கூண்டை விட்டு வெளியே வா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 24, 2026
பார்வையிட்டோர்: 1,048 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

ரேகாவிற்கு இப்பொழுதெல்லாம் மனசு அயர்ச்சியாய் இருக்கிறது. அப்பா இருந்த பொழுது தினமும் அவளிடம் எந்த விஷயத்தையும் ஆலோசிக்காமல் செய்ததில்லை. இந்த இருபது வருட குடும்ப வாழ்க்கையில் கணவனும் மனைவியும் குழந்தைகள் குடும்ப விஷயங்கள் பேசுவதற்கே நேரம் சரியாக இருந்தது.

தானும் ‘இதுதான் உலகம்’ என்று இருந்து விட்டோமோ? குழந்தைகள் பெரியவர்களாக ஆக ஆக, அவர்கள் உலகை விட்டு தான் விலகி நிற்பது போல தெரிகிறது.

ராஜேஷ் உங்கிட்ட பேசணும், அன்பு சொன்னவுடன் வியப்பாய் கண்களை விரித்தான்

என்ன விஷயம் அன்பு, எதுவா இருந்தாலும் இங்கேயே பேசேன், அதுக்கு எதுக்கு டைம் கேட்கறே.

இல்லை பாபுவும் வர்றேன்னான், அவன் வந்த பின்னாடிதான் பேசணும், நீ எங்கியாவது வெளியே போயிடக் கூடாதுன்னுதான் முதல்லயே சொல்லி வைக்கிறேன்.

ராஜேசுக்கு மெல்லிய கோபம் வந்தது, இதுவரை அன்பு இப்படி தயங்கி தயங்கி பேசியவன் அல்ல.

இங்க பாரு எதுனாலும் ஓபனா பேசு, என்ன சொல்ல போறே..!

பாபு அப்பொழுதுதான் உள்ளே வந்தவன் இருவரின் உரையாடலை கவனித்த்து என்னாச்சு அன்பு, ஏன் ராஜேஷ் டென்சனா இருக்கான்?

நம்ம கம்பெனி விஷயமா கொஞ்சம் பேசணும்னு சொன்னேன், அதுக்கு குதிக்கறான்.

அன்பு பொய் சொல்லாதே, கம்பெனி விஷயம்னு இதுவரைக்கும் நீ சொல்லவே இல்லை.

மத்த விஷயத்தை பத்தி நான் உங்கிட்ட இதுவரைக்கும் என்ன பேசியிருக்கேன், அன்பின் குரலிலும் மெல்லிய சூடு.

பாபு இருவரையும் சமாதானப்படுத்தும் நோக்கில் ப்ளீஸ், ப்ளீஸ்..இரண்டு பேரும் உள்ளே வாங்க, அங்க போய் பேசிக்கலாம்.

உள்ளே போய் அவரவர் இருக்கையில் அமரிந்த பின்னாலும் அமைதியாய் இருந்தனர். யார் முதலில் பேசுவது.

பாபுதான் மெளனத்தை உடைத்தான், ராஜேஷ் உனக்கு நம்ம கம்பெனி நிலைமை புரியும்னு நினைக்கிறேன்.

பாபுவின் வார்த்தைகள் ராஜேசுக்கு புரியவில்லை. திடீருன்னு கம்பெனிய பத்தி கவலைப்படற மாதிரி பேசறே.

உண்மைதானே, நமக்கு இப்ப இருக்கறது இரண்டே இரண்டு காண்ட்ராக்ட்தான், அதுவும் இரண்டு கோடிக்குள்ளதான் வரும்.

ராஜேசுக்கு சிரிப்புடன் கோபம் வந்தது, முதல்ல பாபு ஒண்ணை புரிஞ்சுக்க, என்னமோ நீங்க மட்டும்தான் கம்பெனிய பத்தி கவலைப்படற மாதிரியும், எனக்கு அதை பத்தி அக்கறை இல்லாத மாதிரியும் பேசறீங்க. கம்பெனிய தொடங்கியதே நாந்தான்னு மறந்துட்டு.

அன்பு சட்டென்று எழுந்தவன் கத்தினான், எத்தனை நாள் இப்பபடி சொல்லிகிட்டே இருக்கப்போறே,

இங்க பாரு பாபு, நான் ஓபனாவே சொல்லிடறேன், “நான் ஆரம்பிச்சது” “நான் ஆரம்பிச்சதுன்னு” எத்தனை நாள் கேட்டுகிட்டு இருக்கறது, நான் விலகிக்கறேன், இந்த கம்பெனிய விட்டு.

பொறு, பொறு, ராஜேஷ் கோபப்படாதே, அமைதியா கேளு, இப்ப இருக்கற சூழ்நிலையில நாம மூணு பேரும் ஒண்ணா தொழில் பண்ணறது கஷ்டம்னு தோணுது, அதனால..

அதனால….

நீ பேசாம விலகிடு, இன்னைக்கு உட்கார்ந்து கணக்கு வழக்கு எல்லாம் பார்த்து உனக்கு எவ்வளவு பங்கு வரும்னு முடிவு பண்ணிக்கலாம்.

பாவுவின் வார்த்தைகள் ராஜேஷின் நெஞ்சில் சம்மட்டியாய் இறங்கின. என்ன சொல்றே.? குரல் கரகரத்தது.

கொஞ்ச நாளா நமக்கு கிடைக்கற ஆர்டர் கம்மியாகிட்டே வருது, நாம மூணு பேருக்கும் இது தோதுப்படாத பட்ஜெட்டா போகுது, அதனால அன்புகிட்ட பேசுனேன், அவன் நீ என்ன சொன்னாலும் சரின்னுட்டான், அதுக்கு பின்னாலதான் உங்கிட்டே இப்ப பேசறேன்.

ஏன் அவனை விலக சொல்றதுதானே?

அன்பு சட்டென சொன்னான், அதை நீ சொல்ல கூடாது.

ராஜேசுக்கு நன்றாக புரிந்தது, இருவரும் திட்டமிட்டு என்னை கழட்டி விட தயாராய் இருக்கிறார்கள்.

பழைய ஞாபகம் வந்தது, அப்பொழுது பாபு ராஜேஷிடம் கூட்டாளியாய் சேர்ந்திருந்த நேரம், ராஜேஷ் என்னோட சொந்தக்காரன் கூட்டு சேர்றேங்கிறான், வசதியான ஆளுதான், இஞ்சீனியரிங்கும் முடிச்சிருக்கான்,

பார்த்துக்க, ஆளு நம்ம கூட ஒத்து வருவானான்னு. மத்தபடி எல்லா “அக்ரிமெண்டும்” காண்பிச்சு சரின்னு ஒத்து வந்தான்னா சேர்த்துக்க. மத்தபடி நீ கணக்கு செலவு, இதை எல்லாம் பார்த்துக்க.

ராஜேஷின் உழைப்பு முழுக்க சுற்றி சுற்றி கட்டிட வேலைகளை ஆர்டர் பிடிப்பதிலேயே இருந்தது. அவனுடைய உழைப்பு “லட்சத்தில்” கட்டிட வேலை செய்தவர்கள் “கோடிக்கு” தாவுவதற்கு உதவியாக இருந்தது.

அப்படி சுற்றி சுற்றி ஆர்டர் பிடித்ததால் இவர்களுக்குள் என்ன நடந்திருக்கும் என்பது இப்பொழுது புரிந்து விட்டது.

அன்று மாலை வெளியே வந்த ராஜேஷின் மனம் சோர்ந்து போயிருந்தது. திட்டம் போட்டு காய் நகர்த்தி தன்னை வெளியேற்றி இருக்கிறார்கள். கம்பெனி “ப்ராண்டு” “பெயர்” எல்லாமே அவர்கள் பெயரில் இயங்கும். இவன் இல்லாமலேயே.

கணக்கு வழக்கு என்று எதை எதையோ காண்பித்து இவனது கணக்கிற்கு “நாற்பது லட்சம்” மட்டுமே வரும் என்று கணக்கை முடித்து விட்டார்கள்.

எங்கள் மீது நம்பிக்கை இல்லையென்றால் நீ ஆடிட்டரை வைத்து பார்த்துக்கொள், இல்லை அதிலும் திருப்தி இல்லை என்றால் கோர்ட்டில் வழக்கு போட்டு பங்கை பிரித்துக்கொள்.

ராஜேசுக்கு தெளிவாக தெரிந்தது. தன்னுடைய சூழ்நிலையை சாதகமாக்கி கொண்டார்கள். ஆடிட்டரை பார்த்து கணக்கை பார்க்க சொல்வது இனி நடக்காத காரியம். ஏற்கனவே எல்லாவற்றையும் சரி செய்திருப்பார்கள், வக்கீல் மூலம் என்றால் இந்த ‘பணம் கூட’ கோர்ட்டில் எப்பொழுது தீர்ப்பு வருகிறதோ அப்பொழுதுதான் கிடைக்கும், அல்லது கிடைக்காமலும் போகலாம்.

வீட்டில் கவலையுடன் நுழைந்தவனை வரவேற்ற ரேகாவுக்கு அவனின் முகம் காட்டிய சோகம் ஆச்சர்யமாக இருந்தது. எப்பொழுதும் சிரித்தபடியே உள்ளே வருபவன், குழந்தைகள் இருவருடனும் விளையாண்டு அதன் பின் இவளிடம் வந்து சிறிது நேரம் பேசிவிட்டு இவள் தரும் காப்பியை ருசித்து குடிப்பவன் இன்று எதுவும் பேசாமல் அமைதியாய் பேயறைந்தவன் போல் அமர்ந்திருந்ததை கண்டு பொறுத்திருந்தாள்.

இரவு படுக்கையில் எல்லா விஷயங்களையும் சொன்னவன், எல்லாம் போச்சு ரேகா, கிட்டத்தட்ட இருபது வருச உழைப்பு, இருபத்தி அஞ்சுல ஆரம்பிச்சு கடைசியில “நாற்பது லட்சத்தை” கையில கொடுத்து அனுப்பிச்சிட்டாங்க, இதுல வாங்கின சொத்துக்களை கணக்குலயே காட்டலை.

அமைதியாக கேட்டு கொண்டிருந்தாள் ரேகா. இது அவளுக்கு புதிய விசயம் அல்ல, அவள் பிரபல காண்டிராக்டரின் மகள், அவள் அப்பா ராஜேஷை தேடிப் பிடித்துதான் கல்யாணம் செய்து கொடுத்திருந்தார்.

அப்பொழுதே அம்மாவிடமும் இவளிடம் இது சம்பந்தமான விஷயங்களை பேசி கலந்திருக்கிறார்.

கவலைய விட்டுட்டு நிம்மதியா தூங்குங்க, ஏதோ உங்களுக்கு நன்மை வருவதற்கான சூழ்நிலைதான் இந்த விலகலான்னு எனக்கு தோணுது. நாளைக்கு காலையில இதை பத்தி பசங்க எல்லாம் ஸ்கூலுக்கு போன பின்னால பேசலாம், புரியுதா?

ரேகாவின் ஆறுதல் இவன் மனதுக்கு தெம்பாக இருந்தது. தூக்கம் மெல்ல கண்களை சுழற்ற நிம்மதியாய் கண்களை மூடினான்.

பகலில் ரேகாவும், ராஜேசும் அமர்ந்து பேசினர். பணம் நாற்பது லட்சத்தை வங்கியில் டெபாசிட்டாக போட சொன்னாள்.

தனது நகைகள் அனைத்தையும் அதே வங்கியில் அடமானமாக வைது பெரும் தொகையையும் அதே வங்கியில் டெபாசிட்டாக போட சொன்னாள்.

அத்தனையும் சொத்து மதிப்பாக காட்டி மகனின் பெயரில் கட்டிட ஒப்பந்தக்காரராக பதிவு செய்ய ஏற்பாடு செய்ய வைத்தாள்..

அடுத்தபடியாக இவன் இதுவரை அலைந்து பிடித்திருந்த எல்லா நிறுவனக்களை சென்று பார்த்து இவனது பதிவு செய்த கம்பெனியின் விவரத்தை தெரிவித்தான்.

காத்திருந்தான், விடாமல் அலைந்தான், மீண்டும் மீண்டும் பலரை சென்று பார்த்தான்.

ஒரு மாதம் ஓடியிருந்தது, மிஸ்டர் ராஜேசா? போனை முதலில் கையில் எடுத்த ரேகா, வணக்கம் ராஜேஷோட மனைவி பேசறேன், சொல்லுங்க

பெண் குரல்..எனக்கு ராஜேஸ் வேணும் தயக்கமாய் ஒலிக்க..

எதுவானாலும் தயங்காம என் கிட்டே சொல்லுங்க மேடம் நான் ராஜேஸ்கிட்ட சொல்லி உங்களை பார்க்க வர்றோம்.

இல்லை, எங்களுக்கு சொந்தமா மார்க்கெட் பக்கத்துலா பழைய வீடு ஒண்ணு இருக்கு, அதை இடிச்சு “இப்பத்த மாடல்ல” கட்டி தரணும், எங்க வீட்டுக்காரர் இவரை பத்தி சொன்னாரு அதான் விசாரிக்கலாமுன்னு கூப்பிட்டேன்.

உங்க வீட்டு விலாசம் சொல்லுங்க, அவரை வரசொல்லுறேன் இப்பவே.

நீங்களும் வருவீங்களா? வந்தா உங்ககிட்டே இன்னும் கொஞ்சம் விரிவா பேச முடியும், அதான்.

கவலையே படாதீங்க, பசங்க ஸ்கூலுக்கு போன பின்னால நானும் பிரீதான், அவர்கூடவே கிளம்பி வர்றேன். சரியா பத்துமணிக்கு நாங்க அங்கிருப்போம்.

தேக்யூ, நானும் எங்க பசங்களை காலேஜுக்கு அனுப்பிச்சுட்டு வெயிட் பண்ணறேன்.

பேச்சு வார்த்தை எல்லாம் முடிந்து வரும்போது ராஜேஷ் மனைவியிடம் செல்லமாய் சண்டையிட்டான். பாரு அந்தம்மா சொல்லுற ஐடியாவுக்கெல்லாம் தலையாட்டிட்டே, அதை எல்லாம் அவங்க சொல்ற பட்ஜெட்டுல செய்ய முடியுமா?

முடியும், முடிச்சு கொடுப்போம், தரமாவே செஞ்சு கொடுக்கலாம். அவன் கண்களை நேராக பார்த்து, உங்களோட இருபது வருட அனுபவுத்துல இது முடியாதா?

கண்டிப்பா முடியும் பார்ட்னர், சொன்னவன் உங்கப்பாவுக்கு நீ சரியான வாரிசுங்கறதை அந்தம்மா கிட்டே பேசும்போது புரிஞ்சிகிட்டேன். இந்த இருபது வருசத்துல இதுவரைக்கும் உன்னை இந்த தொழில் விசயமா எதுலயும் கலந்துக்கலையேன்னு வெட்கப்படறேன்.

இப்ப என் தொழில் பார்ட்னர், ஆலோசகர், அட்வைசர் எல்லாமே நீதான். அந்த அர்த்ததுல சொன்னேன்.

ரேகா மறைந்த தன் தந்தையை நினைத்து கொண்டாள். இவனை அவர்கள் கூட்டிலிருந்து விலக்கியது, தன்னை கூட்டிலிருந்து வெளியே கொண்டு வருவதற்குத்தானோ ?

dhamodharan பிறந்த வருடம் 1966, “கோவை மருத்துவ மையம்” (KMCH) கோயமுத்தூர். துணை மருத்துவமான ‘செவிலியர்’ கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். 1. இவரது சிறுகதை “நிலம் விற்பனைக்கு அல்ல” இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. 2. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” இவரது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ் பாடபுத்தகத்தில் இடம் பெற்றிருப்பது. இலக்கிய அங்கீகாரம் 3. “குவிகம்” இலக்கிய…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *