காலம் கடந்து விட்டது
கதையாசிரியர்: இரா.துரைமாணிக்கம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: August 16, 2026
பார்வையிட்டோர்: 13
(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சிங்கப்பூருக்கு வந்ததும் ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தேன். அதனால் வழக்கத்திற்கு மாறாக படுக்கையை விட்டு காலை கடன்களை முடித்துக்கொண்டு, முன்னதாகவே எழுந்து விட்டேன். காப்பி சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தேன். அங்கிருந்த கடையொன்றில் அன்றைய தினசரியை வாங்கிக்கொண்டு மெல்ல நடந்தேன். அருகிலிருந்த பூங்காவில் போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்து தினசரியைப் புரட்டினேன். எனக்குத் தேவையான பக்கம் வந்தது. உடனே விரைவாகப் பார்த்தேன். ஆமாம்! புதிய இடத்திற்கு வேலை மாற்றலாகி வந்துள்ள எனக்கு தங்குவதற்கு ஓர் இடம் உடனடியாக தேவைப்பட்டது. அதனால் வீடுகள் வாடகைக்கு விடப்படும் விளம்பரங்கள் வந்திருந்த பக்கத்தைப் பார்த்ததும் என் கண்கள் அதில் ஆழமாக பதிந்து விட்டது. அங்கே இடம் பெற்றிருந்த ஒரு விளம்பரத்துக்குரிய டெலிபோன் எண்களை எனது குறிப்பேட்டில் குறித்துக் கொண்டேன்.
அருகில் இருந்த தொலைபேசியில், குறிப்பேட்டில் குறித்து வைத் திருந்த எண்களைச் சுற்றினேன். கிர்.. கிர் என்று சிறிது நேரம் மணி ஒலித்தது. பிறகு “ஹலோ!” என்று இனிமையான ஒரு பெண்ணின் குரல் கேட்டது. “நான், உங்கள் விளம்பரத்தைப் பார்த்தேன். எப்போது வந்தால் அங்கு இருப்பவர்களைப் பார்க்கலாம்? வாடகை சம்பந்தமாக பேசலாம்?” என்று கேட்டேன். “நீங்கள் மாலை மணி ஐந்துக்கு வாருங்கள்” என்று கூறி போனை வைத்துவிட்டாள் அப் பெண்மணி.
பணி மனைக்குச் செல்ல வேண்டிய நேரம் நெருங்கவே நான் புறப்பட்டேன். அதிக வாகன போக்குவரத்து இல்லாத ஓர் இடத்திலி ருந்து இந்தச் சிங்கப்பூருக்கு வந்துள்ள எனக்கு. வேகமாகச் செல்லும் பேருந்துகள். வாடகை உந்துகள், உந்துகள் போன்றவைகளைப் பார்த்தவுடன் ஒரே வியப்பாக இருந்தது. புற்றிலிருந்து கிளம்பிய புற்றீசல்களைப் பார்த்துள்ள எனக்கு அதன் நினைவுதான் வந்தது.
நான் அமர்ந்திருந்த வாடகை உந்து ஒவ்வொரு சாலை சந்திப்பி லும் இருந்த போக்குவரத்து விளக்குக் கூண்டுகளில் நின்று நின்று சென்றது. அவ்வழிகளிலிருந்த வானுயர்ந்த கட்டடங்களையும் வளர்ந்திருந்த மரங்களையும் பலவண்ணப் பூச்செடிகளையும் பார்த்து வியந்து கொண்டிருந்தேன். அதே நேரத்தில் புது இடத்திற்குப் புதிய வேலைக்கு வந்துள்ள நான் எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்பதினை மனனம் செய்து கொண்டேன். அதோடு இங்குள்ளவர்கள் எவ்வாறு பழகுவார்களோ? எம்மாதிரி நடப்பார்களோ? என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.
ஒருவாறு நான் சேர வேண்டிய இடத்தை அடைந்தேன். கையிலிருந்த கடிதத்தைப் பார்த்தேன். அதில் இருந்த கட்டிடம் என் முன்னால் இருந்தது. மெதுவாக தலையை உயர்த்தினேன். முப்பது மாடிகளைக் கொண்ட கட்டிடத்தைப் பார்த்ததும் என் தலையே சுற்றிவிட்டது. மெதுவாக கட்டிடத்தின் நுழைவாயிலை அடைந்தேன். அங்கிருந்த அறிவிப்பு பலகையில் நான் போக வேண்டிய அலுவலகத்தின் பெயரைத் தேடினேன். அங்கிருந்த பெயர் பட்டியலில் எனது அலுவலகம் இருபதாவது மாடியில் இருந்தது. அதே இடத்தில் பல மின்தூக்கிகள் இருந்தன.
பத்து நிமிடங்களில் அந்த மாடியை அடைந்தேன். மின்தூக்கியை விட்டு வெளியே வந்த என் கழுத்தில் ஒரு மலர் மாலை விழுந்தது. “வாருங்கள் திரு.அன்பரசன்” என்று வரவேற்றார் என்னைவிட வயதில் கொஞ்சம் அதிகமான ஒருவர். தன் பெயர் பொன்னழகு என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
”ஓ! அப்படியா? உங்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றேன்.
“உங்களைப் பற்றியும் உங்கள் வருகையைப் பற்றியும் எனக்கு கடிதம் வந்திருந்தது” என்றார்.
பேசிக் கொண்டே அலுவலகத்திற்குள் நுழைந்தோம். அங்கே எங்களுக்காக பலர் வரிசையாக நின்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு எல்லாம் என்னை பொன்னழகு அறிமுகப்படுத்தி வைத்தார். அவர்களுக்கெல்லாம் நான் வணக்கம் கூறினேன். பிறகு அவர்கள் அனைவரும் தம்தம் பணிகளைச் செய்ய தங்கள் இடங்களுக்குச் சென்றார்கள். நானும் பொன்னழகும் அவரின் அறைக்குள் சென்றோம். முதலில் என்னுடைய பயணத்தைப் பற்றி கேட்டார். தன்னால் விமான நிலையத்திற்கு வர முடியாத காரணத்தையும் கூறினார். காப்பி வந்தது. பருகினோம். பிறகு பணிமனையைச் சுற்றி வந்தோம். எல்லாவிதமான குறிப்புகளையும் காட்டினார். எல்லாவற்றையும் மேலோட்டமாக ஓரளவுக்குக் கவனித்தேன். வீடு பார்க்க வேண்டும் என்று கூறி மதிய உணவுக்குப் பிறகு விடுதிக்குப் புறப்பட்டு விட்டேன்.
குறிப்பேட்டில் இருந்த எண்ணை எடுத்து மீண்டும் ஒரு முறை போன் செய்தேன். காலையில் கேட்ட அதே குரல்தான் மீண்டும் கேட்டது. “புறப்பட்டு வாருங்கள்” என்று கூறினாள். வாடகை வண்டியில் ஏறி அந்த இடத்தை அடைந்தேன். வீட்டிற்குள் ஒரு பெண், ஒரு நாய்க் குட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அந்தப் பெண்ணுக்கு ஏறக்குறைய இருபத்தைந்து வயது இருக்கும்.
அழைப்பு பொத்தானை அழுத்தினேன். சத்தம் கேட்ட அப்பெண் என்னைப் பார்த்தாள். நான் லேசாக புன்னகை செய்தேன். “நான் தான் போன் செய்தவன்” என்று கூறினேன்.
“வாருங்கள்! வாருங்கள்! உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்றாள்.
அவள் முன்னால் செல்ல, நான் பின்னால் சென்றேன். அவளின் முன்னால் ஓடி வந்த நாய்க்குட்டியைத் தூக்கிக் கொண்டு, “உங்கள் பெயர்” என்றாள்.
“அன்பரசு” என்றேன். என்னைப் பற்றிய வரலாற்றைச் சுருக்கமாகக் கூறி முடித்தேன். வரவேற்பு கூடத்தில் அமர்ந்திருந்த எங்களுக்கு மற்றொரு பெண்மணி சூடு பறக்க தேநீர் கொண்டு வந்து வைத்தாள். அவளும் இவளைப் போல் இருந்தாள். ஆனால் இவளை விட வயதில் குறைந்தவளாக இருந்தாள். அவர்கள் இருவரும் சகோத ரிகளாக இருக்க வேண்டும் என்று எண்ணினேன்.
“என்ன யோசிக்கிறீர்கள்?” என்றாள்.
”ஒன்றுமில்லை. என்னை எதுவுமே கேட்காமல் தேநீர் வந்து விட்டதே” என்றேன்.
“வீடு தேடி வந்தவர்கள் யாராக இருந்தாலும் முதலில் குடிக்க ஏதாவது கொடுத்து விட்டுதான் மற்றவற்றைப் பற்றி பேச வேண்டும் என்று என் தாய் அடிக்கடி கூறுவார். இது மாலை நேரம். மாலையில் அதிகமானோர் தேநீர்தான் குடிப்பார்கள். உங்களுக்குத் தேநீர் பிடிக்கும் தானே?” என்றாள்.
‘ஓ! பிடிக்குமே!’ என்று கூறி, கோப்பையைக் கையில் எடுத்துக் கொண்டேன். அவள் மற்றொரு கோப்பையை எடுத்துக் கொண்டாள். நான் தேநீரைக் குடித்தேன். என்னையே பார்த்துக் கொண்டிருந்த அப்பெண். என் முகத்தில் ஏற்பட்ட மாறுதலைக் கண்டவுடன், “என்ன தேநீர் சுவையாக இல்லையா?” என்றாள்.
“சமையலில் பெயர் பெற்ற அந்த நளனே, இந்த தேநீரைக் குடித்திருந்தால் தன்னுடைய சமையல் தொழிலை விட்டு விட்டு ஓடியிருப்பான்” என்றேன்.
“நீங்கள் ரொம்பவும் புகழ்கிறீர்கள்” என்றாள்.
”அப்படி இல்லீங்க. உண்மையைத் தான் சொல்கிறேன். இது மாதிரியான தேநீரை இதுவரையில் நான் குடித்தது இல்லை” என்றேன்.
“இவள் என் தங்கை. பெயர் தேவகி. இவள்தான் இந்த வீட்டின் சமையல் வேலைகளைக் கவனித்து வருகிறாள்” என்றாள்.
நான் அந்த அறையை கண்ணோட்டம் இட்டேன். அங்கு எந்தவிதமான ஆடம்பரமான பொருட்களையும் காணவில்லை. ஒரு பியானோ இருந்தது. வண்ணத் தொலைக்காட்சி பெட்டியும் சிறிய வானொலிப் பெட்டியும் இருந்தன. ஒரு மூலையில் தொலைபேசியும் இருந்தது. நான் அமர்ந்திருந்த சோபா நாற்காலிகளும் மிகவும் பழைமையாக இருந்தன. ஆனால் அழகாகவும் சுத்தமாகவும் இருந்தன. அங்கே ஒரேயொரு படம் மட்டும் மாட்டப்பட்டிருந்தது. அது ஒரு குடும்பப் படமாகும். அதில் பெற்றோர்களுடன் ஒரு பையனும் இரு பெண்களும் இருந்தனர். நான் அந்தப் படத்தைப் பார்ப்பதை கவனித்துவிட்டு அவள், “இது எங்கள் குடும்பப் படம். இதில் இருப்பவர் என் தந்தை தம்புசாமி. தாயார் தைலம்மை. தம்பி தங்கராசு. தங்கை தேவகி. நான்” என்றாள் “எல்லார் பெயரையும் கூறியவள். தன் பெயரை மட்டும் கூறவில்லையே என்று யோசிக்கிறீங்களா?” என்றாள். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. என் மனதில் இருந்தது இவளுக்கு எப்படி தெரிந்தது? என்று வியந்தேன். “அப்படி….வந்து ஒன்றும்” என்று தடுமாறினேன்.
“என பெயர் ரேவதி. நான் தான் இந்த வீட்டிற்கு மூத்தவள்.”
”அப்படியா! அழகான பெயர்” என்றேன்.
“உங்கள் பெயரும் தான் அழகாக இருக்கின்றது. அன்புக்கே மன்னனாயிற்றே” என்றாள்.
“நீங்கள் மிகவும் வெகுளியாகப் பேசுகிறீர்கள். உங்களை எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது” என்று சொல்லலாம் என நினைத்தேன். ஆனால் சொல்ல முடியவில்லை.
“சரி, நீங்கள் தங்க போகும் அறையைப் பார்க்கலாமா?” என்றாள்.
“வாடகை எதையும் பேசாமல்” என்றேன்.
“முதலில் அறையைப் பாருங்கள். பிறகு பேசிக் கொள்வோம்” என்றாள்.
அவளுடன் எழுந்து மேல் மாடிக்குப் போனேன். “இங்கே இரண்டு அறைகள் உள்ளன. இரண்டும் காலிதான். இதில் உங்களுக்குப் பிடித்தமான அறையை எடுத்துக் கொள்ளுங்கள்” என்றாள்.
வீட்டுக்கு அலையும் எனக்கு இன்று இப்படி ஒரு நிலையா? என்று எண்ணியபடி அறையின் உள்ளே சென்று பார்த்தேன். இரண்டு அறைகளும் ஒரே மாதிரியாக இருந்தன. “முதல் அறையை எடுத்துக் கொள்கிறேன்” என்றேன்.
“மாதம் நூறு வெள்ளி வாடகை” என்றாள்.
“உங்கள் அப்பா அம்மாவிடம் கேட்க வேண்டியதில்லையா?” என்றேன்.
“கேட்க வேண்டியதுதான். ஆனால் இப்பொழுது இல்லை. நீங்கள் விரும்பினால் இன்றே தங்கிக் கொள்ளலாம்” என்றாள்.
”என்னுடைய பெட்டி விடுதியில் இருக்கிறது. விடுதிக்கு இன்று வரையில் வாடகை. கட்ட வேண்டும். அதனால் நாளைக்கு வருகிறேன்” என்றேன்,
“நான் நாளைக்கு விடுப்பில் இருக்கிறேன். நீங்கள் எந்த நேரத்திலும் வரலாம்” என்றாள் ரேவதி.
”நான் வேலைக்குச் சென்றுவிட்டு. கொஞ்சம் சீக்கிரமாக இன்றைக்கு வந்தது போல் வந்துவிடுகிறேன்’ என்றேன்.
”சரி” என்றாள் ரேவதி. வாசல் வரை வந்து என்னை வழி அனுப்பி வைத்தாள்.
அவளிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டேன். இரவு உணவு நேரம் நெருங்கி விட்டதால் அதனை வழியில் கடையிருந்தால் முடித்துக் கொண்டு போய்விடலாம் என்று எண்ணி நடந்து வந்தேன். இவ்வளவு பெரிய வீட்டில் இவர்கள் இருவர் மட்டும்தானா இருக்கிறார்கள்? அப்படி என்றாள் அப்பா, அம்மா தம்பி எல்லாம் எங்கே? வெளியில் போயிருப்பார்களா? அல்லது. அதுதான் நாளைக்கு வந்து விடுவோமே, தெரிந்து கொள்வோம் என்று எண்ணியவாறு நடந்தேன்.
மறுநாள் மாலை ஐந்து மணியளவில் எனது பெட்டியுடன் ரேவதியின் வீட்டிற்குச் சென்றேன். பியானோ வாசித்துக் கொண்டிருந்த ரேவதி எழுந்து வந்து என்னை வரவேற்று, சாவியைத் தந்தாள்.
சாவியை வாங்கிக் கொண்டு மேலே சென்றேன். அந்த அறை சுத்தம் செய்யப்பட்டிருந்தது. என்னுடைய பெட்டியை வைத்துவிட்டு. எந்தந்த இடத்தில் எவற்றை வைத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன். ஒருவாறு முடிவுக்கு வந்த பிறகு குளித்துவிட்டு புதிய உடைகளை மாற்றிக்கொண்டு கீழே இறங்கினேன். தொலைக்காட்சியில் செய்தி நேரம். அதைக் கேட்டுக்கொண்டிருந்து விட்டு, பிறகு இரவு உணவுக்காக வெளியில் சென்று விட்டேன்.
நாட்கள் நகர்ந்தன. ஒரு நாள் ரேவதி வந்து, “நீங்கள் விரும்பினால் இரவு சாப்பாட்டை இங்கே வைத்துக் கொள்ளலாம்” என்றாள். அதைக் கேட்ட நான், “ஏன் உங்களுக்கு வீண் சிரமம்” என்றேன். ”இதில் எனக்கு எந்த சிரமமும் இல்லை. இந்த வீட்டு சமையல் பொறுப்பு தேவகியுடையது அவள் இந்தக் கருத்தை சொன்னாள். உங்களை சும்மாவா சாப்பிடச் சொல்கிறோம்? சாப்பிட்டுவிட்டு பணத்தை அவளிடமே கொடுத்து விடுங்கள்” என்றாள்.
சாப்பாட்டிற்காக ஏன் வீணாக வெளியில் அலைந்து கொண்டிருக்க வேண்டும்? இங்கேயே சாப்பிடுவோம் என்ற முடிவுக்கு வந்து நான், “சரி”, என்று ஒப்புக்கொண்டேன். அதன்பிறகு என் சாப்பாட்டு பிரச்சனையும் முடிந்தது. அதனால் எனக்கு ஓய்வு கிடைத்தது. அந்த ஓய்வு நேரத்தில் ரேவதி சதுரங்கம் ஆட அழைப்பாள். நானும் ஆடி எனது பொழுதை போக்கி வந்தேன். இவ்வாறு எங்களிடையே ஏற்பட்ட தொடர்பினால் ரேவதியின் பெற்றோரும், தம்பியும் கார் விபத்துக்குள்ளாகி இறந்த செய்தியைத் தெரிந்து கொண்டேன்.
ஒரு நாள் ரேவதியிடம் என் நண்பன் ஒருவன் இங்கு வருவதையும், அவனுக்கு தங்க ஓர் அறை தேவை என்பதையும் மெதுவாக கூறினேன்.
“உங்களைப் போல நல்லவராக இருந்தால் அழைத்து வாருங்கள்” என்றாள்.
என் மீது அவள் வைத்துள்ள நல்ல எண்ணத்தைப் புரிந்து கொண்ட நான், “அவன் மிகவும் நல்லவன்” என்றேன்.
“நீங்கள் கொடுக்கும் வாடகையைக் கொடுக்க வேண்டும். அந்த வாடகையை என் தங்கையிடமே கொடுத்து விடுங்கள்” என்றாள். “ஏன் அப்படி?” என்றேன்.
“இரண்டு பேர்கள் இருக்கிறோம். ஓர் அறையின் வாடகை அவளுக்கு மற்றொன்றின் வாடகை எனக்கு” என்றாள்.
“அப்படியே ஆகட்டும்” என்றேன். “அவனுக்கும் இங்கேயே சாப்பாட்டை வைத்துக் கொள்ளலாமா?” என்றேன்.
“அதை தேவகியிடம் கேட்டுக் கொள்ளுங்கள்” என்றாள். “நான் வந்து எப்படி, நீங்களே…”
“நீங்கள் நேராக அவளிடம் கேட்டுக் கொள்ளலாம். யோசிப்பதற்கு ஒன்றும் இல்லை” என்றாள். அத்தோடு நிற்கவில்லை, தன் தங்கையையுயம் அழைத்தாள். என்னைக் கேட்கச் சொன்னாள். நானும் கேட்டேன். தேவகி அதற்கு சம்மதம் தந்தாள்.
குறிப்பிட்ட நாளில் என் நண்பன் வந்தான். எல்லா வசதிகளையும் செய்து கொடுத்ததால் எனக்கு மிகவும் நன்றி கூறினான். திருமணம் ஆகாத அவனிடம் ஒழுங்கான முறையில் நடந்து கொள்ள வேண்டும். என் மீது வைத்துள்ள நல்ல மதிப்புக்கு எவ்விதமான களங்கமும் ஏற்படாதவாறு நடந்து கொள்ள வேண்டும் என்றேன். அவனும் அவ்வாறே நடப்பதாகக் கூறினான்.
அன்று ஞாயிற்றுக்கிழமை ஆனதால் என் நண்பன் யாரையோ பார்க்க வெளியில் சென்று விட்டான்.
நான் தனியாக என் அறையில் இருந்தேன். அப்போது என் அறையின் கதவைத் தட்டி, “நான் உள்ளே வரலாமா?”என்று கேட்டுக் கொண்டே நின்றாள் ரேவதி.
நான் எழுந்து நின்று, “தாராளமாக வாருங்கள்” என்றேன்.
“உங்களை விட எவ்வளவு வயதில் சிறியவள் நான். என்னைப் போய் வாருங்கள். போங்கள் என்று சொல்லாமா? வா… போ… என்று சொல்லக் கூடாதா?” என்றாள்.
“சொல்லலாம்” என்றேன்.
“உட்காருங்கள்” என்றாள். அவளும் உட்கார்ந்தாள். பிறகு. ”உங்களிடம் ஒரு முக்கியமான செய்தி பேச வேண்டும்” என்றாள்.
நான் அவளை விரும்புவது போல அவளும் என்னை விரும்புகிறாளா? அதைப்பற்றித்தான் பேச வந்திருக்கிறாளோ? என்று எனக்குள் நினைத்தேன். “ஓ! பேசலாமே” என்றேன்.
“உங்களின் நண்பருடைய போக்கு எனக்குப் பிடிக்கவில்லை” என்றாள்.
“ஏன்? என்ன செய்தான்?” என்றேன்.
”அவர் வந்து என் தங்கையிடம் நெருங்கி பழகுகிறார். அவர் என் தங்கையை விரும்புவதாகவும் திருமணம் செய்து கொள்ள என்னிடம் கேட்குமாறும் கூறியிருக்கிறார்” என்றாள்.
தேவகியை அவன் விரும்புவதாகவும், ரேவதியிடம் கேட்டுத் திருமணம் செய்து வைக்குமாறு என்னிடம் கூறியிருந்தான். அதனைக் காட்டிக் கொள்ளாமல், “அப்படியா? நான் அவளிடம் அதைப் பற்றி கேட்கிறேன்” என்றேன்.
பிறகு. நானே. ”அப்படி அவர்கள் ஒருவரை ஒருவர் விரும்பி னால் நாம் ஏன் தடை செய்ய வேண்டும்?” என்று மெதுவாக கேட்டேன்.
“அது எப்படி முடியும்? அவர் யாரோ? எப்படிப் பட்டவரோ?” என்றாள் ரேவதி.
“அவனைப் பற்றிதான் நான் முன்பே சொல்லி இருக்கிறேன். அவன் மிகவும் நல்லவன்” என்றேன்.
“எனக்கு என்னவோ விருப்பமில்லை. அதற்கு மேல் உங்கள் விருப்பம்” என்றாள்.
என்னை அவளோடு சேர்த்து பேசுவதைக் கண்டு வியந்த நான், “நீ கவலைபடாதே. நான் பார்த்துக் கொள்கிறேன்.” என்று கூறி என்னை அவளுடன் ஒன்றாக இணைத்துக் கொண்டேன்.
சில நாட்களில் ஒருவாறாக பேசி, ஒரு நாள் எந்த ஆடம்பரமு மின்றி பதிவு திருமணம் செய்து வைத்துவிட்டேன்.
“நான் கொஞ்சம் நாட்களுக்கு வெளியூர் சென்று வரலாம் என்று எண்ணியுள்ளேன். அதற்காக ஏற்பாடுகளையும் செய்துவிட்டேன்,” என்று ரேவதி என்னிடம் சொன்னாள்.
“தங்கையையும் அவளின் கணவரையும் தனியாக விட்டுவிட்டு வெளியில் செல்ல விரும்புகிறாயா? அப்படியே செய்” என்றேன். “எனக்கு லீவு கிடையாது, இல்லை என்றால் நானும் உன்னுடன் வருவேன்” என்றேன்.
அவள் புறப்பட்ட மறு வாரமே என்னை ஓர் ஆண்டு மேற்பயிற் சிக்கு ஜப்பானுக்குப் போகச் சொன்னார்கள். ஜப்பானுக்குச் சென்று. வந்த பிறகு என்னுடைய எண்ணத்தைச் சொல்லி அவளை என் துணைவியாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் ஜப்பான் புறப்பட்டேன்.
ஒரு வருடத்தை ஒரு நாளாக எண்ணி முடித்துவிட்டு வந்தேன். என்னை வரவேற்க விமான நிலையத்திற்கு ரேவதி கையில் ஒரு குழந்தையுடன் வந்திருந்தாள்.
“எங்கே தேவகியையும் அவள் கணவரையும் காணோம்?” என்றேன்.
“வீட்டில் போய் பேசிக் கொள்ளலாம் வாங்க” என்றாள்.
“பையன் அழகாய் இருக்கிறான். அப்படியே தேவகியை உரித்துக் வைத்திருக்கிறான்” என்று சொல்லி வாங்கி முத்தமிட்டேன்.
வீடு வந்த பிறகுதான் குழந்தை பிறக்கும்போது தேவகி இறந்து விட்டாள் என்றும், அத்துயரம் தாங்காமல் என் நண்பன் வெளியூர் சென்று இருப்பதாகவும் ரேவதி கூறினாள்.
அச்செய்தியைக் கேட்ட எனக்கு உச்சியில் வான் இடிந்து விழுந்த மாதிரி ஓர் உணர்வு ஏற்பட்டது.
சில நாட்களுக்குப் பிறகு திருமணம் பற்றிபேச்சு எடுத்தேன். அதற்கு ரேவதி, “திருமணமே செய்து கொள்ளக்கூடாது என்று எண்ணியிருந்தேன். ஆனால் உங்களை முதல் முதலில் பார்த்த அன்றே எனது உள்ளத்தில் உங்களுக்கு ஓர் இடம் கொடுத்து விட்டேன். ஆனால் நான் அதை எப்படி உங்களிடம் சொல்வது என்று தெரியாமல் இருந்துவிட் டேன். நீங்கள் என்னைக் கேட்பீர்கள் என்று எதிர்பார்த்தேன். அதுவும் நடக்கவில்லை” என்றாள் ரேவதி.
”காலம் வரும் சொல்வோம் என்று இருந்தேன்” என்றேன். “ஆனால் இப்போது காலம் கடந்து விட்டது” என்றாள்.
“ஏன் என்றேன்?”
“இதோ பாருங்ககள். கையில் என் தங்கை ஒன்றைக் கொடுத்து விட்டுப் போய்விட்டாள்” என்றாள்.
“அதனால் என்ன? நாம் குழந்தையை வளர்ப்போம்” என்றேன். “இதில்தான் சிக்கல். என் தங்கை குழந்தையை மட்டும் என்னிடம் கொடுத்துவிட்டுச் சென்றுவிடவில்லை. அவள் கணவனையும் கொடுத்து போய்விட்டாள்.”
“நீ என்ன சொல்கிறாய் ரேவதி?”
“இன்னுமா புரியவில்லை? உங்கள் நண்பருக்கு துணைவியாகவும், இவனுக்குத் தாயாகவும் இருக்குமாறு இறக்கும்போது கேட்டுக் கொண்டு போய்விட்டாள்”.
“அப்படியா! காற்றுள்ளபோதே தூற்றிக் கொள் என்பார்கள் முன்னோர்கள். அதனைச் சரியாகச் செய்யாத நான் உன்னை இழந்து விட்டேன்,” என்றேன்.
“நீயும் என் நண்பனும் என்றென்றும் இன்பமாக வாழுங்கள்” என்று மனமார வாழ்த்தினேன்.
ரேவதியின் கண்களில் நீர் வழிந்தது. அது ஆனந்தக் கண்ணீரா அல்லது துயரக் கண்ணீரா?
– காலம் கடந்து விட்டது, முதற் பதிப்பு: ஏப்ரல் 1990, 25வது ஆண்டு நிறைவு விழா, இந்தியர் பண்பாட்டு நிகழ்ச்சி ஏற்பட்டுக் குழு, சிங்கப்பூர்.
![]() |
இரா.துரைமாணிக்கம் (பிறப்பு: அக்டோபர் 15 1945) இவர் ஒரு சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளராவார். தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம் வேப்பக்குளம் எனுமிடத்தில் பிறந்த இவர் சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்து அங்கு விவேகானந்தர் தமிழ்ப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியையும், உமறுப் புலவர் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியையும் கற்றார். தமிழ், ஆங்கிலம், மலாய் போன்ற மொழிகளில் தேர்ச்சிமிக்க இவர் தமிழாசிரியராகப் பணியாற்றிவந்தார். அத்துடன் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் சார்பில் 1999ல் சிங்கப்பூர்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
அப்பாவுக்கு ஒரு கடிதம்
என்.ஸ்ரீதரன்
August 16, 2026
எனக்கெனவே… நீ… கிடைத்தாய்!
ஆர்.மணிமாலா
August 16, 2026
இருமனம் திருமணம்
மஞ்சுளா ரமேஷ் ஆரணி
August 16, 2026
