வீராப்பு – ஒரு பக்க கதை






பூங்கா சிலை அருகில் சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்திருக்கும் அந்த வயதானவரைப் பார்த்தேன். அட, அவர் பேங்க் மேனேஜர் சிவராமன்!
ஓய்வு பெற்று ஓய்ந்து போய் வந்து உட்கார்ந்திருக்கிறார்.
எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. இருபது வருஷத்துக்கு முன் நான் ஒரு சாதாரண பிஸ்கட் வியாபாரி. ஒரு சைக்கிள் லோனுக்காக இவரிடம் போனேன். தர முடியாது என்று சொல்லி விட்டார்.
இன்று பெரிய பிஸ்கட் கம்பெனிக்கு இந்த சிட்டி டீலர் நான். மிடுக்கோடு என் காரை ஓரம் கட்டினேன்.
அவர் முன் போய் நின்று, முன்பு நான் அவரிடம் சைக்கிள் லோன் கேட்டு அவர் தரமுடியாது என்று சொன்னதையும், இன்றைய என் நிலையையும் எடுத்துச் சொன்னேன்.
அவர் முகத்தில் பிரகாசம்!
”தம்பி! அன்னைக்கு நான் உங்களுக்கு சைக்கிள் லோன் இல்லைன்னு சொன்னதால்தான், உங்களுக்குள் ஒரு வீராப்பு தோன்றி இருக்கிறது. அதனால் உங்க முயற்சியும் சேர்ந்து, இன்று உங்க வாழ்விலே நல்ல முன்னேற்றம் அடைஞ்சிருக்கீங்க!”
அவர் சொல்ல, அவர் மேல் எனக்கு இருந்த கோபம் நொறுங்கிக் கொண்டிருந்தது.
– ஜூன் 2011