விளையாட்டுக் கல்யாணம்
(1942ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
சிறுவர்கள் சிறுவயதில் அப்பா – அம்மா விளையாட்டு விளையாடுவது வழக்கம். அப்படி இரண்டு சிறுவர்கள் ஒரு சிறுமியோடு விளையாடிய விளையாட்டு, பிறகு அவர்களுடைய வாழ்க்கையிலும், விளையாடி விட்டதை சிறுகதையாக எழுதியிருக்கிறார் விக்கிரமன் அப்போது ‘வேம்பு’,

சின்னாயி என்பவள் முருகன், கந்தன் ஆகியோருடன் சிறு வயதில் விளையாடிவிட்டு, அவர்களில் முருகனைத் தன் கணவனாக அடைகிறாள். பிறகு முருகன் பிழைப்புத் தேடி வெளிநாடு சென்றபோது அங்கு இறந்து போனதாகச் செய்தி வரவே, சில நிர்ப்பந்தங்கள் காரணமாகக் கந்தனுக்கு அவள் இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட நேரிடுகிறது.
ஆனால், இறந்து போகாமல் உயிரோடு ஊர் திரும்பும் முருகன், சின்னாயி கந்தனின் மனைவியாக வாழ்வதைக் கண்டுவிட்டு மனம் புழுங்கி ஆற்று நீரில் மூழ்கித் தன்னை மாய்த்துக் கொள்கிற கதையே இந்தச் சோகச் சித்திரம்.
விளையாட்டாகத் தொடங்கிய வாழ்க்கை விபரீதமாக முடிந்து விடுகிற ஒரு கருத்தை வைத்து விக்கிரமன், அந்த சோகத்தைப் பொங்கி வரும் ஆற்று வெள்ளம் போல எழுதியிருக்கிறார். எழுத்தில் முருகனின் தாபத்தை முழு வீச்சுடன் பார்க்க முடிகிறது.
இளம் வயதில் ‘வேம்பு’ என்னும் இயற்பெயர் கொண்டு எழுதப்பட்ட அந்தச் சிறுகதையை ‘மாலதி’ மாதமிருமுறை இதழுக்கு ஆசிரியராக இருந்த நான் வெளியிட்டேன். அன்றே வேம்புவின் எழுத்திலிருந்த ஆழ் கருத்துகளும் வேகமும் இன்று விக்கிரமனாக மாறியிருக்கும் அவரிடம் காணப்படுவது ஆச்சர்யமில்லை.
அந்தச் சிறுகதையை முதலில் வெளியிட்ட பெருமை எனக்கு இருந்து வந்தாலும் வேம்பு – விக்கிரமனாகி, விஸ்வரூபம் எடுத்து இருப்பதைக் கண்டு நான் மேலும் பெருமை அடைகிறேன்.
– நவீனன்
விளையாட்டுக் கல்யாணம்
முருகனும், கந்தனும், சின்னாயியும் விளையாடிக் கொண்டிருந்தனர், அவர்கள் மூவரும் தான் சேர்ந்து எப்பொழுதும் விளையாடுவார்கள். அவர்களுடைய விளையாட்டு ‘கல்யாண’ விளையாட்டுதான். முருகன் ‘அப்பா’வாகவும் சின்னாயி ‘அம்மா’வாகவும் கந்தன் விருந்தினராகவும் விளையாடுவார்கள்.
அன்று முருகன், கந்தன், சின்னாயி விளையாடிக் கொண்டிருக்கையில் சுந்தனுக்குக் கோபம் வந்தது. “தினமும் முருகன்தானா அப்பாவாக இருக்கணும்! நான் இருக்கக்கூடாதா?” என்று கோபமாகக் கேட்டான். உடனே முருகனுக்குக் கோபம் வந்தது. அவனுடைய கன்னத்தில் பளீரென ஓர் அறைவிட்டான்.
கடைசியில் சின்னாயி இருவரையும் சமாதானப்படுத்தினாள். ‘இருவருக்கும்’ மனைவியாக இருக்கிறேன் என்று சமாதானப் படுத்தினாள்.
ஊரில் எல்லாரும் முருகனையும், சின்னாயியையும் தகுந்த ஜோடி என்பர். ஆனால் கிழவன் அவர்கள் இருவரையும் பார்த்துப் பெருமூச்சு விடுவான்!
வருடங்கள் பல கழிந்தன.
முருகன் சின்னாயியின் கணவனானான். கல்யாணமாகி இரு வருடங்களுக்கெல்லாம் ஒரு குழந்தையும் பிறந்தது. குடும்பமும் வலுத்தது. குடும்பத்தைக் காப்பாற்ற முருகனால் முடியவில்லை. ஆதலால் முருகன் அடுத்த ஊரான மதுராந்தகம் சென்று கங்காணியின் வீடு சென்று வேலையகப்படுமாவெனக் கேட்டான்.
முருகனை அவன் பார்த்து “நான் சொல்லுகிறபடி செய்தால் மாதம் 10 ரூபாய் சம்பளத்தில் ஒரு வேலை தருவேன்” என்றான்.
முருகனும் சந்தோஷத்தால் ஒப்புக் கொண்டான். முருகன் மலேயா கிளம்பினான். சின்னாயி கண்ணீரை ஆறாய்ப் பெருக்கினாள்.
ஆண்டுகள்ஐந்து சென்றன. 1941ஆம் ஆண்டு ஜப்பானும் மலேயாவைத் தாக்கியது. மலேயா தேசத்திலுள்ள ஜனங்களும் தேயிலைத் தோட்டத்தின் எஜமானர்களும் ஓட்டம் பிடித்தனர்.
சின்னாயி தன் நாயகனிடமிருந்து கடிதமே வராத காரணத்தையறிய கங்காணியின் வீட்டை நோக்கிக் கிளம்பினாள். கங்காணி மகா பிகுவுடன், “ஓ! உன் புருஷனா? அவன் ஓடி வரும்போது கப்பலிலிருந்து கடலில் வீழ்ந்து மாண்டான்” என்று அலட்சியமாகக் கூறினான். அதைக் கேட்ட சின்னாயி துக்க சாகரத்தில் மூழ்கினாள் என்று கூறவும் வேண்டுமா?
விளையாட்டுச் கல்யாணத்தில் பங்கெடுத்துக் கொண்ட கந்தன், சின்னாயியை அடைவதற்கு முன்பு பிரயத்தனம் செய்தானல்லவா? முருகன் போனவுடள் தன்னுடைய அன்பு மொழிகளால் அவளுடைய தூய மனத்தைக் கலைத்தான்!
அவளும் அப்பாதகனின் வலையில் சிக்கினாள். கந்தன்சின்னாயியை அழைத்துக் கொண்டு ஊருக்கு அப்பாலுள்ள அஞ்சலையாற்றின் மத்தியிலுள்ள சிவன் திட்டில் குடியேறினான்.
மலேயாவுக்குச் சென்ற முருகனோ, ஜப்பான் படையெடுத்தவுடன் ஒருநாள் திடீரென்று தப்பித்துக் கொண்டு கால்நடையாகப் பிரயாணம் செய்து ரங்கூனையடைந்து, அங்கிருந்து நடந்து கல்கத்தாவை அடைந்தான்.
அப்பொழுது கருணைமிக்க கவர்ன்மெண்டார் அநாதைகளுக்கு உணவளித்து, போஷித்து, அவர்களை இலவசமாக ரயிலில் ஏற்றினார்கள். அவர்களில் முருகனும் ஒருவன்.
முருகன் தன் சொந்த ஊரையடைந்தான்.
அவன் போகும்போது மனத்தில் பின்வருமாறு எண்ணிக் கொண்டே சென்றான்:
‘நாம் நம் அன்பு மனைவியைக் காணப் போகிறோம். நம் குழந்தையையும் பார்ப்போம். அப்போது அவளிடம் கடிதம் போடாததற்கு மன்னிப்புக் கேட்போம். அப்பொழுது அவள் பரவாயில்லையென்பாள்…’
ஊர் சமீபித்தது. முன்பு இருந்த வீட்டையடைந்தான். முருகன் இப்பொழுது முன் முருகனாயில்லை. சிங்கப்பூர் உடையுடுத்தி மீசை, தாடி வளர அசல் முஸ்லிம்போல் காணப்பட்டான்.
ஆதலால் ஒருவராலும் அவனைக் கண்டு கொள்ள முடியவில்லை.
முருகன் பழைய வீட்டையடைந்தவுடன் அங்கு யாரும் இல்லாததை அறிந்தான். அங்கு ஆப்பம் விற்கும் ஊர் வம்பி என்று புகழப்படும் சுப்பிக் கிழவியைப் பார்த்து, “ஆயா! சின்னாயி எங்கே?’” என்று கேட்டான்.
அதற்கு அவள், ‘அவளா? படு மோசக்காரி! புருஷன் இறந்து விட்டான் என அறிந்தவுடன் கந்தனை இழுத்துக் கொண்டு ஓடி விட்டாள்” என்றாள்.
முருகனுக்குத் தலை சுழன்றது. அவனுடைய மனக் கோட்டைகள் இடித்து வீழ்ந்தன. அப்பொழுது மணி இரவு ஏழு. பேசாமல் அஞ்சலை குதிக்கரையை அடைந்தான்.
அப்பொழுது சிவன் திட்டில் ஒரு புதிய குடிசையைக் கண்டான். உள்ளுக்குள்ளிருந்து விளக்கு வெளிச்சம் வந்தது. அந்த நிசப்தமான இருளில் ‘கலகவென சின்னாயியின் சிரிப்பொலி கேட்டது. திடுக்கிட்டான்.
முன்னாயியைக் கடைசி முறை பார்க்க குடிசையின் அருகில் சென்றான். அங்கு அவன் சின்னாயியையும், தன்னுடைய குழந்தையையும், கந்தனையும் கண்டான்.
”ஏ அஞ்சலையாறே! காத்தாயி தேவியே! முன்பு விளையாட்டுக் கல்யாணத்தில் இருவரை சின்னாயி மணவாளனாக அடைந்தாள். இந்த வாழ்க்கை விளையாட்டிலும் இருவரோடு வாழ்க்கை நடத்துகிறாள். முதலில் என்னுடன், பிறகு இவனுடன். இது என்ன உலகமா? இருள் சூழ்ந்த நரகமா? இதோ நானே இப்பூலோக நரகத்தை விட்டுச் செல்கிறேன். சின்னாயி! கந்தா உங்களுக்குக் கடவுள் அருள் புரியட்டும்” என்று கூறிக் கொண்டே, ‘யானைப் பள்ளம்’ என்று கூறப்படும் அஞ் சலையாற்றின் ஒரு பாகத்தில் குதித்தான்.
இதைக் காணச் சகியாது போல் சந்திரனும் மேகங்களுக்கிடையில் மறைந்தான்.
அஞ்சலையாற்றுத் தண்ணீரும் அவனுடைய கனத்தைத் தாங்காது கரையின் மேல் தண்ணீரை வாரித் தெளித்தது.
– 1942, மாலதி.
– செவ்வந்திப்பூ சிங்காரி, கலைமாமணி விக்கிரமன் எழுதிய சமூகச் சிறுகதைகள், தொகுதி-1, முதல் பதிப்பு: 2010, யாழினி பதிப்பகம், சென்னை.