வீடு திரும்புதல்





(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
துக்காராம் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். ஸிட்டி பஸ்ஸின் பின் விளக்கு ஒரு செம்புள்ளியாய் வெகு தூரத்தில் அந்தர்த்தான மாகிக் கொண்டிருந்தது.

ஈ, காக்கை இல்லாத விஜனமான அகலமான ரோடு. பகல் போன்ற வெளிச்சத்தை விரயம் செய்துகொண்டிருக்கும் மெர்க்குரி வேப்பர் விளக்குகள். குளிர்ந்த காற்றுடன் சரசமாடிச் சருகுகளுடன் மலர்களையும் உதிர்க்கும் மரங்கள்.
கைக்கடிகாரத்தில் மணி பதினொன்றாகி விட்டிருந்தது… பாவம் அம்மா, சாப்பிடாமல் காத்துக் கொண்டிருப்பாள். அப்பா இருண்ட தெருவை வெறித்தபடி வெளி வராந்தாவில் நின்று கொண்டிருக்கிறாரோ, இல்லை அம்மாவிடம்போய், ‘உன் பிள்ளை பீஸ் வாங்காமல் டியூஷன் சொல்லிக் கொடுக்கத்தான் போயிருப்பான்’ என்று தொணதொணத்துக் கொண்டிருக் கிறாரோ…
இடப் பக்கம் திரும்பும் சந்தில் திரும்பி நடந்தான். மிகுந்த இடைவெளிவிட்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக இந்தத் தெருவில் அழுது வடியும் சாலை விளக்குகளின் அடக்கமான வெளிச்சம் மனசுக்கு ஏனோ இதமாக இருக்கிறது.
இரு பக்கமும் இருளில் மூழ்கிக் கிடக்கும் பங்களாக்கள். மனிதர் களின் காலடிச் சுவடுகள் தெரியாத தார் ரோடு.
இன்று வீட்டில் போய் ஏறும்போது, ஏண்டா ராமா இன்னிக்கு இத்தனை நாழி? என்று அம்மா களைத்த குரலில் கேட்கும்போது, பஸ்ஸில் ஏறுகையில் கோட்டை விட்டு விட்ட மணி பர்ஸைச் சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம்தான்; பர்ஸுக்குள் அப்படி அதிகம் ஒன்றும் இல்லை ஒன்பது ரூபாயும் சில்லறையும். இருந்தும் அபகரிக்கப்பட்டு விட்டோம் என்று ஒரு ஆற்றாமை… பஸ் வந்து நின்றதும், ஓடிப்போய் புட் போர்டில் ஒரு காலும், ரோட்டில் ஒரு காலுமாய் தொற்றிக்கொண்டு மாவலியார் போகுமா என்று கண்டக்டரிடம் கேட்க, போகாது என்று அவன் சொல்லிக் கேட்டுக் கீழே இறங்கும்போது கை சட்டை ஜேபியில் துழாவ… சூன்யம்.
நல்லவேளை, கோபாலும் ஆறுமுகமும் பஸ் ஏற்றிவிட வந்திருந் தார்கள். அவர்களிடமிருந்து சில்லறை வாங்கிக்கொண்டு அடுத்த பஸ்ஸைப் பிடிக்க முடிந்தது. உம்… இதெல்லாம் காலில் வந்த இந்த வீக்கத்தால் வந்த வினை. கொஞ்சநாள் சைக்கிள்விடக் கூடாது என்று டாக்டர் தடுத்திருந்தார்.
நடக்கும்போது காலில் லேசாய் அந்த வலி தெரிகிறது. நாள்படச் சரியாகி விடும். பயப்படத் தேவையில்லை என்றுதான் டாக்டர் சொல்லியிருக்கிறார்… இருந்தும் சமீபத்தில் புற்று நோயால் கால் துண்டிக்கப்பட்டு விட்ட தன் உற்ற நண்பன் மகாதேவனை நினைச்சு மனசில் ஒரு பயம்.
பாதி தூரம் ஆகியிருக்குமா. இதோ ரிட்டயர்ட் ஜட்ஜ் ராமபத்ர மேனோனின் வீடு. வெளி கேட்டும் முற்றமும் எல்லாம் இருளில் ஆழ்ந்து கிடக்கிறது அடைந்து கிடக்கும் கண்ணாடி ஜன்னலுக் குள்ளே அரண்ட மஞ்சள் நிற வெளிச்சம் அதோடு மெல்லிய இந்தி சினிமா இசையின் இழைகள்.
போன வாரம் இந்த வழியாக இவன் நடந்து போவதைக்கண்டு நடையில் நின்ற மேனோன் ‘என்ன ராமா, உன் சைக்கிள் எங்கே?’ என்று கேட்டார். காலில் வீக்கம் என்றபோது காலில் மட்டும் தானா என்று கேட்டு விட்டு இவன் உடம்பின் மத்திய பாகத்தை அவர் விழிகள் ஊடுருவியபோது இவனுக்கு ஆச்சரியமாய்ப் போய் விட்டது. இவன் முக பாவத்திலிருந்து விஷயத்தைப் புரிந்துகொண்டு, வா என்று விட்டு விடுவிடுவென்று அவர் உள்ளே போனார். இவனும் பின் தொடர்ந்தான். அறைக்குள் போய்க் கதவைக்கூடச் சாத்தாமல், வேட்டியை அவிழ்த்து, ‘பார்த்தாயா… இப்படி இறுக்கமாய் லங்கோட்டு கட்டிக்கணும்’ என்று மிகுந்த காரிய கௌரவத்துடன் சொன்ன நிகழ்ச்சி.
அதை நினைத்தபோது இவனுக்கு உள்ளுக்குள்ளே மூண்ட சிரிப்பின்கூட ஒரு படபடப்பும், எப்படியோ… ஓய்வு பெற்ற பின்னரும் அவர் சந்தோஷமாகத்தான் இருக்கார்… ஆனால், தன் வீட்டில்…
மறுபடியும் மனசில் அந்தப் பழைய கனம்…
அப்பாவுக்கு இப்போ எண்பது வயசிருக்காதா? துப்பறியும் நாவல்களும் சிகரெட்டுகளுமாய் அவர் இயங்கிக் கொண்டிருந்த காலமெல்லாம் போய் விட்டன. இப்போ கை கால்களுக்கு உள்ள வலு மூளைக்கு இல்லை. குட்டி போட்ட பூனையாய் வீட்டுக் குள்ளே சுற்றிக்கொண்டிருக்கிறார். பசி வரும்போது சாப்பாட்டு மேஜை முன் ஆஜர்… ஆனால், ரெண்டு நாட்களுக்கு முந்தி, திடீரென்று வெளியில் இறங்கிப் போய்விட்டார்.
நல்லவேளை, இங்கே வந்ததும், வீட்டு நடையில் நின்று கொண்டிருந்த மேனோன் கண்டு விட்டார். ‘என்ன ஐயர்வாள், இந்த நட்டுச்சி நேரத்தில் எங்கே போறீர்?’ என்று அவர் கேட்டப்போ ‘எங்க ராமன் புதுக் கார் வாங்கியிருக்கான்; இன்னிக்கு ஆபீஸிலிருந்து ராமன் வந்து ஏறுவதுக்குள்ளே கார் மட்டும் ஓடி வந்துட்டுது. அதுதான் ராமனைத் தேடிக்கிட்டு போறேன்’ அப்படீண்ணு சொன்னாராம். கடைசியில் மேனோன்தான் என்னவெல்லாமோ சொல்லிச் சமாதானப் படுத்தித் திரும்ப அவரை வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு வந்துவிட்டுப் போனார்.
இன்னம் இப்படி எத்தனைநாள் அவரும் கஷ்டப்பட்டுப் பிறத்தியாரையும் கஷ்டப்படுத்தப் போறாரோ. ஆனால், சாவு என்றால் இப்பவும் அவருக்கு அசாத்திய பயம். டாக்டர் வீட்டுக்கு வந்தால், அவர்கிட்டே ஒவ்வொரு மருந்தையும் பற்றித் தொண தொணவென்று ஏதாவது கேட்டு உயிரை வாங்கி விடுவார்.
அம்மாவும் இப்போதெல்லாம் எப்போதும் படுத்த படுக்கை தான். அவர்களை நினைக்கும்போது மனசுக்குள் ஒரு ஈரக் கசிவு. ஒன்றா, ரெண்டா? எட்டு பெற்றாள். அதில் அஞ்சு புத்திரர்கள். இப்போ மற்ற நாலு பேரும் பெண்டாட்டி பிள்ளைகளோடு பங்களா, கார், ப்ரிட்ஜ் என்று குஷாலாய்க் குடும்பம் நடத்துகிறாங்க… ரெண்டாவது மகன் மட்டும்தான் இப்படி.
தனக்கும் கல்யாணமாகியிருந்தால் தன் தமையன் தம்பிமார்களைப்போல் தன் பாட்டைப் பார்த்துக்கொண்டு தானும் போயிருப்போமா? அதனால்தானா தன் கல்யாணத்துக்கு அப்பாவும் அம்மாவும் அப்படி ஒண்ணும் பெரிய சிரத்தை எடுக்கவில்லை? அப்படிச் சொல்ல முடியுமா? தன் அண்ணன் தம்பிமார்கள் எல்லோரும் கல்யாணம் செய்து கொள்ள வில்லையா? தங்கைகளின் திருமணங்கள் நடக்கவில்லையா? தனக்குத்தான் எந்தப் பெண்ணையும் பிடிக்கவில்லை. தன் சகோதரர்களைவிட, பெண்ணின் குலம், படிப்பு, உருவப் பொலிவு எல்லாவற்றிலும் தான் பிடிவாதமாய் இருந்ததுதான் காரணமோ? இல்லை, இதெல்லாம்கூட, கல்யாணம் என்கிற போதே தன் அடி மனசில் தோன்றும் அந்தப் படபடப்பை மறைக்கப் பயன்பட்ட போர்வைகளா?
எது எப்படியோ… இன்னும் ரெண்டு வருஷத்தில் சர்வீஸிலிருந்து ஓய்வு பெற்று விட வேண்டியதுதானே. அப்பா அம்மாவுக்குப் பிறகு தன்னை யார் கவனிப்பாங்க? இதென்ன அசட்டுத்தனமான சந்தேகம்? இப்போ அப்பா அம்மாவை தான் கவனிக்கிறோமா, இல்லை அவுங்க, தன்னைக் கவனிக்கிறாங்களா?
இருந்தும் அவுங்க ரெண்டு பேருக்கும் எப்போ என்ன சம்பவிக் கும் என்று சொல்ல முடியாது. இதுக்குள்ளே ஒன்றும் நேர்ந்திருக் காது என்று கூற இயலுமா? இன்றானால் இவ்வளவு நாட்களாக இல்லாது தன் வாழ்விலே முதல் முறையாகத் தன் பர்ஸ் பிக்பாக்கெட் செய்யப்பட்டது ஒரு அபசகுனமாய்… சம்பவிக்கப் போகும் எதையோ முன் கூட்டித் தெரிவிக்கும் சூசனையாய்…
சீதோஷ்ண நிலைமைக்கெல்லாம் ஈடு கொடுக்க முடியாமல் பழுதாகி மலக்கத் திறந்து கிடந்த வெளிகேட்டைத் தாண்டும் போது நேற்று வராந்தாவில் உட்கார்ந்து கோபாலுடனும் ஆறுமுகத்துடனும் தீவிரமான வேதாந்த விசாரணையில் ஈடுபட் டிருக்கையில், இப்போ, இதோ, தான் நடந்துக்கிட்டிருக்கும் இதே இடம் வழி மெல்லத் தலை உயர்த்தி அங்குமிங்கும் பார்த்து விட்டு நிதானமாய் ஊர்ந்து சென்ற பாம்பு ஞாபகம் வருகிறது.
காலைத் தரையில் ஊன்றியது எப்படியென்று தெரியவில்லை. வீட்டுப் படியில் இவன் ஏறிக் கொண்டிருந்தான். வராந்தாவில் இருளில், வெள்ளைப் பனியன், மடக்கிக் கட்டியிருக்கும் வேட்டிக்குள் நிற்கும் அப்பா.
இவனுக்கு என்னவோ போலிருந்தது.
– 09.04.1975 – குமுதம் 03.07.1975.
– நாகம்மாவா? (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 2014, கிழக்கு பதிப்பகம், சென்னை.