வெவ்வேறு சாளரங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 16, 2024
பார்வையிட்டோர்: 911 
 
 

“டேய், கைலாஷ், அதெல்லாம் நம்மால் முடியுமாடா? ஃபர்ஸ்ட்லி நமக்கு அந்த களத்தில் அவ்வளவு பரிச்சயம் இல்லை. ஸெகண்ட்லி, ஒர்க்கிங் கேபிடல் பாஸ், எகிறிடும் பட்ஜெட். இதெல்லாத்தையும் விட, தினேஷுக்கு நிறைய ரிலேடிவ்ஸ், ஐ மீன், உதவி செய்ற ரிலேடிவ்ஸ் அதிகமாக வேற,வேற நாட்டில் இருக்காங்க. ராகவ் வுக்கும் அப்படியே. அதனால் நாம ரெண்டு பேரும் வேற ஏதாவது நமக்கு ரொம்ப தெரிஞ்ச, புரிஞ்ச, ஃபீல்ட்ல இறங்கி ஒரு நிதானமான மூலதனத்துடன் தொழில் ஆரம்பிக்கலாமே? என்ன சொல்றே? நல்லா யோசிச்சு பாருடா கைலாஷ், கோபப்படாமல்!” அஜய் இவ்வாறு தன் நண்பன் கைலாஷுக்கு அறிவுரை வழங்கினான். 

“டேய், ஒர்க்கிங் கேபிடல் கொஞ்சம் நாம போட்டு,  மீதிக்கு பேங்க் மூலம் அரேஞ்ச் பண்ணலாம்டா. வெளிநாட்டு தொடர்புகள் நாம் சுய முயற்சியால் ஏன் ஏற்படுத்திக்க முடியாதா,என்ன? என் கஸின் ப்ரதர் யுஎஸ்ல இருக்கானே, அவனையும் உதவும்படி சொல்றேன். இன்னிக்கு நைட்டே பேசிடறேன். தினேஷ், ராகவ் ரெண்டு பேருக்கும் இதுல எவ்வளவு அறிவு இருக்கோ, அதை விட நாம் குறைஞ்சு போகலை. இறங்கி பாத்துடுவோம்டா.” என்றான் கைலாஷ். 

“அவங்க போனால் போய் ஏதோ செய்யட்டும்டா கைலாஷ், அவ்வளவு பெரிய பணத்தை இதுல இறக்கி போராடறதுக்கு மாறாக, நமக்கு செய்யறதுக்கு இன்னும் நிறைய ஆப்ஷன்ஸ் இருக்குடா! நாம் ஸ்மார்ட்டா ஒர்க் பண்ணி, நம்மால் முடிஞ்ச முதலீட்டில ஆரம்பிச்சு, நல்லா வெற்றி பெறலாம். நீ ஒரு நாள், ரெண்டு நாள் டைம் எடுத்து நல்லா யோசனை செஞ்சு பார்த்து அப்புறமா என்னைக் கூப்பிடு. இப்ப நான் கிளம்பறேன். அவசரப்படாதே. அவ்வளவுதான் நான் சொல்வேன்”என்று கூறி காரை ஸ்டார்ட் செய்தான் அஜய். 

“சரிடா அஜய், நான் டைம் எடுத்து யோசிச்சு சொல்றேன். வரும் ஞாயிற்றுக்கிழமை நாம் மீட் பண்ணலாம்” என்று அஜய் காரிலிருந்து இறங்கி தன் காரை நோக்கி நடந்தான் கைலாஷ். 

தினேஷ், ராகவ், கைலாஷ், அஜய் நால்வரும் பள்ளிப்படிப்பு காலத்திலிருந்தே நல்ல நண்பர்கள். நால்வரும் நல்ல வசதி படைத்தவர்கள் என்றாலும், தினேஷ், ராகவ் இருவரும் இன்னும் ஒருபடி மேலான செல்வந்தர்கள் ஆவார்கள். தினேஷ் தந்தை நாராயணசாமி பல ஜவுளிக்கடைகளுக்கு சொந்தக்காரர். ராகவ் வின் தந்தை தேவேந்திரன் பெரிய ஏற்றுமதி வணிகம் நடத்தி வருகிறார். கைலாஷ் தந்தை கதிர்வேலன், மின்பொருட்கள், கணினி பாகங்கள் விற்பனை செய்யும் தொழிலைச் செய்து வருபவர். அஜய் அப்பா, நாகநாதன், தேவகி இருவரும் சமையல் கலை படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள். இருவரும் சேர்ந்து சிறப்பான கேட்டரிங் ஒன்றை வெற்றிகரமாக செய்து, உயர்மட்ட நிலையில் இருக்கும் நபர்களின் வீட்டு வைபவங்களுக்கும், இதர பிற விழாக்களை நடத்துபவர்கள் தரும் கட்டளைக்கேற்ப உணவு வகைகள் தயாரித்து அனுப்பி வருகிறார்கள். இத்தொழிலில் அவர்கள் முதல் நிலையில் உள்ளனர். 

இந்த நான்கு இளைய தலைமுறையினர் எப்போதும் சேர்ந்து இருப்பார்கள். எல்லாவிதமான கலந்தாலோசனைகளையும் அடிக்கடி செய்வார்கள். அவரவரின் பெற்றோர்களுக்கும் இதுபற்றி நன்றாகத் தெரியும். அவர்களுக்கு பிடித்த கணினி தொடர்பான அனைத்து முக்கியமான படிப்புகளையும் படித்தனர். நவீன காலத்தில் ஏற்படும் அத்தனை அறிவியல் துறை முன்னேற்றம் பற்றியும், வளர்ச்சி பற்றியும் இவர்களுக்கு அத்துப்படி. ஒருவருக்கொருவர் தாங்கள் அறிந்தவைகளை பகிர்ந்து கொள்வார்கள்.இதனால் இந்த நால்வருக்கும் கணினி துறையில் முன்னணி அலுவலகங்களில் வேலை கிடைத்தது. இரண்டு ஆண்டுகள் பணியாற்றி விட்டு நால்வரும் சிங்கப்பூரில் மேல்நிலை படிப்பை முடித்தனர். பின்னர் இன்னும் பெரிய அளவில் உயர்ந்த பொறுப்பில் வேலையில் அமர்ந்து தற்போது இரண்டு ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்கள். 

கடந்த மூன்று மாதங்களாக நால்வரும் வேலையை உதறிவிட்டு தனியாக தொழில் இதே துறையில் தொடங்கலாமா என்ற எண்ணத்தில் அது தொடர்பாகவே சந்திக்கும் போதெல்லாம் பேசி வருகிறார்கள். பல்வேறு ஆலோசனைகளுக்குப்பின் தினேஷ் கணினியில் வெவ்வேறு விளையாட்டுச் செயலி உருவாக்கவும் அதை வணிக ரீதியில் பிரபலப்படுத்துவது என்றும் ஒரு திட்டத்தை சொன்னான். ராகவ் உடனே அதை ஆமோதித்தான். அதற்கு தேவையான வகையில் வேண்டிய ஆய்வுகள் செய்வதற்கும் தயார் என்றும் உறுதியளித்தான். கைலாஷ் அரைகுறையாக சம்மதிக்க, அஜய் தன் முடிவைச் சொல்ல அவகாசம் வேண்டும் என்றான். 

ஒரு வாரம் சென்று நால்வரும் சந்திக்கையில் அஜய் தனக்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்தான். ஆனால் தினேஷும், ராகவ்வும் ‘இன்னும் ஒரு மாதம் வேண்டுமானாலும் நேரம் எடுத்துக் கொள். பரவாயில்லை. ஆனால் பாஸிட்டிவ் முடிவைச் சொல்லுடா ‘ என்றனர். 

அதன் பின்னர் நான்கு நாட்கள் கழித்து கைலாஷும், அஜய்யும் சந்தித்தபோது நடந்ததுதான் மேற்கண்ட உரையாடல். இந்த இடைவெளியில் அதற்குண்டான முதலீடுகள் குறித்தும், போட்டிகள் பற்றியும் அஜய் தீவிரமாக ஆராய்ந்தான். வெற்றியைப் பார்க்க வழிகள் அந்த தொழிலில் இருந்தாலும் பெரிய முதலீடு செய்து, கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்றும், குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகளுக்கு மேல் நிச்சயமாக ஒரு எதிர்பார்ப்பையும் வைத்துக் கொள்ளக்கூடாது என்பதையும் அறிந்தான். கோடிக்கணக்கில் முதலீடு செய்வது பற்றி அஜய்க்கு கவலை கிடையாது. ஏனெனில் அவன் பெற்றோர்களின் பூர்வீக சொத்துகள் மட்டுமல்லாது, அவர்களின் வணிகத்தின் மூலம் சேரும் நிதி மூலமாகவும் நிறைய சொத்துகள் சேர்ந்திருந்ததால், பண முதலீட்டிற்கு பிரச்னை இல்லை. ஆனால் முதலீடு செய்யும் பணத்திற்கு நிகர லாபம் வருவது விரைவில் இருக்கும்படியாகவும், தினசரி மக்களின் தேவைகளை ஒட்டி இருக்க வேண்டும், அதில் ஒரு தனித்தன்மை இருக்கவும் வேண்டும் என்ற விதத்தில் அஜய்யின் தொழில் நோக்கம் இருந்தது. அதனால் அவன் தொடக்கத்திலேயே பெரிய போட்டியாளர்கள் இருக்கும் துறைகளில் நுழைவதை விரும்பவில்லை. 

இதையே அவன் கைலாஷிடம் சொல்லி, அவனை மீண்டும் சிந்தித்து முடிவெடுக்க வற்புறுத்தினான். ஆனால் தினேஷ்,ராகவ் அவர்களின் வெளிநாட்டு உறவினர்கள், நண்பர்கள் மூலம் அவர்கள் நினைத்ததை சாத்தியமாக்கலாம் என்று கைலாஷ் நம்பினான். அதனால் அஜய் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்த போதும் அவனுடைய மனம் அதிகளவில் அவர்களுடன் சேர்ந்து ‘விளையாட்டு செயலிகள்’ உருவாக்கும் அந்த பெரிய வணிகத்தில் இறங்க வேண்டும் என்பதிலேயே இருந்தது.  

இதன் பின்னர் ஒரு வாரம் கழித்து எல்லோரும் ஒன்று கூடி விவாதிக்க ஆரம்பித்தனர்.  

தினேஷ் ஆரம்பித்தான். “அஜய், கைலாஷ் நீங்க ஏண்டா தயங்கறீங்க? பணம் பிரச்னையா? உங்களால் முடிஞ்ச அளவு இன்வெஸ்ட் பண்ணுங்க… மீதியை நான் பாத்துக்கிறேன். மொத்தம் பத்து, பனிரெண்டு கோடி ரூபாய் நம் சைடில் இருந்து ஏற்பாடு செய்தால் போதும். மீதியை என் அன்கிள் மகேஷ் அமெரிக்காவில் இருப்பவரும், என் ஃப்ரெண்ட் ராஜன், நீங்க எல்லாரும் கூட அவனை போன வருஷம் இங்கே வந்தபோது பார்த்து பேசியிருக்கீங்க., அவன் ஒரு பங்கும், ராகவ் வின் கஸின் சரண்யா ஒரு பங்கும் இன்வெஸ்ட் செய்ய ரெடியா இருக்காங்க. அது தவிர மார்க்கெட்டிங் தொடர்பான எல்லா விஷயங்களையும் அவங்க பாத்துப்பாங்க அந்த எண்ட்ல. மிடில் ஈஸ்ட், ஏஷியா இதை நாம் பாத்துக்கணும். ப்ரோக்ராம் எல்லாம் தயார் நிலையில் இருக்கு.கொஞ்சம் இன்னும் ட்யூன் அப் செய்யணும். அது மட்டுமல்லடா, நாம் நாலு பேரும் சேர்ந்து நமக்கு உண்டான இந்த ஃபீல்ட்ல இருக்கலாம். ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சவங்க.நல்ல டீம் ஒர்க் இருக்கும். என்ன, முதல் மூணு வருஷம் கொஞ்சம் சமாளிச்சுட்டோம்னா அப்புறம் லைஃப் சூப்பரா இருக்கும். என்ன சொல்றீங்க? ” என்று நிறுத்தி அவர்கள் பதிலை எதிர்பார்த்தான். 

ராகவ் உடனே அதை ஆமோதித்து, “இன் ஃபேக்ட் நமக்கு பாதி வேலை மட்டுமில்லாமல் ஃபைனான்சியல் ஹெல்ப்பும் இதுல கிடைக்குதுடா. மேலும் வெளிநாட்டு மார்க்கெட்டிங் அவங்க சைட்ல பாத்துக்கறதால இன்னும் நமக்கு ஸ்ட்ராங் அடித்தளம் உருவாகிடுது இல்லையா? நம் நாலு பேருக்குள்ள பண உதவிக்கு நாங்க ரெண்டு பேரும் இருக்கோம். உங்களால் முடிஞ்சதை முதலில் இன்வெஸ்ட் பண்ணுங்க. அதுல ஒரு ப்ராப்லமும் இல்லை. நம்மோட சிக்னலுக்காகத்தான் அவங்க யு.எஸ்ல காத்திட்டிருக்காங்க. சரண்யாவையும்தான் உங்களுக்கு தெரியுமே! ‘ ஆறு வருஷமா ‘லிங்க்ட் இன்’ல ஒர்க் பண்ணிட்டு வெளியே வந்து தனியா பிஸினஸ் செஞ்சிட்டிருக்கா. நாளைக்கு ஓகே சொன்னா உடனே கம்பெனி ரெஜிஸ்ட்ரேஷன் மத்த தேவையான வேலைகளை செஞ்சிடுவாங்க. அடுத்த மாதம் நாம் அங்கே போய் டாக்குமெண்ட்ல கையெழுத்து போட்டுவிட்டு இங்கே அதோடு கிளை ஓப்பன் செஞ்சுக்கலாம். எல்லாமே மோஸ்ட்லி ஆன்லைன் ஃபார்மாலிட்டிதான். உங்களுக்கு கொஞ்சம் பயமாக இருக்கா? ஏண்டா தயங்கறீங்க? ” என்றான். 

“டேய், அதெல்லாம் ஒண்ணும் இல்லை. ராஜன், சரண்யா இவங்களை பத்தியெல்லாம் எங்களுக்கும் நல்லாவே தெரியும். மகேஷ் அங்கிளோட கூட நாம் ரெண்டு தடவை பேசியிருக்கிறோமே! இது நல்ல ஆப்பர்ச்சூனிடிதான். நான் வீட்டில் சொன்னேன். எங்க வீட்டில் ஆட்சேபணை ஏதும் இல்லை. ஆனால் என்னால் ரெண்டு இன்ஸ்டால்மென்ட்டா தான் தர முடியும். அது ஓகே தானே? அதற்கு முன்னால் நாம் எல்லோரும் சேர்ந்து வீடியோ காலில் அவர்களோடு பேசி, நமக்கு ஏற்படும் சந்தேகம் இல்லை அவங்களுக்கு என்னவாவது கேக்கணும்னு நினைச்சா அதுக்காக, அக்ரிமென்ட் ட்ராஃப்ட் இதையெல்லாம் டிஸ்கஸ் செஞ்சுக்கிட்டு அப்புறம் கன்ஃபேர்ம் பண்ணலாம். நீ என்னடா சொல்றே” என்று சொல்லி அஜய் முகத்தைப் பார்த்தான் கைலாஷ். 

அஜய் தொண்டையை கனைத்து தீர்க்கமான குரலில் பேசினான். “டியர் ஃப்ரெண்ட்ஸ், தப்பா நினைச்சிக்காதீங்கடா. எனக்கு இதில் இஷ்டம் இல்லை. பணத்துக்காக சொல்லவில்லை. நீங்க சொல்ற அந்த இரண்டரை கோடி ரூபாய் என்னால் ஈஸியாகத் தர முடியும். அதில் பிரச்னை இல்லை. ஆனால் நான் மனதில் நினைக்கிறது வேற மாதிரி. முதலீடு செய்தோமா, ஒரு வருஷம் காத்திருந்தாலும் இரண்டாம் வருஷம் நல்ல முன்னேற்றம் பாக்கணும். மூணாம் வருஷத்திலாவது ப்ரேக் ஈவன் வரணும். என்னைப் பொறுத்தளவில் கன்ஸ்யூமர் கூட்ஸ் லைன் தான் இதுக்கு உதவும்னு நினைக்கிறேன். ரெண்டாவது, நம் எல்லோருக்கும் பணக்கஷ்டம் இல்லைன்னாலும் ஒரேயடியா இவ்வளவு பெரிய முதலீடு செய்ற தொழில் இப்ப வேண்டாம்னு நினைக்கிறேன். உங்க பிளான்படி நீங்க செய்யுங்க. உங்க வெற்றிக்கு என் பெஸ்ட் விஷஸ். என்னோட ஃப்ரெண்ட்ஷிப் எப்போதும் உங்களோடு நிலைச்சு இருக்கும்.அது மாறாது. நீங்க எல்லாரும் தப்பா எடுத்துக்காதீங்கடா.” என்றவனை மற்ற மூவரும் ஏமாற்றத்துடன் பார்த்தனர். 

அதன் பின் பல்வேறு கோணங்களில் தினேஷ், ராகவ், கைலாஷ் மூவரும் அஜய்யை இவர்களின் திட்டத்திற்குள் கொண்டு வர முயற்சி செய்தார்கள். ஆனால் பயனில்லாமல் போனது. அஜய் தன் முடிவை மாற்றவில்லை. தன் வழியில் செல்வதில் உறுதியாக இருந்தான். வேறு வழியின்றி மூவரும் அஜய்யை வாழ்த்தி விட்டு, அவர்கள் அடுத்த வாரம் முடிவு செய்து விடலாம் என்று கூறி கிளம்பினர். 


இவைகள் நடந்தேறி இப்போது மூன்றாவது ஆண்டு செல்கின்ற வேளையில், அஜய் தன் சொந்த நிறுவனம் ‘ஏ என் டி’ மூலம் சமையலுக்கு வேண்டிய மசாலா தயாரிப்புகளில் முதல் நிலையில் இருக்கிறான். அவனுடைய நிறுவனத்தின் கீழ் ஐநூறு பேர் பணி புரிகிறார்கள். தொலைக்காட்சிகளில் ‘ஏ என் டி’ விளம்பரங்கள் வராத நிகழ்ச்சிகள் இல்லை என்று சொல்லும் அளவில் இருந்து வருகிறது. 

நண்பர்களின் வணிக திட்டத்தில் சேர விருப்பம் இல்லை என்று கூறிவிட்டு வந்த அஜய் ஒரு ஆறு மாதங்களுக்கு பல தரப்பட்ட நுகர்வோர் வணிகம் தொடர்பான களங்களை ஆராய்ந்து, நல்ல விதமாக தயாரிக்கப்பட்ட உணவு பொருள்களுக்கு பெரிய அளவில் வரவேற்பும், மதிப்பும் இருப்பதை உணர்ந்தான். இயற்கையாகவே அஜய்க்கும் சமையல் கலையில் ஈடுபாடு அதிகம். அவனுடைய பெற்றோர்கள் அந்த வியாபாரத்தில் ஈடுபட்டிருந்ததாலோ என்னவோ நிறைய உணவு வகைகள் தயாரிப்பது பற்றி நன்கு அறிந்திருந்தான்.  

வேலையை விட்டது பற்றியும், வேறுவிதமான வணிகத்தில் இறங்கப் போகிறேன் என்பதையும் பெற்றோர்களிடம் கூறியபோது அவர்கள் இவனுடைய நண்பர்கள் பற்றி கேட்க, இவன் நடந்ததைக்கூறி, அவர்கள் அனுமதியுடன் முதலில் ‘வலை ஒளி ‘ மூலம் உணவு பதார்த்தங்கள் தயாரிக்கும் முறைகளை விளக்க ஆரம்பித்தான். அவன் மட்டும் இல்லாமல் அவனுடைய பெற்றோர்களும் வந்து விளக்குவதையும் அமைத்தான். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. 

அதன் பின்னர், கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்வது இக்காலத்தில் மிக முக்கியமானதாகி விட்டதால், அவர்களுக்கு உதவியாக இருக்கும் வகையில் ‘பதப்படுத்தப்பட்ட தயார் உணவு வகைகள் ‘, ‘சுகாதாரமான முறையில் வெட்டிய காய்கள்’, ‘ கலவையான பழவகைகள் வெட்டியது’ இவைகளைத் தரமான வகையில் வாழைச்சருகுகளில் கட்டி அட்டைப் பெட்டிகளில் இட்டு நேரடியாகவும், இணையதளம் மூலமாகவும் விற்பனை செய்ய ஆரம்பித்தான். மிக விரைவில், பெரிய அளவில் இதை வாங்க ஆரம்பித்தனர். அஜய் தன் தாயாரின் வழிகாட்டுதல்களின்படி சமையல் அறைகளில் முக்கியமான பொருளாக இருக்கும் மசாலாப் பொருட்கள் தயாரிப்பில் இறங்கினான். சிறிய வகை இயந்திரங்கள் நிறுவி, சுத்தமான முறையில் குறைந்த அளவில் தயாரித்து அதை அரசாங்கத்தின் உணவுத் தரம் சான்றிதழ் பெற்றான். அஜய் தன் தயாரிப்புகளில் கலப்படம் இல்லாமல் இருப்பதிலும், சரியான விலை நிர்ணயம் செய்வதிலும் உறுதியாக இருந்தான். பின்னர் விளம்பரங்கள் புதுமையான முறையில் செய்து ஒரு சில நகரங்களில் விற்பனை செய்ய ஆரம்பித்தான். மருத்துவமனை உணவகங்கள், பெரிய அலுவலகங்களின் பணியாளர்களின் உணவகங்கள், நடுத்தர நிலையில் இயங்கும் தரமான பொது உணவகங்கள் இவைகளுக்கு இரண்டு வாரங்களுக்கு இலவசமாக விநியோகம் செய்தான். அதேபோல் வெவ்வேறு மாநிலங்களில் இதை விற்பனை செய்வதற்கு விற்பனை பிரதிநிதிகளை ஏற்பாடு செய்தான். ஐந்து மாதங்களில் நல்ல பலனளிக்க ஆரம்பித்து, அஜய் தயாரிப்புகள் தரமானதாகவும், நியாயமான விலையில் இருந்ததாலும் கொள்முதல் ஆணைகள் குவியத் தொடங்கின. ஆறாவது மாதத்தில் நான்கு இடங்களில் புதுமையான இயந்திரங்கள் நிறுவி உற்பத்தி திறனை அதிகரித்து விற்பனையை மிக விரைவில் அதிகரித்தான். இன்று அஜய் ஒரு உயர்ந்த நிலையில் இருக்கும் தொழிலதிபராக இருக்கிறான். 

இதனிடையே ஒரு வருடம் முன்பு தினேஷ், கைலாஷ் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. அஜய்க்கு நேரமின்மையால் திருமணத்தன்று மட்டும் சில மணிநேரம் ஒதுக்கி போய் விட்டு வந்தான். நண்பர்களால் வேறு எதைப்பற்றியும் விவரமாக பேசிக்கொள்ள முடியவில்லை. 

இவ்வருடம் ஆரம்பத்தில் ராகவ் திருமணம் நடந்தது. அஜய் கலந்து கொள்ள முடியாததால் திருமணம் கழிந்த இரண்டு நாட்களில் சென்று பார்த்துவிட்டு வந்தான். 

இப்படியாக யார் எந்த நிலையில் இருக்கிறார்கள், அவர்கள் தொழில் எவ்வாறு நடந்து வருகிறது என்பது போன்ற விவரங்கள் பற்றி அஜய்க்கு தெரிய வாய்ப்பில்லாமல் போனது. அவர்கள் நன்றாக செய்து வருகிறார்கள் என்று நம்பினான். 

தினேஷ், ராகவ், கைலாஷ் தொடங்கிய ‘செயலிகள்’ வணிகத்தின் ஆரம்பம் நன்றாகவே இருந்தது. ஆறுமாதங்கள் சென்ற பின்னர் அதற்கு வரவேற்பு குறைய ஆரம்பித்தது. ஏனெனில் போட்டியாளர்கள் வேறு புதிய வகைகள் சந்தையில் கொண்டு வந்தார்கள். அதற்கு போட்டியாக இவர்களும் புதிதாக ‘செயலிகள்’ உருவாக்கும் நிலைக்கு ஆளானார்கள். இளைஞர்களின் ரசனைகளும், விருப்பங்களும் இக்காலத்தில் விரைவாக மாறிக்கொண்டே இருப்பதால் இந்த நிறுவனங்களின் வேகமும் அதே நிலையில் இருக்க வேண்டியுள்ளது. இதனால் வெவ்வேறு வகைகளில் முதலீட்டு செலவுகள் அதிகரித்தபடி இருந்தது.கைலாஷிற்கு சலிப்பு ஏற்பட்டு விட்டது. ராகவ் இதை மட்டும் நம்பாமல் வேறு ஏற்றுமதி வணிகத்திலும் ஈடுபட்டு சம்பாதித்தான்.  

இதனிடையே, தினேஷ் அமெரிக்கா இரண்டு முறை சென்று அவர்களின் வணிகப்பங்குதாரர்களைப் பார்த்து வந்தான். மனைவியுடன் அங்கேயே சென்று இதை இன்னும் சிறப்பாக செய்ய திட்டம் இருப்பதாக தெரிவித்தபோது, ராகவ் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் கைலாஷுக்கு அது சரியாகப் படவில்லை.  

கைலாஷ் ‘இது நடக்கிறபடி நடக்கட்டும். நாம் வேறு ஏதாவது வழி தேடவேண்டும்’ என்று மனதில் முடிவு செய்தான். இந்த நேரத்தில் அஜய்க்கு திருமணம் ஆகப்போகிறது என்ற செய்தி வந்தது. அஜய் அதைச் சொல்வதற்காக கைலாஷை அழைத்த போது, அவனிடம் மனம் விட்டுப் பேச வேண்டும் என்று நேரம் கேட்டான் கைலாஷ். அஜய் அவனை மறுநாளே வரச்சொன்னான். 

மறுநாள் மதியம் அஜய் அலுவலகத்திற்கு கைலாஷ் வந்து அரைமணி நேரம் ஆகிவிட்டது. அவனை கட்டித் தழுவி வரவேற்று உபசரிப்புகள் செய்த அஜய் அவன் முகத்தில் ஓடிய கவலை ரேகைகளை கவனித்தான். “என்னடா, என்ன விஷயம்? பிஸினஸ்ல பிராப்லமா? இல்லை, அதை விட்டுட்டு வந்துட்டியா? ஏதாயிருந்தாலும் எங்கிட்ட சொல்லு. என்னால் முடிஞ்ச அளவு ஹெல்ப் பண்றேன்” என்றான் அஜய். கைலாஷ் எல்லாவற்றையும் சொல்லி விட்டு அவன் விரக்தியாகி விட்டதாகவும் கூறினான். ஏதாவது மாற்றம் வேண்டும் என்றும் உறுதியாகச் சொன்னான். “நீ எடுத்த முடிவு சரியானதுடா அஜய். அது எப்படி எனக்கு தோணாமல் போனது என்று நொந்து போறேன்” என்றான் கைலாஷ். 

அஜய் சொன்னான். “கைலாஷ், நான் பார்த்ததும், என் திட்டம் பற்றி முடிவெடுத்ததும் என்னுடைய சாளரத்திற்குள் என்னை அடக்கி அதன் பார்வையில் பட்டதை செய்ய எண்ணினேன். ஆனால் நீ தினேஷின் சாளரம் வழியாக உலகை நோக்கினாய். அது எல்லாமே உனக்குப் பொருந்துமா, அதற்கு வழிவகைகள் உள்ளதா என்று உன் சாளரம் வழியாக பார்க்கத் தவறி விட்டாய். அதுதான் வேறுபாடு. நாம் எல்லோரது வாழ்க்கையும் ஒவ்வொரு ‘விண்டோ’ வில் நிறுத்தி இருக்குடா. சில சமயங்களில் ‘ஸ்வாப்’ செய்யலாம். ஆனால் எப்பவும் அதுக்குள்ளேயே இருக்க முடியாதுடா கைலாஷ். தினேஷ் விண்டோ ராகவ்வுக்கு சரியானதா அமைஞ்சிருக்கலாம். அப்படியே நமக்கும் அமையணும்னு அவசியம் இல்லை. எல்லாமே வெவ்வேறு சாளரங்களின் உள்ளே இருக்குன்னு புரிஞ்சுட்டு கொஞ்சம் தள்ளி நின்று பார்க்கும்போது நிறைய உண்மைகள் விளங்கும். வேலை செய்யும் நாட்கள் எல்லாம் வேறு. பிஸினஸ்னு இறங்கினால் அதுல பல விஷயங்களை யோசிக்கணும். வெறும் ஃப்ரெண்ட்ஷிப் மட்டுமே பத்தாதுடா. இதைத்தான் நான் உனக்கு அன்னிக்கு சொன்னேன். சரி, இப்ப நான் என்ன செய்யணுங்கறே?” அஜய் பேச்சை நிறுத்தி கைலாஷ் பதிலுக்காக அவன் முகத்தை பார்த்தபடி இருந்தான். 

“கரெக்ட்டா சொன்னடா அஜய். ஒவ்வொருத்தரின் வாழ்க்கை ஒரு சாளரம். அதுக்குள்ள இருந்து யோசிச்சு பாக்கணும். அதான் இப்ப உங்கிட்ட வந்திருக்கேன். அந்த பிஸினஸ், அது நடக்கிறபடி அவங்க ரெண்டு பேரும் நடத்திக்கட்டும். என் ஷேரை குறைச்சிட்டு நான் வேற எந்த பிஸினஸ்லயாவது இறங்கலாம்னு பாக்கறேன்.என்ன செய்யலாம்னு ஏதாவது வழி சொல்லுடா அஜய்” என்றான் கைலாஷ். 

உடனே அஜய் “நான் இப்ப செய்ற பிஸினஸ் ரொம்ப நல்லா போகுது. இதன் வட இந்திய மார்க்கெட்டிங் முழுக்க நீ பாத்துக்கோ. அங்கே ஒரு தயாரிப்பு யூனிட் போட்டுடலாம். அடுத்தது ‘பிக்கிள்ஸ்’ ஆரம்பிக்கப்போறேன். உன்னால் முடிஞ்சதை இன்வெஸ்ட் பண்ணு. நாம் ம்யூச்சுவலா அக்ரிமெண்ட் போட்டு, அதற்கு தகுந்த முறையில் ப்ரா ஃபிட் ஷேர் பிரிச்சுக்கலாம். இன்னும் பத்து நாளில் என் கல்யாணம் நடக்கப்போகுது. அதனால் அதுக்கு அப்புறமா இரண்டு வாரங்களுக்குள் நாம் இதை செஞ்சுடலாம். நீ என்ன சொல்றே? ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளு. இப்போ இல்லை எப்போது வேணும்னாலும் கேள்.” என்று கைலாஷிடம் கூறினான். 

“ரொம்ப தேங்க்ஸ் டா அஜய். அவசரம் இல்லை. முதலில் உன் கல்யாணம் நடந்து அதுக்கப்புறம் இதுல இறங்கலாம். உனக்கு எப்படி சௌகரியமோ அந்த நேரத்தில் ஆரம்பிச்சுடலாம். இன்வெஸ்ட் பண்றதுல ‘நோ ப்ராப்ளம்'” என்றான் கைலாஷ். 

அதன் பின்னர் இரண்டு மாதங்கள் கழித்து அஜய் நிறுவனத்தில் ஒரு பங்குதாரர் ஆகிவிட்டான் கைலாஷ். இதற்கிடையே தினேஷ், ராகவ் இவர்களிடம் தன் எண்ணத்தை சொல்லி, அவனுடைய பங்கு  அவர்கள் வணிகத்தில் முதலீட்டு அளவில் மட்டுமே என்று விளக்கினான். அவர்களால் உடனே முடிந்தால் அவன் முதலீட்டு தொகையில் பாதியை திருப்பி தருமாறும் கூறிவிட்டான். அவர்களும் ஆறு மாதங்கள் தவணையில் தர சம்மதிக்க, நல்ல புரிதல்களுடன் எல்லாம் நல்லபடியாக முடிந்தன. 

இப்போதெல்லாம் கைலாஷ் முடிவெடுக்கும் முன்னர் அஜய் கூறிய ‘வேறு வேறு சாளரங்கள்’ பற்றி நினைவில் கொண்டு, அதன் வழியே செல்கிறான். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *