விழிப்பு





(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆயிற்று. எல்லாம் முடிந்துவிடும். விரக்தி, வெறுமை வறட்சி, சூன்யம் எல்லாம் தான்…
எதிலும் அர்த்தமில்லை. பயனில்லை. பசுமையில்லை. பாழ்தான்…
இந்தப் பாலைச் சூழலில், வறண்ட காற்றுப்போல, அமைதியற்று, அலுவலற்று, வீணுக்குச் சுற்றிச்சுழன்று கொண்டிருப்பதில் அர்த்தமே கிடையாது…
வாழ்க்கையில் பிடிப்பு எதுவுமில்லை. பிடித்து வைத்துக் கொள்வதற்குப் பற்றுக்கோடும் ஒன்றுமில்லை…
‘வாழ்விலேயே ஒன்றுமில்லை. ஆழமற்ற பரபரப்பு. அர்த்தமற்ற சுழற்சி. வீண் தொல்லைகள். நிறைவேறாத- நிறைவேற முடியாத பாழுங்கனவுகள். ஏக்கப் புகையை நீளவிடும் அல்ப ஆசைகள். உளக்குமைதல், உணர்வுக் குழப்பம், உடல் வேதனைகள்…
அர்த்தமற்றவை. அவசியமில்லாதவை. பயனற்ற, பசுமையற்ற, வெறுமை.
வெற்றாய், சூன்யமாய், வறண்ட புழுதி மண்ணாய்ப் போய்விட்ட இந்த வாழ்க்கையில் நானும் உயிரோடு இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு, சாரமற்றுத் திரிந்து கொண்டிருப்பதைவிட, இதற்கு முடிவு கட்டுவதே புத்திசாலித்தனமான காரியம் ஆகும்.
இதோ முடிந்து விடும் எல்லாம்; ஒரு சில கணங்களில்.
‘விநாயகமூர்த்தி என்கிற ஒருவன் இருந்தான்’ என்று பேசப்பட வேண்டிய நிலைமை தோன்றும்…
ஹூம்! யார் பேசப் போகிறார்கள்? நினைத்துப் பார்ப்பதற்கு எவர் இருக்கிறார்கள்?
அப்படிப் பேசுவதனாலோ, நினைப்பதனாலோ இந்த இவனுக்கு இனி என்ன நன்மை ஏற்பட்டுவிடப் போகிறது?
அவசர உலகத்திலே, அர்த்தமற்ற வாழ்வில், முட்டி மோதித் திணறிக் கொண்டிருக்கும் யந்திர உலகப் பொம்மைகள் போன்ற இம் மனிதப் பூச்சிகள் மத்தியிலே, நடமாடும் ஏதோ ஒரு சாயை மாதிரி நான் சஞ்சரித்துக் கொண்டிருப்பதற்கு அவசியமும் இல்லை. அர்த்தமுமில்லை என்று தான் முடிவு கட்டியாயிற்றே! விடுதலைக்கு ஒரு குறுக்கு வழி வெறுமைக்கு முடிவு கட்டும் பயணச்சீட்டு இதோ, இதோ…
விநாயகமூர்த்தி தனக்கு முன்னே உத்திரத்திலிருந்து தொங்கிக் கொண்டிருந்த கயிற்றைப் பார்த்தான். அவன் முகத்தில் புன்னகை மலர்ந்தது.
அவன் கண்கள் அந்த அறையின் வாசல் பக்க மிதந்தன. அறைக் கதவு நன்கு அடைக்கப்பட்டு, அழுந்தத் தாளிடப் பெற்றிருந்தது. திருப்திதான்.
அவன் பார்வை ஜன்னல்களுக்குத் தாவியது. எல்லா ஜன்னல்களும் நன்றாக அடைக்கப்பட்டிருந்தன. முழுத் திருப்தி.
அவன் கீழே கிடந்த சிறிய ஸ்டூலின் மீது ஏறி நின்றான். கயிற்றை இழுத்துப் பார்த்தான். ஏற்பாடுகள் எல்லாம் திருப்திகரமாக இருந்தன.
நாற்பது வருட காலம் வாழ்ந்து பார்த்தாச்சு. வெறுமை, வறட்சி, சூன்யம் தான். இனியாவது பசுமை இருக்குமா என்று தேடிச் செல்கிறேன். இது தான் நான் எனக்கே அளித்துக் கொள்ளும் பிறந்த நாள் பரிசு!
விநாயகமூர்த்தி சிரித்துக் கொண்டான். ஒளியற்ற, மனநிறைவற்ற, வறண்ட சிரிப்பு!
கயிற்றின் சுருக்கை நிதானமாக எடுத்து, அமைதியோடு தன் கழுத்தில் மாட்டிக் கொண்டான். அவசரமின்றி,மெது மெதுவாக முடிச்சை இறுக்கினான். சரியான அளவுக்கு வந்து, கழுத்தை முடிச்சு அழுத்தி நெருக்கத் தொடங்கியதும், காலடியில் இருந்த ஸ்டூலை எட்டி உதைத்து விட்டுத் தொங்கினான்.
அவன் உள்ளத்தில் பதைபதைப்பு இல்லை. உடலில் படபடப்பு இல்லை. அவனுக்குப் பயமோ, குழப்பமோ எதுவுமில்லை. வெகு நாட்களாகச் சிந்தித்து, திட்டமிட்டு, ஒத்திகைகள் நடத்தி. இறுதியாக அவன் எடுத்துக் கொண்ட முடிவுதானே இது! பின்னே என்னி?
விநாயகமூர்த்தி தனி நபர். தனிரகமான நபரும் கூட. அவன் மற்றவர்களோடு ஒட்டிப் பழகவில்லை. அவனோடு உறவாடி, நட்புக் கொண்டாடி, சகஜமாகப் பேசிப் பழகுவது சாத்தியமில்லை என்றே மற்றவர்கள் கருதினார்கள். அதனால் அவன் ஒதுங்கி வாழ்ந்தான். பிறரால் ஒதுக்கப்பட்டு, தனியாய் வாழ்க்கை நடத்தினான்.
ஓட்டலில் சாப்பாடு, பொழுது போக்குவதற்குப் புத்தகங் கள். வேலை என்ற பெயரில் என்னவோ எழுதுவது. படம் போடுவது, அலுப்பு ஏற்பட்டால் தெருக்களில் சுற்றுவது தனி இடங்களில் உட்கார்ந்து விண்ணையும் மண்ணையும் மரத் தொகுதிகளையும் வெறிக்கப் பார்த்துக் கொண்டிருப்பது, இரவில் ஆழ்ந்து தூங்குவது – இவற்றை ஒழுங்காக, வேளை தவறாது, இயந்திர ரீதியில் செய்து கொண்டிருந்தான் அவன்.
தான் மற்றவர்களினின்றும் மாறுபட்டவன், விசேஷமானவன் என்று அவன் நம்பினான். அதனால் பிறரது வாழ்க்கைப் போக்கு, பிறர் பழக்க வழக்கங்கள் எல்லாவற் றின் மீதும் அவனுக்கு வெறுப்பும் மனக்கசப்பும் ஏற்பட்டிருந்தன. ‘தேடிச் சோறு நிதம் தின்று, சின்னஞ் சிறு கதை கள் பேசி” எப்படி எப்படியோ காலம் கழித்து, விதி முடிந்தால் சாகும் மனித பிராணிகள் மீது அவனுக்கு அனுதாபம் பிறந்ததுமில்லை. அவர்களது குறைபாடுகளையும் குணக் கேடுகளையும் கண்டு கோபமும் வெறுப்புமே கொண்டான்.
நாள் ஆக ஆகத் தனிமை அவனைச் சுற்றிலும் கண்ணுக்குப் புலனாகாத ஒரு கவசமாய்த் தொங்கலாயிற்று. தனிமையே சுமையாய், வேதனையாய் அவனை அழுத்தியது சினிமா, நாடகம், முதலியவற்றிலே அவன் உற்சாகம் காண முடிந்ததில்லை. சொற்பொழிவுகள், கலைநிகழ்ச்சிகள், பெரும் கூட்டங்களில் கலந்து கொண்டு அவன் உவகையோ, உத்வேகமோ பெற முடிந்ததில்லை. உயிரோடும் உணர்வோடும் இயங்கும் ஜனசமுத்திரத்தில் கலந்து ”மானிட சமுத்திரம் நான்” என்று கூவும் மன எழுச்சி அவனுக்கு ஒரு சமயம் கூட ஏற்பட்டதில்லை.
மாறாக, எங்கும் எப்போதும் அவன் தனிமையையே- அனுபவித்தான். ‘நான் தனி’ என்ற உணர்வு, முட்டைக்குள் ஒடுங்கிக் கிடக்கும் சிறு குஞ்சுக்குப் போர்வையாய் பாதுகாப்பாய், தனி வீடாய் அமைந்துவிடும் முட்டை ஓடு மாதிரி அவனைச் சுற்றி அருவமான ஒரு கோட்டை கட்டிக் கொண்டது. அதுவே அவனுக்கு வேலியாய் சிறையாய் அமைந்தது.
அதனால், ஜனநெரிசல் மிகுந்த ரயிலடியிலும்,கும்பல் நிறைந்த தியேட்டர்களிலும், கூட்டம் அதிகமுள்ள ஓட்டல்களிலும், மக்கள் நடமாட்டம் மிகுதியாக உள்ள வீதிகளிலும் கூட தனிமையைத் தான் உணர்ந்தான் அவன்.. தனிமை அவனது மன நோய் ஆகிவிட்டது.
எனவே, அவன் எங்கும் எதிலும் எல்லோரிடமும் வெறுமையையே காண முடிந்தது. பிறரது சிரிப்பும், கூச்சலும், குழந்தை குட்டிகளோடு பெரியவர்கள் பேசி விளையாடிக் களிப்பதும், அர்த்தமற்றதாய், பைத்தியக்காரத்தனமாய், உளறலாய், கேலிக் கூத்தாய் அவனுக்குப் பட்டன.
அவன் உணர்ச்சிகளைப் புறக்கணித்து, அறிவை வழி பட அவாக் கொண்டவன். ஆகவே, பிறரது உணர்ச்சிகளை மதிக்கவோ, சரியாகப் புரிந்து கொள்ளவோ, அவன் அக்கறை காட்டவில்லை. அவனுள் வளர்ந்த விரக்தி எங்கும் வெறுமையைக் காணத்தான் உதவியது அவனுக்கு.
இப்படி வருஷம் வருஷமாகக் கடந்து விட்டான்.சார மற்ற வாழ்க்கை, இதை சுமந்து கொண்டு, ‘நேற்றுப்போல் இன்று; இன்றுபோல் நாளை’ என்று வறண்ட பாதையில் நீண்ட பயணம் போவது வீண் வேலை என்று பட்டதனால் அவனாகவே அதற்கு ஒரு முடிவு கட்டிக்கொள்ள முன் வந்தான். அம்முடிவுக்கு வந்ததில் அவனுக்கு வருத்தம் எதுவும் கிடையாது.
ஆகையினால், விநாயகமூர்த்தி கயிற்றில் தொங்கலானான்.
வாழ்க்கையைக் கண்டு நகையாடும் மனிதனைப் பார்த்து வாழ்க்கை சிரிப்பதும் உண்டு. காலத்தை வெல்ல முயலும் மனிதனுக்குத் தோல்வி தருவதில் காலம் வெற்றி பெறுவதும் உண்டு. தனக்குச் சரியெனத் தோன்றும் விளைவைப் பெறத் திட்டமிடும் மனிதனின் எண்ணத்தையும் செயலையும் தகர்த்து விட்டு. எதேச்சையாய் ‘முடிவு’ கெக்கலிப்பதும் உண்டு.
விநாயகமூர்த்தி திட்டமிட்டுச் செயல் புரிந்த போதிலும், அவன் எதிர்பாராத விளைவு நிகழ்ந்தது.
அவன் கனத்தைத் தாங்கும் சக்தி பெற்றிராததனாலோ, உள்ளூற இற்றுப் போயிருந்ததாலோ- காரணம் எதுவாக இருந்தால் என்ன?.
கயிறு புரி தளர்ந்து, அறுந்தது.
அவன் தொபுக்கடீரென்று தரையில் விழுந்தான். அப்படியே கிடந்தான் ஒரு கணம். உடலில் அடிபட்ட இடம் வலித்தது. கழுத்தில் முடிச்சு அழுத்தியதால் வலி கண்டது. உணர்ச்சி வேலை செய்தது. அவன் கைகள் முடிச்சைத் தளர்த்தின. உடலின் பாகத்தை வருடிக் கொடுத்தன.
அவன் அந்த இடத்திலேயே உட்கார்ந்திருந்தான். அறை முகட்டைப் பார்த்தபடி. அறுந்து விட்ட கயிற்றைப் பார்த்தபடி. அறைக்குள் இருட்டு சூழ்ந்திருந்தது. காற்றுப் புக வழி இல்லாததனால் புழுக்கம் நிலவியது.
இப்போதும் அவனுக்குச் சிரிப்புதான் வந்தது. தன் செய்கை கூட ஒரு பைத்தியக்காரத்தனம் என்றே இப்பொழுது அவனுக்குப்பட்டது;
மீண்டும் வலுத்த ஏற்பாடுகள் செய்து தனக்கும் தன் தேடிக் வாழ்வுக்கும் வலுக்கட்டாயமான ஒரு முடிவைத் கொள்ள வேண்டியது அவசியம் என்று இப்போது அவனுக்குத் தோன்றவில்லை. ‘முயன்றோம். வெற்றிகரமாக முடிய வில்லை. போனால் போகிறது!’ என்றுதான் அவன் உள்ளம் பேசியது.
அந்த இடத்திலேயே அவன் முட்டைக் கட்டிக்கொண்டு சோம்பியிருந்தான். இருட்டுத்தான் அவனுக்குத் துணை இருந்தது. அப்போது நேரம் என்ன இருக்கும் என்று தெரிந்து கொள்ள வழியில்லை. அவன் சாவி கொடுக்காது போட்டு விட்டதனால், கடியாரம் மணி காட்டவில்லை.
எவ்வளவு நேரம் போயிருக்கும் என்று புரியாதவனாய், ஆயினும் நிறைய நேரம் ஆகியிருக்கும் என்றொரு உணர்வின் அரிப்புப் பெற்றவனாய், விநாயகமூர்த்தி எழுந்து நின்று சோம்பல் முறித்துக் கொண்டு, அறைக் கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தான்.
வெளியுலகில் வியாபித்துக் கிடந்த ஒளி வெள்ளம் அவன் கண்களைக் கூச வைத்தது ஒரு கணம். புதிய நாளின் பொன்னொளி தொட்ட இடத்தில் எல்லாம் அழகைத் தேக்கி, வர்ணங்களுக்கெல்லாம் தனி மினுமினுப்பு பூசி தானே ஒரு அழகாய் மிளிர்ந்து கொண்டிருந்தது
‘வெயில் கூட அழகாகத்தான் இருக்கிறது!’ என்று பட்டது அவனுக்கு.
வானம், கழுவிப் போட்டது போல், அழுத்தமான நீல நிறத்தோடு பளிச்சிட்டது. விண்ணிலும் மண்ணிலும், அவன் அதுவரை கண்டிராத அதிசயப் புதுமை இணைந்து கிடந்தது போல் தோன்றியது. இயற்கை புத்துயிரோடும் புது வனப் புடனும் காட்சி தந்து கொண்டிருப்பதாக அவன் கருதினான்.
அறைக் கதவை இழுத்துப் பூட்டிவிட்டுத் தெருவில் நடக்க ஆரம்பித்த விநாயகமூர்த்தியின் உள்ளத்தில் புதியதோர் குதூகல உணர்வு பொங்கியது. நிறைந்தது. துளும்பி வழியலாயிற்று. ”இந்த நேரத்தில் நான் உயிரோடு இருப்பதே ஒரு பெரும் பாக்கியம் என்று படுகிறது… என்ன முட்டாள்தனம் செய்ய ஆசைப்பட்டேன் நான்!’ என்று எண்ணினான்.
தானாகச் சிரித்துக்கொண்டு துள்ளல் நடையில் சென்ற அவனை வேடிக்கையாகப் பார்த்து நின்ற சிறுவன் ஒருவன், ‘குட்மார்னிங் சார்!’ என்று சலாமிட்டான்.
அப்பையனின் பரட்டைத் தலையும் அழுக்கேறிய உடலும், நேற்று என்றால், விநாயகமூர்த்திக்கு அருவருப்புத் தந்திருக்கும். ஏசல் வீசிவிட்டோ, அல்லது அலட்சியமாகவோ, தன் வழியே போயிருப்பான். இவ்வேளையில் அவ்வாறு செய்யவில்லை, அவன். ”குட்மார்னிங்! வெரி வெரி குட்மார்னிங்!’ என்று உற்சாகமாகச் சொன்னான்.
சிறுவன் குதித்துக் கொண்டு ஓடலானான். ‘ஏய் சோமு! அவர் சலாம் போட்டார்டா. என்னிடம் சண்டைக்கு வர வில்லை!’ என்று அவன் மகிழ்ச்சியோடு கூச்சலிட்டது, விநாயகமூர்த்தியின் காதிலும் விழுந்தது. அவன் சிரித்தவாறே நடந்தான்.
ஒரு வீட்டின் முன்னால் சில செடிகள் கரும் பச்சை இலைகள் ஏந்தி நின்றன. ஒரு செடியில் மூன்று பூக்கள் செக்கச் செவேல் என்று சிரிப்பைச் சிந்தின. செம்பருத்திப் பூக்கள், ஒளி வெள்ளத்தில், நீலவானின் கீழே, கரும் பச்சைச் சூழலில், செக்கச் சிவந்த பெரிய மலர்கள் மிகவும் எடுப்பாக, எழில் மயமாகக் கொலுவிருந்தது, அவனைக் கவர்ந்தது. மகிழ்வு தந்தது.
மற்றும் பல நிற மலர்கள் ஆங்காங்கே பூத்துக் குலுங்கின. இனிய காட்சிகள்.
அவற்றை ரசித்த வண்ணம் நடந்த அவனுக்கு முன்னால் ஒரு பெண், மெதுவாகச் சென்று கொண்டிருந்தாள். அவள் தோளுக்கு மேலே சின்னஞ்சிறு தலை-குழந்தை முகம் -எட்டிப் பார்த்தது. பின்னால் வந்த பெரியவனைப் பார்த்து அது சிரித்தது. சுடரொளி மிதக்கும் அழகிய கண்களும், பிறை நெற்றியும், அதற்குமேல் சுருள் சுருளாகப் புரண்டு கிடந்த கருங்கூந்தலும் அருமையான பொம்மையின் நினைப்பைத் தந்தன.
குழந்தை அவனைப் பார்த்துச் சிரித்தது. ‘மாமா, மாமா!’ என்றது.
அதன் சிரிப்பும் மழலையும் அவனைப் பரவசப்படுத்தின.
தாய் திரும்பிப் பார்த்தாள். அவளது அகன்ற விழிகளின் ஒரு ஓரத்தில் தேங்கிய பார்வையும், குழந்தையின் மகிழ்ச்சி அவளுக்கு உண்டாக்கிய ஆனந்தத்தினால் படர்ந்த முக மலர்ச்சியும் இனிய காட்சிகளாயின.
‘ஆகா, உலகம் இனியது!’ என்று முத்து உதிர்த்தது விநாயகமூர்த்தியின் மனம். ‘வாழ்வின் இனிமைகளைக் காண மறுத்து, விலகி விலகிப் போனதனால் நான்தான் பெருத்த நஷ்டம் அனுபவித்து வந்திருக்கிறேன்’ என்று அவன் எண்ணினான். அத் தாயைக் கடந்து மேலே சென்றான்.
இப்போது இனிமைகள், அழகுகள், நயங்கள் எதுவும் அவன் பார்வையில் பதுங்கி விடவில்லை. ‘ஆ! எத்தனை இன்பங்கள்! எத்தனை கோடி இன்பங்கள்!’ என்று கும்மாளியிட்டது அவன் உள்ளம்.
அவனுக்கிருந்த புத்துணர்வில் எல்லாமே அற்புதங்களாக அவனுக்குப் பட்டன. கோயில் கோபுரத்தின் பொன் கலசங்களில் பட்டுத் தெறித்த சூரிய ஒளியும், பளபளவெனத் துலக்கித் திருநீறுபூசி, குங்குமப் பொட்டிட்டு அன்னக் காவடிப் பரதேசி தூக்கிவந்த பித்தளைப் பாத்திரங்களின் மினுமினுப்பும், விரையும் கார்களில் பட்டுப் பளீரிட்டுத் தெறிக்கும் கதிரொளியும், இன்ன பிறவும் அற்புதமான கவிதைத் துணுக்குகளாகத் தோன்றின அவனுக்கு. தெருமூலையில் இருந்த ‘டீக்கடை’யில் பளிச்சிட்ட செம்புப் ‘பாயிலரும்’ கனன்று கொண்டிருந்த நெருப்பும், தேநீர் மணமும் அற்புதங்களாயின.
அவன் கடையினுள் நுழைந்து, டீ வாங்கிக் குடித்தான். அங்கிருந்தோரின் தோற்றமும் பேச்சும் வெறுக்கப்பட வேண்டியதாகத் தோன்றவில்லை. சிலரது உரையாடல் ரசிக்கக் கூடியதாகவே பட்டது.
விநாயகமூர்த்தி மறுபடியும் வீதிகளில் நடக்க ஆரம்பித்த போது, அவனது சிந்தனையும் வேகமாக இயங்கியது.
வாழ்க்கையில் துயரங்கள் அதிகமிருந்த போதிலும், அவற்றைச் சகித்துக் கொண்டு வாழ்வதில் ஒரு இனிமை இருப்பதாகத் தான் தோன்றியது. பலருடைய வாழ்க்கையையும் கவனிக்கையில் இது நன்றாகத் தெரிகிறது.
குழந்தையைக் கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்த, பெற்றோர்களும், பள்ளிக் கூடம் சென்ற சிறுவர் சிறுமியரும், சந்தோஷமாகப் பேசிச் சிரிக்கும் தம்பதிகளும், எதையோ வம்பளந்து மகிழ்ந்து போன ஒரு கிழவனும் கிழவியும்-
அவன் பார்வையில் பட்ட எல்லாக் காட்சிகளும் அவனுக்கு உனக் கிளர்ச்சி ஏற்படுத்தின.
‘இவர்கள் எல்லாம் வாழ்க்கையை வெறுக்கவில்லையே. சந்தோஷம் அனுபவிக்கத்தானே செய்கிறார்கள்? இவர்களைப் போல – இவர்களோடு சேர்ந்து – நானும் வாழ்வின் சிறு சிறு இனிமைகளைச் சுவைத்து ரசிக்கக் கற்றுக்கொள்ளாதது தான் நான் செய்த பெரிய தவறு’ என்று அவன் கருதினான்.
ரோட்டின் ஒரு ஓரத்தில் நின்று, பெரிய ரஸ்தாவில் ஓடிக் கொண்டிருந்த நாகரிக நதியின் வேக இயக்கத்தைக் கவனிப்பதில் ஈடுபட்டான் அவன்.
அவனுக்கு அருகில் ஒரு கிழவி வந்து நின்றாள்.
‘பிச்சை கேட்க வருகிறாளோ என்னவோ!’ என்றது அவன் மனம்.
அவளோ அச்சம் கலந்த நோக்குடன் ரஸ்தாவையும் அவனையும் மாறி மாறிப் பார்த்து நின்றாள்.
‘என்ன? என்ன வேணும்?’ என்று கேட்டான்.
‘அந்தப் பக்கம் போகணும் ரோட்டைக் கடந்து போகப் பயமாயிருக்கு’ என்று அவள் சொன்னாள்.
‘எப்படியும் தொலை. ரோட்டில் இறங்கி, காரில் அடிபட்டுச் சாகு, நீயெல்லாம் ஏன் இப்படித் திரியவேணும்?’ என்று எரிந்து விழக்கூடியவன்தான் அவன். நேற்று இவ் விதம் ஒருத்தி பேசியிருந்தால், அவன் அவ்வாறுதான் முணு முணுத்திருப்பான். ஆனால், இன்று அவன் உள்ளத்தில் இரக்கம் சுரந்தது. ‘நில்லு. நான் உன்னை இட்டுச் செல்கிறேன்’ என்று கூறினான், அப்படி உதவவும் செய்தான். சமயம் பார்த்து, அவளை மெதுவாக, கையைப் பிடித்து அழைத்துச் சென்று ரஸ்தாவுக்கு அந்தப் பக்கம் கொண்டு சேர்த்தான்.
அவள் கையெடுத்துக் கும்பிட்டாள். ‘நீ நல்லாயிருக்கணும். நீ இல்லைன்னு சொன்னால், நான் இதை எப்படிக் கடந்து வர முடியும்?’ என்று சொல்லிவிட்டு நடந்தாள்.
அவளுடைய நன்றி உணர்வும் வாழ்த்துதலும் அவள் உள்ளத்தைத் தொட்டன. அங்கு ஒரு மகிழ்வும் நிறைவும் ஊற்றெடுத்தன.
‘நான் இல்லாமல் போயிருக்க வேண்டியவன்தான். கயிறு மட்டும் அறுந்து போகாமல் இருந்திருப்பின் இந்த விநாயகமூர்த்தி மாஜி மனிதனாகத்தானே தொங்கிக்கொண்டிருப்பான்!’ என்ற எண்ணம் துள்ளியது அவனுள். இது ஒருவிதமான உதைப்பையும் ஏற்படுத்தியது.
‘மடத்தனம். தன்னுயிரைத் தானே கொலை செய்து கொண்டு, விடிவு கண்டுவிடலாம் என முயற்சி செய்வது மடத்தனமே தான்’ என்று அவனது சிந்தனை உறுத்தியது.. ‘வாழ்க்கைப் போராட்டத்தில் சமாளித்துக்கொண்டு…’
அவன் பார்வையைக் கவர்ந்தது-
வேகமாக ஒரு கார் வருகிறது. எதிரேயிருந்தும் கார்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஒரு சிறுவன் ரோட்டைக் கடந்து விடலாம் என்று துணிந்து ஓடுகிறான்.
‘சேச்சே, என்ன முட்டாள்தனம்!’
விநாயகமூர்த்தி வேகமாகத் தாவி, அப்பையனைப் பற்றி யிழுத்தான். சரியான சமயத்தில் கார் பிரேக் போட்டு நின்றது. பலரும் பதறினர். இஷ்டம்போல் சொல் எறிந்தனர்.
அவன், நிச்சயமான சாவை நோக்கி அவசரமாகச் சென்ற ஒரு உயிரைக் காப்பாற்றும் துடிப்புடன், அச் சிறு உடலைக் கைகளில் எடுத்து, தன்னோடு அணைத்துக் கொண்டு பத்திரமான இடத்துக்குத் திரும்பினான்.
நாகரிக நதி மீண்டும் வேகமாகச் சுழித்து ஓடியது.
‘என்னடா இப்படிச் செய்தே? செத்துப் போகிறதுக்கு இருந்தியே!’ என்று அனுதாபத்தோடு பேசினான் விநாயக மூர்த்தி. தன்னைப் பார்த்தும் இதே வார்த்தைகளைச் சொல்வதற்கு யாருக்கும் உரிமை உண்டு என்றும், ஆனால் அப்படிச் சொல்வதற்குத்தான் யாரும் இல்லை என்றும் அவன் மனம் சிறு குரல் கொடுத்தது. இந்த முரணை எண்ணியதும் அவனுக்குச் சிரிப்பு வந்தது.
‘உறங்குவது போலும் சாக்காடு உறங்கி எழுவது போலும் பிறப்பு என்கிறார்கள். நான் தூக்கத்தைத் தழுவ முயன்றேன். ஆனால் தூங்காமலே விழித்துக் கொண்டேன். மற்றவர்களிடம் அன்பு காட்டி, உதவிகள் செய்வதில் தனி இன்பம் பிறக்கத்தான் செய்கிறது’ என்று எண்ண ஓட்டம் நிகழ்ந்தது அவன் சித்த வெளியில்.
ரோட்டில் ஓடும் கார்களையும் பிறவற்றையும் பார்த்து, அவற்றிடையே சிக்கிச் சாகவிருந்ததை நினைத்து, உடல் பதறி நின்றான் சிறுவன். அவனை விநாயகமூர்த்தி குனிந்து பார்த்த சமயம், சிறுவன் தலை நிமிர்த்திப் பெரியவன் முகத்தைப் பார்த்தான். இருவர் கண்களும் சுடரிட்டன. முகம் முழு மலர்ச்சி காட்டியது.
‘மனமாரச் சிரிக்கிறபோது மனித முகம் விசேஷமான ஒரு கவர்ச்சியைப் பெறுகிறது’ என்று எண்ணினான் விநாயகமூர்த்தி. ‘இன்று நாம் புதிதாகப் பிறந்தோம். நம்ம இரண்டு பேருக்குமே இன்று பிறந்த நாள்தான்! அதைக் கொண்டாடுவோம், வாடா பயலே! ஓட்டலுக்குப் போய் ஸ்வீட், காரம், காப்பி எல்லாம் சாப்பிடலாம்’ என்று சிறுவனின் கையைப் பிடித்துக்கொண்டு பெரிய ஓட்டலை நோக்கி நடந்தான்.
சிறுவனுக்கு அவன் பேச்சு புரியவில்லை தான். ஆயினும், வயிற்றுக்கு நிறைய ஏதோ கிடைக்கப் போகிறது என்று புரிந்தது. அந்த உணர்வு அவனுக்கு ஆனந்தம் தந்தது. அவன் வாய்விட்டுச் சிரித்தான். அவனை வேடிக்கையாகப் பார்த்த விநாயகமூர்த்திக்கும் சிரிப்பு வந்தது.
– சுதேசமித்திரன் தீபாவளி மலர் – 1969.
– 1960 முதல் 1991 முடிய, வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டு, வெவ்வேறு பத்திரிகைகளில் பிரசுரம் பெற்ற கதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
– வல்லிக்கண்ணன் கதைகள் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1991, மணியம் பதிப்பகம், குறிஞ்சிப்பாடி.