடுத்தவாரம் அங்கே போகிறேன்” என்றாள் சரசா.
“ஏண்டி, சரசு! இது என்னடி பெரிய வம்பாகிவிட்டது’ என்று கூறிக் கொண்டே, சரசாவின் தாயார், சாஸ்திரியாரை அறையை விட்டு வெளி ஏற்றினார். கமலாவை திரும்பிக்கூட பார்க்காது, அவர் வீடு சென்றார்.
அன்றிரவே கமலாவும் அவளுடைய காதற் கணவன் சுப்பிரமணியமும் சென்னை சென்றனர்.
சரசா புன்சிரிப்புடன், தாயை நோக்கினாள். “ஏனம்மா, விதவைக்கு மணமுடித்து வைக்கிற திறமை எனக்கு இருக்கும் போது, என்னை ஒரு கிழவனுக்குக் கொடுக்க, ஏற்பாடு செய்தாயே” என்று கேலி செய்துவிட்டு, “இதோ பாரம்மா படத்தை ! இவரைத்தான் நான் அடுத்த வாரம் மணம் செய்து கொள்ளப் போகிறேன்” என்று கூறிக் கொண்டே, ஒரு ‘போட்டோ’ வைக் காட்டினாள்.
சரசாவின் தாய், அதைப் பார்த்தாள். “படம்! ஒரு வசீ கரமான இளைஞனுடையது! நாகரிகமான உடை! நல்ல தோற்றம். “
“யாரம்மா இது? என்ன ஜாதி” என்றாள் தாயார்.
“இவர் தானம்மா எனக்கு கணவராக வரப்போகிறவர். ஜாதி, ஆண் ஜாதிதான் — எனக்கு அவ்வளவுதான் தெரியும்” என்று கூறிக் கொண்டே தாயின் கன்னத்தை அன்போடு கிள்ளினாள்.
“நீ செய்வது எனக்கொன்றும் பிடிக்கவே யில்லை. குலத்தைக் கோத்திரத்தை எல்லாம் கெடுக்கிறாய்” என்றாள் தாய்.
“எதைக் கெடுத்தேனும் நான் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்பதுதானே அம்மா உன் ஆசை ‘ என்று கொஞ் சினாள் சரசா.
தாயாரால் ஒன்றும் பதில் சொல்ல முடியவில்லை.
“போடி பொல்லாத சிறுக்கி! நீ எப்படியோ சுகமாக இரு. பார்த்து மகிழ்கிறேன் நான்” என்று கூறினாள் தாயார்.
– குடியரசு, 1939.
– கோமளத்தின் கோபம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1982, பூம்புகார் பிரசுரம், சென்னை.
![]() |
காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை (C. N. Annadurai) (15 செப்டம்பர் 1909 - 3 பெப்ரவரி 1969), தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பமொன்றில் பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் முதல் பங்களிப்பாளராக அண்ணாதுரை விளங்குகின்றார். முதன்முதலில்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
நீதிக்கு தண்டனை
நா.ரங்கராசன்
August 4, 2026
உண்மை சுடும்
என்.ஸ்ரீதரன்
August 4, 2026
கிணறு
ஜே.எம்.சாலி
August 4, 2026
