வைரஸ்




மனசு வலித்தது. ஓரே நாளில் எப்படி இந்த நடைமுறை மாற்றம்? அப்படி என்னதான் நான் தப்பு பண்ணினேன்?
வாட்ச்மேன், கேட்டு அடைத்த வாக்கில் சொன்னது காதில் விழுந்தது. இனிமே வீட்டுக்குள்ளே விட வேண்டாம் என்று ஐயாவின் உத்திரவு.
அப்போ அவளை, என் உமாவை எப்படிப் பார்ப்பேன்?
மாப்பிள்ளை முறுக்கி விட என் அப்பாவின் சின்ன திட்டமோ!
திருமணம் இன்னும் ஒரு மாதத்தில். எனக்கு இல்லாத உரிமையா?
எந்த அடக்குமுறைக்கும் நான் மசிய மாட்டேன்.
இது கண்டிப்பாய் அந்தக்கிழவியின் ‘திரிசம’ந்தான். மாமியார் நல்லவள். மாமனார் அப்பாவி மாதிரி நன்றாக நடிக்கிறார்.
ஹும்! திருமணம் நிச்சயம் செய்த பிறகு என் தயவு அவர்களுக்குத் தேவையில்லையே?
என்னைப் பிடிக்கவில்லையா? சே இந்தப் பெண்களையே அதிகம் நம்பக்கூடாது.
ஒரு வேளை எனக்கு ஆபீசில் பிரமோஷன் கிடைக்காத விஷயம் அவளுக்குத் தெரியுமோ?
யாராவது என் பழைய கதைகளை உமாவிடம் அவிழ்த்து விட்டிருந்தால்!
கமலிதான் இதைச் செய்திருப்பாள்.
பீர் சாப்பிட்டது, டேடிங் விஷயம், லவ் பெயிலியர், இவை எல்லாத்தையும் நானே முதல் இரவில் சொல்ல வேண்டும் என்று தானே நினைத்தேன்.
ஆனால் என் உமா இதையெப்படி நம்புவாள்
உடனே மொபைலைக் கையில் எடுக்க, ஈகோ தடுக்க, மொபைல் மீண்டும் உறக்கத்தில்.
இருள் படர ஆரம்பித்து, என் உற்சாகம் குன்றிய நிலையில், மனதில் கனத்துடன் பைக்கை ஸ்டார்ட் செய்தேன்.
மொபைல் திடீர் உயிர் பெற்று மறு முனையில் என் உமா.
சாரி. சேகர், திடீர்னு நியூஸ் வந்திச்சா, நான் எதுவும் சொல்ல முடியவில்லை. உங்க போன் அவுட் ஆப் கவரேஜ் னு வருது. இந்த வைரஸ் காலத்திற்கேற்ப நம்ம வீட்டுக்குள் இருந்தபடி எல்லா வேலைகளையும் பார்க்கலாம். நேரா சந்திக்க முடியாது.
எது உமா? எந்த வைரஸ்? எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.
எந்த விஷயமும் தெரியாதா? இப்படியா மலங்க மளங்க முழிப்பீங்க
நேரா வீட்டுக்குப் போங்க. கொஞ்சம் டிவி நியூஸ் பாருங்க. வைரஸ் வராமல் தடுங்க. மற்றது நாம் போன்ல தான் பேசணும். என்னங்க, புரிஞ்சுதா
எதோ புரிந்தமாதிரி தோன்றியது.
முதலில் புரிந்தது ‘ என்னங்க’; அப்ப கன்பர்ம்ட் தான்!
அடுத்தது, இப்படித்தான் அப்பாவும் எப்படி அம்மாகிட்டே பொறுமையா கேட்டுப் புரிந்து கொள்கிறார் என்று.
புரியாமல் போய்விடும் விஷயம். அட! எதையெல்லாம் நினைத்துப் பயந்தேன்!!! இதுதான் ஆண் மனசோ? வண்டியை ஸ்டார்ட் செய்து குதூகத்துடன் வீட்டை நோக்கித்திருப்பினேன்.