வேர்




(1994ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வரியம் ஒண்டாச்சு. வழக்கு இன்னும் விசாரணைக்கு எடுபடுகிறதாயில்லை. தவணையும் ஏழாச்சு. நெடுகலும் கோட்டில சும்மாபோய் நிண்டு தூங்கிப்போட்டு வாறதுதான் வேலை. இதுக்கு ஒரு முற்றில்லை. நீதவான் வழக்கைக் கூப்பிடுவார். கூட்டில ஏறமுந்தியே தொலுக்காரி “தவணை” என்பான்.
கோடு கச்சேரி பொலிஸ். என்றாலே நாய் அலைச்சல். மனுசருக்குப் பொல்லாத மாய்ச்சல். மாய்ச்சல்பட்டாலும் காரியம் முடியுதா? அதுவும் இல்லை. துலுக்கன் தொப்பி மாதிரி வாசிப்பாத்து வழக்கு இழுபடுகுது: கருமம் ஒப்பேறுவதாயில்லை.
நேரவிரயம். பொருள் பண்டச்செலவு. தேவை இல்லாத கரைச்சல். கோர்ட்டுக்கு வந்து போகிறதிலயே வாணால் போகிறது. தாயும் மோளும் கோட்டடிக்கு இழுபடுகிறதே தொழில்.
சீச்சீ, இதென்ன மானங்கெட்ட சீவியம்?
தவணைக்குத் தவணை புரக்கிராசி அப்புக்காத்து மாருக்கு அள்ளி இறைக்கவேணும். அவனவன் பணம் கறக்கிறதுக்காக வழக்கை வேணுமெண்டு இழுத்தடிக்கிறது சுபாவம். சங்கதி என்னெண்டுகேட்டால், நீதவான் தவணைபோட்டதாக ஒரே சாட்டு. ஆனால், இந்தப் புரக்கிராசி அப்புக்காத்துமார்தான், தவணைகேட்கிறது வழக்கம். இது ஊர் உலகத்துக்குத் தெரியாதெண்டு அவேக்கு எண்ணம்.
ஒரு வேளை “ரண்டுபேரும் சேந்து ஒருகையால வாங்கிறாங்களோ?” அவங்களைப் பொரிஞ்சு என்ன பிரயோசனம்? கோடேறியாச்சு. ஆக வேண்டியதைப் பாக்கிறதுதான் புத்தி.
பெண்பார்த்தால் சிரிக்கிற ஊர் உலகம் பெண்ணாய்ப் பிறந்தால் அழுதுமாயும். இந்த ஊர் அப்பிடி. அவள் இல்லை என்றால் இவன் நாயிலும் கடையன். பெண் தோற்ற உருவமே இன்பச்சுரங்கம். ஆடவன் கண்கள் கனல் கெந்த அலைவது அவளுக்காக. அவள்தான் இவன் ஆத்மா. இவன் தணலுக்கு அவள் தண்மை. இருந்தும் இவன் ஆண்மைக்கு இவள் வரை. வக்கிரக உலக முறை இது…
பொன்னம்மா புத்தகத்தில் கீறிவைத்த வாசகத்தைப் படித்துவிட்டு முகட்டைப்பார்த்தபோது கண்ணீர் பொலு பொலுத்து முகத்தில் தேம்பியது.
பெண்ணாகப்பிறந்த பொன்னம்மா இரண்டு பெண்களையும் வைத்துக்கொண்டு தனியாக எத்தனைக்கென்றுமாய்வது.
நொந்து பெற்றுத் தாலாட்டிச் சீராட்டி ஆராட்டி இரண்டு குமர்களையும் கண்ணுக்குக் குளுத்தியாக நாலு பேர் நாக்கு வளைக்காமல் வளர்த்தாச்சு.
நல்ல வடிவான கன்னிகள். மாம்பழ நிறப்பிள்ளைகள். செங்கரும்பான மாதுளங்கோது வாளிப்பு. மன்மதன் பார்த்தால் மயங்கி விழுவான். கண் காது மூக்கு முகம் எல்லாம் வண்ணக்கிளி சாடை. தேக வாகும் அப்படி எடுப்பு. ஒன்றுக்கொன்று கோசு போகாமல் தோதாக-அன்னக் கிளிகளாக வளர்ந்து போச்சுதுகள்.
பெண்குஞ்சுகளைப் பெற்ற பாசம். தாய் நெஞ்சில் பெண்ணிரக்கம் சுரந்து கொண்டது.
ஆனைகட்டி வளர்க்கலாம். பெண்பெற்று வளர்க்கிறது யாழ்ப்பாணமண்ணில் இரும்புப்பட்டறை. ஓயாமல் ஓயாமல் நெடுகிலும் ஒரே கண்டசீருக்குச் சம்மட்டி அடி.
தாயும் பிள்ளைகளும் தனிக்குடித்தனச்சீவியம் ஆண்பிள்ளை இருந்தும் ஆன துணை இல்லை. ரஞ்சன் கடைசிப்பையன். வயசு ஏழாகியும் விருந்தெரியாது. விரல் சுப்புகிற பழக்கம் இன்னும் விட்டுப்போகிறதாயில்லை. கொத்திப்பிசாசாக வந்திருக்கிறது. பிரயோசனம் இல்லாத சீவன். இவள் புருசனைத்தின்னி. அதுகள் தேப்பனைத் தின்னிகள்.
மூத்த தலைச்சன் பூமணி. உரிச்சு வச்சுத் தாய் தான். இளையது ராணி. அப்பரை அப்படியே அச்சடிச்ச மாதிரி. அவர் உருவசருவ சாங்கம். இந்த இளையது பெத்த வீட்டுக்கையே தேப்பனைப் படுக்கையில் போட்டுட்டுது ரஞ்சன் பிறந்த ஒரு வருஷத்தால தேப்பனைத் திண்டுட்டான்.
‘தாலி அறுந்த சீவியம்’
இவள் ‘அறுதலி’
‘மூத்ததுக்கு நேர் சீராய்ச் சடங்கு செய்து வைக்க, அது ‘கட்டினவனையும்’ விட்டுப்போட்டிருக்கு. அவன்பாவி கட்டின பிறகும் ‘சீதனம் கொண்டுவா’ வெண்டு நாண்டுகொண்டு நிக்கிறான். நான் தனிக்கட்டை மற்றக் குமரை வைச்சுக்கொண்டு என்ன செய்யிறது?’
மண்டை புழுத்த யோசனை.
கால் நீட்டியிருந்த பொன்னம்மா ‘வெத்திலத் தட்டம்’ எடுக்க மெல்லக் குனிகிறபோது, கிழுவந்தடியாட்டம் நாரிப்பூட்டு ‘நொறுக்’ கிட்டது.
நெற்றிப் புருவம் சுருங்கிற்று.
கொஞ்ச நாளாகக் கண் புகைச்சல், கைகால் உளைவு, நெஞ்சுக்குத்து, முதுகு வலி, பிடரி வாங்கல், தலையிடி……
‘சுவாதத் தெண்டலோ?
ராணி உள்ளே சட்டை தைச்சமணியம். தமிழரை அழிக்கிற தமிழ்ச்சினிமாப் பாட்டு ஒன்று குதூகலமாக மணி இலையாட்டம் வாய்க்குள் கிணுகிணுக்கிறது.
‘இதுக்கு வாறவனெண்டாலும் பணப் பிசாசுக்காறனாக இல்லாமல் இருப்பானெண்டா….?’
ஒரேகண்டசீருக்கு மூத்தவளால்தான் பொன்னம்மாவுக்கு யோசனை ஆனவாகில் ஊண் உறக்கம் இல்லை.
ஒருதன்ர கைப்பிடிச்சுப் போன குடும்பத்துக்க வீக்க தூக்கம் சண்டை சச்சரவுகள் வரத்தான் செய்யும், கட்டினவன் அவன் கல்லெண்னடாலும் கணவன் புல்லெண்டாலும் புருஷன். ஒருமாதிரி கண்டுங்காணாமல் ஒத்துமேவிச் சமாளிச்சு நடக்கிறதுதான் புத்தி. எப்பிடி எடுத்துச் சொன்னாலும் இது கேட்டாத்தானே? தேப்பன் மாதிரிப் புடிச்சி ராவி. அவர் குடுத்த செல்லம்தான். இப்ப அனுமார்ப் புடியில நிக்குது. இப்ப எனக்கு மூச்சு விட ஏலாமல் கிடக்கு. நாலு பேர் கேட்டா நான் எந்த நாக்கால பதில் சொல்றது? இளவயதில் வாழாவெட்டியா இருக்குதே. நல்லது பொல்லாதது சொல்ல ஏலாது. எப்பனெண்ண முந்திச் சீறி விழுகுது. ஒண்டையும் செவியில் ஏத்துறாளில்லை. கேட்டா, அவன் வேண்டாம் வேண்டாமெண்டு நாண்டுகொண்டு நிக்கிறாள்….
பாக்கை வெட்டி ரண்டு பிளவு வாய்க்குள் போட வில்லை. நெஞ்சு புரைக்கேறி இருமிற்று.
‘ம்…இருந்தாப்போல சீதனம் கேக்கிறானாம். கேக்கட்டன். அவன் கேட்டா இவளுக்கென்ன வாய்க்குள்ள முட்டையே? விருத்துறையாச் சொல்லுறது. சொல்லாள். இப்ப கோடேறியாச்சு…’
அடுப்புப் புகை கிடுகுக் கண்ணறைகளால் கக்குகிறது.
“டிய புள்ள, உதேன் உந்த அடுப்பு உப்பிடிப் புகையிது, ஏதேன் பச்சைத் தடி தண்டு வச்சனியே?”
புகை கண்மூட்ட பூமணிக்கு எரிச்சல் எடுத்தது. ஆத்திரம் தீர நாய்க்கு எறிந்த வாங்குப் பலகை அதன் குண்டிப் பூட்டில் பட்டு முற்றத்தில் சழன்றது. வால் குழைய, நாய் வாள் வாள் என்று ஓட்டம் பொட்டுப் பூந்து எங்கோ மறைந்தது.
“புள்ள, நீ உத முடிச்சப்போட்டு வந்து கெதியா வெளிக்கிடன். இன்றைக்கும் தவணை போடுறானோ ஆர் கண்டது?”
தலைக்குமேல் வெள்ளம் சாண் ஏறினால் என்ன முழம் ஏறினாலென்ன. காரியம் முத்திப்போச்சு. எத்தின நாளைக்கெண்டு பொத்தி மறைக்கிறது?
‘சீதனம் கேட்டு வாறவன் எவனெண்டாலும் குடும்பத்தில நேசமாக இருக்கமாட்டானெண்டு இவள் அப்பவே சொன்னவள். நான் விசரிகேக்கல்ல. ஏதோ நல்ல பெரிய உத்தியோகம் பாக்கிறனென்ட கெடுவில் ஆசைப் பட்டு, கடனத் தனியப்பட்டு அவன்பாவி கேட்ட சீதனம் குடுத்துத்தான் கட்டிவச்சன். இப்ப, கிளியப் பூனையின்ர கைவில் குடுத்தகணக்காப் போச்சு. ரண்டு வரியத்துக்குள்ள இப்பிடிக்கோடேற வருமெண்டு ஆர் நினைச்சது?’
அடுப்பில் உலை கொதிச்சுக்கொண்டிருக்கு.
இருந்தவாகில பூமணி மயிரைக் கொய்து குவித்து வாய்க்குள் அடைத்துக் கொண்டு நெஞ்சு குலுங்க வயிற்றைப் பொத்தியபடி வயிறு கும்ம பொட்டுக் கடவைக்கு ஓடிப் போனாள்.
குவாக் என்று ஓங்காளித்த களைப்பில் முகம் சில்லிட்டு, கன்னம் ஏகலும் கண்ணீர் சிதற நிமிர்ந்தாள். இந்தக் கோலத்தைப் பார்க்க இவள் தாய்க்குப் பொறுக்குதில்லை.
இதென்ன கோதாரி மாயமடி….?
கொதிச்சு உலை பொங்கி வளிந்தது.
ஆ, கொள்ளையில் போவான்… பிள்ளையும் தாயுமாக்கிப் போட்டானே… வழக்கு இறுகப் போகுதெண்ட பயத்தில மன்னிப்புக் கேட்டு இணக்கத்துக்கு வாறனென்டுசொல்லிக் கோட்டையும் ஏமாத்திப் போட்டானே… இதையெண்டாலும் யோசிச்சு இவள் சீவிக்கத் தெரியாமல் கிடந்து அழுந்திறாள். ஒற்றுமையாப் போடி பிள்ளை யெண்டாலும் மாட்டுதாம். எப்ப பாத்தாலும் அழுங்குப் பிடி. ஒருவாட்டி கோட்டுக்குப் போய் வாறதெண்டால் சும்மா கிடக்கே….?
ஆத்திரமான சோக வெப்பிசாரம் மனசில் அலையடியாகக் குமுறிற்று. கண்களில் மங்கலான கலங்கல்.
“உள்ளாளும் கள்ளாளுமா நடந்துபோட்டு உப்பிடி நிண்டா வயித்துப் புள்ள வழுக்கி விழுந்திடுமே? இஞ்சால வந்து முகத்தைக் கழுவிப் போட்டு வெளிக்கிடன் கூப்பிடேக்க சமூகங் குடுக்காட்டி நீதவான் வழக்கைத்தள்ளிப் போடுவார். புரக்கிராசி அப்புக்காத்துக்குக் குடுத்த காசும் வீணாப் போயிடும்…”
கன்னிப் பிள்ளைத்தாச்சி. இப்பிடி ஆகுமென்று நினைக்கவில்லை. தலை சுற்றுது. கண்மயக்கம் தெளியவில்லை. பார்க்கிற கண்ணுக்கு நிலம் பூஞ்சாணமாகத் தெரியுது. வயிற்றுக்குமட்டல் வாய்திறந்து பேசவிடுகுதில்லை. எலுமிச்சம்பழக்கோது கைக்குள் சிதைஞ்சு கிடக்கு. மூச்சுப் பிடிச்சு உறிஞ்சு மணந்தும் வயிற்றுக் குமட்டல் நிக்குதில்லை. ஓங்காளித்துச் சத்தி சத்தியா வருகுது.
பேதலித்துப்போய் நின்று தத்தளிக்கிறாள்.
“எடி புள்ள ராணி, உலை அடுப்பில் விட்டுப் போட்டு எழும்ப ஏலாமாக்கிடக்கு. நீ உந்தத் தையல விட்டுப்போட்டு உவள் கொக்காளுக்குத் தண்ணி அள்ளிக் குடு”
ராணி சினந்துகொண்டு கிணற்றடிக்குப் போகிறபோது வாய்க்குள் ஒரே புறுபுறுப்பு.
“உங்களோட பெரிய உத்தரிப்பாப் போச்சு”
பல்லு ராணி நறுமின தாய் சத்தம் வைத்தாள்:
“டிய ராணி, இதென்ன உன்ர கிழட்டுக் கதை?”
எலும்புச் கள்ளியாட்டம் ராணி மெலிஞ்சிருக்கிறாள். நரம்புத்தளர்ச்சியாக்கும். என்ன சொன்னாலும் மறுப்பு. எது சொன்னாலும் புறுபுறுப்பு. இவளாலும் தாய்க்கு ஒரே கவலை…
தன்னால் வீட்டில் எழுகிற பூகம்பம் பூமணிக்குச் சாடையாக வெளித்தது.
நெஞ்சு நீவி ஒரு பெருமூச்செறிந்தாள்.
முகம் கழுவித் தலை சீவிச் சேலை உடுத்து மகளும் தாயும் வெளிக்கிட நேரம் எட்டரை ஆகிவிட்டது.
“ராணி, உலை அடுப்பால இறக்கியாச்சு. கோடு முடிஞ்சு வர எந்நேரமாகுமோ தெரியாது கறியக் காச்சிச் சோத்தைத் திண்டுபோட்டு. ரஞ்சனோட பிராக்காய் இருந்து விட்டு அலுவலைப்பார். நாங்கள் போட்டு வாறம்”
“கோட்டடி உதில கிட்டத்தானே. வசுவுக்கு நிண்டு தூங்கிறதிலும் பாக்க நடந்து போவம்…”
றோட்டுக்கு ஏறுகிறதை நினைக்க நெஞ்சு கொஞ்சம் இடிக்கிறது.
அவனவே இருந்தாப்போல றக்கில ஜீப்பில வருவாங்கள்…
றோட்டில் வந்து நடக்கிறபோதும் தாய் வாய் பொரிந்து தள்ளிய மணியம்.
“ஆமிக்காரங்களொண்டால பெண் புரசுகளும் றோட்ல கீட்ல நடக்கேலாது… எங்கட சனங்கள் தங்கள் உரிமையக் கேக்க அவங்களென்னென்டா துவக்கைத் தூக்கிறாங்கள். அவங்கள் கதைக்கிறது எங்களுக்கு விளங்குதில்ல. நாங்கள் பரையிறது அவங்களுக்குப் புடிபடுகுதில்ல. அவன்ர கண்ணுக்கு இப்ப பெண் புரசு குழந்தை குட்டி கிழடு கட்டையெல்லாம் புழைகாறங்கள்… எங்கட இவன் விடுவானே? குதிச்சிட்டான். கோசு போகான். இருந்தா மானத்தோட சகோதரமா இருக்கிறது. இல்லாடிச் செத்திட்டுப் போறது. இஞ்ச பாக்கேலயே விட்டுக்க நடக்கிற கிலிசு கேட்ட நேர் சீராக் குடுத்துப்போட்டு இப்ப கோடும் கச்சேரியுமா நாணயசீலப்படுறான்…”
பூமணிக்கு எரிச்சலாக வந்தது.
“எணை. இந்த வாயை எப்பன் சும்மா வச்சுக்கொண்டு வாணை. உந்த விசர்க் கதையக் கேக்க எரிச்சல்தான் வருகுது”
உன்னிய கவடு பின்னடித்தது.
“ஓ. நான் பின்ன விசரிதானே? அவரும் கண்ணை மூடி இஞ்சால நல்லூர்த் தீத்தத்தோட எட்டு வரியமாப் போச்சு. சனியோட சனி எட்டு, ஞாயிறு ஒம்பது, திங்கள் பத்து… இண்டைக்குப் பத்தாந்திகதியோட ஒம்பதாவது வரியந் துவங்கபோகுது. இம்மட்டுக்காலமா ஒரு ஆண் துணை இல்லாம தனிக்கையடிச்சு மற்றவேக்கும் கோசு போகாமல் நேர்சீராக வளத்து ஒருதன்ர கையில் குடுத்துப் போட்டு, இப்ப நான் பெத்த பிள்ளைக்காகக் கோட்டுக்கு அலையிறனெல்லே… அப்ப, நான் விசரித்தானே”
நெஞ்சு சுரீரித்தது. கண்களில் சேலைத் தலைப்பைப் போட்டு முகத்தைத் துடைத்துக் கொண்டதைப் பார்த்த பூமணி, தனது வார்த்தை தாய்க்குக் குத்தலாகப் பட்டிருக்கிறது. என்று புரிந்ததும் மனம் குமைய நெஞ்சுக்குள் அழுதாள்.
“நான் மடைச்சி. பாசம் உள்ள அம்மாவின்ர மனம் புண்படக் கதைச்சுப்போட்டேனே..”
பண்டத்தரிப்பு மினிபஸ் ஒன்று காலுக்குள் கிறீச்சிட்டது.
தாய் கரத்தைத் தாவிப்பிடித்து ஓரமாக நடந்த பூமணி சொன்னாள்.
“அம்மா, மினி பஸ்காறர் உப்பிடித்தான். ஆக்களை அடையிறதுக்காக் வேலியோட காலுக்குள்ள கொண்டுவந்து நிப்பாட்டுவினம். இஞ்சால இன்னும் ஓரமா வாணை’
ஒருமாதிரி ரவுணுக்கு வந்தாச்சு.
மணிக்கூட்டுச்சந்தி தாண்டிக் கோட்டடி வீதிக்கு ஏறும்போது ‘ஆமிறக்’ஒன்று இரைந்து உறுமிக்கொண்டு யாழ்ப்பாண ரவுண் பக்கம் விரைந்தது.
இண்டைக்கு எங்க வெள்ளிடிழப்போகுதோ? அங்க வீட்டிலயும் என்ர குமர்ப்புள்ள தனிய….
பொன்னம்ம மனசு வீடும் கோடுமாக அலைபாய்ந்து பதறிக்கொண்டது. பறதியோடு கோட்டடிக்கு வந்தாச்சு.
மருமோன் சண்முகம் “கோட்” முன் வாசற்படியில் நிற்பதைக் கண்ட தாய், ஒரு யோசனையும் இல்லாமல் இரகசியமாக மகளைக் கேட்கிறா.
“டிய புள்ள, பொடியன் பாவிபோல வந்து நிக்குது. சீதனம் கேட்டா அதை நான் பாத்துக்கொள்றன்… விரல் கண்ணுக்க குத்தினா அதை வெட்டி எறியிறதே… குடும்பகாரியம். ஆயிரம்காலத்துப் பயிர். பிரியக்கூடாது. பிரிக்கப்படாது. நாங்கள் பொம்புளையள். எங்களுக்குக் கனசள்ளு முள்ளு. கண்டுங்காணாமல் கொஞ்சம் விட்டுக்குடுத்து நடந்தால் என்ன… கடைசியாக் கேக்கிறன். நான் ஒருக்காக் கதைச்சுப் பாக்கட்டே…?”
பூமணிக்குச் சுரீரென்று முகம் சில்லிட்டது.
“இருந்தாப்போல திடீரென்று ஏன் இந்தப் புத்தி தடுமாறினது? நான் இம்மட்டு நாளாக நாணயசீலப்பட்டது போதும். ஆயிரந்தடவை சொல்லிப் போட்டேன். பேந்தேன் உந்த விசர்க்கதை?”
புண்ணும் சொல்லி புண்ணுக்கு மருந்தும் சொல்லி, ஆத்தாக்கடசியில கோடேறி வருஷமும் கடந்து போன பிறகு. தான் இப்படிப் பேதலித்திருக்கக் கூடாது என்று பொன்னம்மா யோசித்தாள். பெண்ணாய்ப் பிறந்த இந்தப் பிள்ளையின் இளங்குடும்பம் கரிந்துபோகக்கூடாதென்ற ஆதங்கமே தன் நெஞ்சில் சூல்கொண்ட வார்த்தை என்பதைப் புரிய மகள் இன்னமும் பக்குவப்படவில்லை என்று இந்தத் தாய் நினைத்தாள். பெற்ற தாய்பாசம் இந்த மகளுக்கு விசராகத் தெரிகிறது. பெற்றமனம் பித்தாய்க் கரைகிறது. பிள்ளைமனம் கல்லாய் இறுகுகிறது. நெருங்கினால் நொறுங்கும்.
பொன்னம்மா நெஞ்சு கமற ஒரு பெருமூச்சு எழுந்தது.
தான் ஒருவளால் தன் தாய் உத்தரிப்பிஸ்தலத்தில் ஒரு பாரச்சுமையாக பாரச் சிலுவையாக ஒரு சுமைதாங்கியாக ஆகிவிட்டகோலம் அந்த நினைவு இந்த மகள் மனசை இப்போது பிரளயப்படுத்திற்று.
முகத்தை முகம் மினவிற்று.
2
கோடு கொள்ளாத சனம்.
நீதவான் பெஞ்சுக்கு வந்து விட்டார்.
தொலுக்காரி கட்டளை ஆணைகளை வரிசைப் படுத்துகிறார்.
கொள்ளை, சயிக்கிள் திருட்டு, கற்பழிப்பு, கலம்பகம் ஆகிய வழக்குகள் சாட்சிக்காரர் கூட்டில் ஏறமுன்பே விசாரணை இன்றி நீதவான் தவணை போட்டுக்கொண்டு வருகிறார். ஆதலால் இந்த டைவோஸ் கேஸ் எப்படியும் விசாரணைக்கு எடுபடும் என்ற நம்பிக்கை பூமணிக்குத் துளிர்த்தது.
நீதவானும் இந்த வழக்கையே எடுக்கிறார்போல் தெரிகிறது.
“திருமதி பூமணி சண்முகம்?”
சனத்துக்கூடாக முகம் கவிழ்த்தி வந்து சாட்சிக் கூண்டில் பூமணி ஏறுகிறபோது தேகம் பரவிய கூச்சம் மண்டைவரை புரையோடி, நாக்கு வரண்டு தொண்டை முடுக்கிட்டுக் கொண்டது.
நீதவான் இங்கிலீஷில் சொல்கிறதை, தொலுக்காரி தமிழில் பெயர்க்கலானார்.
“நீர் ஏன் உம்முடைய கணவருடன் சமாதானமாகப் போகக்கூடாது?”
இவள் மலைத்துப் போனாள்.
இதேன் இருந்தாப்போல இப்பிடிக் கேக்க வேணும்?
இவளுக்கு நாக்குப் புரளுதில்லை. வாய்க்குள் வந்த வாக்கு வெளியே வருகுதில்லை. ஊமையாட்டம் பதகளித்துக் கொண்டு தடுமாறுகிறதை நீதவான் புரிந்துகொண்டு மறுபடியும் சொல்கிறார்.
“அவசரப்பட வேண்டாம். ஆறுதலாக நிதானமாக பதட்டப்படாமல் யோசித்து மறுமொழி சொல்லும். நீர் கணவரோடு ஒற்றுமையாகப் போனால் என்ன?”
பூமணி தனது கண்ணைப் புரக்கிராசியைப் பார்க்க, புரக்கிராசி நீதவானைப் பார்த்து இங்கிலீஷில் கர்ச்சிக்கிறார்.
நீதவானும் புரக்கிராசியும் சிக்காராய்க் கொழுவிக் கொண்டினம். நீதவானும் விடவில்லை. புரக்கிராசியும் கோசு போகிறாயில்லை. காடையும் கௌதாரியுமாக வாய்த் தர்க்கம் முடிகிறாய் இல்லை. கோட்டுக்குள் ஏதோ யுத்தம் நடக்கப் போகிற மாதிரியான தர்க்கம். பூமணி கெலிச்சுப் போச்சுது. சனம் முழிசியபடி ஆ வெண்டு பாத்துக் கொண்டிருக்கிறதை கவனித்த தாய்க்குச் “சீல கழண்டு” விழுமாப்போல வெட்கம் தலையைப் பிய்கிறது.
“உம்முடைய புருஷன் சூது வாது, குடி கூத்தி, அடிபுடி சண்டைக்காறனா?” ஆம், இல்லை என்று எந்த வெளிப்பாடும் அவள் வாயில் இல்லை.
தலையைக் கவிழ்த்திக்கொண்டு முழிக்கிறாள்.
“கோட்டை மினக்கெடுத்தாமல் கேட்டதுக்குப் பதில் சொல்ல வேணும்?”
‘சரி’ என்பது போல் ஒரு தலையாட்டலோடு சிறு வாயசைவு.
“அவர் சூது வாதுக்காறனா?”
உதடுகள் விரிந்தன.
“இல்ல”
“அப்போ.. குடி கூத்திக் கள்ளரா?”
“இல்ல”
“அடிக்கடி சண்டைகாறரா?”
“அப்படியும் இல்ல”
“அப்ப, ஏன் விவாகரத்துக் கேக்கிறீர்?”
இவள் நெற்றிக்கு நேரே உற்றுப் பார்த்தாள்.
புட்டுவத்தில் இருந்த புரக்கிராசி திமிறிச் சிலுப்பிக் கொண்டு, இதே வெட்டுகிறேன் விழுத்துகிறன் என்ற தோரணையில் எழுந்தார்.
ஆணித்தரமான பதில் மொழியப்பட்டது.
“கலியாணம் செய்ய முந்தி அப்பிடி ஒண்டுமில்லை. பிறகும் அப்பியில்லை. இப்பதான் அதுகளைவிட மோசமாக நடக்கிறார்.”
“என்ன மோசம்?”
“பணப் பேய் பிச்சு…”
“அது வாழ்க்கைக்குத் தேவை. எப்படி இருந்தாலும் அவர் உமது கணவர்தானே?”
இப்பத்தான் பூமணி நீதவானை நேரே பார்த்துச் செப்பமாக வாய் திறந்தாள்.
“அவர் என்ர புருஷன்தான். சாகு மட்டும் அப்பிடிச் சொல்லிக்கொண்டே இருப்பன். ஆனால், என்னை அவர் தன்ர மனைவியெண்டு சொல்லிச்சீவிக்க அவருக்கு உரிமைதகுதியோக்கியம்மவுசு வேணும். இதில் ஒண்டும் இப்ப அவரிட்ட இல்லை. சீதனம் வேண்டித்தாவெண்டு தொண்டை பிடியில நிக்கிறார். சீதனம் கேட்டுக் குடும்த்திலே நிபந்தனை போடுறவர் எவரெண்டாலும் அவர் ஆம்பிளையில்லை. ஆண்மையில்லாமல் பொம்பிளைக்குச் சீதன விலை பேசுற ஆம்பிளை எனக்குத் தேவையில்லை. பணத்திலே பயித்தியங்கொண்ட பேய்க்கு மனைவியும் தேவையில்லைகுடும்பமும் தேவைப்படாது…”
கண்ணகிக்கு முன்னே அமர்ந்த பாண்டியன் போல் நீதவான் முகபாவம் நெற்றிச் சுருக்காக மாறிற்று.
என்னமோ அவர் யோசித்தமாதிரி இருந்தது.
எதுவும் தட்டுப்பட்டதாய் இல்லை.
“அடுத்த மாதம் பத்தாந் திகதி தவணை”
‘பெஞ்’சைவிட்டு நீதவான் எழுந்தார்.
புரக்கிராசி வெற்றிப் புன்னகையோடு வெளியே வந்தார்.
கோடு மதிய போசனத்துக்காகக் கலைந்தது.
3
பனங்கூடலுக்குள் பொழுது சரிய மகளும் தாயும் வீட்டுக்கு வந்து சேந்திட்டினம்.
வந்த பொன்னம்மாவுக்கு கைகால் ஓடவில்லை. ஆற அமர முடியவில்லை. மண்டை பிளக்கற யோசனை. குந்தியருந்து கொண்டாள். தலை சுத்துகிறமாதிரி ஒரு மயக்கம். வெறுந் தேத்தண்ணி குடிக்கவேணும் போல் தவிப்பெடுத்தது.
‘அடுத்த தவணைக்குள்ள என்ன வெள்ளிடி வந்து சம்பவிக்குமோ?’
தான் என்ன சொன்னாலும் இனி எதையும் மகள் காதில் போடமாட்டாள் என்று இவளுக்குத் தெரிந்தபோதும், இந்தத் தாயானவளை ஒரு சபல மனம் சிப்பிலியாட்டிக்கொண்டே இருக்கிறது.
இப்போ புதுசாக வேறு ஒரு யோசனை தட்டிற்று.
‘இந்தப் பெட்டை கட்டினவனையும் விட்டுப் போட்டு ஒரே கண்டசீருக்குக் கோடு கச்சேரியெண்டு அலைஞ்சா, வீட்டில இருக்கிற குமரை ஆர் தேடுவான்? பத்தாக்குறைக்குக் ‘காம்பு’கள்ல இருக்கிற சட்டைக்காறங் களெல்லாம் யாழ்பாணத்தில வந்து ஊர் மனையளுக்க தேவையில்லாமல் குவிஞ்சு கொண்டிருக்கிறாங்கள். பெண் புரசுகளும் நடமாட ஏலாமக் கிடக்கு’
நடந்தால், இருந்தால், எழும்பினால், கிடந்தால், படுத்தால் மக்களின் யோசனை ஊர்ச் சிந்தனை.
‘கடைக்குட்டிப்பொடி ஆம்புளைப் புள்ளையெண்டு பாத்தா, அதுவும் வலது குறைஞ்சதாக வந்திருக்கு. ஏழு வயசாச்சு. குழந்தைப் பிள்ளையாட்டம் விரல் சூப்பிக்கொண்டு எப்ப பாத்தாலும் ஒழுங்கையளுக்க நிண்டு குஞ்சு குருமான்களோட போளை உறுட்டுறது, கிட்டி அடிக்கிறது. கண்ணாம்பூச்சி விளையாடுறதுதான் வேலை. பள்ளிக்கூடத்துக்கு விட்டா, சட்டம்பிக்கும் தெரியாம ஒடி வந்திர்றான். நான் புருஷனைத் தின்னி. இவளைப்போல குமர் வேற வீட்டக்க கிடக்கு. இதுகள யோசிச்செண்டாலும் இந்தப் பெட்டை தன்ர கட்டின புருஷனோட ஒத்து மேவி நடக்காளாம். எதைப் பறஞ்சாலும் எடுத்தெறியிறமணியம். இவளுக்கு இப்ப ஆண் மூச்சுப் பிடிச்சிட்டுது. கோட்டுக்குப் போனா நெடுகிலும் தவணை. இவளால் இருக்கிற குமர்பிள்ளைக்கும் இனி அவமானம்…?’
முனகலோடு கெம்பி எழுந்த பெருமூச்சு, தாய் நெஞ்சுகள் நீவிற்று. வயிறு குதறுகிறது. உருப்படியாகாத யோசனைகள் சிந்தனைகள் மனசுகள் கிளர்ந்து போகின்றன.
இன்னும் ஆனவாகில் சாப்பாடு இல்லை.
மறுநாள் விடிஞ்சும் மன நிம்மதியில்லை. மத்தியானமாப் போச்சு ஆகினது ஒன்றுமில்லை.
பிள்ளைகளுக்குப் பசியெடுத்தது.
அம்மியில்போட்ட சரக்கு மிளகாய் அருவல் நொருவலாகக் கிடக்கிறது. அதுவும் அரைச்சு அரைச்சு முடிக்கிறபாடாயில்லை. கைக் குவளைக்குள் நுளுந்துகிற குழவி தன்பாட்டுக்கு வீணாக அம்மியில் உருளுகிறது. பின் தானாகத் தக்குவிட்டு ஓய்கிறது. இவவோ ஒருபாட்டம் முன் உன்னல். மறுபாட்டம் பின் இழுவை. எங்கோ கரிசனை.
இருந்தவாக்கில் ‘சடக்’கென்று அடித்துப் பறந்த காகம் ஒன்று குசினிக்குள் எதையோ கொத்திக்கொண்டு போயிற்று.
‘ஆ… கொள்ளயில போவான்ர காகம் வந்து கிடக்கிறதையும் அள்ளிக்கொண்டு போகுதாக்கும்’
நெற்றிக்கண் காகம் பறந்த திசைக்குப் பாய்ந்தது.
சாவக்கட்டாரிட்டக் காலம்புற வேண்டின விளக்குட்டி மீன்களை நூண்டி, துண்டு துருத்தியாக வெட்டி வைத்தவள். சட்டிக்குள் கிடந்து மீன் பதம் கெடுக்கிறதும் பொன்னம்மாவுக்கு நினைவில்லை. மனப்புழுக்கத்தில் எல்லாம் மறந்துபோச்சு. நேரம் போனால் இனி மீனில் புழுக் கெந்தப் போகுது.
முத்துக்குட்டி ஆச்சி கடைக்கு மண்ணெண்ணை வாங்கப் போன பொடி ரஞ்சன் இன்னும் வந்தபாடாயில்லை.
‘கண்ட நிண்ட பொடியளோட குமுதம் குத்திக்கொண்டிருக்கிறானோ, இல்லாட்டி எங்கயேன் மிலாந்திக் கொண்டு நிக்கிறானோ?’
காது ‘கிண்’ணிடுறதான ஒரு சத்தம் எங்கோ வெடித்தது.
பயந்து போனாள். ஆனால், அது அவள் நினைத்த மாதிரி ஆமியோ பொடியளோ சுட்ட சத்தம் அல்ல. றோட்டில் ஓடிய பஸ் ரயர் வெடித்த சத்தம்.
“டேய் தம்பி, ரஞ்சேன்…?”
சிலமனைக் காணவில்லை.
எத்தனை தரம் கூப்பிறது. தொண்டை வறண்டு போச்சு.
‘மூதேவிப் பொடியனைக் காணேல்லயே’
“எடிய புள்ள ராணி, உவன் தம்பி ரஞ்சன் வாறானோண்டு உதில நிண்டு ஒருக்கா எட்டிப்பாரு”
‘அரியண்டம் பிடிச்ச மனிசியால் ஒரு புத்தகம்கூட இருந்து வாசிக்கேலாது..’ ‘திருமணத்திற்காக ஒரு பெண் காத்திருக்கிறாள்’ நாவலில் சொக்கிப் போன ராணிக்கு, அம்மா சொன்ன அலுவல் எரிச்சலாக வந்தது.
வாசித்த பக்கவாட்டு ஒற்றையுள் பனையோலைத்துண்டு நொடித்து எடுத்து அடையாளம் வைத்த ராணி, தன்னாரவாரம் ‘புறுபுறு’ த்தசாடை படலைத் திறந்து போய் ஒழுங்கையில் நின்று எட்டிப் பார்த்தாள்.
ரஞ்சன் வருகிற அசுகிடை இல்லை.
மனசு குல்லிட்டது.
‘றோட்டடிப் பக்கம் போட்டானோ?’
ஆரையேன் கேட்டுப் பாக்கலாமென்று யோசித்துக் கொண்டிருக்க ஒழுங்கையில் தரகு வேலுப்பிள்ளைக் கிழவனோடு சண்முகம் எதோ கதைச்சுக்கொண்டு நிக்கிறான்.
அந்தடியலாக ராணி ஓடி தாய்க்குச் சொல்கிறாள்.
“எணை அம்மா, எங்கடை முன் ஒழுங்கைக்குள்ள தரகு வேலப்பாவோட அத்தார் ஏதோ பறைஞ்சுகொண்டு நிக்கிறார். என்னமோ பிளான் போடுறார் போல….”
நெஞ்சதிருக்கிறசாடை இடிமுழக்கம் ஒன்று வானத்தில் கேட்டது.
“மறுக்காலும் மாயப்பொடி தூவ வாறானோ, இல்லாட்டி மனம் திருந்தி வாறானோ ஆர் கண்டது? உப்புடிக் கொத்த ஆம்புளையல நம்பேலாது. உவங்கள் சேறு கண்ட இடத்தில் மிதிச்சு, தண்ணி கண்ட இடத்தில கழுவுற சாதி”
“எடிய புள்ள, உதை உவள் கொக்காளிட்டப் போய்ச் சொல்லு, என்ன சொல்றாள் பாப்பம்”
“இப்ப இருக்கிற நிலையில் அதுக்குச் சொன்னா, அது என்னிலதான் எரிஞ்சு விழும்”
“நீ பக்குவமாச் சொன்னால் அவள் கேப்பாள், போ”
தாய்க்குக் கேளாமல் ஏதோ முனகிக்கொண்டு ராணி திரும்பினாள்.
“அக்கா, உனக்கு ஒரு வியளம் சொல்லப் போறன்”
“அதென்னடி புதுசா?” என்று கேட்கிற தோரணையில் தங்கச்சி முகத்தை ஏறெடுத்துப் பார்த்தாள் பூமணி.
“சொன்னால் கோவிக்கப்படாது..?”
“நீ கேக்கிற மாதிரிப் பாத்தா, எனக்குப் பிடியாத சங்கதியச் சொல்லப் போறாய்போல கிடக்கு?”
“அது எனக்குத் தெரியாது. ஆனா, அது உன்ர விஷயம் தான்” “அப்ப சொல்லு?”
“நீ கோவிக்கப்படாது?”
“கோவிக்கேல, சொல்லு”
“சண்முகம் அத்தார் சிமிக்கிணாமல் வந்து மறுக்காலும் இஞ்ச அணையப் பாக்கிறார்போல கிடக்கு”
யாரோ செகிட்டைப் பொத்தி அடித்தமாதிரி அவள் மண்டை மின்னிச் சிலும்பிற்று.
முகத்தில் கலக்கச் சோகை.
“உனக்கு எப்பிடித் தெரியும்?”
“தரகு வேலு அப்பாவோட ஒழுங்கைக்க நிண்டு எங்கட வீட்டப் பாத்துப் பாத்து அத்தான் மறஞ்சுகொண்டு நிற்கிறார்”
“என்னடி சொல்றாய்..?”
“நம்பாட்டி நீ வந்து பார்”
ஒரு கணம் யோசித்தாள்.
எனக்கல்லாத கரிசனை இவளுக்கு ஏன்?
தாய் காதில் விழும்படியாக பூமணி உரத்துச் சத்தம் வைத்தாள்.
“இப்ப எல்லாரும் சேந்து பேய்க்காட்டி என்னை ஏமாத்தப் பாக்கினம். சட்டமண் ஒட்டாதெண்டு தெரிஞ்ச பிறகும் அப்பிடித்தான் இஞ்ச ஒவ்வொரு காரியமும் நடக்குது”
அக்காள் சீறிப் பாய்ந்த விறுத்தத்தில் மலைத்துப் போன தங்கச்சி அடுத்த வாக்குச் சொல்ல வக்கின்றித் திரும்பிவிட்டாள்.
பொன்னம்மா ஒன்றும் தெரியாத பாவனையில் பாசாங்காகத் தன் மட்டில் அரைத்துக் கொண்டிருந்தாள்.
கவனம் எல்லாம் பூமணியில்.
பூமணி சினந்த விறுத்தம் அவள் முகத்தில் இன்னும் பம்மிக்கொண்டிருந்தது.
பாவம் ராணி, என்ர நன்மைக்காக வந்து, சொன்ன பிறவியில நான் எரிஞ்சு விழுந்திருக்கக் கடாது.
பாசம் சுரந்து மனசு சஞ்சலித்தது.
“இனி இந்தக் குடும்பச் சள்ளு வேண்டாம் என்று தீர்மானித்துக் கோடேறிய பிறகும் சண்முகம் மன்னிப்புக் கேட்டபோது தான் மோட்டுத்தனமாக இரங்கியதால் பேதலித்துப் போனதால் இன்று பிறந்த வீட்டுக்கே ஒரு சுமையாகிவிட்ட பரிதாப கோலம் அவளில் ஒரு நம்பிக்கையூட்டி, ஒரு மோசமாகிய சோகவாழ்வுபோல் தெரிந்தும், பூமணி அந்தச்சோகத்தையும் தன் பலமாகவே கருதி வருவதை இந்தத் தங்கச்சி புரிந்தாளோ என்னவோ’ என்று ஒரு சபலம் இவள் மனசில் தட்டிற்று.
தன்னால் இந்தக் குடும்பத்துக்கு உண்டான சீர்கேடு நாலுபேர் அறிய முச்சந்திக்கு வந்து ஒரு வருஷமாகியபிறகு, தாய்க்கும் தங்கைக்கும் எழுகின்ற பேதலிப்புகளால் இந்த வீட்டின் எதிர்காலம் ஏதோ ஒரு சூன்யமாக வருவதுபோல் அவளுக்குப் பட்டது. தனது தாய் தங்கச்சி மட்டில் எந்த விதமான பலவந்த நினைவோடு செயற்பட்டோ அப்படியொரு பாவனையோ காட்டாமல் எப்போதும் சுயதிருப்தியாகவே நடந்துகொள்கிற தனக்கு, தாய் மட்டுமல்ல இளையவளான பிறவியும் தன்னை நோக்குகின்ற போக்கும், அணுகுகின்ற விதமும் இங்கே நிகழ்கின்ற விபரீத சம்பவங்களும், தன் விருப்பத்திற்கு விரோதமாகவும் ஒருவித பலாத்காரமுறையாகவுமே அவளுக்குத் தோன்றின.
இந்தப் பலாத்கார முறையே தன் வாழ்கைக்கு மானசீகமாக ஒத்து வருமாயின் அதனை ஏற்றுக்கொள்ளவும் சித்தமாய் இருக்கிறபோது, அதனைப் புரியாமல், இனி ஒருபோதும் ஒத்துவராத இந்தத் தாம்பத்திய உறவுக்குத் தன்னை மீண்டும் இரையாக்கவே உளவியல் ரீதியாகவும் தாயும் தங்கச்சியும் இடைவிடாது முயன்று, தன்னைப் பலவந்தப்படுத்தித் தொல்லை கொடுப்பதாக இவள் நினைத்தாள்.
இந்தவிதமான பாதிப்புகளை இவள் சகித்துக்கொள்ள முடியாமல் திணறிய போதும், இந்தச் சூழலையே தன் பலப் பரிட்சையாகக் கருதித் தன்னை ஒரு வலிமை மிக்க சுமைதாங்கியாக வரித்துக் கொண்டு. ‘இனி என்ர சொந்தக் காலில் நிக்க வேணும்’ என்ற பிடிவாதத்தோடு ஒரு தீர்மானத்திற்கு வந்தாள்.
ஆயினும், இந்த முடிகூட அவளுள் அலைமோதி அவள் மனசை ஒருகணம் பிரளயப்படுத்திற்று.
சலித்துப் போன அவள் மனசு இப்படிப் பேதலித்துக் கொண்டபோது. யாழ்ப்பாணக் கல்லூரியிலே பயின்ற பருவ கால நாட்கள் நினைவுக்கு வந்தன.
நெட்டுருவி ஒரு பெருமூச்செறிந்தாள். மனசுள் ஏதோ புரையோடிற்று.
சமுதாயத்தை வெறும் ஜடமாகவும் இயந்திர ரீதியாகவும் பாவனைபண்ணி ஒரு மாயா உலகமாகக் காட்டி வர்ணிக்கிற பாடமுறைகளை அடியோடு நிராகரித்து, இந்த உலக இயற்கை வளங்களைப் பரிணாம வளர்ச்சியோடு முதன்மைப்படுத்தி, அவற்றினால் சமுதாய உயர்வுக்குச் சேவை செய்விக்கின்ற பாங்கையும், இதனால் மனிதர்கள் சுதந்திர ஜீவிகளாக வாழ்கின்ற ஒரு புதிய சமதர்ம மார்க்கத்தை பௌதீகத்தை முதலாகக் கொண்ட
ஓர் உலோகாயதக் கண்ணோட்டத்தில் அர்த்த புஷ்டியோடும் சிறந்த படிமானங்களோடும் விளக்கி, மானிடத்தையும் மானிட தர்மநேயத்தையும் புலப்படுத்துகிற அதிபர் வயித்திலிங்கத்திடம் இவள் பெற்ற போதத்தின் விளையாக அந்தக்காலந்தொட்டே இந்தச் சீர்கெட்ட சுரண்டல் சமுதாய அமைப்பின் போலியான நீச வாழ்க்கையைப் புரிந்துகொண்ட பின்னும், இதே சீரழிந்த சமுதாய வாழ்க்கைக்குள் தானும் முறைகேடாகச் சிக்கி விட்ட கோலத்தை அந்த முட்டாள்தனத்தை நினைத்து இப்போது இவள் சீற்றங் கொண்டாள்.
கண்களில் நீர் புரைந்து குமிழ்ந்தது.
தங்கச்சி ராணி வாசித்த நாவலை இவள் ஏலவே படித்திருக்கிறாள்.
அந்த நாவல் முன்னுரையில் பொதிந்த வாசகம் இந்தச் சமுதாய அமைப்பில் உழலும் பெண்களை மையமாகியதால் அந்த வாக்கியங்களை இவள் மனசு மீட்டிற்று.
“இந்தச் சமூக ஆதிக்கத்திலான கொடுந்தாக்கம் பெண்ணினத்தை இச்சை நுகரும் சாதனமாக இங்கிலிஷைப் படுத்திக் கொண்டிருக்கிறது. அவளுள் எழுகின்ற இச்சாபூர்வ உணர்வு ‘நாகரிகம்’ என்ற திரைக்குள் ‘மவுசு’ படுத்தப்பட்டபோதும், அது அவளைப் பல்வேறு தினுசில் விகாரப் படுத்தி, அவளின் தாய்மை’யையே மாசு படுத்தி விடுகின்றது. அவளின் துன்பங்கள் புனிதமானவை என்று போலியாக அர்த்தப் படுத்தப்பட்டு, இவள் ‘தியாக வேள்வி’யில் தள்ளப்படுகிறாள். திருமணங்களோ அவளின் சுய ஆசாபாச உணர்வுகளைச் சாகடித்து, ‘குடும்பச்சொத்துரிமை’ என்ற கேடயத்தில் பிணைக்கப் படுகின்றன. அவள் குற்றேவல் புரியும் மடந்தையாக, ஆண்மை செத்த ஆடவரின் ‘சீதனப்பிடுங்கலில்’ விலைகூறப்படுவதால் அவள் வாழ்க்கையில் சிலுவை சுமத்தப்படுகிறாள்’
அந்தச் சிலுவை இந்தக் கணிப்பு இப்படியான நீசத்தனம் தன் வாழ்க்கையலி இப்போது சூழ்ந்துவிட்டதாக இவளுக்குத் தோன்றியது.
திருமணம் ஒரு பந்த பாச வாழ்க்கைமுறை என்று கருதிய அவள் வீட்டில் நிகழும் விபரீதங்களால் அது அப்படி அர்த்தப்படாமலே அதிபர் வயித்திலிங்கம் சொல்லுவதுபோல் அந்த நாவலாசிரியர் குறிப்பிட்டதுபோல், திருமணம் குடும்பச் சொத்துரிமை பேணும் சுரண்டும் வர்க்க நலனின் சம்பிரதாயச் சடங்காகவும், தத்தமது பந்துக்களிடமிருந்து பாகம் சேர்த்து அடிமையாக்கி இச்சையின் வெறிக்குப் பெண்களை ஆதிக்கம் புரிகிற ஆடவரின் கேளிக்கைக் கூடமாகவும் இவளுக்குத் தோன்றியது.
இந்தப் பாசம், குடும்ப வாழ்க்கை என்பதெல்லாம் ஒரு சம்பிரதாய நாடகம் போலவும் தெரிந்தது.
இந்தக் கலாசார மேடையின் ஒர் புதிய அரங்கேற்றமே வீட்டு ஒழுங்கையில் சண்முகத்தின் நடமாட்டமாயிருக்கலாம் என்று அவள் யூகித்தாள்.
ஆத்திரம் பொங்கிக் கொப்பளித்தது.
“முந்தியைப் போல இனி வலிய வந்து மன்னிப்புக் கேட்டாலும் இந்த வாசப்படி திறக்கிறேல்ல. ‘வேசை’ யெண்டு சொல்லிக் கதை கட்டிச் சீதனம் புடுங்கவாறவன் ‘புருஷனெ’ண்டு அணைய வாறதா? கடைசிவரைவிடமாட்டன்”
மனசில் வைராக்கியம் கொண்டே விட்டாள்.
இத்தனை நாட்களாக இவள் பெற்ற தாய்க்கோ உற்ற சகோதரிக்கோ நீதிமன்றத்திலோ சொல்லாமல் பொத்தி மறைத்துவிட்ட அந்த மனத்தழும்புகள் இவள் நெஞ்சில் அவன் ஏற்றிய அழியாத வடுக்கள்.
அனைத்தையும் மீறி இவள் கொண்ட தாம்பத்தியத்தில் உற்பவித்த இந்தப் பச்சிளம் குஞ்சு.
‘இதுக்குத் தன்னைத் தகப்பனெண்டு சொல்லத் திராணியில்லாத போக்கிலி அதையே பலவீனமாகக் கருதின சீதனப் பேய்க்கு இனியும் நான் வாழ்க்கைப் படுறதோ?’
இவள் நெஞ்சு புழுங்கி, மனசு கெந்தமாகச் சீறிற்று.
நெஞ்சு பம்மி எழுந்த பெருமூச்சு அடங்கவில்லை.
மறுப்பாட்டம் குமிழ்ந்த கண்ணீர் கன்னங்களில் வளிந்தது.
தங்கச்சி மலாரடித்து விறைத்துப்போய் நின்றாள்.
“அக்கா உதென்ன, நான் என்ன சொல்லிப்போட்டனெண்டு இப்ப அழுகிறாய்?”
அம்மா குரல் அப்போது கணீரிட்டது.
“ஏ, பிள்ளையள் அக்காளும் தங்காளுமாக உதில நிண்டு என்ன செய்துகொண்டிருக்கிறயள்?”
புதல்வி முகத்தில் தெறித்த கண்ணீர் தாய் மனசில் நெருப்பாய்ச் சுட்டது. வயிறு பதைத்தது.
அரைத்த அம்மியைச் சுளகால் மூடிவிட்டு அலங்க மலங்க எழுந்துபோன தாய், புத்திரியின் சோகம் கண்டு திகைத்தே போனாள்.
“இதென்ன புள்ள உன்ர போக்கு. உனக்கு இப்ப என்ன குறைஞ்சுபோச்செண்டு கலங்கிறாய். ஏதேன் உன்ர நன்மைக்காக நான் ஏதும் சொன்னாலும் பொறுக்கிறாயில்லை. அதெல்லாம் போகட்டும் முகத்தைக் கழுவிப் போட்டு இஞ்சால வா”
“என்ர நன்மைக்காக நீங்கள் என்ன செய்யச் சொல்றியாளெண்டு எனக்கு விளங்குது. உங்களுக்கு இப்ப என்ர சங்கதி கரைச்சலாக்கிடக்கு. உங்கட விஷயம்தான் முக்கியமாப்போச்சு. எந்த விஷயத்திலையும் ஒவ்வொருதருக்கும் மற்றவேயின்ர நலனைவிட தங்கட நலன்தான் முக்கியம். என்னை இஞ்ச வச்சிருக்க மனமில்லை. அதை வெளிய காட்டாமல் ஏதோ என்ர நன்மைக்கே எல்லாம் செய்யிறதாகச் சாட்டுச் சொல்லி வெளிக்கிடுத்தப் பாக்கிறியவள். இதை நேர சொல்லாமல் ஏன் மறைச்சுக் கதைக்கிறியளெண்டு வடிவா விளங்குது…”
ஒரு நாளும் வராத திருவாக்கு இவள் வாயில் முறுக்கேறி வந்திருக்கிறது. இந்தக் ‘குத்துக்கதை’களைத் தாயானவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மனசாலும் கற்பனைபண்ணாத விஷயங்களை மகள் வாய்க்கு வந்தபடி தன்னை அந்நியப்படுத்திப் பொரிந்து கொண்டாளே என்ற ஆதங்கம் தாய் வயிற்றைத் தகித்தது.
இவளின் விபரீதப்போக்குத் தன்னைவிட அவளுக்கே வில்லங்கமாகிவிடும் என்ற ஏக்கம் தாயை உலுப்பியது. இந்த விசனத்தில் ஆழ்ந்துபோன பொன்னம்மா, அவலை நினைத்து உரலை இடிக்கிற இந்த பிள்ளை இனி எப்படி ஆவாளோ?’ என்று பரிதவித்தவளாய், ஒருவித ஆவேசம் கொண்டு பதறித்துடித்து எழுந்து மகளை ஆரத்தழுவிக் கொஞ்சி முந்தானையால் முகத்தை துடைத்தாள்.
“உன்ர மனம் நல்லாப் பேதலிச்சுப்போச்சு. அதனாலதான். இப்பிடிக் கவ்வைக்குதவாத கதை உன்ர வாயில வந்திருக்கு. தாயின்ர மனசை ஒரு தாயாலதான் அளவிட ஏலும். உனக்கு அந்தப் பாக்கியமும் கிடைச்சிருக்கு. ஆனபடியால் உனக்கும் என்ர தாற்பரியம் பிறகு விளங்கும். இப்ப நான் என்ன சொன்னாலும் உனக்கு வேறமாதிரித்தான் தோணும்…?”
மகள் ஏதும் பதில் சொல்கிறாளா என்று கவனித்தாள். தான் சொன்னதை ஆமோதிப்பது போல் நின்ற பக்குவத்தை அவதானித்தபின் உசாராக மகளைப் பார்த்தாள்.
“புருஷன் பெண்சாதி சகோதரம் பிள்ளையளைவிட தாயானவள்தான் சுக துக்கம் பாராமல் தன்னை ஒறுத்துப் பிள்ளையளில் பாசங்கொள்கிறவளெண்டதையும் உங்களைப் பெத்தபிறகே நானும் உணர்ந்தன். அதனால் நீ வெடுசுடுத்துச் சொன்ன வார்த்தையும் எனக்குப் பெரிசாத் தெரியல. கொடிக்குச் சுரக்காய் பாரமெண்டாலும் தாங்கிக் கொள்ளும். சுரக்காயும் கொடியாகிறதைப் பாக்க ஆசைப்பட்டேனே நினைக்கிறமாதிரி உன்னைப் பிரிச்சு விடுகிறதுக்கில்லை. இனி இதைப்பற்றி தவிர நீ ஒண்டும் பறையப் போவதில்லை. எப்பவும்போல இருந்து சகல காரியங்களையும் நடத்து. பிள்ளையின்ர நற்சீவியம்தான் தாயின்ர சந்தோஷம். நீ அப்பிடி இருந்தால் அது எனக்குப் போதும்”
மாதாவின் மனம் தன்னால் வெந்து விட்டதை இப்போது மகள் தாங்காமல் தவித்தாள். பேதலித்துப் போன பெண்மனசை நினைத்தபோது சஞ்சலம் உண்டாயிற்று. தவித்திருந்த அவள் நெஞ்சு சற்று வேளையால் கேவிக் கேவிக் குமுறலாயிற்று. தன்னை முழுவதுமாய் ஒப்புக் கொடுத்த சாடை சடாரென்று தாயின் பாதங்களில் விழுந்த மகள் கேருந்தொனியில் கதறினாள்.
“என்ர அம்மா, என்னைப் பாடுபட்டுச் சுமந்து பெத்த என் மாதாவே, என்னை மன்னிச்சுக் கொள்ளுங்கோம்மா…”
தாயும் அக்காளும் சோகக் கலக்கத்தில் மூழ்கியிருக்கிறபோது வாயில் இனிப்புச் சூப்புத்தடியும் ஒரு கையில் மண்ணெண்ணைப் போத்தலும் மறுகரத்தில் ஒரு கடதாசிப் பொட்டலமுமாக வந்து சேர்ந்தான் ரஞ்சன்.
சின்னக்கா அதட்டிக் கேட்டாள்.
“இவ்வளவு நேரமும் எங்க மிலாந்திக் கொண்டு நிண்டனி உதென்னடா கையில் பார்சல்?”
‘இவவுக்கு நான் ஏன் பதில் சொல்வது?’ என்ற தோரணையில் முழிசிப் பார்த்த ரஞ்சன், விறுக்கென்று குசினிக்குள் சென்று அந்தப் பார்சலைத் தாயிடமே கொடுத்துவிட்டுச் சொன்னான்.
“இதைப் பெரியக்காவிட்டக் குடுக்கச் சொல்லி அத்தார் தந்துவிட்டவர்” இவன் சொல்லி வாய் மூடவில்லை. பூமணி ஆவேசங்கொண்டவளாகப் பாய்ந்து போய் அவன் கன்னத்தில் பளார் பளார் என்று அடித்த கையோடு அந்த பார்சலைப் பறித்து முற்றத்தில் வீசி எறிந்துவிட்டுக் கத்தினாள்.
“மூளை இல்லாத கழுதை. வேண்டினமாதிரிக் கொண்டுபோய் நீயே குடுத்திட்டு வாடா”
இவள் சுழற்றி எறிந்த வீச்சில் கட்டுப் பிய்ந்துபோன பார்சலுக்குள்ளிரு்து நீல நிறச் சருகைப் புடவை ஒன்றும், சிறு தடித்த துண்டும் முற்றத்தில் சிதறின.
எதுவும் புரியாமல் விக்கித்துப் போய் தறுதறுஎன முழுசிக் கொண்டு தாயைப் பார்த்துத் தேம்பிய ரஞ்சன், சிதறுண்டுபோன பார்சலை எடுக்கவா விடவா என்று தயங்கி நிற்க, தாய் சொல்கிறாள்.
“இது ஒரு வாய்விடாச் சாதி. புத்தி பேதலிச்சபிள்ளை. அதுக்கென்ன தெரியும்? அவன்பாவி குடுத்துவிட்டதை வஞ்சகமில்லாமல் கொண்டு வந்திருக்கு”
சகிக்கமுடியாத பிறவித்துயரம் அக்காளைப் பிசைந்தது. அவள் தலை தலையென்று அடித்துக் கொண்டு வயிறு குதற அங்கலாய்த்தபடி ஓடினாள்.
“வஞ்சகமில்லாத எங்கட செல்லத்துக்கு மடச்சி நான் அடிச்சுப்போட்டன். அழாதயடி ராசா…”.
சகோதரனை’ வாரி அணைத்துக் கொஞ்சின அக்காள் கண்கள் புரைந்து கண்ணீர் பொலுபொலுத்துச் சொரிந்தது.
“சரி சரி, அக்காள்மாரும் தம்பியும் அழுதது காணும். அவரவ ரேபோய் உங்கட அலுவலைப் பாருங்கோ. அதை நான் குடுத்து அனுப்புறன்”
சமாளித்துச் சொன்ன தாய் சிதறிய பார்சலைக் கோதி எடுத்தாள். அந்தக் கடிதத் துண்டை விரித்தாள்.
‘அன்புள்ளமாமி’ என்று ஆரம்பித்த கடித வாசகம் பொன்னம்மா மனசை ஒருகணம் நெகிழ்த்தியது.
‘இதென்ன சில்லெடுப்பு. என்னவோ நினைக்க எதுவோ ஆகுதே’.
மனைவி இருக்க, தாயான மாமிக்கு மருமகன் கடிதம் எழுதிய விந்தையை யாழ்ப்பாணத்தில் பொன்னம்மா இப்பத்தான் காண்கிறாள்.
‘வித்தையடி மாமி கொத்துதடி கோழி?
கவிதைபோல் வாய்க்குள் பழமொழி சொல்லிக் கடிதத்தை வாசித்த பொன்னம்மா மலைத்தே போனாள்.
மூன்று பிள்ளைகளுக்குத் தாயான காலத்துக்குள் காலஞ்சென்ற புருஷனோ, பெற்றபிள்ளைகளோ, இனசனபந்துக்களோ தன்னைச் சரியாக மட்டிட்டு இதமாக ஒரு வார்த்தை சொன்னதோ எழுதியதோ கிடையாது. இந்தக் குடும்பத்தில் வந்து இரண்டு வருஷத்துக்குள் சீதனத் தகராறில் டைவோஸ் பண்ணக் கோடேறி நாணயசீலப்பட்ட பிறகு, இந்த மருமகன் இருந்தாற்போல திடீரென்று மனம் மாறிவிட்டதை இவளால் நம்பமுடியவில்லை. கட்டிய மனைவியையே
ஒரு பரத்தை போல் நடத்திவிட்டுப்போன மருமகனின் இந்தச் சடுதி மாற்றம் எதற்காகவென்றும் இவளுக்குப் புலனாவதாயில்லை.
‘ஒரு வேளை மறுக்காலும் ஆசை காட்டி மோசம் செய்ய வேஷம் போடுறானோ?
யோசிக்கிறபோது ஒன்றும் தடக்குப்படுவதாய் இல்லை.
என்னால் துயரத்துக்குள்ளான பூமணியை உங்கள் கண் பார்க்கவே ஒரு ராசாத்திபோல் நடத்திச் சீராக வாழ்ந்து காட்டுறேனே’யெண்டு இவன் இப்ப மவுசுக்காக எழுதினதின்ர சூத்திரம் என்ன?’
‘ராசாத்தி போல்’ என்ற வசனத்தை மீட்டபோது தாயான இவள் மனசு ஆனந்தபரவசத்தில் குதூகலித்தது.
அந்தக் குதூகலமும் வினாடியில் மறைந்தது.
காதலித்துக் கைப்பிடித்து வாழ்ந்தபோது ராசாத்தியாக வைத்திருக்க முடியாத இந்த மருமகன், அவளைத் தாயும் பிள்ளையும் ஆக்கிய பின் இப்படி எழுதுவதில் உண்மை நேர்மை சத்தியம் உண்டா என்பதை இவளால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. வேஷதாரிகள் நேர்மையான சத்தியவந்தர்கள்போல் வார்த்தைகளை அலங்காரமாக பேசுவதில்தான் கண்ணுங்கருத்துமாய் இருப்பார்கள். அப்படி ஒரு மேதாவியாகத் தன்னைக் கருதிக் கொண்டு வெறும் போலியாகத்தான் இந்தக் கடிதத்தை இந்த நேரத்தில் எழுதினானோ?
மண்டை புழுத்த யோசனையில் பொன்னம்மா ஆழ்ந்திருக்கிறபோது, படலையடியில் ஒரு குரல் கேட்டது.
“எடி புள்ளையள், உங்க இருக்கிறியளோ?”
‘அவுக்’கென்று எட்டிப் பார்த்தாள் பூமணி. தரகு வேலுப்பிள்ளைக் கிழவன் படலை திறந்து முற்றத்துக்கு வந்து கொண்டிருந்தான்.
4
பூமணி. இடிந்துபோய் நின்றபோது அதைக் கவனிக்காதவர்போல் உள்ளே பிரவேசித்த கிழவன், “என்ன, சத்தஞ்சாவடியைக் காணேல்ல?” என்று தானாகச் சொன்னவாறு தாய் பிள்ளைகளை ஏறு கண் வைத்துப் பார்த்தார்.
வந்த மனுஷனை’ ‘வா, போ, இரு’ என்று ஒருவரும் சொல்வாரில்லை.
தன்னை அவர்கள் வெறுப்போடு பார்ப்பதைப் புரிந்தும், அப்படித்தான் சினப்பார்கள் என்று தெரிந்துகொண்ட வேலுப்பிள்ளையர், மதியாதார் முத்தம் மிதியாதே என்பதையே மதியாமல் வெகு நிதானமாக அவதாமாக ஆறுதலாகத் திண்ணையில் குந்தினார்.
குந்தியவர் மடி அவிழ்த்து வல்லுவத்தை எடுத்து வெற்றிலைப்பாக்கைக் கைக் குவளைக்குள் துவைத்துக்கொண்டு, “பிள்ளையள், நாக்குவறண்டு போச்சு. குடிக்க எப்பன் தண்ணி கொண்ட மோள” என்றார்.
‘பூமணி தண்ணி எடுத்துக்கொண்டு வரவேணும்’ என்ற அவர் எதிர்பார்ப்புப் பிழைத்தது.
தாய் பிள்ளைகளைப் பார்க்க, பிள்ளைகள் தாயை நோக்க, தண்ணி எடுப்பார் இல்லை, கொடுப்பாரும் இல்லை. என்பதை இவர் கவனித்துக்கொண்டார்.
அவருக்குச் சிரிப்பாக வந்தது. பூமணியைப் பார்த்தே சிரித்தார்.
விவேக சிந்தாமணியின் பாடல் ஒன்றை ராகமாகச் சற்று உரத்துப் பாடலானார்.
“ஆபத்துக்குவாதப் பிள்ளை,
அரும்பசிக் குதவா அன்னம்
தாகத்தைத் தீராத் தண்ணீர்
தரித்திரம் அறியாப் பெண்டிர்
கோபத்தை அடக்கா வேந்தன்
குருமொழிகொள்ளாச் சீடன்
பாபத்தைத் தீராத்
தீர்த்தம் பயனில்லை ஏழுந்தானே”
அவர் பாடி முடிய தங்கச்சி ராணி செம்பும் தண்ணியுமாக வந்தாள். வாங்கிய செம்பைக் குந்தில் வைத்த கையோடு கிழவனார் நாரி நிமிர்த்தி நெஞ்சு குதற ஒரு பாட்டம் ஏவறை விட்டார். ஏவறை கழிய, வாய்க்குள் வெற்றிலையைப் போட்டுக்கொண்டு சொல்கிறார்.
“பிள்ள, நான் உங்களோட ஒரு வியளம் பேசலாமெண்டு வந்தனான். இஞ்சால தாயும் பிள்ளையளும் வாருங்கோ”
ஒரு தக்கு வைத்து வெற்றிலைச் சாரம் துப்ப ஒரு கன்னைச் செத்தை ஓரமாகக் குனிகிறபோது…
“எணை அப்பு, நீங்கள் என்ன பறைய வந்தனீங்களெண்டு எங்களுக்கு வடிவாத் தெரியும். தயவு செய்து அத்தை விட்டுப்போட்டு வேற அலுவலைப் பாருங்கோ”
கோடை இடியாக இது அவர் காதில் அடித்தது. அதை அவர் காட்டிக்கொள்ளாமல் மனசுகள் முறுவலித்தார்.
தாயிருக்க மகள் இப்படிச் சொல்லியிருக்கிறாள்.
அவருக்கு இதுவே செப்பமான பிடியாயிற்று.
“பிள்ள, நீ கோவியாத. தலை இருக்க வால் ஆடுறதால தான் எல்லா வில்லங்கமும் வாறது. ஊர் உலகம் வீணாக நாசமாப் போறதுக்கு இதுதான் காரணம். எதுக்கும் மூளையைப் பாவிக்க வேணும், உணர்ச்சிவசப் படக்கூடாது……”
ஒரு பீடிகையோடு ஆரம்பித்த வேலுப்பிள்லையர் தொடர்ந்து ”பிள்ள, நான் உங்களைப்போலக் கல்லூரிப் படியளேறிப் படிக்கேல. ஆனபடியால் உப்படியெல்லாம் எனக்குப் பேசத் தெரியாது. நானறிந்த அளவில் அனுபவந்தான் முறையான உயர்ந்த படிப்பு” என்றவர், தாயைப் பார்த்து, என்ன பொன்னம்மா, நீ என்ன சொல்றாய்?” என்று ஒரு சாட்டுக்குக் கேட்டுவிட்டு மனிசியின் மறுமொழிக்கும் காத்திராமல், “நான் கதைக்கத் துவங்கவே அதைவிட்டுப் போட்டு வேர அலுவலைப் பாருங்கோவெண்டு உன்ர மோள் சொன்னபடியால்தான் நான் அதை விட்டுபிடாமல் பேசவேண்டியிருக்கு. நான் உங்கட தனிப்பட்ட விஷயத்தில தலையிடுறனெண்டு நினைக்க வேண்டாம். இந்த உலகத்தில் எந்த விஷயமும் தனிப்பட்டதாக ஒண்டுமில்லை. எல்லாத்துக்கும் ஏதோ ஒருவகையில் தொடசல் இருக்கு. இந்தத் தொடசல்தான் எங்களையெல்லாம் கூடிப் பேச வைக்குது. இதுதான் இப்பத்தைய உலக நடபடி”
“அதுக்கு இப்ப என்ன?” என்று தன்பாட்டில் ஆரவாரித்துக் கேட்டாள் பொன்னம்மா.
“ம்….அப்பிடிக்கேள். உனக்கு ஒருதலைப்பாசம் தான் தெரியுது. நீதி தெரியேல்ல. உந்தப் பாசம் நீதியையும் அநீதியையும் மறைக்கிற ஒரு கண்ணாம்பூச்சி. சரி பிழை தவறு நல்லது கெட்டதுகளைத் தெரியாதபடி இது ஆட்டி வைக்கிறதாலதான் எல்லாரும் குருட்டுத் தனமாக நடக்கினம். அப்படியான பாசம் உன்ர பிள்ளையின்ர குடும்பத்தையே கெடுக்கிறதை உனக்கோ. உன்ர பிள்ளைக்கோ தெரியாதபடியால்தான் சின்னச்சின்ன விஷயங்களையும் பெரிசாக்கிக் கோடு கச்சேரியெண்டு அலஞ்சு கடசியா விரத்தியடைஞ்சுபோய்த் தவண்டையடிக்கிறயள்….”
கிழவனார் என்ன சொல்கிறார் என்று சரியாக இவளுக்குப் புரியாதபோதும் அவர் வார்த்தைகளில் பொதிந்துள்ள அர்த்தம் சரியாகவும் உடன்பாடுபோலவும் தெரிந்த போது இனங்காணாத பூரிப்பு இவளுள்
சூல்கொண்டது. வேலுப்பிள்ளையரை இவள் தரகர் என்றுதான் தெரிந்து வைத்திருக்கிறாள். ஆனால், அவரோ ஒரு மேதைக்குரிய அறிவுச்சுரங்கம் என்பதை இப்பொழுதுதான் காண்கிறாள்.
இத்தனைக்கும், இந்தக் கிழவன் என்ன சவத்துக்கு இஞ்ச வந்து நாண்டுகொண்டு நிக்குது என்று பூமணியும், மனிசனுக்கு அறளை பேந்திட்டுது. அறுபது வயது செண்டா வீட்டுக்கு நாய் வேண்டாம் என்று ராணியும் இந்த இரண்டு சகோதரிகளும் தற்காலத் தமிழ்ச்சினிமாக்காரச் சிட்டுக் குருவிகளைப்போல் தங்களையும் நவநாகரிக யுவதிகளாக எண்ணிக்கொண்டு கேந்தியாகவும் கேலியாகவும் தத்தமக்குள் சொல்லிக்கொண்டார்கள்.
அங்குள்ள சூழ்நிலையையும் அவர்களின் மனோபாவத்தையும் முற்றாகப் புரிந்துகொண்ட வேலுப்பிள்ளையார் சுற்றிவளைக்காமல் நேரடியாகவே விஷயத்திற்கு வந்தார்.
“பிள்ளை பொன்னம்மா, இஞ்ச எனக்கு முன்னால உன்ர மூத்த மோளை ஒருக்காக் கூப்பிடு” என்றவர் பூமணியைத் தானாகவே “மோள, இப்பிடிக் கிட்ட வா” என்று கை காட்டி அழைத்தபோது, அவள் வரவே, “உதில் ஆறுதலா இருந்து தனிய அமைதியாக கவனமாகக் கேள்” என்று ஆசுவாசப்படுத்திச் சொல்லிவிட்டு, அவளை மேலும் கீழும் உற்றுப் பார்த்தார்.
சற்று நேரம் பார்த்தபின் கட்டுக்கடங்காத ஒரு வெடிச் சிரிப்புடன் மறுபாட்டம் சொல்கிறார்.
“மோள, நீ ஒரு இளம் புள்ள. நறுக்காப் படிச்சனி. ஆயிரங்காலத்துப்பயிர். எந்தக் காரியத்தையும் ஆஞ்சோஞ்சு பாக்கவேணும். ஆஞ்சோஞ்சு பாக்காதவன்கருமம் தான் சாகக் கடவானெண்டு படிச்சிருப்பாய். குடும்பத்துக்க நடக்கிற காரியத்தைக் குடும்பத்துக்க பேசித்தீர்க்க வேணுமேயல்லாது கோடு கச்சேரி பொலிசுக்குப் போய்ப் பிரியோசனமில்லை. அதுகளில சட்டங்கள்தான் இருக்கும். ஆனா, சனங்களின்ர சீவியத்துக்கான முறையோ மனிதாபிமான நீதியோ மருந்துக்கும் இருக்காது. சட்டம் ஒரு இருட்டறை யெண்டு கேள்விப்படிருப்பாய். அதுக்குள்ள கால் வச்சால் பாதை தெரியாமல் தடவிக்கொண்டு அந்தரிச்சு அலைய வேண்டி வரும். தவறோ இல்லையோ மனிசரைத் தண்டிக்கத்தான் இந்தச் சட்டம் இருக்கே தவிர இந்தத் தவறுகள் எப்படி உண்டாகிறதெண்டுற சங்கதியள் இந்தச் சட்டத்துக்குத் தெரியாது. சட்டத்தில் நீதியப் பாக்கேலாது. சீவியத்தின்ர முறையில்தான் நீதியைக் காண முடியும். ஆனபடியால் உங்களுக்கோ கோடு கச்சேரி பொலிசுக்கோ முடியாதகாரியத்தை வேணுமெண்டா நான் சகோத்தியா முடிச்சு வைக்கிறேன். முதல்ல இதுக்குச் சம்மதம் சொன்னால் போதும்…”
தாய் அவள் முகத்தை ஊனிப் பார்த்தாள்.
ஓ. மெண்டு சொல்லுபிள்லை என்று கேட்பது போல் இருந்தது அந்தப் பார்வை.
கழுதைப் புண்ணுக்குப் புழுதி மருந்து என்று தனக்குள் பழமொழி ஒன்றை நினைவுப்படுத்திக்கொண்டாள்.
பூமணி வாயே திறக்காமல், என்ன செய்வம்? என்ற குதிர்போடு நெற்றியைச் சுருக்கிக் கீழே பார்த்தபடி நின்றபோது அந்த நிலையில் அவளை மட்டுக்கட்டிய தாய் கொஞ்சம் உசாராக, “என்ன பிள்ள, இதில் என்ன வந்திட்டுது. வாயத் துறந்து சொல்லன்?” என்று பொச்சரிக்க, அவள், சரி என்று மெல்லத்
தலையாட்டினாள்.
“பாத்தியே, கள்ளப் பெட்டை. சண்முகத்தில வெறுப்பில்ல, அவன் நடந்துகொண்ட முறையில்தான் கொதிப்பு. என்ன அப்படித்தானே?” என்று கிழவனார் அவன் செயற்பாட்டைக் கண்டித்த பாங்கு இவளுக்கு உவப்பாயிருந்ததைத் தாயும் கவனித்துக் கொண்டாள்.
ராணிக்கு இது பெரும் வினோதமாக இருந்தது. அவள் தனக்குள் தன்னாரவாம் சிரித்ததை வேலுப்பிள்ளையர் கவனித்துக்கொண்டார்.
“பொன்னம்மா, நானும் பிள்ளையும் பரையிறம். நீ உதில இருந்து கேட்டுக்கொண்டிரு. பிள்ள, நீ ஏன் சண்முகத்த வேண்டாமெண்டனி. முதல்ல அதச் சொல்லு?”
அவற்ற போக்குச் சரியில்லை” ‘என்ன போக்கு”
“எல்லாந்தான்”
“சீதனம்தானே கேட்டவன்?”
“சீதனம் கேட்காமலே சீதனம் கொண்டு வாவென்றமாதிரி நெடுகலும் அதை இதைச் சொல்லி ஒரே ஆக்கினை”
“அதுக்காகப் பிறிவினை பண்ண, டைவோஸ், வழக்கு வைச்சிட்டியவள்…”
“பொறுத்துப் பொறுத்துப் பாத்து ஏலாமல் கடைசியாத்தான் வழக்கு வச்சது.
“பிறகு என்னெண்டு உங்களுக்கு குடும்ப ஒற்றுமை வந்தது?”
“அதுக்குப்பிறகு ஒற்றுமையே இல்லை”
“ஒற்றுமை இல்லாமலே பிள்ள சனிச்சது?”
அவள் திடுக்கிட்டே போனாள். ஆனால், காட்டிக் கொள்ளவில்லை.
“அவர் தானாக மன்னிப்புக் கேட்டு வந்தவர்….”
வெடித்து வந்த சிரிப்பை அட்க்கிக்கொண்டு கிழவனார் கேட்டார்.
“பேச்சில் மயங்கினாயல்லாமல், உன்ர சீவியத்தைப் பாக்கேல்ல. ஒருதன் என்ன சொல்றானெண்டு பாக்கக்கூடாது. என்ன செய்யிறானெண்டு பாக்கவேணும். அது சரி, நீ என்ன பிடியை வச்சுக்கொண்டு அப்பிட நடந்திடினி?”
அவள் பதில் சொல்ல வக்கின்றித் திமிறிய பாங்கை அவர் வாறாகப் பயன்படுத்தினார்.
“பிள்ளை, கோடேறி வழக்காடிக்கொண்டிருக்கேக்க ஒரு வாக்கை நம்பி உன்னையே கைவிட்ட நீ, அவன்ர ஒரு கதையைக் கேட்டு எப்படிக் கோடேறி வழக்கு வச்சாய்? கோட்டில சட்டத்தைக் காட்டி டைவோஸ் பண்ணலாம். ஆனா உன்ர குடும்ப சீவியத்தை நீயோ அல்லது வேற ஆருமோ ஒருக்காலும் பிரிக்க ஏலாதெண்டு நீ உனக்குள்ல நினைச்சபடியால்தான் அப்பிடி நடந்துகொண்டாய். அப்படி யிருந்தும் ஒரு வெப்பிசாரத்துக்காக உன்ர சீவியத்தை ஒரு கௌரவப் பிரச்சனையாகப் பார்த்தபடியாத்தான் இந்தச் சீரழிவுக்கு நீ ஆளாக வேண்டி வந்தது. சீதனப்பேய் இந்த நாட்டில ரண்டு நேற்று வந்ததல்ல. இந்த நாட்டுச் சட்டதிட்ட வழக்கபழக்கங்கள் மாறாமல் சீதனப் பிசாசை விரட்டுறது கஷ்டம். இப்பவெல்லாம் சீதனப் பேய்க் கலியாணம் செய்யிறதும் ஒரு கௌரவமான சம்பிரதாய முறையாக இருக்கிறதே தவிர, சீவியத்துக்குண்டான பாசத்துக்கு அத்திவாரமாக அது இருப்பதில்லை. நாட்டில இதுக்கான மாற்றத்துக்கு வழி காண முடியாமல் சீதனத்தை ஒழிக்கிறதெண்டு
சொல்றதெல்லாம் சுலோகமாகவும் போலியாகவும் இருக்குமே தவிர மெய்யாக இருப்பதில்லை. இந்தப் போலித்தனத்திலதான் நீயும் சண்முகமும். வேற வேற தினுசாக ஆளையாள் மாறுபட்டு நிக்கிறயளேயல்லாமல் ரண்டு பேருமே நோக்கத்தில் ஒண்டாத்தானிருக்கிறியள். ரண்டு பேற்ற நடவடிக்கையள் சீதனப்பேயை ஒருக்காலும் விரட்டாது. அந்தப் பேய்தான் உங்களை விரட்டிக்கொண்டிருக்கும். இனி அந்தப் பேய் உங்களை விரட்டத் தேவையில்லை, அதை நீங்கள் அரவணைக்கவும் வேண்டியதில்லை. அந்தப்பேயை விட்டுவிட்டு நீங்கள் ரண்டுபேரும் ஒற்றுமையாகச் சீவிச்சால் போதும் இதுக்கு இப்ப நீ என்ன சொல்றாய்?” சீதனம் கேட்டுச் சதா தொல்லையும் துன்புறத்தலும் புரிந்த அவன், இடை நடுவில் மன்னிப்புக் கேட்டுக்கொண்ட போது, அந்த ஒரு வாக்கை நம்பியே மகுடியில் கட்டுண்ட நாகம்போல் மயங்கிய அவள், கோடேறிய வழக்கையும் கைவிட்டு அவனோடு தாம்பத்திய உறவுகொண்டதும் போதாமல், அந்த உறவாலேயே பிரிக்கமுடியாத உறவாகிவிட்ட மாதிரித் தான் கர்ப்பம் தரித்துவிட்ட . நிலையும் அவளை இப்போது சிப்பிலியாட்டின. இந்த நிலைக்கு ஆளான தன் வாழ்வைக் காட்டிலும், தான் இதுவரை கட்டிக்காத்துவந்த மான ரோச உறுதிப்பாடே ஒரு கௌரவப் பிரச்சனையாக அதுவே வாழ்க்கையின் அந்தஸ்தாக அவள் மனசில் பூதாகரித்து உருவெடுத்தது.
வாழ்க்கையை அதன் அர்த்தபாவத்துடன் பார்க்கத் தெரியாமல் மானசீகமாக அதனை ஒரு கௌரவ அந்தஸ்துக்குள்ளாக்கி அழிந்து நாசமாகிப்போன எத்தனையோ தம்பதியர்களை அவள் பார்த்திருக்கிறாள், இலக்கியங்களில் படித்துமிருக்கிறாள். மனசு கற்பிக்கின்ற மாய மானாகிய கௌரவ அந்தஸ்தோ அதனை ஒட்டிச் சமூகத்தில் நிகழ்கின்ற சம்பிரதாயங்களோ அர்த்தமுள்ள வாழ்க்கையல்ல என்றும், அந்தப் போலி வாழ்க்கையில் தூய்மையான இதய சுத்தியான வாழ்க்கையே கிடையாது என்பதையும் இவள் தெரிந்துகொண்டபின்பும், அந்தப் பழக்கதோஷம் இன்னும் அவள் மனசைத் தீண்டிக்கொண்டிருந்தால் கிழவனார் கேட்டதற்கு எந்த மறுமொழியும் கூறாமல் மெளனமாக ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தாள்.
கிழவனார் மறுபடியும் உசுப்பலானார்.
“என்ன பிள்ள, கேட்டதுக்கு மறுமொழி சொல்லாமல் உப்பிடி யோசிச்சுக்கொண்டிருந்தாப்போல விஷயம் லேசில முடியுமா?”
இப்படி அவர் கிண்டலாகத் தூண்டிவிட்ட பின்தான் அவள் ஆசுவாசப்பட்டுக்கொண்டு என்னசொல்கிறேன் என்றும் எண்ணாமல் எழுந்தமானமாக, தான் கொண்டிருந்த தன்மான உணர்வோடு சொன்னாள்.
“அப்பு, நீங்கள் சொல்றது உண்மைதான். ஆனா, இப்ப ஏன்ர மனசு ஒருபோதும் சுகம் காணாதபடி நொந்து போச்சு. என்ர மனசை அவர் எப்பவோ சுட்டுப்பொசுக்கிப் போட்டார். இது சுட்டமண்… சுட்ட இந்த மண் ஒரு போதும் ஒட்டாது. ஆனபடியா, நீங்கள் இதில மினைக்கெடாதையுங்கோ… வேற சங்கதி இருந்தால் பறையுங்கோ”
கிழவனார் இப்போது கொஞ்சம் அட்டகாசமாகச் சிரித்தார்.
“பிள்ளை, இப்பதான் நீ குழந்தைப்பிள்ளையாட்டம் பேசியிருக்கிறாய். நீ நல்லாப் படிச்சுத் துறைகண்டனியெண்டுதான் நான் இம்மட்டு நாளும் நினைச்சிருந்தன். உப்படித்தான் கனபேர் படிச்சுப்பட்டம் பெற்றுப்போட்டு அந்தப்பட்டங்களையும் விட்டதாரியளாகக் கோட்டவிட்டிருக்கினம். வாழ்க்கையைச் சரியாகச் சொல்லாத படிப்பாலதான் எல்லாம் தலை கீழாப்போயிருக்கு… சுட்டமண் ஒட்டாதெண்டு எங்க படிச்சனி அப்படி எந்தமடையன் சொன்னவன்? சட்டமண்தான் ஒட்டி இறுகும். பச்சை மண் ஒரு போதும் ஒட்டாது. சுட்ட சங்குதான் வெண்மை தரும். உருக்க உருக்கத்தான் பொன்னும் மின்னும். பிரச்சனை வாறதே பாசத்தின்ர உச்னம்தான். உனக்கும் சண்முகத்துக்கும் உள்ள பாசத்துக்கு இந்தச் சீதனப் பேய் ஒரு பிரச்சனையாய் வந்ததே தவிர, இந்தப்பிரச்சனையால் அந்தப் பாசம் இல்லாமல் போச்சுது என்பதும் அல்ல. பிரச்சனையைக் கண்டு ஒருபோதும் பின்வாங்கக் கூடாது. அதுக்கு முகங்கொடுத்தால்தான் பிரச்சனைகளைத் தீர்க்கமுடியும். தீர்க்கக் கூடியது எதுவோ அதுதான் பிரச்சனை. தீர்க்க முடியாத சங்கதி பிரச்சனையுமல்ல. இது தீர்க்கக் கூடிய பிரச்சனை. ஆனபடியால் இந்தப் பிரச்சனைக்கு முகங் குடுத்துத் தீர்க்கப் பாக்கிறதைவிட்டு தீர்க்கக் கூடிய இந்தச் சின்னப்பிரச்சனையைவிட்டு, தீர்க்க முடியாத சட்டப் பிரச்சினையைத் தேடிப்போவது எந்த விதத்தில் நேசிப்புத் தன்மையானது…?”
இந்தக் கட்டத்தில் அவள் நோக்கத்தினை அறிய விரும்பியதால் அவருக்கு நாக்கு வறண்டு தாகம் எடுத்த சாடை பாவனை பண்ணவேண்டியதாயிற்று. செம்புத் தண்ணியை ஒரு பாட்டம் மிண்டுவிட்டுத் தொடர்ந்து சொன்னார்.
“நீ உன்னை மட்டும் பாத்தாய். உன்ர சகோதரியை, உன்ர தாயாரை, உன்ர அயல் சனங்களை ஏன் உன் வயத்தில கருவாகிய உன்ர ரத்தமும் சதையுமான குழந்தைச் செல்வதைப் பாக்கவில்லை நேசிக்கவில்லை. இந்த நேசிப்பு அல்லது பாசம் இல்லாத ஒரு பிறவியாக நீ இருந்துகொண்டு, உன்னையே மட்டும் நினைச்சுக் கொண்டு வெறும் சுயநல இச்சைக்கு அடிமையாக இருந்ததாலதான் உன்னால அடுத்தவன்ர பிரச்சனையப் பாசத்தோடு அணுக முடியாமலிருக்கிறது. முதல்ல நீ உந்தச் சுயநலப் பிசாசான இச்சையின் மாயப்பிசாசை நீக்கிவிட்டு இந்த ஊரை உலகத்தைப் பார். உன்பெற்ற தாய், உடன் பிறந்த சகோதரி சகோதரன் உற்றம் சுற்றம் இன சனபந்துக்களெண்டு வேர் விட்டுப்போந எல்லாச் சனங்களையும் ஒருமுறை கண் துறந்து பார்… அப்பதான் ஒருவரையொருவர் புரிந்து பந்த பாசத்தோட சீவிக்கமுடியும். உனக்காகவே மற்றவர்கள் சீவிக்கவேணுமெண்ட உரை சுயநலப் பித்து உன்ர தாய் சகோதரங்களை எப்படியெல்லாம் சித்திரவதைக் குள்ளாக்கியிருக்கிற தெண்டு ஒரு தடவையெண்டாலும் யோசிச்சுப் பாக்காமல் முன்னமே சொன்னது போல இந்தச் சீவியத்தைப் பாக்காமல் வெறும் வாத்தைகளை வைச்சுக்கொண்டு அதுக்கு நுணுக்கம் பாக்க எத்தனிச்சு அதில நீ சுக திருப்தி கண்டதாலதான் இந்தச் சீரழிஞ்ச வாழ்க்கையில விரக்தியடைஞ்சுப்போய் தவிக்கிறாய்…
‘முக்காலும் உண்மை’ என்று அவள் மனசு இப்போது அடித்து சொல்லியதை அவள் முகபாவத்தில் புரிந்து கொண்ட கிழவன், அவளையே ஏறு கண் வைத்துப் பார்த்தார்.
விடுபடமுடியாத தனது மன அவஸ்தையை முறையாக நாடி பிடித்துச் சொன்ன கிழவன் இப்போது அவளுக்குத் தரகராகத் தெரியவில்லை இந்த வாழ்க்கையை இந்தச் சமுதாயத்தின் நெளிவு சுழிவுகளைச் சரியாக உணர்ந்த ஒரு மானிடதர்மவாத மேதாவிபோல் தோன்றினார். என்ற போதும், அவள் மனசில் கொண்ட சபலம் அவள் முகத்தில் தேங்கியிருந்தது.
“இப்ப என்னை என்ன செய்யச் சொல்லுறியள்?”
இப்படி விரைவாக அவள் தன்னிடம் ஒருவழி மார்க்கம் கேட்பாள் என்று கிழவனார் எதிர்பார்க்காத போதும், கொஞ்மும் ஆசுவாசப்படாமல் சொன்னார்.
“சுட்டமண் இறுக்கமாக ஒட்டிப் பிடிக்கும். அதுபோல இந்த ஒட்டுறவு உனக்குள் வந்தால் போதும். அடுத்த நிமிஷமே சண்முகம் இஞ்ச வந்து நிப்பான்….”
கிழவனார் எழுந்து முற்றந் தாவச் செல்கையில், அவரின் பாதச் சுவடுகள் அவள் கண்ணில் பசும் புஷ்பங்களாகத் தெரிந்தன.
மனசில் புதிய நம்பிக்கை துளிர்விட அவள் உள்ளம் பூரித்துச் சிலிர்த்தது.
கண்களில் வெளிச்சமான ஒரு கலங்கல்.
புத்தி பேதலித்தவனான ரஞ்சன் முற்றத்துப் பூங்கன்றுகளுக்குத் தண்ணீர் வார்த்து விளையாடியபடி.கிழவனாரைப் பார்த்துச் சிரித்தான் சிரித்தவனாகவே நின்றான்.
– நரகத்திலிருந்து… (மூன்று குறுநாவல்கள்), முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1994, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை.