வேலை – ஒரு பக்க கதை





அழுக்கேறிய பேண்ட், கிழிந்த சட்டை, பரட்டைத் தலை, நீண்ட தாடி என்று பார்க்கவே அருவருப்பாக இருந்தவனை காரில் உட்கார்ந்தபடியே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான் மனோகர்.
காரின் அருகில் வந்து நின்றவனுக்கு ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்து அவனுக்கு கொடுக்கும்படி தன் டிரைவரிடம் கொடுத்தான்.
டிரைவர் கொடுத்த ரூபாய் நோட்டை வாங்கியவன் அதில் சில வாசகங்கள் எழுதி டிரைவரிடம் திருப்பிக் கொடுத்தான். ஆச்சரியத்துடன் வாங்கிய டிரைவர் அதை மனோகரிடம் கொடுத்தான்.
அதில், “நான் தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்ற பட்டதாரி. எனக்கொரு வேலை தாருங்கள்’ என்று எழுதியிருந்ததைப் படித்த மனோகர் கனத்த மனதோடு தன் விசிட்டிங் கார்டை கொடுத்து ஆபிசில் வந்து பார்க்கும்படி கூறினார்.
பைத்தியக்காரனுக்கு வேலை கொடுக்கப் போகும் முதலாளியை நினைத்து சிரித்தான் டிரைவர். தாடிக்கார தமிழ்ப் பட்டதாரியும், தன் முதலாளியும் ஒன்றாகப் படித்தவர்கள் என்பதை அறியாமல்!
– கே.எஸ். சம்பத்குமார் (ஜூலை 2011)