விதி துரத்தும் பாதையிலும் வேதம் வரும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 21, 2025
பார்வையிட்டோர்: 2,559 
 
 

இரவு மணி பத்தைத் தாண்டி விட்டது. சரவணன் தன் அருமை நண்பன் ஆதவனை எதிர்பார்த்து அறைக்குள் தவம் கிடந்தான். அதுவும் வாடகை அறை தான், இருவருமாக சேர்ந்து வெள்ளவத்தையில் ஒரு பெரிய அறையை வாடகைக்கு எடுத்துக் குடியிருந்தார்கள். அவனுக்கு கொட்டாஞ்சேனையில் உள்ள ஒரு கல்லூரியில் ஆசிரியர் வேலை அவன் ஒரு கணித ஆசிரியன் இன்னும் கல்யாணமாகவில்லை. ஆதவன் வெளிநாட்டு அமைச்சில் பெரும் பதவியில் இருக்கிறான். அவனுக்கு ஊரில் பெண் பார்த்துக் கொண்டிருப்பதாக சொல்லியிருந்தான்.

இன்று வேலை நாளானபடியால் சரவணன் கல்லூரி பணி முடிந்து நேரத்துடனேயே வீடு வந்து சேர்ந்து அவன் வரவை எதிர்பார்த்து வாசலில் தவம் கிடக்கிறான்.

சமையல் முதற்கொண்டு எல்லாம் அந்த அறைக்குள் தான். அவனுக்கு ஓரளவு சமைக்கவும் தெரியும். ஆதவனோ அறை முழுவதும் சாமன்களாய் இறைந்து கிடந்தன. சமைப்பது, முதற் கொ மறு துருவம். தேனீர் கூட ஊற்றத் தெரியாத, மகா மக்கு. அவனைக் கட்டிக் கொண்டு எந்தப் பெண் கஷ்டப்படப் போகிறாளோ தெரியவில்லை. கல்யாணமென்பது கத்தி மீது நடப்பது போல. சறுக்கினால், அவ்வளவு தான் தலை என்ன வாழ்வே போய் விடும். இதைப் பற்றி அதிகமாக அலட்டிக் கொள்கிறவன் ஆதவன் மட்டும் தான். சரவணன் இதில் எந்த எதிர்பார்ப்புமில்லை. விட்டால், சாமியாராகி விடுவான், போலவும் தோன்றியது. அப்படிப்பட்ட அவன் முன்னால் தான் சடுதியில் ஒரு விபரீத நாடகம் அரங்கேறியது. அவன் கண் விழித்துக் காத்திருந்த போது ஆதவன் வீடு வந்து சேர நடுச் சாமமாகி விட்டது.

வருவது போல் அவன் வெகுவாக நிலை குலைந்து போய் போதை ஏறிய மயக்கத்துடன், வரும் போது இவ்வளவு நேரமும் வேலையா அவனுக்கு? அல்லது தடம் புரண்டு போய் வருகிறானா? அவன் வந்த, கோலம் சிவப்பேறிக் கிடந்த கண்களே ஒரு புதிய செய்தியைச் சொல்ல நடை இடறியது வாசலிலேயே அது நிகழ்ந்த தருணம் சரவணன் ஓடி வந்து அவனை தாங்கிப் பிடித்து அணைத்தவாறே, உள்ளே வரும் போது கனத்த மெளனம் நிலவிற்று.

அவன் மது குடித்து இதுவரை பார்த்ததில்லை. இன்று போதை ஏறி வந்திருப்பது போல் முற்றாக ஆளே மாறிப் போயிருந்தான் இங்கு என்ன நடக்கிறது என்று, ஊகித்து அறிய முடியாதவனாய் அவன் கைகளைப் பற்றிக் கொண்டு குரல் நடுங்க சரவணன் கேட்டான்.

என்ன குடிச்சிட்டு வந்தியா?

நான் அந்தப் பக்கம் போவேனா?

அப்ப குடிச்ச மாதிரித் தெரியுதே. தள்ளாடுகிறாய், முகமும் சிவந்து கிடக்கு . இது ஏன்?

சிவப்பு விளக்கு எரிகிற பக்கத்துக்கு போயிட்டு வாறன் . இதைக் கேட்டு சரவணன் திடுக்கிட்டான் என்ன சொல்கிறான் இவன் ? கல்கிசையிலை அப்படி ஒன்று இருப்பதாக இவனே பலமுறை சரவணனிடம் கூறியிருப்பதை நினைவு கூர்ந்த போது அவன் கேட்டான்.

விளையாடாதை. உண்மையைச் சொல்லு அங்கு தான் போனியா?

ஏன் போகப்படாதே ?

சீ! இதைச் சொல்ல உனக்கு வெட்கமாக இல்லை ஒரு வேசியோடு படுத்துப் புரண்டு விட்டு வாறியே1 அப்படியென்ன அவசரம் உனக்கு?

இந்த வரிசையிலை நான் மட்டுமே ? இந்த அசிங்கத்தை சொல்லவே நாக் கூசுது எல்லோரும் பகல் வேஷக் காரர்கள் தாம் இதிலே தான் நானும் சேர்த்திட்டு போறன் எனக்கென்ன வந்தது?

ஓமோம் ந நீ அங்கை போய் சகதி குளிச்சிட்டு வாறதை மூடி மறைச்சு நீ கல்யாணம் கூட செய்யலாம் உன்ரை களங்கத்திலை கரைஞ்சு போய் தானும் கெட்டுப் போவாளே ஓர் அப்பாவிப் பெண் . அவளை ஏமாத்தி பெரிய யோக்கியன் மாதிரி நீ கல்யாணம் கூட செய்து கொள்வாய் காலம் இதை விழுங்கி விடும் உனக்கென்ன வந்தது ?இதைக் கேட்டு ஆதவன் சிரித்தபடியே சொன்னான்.

ஓம் எனக்கென்ன வந்தது? இருந்து பார் நானும் வாழ்ந்து காட்டத் தான் போறன். ஊரிலையிருந்து அம்மா கடிதம் போட்டிருக்கிறா எனக்கு பெண் பார்த்திடாவாம். வாற கிழமை எனக்குக் கல்யாணம். நீயும் வாறியா?

இதைக் கேட்டு ரத்தம் உறைய சரவணன் ஒன்றும் பேசத் தோன்றாமல் மெளனம் வெறித்து உள்ளூர பொங்கிச் சரிந்தான்.

எந்த முகத்தை வைச்சுக் கொண்டு அங்கை நான் வாறது? பழுதுபடாத பளிங்கு வார்ப்பாகவே வாழ்க்கையை எண்ணிக் கொண்டாடுகிற என் கண்முன் நடந்தேறிய இந்த அசிங்கத்துக்கு ஒரு சாட்சி புருஷனாய் இருந்து கொண்டு ஓர் அப்பாவிப் பெண்ணைப் பலிக்கடாவாக்கி நீ வாழப் போகிற வாழ்க்கைக்கு துணை போகிற பாவம் கனவில் கூட எனக்கு வராது இதையே மனதிற்குள் ஒரு வேதமந்திரமக உச்சரித்துக் கொண்டு, அவன் பேச வாய் திறந்த போது ஆதவன் பாய் விரித்து துயில் கொள்கிற காட்சி கண்ணை எரித்தது ஒன்றுமே நடவாதது போல் அவன் உறக்கமே அவனை உயிர் உருகி துன்பப்பட வைத்தது.

இன்று நடந்த கதை அவனது அநாகரிக அதர்மச் செயல் குறித்து பேச இங்கு பட்டை தீட்டிய வைரம் போல் சரவணன் ஒருவனே இருக்கிறான் ஓடிப் போய் அவன் கல்யாணத்தையே நிறுத்தி விடலாமென்றால் ஏன் என்ற கேள்வி வரும் உண்மையைச் சொல்லப் போனால், பிறகு தகனம் தான் ஆதவன் சும்மா விடுவானா? ஏன் வீண் வம்பு ? சும்மா இருந்தே வேடிக்கை பார்க்க வேண்டியது தான் விதி வலிது.

கண் முன்னாலேயே அவன் சாஸ்வத ஒரு சத்திய புருஷனாய் சரித்திரமாகிக் கொண்டிருந்தான் வெளிநாட்டு அமைச்சில் வே லை பார்த்ததால், கல்யாணாமென்ன சொர்க்கமே அவன் காலடிக்கு வந்தது நாடு நாடாக,நேர்ந்த பயணத்தின் கடைசி முடிவாக குடும்பம் செழிக்க, பணத்தில் கொழுத்து புரளும் ஒரு கனடாவாசியாகவே அவன் மாறிப் போயிருந்தான் மூன்று பெண்கள் அவனின் அழுக்கை ப்பூசிக் கொண்டு பிறந்தாலும் அதொன்றும் அறியாமல், அவர்களும் மணமுடித்து வெளிநாட்டு சொர்க்க மண்ணில் தான் அவர்களின் காலடிச் சுவடுகள் கனதியாய்பதிந்தன இதை விட இன்னொரு மகிமை அவனுக்கு நாடகம் பாட்டு எல்லாம் , வருகின்ற ஒரு வரட்சிக் கலைஞன் அவன் ஒரு யுகம் கழித்து அவன் கதைவெறும் சதைக்காக வாழ்ந்து முடித்த வாழ்வின் செல்லரித்த பக்கங்களோடு ஊரில் சரவணன் அவனை சந்திக்க நேர்ந்தது அவன் வீட்டிற்கு முன்னால் ஒரு சமயம் சபை கூடி அவன் பாடல் அரங்கேற்றம் களை கட்டி நடக்க இருந்த போது மனம், கேளாமல் சரவணனும் அங்கு வந்திருந்தான்.

அவன் சமூகப் பற்றாளன் ஓரு பழுத்த தேசியவாதி வயதாகிவிட்டாலும் இந்த குணங்கள் மாறவில்லை அவன் அப்பழுக்கற்ற தங்கம் பார்வையின் தீட்சண்யம் குறையாமல், மேல் நோக்கி பார்க்கும் போது மேடை கச்சேரி முடிந்து கைகளை வீசியவாறே, ஒரு கம்பீர புருஷனாய் ஆதவன் அவனை நோக்கி வருவது தெரிந்தது.

துருவ இருப்பில் இருந்தவாறேஅவனின் பொய்மையின் நிழலே நேரில் வந்து உறுத்துவது போ;லவல்ல சுட்டெரிப்பது போ;லவே திடுக்கிட்டு சரவணன் விழித்துப் பார்த்த போது ஒன்றூமே நடவாத பாவனையில் அவன் குரல் தெளிவாக வந்தது.

எப்படி இருக்கிறாய் நண்பா?

ஏதோ இருக்கிறன் உள்ளூக்கை சகதி குளிச்சு புரையோடிப் போனாலும் வேஷம் கட்டி ஆடுகிற பக்குவம் வந்து விட்டால் வாழ்க்கை வெற்றி சங்கு ஊதிக் கொண்டு, அமோகமாகவே நடந்தேறும் இதை கண் வெறிக்க பார்த்த இருள் தான் எப்பவும் எனக்குள் இந்த சூனிய இருப்பிலை கரை ஏறி விட்ட களிப்பு த் தான் எப்பவும் எனக்குள் வேறு ஏப்படி நான் இருக்க வேண்டுமென்று, நீ சொல்ல வாறாய் ?

இதைக் கேட்டு ஆதவனின் முகம்லேசாகக் கறுத்து இருளோடிப் போனது எப்ப வேண்டுமானாலும் இது நடக்கலாம் இவன் நினைச்சால், என் வாழ்க்கை மாளிகை தரைமட்டமாகவே உடைந்து சிதறிப் போக நேரிடும் அவ்வளவு அசிங்கமானவன் நான் புழு மேஞ்ச உடம்பை நக்கிய பாவம் என்னை துரத்தி துரத்தி அடிக்குது இது இவன் வழியாகவே வரக் கூடும் என் சத்தியம் மறைஞ்சு போன இருளுக்கு இவன் ஒருவனே சாட்சி இவனை கழுத்தை நெரிச்சுக் கொன்று போட்டாலென்ன?

என்ன யோசிக்கிறாய் ஆதவா?

ஒன்று மில்லை.

மறைக்காதை உன்ரை பயம் எனக்கு விளங்குது எப்பவும் உண்மை நெருப்பு மாதிரி நான் வாயைத் திறந்தால் உன்ரை ஆட்டம் குளோஸ் அது ஒரு முடிவுக்கு வந்திடும் உள்ளூக்குள்ளை உன்ரை இருபை அல்லது நாற்றத்தை அறிந்தால் அவ்வளவு தான் நீ தூக்கி வீசிய பந்து மாதிரி ஆகி விடுவாய் உன்ரை குடும்ப அங்கத்தினரே உன்னைக் காண வெட்கப்படுவினம் அழுவினம். அப்பா இவ்வளவு கேவலமானவரா என்று நினைக்கத் தோன்றும் அப்படியே உடைஞ்சு போவினம் இதெல்லாம் எப்ப நடக்கும் தெரியுமோ? நான் வாய் திறந்தால், மட்டும் தான் இது சாத்தியம் . என்னை அப்படி நினைக்காதை/ பிறர் வாழ்வதைப் பார்த்து எனக்கு ஆனந்தக் கண்ணீர் மட்டுமே வரும். பிறர் அழுவதைப் பார்த்து குளிர்காய்கிற ஆள் நான் என்று என்னை நினைக்காதை சந்ததி பெருக்கி நீ யல்ல குடும்பம் முழுவதும் உச்சத்தில் வாழ்ந்து கொடி பறக்க நின்றால் அதைப் பார்த்து சந்தோஷம் கொண்டாடுகிற முதல், ஆளாய் நானே இருப்பேன் பழமும் தின்று கொட்ட போடத் தெரிந்த எனக்கு வாழ்க்கையை அழிச்சுப் பழக்கமில்லை.

அவன் சொல்வது முழுவதையும் சிரத்தையோடு செவிமடுத்தவாறே, புல்லரித்துப் போய், கண்ணீர் விட்டான் ஆதவன் இது வாழ்க்கை எதிர்மாறான நம்ப முடியாத, மறை பொருளாகிப் போன ஒரு பக்கம் வாழ்க்கையை சூறையாடியே பழகிப் போன மிகவும் புத்தி பேதலித்த பாமர ஜனங்களுக்கு முன்னால், ,இதோ ஒரு மகத்தான தெய்வம் ஆதர்ஸ புருஷன் அன்பே வழிபாடாக கரம் குவித்து தலை வணங்கியே பழக்கப்பட்ட அவனுக்கு முன்னால், இருளில் கறுத்துப் போன ஒரு வெறும் மனிதனாய் தன்னை உணர்க்கையில் மூச்சு முட்டிய துயரம் வந்து மனதைக் கவ்வ அவனுக்குப் பிறகு பேச வரவில்லை. அழுகை தான் வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *