வேண்டுதல் – ஒரு பக்க கதை
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 7,206
பரபரப்பாய் இருந்தாள் கௌரி.
ஆபரேஷன் சரியாக ஒன்பது மணி. கடிகாரமுள் ரொம்பவும் மெதுவாய் ஊர்ந்தது.
“சுவாமி’ படத்தின் முன் உட்கார்ந்து, குத்துவிளக்கை ஏற்றினாள்.
புதிதாய் பறித்து வந்த மல்லிகைப் பூக்களை முருகன் படத்தின் முன் தூவினாள்.
கம்ப்யூட்டர் சாம்பிராணியில் இடமே மணத்தது. சுலோகத்தைச் சொல்ல ஆரம்பித்தாள்.
இதயம் விரிந்து விலாவில் முட்டியது.
“ஆண்டவா! எல்லாம் நல்லபடியாக நடந்து முடிய வேண்டும். நந்தினி தியேட்டர் உள்ள போயிருப்பாள்.’
மனம் பதைபதைத்தது.
அலைபாயும் மனதை, கடிவாளம் போட்டுத் திருப்பி “சுலோகம்’ சொன்னாள்.
நேரம் கரைந்தது.
“செல்’ உயிர்ப்பித்தது.
நந்தினிதான் பேசினாள்.
“அம்மா… என்னோட “முதல் ஆபரேஷன்’ சக்சஸ்!’
கௌரியின் காதில் தேனாய் பாய, ஆண்டவனிடம் தன் “வேண்டுதல்’ பலித்ததற்கு “நன்றி’ சொன்னாள் மானசீகமாய்!