விட்டில் பூச்சிகள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 26, 2025
பார்வையிட்டோர்: 2,309 
 
 

(1999ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-23

அத்தியாயம் – 22 

எத்தனையோ நாட்களுக்கு பிறகு அன்றுதான் வீடு முழுக்க மகிழ்ச்சியில் மூழ்கியிருந்தது. அம்மாவின் முகத்தில் இனம் புரியாத நிம்மதி. மது ஆபீசுக்கு இரண்டு நாள் லீவு போட்டாள். புதன்கிழமை காலை ரொம்ப நாளைக்கு பிறகு அரட்டையடித்தபடி சாப்பிட்டாள். மஞ்சு நிறைய ஜோடிக்கடிக்க, மதுவுக்கு புரைக்கேறியது. அம்மா அவள் தலையில் தட்டினாள். 

சாப்பாடு ஆனதும் மூவரும் கடைக்குப் போனார்கள். 

மஞ்சுவுக்கு மிக அழகான பட்டுப்புடவை வாங்கினார்கள். மஞ்சுவே தேர்ந்தெடுத்தாள். பாலுவிற்கும் உயர்தர வேட்டியும் ஷர்ட்டும் வாங்கினார்கள். மது தானும் ஒரு புடவை வாங்கிக் கொண்டாள். அம்மா வெள்ளி விளக்கும், சந்தனக் கிண்ணமும் குங்குமச் சிமிழும் வாங்கினாள். 

கடைத்தெருவில் பழ வகையறாக்களும் நிறைய பூவும் வாங்கினார்கள். ஆட்டோ ஒன்று பிடித்து வீடு வந்தார்கள். வந்ததுமே அம்மா மாலை பலகாரங்கள் தயாரிக்க முனைந்து விட்டாள். மஞ்சுவும் மதுவும் சிரிப்பும் அரட்டையுமா அம்மாவுக்கு உதவினார்கள். 

“யப்பா… நம்ம வீட்ல இப்டி ஒரு பேச்சும் சிரிப்பும் சந்தோஷமும் திரும்பி வருமான்னு ஆயிடுச்சு மஞ்சு. அம்மாவின் கண்கள் பளபளக்க மது அம்மாவை கட்டிக் கொண்டாள்.” 

“இனி எப்பவும் சந்தோஷம்தாம்மா” என்றாள். 

மைசூர்பாகும், திரட்டுப்பாலும் ரெடியாயிற்று. கடையிலிருந்து தரமான மிக்ஸர் வாங்கி வைத்திருக்கிறது. வந்தவுடன் சுடச்சுட ரவா கிச்சடி செய்ய அனைத்தும் ரெடியாக வைத்திருந்தது. பீல்டரில் டிகாஷன் இறங்கிக் கொண்டிருந்தது. 

“டைமாய்டப் போவுது மது. ரெண்டு பேரும் முகம், கை, கால், கழுவிக்கிட்டு புதுப்புடவையை உடுத்திக்கங்க” அம்மா சொல்ல மது மணியைப் பார்த்தாள். 

“இன்னிக்கு நான்தான் உனக்கு டிரஸ் பண்ணி விடப் போறேன் மஞ்சு.” 

“அப்டின்னா உனக்கு நான் பண்ணுவேன்.” 

“அப்புறம் நாம ரெண்டு பேரும் சேர்ந்து அம்மாவுக்கு பண்ணுவோம் சரியா?” 

“ஆமா… எனக்கென்னடி?” அம்மா சிரித்தாள். 

மது புதுப்புடவையை எடுத்து மஞ்சுவிடம் நீட்ட, மஞ்சுளா மறுத்தாள். 

“நா இப்போ கட்ட மாட்டேன்.” 

“பின்ன எதுக்கு வாங்கியிருக்கு?” 

“நிச்சயதார்த்தம் முடிஞ்சதும் கட்டிப்போம். இப்போ வேணாம்.” 

“அவங்க வேற புடவை வாங்கிட்டு வருவாங்க மஞ்சுக்கா.” 

“போ மது, எனக்கு சிம்பிளா ஒரு புடவை கட்டிக்கத் தான் தோணுது. எனக்கு உன் புடவை ரொம்ப பிடிச்சிருக்கு. அதை எனக்கு கொடு. நீ வேணா பட்டு கட்டிக்க.” 

“அது சரி எனக்கா கல்யாணம்?” 

“ஏன் இதைக் கட்டிக்கற வேளை கல்யாணம் வரக் கூடாதா?” 

“பாலு சார் என்ன சொன்னார் தெரியுமா? உங்க கல்யாணத்துக்கு பிறகு முதல்ல ஒரு ஆளைப் பார்த்து கட்டி வெச்சு என்னையும் விரட்டப் போறாறாம்.” 

“இப்டி ஒரு மாப்பிள்ளை கிடைக்க இந்த வீடு பாக்கியம் செய்திருக்கணும்” அம்மா நெகிழ்ந்தாள். 

கடைசியில் புதுப்பட்டை யாரும் கட்டவில்லை. தீபாவளிக்கு வாங்கிய பட்டுப்புடவையை மஞ்சு கட்டிக் கொள்ள, மது புதுப்புடவையை கட்டிக் கொண்டாள். 

ஈரத்துணியில் சுற்றிவைத் திருந்த ஜாதிமல்லி நன்கு மலர்ந்திருந்தது. வாசனை வீடு முழுக்க பரவியது. மது சாமிக்கு கொஞ்சம் போட்டு விட்டு அக்காவின் தலை நிறைய பூ வைக்க, மஞ்சு தங்கையின் தலையில் மீதிப் பூவை வைத்தாள். தன் பீரோ திறந்து மதுவுக்கு தன் நகைகளை எடுத்து போட்டாள். 

“ப்ளீஸ்…எனக்கா இப்போ நிச்சயதார்த்தம்? நீ போட்டுக்க.” 

“ஏண்டி அக்கா கல்யாணத்துக்கு நீ நகை போடக் கூடாதுன்னு யார் சொன்னாங்க” 

மஞ்சு சொல்ல அம்மாவும் ஆமோதித்தாள், இருவரில் யார் பெண் என்பது தெரியாதவாறு இருவரும் ஒருவரை ஒருவர் அலங்கரித்துக் கொண்டதை பார்க்க அம்மாவுக்கு சந்தோஷமாயிருந்தது. 

அம்மாவையும் நல்ல புடவை கட்ட வைத்தார்கள். 

மஞ்சு டேப் ரெக்காலர்டரில் நாதஸ்வர இசையை ஒலிக்க விட்டாள். 

சரியாக ஐந்து மணிக்கு வந்தார்கள். பாலுவும், அவன் மாமா மாமியும். 

வீடு பரபரப்பாயிற்று. மது அவர்களை வரவேற்று அமரச் செய்தாள். அம்மா போர்த்தின தலைப்போடு அடுக்களை வாசலில் நின்றாள். 

“நீங்களும் உக்காருங்கம்மா. இது அந்தக் காலமில்ல. அனாவசிய மரியாதை வேண்டாம்” பாலுவின் மாமா சொல்ல அம்மா கூச்சத்தோடு மறுத்து விட்டாள். 

“பாலு எல்லாம் சொன்னாள். எனக்கு ரெண்டு பொண்ணுதான். பாலுதான் எங்களுக்கு பிள்ளை மாதிரி. அவன் விருப்பம்தான் எங்க விருப்பமும். பெண்ணை வரச் சொல்லுங்க. நல்ல நேரம் போறதுக்குள்ள தட்டை கையில் கொடுத்துடறோம்.’ 

மது ஓடிப் போய் அக்காவை அழைத்து வந்தாள். மஞ்சு கைகூப்பி வணங்கினாள். 

”உக்காரும்மா. உன்னைப் பத்தி எல்லா விவரமும் பாலு சொன்னான்.” 

மஞ்சு நிமிர்ந்து பார்த்தாள். “எல்லாம்னா? என்ன சொன்னான்.” 

“எல்லாம்னா எல்லாம்தாம்மா. எங்கிட்ட எதையும் மறைக்கல. தப்பு செய்யறது. மனித சுபாவம் தாயி! இதே எம் பொண்ணு செஞ்சிருந்தா? அவளை அப்படியேவா விட்ருவேன். நடந்ததை மறந்துடுன்னு புத்தி சொல்லி வேற ஒரு நல்ல ஆளைப் பார்த்து எல்லா உண்மையையும் சொல்லி கட்டி வைக்கத்தான் பார்ப்பேன்.” 

“இதெல்லாம் இப்போ எதுக்கு சார்?” 

“அப்டியில்லம்மா. கல்யாணம்னு நடந்தப்புறம் நீ யாரைப் பார்த்தும் அனாவசியமா பயப்படத் தேவையில்ல. குத்த உணர்ச்சியோடயும் நீ இருக்க வேண்டாம்னு சொல்ல வந்தேன்…ஏற்கனவே எங்க வீட்ல ஒரு பொண்ணு பட்ட அவஸ்தை எல்லாம் போதும். பாலு இப்டின்னு விஷயம் சொன்னப்போ உண்மையிலேயே நாங்க ரொம்ப சந்தோஷப் பட்டோம் மஞ்சு. நீயும் பழசையெல்லாம் மறந்துட்டு வாழணும். புது வெள்ளம் பழசை அடிச்சுக்கிட்டு போய்டணும்.” 

“இ… இதெல்லாம் இப்போ எதுக்கு சொல்றீங்க?” 

“ஏம்மா…நாங்க சொன்னதுல ஒண்ணும் தப்பில்லையே?” 

“தப்பில்லைங்க. ஆனா அதுக்கு அவசியமும் இல்லேன்னு சொல்ல வரேன்.” 

மஞ்சு சொன்னது அவர்களுக்கு புரியவில்லை. 

“பாலு சாரை கட்டிக்கப் போறது நானார்ந்தா நீங்க சொல்றதெல்லாம் சரிதான். ஆனா அவரை கட்டிக்கப் போறது நா இல்ல மதுதான்.” 

வீடு ஸ்தம்பித்தது. மது சிலையாய் நின்று விட்டாள். 

அத்தியாயம் – 23 

“அக்கா என்ன இது… உனக்கென்ன பைத்திய…” 

“இல்ல மது, பைத்தியம் பிடிச்சிருந்தது இப்போதான் சரியாச்சு. பாலு சார்தான் சரி செய்தார். அதிர்ச்சில ஸ்தம்பிச்சு போயிருந்த என்னை இயல்புக்கு இயல்புக்கு கொண்டு வந்துட்டார். இனிமே என் ஓட்டம் நிக்காது. இனிமே எனக்கு எதுவும் ஆகாது. மறுபடியும் பழையபடி உத்தியோகம் பார்க்கற மனத்திடம் எனக்கு வந்துடுச்சு. பாலு சார் கிட்ட இப்போ நான் கேக்க விரும்பறது அவர் வாழ்க்கைல ஒரு இடம் இல்ல. அவர் ஆபீஸ்ல ஒரு இடம்.” 

“நீ என்ன சொல்ற மஞ்சு” பாலு அவளை உற்றுப் பார்த்தபடி கேட்டான். 

“நீங்க ரொம்ப உயர்ந்தவர் பாலு சார்… ஆனா நா… நா எந்த விதத்திலும் உங்களுக்கு பொருந்தி வர மாட்டேன். எனக்கேற்பட்டது விபத்தில்ல. நானே தெடிக்கிட்ட சீரழிவு. நா ஜாக்கிரதையார்ந்திருந்தா எவனும் என்னை ஏமாத்தியிருக்க முடியாது. டிபத்த தகப்பனை மதிக்கல. தாயை மதிக்கல. நாலு காசு பார்க்க ஆரம்பிச்சதும் அப்பா பட்ட கஷ்டமெல்லாம் எனக்கு மறந்து போச்சு. அவரை அலட்சியப்படுத்தி வேதனைப்பட வெச்சேன். நான் என் சுகம்னு சுயநலமியா ஆனவ நான். கற்பனை சுகத்துலயே மிதந்தவ. கனவு நாயகனை கைபிடிக்கறதே என் லட்சியம்னு தப்பு கணக்குப் போட்டுட்டேன்.” 

“அப்பா பார்த்த நல்ல வரனை தூக்கியெறிஞ்சேன். தலைக்கனம் பிடிச்சு அலைஞ்சேன். தப்பான ஆளை காதலிச்சேன். என் கட்டுப்பாட்டை இழந்து எல்லை மீறினேன். இப்போ ஏமாந்து நிக்கறேன். இதுல எல்லாமே என் தப்புதான். இந்த தப்புக்கு தண்டனை வேணும்னு நா நினைக்கறேன். என்னைக் கல்யாணம் செய்துக்கறேன்னு சொன்னது உங்க நல்ல மனசைக் காட்டுது. இப்படி ஒருத்தரைக் கட்டிக்கப் போறவ சந்தேகமில்லாம கொடுத்து வெச்சவதான். ஆனா அதுக்கான தகுதி எனக்கு துளியும் இல்ல.” 

“அதே நேரம் இந்த வீட்டுக்கு உங்களை விட நல்ல மாப்பிள்ளை கிடைக்கவும் முடியாது. அந்த வகையல உங்களை இழக்கவும் நா விரும்பல. நீங்க மதுவைக் கட்டிக்கிட்டா நா இன்னும் அதிக சந்தோஷப்படுவேன். எனக்கு கடசி வரை ஒரு மாரல் சப்போர்ட்டா நீங்க இருக்கணும்னு நா விரும்பறேன். நா இழந்த தன்னம்பிக்கையை எனக்கு மீட்டுக் கொடுத்தவர் நீங்கதான். எனக்கு புது வாழ்வும், உயிரும் கொடுத்திருக்கீங்க. அந்த வகையல நீங்க சாதாரண மனிதரில்ல பாலு. எனக்கு தெய்வம் மாதிரி தெய்வத்தை கட்டிக்க முடியாது. பூஜிக்கத் தான் முடியும்.  கட்டிக்கற தகுதியும் பரிசுத்தனமும் எனக்கு இல்லவும் இல்ல. எப்டி பார்த்தாலும் மதுதான் உங்களுக்கு பொருத்தமானவ.” 

“தயவு செய்து தட்டை அவகிட்ட கொடுங்க. எனக்கு அவளோட வேலை மட்டும் கொடுங்க. அப்பாவைத் தான் கோட்டை விட்டுட்டேன். அட்லீஸ்ட் அம்மாவையாவது கடைசி வரை சந்தோஷமா வெச்சுக்க வேண்டியது என்னோட கடமை. இனிமே உயர உயரத்தான் பறப்பேன். நிச்சயம் தாழ்ந்து போக மாட்டேன்.’ 

“கல்யாணம்தான் வாழ்க்கைன்னு நா நினைச்சு காலம் போயிடுச்சு. என் இழப்பை நா வேற விதத்துல ஈ செய்யணும்னா சமூகத்துல என் திறமையை வெச்சு நா உயர்ந்த இடத்துக்கு வரணும். அதுதான் உண்மையான வெற்றியாக எனக்கு அமையும். அந்த வெற்றி எனக்கு கிடைக்க, நீங்க ஒரு நல்ல நண்பரா இருந்து எனக்கு ஊக்கமும் தைரியமும் கொடுக்கணும்னு விரும்பறேன்.” 

மஞ்சு சொல்லி முடிக்க வீடு பிரமித்தது. பாலு அவள் உணர்வுகளை மதிக்க விரும்பினான். மாமாவிடம் கண்களால் பேசினான். மஞ்சு மதுவை இழுத்து வந்து பாலுவின் அருகில் நிறுத்தினாள். மாமா பட்டுப்புடவையும் பழங்களும் வைத்த நிச்சயத்தாம்பூலத் தட்டை மதுவிடம் நீட்ட மது கை நடுங்க பெற்றுக் கொண்டாள். மஞ்சு சந்தோஷத்தோடு பாலுவின் கரம் பற்றி குலுக்கினாள். 

“நன்றி பாலு சார்” என்றவள் விழிகளில் மகிழ்ச்சியும் சேர்ந்து ஜொலித்தது. 

(முற்றும்)

– விட்டில் பூச்சிகள் (நாவல்), முதற் பதிப்பு: 1999, கண்மணி வெளியீடு, சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *