வெற்றிக்கு பின்னால்




மீண்டும் ஒரு கடைக்குட்டியின் கதைதான். ஐந்தாவதாக பிறந்ததால், கல்யாணமாகாமலே அப்பனுமானான் வெற்றி. தன் சகோதிரிகள் மூவரை வெற்றிகரமாக கட்டிகொடுத்த கதையை எழுத நீல வானமும், வெண்பஞ்சு மேகமும் பற்றாது. தாய் தலைசிறந்த சமையல்காரி, தகப்பன் ஆகச்சிறந்த சாராயக்காரன். இவ்ளோதான் குடும்ப பிண்ணனி. கணக்கில் ஒன்று இடிக்குமே, மூத்த சகோதரி, எதாவோ இருந்த தன் பெயரை “கதா”வாக மாற்றி கொண்டாள்.முதலில் பிறந்ததால் மூளையோடு பிறந்து விட்டதாக எண்ணம் அவளுக்கு. அதனால்தான் என்னவோ திருமணதில் நாட்டமில்லை. எல்லாவிதத்திலும் குடும்பத்திற்கு தனி தூணாக ஆண்மகன் வெற்றி. எந்தவிதத்திலும் குடும்பபாங்கும், பங்கும் இல்லாத பெண்மகள் கதா.
ஊரையும் உறவையும் பொறுத்தவரையில் இருவருமே வாழதெரியாதவர்கள்தான். ஆனால் கதாவிற்கு கனவு ஆசை லட்சியம் எல்லாமே, கதை, கவிதை மேலும் அதன் வளர்ச்சியான திரைக்கதை எழுதுவதுதான். அதற்கான தேடலில் அவள் வயதை கழித்தாள். மாறாக இதை பற்றி எந்த புரிதலுமில்லாமல், தாய், சகோதரிகள், குடும்பம் என்றே வெற்றியும், தோற்றும் வெற்றியானான். வெற்றியும் கதாவும் ஒருவரை ஒருவர் பாதிக்கவும் இல்லை, பாதித்து கொள்ளவும் இல்லை. காலம் கடந்தது
முழு முயற்சியில் ஒருவழியாக கதா அங்கீரிக்கப்பட்ட கதாசிரியர் ஆனார். பல பாராட்டுகளும், விருதுகளும் கூட பெற்றாள். தனக்கென ஒரு உறவை அமைத்து கொள்ளாமலே எல்லா உறவு பொறுப்பையும் பெற்றான் வெற்றி.
ஒரு காலத்திற்குமேல் புகழும் புளித்தது கதாவிற்கு, ஏதோவொரு குற்றவுணர்வு தோன்றியது, வயதுக்கேற்ப அறிவு தேடலை தாண்டி, உறவு தேடல் மேலிட்டது, ஆனால் உறவுகளில் திளைத்த வெற்றியோ, திருப்தி அதிருப்தியை தாண்டி, இறுதி காலங்களில் துறவை நாடினான். கதாவோ தனது கடைசி காலத்தை உறவோடு கழிக்க நாடினாள்.
இந்த ஒவ்வொரு முடிவுகளுக்கு முன்னும் பின்னும் பல முரண்களை கடந்துதான் இருவரும் தனித்து பயணித்தார்கள். ஆனால் வெற்றியாளர் யார்? வெற்றிக்கு பின்னால் யார் ? என்பது உங்கள் அறிவியலை பொறுத்தது.
“ஒவ்வொரு குடும்பத்திலும் பொருளாதாரம், பாதுகாப்பிற்கு ஒரு உறவு இருந்தால், நிச்சயமாக ஒரு சாதனையாளன் ஒளிருவான்” -தேவா