வீதிக்கு வந்த சீதைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: March 14, 2025
பார்வையிட்டோர்: 930 
 
 

(1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சித்திரைப் புத்தாண்டுக்கென மகளுக்காகத் தைக்கும் சட்டையின் பொத்தான்களைத்தைக்க ஊசியில் நூலைக்கோத்துக்கொண்டிருந்த சீதா, மகள் தமிழினியின் குரல்கேட்டுத் திரும்பினாள். 

“அம்மா எங்கட ரீச்சர் இந்தப் பாட்டுக்குப் பொருள் எழுதிட்டு வரச்சொன்னாங்க. எனக்கு பாதிப்பொருள் விளங்குது, மீதி?” 

“எங்க, பாட்டச் சொல்லு பாக்கலாம்!” 

“சங்கு வெண்டாமரைக்குத் 
தந்தை தாயிரவி தண்ணீர்
அங்கதைக் கொய்துவிட்டால் 
அழுகச் செய்தந் நீர் கொல்லும்
துங்க வெண் கரையிற் போட்டாற் 
கதிரவன் காய்த்துக்கொல்லுவான்
தங்களின் நிலைமை கெட்டால் 
இப்படித் தயங்குவாரே!- (விவேகசிந்தாமணி)” 

ஒரே மூச்சில் வாசித்துவிட்டு ஆர்வமாய்த் தன்னை ஏறிட்ட மகளிடமிருந்து கொப்பியை வாங்கியெடுத்து மீண்டும் அப்பாட்டை வாசித்தாள். மனதுக்குள் எங்கோ ஒரு மூலையில் வலித்தது; கண்கள் பனிக்கவாரம்பித்தன. என்றாலும், தன்னை நிதானித்துக்கொள்ள முயன்றபடி மகளுக்கு அச்செய்யுளின் கருத்தை விளக்கலானாள். ‘தாமரை மலருக்குத் தந்தையாகவும் தாயாகவும் இருந்து சூரியனும் தண்ணீரும் காக்கின்றன. அம்மலரின் காம்பினைக் கொய்து, தண்ணீரிலிட்டால் அம்மலர் அழுகிவிடும்; அவ்வாறின்றித் தரையில் போட்டால், இதுவரை வாழ வைத்த சூரிய கிரணங்களே அம்மலரைக் கருகச்செய்து கொன்று விடுகின்றன. எவரும் தன் நிலையிலிருந்து தாழ்ந்து விடும்போது உறவுகளே பகையாகித் துன்புறுத்துகின்றன.’ தனக்கு விளங்கப்படுத்திய அம்மா திடீரென்று ஏன் விம்மி விம்மி அழுகிறார் என்று அறியாது திகைத்த தமிழினி, தாயின் அருகில் சென்று தலையை இதமாக வருடி, கண்ணீரைத் துடைக்க முயன்று, தோற்றாள். 


ராம்குமாரின் கொடூரப் பார்வையைத் தாங்க முடியாமல் அச்சத்தோடு தலையைத் தாழ்த்தினாள் சீதா. அவளின் உடல் வெடவெடவென்று நடுங்கியது. அவனின் புது ஷேர்டை அயன் பண்ணும்போது சிறு கவனப்பிசகினால் ஒரு பகுதி அப்படியே பொசுங்கிப் போய்விட்டது. அதற்காக நாக்கூசாமல் அவன் என்னவெல்லாம் பேசிவிட்டான்? அவளுக்கு அழுகை பொங்கியது. “என்னடி மாய்மாலக் கண்ணீர்? இண்டைக்கு நான் தர்ற தண்டனைய நெனச்சி, நெனச்சி இனி இப்பிடி பிழை விடமாட்டாய்!” 

“ஆ!” பொசுங்கிப்போன கையின் வேதனை தாளாமல் அவள் கத்திய அக்கம் பக்கத்திலிருந்த யாருமே பதற்றமடையவில்லை. அந்தளவுக்கு இத்தகைய அலறல்களுக்கு அவர்கள் பழக்கப்பட்டிருந்தார்கள். 

நாட்கள் நகர்ந்தன. ராம்குமாரின் கொடுமைகளை யாரிடமும் கூறாமல் தனக்குள்ளேயே மருகினாள் சீதா. சீதனக் காசுக்காகத் தனக்குப் பிடிக்காத ஒரு கறுப்புப்பெண்ணைத் தன் ‘தலையில் கட்டிய’ பெற்றோர்மீது காட்டவேண்டிய ஆத்திரம் அனைத்தையும் மனைவிமீது தீர்த்துக்கொண்ட ராம்குமார், திடீரென்று ஒருநாள் தனது பழைய காதலியைப் பதிவுத் திருமணம் செய்துகொண்டு வந்து, சீதாவை வீட்டை விட்டே துரத்தியடித்தான். படிப்பறிவில்லாத தந்தை செய்து வைத்த சம்பிரதாயக் கலியாணம், சட்டத்தின் முன்னால் செல்லாக்காசாகி விட்டது. 


காலைக் கடன்களை முடித்துக்கொண்டு தலைவாரிக் கொண்டிருந்த சீதாவின் அருகில் வந்த சித்தி, மெதுவாக அவளுடன் பேச்சுக் கொடுத்தாள். 

“சீதா இனிமேல் என்ன செய்றதா உத்தேசம்?” 

“இங்கேயே ஒங்களுக்கு உதவியா இருக்கப்போறேன் சித்தி.” 

“அடடா, நல்லா சொன்னே போ! அதெப்படியம்மா சாத்தியமாகும்? ஏதோ தாயத்தின்னியாச்சேன்னு அம்மாவுக்கு அம்மாவா இருந்து, படாதபாடுபட்டு கலியாணங்கட்டி வெச்சேன். இப்ப இந்த ஊட்டுலயும் வயசுக்கு வந்த ரெண்டு பொட்டப் புள்ளைங்க இருக்காளுவ. வாழாவெட்டியான ஒன்ன வெச்சிக்கிட்டா, அதுகளுக்கு நல்லது நடக்குமா?” 

“சித்தீ!” 

“சும்மா கத்தி, அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாத. கட்டிக்கொடுத்ததோட எங்கட கடமையும் முடிஞ்சிடிச்சி, ஆமா, சொல்லிட்டேன். இனி நீ ஒன் மாமி ஊட்டுக்குப் போறதுதான் சரி, ஆயிரக் கணக்குல கைநீ…ட்டி சீதனம் வாங்கினவங்கதானே! இப்ப அவுங்களே பார்க்கட்டும்!” 

“சித்தி… அ… அப்பா?” 

“அவரும் அதையேதான் சொல்றார். சீக்கிரமா ஸாரிய மாத்திக்கிட்டு பொறப்படு, அப்பாவுங் கூட வருவாரு.” 

“சித்தி… நா… நானென்ன தவறு செஞ்சேன் சித்தி? நீங்க எல்லாருமா பார்த்து முடிச்சுவச்ச கல்யாணந்தானே? இதே நெலம ஒங்க சுமதிக்கு வந்திருந்தா?” 

“ச்சீ! போய் வாயக் கழுவுடி சண்டாளி! ஏ மகளுக்கு இப்பிடியெல்லாம் வராது. ஒந்தலையெழுத்து இப்படியாச்சி. நாங்க மட்டும் அவன் இப்படிப்பட்டவன்னு தெரிஞ்சுக்கிட்டா கட்டிக்கொடுத்தோம்? ம்! வீண்பேச்ச உட்டுட்டு சட்டுனு பொறப்படுடி. தங்கச்சிங்க கல்யாணம் முடியிறமட்டுமாவது பல்லக் கடிச்சிக்கிட்டு அங்கேயே இருக்கப்பாரு!” 

சித்தியின் தீர்மானமான முடிவினைக் கேட்டுத் தன் தந்தையின் பக்கந் திரும்ப, அவரோ முகத்தை வேறுபுறம் திருப்பிக்கொண்டார். தாளாத வேதனை நெஞ்சை அடைக்க, அம்மாவின் படத்தின் முன் விழுந்து வணங்கிவிட்டு, மௌனமாகத் தந்தையுடன் புறப்பட்டுப்போனாள். 

“அதென்ன சம்பந்தி அப்படிச் சொல்லிட்டீங்க? நாங்க சொல்லியா எம் பையன் இப்பிடிச் செஞ்சான்?” 

“அதெல்லாம் எனக்குத் தெரியாது! வித்தமாட்டுக்கு வெல இல்லம்பாங்க. ஒங்க பையன் கைநீட்டி வாங்கின காசு இருந்தாலாவது இவள வேற எங்கியாச்சும் கரைசேர்க்க இருந்திச்சி. இப்போ நீங்கதான் இவள பொறுப்பேத்துக்கணும்!” 

பதிலுக்குக் காத்திராமல் விடுவிடென்று போகும் அப்பாவைத் திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்த சீதா, பரிதாபமாக விழித்தபடி மாமனாரின் முகத்தை ஏறிட்டாள். மாமா, மாமி, மைத்துனி, மைத்துனர் ஆகிய அனைவர் முகங்களிலும் வெறுப்பும் ஏளனமும் நிழலாடக் கண்டு, அவமானத்தால் கூனிக்குறுகினாள் சீதா. 

“இத பாரும்மா சீதா! ஒன்னச் சொல்லிக் குத்தமில்ல. அந்தத் தறுதல இப்பிடிப் பண்ணுவான்னு தெரியாதேம்மா. ரம்யாவும் கலியாணத்துக்கு நிக்கிறா. வாழாவெட்டியா நீ இங்க இருந்தா அவளுக்கு எப்படி கலியாணம் காட்சின்னு நடக்கும்? என்ன மன்னிச்சிடும்மா! நீ நல்ல பொண்ணுன்னு எனக்கும் தெரியும். ஆனா, என்னாலயும் எதுவுமே செய்யமுடியாத நிலை. வயசுல நீ சின்னவதான். ஆனாலும் பரவாயில்ல… ஒன்ன கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்கிறேன். தயவுசெஞ்சி, நீ வீட்டுக்கே போயிடும்மா!” 

சரி என்று சொல்ல முடியாதளவு துயரத்தால் தொண்டை கம்மிப்போகக் கண்ணீருடன் தலையசைத்தாள். கையில் கனக்கும் பெட்டியுடன் மௌனமாகத் தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினாள். “நீ ஒரு வாழாவெட்டி” என்ற வார்த்தை அவளது காதுகளில் மீண்டும் மீண்டும் எதிரொலித்தது, அவளை விரட்டி வருவதான மனப் பிரமையில் நெஞ்சம் பதைத்தாள். 

ஒரு  பெண் கணவனை இழந்தால் விதவை என்றும், கைவிடப்பட்டால் வாழாவெட்டி என்றும் பட்டஞ்சூட்டி, ஏன் இந்தச் சமூகம் இப்படிப் பெண்களைத் துன்புறுத்த வேண்டும் என்கின்ற மனதின் கேள்விக்கு அவளால் விடைகாண முடியவில்லை. எங்கே போகிறோம் எனும் இலக்கே இன்றிப் பயணித்த அவள் திடீரென்று தன்னுணர்வு பெற்று சுற்றுமுற்றும் பார்க்கிறாள். தனக்கு முற்றிலும் அறிமுகம் அற்ற சூழல் என்பது புரிந்தது. வந்த வழியே திரும்பிப்போக நினைத்து இரண்டெட்டு வைத்தவளுக்கு மிக அருகில் பழக்கமானதொரு பெண்குரல் கேட்டது. 

“ஏய், நீ… நீ… சீதா தானே? என்னைத் தெரியல்லையா? நான் மாலதி… உம்மணா மூஞ்சு மாலதி!… என்ன, பட்டப் பெயரச் சொன்னதும்தான் நெனவு வருதுபோல. நீ எங்கேடி இங்கே வந்தே?” 


மகளின் குரல் கேட்டு பழைய நினைவிலிருந்து மீண்டாள் சீதா. தமிழினி தாய்க்காகத் தேநீர் தயாரிக்கப் போனாள். தன்னைப் போல் பெண்ணாக… அதுவும் கருப்புத்தோலுடன் பிறந்து… கணவனால் வாழாவெட்டியாக்கப்பட்ட காரணத்- தினால் உறவுகளே அந்நியமாகி வீதிக்கு இறக்கப்பட்ட சீதைகளில் எத்தனை பேரால் தன்னைப்போல.. தனதே ஆத்மசக்தியில் வைத்த அசையாத நம்பிக்கையோடு பகலெல்லாம் ஆடைத் தொழிற்சாலையில் பாடுபட்டு உழைத்துக்கொண்டு, இரவுகளில் விட்டுப்போன படிப்பைத் தொடர்ந்து வெளிவாரி பீ.ஏ. பரீட்சை எழுதி ஒரு நல்ல நிலைக்கு வரமுடிந்திருக்கிறது? அல்லது… பிறந்தது பெண் குழந்தை என்பதால் குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட எத்தனை தமிழினிகளுக்கு சீதாவைப்போன்ற வளர்ப்புத் தாயார்கள் கிடைத்திருக்க முடியும்? விடை காணமுடியாத வினாக்களால் நொந்து போன நெஞ்சுக்கு மயிலிறகு ஒத்தடம்போல் சமையலறையிலிருந்து தமிழினியின் குரல் ஓங்கியொலித்தது. 

“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் 
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கு மிருப்பதால் 
செம்மை மாதர் திறம்புவதில்லையாம் 
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில் 
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
மகுமரம் உதய கன்னி யுரைப்பது கேட்டிரோ!” 

– மத்திய மாகாணத் தமிழ் மொழித் தினவிழாவில் முதலாம் பரிசுபெற்ற சிறுகதை- 1994.

– எருமை மாடும் துளசிச் செடியும் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: மார்ச் 2003, தமிழ் மன்றம், கண்டி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *