வெற்றி யாருக்கு?




(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அம்மா எதற்காக ஒரு நிலை கொள்ளாமல் உள்ளுக்கும் வாசலுக்கும் நடந்து கொண்டிருக்கிறாள் என்பது பத்மினிக்கு நன்கு தெரியும். ஏனெனில் அதே மன நிலையைத் தான் அவளும் கொண்டிருந்தாள். அவளுக்கிருந்த சங்கோசம், வெட்கம் இரண்டுந்தாம் தந்தையின் வருகையை எதிர்பார்த்து ஒருவிதப் பரபரப்பையும் வெளிக் காட்டாது அவளைத் தடுத்து நிறுத்தின. காலையில் அவளைப் பார்த்துச் சென்றிருந்தான் ரகுராமன். அதன் பலனை அறிந்து வரத்தான் அவள் தந்தை சென்றிருந்தார். “கச்சேரியிலிருந்து வரும்பொழுது அவன் வீட்டுக்குப் போய் வருகிறேன்” என்று அவர் சொல்லிச் சென்றார். அவர் என்ன செய்தி கொண்டு வருவாரோ என்ற சந்தேகத்தால் பத்மினியும் அவள் தாயும் அவர் வருகையை எதிர்பார்த்து அவ்விதம் தவித்தார்கள்.
ரகுராமன் அவளை மணம்புரியச் சம்மதிக்க வேண்டும் என்பது அவர்கள் இருவர் மனத்திலும் ஒன்றாக எழுந்த ஆசை. அதற்கு மாறான பதில் வராதிருக்க வேண்டுமே என்பது இருவருடைய மனமார்ந்த கோரிக்கையும். தாய்க்கு, ‘அவன் ஹானர்ஸில் விஞ்ஞான சாஸ்திரத்தில் ராஜதானிக்கே முதலாவதாகத் தேர்ச்சி பெற்றுப் பரிசும் வாங்கியிருக்கிறான். ரொம்ப ரொம்பக் கெட்டிக்காரன். அந்தத் துறையிலேயே இன்னும் ஆராய்ச்சிகள் செய்து வருகிறான். அதில் முன்னுக்கு வந்து புகழடைவான் என்று எல்லோரும் சொல்கிறார்கள். சொத்துக்கும் குறைவில்லை. ஜாதகப் பொருத்தம் வேறு நன்கு அமைந்திருக்கிறது. அதோடு அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என்ற பிச்சுப் பிடுங்கலும் இல்லை. ஒருகால் அவர் விருப்பப்படி வரதக்ஷிணை இல்லாமல் கூட விவாகம் நடக்கலாம். பெண்ணுக்குப் புக்ககத்தில் பிடுங்கல் இல்லை. நமக்கும் சம்பந்திகளைச் சமாளிப்பது கஷ்டமாக இராது. எப்படியாவது அவன் சம்மதித்து விவாகம் நடந்தால் தேவலை’ என்று இருந்தது.
பத்மினி அவ்வளவு தூரம் ஒன்றும் யோசிக்கவில்லை. அடிக்கடி அவளுடைய ஒன்றுவிட்ட மாமா கோபாலன் ரகுராமனைப் புகழக் கேட்டதாலோ என்னவோ அவனைப் பார்த்தது முதல் அவன் தன்னை மணக்க விரும்ப வேண்டும் என்பதாக அவளையும் அறியாமல் ஓர் ஆசை அவள் உள்ளத்தைப் பற்றிக்கொண்டது. ஏதோ சில நிமிஷந்தான் அவள் அவன் முன்னிலையில் உட்கார்ந்திருந்தாள். ஒரே ஒரு தடவை தான் அவர்கள் கண்கள். சந்தித்தன. ஆனாலும் என்ன? அதற்குள் அவனைக் கணவனாக அடைந்தால் தன் வாழ்க்கை இன்பமுறும் என்பதாக அவளுக்குள் ஏதோ சொல்லிற்று.
அவன் தான் அவளை முதல் முதல் பெண்பார்க்க வந்தவன் என்பது இல்லை. இதற்கு முன்னும் சிலர் வந்திருக்கிறார்கள். அப்பொழுதெல்லாம் அவர்கள் பதிலை எதிர்பார்த்து அவள் கவலை கொண்டதே இல்லை. கல்யாணத்தைப் பற்றி அவளுக்கு எந்த விதமான உணர்ச்சியும் இல்லை. கணவனை அடைந்து வாழ்க்கை நடத்துவதிலும் கன்னிகையாகவே படித்துக் கொண்டு காலம் தள்ளுவதிலும் அவள் அதிக வித்தியாசம் இருப்பதாக நினைக்க வில்லை. ஆனால் இன்று அவள் மனம் மாறியிருந்தது. ரகுராமனின் பதிலை ஆவலாய் எதிர்பார்த்தது. ‘அது சாதகமான பதிலாக இருக் கவேண்டுமே ஈச்வரா!’ என்றுகூட வேண்டிக் கொண்டது. சாதகமாக இருக்கும் எள்று அவளுக்குள் ஏதோ ஒன்று தைரியம் ஊட்டியது. அவள் மாமா கோபாலன் ரகுராமனைப் பற்றி உயர்வாகச் சொல்லியிருக்கிறான் அல்லவா? ஆனால் தந்தை நேரில் வந்தபொழுது அவர் முகத்தில் – ஏன் அவர் நடையிலே கூட இருந்த தளர்ச்சி ஒரு நொடியில் அந்தத் தைரியத்தைப் போக்கடித்தது.
அவரை வாயிலிலேயே எதிர்கொண்ட அவள் தாய், “என்ன, போன காரியம் காயா பழமா?” என்று அவசரத்துடன் கேட்டாள்.
“இரு, எல்லாம் சொல்லுகிறேன் ” என்று சாவதானமாகச் சட்டைகளைக் களைந்து வைத்துவிட்டுக் கூடத்து விசிப்பலகையில் வந்து உட்கார்ந்தார் தந்தை. “பெண் பிடித்தது என்றானா?” என்று மறுபடியும் தாய் ஆரம்பித்தாள். அவளுக்கு அவர் வாயிலிருந்து பதிலை வர வழைக்க ஆத்திரம். அதற்கு மேற்பட்டதாக இருந்தது பத்மினியினுடைய ஆவல். ஆனால் அதைக் காட்டிக் கொள்ள வெட்கிக் கூடத்துக்கு அடுத்த அறையில் இருந்தவாறே, அப்பா என்ன சொல்லப் போகிறார் என்பதை ஆவலாய்க் கவனித்துக் கொண்டிருந்தாள். “பெண் பிடிக் காமல் என்ன? பத்மினியைப் போல அழகும் குணமுமாகப் பெண் கிடைத்து விடுவார்களா?” என்று அவர் சொல்லும்போதே, “வேறு என்ன ஆக்ஷேபம்?” என்றாள் அவர் மனை வி.
“எல்லாம் எதிர் ஜாமீன் சங்கதிதான்.”
“அப்படி அவனே கேட்கிறானா?”
“அவன் கேட்கவில்லை. அவன் அம்மா கேட்கிறாளாம். மகனுக்கு எதிர் ஜாமீன் கொடுத்துப் பெண்ணைக் கொடுத்தார்கள் என்று இருந்தால் தான் அவளுக்குச் சந்தோஷமாம். அவளைத் திருப்தி செய்ய அவன் கடமைப்பட்டிருக் கிறானாம். போதுமா? என்ன என்னவோ நியாயம் அவன் சொல்கிறான். நானும் விடாது வரதக்ஷிணை வாங்குவதிலுள்ள இழிவைச் சொன்னேன். விவாகம் என்பது ஆண் பெண் இருவருக்கும் ஒன்று. அதில் ஒருவர் மற்றொருவருக்குப் பணம் கொடுப்பது அழகல்ல. வரன் பணம் வாங்குவது தன்னையே விலை கூறிக்கொள்ளும் மாதிரித் தான் இருக்கும் என்றெல்லாம் எடுத்துக் காண்பித்தேன். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டான். ஆனால் அம்மா மனசுக்கு விரோதமாக நடக்க முடியாது என்று பிடிவாதமாகச் சொல்கிறான். என்ன பண்ணுகிறது?”
“இவன் சொன்னா இவம்மா கேட்க மாட்டாளா?”
“கேட்கலாம். இருந்தாலும் அவள் ஆசையை எதற்காக அடக்க வேணும் என்பது அவன் கக்ஷி.”
“பார்த்தேளா? எதிர் ஜாமீன் இல்லாமலே இந்த நாளிலே கல்யாணமில்லே. பணக்காரன், ஏழை, படிச்சவன், படிக்காதவன் எல்லாரும் இதிலே ஒண்ணுதான். நான்தான் அடிச்சுக்கறேனே; உங்கள் சங்கற்பத்தை யெல்லாம் மூட்டை கட்டி வையுங்கோ. ஏதோ நம்ப சக்திக்குத் தகுந்தது கொடுத்துக் கல்யாணம் பண்ணுங்கோ. சீராச் செஞ்சால் என்ன, பணமாக் கொடுத்தால் என்ன?” என்று அவள் அவரை வேண்டும் பாவனையில் ஆரம்பித்தாள்.
“அதென்னமா இரண்டும் ஒண்ணாப் போகும்? சீர், நானாக என் பெண்ணுக்கு விருப்பத்தின் பேரில் செய்வது. வரதக்ஷிணை இவர்களாக என்னிடம் வழிப்பறி போலப் பிடுங்கி வாங்குவது. அதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன். எங்கப்பாவுக்கு நடக்கலையா? எனக்கு மட்டும் நடக்காமலா போயிடும்? இதையும் பார்ப்போமே.”
“உங்கப்பா காலமும் இந்தக் காலமும் ஒண்ணா? உலகம் தெரியாமல் பேசறேளே. அப்போ பெரிய மனுஷாளே வேறயா இருந்தா. அவா லக்ஷ்யமும் காரியமும் வேறாயிருந்தன. இப்போ எல்லாம் மாறிப் போயிடுத்தே. எதிர் ஜாமீன் உதவாதுன்னு உங்கப்பா மேடையேறிப் பிரசங்கம் செய்தார். அது போலவே செய்தும் காட்டினார். ஊரிலும் அவரைப் போல் இருக்க நாலு பேர் ஆசைப் பட்டா. இப்போ அவர் அந்தஸ்து நமக்கு இருக்கா? பெரிய மனுஷாள் முன் போல இருக்காளா? ரெண்டு மில்லே. எல்லாரும் அந்தஸ்துக்குத் தகுந்தது வாங்கறா. அது தான் இப்போ மதிப்பு. என்னமோ இந்தப் பிள்ளை எல்லாத்திலேயும் தேவலை. என்ன கேட்கிறானோ பேசாமே கொடுத்து நிச்சயம் பண்ணுங்கோ. இது வரையும் நீங்க பாத்த வரன்களில் எவன் வரதக்ஷிணை இல்லாமே பண்ணிக்கத் தயாராக இருந்தான்? இனிமே மட்டும் யார் வரப்போறான்? பத்மினிக்கு வயசாயிண்டு போறது. கல்யாணம் பண்ணாத பாவம் உங்களையும் என்னையுந்தான் சேரும். எனக்கு ராத்தூக்கமே போயிடுத்து.”
“சரி, நீ பெரிய அங்கலாய்ப்பின் பிரசங்கத்தெ ஆரம்பிச்சுடுவே. என்னாலே கேட்டுக் கொண்டிருக்க முடியாது. ஒண்ணும் குடி முழுகிப் போயிடலே. ‘இவனுக்குப் பெரியவாளைக் காணோமே பேரம் பேச!’ என்று பார்த்தேன். தானே பேசுகிறேன் என்கிறான். நாளே மாறிப் போயிடுத்து. நாங்களெல்லாம் கல்யாணம் இன்னாலே பேச வெட்கப்படுவோம். வெட்கந்தான் படல்லேன்னா லேவாதேவிக் காரியமான்னா அடிக்கிறான்கள்? என்ன ஆனால் என்ன? ‘எதிர் ஜாமீன் கொடுக்கிறதில்லே’ என்கிற எங்க குடும்ப வழக்கத்தை நான் மாத்தப் போறதில்லே. கல்யாணம் நடக்காமலா போகும்? இவளுக்கு ஒரு புருஷன் எங்கேயாவது முன்பே பிறந்திருப்பான். இனிமேல் பிறக்கப் போகிறதில்லை. பார்ப்போம்” என்றார் பிடிவாதமாக.
‘இந்த அசட்டுப் பிடிவாதத்திற்கு என்ன பண்ணுகிறது? நல்ல வரன்களெல்லாம் போய்விடுமே!’ என்று பத்மினியின் தாய் வருந்திப் பெருமூச்சு விட்டாள். இவர்கள் சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டிருந்த பத்மினிக்கு, ‘உலகம் பலவிதம் என்பது பொய், ஒரே விதந்தான்’ என்று தோன்றிற்று. இந்த வரதக்ஷிணை சம்பந்தப்பட்ட மட்டிலாவது ஒன்று தான் என்று நிச்சயித்தாள். அவள் இதுவரையிலும் தந்தை கக்ஷிதான். தாயும் அவள் மாமா கோபாலனும் எதிர்த்து வாதாடும் போதெல்லாம். அவள் தன் தந்தை பக்கம் பலமாக வாதித்திருக்கிறாள். “பெண்கள் என்ன கொள்ளாச் சரக்கா, அவர்களையும் கொடுத்துப் பணமும் கொடுப்பதற்கு? விவாகத்தினால் விளையும் நன்மையைப் போக்கி வியாபாரமாக அடித்து விடுகிறதா? அப்பா சொல்லுவது சரிதான். அதனால் எனக்குக் கல்யாணமே இல்லாவிட்டாலும் பாதகமில்லை” என்று ரோசத்தோடு பேசியிருக்கிறாள். அப்படித் தீர்மானமாக நினைத்த அவள் மனங்கூட, ‘அப்பா கொஞ்சம் விட்டுக்கொடுத்தால் என்ன?’ என்று சிறிது சிறிதாக இப்பொழுது நினைக்கத் தொடங்கிற்று என்றால் அதற்கு என்ன சொல்லுகிறது? அந்த மாறுதலுக்குக் காரணம் அவளுக்கு ரகுராமனைப் பார்த்ததுமே ஏற்பட்ட காதல் தான்.
பத்மினியின் இந்த மனநிலைக்குக் காரணமான ரகுராமன் வாஸ்தவத்தில் என்னவா யிருந்தான்? பத்மினியினிடத்தில் அவன் உணர்ச்சிகள் எவ்விதம் இருந்தன? அவள் அழகும் அடக்கமும் ஒரு நொடியில் அவன் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளத்தான் கொண்டன. அவளைப் பார்க்க வந்த பொழுது விவாகத்தைப் பற்றின எண்ணம் அவன் மனத்தை விட்டு வெகு தூரத்தில் இருந்தது. விஞ்ஞான சாஸ்திர ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த அவன், ‘கல்யாணத்துக்கு இப்பொழுது என்ன அவசரம்?’ என்று நினைத்திருந்தான். தன் தாய்க்காகவும் கலாசாலை நண்பன் கோபாலனுக்காக வுந்தான் அவன் பெண் பார்க்கச் சம்மதித்தான். அவனுக்கு வரும் பெண்களில் பிடித்த பெண்ணைப் பார்த்து நிச்சயமாவது செய்து வைத்து கொள்ள வேண்டு மென்பது தாயின் விருப்பம். அப்புறம் தகுந்த இடங்களிலிருந்து பெண்கள் வராவிட்டால் என்ன செய்வது? ஒரு மகனைப் பெற்ற தாய்க்குத் தெரியும், நல்ல நாட்டுப் பெண்ணாக வருவதைப் பற்றின விசாரம்! அவன் தோழன் கோபாலன், “எங்கள் பத்மினியை மட்டும் பார். பிறகு உன் இருதயம் உன் வசம் இராது” என்று வீறாப்புப் பேசியிருந்தான். அவர்கள் இருவருக்காகவுமே அவன் பத்மினியைப் பார்க்கச் சென்றான்.
அவன் திரும்பி வந்தபொழுது அவன் தாய், “என்ன டாப்பா, பெண் பிடித்ததா?” என்று கேட்டாள். “அம்மா! நீதான் நாட்டுப்பெண் வரவேண்டுமென்று ஆசைப்பட்டுத் தவிக்கிறாயே. உன் விருப்பத்தை நிறைவேற்றி விடுகிறது”. என்று விளையாட்டாகத் தன் சம்மதத்தைத் தெரிவித்தான்.
பத்மினியின் தந்தை சபேசையரின் கொள்கைதான் அதற்கு இடையூறாக நின்றது. அவன் தாய் வரதக்ஷிணை இல்லாமல் கல்யாணத்திற்குச் சம்மதிக்கவில்லை. அவளுக்கு அதில் ஒரு பெருமை; உலக மதிப்பில் ஒரு படி ஏறுவதாக எண்ணம். ஒவ்வொருவர் அவள் மகனுக்கு ஐயாயிரம் எதிர் ஜாமீன் கொடுத்துச் சீர்செய்யவும் தயாராக இருந்தார்கள். பத்மினியின் தந்தைக்காக வேண்டி அவள் தொகையை மூவாயிரமாகக் குறைத்துக் கொள்ளச் சம்மதித்தாள். ஏனெனில் ரகுராமன் மனத்தில் பத்மினி இடம் பெற்றிருப்பது அவளுக்குத் தெரிந்து விட்டதல்லவா? ஆனால் சபேசையர் வரதக்ஷிணை என்று ஒற்றை ரூபாயும் கொடுப்பதாக இல்லையே! அது அல்லவோ அவர் சங்கற்பம்? இந்த முரண்பாட்டுக்கு என்ன பண்ணுகிறது?
ரகுராமன் தன் தாயிடம் வாதித்துச் சம்மதிக்கச் செய்ய இஷ்டப்படவில்லை, அவளுடைய விருப்பம் அர்த்த மற்றதாக இருந்தாலும் அதை நடத்திவைப்பது அவன் கடமையெனக் கருதினான். இளவயசிலேயே தந்தையை இழந்த அவனுக்குத் தந்தையும் தாயுமாக அவள் இருந்திருக்கிறாள். யாருடைய உதவியுமின்றி எவ்வளவோ வகையான போராட்டத்துக்கு இடையே அவனை முன்னுக்குக் கொண்டு வந்திருக்கிறாள். ‘கைம்பெண் வளர்த்த பிள்ளை’ என்று அவன் வீண் போய்விடாமல் எல்லோரும் மதிக்கும் படியான படிப்புப் படிக்கும்படி செய்தது அவள் திறமைதான். எவ்வளவு நாள் அவள் சிறு பள்ளிக்கூடப் பரீக்ஷைக் காலங்களில் கூட விடிவதற்கு முன் அவனைத் தூக்கத்தினின்றும் எழுப்பிப் படிக்க வைத்துத் தானும் தூங்காமல் துணை இருந்திருக்கிறாள். அவன் படிப்பில் அவள் காட்டின சிரத்தையால்தான் அவன் படித்து இவ்வளவு தூரம் முன்னுக்கு வர முடிந்தது. இவைகளை எண்ணும் பொழுது அவளுடைய விருப்பம் எதுவாக இருந்தாலும் கேள்வியேயின்றி நிறைவேற்றுவது தன் கடமை என்று அவனுக்குத் தோன்றிற்று. பிதாவின் சொல்லைப் பரிபாலனம் செய்த ஸ்ரீ ராமசந்திர மூர்த்தியின் மன நிலையை ஒத்திருந்தது, அவன் மனசு அப்பொழுது. சபேசையரின் கொள்கை உயர்வாக இருக்கலாம். அதை நடத்தி வைக்க அவன் கடமைப்பட் டிருக்கவில்லை. ஆகையால் அவர் பலவாறாக எடுத்துச் சொன்ன பிறகும் அவன் சம்மதிக்கவில்லை. நியாயம் தெரிந்தவனாக இருக்கிறானே, கபடமின்றிப் பேசுகிறானே என்று எண்ணினார் அவர். தம் தந்தை அவருடைய ஆறு பிள்ளைகளுக்கும் நாலு பெண்களுக்கும் ஒரு காசு எதிர் ஜாமீன் கொடாமலும் ஒரு காசு வாங்காமலும் மணம் முடித்த பெருமையையும், தாமும் என்ன வந்தாலும் அதையே பின்பற்றுவதாக இருப்பதையும் சொல்லி அது உயர்ந்த எண்ணம் என்பதையும் வற்புறுத்திக் காண்பித்தார். அவன் அவர் பேச்சைக் கவனித்துக் கேட்டாலும் அதன்படி நடக்கச் சம்மதிக்கவில்லை.
“தாயாருடன் கலந்து யோசித்துச் சொல்லுங்கள். எவ்வளவு வேண்டுமென்றாலும் சீராகச் செய்கிறேன். எதிர் ஜாமீன் கொடுப்பதுதான் எங்கள் குடும்பத்தில் வழக்கமில்லை” என்று சொல்லி ஏமாற்றத்துடன் வீடு வந்தார். ‘அதைப்பற்றி யோசிக்க என்ன இருக்கிறது? கல்யாணம் இல்லை’ என்றுதான் ரகுராமன் நினைத்தான். ஆனால் பத்மினியின் உருவம் மட்டும் அவன் மனத்தை விட்டு அகலாது போல் இருந்தது. அவனுக்கு ஏற்பட்டிருப்பது என்ன? கண்டதும் காதலா? கோபாலன் சொன்னது போல் அவன் இருதயத்தைப் பத்மினியிடம் இழந்துவிட்டானா?
எதுவாக இருந்தாலும் அவன் எதைக் கடமை என்று நினைத்தானோ அதிலிருந்து மாறுவதாக இல்லை. சபேசையரும் தம் சங்கற்பத்தை விடுவதாக இல்லை. பெண்ணின் விருப்பம், கால மாறுதல், இரண்டையும் அவர் பொருட் படுத்தவே இல்லை. இவ்விதம் கல்யாணப் பேச்சே நின்று போகும் சமயத்தில்தான் சமய சஞ்சீவியாகக் கோபாலன் அதில் தலையிட்டான். கடல் கடந்து சீதையை ராமனிடம் சேர்க்க உதவிய ஹநுமான்போல் பத்மினியை ரகுராமனிடம் சேர்க்கத் தீர்மானித்தான். அதில் அவனுக்கு இரண்டு உத்தேசங்கள் நிறைவேறு வனவாக இருந்தன. பத்மினியும் ரகுராமனும் ஒருவருக்காகவே மற்றவர் பிறப்பிக்கப் பட்டவர்கள் போல அழகும் குணமும் ஒருங்கே அமையப் பெற்று இருந்தார்கள். ரகுராமன் அவன் தோழன். பத்மினி அவன் தமக்கை மகள். அவர்களைச் சேர்த்து வைப்பது பலவிதத்திலும் அவனுக்குச் சந்தோஷமான செயல். மற்றொரு பெரிய திருப்தி, அவன் அத்திம்பேர் சபேசையரின் அசட்டுப் பிடிவாதத்தைத் தோல்வியுறச் செய்வது தான். வரதக்ஷிணை இல்லாமல் கல்யாணம் செய்வது பற்றி அவர்கள் இருவருக்கும் அடிக்கடி பலத்த விவாதங்கள் நடப்பதுண்டு. அப்பொழு தெல்லாம், “அத்திம்பேரே, எதிர் ஜாமீன் இல்லாமல் விவாகம் என்பது இந்த நாளில் இல்லை” என்று கோபாலன் சாதிப்பான். “நீ மஹா பெரியவன். உனக்கு எல்லாம் தெரிந்துவிட்டது. போடா போ!” என்பார் அவர்.
“இது தெரிவதற்குப் பெரியவனாக இருக்க வேண்டுமா? உலக அநுபவம் வேண்டும்; அவ்வளவு தானே?”
“உனக்கு ரொம்ப அநுபவம். எத்தனை பெண்ணுக்கும் பிள்ளைக்கும் கல்யாணம் பண்ணியிருக்கே?”
“அப்படியல்ல அத்திம்பேரே, சில பேருக்குத் தங்களைச் சுற்றி நடப்பதிலிருந்தே எல்லாம் தெரிந்து விடும். சில பேர் கற்பனை உலகிலேயே இருப்பார்கள். உலகத்தில் என்ன நடக்கிறது என்கிற உலக ஞானமே அவர்களுக்கு எத்தனை வயசானாலும் ஏற்படாது”.
“நீ அப்படி எல்லாந் தெரிந்தவன். நான் ஒன்றும் தெரியாதவன். அது தானே உன் எண்ணம்? இருக்கட் டும். நான் எதிர் ஜாமீன் இல்லாமலே பத்மினிக்குக் கல்யாணம் பண்ணிக் காண்பிக்கிறேன். அதற்கு மேல் என்ன? எங்கப்பாவுக்கு நாலு மாப்பிள்ளைகள் கிடைத்தார்கள். எனக்கு ஒருவன் கிடைக்காமல் போகிறானா? அதையும் பார்ப்போம்.”
இப்படி அவர் பிடிவாதமாகச் சாதிக்கும் பொழுது அவர் அசட்டுத்தனத்துக்கு நல்ல நீதி கற்பிக்க வேண்டு மென்று கூடக் கோபாலனுக்குத் தோன்றுவது உண்டு. இப்பொழுது இதற்குத் தக்க சந்தர்ப்பம் வாய்த்திருப்பதைக் கண்டான்.
பத்மினிக்கும் ரகுராமனுக்கும் விவாகம் நிறைவேறியது. கல்யாணம் நடந்த பொழுது தான் விரும்பிய கணவனை அடைந்த பத்மினியின் சந்தோஷத்திற்கு மேலாகவே அவள் தந்தை சபேசையர் ஆனந்தம் கொண்டார். நல்ல மாப்பிள்ளை. அதோடு வரதக்ஷிணை இல்லாமலே கல்யாணம் நடந்தது. அவர் சங்கற்பம் நிறைவேறியது. இவ்வளவு மேன்மையாக அது நிறைவேறு மென்று அவர் கனவில்கூட நினைக்கவில்லை. எதிர் ஜாமீன் கொடுக்காமல் தங்கள் குடும்பக் கௌரவத்தைக் காப்பாற்றத் தன் அருமை மகளைத் தாழ்ந்தவன் எவனுக்காவது கொடுக்க வேண்டி வருமோ என்று உள்ளூறக் கவலைப்பட்டு அவர் உருகிக் கொண்டிருந்தார். கொள்கையைக் கடைப்பிடிக்கச் சோதனையாகத் தியாகம் செய்ய நேர்ந்து விட்டால், தியாகத்தில் இவர் மட்டுமா, ஒரு பாவமும் அறியாத இவர் மகளன்றோ அதற்குப் பலியாக வேண்டும்? இதை எண்ணும் பொழுது இப்பொழுது நடந்திருப்பதற்கு அவர் எவ்வளவுதான் சந்தோஷப் படக் கூடாது? அதோடு கல்யாணமான ஒரு மாதத்தில் ரகுராமனின் விஞ்ஞான ஆராய்ச்சியில் அவன் கண்டு பிடித்து எழுதின ஒரு புது விஷயத்திற்கு அவனுக்குப் பாராட்டோடு, மூவாயிரம் ரூபாய் பரிசும் பட்டமும் வேறு கிடைத்தன. விஞ்ஞான சாஸ்திரத்தில் ஏற்கனவே கண்டு பிடிக்கப்பட்டிருக்கும் உண்மைகளுக்கு மேலே புதிதாக ஒரு சிறு விஷயமானாலும் அதற்கு மதிப்பு அதிகமல்லவா? அந்தத் துறையிலிருக்கும் பெரியவர்கள் அதைப் பெரிது படுத்தி ரகுராமனை வெகுவாகப் புகழ்ந்தார்கள். இது ரகுராமனே எதிர்பாராத விஷயம்.
இப்பொழுது மாப்பிள்ளையின் பெருமையைச் சபேசையர் எல்லோரிடமும் கீதமாகப் பாடாமல் என்ன செய்வார்? அவர் பெருமைப் பேச்சில் அவன் எதிர் ஜாமீன் வாங்காத உயர்வும் கலந்து தான் இருந்தது. “இவ்வளவு யோக்கியதை உள்ளவன் எதிர் ஜாமீன் எவ்வளவு கேட்டாலும் யாரும் கொடுக்கத் தயாராக இருப்பார்கள். அப்படி இருக்க அவன் ஒன்றும் வாங்காதது எவ்வளவு பெருந்தன்மை?” என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்.
ஒரு சமயம் அவரும் கோபாலன் முதலியவர்களும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது சபேசையர், மாப்பிள்ளையிடம், “மாப்பிள்ளை, உமக்கு மூன்று ஆயிரம் அல்ல; மூன்று கோடி கொடுக்கலாம். நீங்கள் அவ்வளவு உயர்ந்தவர்கள். ஏதோ என் கொள்கை ; அது மூடத்தனமாக இருந்தாலும் அதற்கு ஒப்புக்கொண்டு நடத்தினீரே; நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்; எங்கள் குடும்ப கௌரவத்தையே காப்பாற்றிவிட்டீர்” என்று உவகை பொங்கக் கூறி ரகுராமனைப் புகழ்ந்தார். இம் மாதிரியான சந்தர்ப்பத்தைத் தான் கோபாலன் எதிர் பார்த்துக் காத்திருந்தான். ரகுராமன் இந்தப் பாராட்டைச் சும்மாக் கேட்டுக் கொண்டிருக்க மாட்டான். அவன் வெகு நேர்மையான நடத்தையும் குணமும் பொருந்தியவன். விஷயத்தைச் சொல்லி விடுவான். ஒரு கால் அவன் சொல்லத் தவறினால் சமயத்தை உபயோகித்துக் கொண்டு தானே சொல்லி விடுகிறது. ஆகையால் எப்படியும் அவன் அத்திம்பேருக்கு எதிராக வெற்றிமாலை சூடும் நேரம் கிட்டிவிட்டது. அவரைப் பார்த்து மார்தட்டப் போகிறான். அவர் கோபம் கொள்ளலாம். அதனால் என்ன? அவர் தோல்வி தோல்விதானே? அது மாறாதல்லவா? – மேற்கொண்டு நடக்கப் போவதை எதிர்பார்த்து இப்படிச் சந்தோஷப்பட்டான் கோபாலன்.
அவன் நினைத்தது தவறாகவில்லை. சபேசையர் உண்மையில் உள்ளம் உருகித் தனிமையில் வேறு தன்னைப் புகழ்வதை ரகுராமனால் ஏற்றுக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. ஏற்கனவே ஒவ்வொருவரிடமும் அவன் எதிர் ஜாமீன் வாங்காத உயர்வை அவர் போற்றிப் புகழும் பொழுது அவன் மனச்சாக்ஷி அவனைக் குறை கூறிக் கொண்டிருந்தது. அந்தப் புகழுக்குத் தான் சிறிதும் உரியவனல்லவே என்று வருந்தினான். அதோடு கூட இப்பொழுது கோபாலன் வெற்றிக் கோஷம் செய்யத் தயாராக இருப்பதையும் உணர்ந்தான். ‘அவன் முன்பு அவரை மனம் குன்றித் தலை குனியச் செய்வதா? கூடாது’ என்று தீர்மானித்துக்கொண்டான். அதற்காக அவன் ரகசியத்தை வெளிவிடாமல் மறைக்க முடியவில்லை.
உண்மையை அவன் நாணத்தோடு எடுத்துச் சொன்னபோது சபேசையர் திடுக்கிட்டுப் போனார். அவரும் நாணமடைந்தார். உண்மை இதுதான்.
கோபாலன் ஒரு தந்திரம் செய்ய எண்ணினான். ரகசியத்தில் எதிர் ஜாமீன் கொடுத்துக் காரியத்தை முடித்துப் பின்னால் அவரை ஏசிக் காண்பிக்க ஆசை கொண்டான். ரகுராமன் தோழனாக இருந்தது அதற்கு நல்லதாயிற்று. ‘தகுந்த வரனெல்லாம் தட்டிப் போகிறதே என்று கவலைப்பட்ட தமக்கையிடம் ரகசியத்தில், அத்திம்பேர் காரியம் நடத்துவாரென்று தோன்றவில்லை. அவரை நம்பிக் கொண்டிருந்தால் நல்ல வரனெல்லாம் போய்விடும். நான் சொல்லுகிறேன் கேள். உன்னிடம் ஏதாவது பணம் இருந்தால் கொடு. நான் அவருக்குத் தெரியாமல் இந்தப் பிள்ளையை நிச்சயம் செய்து வருகிறேன்” என்றான்.
“நான் மூவாயிரத்துக்கு எங்கே போக!” என்று அவள் கவலைப்பட்ட பொழுது, “உன்னிடம் உபயோகப் படாத நகைகள்கூட இல்லையா? அவசரத்துக்கு வைத்துப் பணம் வாங்கினால் பின்னாடி எப்படியாவது மீட்டுக் கொள்ளுகிறது” என்று யோசனை கூறினான்.
“எனக்குக் கல்யாணத்திற்கு மாமனார் போட்ட அரைப்பவுன் மாலைதான் இருக்கிறது. இந்த நாள் பவுன் விலைக்கு மூவாயிரத்துக்கு மேலேயே பெறும். ஆனால் இந்த ரகசியத்துக்கெல்லாம் அந்தப் பிள்ளை ஒத்து வரவேண்டாமா? உங்கள் அத்திம்பேருக்குத் தெரிந்து விட்டால் அவர் என்ன கோபித்துக் கொள்வாரோ ? எனக்கு நினைக்கவே பயமாக இருக்கிறதே” என்று அவள் சந்தேகித்தாள்.
“அவன் ஒப்புக்கொள்வதையும் அத்திம்பேருக்குத் தெரியாமல் இருப்பதையும் நான் பார்த்துக் கொள்ளுகிறேன். இல்லை, அப்படிப் பின்னாடித் தெரிஞ்சூட்டாத் தான் என்ன பண்ணுவார்? கல்யாணமான மாப்பிள்ளையை ஏற்றுக் கொள்ளாமல் விட்டு விடுவாரா? இத்தனை காலம் கூட வாழ்ந்த மனைவியைத்தான் தள்ளி விடுவாரா? நீ ஒன்றுக்கும் பயப்படாதே; நான் இருக்கிறேன் எல்லாவற்றுக்கும்” என்று அவளுக்குத் தைரியம் சொல்லிக் காரியத்தை நடத்தத் தொடங்கினான். “ம் நண்பன் தானே? நாம் சொன்னால் கேட்கமாட்டானா?” என்ற நம்பிக்கை அவனுக்கு. “அத்திம்பேரே, உங்கள் இஷ்டப்படியே எதிர் ஜாமீன் இல்லாமலே இந்த வரனை முடித்துத் தருகிறேன்” என்று அவருக்குச் சமாதானம் வேறு கூறினான்.
ரகுராமனை ஒப்புக்கொள்ளச் செய்வது சிறிது சிரமமாகத்தான் இருந்தது. இந்த மாதிரி ரகசியத்திற்கு அவன் மனம் இடங் கொடுக்கவில்லை. தாயையும் திருப்தி செய்து பத்மினியையும் மணம் புரிய வேறு வழி இல்லையே என்று தான் அவன் கடைசியில் ஒருவாறு ஒப்புக்கொண்டான்.
“அப்பொழுது அம்மாவின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யக் கடமைப்பட்டவனாக அவ்விதம் நடந்தேன். இப்பொழுது நீங்கள் என் தந்தை ஸ்தானத்தை அடைந்திருக்கிறீர்கள். உங்கள் கொள்கையையும் நிறைவேற்ற ஒருவாறு எனக்கு இப்பொழுது கடமை ஏற்பட்டு விட் டது, எனக்குப் பரிசாகக் கிடைத்த மூவாயிரம் இருக்கிறது. அது என் சொந்தப்பணம் அல்லவா? அதை என் இஷ்டம் போல் உபயோகிக்க எனக்கு உரிமை இருக்கிறது. அதைக் கொடுத்துக் கடமையை நிறைவேற்றுகிறேன். இந்தப் பணத்திலிருந்து நீங்கள் எதிர் ஜாமீன் கொடுக்கவில்லை என்று செய்து விடுகிறேன்” என்றான் ரகுராமன்.
சொன்னதோடு நில்லாமல் மூவாயிரத்துக்கு அவனுக்குக் கிடைத்த செக்கையும் அவர் முன் வைத்தான். சபேசையர் திக்பிரமை கொண்டார். தாம் கேட்டதும் காண்பதும் கனவா நனவா என்று அவருக்குச் சிறிது நேரம் புரியவே இல்லை. அவர் பணத்தைப் பெற்றுக் கொள்கிறார்; இல்லை. அது கிடக்கட்டும். அவன் அவர் மாப்பிள்ளையான பிறகு பணமா பெரிது? அவனுடைய இந்த மேலான செய்கை அவருக்குப் பின்னும் சந்தோஷத்தை யல்லவா கொடுத்துவிட்டது? மாப்பிள்ளை தம்மை ஏமாற்றினதாகக் கோபம் கொள்வதற்கு மாறாக அவனுடைய இந்த உயர்ந்த குணத்திற்கு இரட்டிப்பு ஆனந்தம் கொண்டார்.
தந்திரமோ மந்திரமோ கல்யாணம் முடிந்து விட் டது. சபேசையர் சங்கற்பம் பூர்ண வெற்றி பெற்றதா? ரகுராமன் கடமை உணர்ச்சி வென்றதா? கோபாலன் தந்திரம் வென்றதா? யாருக்கு வெற்றி? – இதில் சந்தேகம் என்ன? பத்மினிதான் நிச்சயமாக வென்றாள்.
– தெய்வத்திற்கு மேல், முதற் பதிப்பு: பெப்ரவரி 1947, கலைமகள் காரியாலயம், சென்னை.
– இந்தப் புததகத்தில் வந்திருக்கும் கதைகள் கலைமகள், குமரிமலர், கல்கி தீபாவளி மலர், ஆனந்த விகடன், மங்கை ஆகிய பத்திகையில் வெளியானவை.