வெற்றிலைக்கட்டு!




மருமகள் செய்த தேங்காய் முட்டாயை வாங்கி வெற்றிலை கொட்டும் கை உரலில் பொடியாகும் வரை கொட்டி பற்கள் அனைத்தும் விழுந்த நிலையில் பொக்கை வாயைத்திறந்து நாக்கில் வைத்து சுவைத்து மகிழ்ந்தார் தொன்னூறு வயதைக்கடந்து விட்ட மாரப்பன். மகன் ராயப்பனை சுருக்கம் விழுந்த மங்களான அவரது கண்கள் அங்குமிங்கும் தேடின.

“வெத்தல தீந்து நாலு நாளாச்சு. அந்தப்படவா ராசுக்கோலு என்ற கண்ணுலயே படமாட்டீங்கறானே…. ஊருக்குள்ள போற போது ஒரு வார்த்த சொல்லாமக் கொள்ளாமப் போயர்றானே… மத்தவங்க கூட சுத்தித்திரிஞ்சு போட்டு பெத்தவனக் கண்டுக்காம விட்டுப்போட்டானே பாவி…. கடைக்குப்போயி நீயாவது ஒரு கௌளி வெத்தலக்கட்ட வாங்கியாந்துரு தாயி… வாயி வெத்தல ரசம்படாம சும்மா அரிக்குது…. சோறு வேளா வேளைக்கு கொடுக்கறியோ, இல்லியோ வெத்தலக்கட்டு என்ற சுருக்குப்பையில என்னைக்கும் இருக்கோணும் பாத்துக்க. என்ற உசுரு மாதர அது…” மருமகள் அருக்காணியிடம் கெஞ்சுவது போலக் கேட்டார்.
“என்ற கிட்ட ஓராணாங்கூடக்கெடையாதுங்க மாமா. ஆட்ட வித்த காசு, மாடு கறந்து பாலு வித்த காசு, மோரு வித்த காசு எல்லாத்தையும் பருப்பு டப்பாக்குள்ள பதனமா வெச்சிருந்தேன். அதைய நானு மாட்டுக்கட்டித்தரைல சாணி வளிக்கிற சமயம் பாத்து சொல்லாம கொள்ளாம எடுத்து அன்றவாரு சோப்புல போட்டுட்டு ஊருக்குள்ள சீட்டாடப்போயிருக்காரு. வர்ற போது பணத்த மட்டும் புடுங்கீட்டு உடறாங்களோ, இல்லே போட்டுட்டு போன அன்றவாரையும் புடிங்கீட்டு உடப்போறாங்களோன்னு தெரியல. எப்புடியோ போன மனுசன் ஊடு வந்து சேருட்டு. அந்தக் கருப்பராயம் புண்ணியத்துல அஞ்சு பத்து கொண்டு வந்தாருன்னா நான் அப்பவே போயி வெத்தலை ஒரு கட்டென்னுங்க, மூணு கட்டா வாங்கியாந்து கொடுக்கறனுங்க மாமா” மருமகளின் பேச்சில் மகிழ்ச்சியடைந்தாலும், மகனின் நிலையை எண்ணி வேதனையும் பட்டார்.
வரும் போதே தள்ளாடியபடி சைக்கிளை ஓட்டி வந்த ராயப்பன் தோட்டத்து வீட்டு வாசலில் ஸ்டேண்ட் போட்டு நிறுத்த முடியாமல் போதை மயக்கத்தில் கீழே போட்டு விட்டு திண்ணையில் படுத்துக்கொண்டான்.
படுத்திருந்த கணவனின் நிலை எப்போதும் போலவே இப்போதுமிருந்ததால் படுத்திருந்தவனின் அன்றவார் எனப்படும் உள்ளாடை டிவுசரில் உள்ள பாக்கெட்டில் கையை விட்டு தேடியபோது பணம் இருந்ததால் முகம் மலர்ந்த அருக்காணி, உடனே கீழே வாசலில் கிடந்த சைக்கிளை எடுத்து ஓட்டிக்கொண்டு ஊருக்குள்ளிருந்த மளிகைக்கடைக்குச்சென்றவள், வெற்றிலைக்கட்டுடன் திரும்பியதைப்பார்த்து பொக்கை வாயில் சிரித்த படி “கொண்டா தாயி அந்த வெத்தலைய, நீ மகராசியா இருக்கோணும்” என சொன்ன மாரப்பன், உடனே கை உரலை எடுத்து வெற்றிலை, கொட்டப்பாக்கு, சுண்ணாம்பு, சிறிது புகையிலைத்துண்டு சேர்த்து இடிக்க ஆரம்பித்தார்.
“தெள்ளவாரிப் பையனத் தெரியாத்தனமாப் பெத்துப் போட்டுட்டு உன்ற மாமியாக்காரி மேலோகத்துக்கு போய் சேந்துட்டா. இவன வெச்சு எம்பட காலத்த எப்படிக்கரை சேர்த்தப் போறனோன்னு தெரியாம முழிச்சிட்டிருந்தேன். அந்தக் கடவுளு பரமசிவம் பையன் பழனி முருகன் உன்ன மருமகளா இந்தக் குடும்பத்துல கொண்டு வந்து சேத்தாமப் போயிருந்தா நானுஞ் செத்து பல வருசமாயிருக்கும். ஒன்னம் உசுரக்கையில புடிச்சுட்டு இருக்கறன்னா மகராசி உன்றனாலதான்” என்றவர் இடித்த வெற்றிலை, பாக்கை எடுத்து வாயில் போட்டு அடக்கிக்கொண்டார்.
“போன வாரம் உன்ற கிட்ட சொல்லாம ஒரு வேலை பண்ணிப்போட்டு வந்துட்டேன். பக்கத்தோட்டத்து வாத்தியாரு கந்தசாமியக்கூப்புட்டு போயி பத்தர ஆபீஸ்ல என்ற பேருல இருக்கற சொத்தையெல்லாம் உன்ற பேருக்கு தானக்கெரையம் பண்ணிப் போட்டு வந்துட்டம் பாத்துக்க. உன்ற புருசங்கிட்ட மட்டும் இந்த விசயத்த சொல்லிப்போடாதே… அவம்பொறந்த போதே ஜாதகத்த கணிச்சுப்பார்த்த ஜோசியரு ராமசாமி ‘அவனோட லக்னத்துல தீவிரவாதி கேது வந்து நல்லா சம்மணம் போட்டு உக்காந்துட்டான். பையன் மனம் போற போக்குலதாம் போவான். சம்பாரிக்காமையே இருக்கற சொத்த வித்து குடிச்சுப்போட்டு, சீட்டாடியே தொலைச்சுப்போடுவான். அவனுக்கு கால்கட்டு போட்ட பின்னால அவம்பொஞ்சாதி பேருல சொத்த எழுதி வெச்சுப்போடுங்க. இந்தப்பையன் உங்களக்காப்பாத்தி சோறு போட மாட்டான். அவனுக்கு பொஞ்சாதியா வார பொண்ணு தான் உங்களைக்காப்பாத்தும். அந்தப்பொண்ணு பேர்ல சொத்த சந்தேகப்படாம எழுதி வெச்சாத்தான் சொத்து அழியாம பேரம் பேத்திக்கு போய் சேரும்’னு அவரு சொன்னது தான் இப்ப நடந்திருக்குது. எல்லாமே விதிதான். விதிய மதியால வெல்லோனும்னா எனக்கு இந்த வழியத்தவுத்து வேற வழி தெரியல” என கண்ணீர் சிந்தியபடி கூறிய மாமனார் மாரப்பன் தன்னிடம் கொடுத்த பத்திரத்தை வாங்கி தனது பெட்டிக்குள் பத்திரமாக வைத்துக்கொண்டாள் அருக்காணி.
போதை தெளிந்து எழுந்த ராயப்பன் குளித்து விட்டு நெற்றி நிறைய திருநீறு பூசி, சந்தனம், குங்குமம் வைத்து காவி வேட்டி கட்டி பக்திப்பழமாக மனைவியிடம் வந்து” சோறு போடு அருக்காணி” எனக்கூற, புன்னகைத்தபடி சமைத்த உணவைப்போட்டுக்கொடுத்தாள்.
வேக, வேகமாக உணவை அள்ளி, அள்ளி வாயில் திணித்தவன் உண்டு முடித்ததும் அன்றவாரிலிருந்த பாக்கெட்டில் கையை விட்டுத்தேடியவன், ” டவுசரு சோப்புல வெச்சிருந்த பத்து ரூபா நோட்டக்காணோம். நீ எடுத்தியா அருக்காணி…?”
“நானெதுக்கு உங்க காச எடுக்கோணும்….? மப்புல வரும்போது எங்கியாச்சும் உழக்காட்டீட்டு வந்திருப்பீங்க. போயி தேடிப்பாத்துட்டு வாங்க…”
“இந்த பொரட்டுப்பேச்ச மட்டும் என்ற கிட்ட வெச்சுக்காதே….” மிரட்டல் தொணியில் மனைவியிடம் பேசினான்.
“போற போது சுத்தமா பருப்பு டப்பாவத்தொடைச்சு எடுத்துட்டு போனேன். திருப்பிக் கொண்டு வந்த பணம் ரோட்ல உழுந்திருந்தா என்ற அப்பங்காரனுக்கு ஒரு கௌவுளி வெத்தல வாங்க உன்ற கிட்டப்பணமேது….? எட்டி ஒதச்சன்னு வெச்சுக்கோ உங்கொப்பனூட்ல போயி உழுந்திருவே…” என கோபம் தலைக்கேறிய படி பேசியவன் சாப்பிட்ட தட்டை வாசலில் வீசியெறிந்தான்.
“அங்கென்னடா சத்தம்….? இரவத்தஞ்சு வருசமா அந்தப்பொண்ணுன்னங்காட்டிக்கு குடிகாரன் உன்ற கிட்ட காலத்த ஓட்டீட்டு இருக்குது. உன்னக்கட்டி ரெண்டு புள்ளைகளப்பெத்துப்போட்டாளே தவுத்து வேற என்ன சொகத்தக்கண்டான்னு சொல்லு. உன்ன மாதரதான் ஊருக்குள்ள மத்தவங்க ஊட்டு ஆம்பளப்பசங்க சுத்தீட்டு திரியறாங்களா...?” மாரப்பன் கட்டிலில் உட்கார்ந்த படி கோபமாக தன் மகனைப்பார்த்துக்கேட்டார்.
“நீ மொதல்ல உன்ற பொக்க வாய மூடீட்டு கெட. அவுளுக்கு வக்காலத்து வாங்க வந்தீன்னு வெச்சுக்கோ நானு மனுசனா இருக்க மாட்டம் பாத்துக்க….”
“நீ இப்பத்தா மனுசனாவாடா இருக்கறே….? என்ற அப்பத்தா வாயக்கட்டி வயத்தக்கட்டி மோரு வித்து ஓரனா, ரெண்டனாவா சேத்து வச்சு இந்த சொத்த வாங்கி வெச்சுட்டுப் போனா. என்ற அப்பங்காரனும் நானும் வெய்ய வேணல்ல இத்தன பழைய சோத்தக்குடிச்சுட்டு காப்பாத்தி வெக்காம இருந்திருந்தா நீ மத்தவங்க தோட்டத்துல பண்ணையத்துலதான் போயி சாணி வழிச்சிட்டு இருந்திருப்பே. இப்போ பண்ணயத்து ஆள் மாதர அருக்காணி பாடு படங்காட்டிக்கு நீ சோக்கா சுத்தீட்டு வந்து அந்தப் பொண்ணையே மெரட்டுரே… அவ பாவம் புடிச்சா உனக்கு கைகால் வராம போயிரும் பாத்துக்க… போடா போயி மாட்ட காட்டுக்குள்ள அவுத்து உடு… நாளைக்கு தை நோம்பி வருது. அவ புள்ளைங்களுக்கு ஏதாச்சும் பலகாரம் செஞ்சு குடுக்கட்டும்” என பேசியவருக்கு இருமல் நிற்காமல் வர, பதறிய படி அருக்காணி தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க, வாங்கி குடித்தவர் மயங்கி சரிந்து கட்டிலில் படுத்தவர் பேச்சோடு மூச்சையும் நிறுத்தியிருந்தார்.
அருக்காணி தன் மார்பில் அடித்துக்கொண்டு அழுததும், ராயப்பன் எதுவுமே நடக்காதது போல் இருந்ததும் பலரையும் புருவம் உயர்த்த வைத்தது.
“மருமகள்னு இருந்தா அருக்காணி மாதர இருக்கோணும். பையன்னு பெத்தா ராயப்பன மாதர பெத்துக்கறதுக்கு பதுலா ஒரு ஆட்டாங்கல்லப்பெத்துப்போட்டாலும் நாலு பேரு வந்து ஆட்டீட்டு காசாவது கொடுப்பாங்க” என தன் எதிரிலிருப்பவர்களே பேச, வெட்கப்பட்டு தலை குனிந்தான்.
தந்தையின் இறப்பு செலவிற்கு ஒரு ரூபாய் நெற்றிக்காசு கூட அவனது உழைப்பிலிருந்து கொடுக்கவில்லை. கணவனுக்குத்தெரியாமல் அரிசி மூட்டையில் பால், மோர் விற்ற காசில் சிறிது, சிறிதாகச்சேமித்ததை மறைத்து வைத்திருந்த பணத்தை எடுத்து மாமனாரின் இறப்பு காரியத்துக்கு செலவிட்டு குடும்ப மரியாதையைக்காப்பாற்றினாள் அருக்காணி.
பதினாறாவது நாள் காரியத்தின் போது ஒரு கட்டு வெற்றிலைக்கட்டை வாங்கி மாமனாரின் பொட்டு வைத்து, மாலை போட்டு நடு வீட்டில் வைத்திருந்த படத்தின் முன்னாள் வைத்து கும்பிட்டவள், “என்னைய மன்னிச்சுக்கோங்க மாமா… நீங்க போன பின்னால காரியம் பண்ற செலவுக்காகவே கஷ்டப்பட்டு சேத்தி அரிசி மூட்டக்குள்ள வெச்ச பணத்துல இந்த வெத்தலய வாங்கி வரச்சொன்னேன். நீங்க இருக்கும் போது வெத்தல கேட்டு சில சமயம் காசில்லைன்னு வாங்க முடியாதுன்னு சொன்னதுக்கு இப்ப மன்னிச்சுப் போடுங்க. என்றனால முடிஞ்ச வெரைக்கும் வாங்கிக்கொடுத்தேன். அப்பப்ப காசில்லைன்னும் சொல்லி ரெண்டு நாலு, மூணு நாலு வாங்கிக் குடுக்காமையும் இருந்திருப்பேன். கேட்டப்பல்லாம் அப்ப வாங்கிக்குடுத்திருந்தா இப்ப வாங்க காசுக்கு நானு எங்கீங்க போகுட்டு.…?” கூறி அழுதவளுக்கு ஆறுதலாக, மருமகளை ஆசீர்வதிப்பதற்கு ஆதாரமாக, அவரது படத்தின் மீது மேல் பகுதியில் வைத்திருந்த ரோஜாப்பூ வெற்றிலைக்கட்டு மீது நழுவி விழுந்தது ராயப்பன் உள்பட வந்திருந்த உறவினர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது!