கதையாசிரியர்:
தின/வார இதழ்: அமுதசுரபி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 15, 2025
பார்வையிட்டோர்: 606 
 
 

(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சொக்கலிங்கம் அப்போதுதான் எழுத உட்கார்ந் திருந்தார். எழுதக்கூடிய ‘மூட்’ வருவதற்கு எவ்வளவோ நேரம் தேவைப்பட்டது. சும்மா இருந்தும், அதை இதைப் புரட்டியும், கோணல் மாணல் கிறுக்கல்கள் தீட்டியும் காலக் கொலை செய்த பிறகு, ஒரு எழுச்சி ஏற்பட்டிருந்தது. எழுதலானார். பேனா வேகமாக இயங்கத் தொடங்கியது. 

‘தட்தட்’ என்று கதவு தட்டப்படும் ஓசை அவர் அமைதியைக் குலைத்தது. எரிச்சல் வந்தது. யாரது என்று சீறிவிழ எண்ணினார். 

‘சங்கிலி புங்கிலி கதவைத் திற?’ 

சிறு பிள்ளைக் குரல் ராகம் போட்டு இழுத்தது. 

இங்கே தட்டவில்லையா? சரிதான் என்று அவர் மனம் முணுமுணுத்தது. இருந்தாலும் எரிச்சல் தணியவில்லை. 

‘நான் மாட்டேன் வேங்கைப் புலி!’ பதில் நீட்டல் எதிர் வீட்டுக் குள்ளிருந்து வந்தது. 

‘ஆட்டுக் குட்டியைக் கண்டளோ?’ முதல் குரல் ராகம் இழுத்தது. 

‘கண்டோம்’ பல குரல் இசை. 

‘எங்கே?’ 

‘வீட்டுக்குள்ளே!’ 

‘வரலாமா?’ ஒரு நீட்டல். 

‘வரக்கூடாது!’ பதில் இழுப்பு. 

‘வருவேன்… இதோ வந்துவிட்டேன்.’ 

கதவு தட்டும் சத்தமும், பல சிறுமிகள் கத்தியும் சிரித்தும், ‘வேங்கைப்புலி… ஐயோ… வேங்கைப்புலி’ என்று கூச்சலிட்டபடி, கிடுகிடுவென ஓடும் ஓசையும் கேட்டன. 

முதலிலேயே கவனம் கலையப்பெற்று விட்ட சொக்கலிங்கம், ‘சனியன்கள்!’ என்று மனத்தில் ஏசிக்கொண்டார். ‘இனிமேல் எழுதின மாதிரித்தான்…’ 

அவர் மனம் புலம்பிக் கொண்டிருந்தபோதே, வெறுமனே சாத்தப்பட்டிருந்த அவருடைய அறைக்கதவு குபீர் எனத் திறந்து கொண்டு, தடால் என்று சுவரோடு மோதியது. 

அதை அப்படித் திறந்தது யார் என்று கோபத்தோடு அவர் பார்க்கையில், இரண்டு பிள்ளைகள் பதுங்கி ஒளியும் நோக்கத்தோடு உள்ளே புகுந்தனர். 

‘ஏ ஏய், இங்கே வரப்படாது. வெளியே போங்க’ என்று கூச்சல் போட்டார் அவர். 

அக்குழந்தைகள் உள்ளே இருந்த அவரைப் பார்த்துப் பயத்துடன் விழித்தன. வெளியேயிருந்து ‘வேங்கைப் புலி’ வந்து பிடித்துக் கொள்ளுமே என்ற கலக்கம் வேறு. குழப்பத்துடன் அறை நடுவிலேயே நின்று கொண்டிருந்தன. 

‘உம் வெளியே போங்க. வீட்டுக்குள்ளே வந்தா விளையாடுவது?’ என்று அவர் அதட்டினார். 

வெளியேபோக அடி எடுத்தவைத்த சிறுமியர், ‘ஐயோ, வேங்கைப் புலி?’ என்று கத்திக் கொண்டு ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்தபடி நின்றுவிட்டனர். 

‘ஓகோய், அம்புட்டேளா? வசமா மாட்டிக்கிட்டேளா?’ என்று உற்சாகமாகக் கூவிக் கொண்டு உள்ளே பாய்ந்தாள் இன்னொருத்தி. அவள்தான் ‘ஆட்டுக் குட்டி’களைத் தேடி அலைந்த ‘வேங்கைப் புலி’ என்பது அறிமுகப்படுத்தப் படாமலே அம்பலமாயிற்று. 

சொக்கலிங்கம் உறுமினார்; ‘என்ன கலாட்டா இது? வீட்டுக்குள்ளேயா விளையாட்டு?’ 

இரண்டு சிறுபிள்ளைகளையும் இரண்டு கைகளில் பிடித்துக்கொண்டு, வெற்றி மிடுக்கும் சிரித்த முகமுமாய் நின்றவள், அச்சமோ கூச்சமோ இல்லாமல், அவரை நோக்கினாள். ‘சரிதாம் மாமா. இப்போ என்ன தேஞ்சு போச்சு இங்கே?’ என்றாள். 

‘போக்கிரிக் கழுதை, போ வெளியே!’ கோபம் அவர் குரலில் பொறி தெறித்தது. 

அவள் சிரித்த முகத்தோடு அங்குமிங்கும் பார்த்தாள். சுவர்களில் அழகுசெய்த வண்ணப்படங்கள் அவளைக் கவர்ச்சித்தன. வியப்போடும் ரசனையோடும் அவற்றை ஆராய்ந்தாள் அவள். 

‘இந்தா வாறேன். போகாமல் இங்கேயே நின்னுக்கிட்டு, இது என்ன சண்டித்தனம்?’ 

சொக்கலிங்கம் சீ றி க் கொண்டு, நாற்காலியைப் பேரோசையோடு விலக்கிவிட்டு, முன்னேற முனைந்தார். 

‘ஐயோ வேங்கைப் புலி! வா அக்கா, வந்து விடு. சீக்கிரமா வா!’ என்று இரு சிறுமிகளும் பெரியவளைப் பிடித்து இழுத்தனர். 

அவளுக்கு ஏழு அல்லது எட்டு வயசு இருக்கலாம். குறு குறு விழிகளும் குறும்புச் சிரிப்பும் அவள் முகத்தில் சிறப்பான வசீகரம் சேர்த்துக் கொண்டிருந்தன. ‘சரிதாம் மாமா, ரொம்ப அலட்டிக்காதீங்க!’ என்று அமைதியாகச் சொன்னாள். அவசரம் இல்லாமலே வெளியேறினாள். 

‘என்ன திமிர் பாரேன் இந்தப் புள்ளைக்கு!’ என்று பொறுமினார் அவர். 

சொக்கலிங்கம் அந்த இடத்துக்குக் குடிவந்து பத்து தினங்கள் ஆகியிருக்கலாம். அது தனியாக அமைந்த ஓர் அறை. சிறு கூடம் மாதிரியோ, பொழுது போக்குவதற்கு உரிய மடம் போலவோ கட்டப்பட்டு, பின்னர் ஒருவர் இருப்பதற்கு வசதியான அறையாக மாற்றப்பட்டிருந்தது. அதுவும், சூழ்நிலையும், அங்கு நிலவிய அமைதியும் அவ ருக்குப் பிடித்திருந்தன. தொல்லைகளாக விளங்கக் கூடிய எதுவும் அங்கே இல்லை என்ற திருப்தி அவருக்கு ஏற்பட்டிருந்தது. இன்றைக்குத்தான் அவரது திருப்தியையும் அமைதியையும் கெடுப்பதற்கென்றே கூச்சலும் குதியாட்டமுமாக வந்து சேர்ந்திருந்தன குழந்தைகள். 

‘குரங்குகள்! எந்த வீட்டைச் சேர்ந்த மூதேவிகளோ தெரியவில்லை. இங்கே வந்து தொல்லை கொடுக்கின்றன. வீட்டுக்காரரிடம் சொல்லி வைக்க வேண்டும்’ என்று அவர் மனம் முணுமுணுத்தது. 

அவருக்குப் பிடிக்காத விஷயங்கள் பல. அவற்றிலே குழந்தைகளும் முக்கிய இடம்பெறும். அவர் தனியாக வாழ்க்கை நடத்தினார். படிப்பதிலும் எழுதுவதிலும் ஊர் சுற்றுவதிலுமே வாழ்க்கையைக் கவலை இல்லாமல் கழித்து வந்தார். ஒரே இடத்தில் தங்கியிருப்பதில் அவருக்கு ஆர்வம் அதிகம் கிடையாது. ஓர் இடம் அலுத்துப் போனால், ‘குடிசையைக் கிளப்பிக் கொண்டு’ வேறு இடத்துக்குக் குடி புகுவார். 

அப்படித்தான் இங்கும் வந்திருந்தார். இந்த இடம் அவர் மனசுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. நகரத்தின் பரபரப்புகளை விட்டு விலகி, பசுமையான தனியிடமாக இருந்தது. மரங்களும் பூஞ்செடிகளும் கிணறுமாய் சூழ்நிலை குளு குளு என்றிருந்தது. அருகிலும் பெரிய வீடுகளோ சிறு குடிசைகளோ இல்லை. வலப்புறம் ஒரு வீடு இருந்தது. வீட்டுக்காரர்கள் வசித்த வீடு இடப்புறம் சிறிது தள்ளி இருந்தது. புதிதாக வந்திருக்கும் நபர் ‘ஒதுங்கி வாழும் பிராணி’ என்று புரிந்து கொண்டு, அவ்வீடுகளில் உள்ளவர்களும் இவரை விட்டு ஒதுங்கியே போனார்கள். இன்று வரை குழந்தைத் தொல்லையும் இல்லாமல் இருந்தது. 

‘இதை ஆரம்பத்திலேயே அடக்கி ஒடுக்கி விட வேண்டும். மிஞ்ச விடப்படாது’ என்று சிடு சிடுத்தது அவர் உள்ளம். 

வெகுநேரம் அவதிப்பட்டு, எழுதலாம் என்று உற்சாகத்தோடு ஆரம்பித்த வேலை எடுத்த எடுப்பிலேயே தடைப்பட்டுப் போனதால், சொக்கலிங்கத்தின் உளக்கிளர்ச்சி படுத்துவிட்டது. அழுமூஞ்சி மனசோடு அங்கே முடங்கியிருப்பதை விட, வெளியே போய் சுற்றிவிட்டு வரலாம்; அதுதான் மகிழ்ச்சிகரமான அலுவல் என்று என்று எண்ணி அறையைப் பூட்டிக் கொண்டு கிளம்பினார் அவர். 

அவர் திரும்பி வரும்போது இருட்டிவிட்டது. குழந்தை தென்படவே இல்லை. ‘பக்கத்திலே எங்கேயாவதிருந்து வந்திருக்கும் இங்கே விளையாட!’ என்று எண்ணிக் கொண்டார். ‘வீட்டுக்குப் போயிருக்கும். அநேகமாக இனி மேல் வராது.’ 

அந்த எண்ணம் தவறானது என்பது மறுநாளே அவருக்கு விளங்கிவிட்டது. குழந்தைகள் பட்டாளம் அங்கும் இங்கும் ஓடியாடிக் கூச்சலிடத் தொடங்கின. அவருக்கு எரிச்சல்தான். என்ன செய்வது? 

நல்ல வேளையாக, வீட்டுக்காரர் அந்தப் பக்கமாக வந்தார். அவரே பிள்ளைகளை விரட்டினார். ‘ஏ இங்கே என்ன கூச்சல்? இந்தப் பக்கம் வந்து இப்படி சத்தம் போடக்கூடாது. அப்படி தோட்டத்திலே போய் விளையாடுங்க. ஓடி ஆடிக் கூச்சல் போடாமல் ஓர் இடத்திலே உட்கார்ந்து விளையாடுங்க’ என்று எச்சரித்து அனுப்பினார். 

‘அவர்தான் துரத்திவிட்டாரே. அந்தப் பிள்ளைகளைப் பற்றி அவரிடம் நாம் குறை கூற வேண்டியதில்லை. எங்கே உள்ள பிள்ளைகள் என்று வீணாக விசாரிப்பானேன்?’ என்று சொக்கலிங்கம் சும்மா இருந்து விட்டார். பிறரிடம் அநாவசியமாகப் பேச்சுக்கொடுப்பதும் அவருக்குப் பிடிக்காது தான். 

அன்று பிற்பகல் சொக்கலிங்கம் எழுதுவதிலோ படிப்பதிலோ உற்சாகம் இல்லாதவராக சும்மா நாற்காலியில் சாய்ந்திருந்தார். வாசலுக்கு வெளியே ஒரு சிறுமுகம் எட்டிப் பார்த்தது. வண்டு விழிகளும், சிரிப்பு ஊறும் உதடுகளும், களையான முகமும் ‘வாயாடிச் சிறுமி’ என்று காட்டிக் கொடுத்தன. அவர் பாராதது போல் இருந்தார். 

‘உள்ளே வரலாமா?’ என்று கேட்டாள் அவள். 

‘வரக் கூடாது’ என்றார் அவர். 

‘நீங்க என்ன ஆட்டுக் குட்டியா?’ என்று கேட்டுக் கொண்டே சிறு பெண் உள்ளே வந்தாள். 

அவருக்குப் புரியவில்லை. ‘என்ன உளறுதே?’ என்று கேட்டார். 

‘வெளியே நின்று வேங்கைப் புலி வரலாமான்னு கேட்கும். உள்ளே இருந்து ஆட்டுக்குட்டி வரக்கூடாதுன்னு சொல்லும். விளையாட்டிலே அப்படி. நீங்க ஏன் இப்ப வரக் கூடாதுங்கிறீங்க?’ 

இதைக் கேட்டுவிட்டு அவள், மணிகளை உலுக்கியது போல், கலகலவெனச் சிரித்தாள். 

பயம் கொள்ளாமலும், சாமர்த்தியமாகவும் பேசி, கவலை இல்லாமல் சிரிக்கிற அந்தப் பெண்ணைக் கோபித்து வெளியே விரட்டுவதற்கு அவருக்கு மனம் வரவில்லை. இருந்தாலும் மிடுக்கை விட்டுக் கொடுக்காமல், ‘ஏய் வேங்கைப் புலி, நீ வீட்டுக்குள்ளே எல்லாம் வரலாமா?’ என்று வறண்ட குரலில் பேசினார். 

‘ஏன் வரப்படாது?’ 

‘நான் எழுதுறதுக்கும் படிக்கிறதுக்கும் இடைஞ்சலா இருக்கும்…’ 

‘இப்போ நீங்க எழுதவும் இல்லே. படிக்கவும் இல்லையே? பொழுது போகாம முழிச்சிக்கிட்டு இருக்கிற உங்களுக்கு பொழுதும் போகும், நான் படங்களைப் பார்த்த மாதிரியும் இருக்குமேயின்னுட்டுத் தான் வந்தேன். நீங்க ரொம்பக் கோபிக்கிறேளே!’ 

அவருக்குச் சட்டென்று பதில் சொல்லத் தோன்ற வில்லை. ‘அதெல்லாம் வரப்படாது. சின்னப் புள்ளைக்கு இங்கே என்ன வேலை?’ என்று தான் சிடுசிடுத்தார். 

‘சரோஜா சொன்னது சரிதான். நீங்க வேங்கைப் புலியேதான். உர் உர்ருனு பாயிறேளே!’ மறுபடியும் சிரிப்பு அருவி சிதறித் தெறித்தது அவளிடமிருந்து. 

இந்த வாயாடிப் பெண்ணை என்ன பண்ணலாம் என்று யோசிக்கும் போது, அவள் சுவரில் தொங்கிய படங்களைப் பார்த்து ரசிப்பதில் தீவிரமாக ஈடுபட்டாள். 

‘ஏ வேங்கைப் புலி, வெளியே போ!’ என்று கூறி அவர் நிமிர்ந்து உட்கார்ந்தார். 

அவள் சட்டை செய்யாமல். ‘ஐய்சக்கா, இது எவ்வளவு ஜோராயிருக்கு பாரேன்!’ என்று ஆனந்தக் கூச்சல் உதிர்த்தாள். 

‘இந்தா, நான் சொல்றது காதிலே விழலே?’ 

‘என்ன சொன்னீங்க?’ என்று, கபடமற்று, அகன்ற விழிகளை அவர் பக்கம் ஏவினாள் சிறுமி. 

‘வேங்கைப் புலியே வெளியே போன்னேன்!’

‘இங்கே புலி ஒண்ணையும் காணோமே?’ 

‘நீ தானே அப்படிச் சொல்லிக் கிட்டே…’ 

‘அது விளையாடுறபோது. இப்போ யாரு விளையாடுறாங்க? பேசாமே நிற்கையிலே, நீங்கதான் கூச்சல் போடுறீங்க…’ 

இது ஏதடா பெரிய எழவாப் போச்சு; வழியோடு போற சனியன் வம்புச் சண்டைக்கு வலிய வந்த மாதிரி இருக்குதே என்று புலம்பியது அவர் மனம். ‘சரி, உன் பேரு என்ன?’ என்று கேட்டார். 

அவள் பதில் சொல்லவில்லை. 

‘ஏய் உன்னைத் தானே…’ 

அவள் கோபம் கொண்டவள் போல் முறைத்துப் பார்த்தாள். ‘கூப்பிடுறதைப் பாரேன்! இப்படி எல்லாம் என்னைக் கூப்பிடப்படாது’ என்று கண்டிப்புக் குரலில் அறிவித்தாள். 

அவளது பெரிய மனுஷித் தோரணை அவருக்குச் சிரிப்பு உண்டாக்கியது. 

‘இப்ப என்ன இளிப்பு வாழுது? இ ஹி ஹியின்னுட்டு…’ 

அவள் மேலும் பேசியிருப்பாள். வெளியேயிருந்து வெடித்தது அழைப்பு: ‘பத்மா…ஏ பத்மா…’ 

‘இதோ வாறேன்மா’ என்று கூவியபடி, விழுந்தடித்து ஓடினாள் அவள். 

‘சரியான குரங்கு…வந்தது ஒரு மாதிரி தொலைஞ்சுது சனி!’ என்று அவர் மனம் ஆறுதல் அடைந்தது. 

ஆனால், சிறிது நேரத்திலேயே பத்மா திரும்பி வந்து விட்டாள். அவள் கையில் ஒரு தட்டு இருந்தது. அதில் எதையோ வைத்து மூடி எடுத்து வந்தாள். ‘இதில் என்ன இருக்குதாம், சொல்லிடுங்க பார்க்கலாம்!’ என்று சவால் விடுத்தாள். 

‘என்ன இருக்கோ, எனக்கு எப்படித் தெரியும்?’ 

‘எனக்குத் தெரியுமே – உங்களுக்கு எதுவுமே தெரியாது. ஆமா!’ என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு, ‘இந்தாங்க, சாப்பிடுங்க. அது தெரியுமில்லே!’ என்று கேட்டாள். 

அவள் தலை அசைப்பும் பேசும் பாணியும், நடந்து கொள்ளும் சுபாவமும், இயல்பான துணிச்சலும் அவருக்கு வேடிக்கையாக இருந்தன. அவளை அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். 

“என் முகத்திலே என்ன இருக்கு? தட்டிலே தேன்குழல் இருக்கு. அதைத் துன்னுங்க…’ 

‘இது ஏது?’ 

‘எங்க அம்மா கொடுத்தாங்க. உங்களுக்குத்தான். இதை கொடுக்கத்தான் என்னைக் கூப்பிட்டாங்க. ஆச்சி வீட்டிலே இருந்து கொண்டு வந்தது. நேற்று நான், எங்க ஆச்சி, சின்னம்மா குழந்தைகள் எல்லாம் வந்தோம். சரோஜா, தேவகி, உஷா, ஆனந்தி எல்லாரும் ஊருக்குப் போயிட்டாங்க. ஆச்சியும் போயாச்சு…’ 

‘நீ போகலியா?’ 

‘நான் இங்கேயே தான் இருப்பேன்’ 

ஓயாத தொல்லைதான் என்றது அவர் மனம். 

‘அதைச் சாப்பிடுங்க மாமா. நான் போய் காப்பி எடுத்தாரேன்…’ 

‘காப்பி வேண்டாம். அப்புறம் ஓட்டலில் சாப்பிட்டா போச்சு. மற்றவர்களுக்குச் சிரமம் தரப்படாது’. 

‘எங்க வீட்டிலேதான் காப்பி போட்டாச்சே. இன்னமேயா போடப்போகுது?’ என்று சொல்லி விட்டு, குதித் தோடிப் போனாள் பத்மா. 

காப்பி டம்ளரோடு விரைவிலேயே வந்து சேர்ந்தாள். அவர் சாப்பிட்டு முடிக்கும் வரை அங்கேயே நின்றாள். ஓயாது பேசிக்கொண்டேயிருந்தாள். 

ரோஜா மொக்கு போலிருந்த உதடுகள். சுவையாகப் பேச்சுக்களை உதிர்ப்பதில் அலுப்பே அடையா என்று அவருக்குத் தோன்றியது. அவளுடைய சின்னஞ் சிறு வாய் ஓயாது சொல்திவலைகளை அள்ளிச் சிதறும் இனிய ஊற்று மாதிரியே பட்டது அவருக்கு. அந்தச் சிறுமியின் துடிப்பான குணமும், வெடுக்கென்ற பேச்சும் ரசிக்கக் கூடியனவாக இருந்தன. அநேக குழந்தைகளைப் போல் கூச்சமும் வெட்கமும் கொள்ளாமல், பயந்து கொண்டு பதுங்கி மறைந்து ஒளியாமல், புது மனிதர்களிடம் பேசிப் பழக மனமின்றி விலகிப் போகாமல், பத்மா துணிச்சலோடு முன் வந்து சகஜமாகப் பேசிப் பழகியது அவரை வசீகரித்தது. அவர் குடியிருந்த வீட்டின் சொந்தக்காரர் மகளாகவும் இருந்து விட்டாள் அவள். ஆகவே, எரிந்து விழுந்து, அதட்டி அடித்து, அவளை அங்கே எட்டிப்பாராது பண்ணுவது சாத்தியமே அல்ல. சகித்துக் கொள்ள வேண்டிய தொல்லையாக ஏற்றுக் கொள்ளத் தன்னைத் தயார் படுத்திக் கொண்டது அவர் மனம். 

சிறுமி பத்மா அவள் இஷ்டப்பட்ட நேரங்களில் எல்லாம் அந்த அறைக்குள் வந்தாள். பார்த்த படங்களையே திருப்பித் திருப்பிப் பார்த்து ஏதாவது கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தாள். அடுக்கி வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை எடுத்துப் பிரித்துப் புரட்டி, தாறுமாறாகப் போட்டுவிட்டுப் போவதில் ஆர்வம் காட்டினாள். அவர் எரிந்து விழுந்தால், ‘ரொம்ப அலட்டிக்காதீங்க. இப்ப உங்க புஸ்தகங்களை யாரு என்ன பண்ணிட்டாங்க?’ என்று கேட்பாள். அல்லது, ‘எடுத்துப் படிக்கத் தானே புஸ்தகம் இருக்கு? சும்மா அடுக்கி வச்சுப் பூசை பண்ணருதுக்கா வாங்கி இருக்கிறீங்க?’ என்பாள். சிலசமயம் சிரித்து விட்டு ஒன்றும் பேசாமலே போய் விடுவாள். 

‘நீ இங்கே வந்து இப்படி எல்லாம் தொந்தரவு பண்ணப் படாது!’ என்று அவர் ஒவ்வொரு நாளும் எத்தனையோ தடவைச் சொல்ல நேர்ந்தது. பத்மாவின் அப்பாவும் அடிக்கடி எச்சரித்துக் கொண்டுதான் இருந்தார். ‘நீ சும்மா சும்மா அங்கே போகக் கூடாது. விஷமம் பண்ணக்கூடாது. அவர் வேலை கெட்டுப்போகும்’ என்பார். 

‘அந்த மாமா வேலை ஒண்ணும் பார்க்கலே அப்பா. சும்மா சோம்பேறித்தனமா உட்கார்ந்து, புஸ்தகத்தைப் பார்த்துக் கிட்டே இருக்காங்க!’ என்று அவள் சொன்னாள். 

“அதுதான் அவர் வேலை’ என்றார் அவர். 

‘இதுவும் ஒரு வேலையா! ஏஹே!’ என்று கெக்கலித்தாள் சிறுமி. 

அவள் தாயும், அந்த அறைக்குள் போய் அவள் தொந்தரவு கொடுக்கக்கூடாது என்று நயமாகவும் பயமாகவும் எடுத்துச் சொல்லி வந்தாள். பத்மா கேட்டால் தானே! 

அவள் சிறு குருவி மாதிரி அங்கும் இங்கும் திரிந்தாள். தோட்டத்தில் ஓ ஓடி ஆடி மகிழ்ந்தாள். செடிகளிடையே விளையாடிக் களித்தாள். அவ்வப்போது அந்த அறைக்குள்ளும் நுழைந்து பொழுது போக்குவது அவளுக்குப் பிடித்திருந்தது. 

பத்மாவின் வருகை இளம்கதிரின் பொன்னொளி போல் பரவும். புதுமலரின் நறுமணம் போல் நிலவும். மென்காற்றின் குளுமையான தீண்டுதல் போல இனிமைதரும். ஒவ்வொரு முறையும் அது புதுமை நிறைந்ததாய் விளங்கியது. அவள் வருவதும் போவதும் தொல்லையாக இருந்தாலும் அதுவே தனி இன்பமாகவும் அமைந்தது, வறண்ட கோடை பயணம் போன்ற அன்றாட வாழ்வில் குளிர்தரு இனிமைகளாகத் தோன்றிய அத்தொல்லைகளும் தேவை தான் என்று கருதும் பக்குவ நிலையை அவர் மனம் எய்தியது. 

பத்மா, பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று முரண்டு பண்ணி வந்தவள், ஒழுங்காகப் படிக்கப் போக ஆரம்பித்தாள். அதனால் சொக்கலிங்கத்துக்குப் பகல் வேலைகளில் நிம்மதி கிட்டியது. என்றாலும், பள்ளிக்கூடம் போவதற்கு முன்பும், இடைவேளை நேரத்திலும், மாலையில் திரும்பி வந்த பிறகும் அவருடைய அறையிலேயே பழியாய் கிடக்கலானாள். ‘நானும் ரொம்ப நிறையப் படிக்கப் போறென். நீங்க வச்சிருக்கிற பெரிய பெரிய புஸ்தகங்களை எல்லாம் நானும் படிப்பேன். அதை எல்லாம் எனக்குத் தருவீங்களா?’ என்று அவரிடம் கேட்டாள். 

அச்சிறுமியின் பேராசை அவருக்குச் சிரிப்பு விளை வித்தது. ஆயினும், ‘ஓ!’ என்று சொல்லி வைத்தார். 

‘அப்ப எனக்கு படிப்பு சொல்லிக் கொடுங்க!’ என்று சிலேட்டையும், பாடப் புத்தகத்தையும் அவர் முன் நீட்டினாள். 

பத்மாவினால் தனது நேரங்களில் பெரும்பகுதி வீணாகி விடுகிறது என்று சொக்கலிங்கம் அநேக சமயங்களில் வருத்தப்பட்டாலும், அந்தப் புத்திசாலிக் குழந்தையின் நட்பு ஓர் இனிய அனுபமாகவும் அரிய வாய்ப்பாகவும் அமைந்துள்ளது என்றும் மகிழ்வுற்றார். 

பள்ளித் தோழிகளைப் பற்றியும், டீச்சரம்மாக்கள் பற்றியும், தனது சிறு உலகத்தில் நிகழும் விசேஷங்கள் பற்றியும் அவள் சுவாரஸ்யமாகப் பேசுவாள். அவர் படிப்பில் ஈடுபட்டிருந்தாலும், ‘சும்மா என்ன படிப்பு? நான் இல்லாத போதுதான் உங்களுக்கு எவ்வளவோ நேரம் இருக்குதே படிக்க!’ என்று அவரை வம்புக்கிழுத்து, கதை அளப்பாள். தன்னோடு விளையாடும்படித் தூண்டுவாள். 

ஆரம்பத்தில் இவை எல்லாம் அவருக்குச் சங்கடங்கள் ஆகவும், மனப்புழுக்கம் ஏற்படுத்துவனவாகவும் இருந்த போதிலும், பழகிப்போனதும் இவையும் தேவைதான் என்ற எண்ணத்தை உண்டாக்கிவிட்டன. பிறருடன் தாராளமாகப் பழகி விளையாட விரும்பாத பத்மாவும் அவருடன் மிகவும் ஒட்டுதலாக உறவு கொண்டாடினாள். அவள் அவரைச் சில சமயம் ‘வேங்கைப் புலி’ என்று குறிப்பிடுவதும், அவளையே அப்பெயரால் அவர் அழைப்பதும் இருவருக்கும் தமாஷாக இருந்தது. ‘என் சின்னச் சினேகிதி’ என்றும் அவர் பிரியமாகக் கூறுவது வழக்கம். 

எட்டு வயசுச் சிறுமியோடு பெரியவரான அவர் சினேகம் வளர்த்து, சகஜமாகப் பேசிச் சிரித்து விளையாடுவது பார்ப்பவர்களுக்கு வேடிக்கையாகப்பட்டது. பிறர் கருத்தைப் பற்றி அவ்விருவரும் கவலைப்படவில்லை. 

ஒரு சமயம் பத்மாவுக்குக் கடுமையான நோய் கண்டது. அப்பொழுது சொக்கலிங்கத்தின் உள்ளம் மிகுதியும் துயருற்றது. பலவீனமான உணர்ச்சிகளுக்கு அப்பால்பட்டவன் என்று தன்னைப் பற்றிப் பெருமையாகக் கருதிக் கொள்ளும் அவருக்கே அவருடைய வேதனையும் தவிப்பும் அதிசயமாகத் தோன்றின. அச்சிறுமி குணமடைந்து, இயல்பான போக்கில் கவலையற்று திரியவேண்டும் என்று அவர் பெரிதும் விரும்பினார். அதற்காகத் தன்னால் இயன்றதை எல்லாம் செய்தார். 

மீண்டும் அவள் சிட்டுக்குருவி போல் துள்ளித் திரியத் தொடங்கியதும் தான் அவர் மனம் மகிழ்ச்சி அடைந்தது. 

அந்தப் பெண்ணும் தனது குறைகளை, தேவைகளை, விருப்பங்களை, எண்ணங்களை, கனவுகளை எல்லாம் அவரிடம் சொல்வதிலேயே ஆர்வம் கொண்டாள். தன் பெற்றோர்களிடம் கூட அவள் அவ்வாறு மனம் திறந்து பேசுவதில்லை. 

இவ்வாறு காலம் ஓடியது. 

சொக்கலிங்கத்தை வழக்கமாகப் பற்றுகிற மனநோய் திரும்பவும் தலைகாட்டியது. ‘இந்த இடத்துக்கு வந்து இரண்டு, வருஷங்களுக்கு மேலாகிவிட்டன. பார்க்கப் போனால், இந்த இரண்டு வருஷமும் வீணாப் போன மாதிரித்தான். நான் உருப்படியாக எதுவும் செய்யவே இல்லையே’ என்று அவருக்கு உளப் புழுக்கமும் மன வேதனையும் தோன்றின. வேறு இடம், இன்னொரு ஊர் என்று மனம் ஆசைப்பட்டது. 

அதற்கான ஏற்பாடுகளை எல்லாம் தீவிரமாகச் செய்து முடித்தார் அவர். வீட்டுக்காரர்களிடமும் அறிவித்தார். அவர்கள் வருத்தப்பட்டார்கள். ‘பத்மாதான் ரொம்பவும் வருத்தப்படுவா. உம். என்ன செய்றது! கொஞ்ச நாள் அழுது கொண்டிருப்பாள். பிறகு சரியாகி விடும்’ என்று சொன்னார்கள். 

அவர் தன் முடிவை பத்மாவிடம் தெரிவித்தபோது, ‘என்ன, விளையாடுறீங்களா’ என்று சிரித்துக் கொண்டே கேட்டாள். அவர் அழுத்தமாகக் கூறவும், ‘பொய்… பொய் சொல்றீங்க!’ என்றாள். அவர் உண்மைதான் என்று சொன்னதும். அவள் முகம் வாடியது. ‘ஏன் போறீங்க? ஏன் இங்கிருந்து போகணும்?’ என்று தீனமாக விசாரித்தாள். 

அவர் கூறிய சமாதானங்கள் அவளுக்குப் பிடிக்கவு மில்லை; புரியவும் இல்லை. ‘நீங்க போக வேண்டாம், மாமா. இங்கேயே இருங்க, நான் உங்களுக்குத் தொந்தரவு கொடுக்க மாட்டேன்’ என்றாள். 

அவர் தன் முடிவை மாற்றிக்கொள்ள மாட்டார் என்று உணர்ந்த பிறகு அவள் எதுவுமே பேசவில்லை. அவர் தன் மனசை மாற்றிவிட மாட்டாரா; பிரயாண ஆயத்தங்களை நிறுத்திவிடமாட்டாரா; இனி இங்கேயே இருந்து விடுவேன் என்று சொல்லமாட்டாரா என்று ஏக்கத்தோடு அவர் முகத்தைப் பார்த்தபடி அங்கேயே வளையவந்தாள். தனது உற்சாகம், கலகலப்பான சுபாவம் அனைத்தையும் இழந்தவளாய் காட்சி அளித்தாள். 

அவள் அந்த அறையிலேயே குப்புறடித்துக் கிடந்து அழுதுக்கொண்டே இருப்பாள் என்று அவர் பயந்தார். ஆனால் அவ்விதம் நடக்கவில்லை. அவள் முகம் களை இழந்து காணப்பட்டது; குறும்புப்பேச்சும் துள்ளலும் துடிப்பும் அவளிடம் காணப்படவில்லை. இவையே பத்மாவிடம் வெளிப்படையாகத் தென்பட்ட மாறுதல்கள். அவளது சின்னஞ்சிறு உள்ளத்தில் எத்தகைய உணர்ச்சிக் குமைதல்கள் நிலவினவோ – யாருக்குத் தெரியும்! 

அன்று இரவு, ‘பத்மா, நான் இருட்டோடு கிளம்பிப் போய்விடுவேன் அப்போ நீ தூங்கிக் கொண்டிருப்பாய். அதனால் இப்பவே சொல்லிக் கொள்கிறேன். நான் போயிட்டு வாறேன். உன் நினைவு எனக்கு எப்பவும் இருக்கும்’ என்று சொக்கலிங்கம் பிரிவுபசாரம் கூறினார். 

அவள் ‘உம்’மென்று முகத்தைத் தூக்கிக் கொண்டு நின்றாள். பிறகு, திடுமென்று அங்கிருந்து ஓடி மறைந்தாள். 

அப்புறம் அவர் பார்வையில் அவள் தென்படவேயில்லை. 

அதிகாலை வேளை, நாலரை மணி. இருட்டு. குளிர் காற்று, பனி கடுமையாகப் பெய்திருந்தது. 

சொக்கலிங்கம் எழுந்து, அறைக் கதவைத் திறந்தார். விளக்கு வெளிச்சம் பிடித்துக் காட்டிய காட்சி அவரைத் திடுக்கிடச் செய்தது. 

வாசலுக்கு நேரே பத்மா கிடந்தாள். குளிர் காரணமாக, ‘கையது கொண்டு மெய்யது பொத்தி’, கால்களை மடக்கிச் சுருட்டி, அநாதையான ஒரு நாய்க்குட்டி மாதிரிக் கிடந்தாள். அவள் அழுதிருந்தாள் என்பதன் அடையாளமாகக் கன்னத்தில் நீர்க் கோடும் சுவடிட்டிருந்தது. 

‘அட பாவமே, பனியிலும் குளிரிலும் இந்தப் பிள்ளை இப்படியா…’ என்று அவர் பதறினார். ‘பத்மா என்ன இது?’ என்று அவசரமாக அவளை அள்ளி எடுத்தார். 

அவள் பக்கத்தில் ஒரு பை கிடந்ததை அவர் அப்போதுதான் கவனித்தார். அதில் அவளுடைய பாவாடை சட்டைகள் திணிக்கப் பட்டிருந்தன. 

அவள் அவரைக் கட்டிப் பிடித்துக் கொண்டு, ‘என்னை விட்டுப் போகாதீங்க. நானும் உங்க கூட வருவேன். நீங்க எந்த ஊருக்குப் போனாலும், என்னையும் கூட்டிட்டுப் போங்க!’ என்று சொல்லிக் கொண்டே அழுதாள். 

அவர் ஒன்றும் தோன்றாதவராய், ‘என்ன பத்மா இது! ராத்திரி எல்லாம் இங்கேயா படுத்திருந்தே!’ என்று கேட்டார். 

‘உம்’ என்று தலையை அசைத்தவள், ‘நீங்க என்னை விட்டுப்போட்டு, இருட்டோடு போயிருவீங்கன்னு பயந்து, இங்கேயே வந்து படுத்துக்கிட்டேன். என்னை விட்டுட்டுப் போகப்படாது. நானும் உங்ககூட வருவேன்’ என்று கேவுதலோடு தொடர்ந்து பேசினாள். 

அவர் உள்ளம் கனத்தது. கண்களில் நீர் பொங்கி வழிந்தது. 

பத்மாவின் அப்பாவும் அம்மாவும் இதற்குள் அங்கு வந்து விட்டார்கள். ‘என்னம்மா இது? மாமா போனால் என்ன? அடிக்கடி உன்னை பார்க்க வருவாங்க’ என்று அப்பா சொன்னார். ‘பத்மா, இங்கே வா. ஏன் இப்படி அழுறே?’ என்று அம்மா பரிவுடன் அழைத்தாள். 

பத்மா அவர்கள் பக்கம் திரும்பவே இல்லை. 

‘என்னை விட்டுட்டுப் போகப்படாது. நானும் உங்க கூடவே வருவேன்’ என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தாள். அவரைப் பிடித்திருந்த கைகளை அகற்றவே யில்லை. ‘நீங்க போயிட்டா, எனக்கு மறுபடியும் க்கு வந்துவிடும். வந்தால், நான் பிழைக்கவே மாட்டேன்’ என்று விம்மினாள். 

சொக்கலிங்கத்தின் உள்ளத்தை அவள் பேச்சும் அன்புப் பிடிவாதமும் ஆழப் பற்றி உலுக்கின. அச்சிறுமியின் தாயும் தந்தையும் மௌனமாகக் கண்ணீர் வடித்தவாறு நின்றார்கள். 

இந்த அன்பு இதயங்களை நோகடித்து, ஒரு அன்பு மலரைக் கசக்கி எறிந்துவிட்டு, நாம் பிரிந்து சென்று என்னதான் சாதிக்கப் போகிறோம்? இப்படித் தவிக்கும் தூய இதயத்தைச் சாம்பிக் குவியவைப்பதைவிட, நன்கு மலர்ந்து ஒளி வீசும்படி அதற்கு உதவி புரிவதே நல்ல காரியமாக அமையும். இப்படி அவர் உள்ளம் தீர்மானித்தது. 

‘அழாதே பத்மா. நான் போகலே. உன்னை விட்டுப் போட்டு நான் எங்கும் போகப் போவதில்லை!’ என்று உறுதியாக அறிவித்தார் அவர். ‘சரியான வேங்கைப் புலிதான்?! என்னை ஆட்டுக்குட்டி ஆக்கி, தப்பி ஓடாமப் பிடித்துவிட்டாயே!’ என்றும் சொன்னார். 

அவர் முகத்தை உவகையோடு ஏறெடுத்துப் பார்த்தாள் பத்மா. அச்சிறு முகத்தில் உதயத்தின் புதுப் பொலிவோடும் வசீகர ஒலியோடும் மகிழ்ச்சி பரவி நின்றது. கண்ணீர் துளிகளிடையே பாய்ந்து வந்த பார்வையிலும் ஆனந்தப் பெருக்கு ஒளி செய்தது. ‘மாமா, நல்ல மாமா!’ என்று அவரைக் கட்டிப் பிடித்துக் கொண்டு சிரித்தாள் அவள். 

– அமுதசுரபி.

– 1960 முதல் 1991 முடிய, வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டு, வெவ்வேறு பத்திரிகைகளில் பிரசுரம் பெற்ற கதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

– வல்லிக்கண்ணன் கதைகள் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1991, மணியம் பதிப்பகம், குறிஞ்சிப்பாடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *