மனமாற்றம்
கதையாசிரியர்: கல்பனா ராஜகோபால்
தின/வார இதழ்: மங்கையர் மலர்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: September 24, 2026
பார்வையிட்டோர்: 1,058

கலாவின் மனம் அன்று அதிகாலை முதலே சமையலறையில் மிகவும் பரபரப்பாக இருந்தது.
கேசரிக்கு நெய்யில் வறுத்த முந்திரியின் மணம் வீடு எங்கும் பரவியது அன்று.
மகன் ஷாமின் பிறந்த நாள். அதனால் அவனுக்கு பிடித்தமான கேசரி, வடை, பூரி என்று மெனு போட்டு வைத்திருந்தாள்.
கலா அவள் வீட்டின் ஒரே செல்ல மகள். அவளை திருமணம் செய்து கொண்ட ரவியும் வீட்டிற்கு ஒற்றைப் பிள்ளைதான்.
நல்ல வசதியுடன் கூடிய வாழ்க்கை.
ரவியின் அம்மா அன்பானவர், ஆனால் கொஞ்சம் அந்தஸ்து பேதம் பார்ப்பவர்.
எதையும் கொஞ்சம் ஆடம்பரமாக செய்ய வேண்டும் என்று நினைப்பவர்.
அதிலும் குறிப்பாக இந்த வீட்டின் முதல் வாரிசு என்றால் சும்மாவா?
ஒரு மாதமாக பேரனின் பிறந்த நாளை விமர்சையாகக் கொண்டாட எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்தார். மாலை வேளையில் விருந்தினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மற்றும் இரவு உணவுக்கு மிகவும் பிரபலமான ஹோட்டலில் ஆர்டர் செய்து இருந்தார்.
அந்த வீட்டில் திருமணத்திற்கு பிறகு கலாதான் எல்லாம் என்றாலும், கலா பங்கஜத்தை கலந்து கொள்ளாமல் சிறு துரும்பைக் கூட அசைக்க மாட்டாள்.
அன்று வீட்டில் அனைவரும் வழக்கம்போல் இருந்தாலும், அவள் உள்ளத்தில் ஓர் இனம் புரியாத மகிழ்ச்சி மலர்ந்து கொண்டிருந்தது. அது இந்த வருடம் ஷாமின் பிறந்த நாளை சாதாரணமாக கொண்டாடாமல், ஒரு அர்த்தமுள்ள நாளாக இருக்க வேண்டும் என்று அவள் முடிவு செய்திருந்தாள்.
கணவனிடம் “ரவி, நீ சீக்கிரம் ரெடி ஆகி வா… நம்ம போகணும்,” என்று அவள் மெதுவாக சொன்னாள்.
ரவி சிரித்தான். “எங்கேன்னு இன்னும் சொல்லலையே?” என்று கேட்டான்.
“போனா தெரியும்,” என்று கலா கண்களில் ஒரு சின்ன சிரிப்புடன் பதில் அளித்தாள்.
அந்த சிரிப்புக்குள் சிறிய பதற்றமும் இருந்தது. காரணம் – இந்த திட்டம் பற்றி அவள் மாமியார் பங்கஜத்திடம் சொல்லவில்லை. பங்கஜம் ஒவ்வொரு விஷயத்தையும் அளந்து பார்த்து முடிவு செய்வார். “இப்படி ஆசிரமம் எல்லாம் வேண்டாம், எதுக்கு?” என்று கேட்பார் என்பது கலாவுக்கு நன்றாகத் தெரியும்.
அவளது அப்பா வெங்கடேஷ், ஒவ்வொரு பிறந்த நாளிலும், திருமண நாளிலும், தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள ஒரு ஆசிரமத்திற்கு சென்று அங்குள்ளவர்களுடன் உணவை பகிர்ந்து கொண்டாடுவார். “நம்ம சந்தோஷம் நமக்குள்ள மட்டும் இருந்தா அது சிறியது. அதை பகிர்ந்தால் தான் அது பெரிதாகும்,” என்று சொல்லுவார்.
அந்த வார்த்தைகள் கலாவின் மனதில் ஆழமாக பதிந்திருந்தது.
அதனால்தான், ஷாமின் பிறந்த நாளை அருகிலுள்ள முதியோர் இல்லத்தில் கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்தாள். வழக்கமாக அப்பா அம்மாவுடன் செல்லும் முதியோர் இல்லத்தின் ஒரு கிளை கலாவின் வீட்டின் அருகே அமைந்துள்ளது அவளுக்கு எளிதாக இருந்தது.
அம்மாவும் அப்பாவும் வியாபார விஷயமாக வெளிநாடு சென்று இருந்தனர்.
ஆனாலும் அப்பா வெங்கடேஷ் அந்த கிளையில் பேசி சகல ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்தார்.
காலை முதலே கலா பிஸியாக இருந்தாள். கேக் ஆர்டர் செய்தாள், சிறிய பரிசுப் பொருட்களை தயார் செய்தாள், முதியோருக்கு தேவையான சில பொருட்களையும் எடுத்துக் கொண்டாள். ஷாம் மகிழ்ச்சியுடன் அவளை சுற்றி ஓடிக் கொண்டிருந்தான்.
“அம்மா, நாம எங்கே போறோம்?” என்று அவன் கேட்டான்.
அவர்கள் மூவரும் முதியோர் இல்லம் சென்றபோது, அங்கு ஒரு அமைதியான சூழல் இருந்தது. சில முதியோர் வெளியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். குழந்தையைப் பார்த்ததும் அவர்களது முகத்தில் ஒரு பிரகாசம் தெரிந்தது.
“பிறந்த நாளா?” என்று ஒருவர் கேட்டார்.
“ஆமாம்,” என்று கலா மெதுவாக சொன்னாள்.
“ஆமாம் தாத்தா, எனக்கு பிறந்தநாள். என்னை ஆசீர்வதிங்க தாத்தா,” என்று சட்டென அந்த பெரியவரின் காலில் விழுந்தான் ஷாம். அதைக் கேட்ட அந்தப் பெரியவர் “அச்சோ என் செல்லமே,” என்று குனிந்து வாரி அணைத்துக் கொண்டார்.
சிறிது நேரத்தில் அந்த இடம் உயிர் பெற்று விட்டது. ஷாம் கேக் வெட்டினான். முதியோர் கைத்தட்டி வாழ்த்தினர். அந்த கணத்தில் சிலர் கண்களில் நீர் மிதந்தது.
கலா கேக்கை தட்டில் வைத்து “கண்ணா, இந்தா எல்லா பாட்டி தாத்தாக்களுக்கும் கொடு,” என்று ஷாமின் கைகளில் கொடுத்தாள்.
அந்த முதியோர் இல்லத்தில் குழந்தையின் சிரிப்பு, முதியோரின் பாசம் அந்த இடத்தை மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் மாற்றி இருந்தது. கலா அந்த காட்சியை பார்த்தபோது, அவள் அப்பாவின் வார்த்தைகள் மீண்டும் மனதில் ஒலித்தது.
“நம்ம சந்தோஷம் பகிர்ந்தால்தான் அது உண்மையிலேயே பெருகும்.”
ரவி அவளிடம் நெருங்கி மெதுவாக சொன்னான், “இதை நீ வீட்டிலேயே சொல்லியிருந்தா, அம்மாவும் வந்திருப்பாங்க. அவருக்கும் இதைப் பார்த்தா சந்தோஷம்தான் இருக்கும்.”
கலா சிரித்தாள். “அம்மாவிடம் சொல்லவில்லை, ஆனால் அப்பாவிடம் சொல்லிவிட்டு தான் வந்துள்ளேன்,” என்றாள்.
அவளை ஆச்சரியமாக பார்த்த ரவி,
“அவருக்கு சொன்னாயா? என்ன சொன்னார் அப்பா?” என்றான்.
அதற்கு கலா, “நீங்க புறப்பட்டு போங்கம்மா, நான் அம்மாவுக்கு புரிய வச்சு கூட்டிட்டு வர்றேன்’னு சொன்னாரு,” என்றாள்.
ஆயிற்று, அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி காலை உணவை தேவைகளை கேட்டுக் கொண்டு எடுத்துக் கொடுத்து உண்ணச் செய்தாள் கலா.
அதே டேபிளில் ரவியும் ஷாமும் சில பெரியவர்களுடன் அமர்ந்து பூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அதே நேரம் அங்கு வந்து சேர்ந்தார் பங்கஜம். அவரை பார்த்ததும் “வாங்க அத்தை,” என்ற கலாவை பார்த்து பங்கஜம் மெளனமாக இருந்தார். ஆரம்பத்தில் ஒன்றும் பேசவில்லை. முகத்தில் எதையும் வெளிப்படுத்தவில்லை.
“அத்தை, நான் உங்ககிட்ட சொல்லாம இந்த ஏற்பாடு செய்தது தவறுதான். என்னை மன்னிச்சிடுங்க,” என்று கலா தலையை குனிந்து சொன்னாள்.
சில நொடிகள் அமைதி.
பிறகு பங்கஜம் மெதுவாக கேட்டார், “இங்க இருந்தவர்களுக்கு சந்தோஷமா இருந்ததா?”
கலா தலை தூக்கி பார்த்தாள். “ரொம்ப சந்தோஷமா இருந்தாங்க அத்தை…” என்றாள்.
அதைக் கேட்ட பங்கஜம் ஆழமாக மூச்சை விட்டார்.
“நான் சின்ன வயதில்… எங்க ஊர்ல என் தூரத்து உறவில ஒரு பாட்டி இருந்தாங்க. வசதி படைத்தவர். அவருக்கு வாரிசு யாரும் இல்ல. கணவர் இறந்த பின் தனியா இருந்தார். அவரிடம் யாராவது ஒருவர் பேசினாலே அவர்களுக்கு நாள் முழுக்க சந்தோஷம். ரொம்ப தைரியமானவர், நல்ல திடகாத்திரமா இருப்பாங்க. நான் கூட சில சமயம் போய் உட்கார்ந்திருப்பேன்… ஆனா சில வருடங்களுக்கு முன்ன ஒரு நாள் அவங்க காணாம போயிட்டாங்க. ஊரில் இருந்தவர்கள் ஒரு நாள் அவரை ஏதோ ஒரு கோவில் வாசலில் பார்த்ததா சொன்னாங்க. அப்பெல்லாம் இந்த மாதிரி முதியோர் இல்லம் உதவி எல்லாம் இல்லை.
அன்னைக்கு முதல் எனக்கு முதியோர் இல்லம் என்று சொன்னாலே, எங்கே அந்தப் பாட்டியை நான் பார்த்துவிடுவேனோ என்று எனக்குள்ள ஒரு பயம். நல்லா வசதியா வாழ்ந்தவங்களை நான் எப்படி பார்ப்பேனோ என்று மனசுல ஒரு அச்சம். அதனால் தான் எனக்கே இந்த மாதிரி இடத்திற்கு வர்றது பிடிக்கலை,” என்ற பங்கஜம் கண் கலங்கினார்.
“நீ சொல்லாட்டியும் என் தம்பி, அதான் உங்க அப்பா, எல்லாத்தையும் விவரமா போன்ல சொன்னாரு,” என்று அவள் பேசிக் கொண்டே இருந்தாள். குரல் மெதுவாக உணர்ச்சியால் நடுங்கியது.
“பங்கஜவள்ளி, இது உன் பேரனா?” என்ற குரல் அவளை அப்படியே ஸ்தம்பிக்க வைத்தது.
“அட இது நம்ம லக்ஷ்மி பாட்டி குரலாச்சே!” என்று ஆர்வத்தோடு குரல் வந்த திசையை நோக்கினாள்.
அங்கே பங்கஜம் சொன்ன அந்த லக்ஷ்மி பாட்டி தான். அவளை அப்படியே கட்டி அணைத்துக் கொண்டார்.
“எப்படி இருக்கே பங்கஜவள்ளி?” என்று அவளின் முழுப்பெயரையும் சொல்லி அழைத்தாள்.
ஊரில் எல்லோரும் அவளை பங்கஜம் என்று அழைக்க, பாட்டி மட்டும்தான் எப்போதும் பங்கஜவள்ளி என்று முழுப் பெயர் சொல்லி அழைப்பது வழக்கம்.
“பாட்டி, எங்கே போயிருந்தீங்க இவ்வளவு நாள்?” என்று கண்ணீருடன் அவரின் கையைப் பிடித்துக் கொண்டாள்.
“பாட்டி, நீங்க கோவிலில்…” என்று சிறிது தயக்கத்துடன் கேட்டாள்.
“புரியுது. நானே சொல்றேன்,” என்றார் லக்ஷ்மி பாட்டி நிதானமாக.
“அந்த நாளைக்கு நான் டவுன்ல இருக்கற எங்க வக்கீலை பார்த்து என் சொத்துக்களை வைத்து, அனாதையாக இருக்கறவங்களுக்கு ஒரு வசதி செய்து தரலாம்னு ஏற்பாடு பண்ண போயிருந்தேன். அப்புறம் அங்கயே ஒரு வீடு பார்த்து தர சொல்லி தங்கிட்டேன்.
அங்கே அருகில் உள்ள கோவில்களில் அன்னதானம் செய்ய ஏற்பாடு செய்துட்டேன்.
இந்த இடம் கூட தாத்தா ஒரு காலத்துல வாங்கிப் போட்டது. இதுல கட்டடம் கட்டி இந்த நிர்வாகத்தை நாலு படிச்சவங்களை வைத்து நடத்திட்டு இருக்கேன்,” என்றார்.
அவர் சொல்வதை கண்கலங்க பிரமிப்புடன் கேட்டுக் கொண்டு இருந்தாள் பங்கஜம்.
“பணம் காசு மட்டும் ஒருத்தருக்கு சந்தோஷம் தராது. பணம் இருக்கிறவங்க இல்லாதவங்களுக்கு பகிர்ந்தால் தான் அது பெருகும்,” என்ற லக்ஷ்மி பாட்டியின் குரல் மெதுவாக உணர்ச்சியால் நடுங்கியது.
பங்கஜம் கலாவை பார்த்து,
“நீ இன்றைக்கு செய்தது… அது பெரிய விஷயம். நான் நினைக்காத விஷயம்,” என்றாள். “அடுத்த தடவை… என்னையும் கூட்டிக்கொண்டு வா,” என்று மெதுவாக சொன்னார்.
கலா ஆச்சரியமாக பார்த்து கொண்டு, “சரிங்க அத்தை,” என்றாள்.
ரவி நிம்மதியாக சிரித்தான். ஷாம் ஓடி வந்து பாட்டியை கட்டிப்பிடித்துக் கொண்டான்.
“பணம் படைச்சவங்க அதை மத்தவங்களுக்கு கொடுக்க நல்ல மனசு இருக்கணும்” என்ற லஷ்மி பாட்டியின் வார்த்தை பங்கஜத்தின் மனிதில் ஒரு புதிய மாற்றத்தைத் தந்தது.
அன்று மாலை வீட்டில் நடந்த பேரனின் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்திற்கு இல்லத்தில் உள்ள அனைவரையும் அழைத்து வர ஏற்பாடு செய்தார். அங்கே ஒரு புதிய மகிழ்ச்சி நிலவியது – அது மன மாற்றத்தால் கிடைத்த மகிழ்ச்சி.
எதையும் புரிந்துகொள்ளும் மனம் கிடைத்தால் – அதுவே வாழ்க்கையின் மிகப்பெரிய வரம் என்று கலா மனதில் நினைத்துக் கொண்டாள்.
– மே 2026, மங்கையர் மலர்.
![]() |
பெயர்: கல்பனா ராஜகோபால்வயது: 56எழுதிய சிறுகதைகள்: 25பிரசுரமானவை: 12 கல்கி/மங்கையர் மலர் ஆன் லைன்: 11 சிறுகதைகள் தளம்: இங்கே படிக்கலாம் ஆரம்ப எழுத்தாளரான நான் கடந்து ஒரு வருட காலமாக கட்டுரைகள் மற்றும் கதைகளை கல்கிக்கு எழுதி வருகிறேன்.மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
அந்நியம்
மேலாண்மை பொன்னுச்சாமி
September 24, 2026
கூண்டை விட்டு வெளியே வா
ஸ்ரீ.தாமோதரன்
September 24, 2026
சரசுவின் சௌந்தர்ய லஹரி
கவிஞர் கண்ணதாசன்
September 24, 2026
