விட்டில் பூச்சிகள்





(1999ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-23
அத்தியாயம் – 19
”உங்களுக்குத் தெரியாது மஞ்சு. பொதுவா நா பெண்களோட பேசவே தயங்குவேன். மது ரொம்ப டீஸன்ட்டான பொண்ணு. அதனால் அவகிட்ட மட்டும் ரெண்டொரு வார்த்தை பேசுவேன். மத்தபடி பெண்கள்னாலே எனக்கு அலர்ஜி.”

ஏன்? என்பது போல மஞ்சு அவனை பார்த்தாள்.
“என் பிரண்டு ஒருத்தன் ஒரு பெண்ணை உயிருக்குயிரா காதலிச்சான். அவளுக்காக உயிரையும் விடத் தயாரா இருந்தான். ஆனா அந்த பொண்ணு பொழுது போக்குக்காக காதலிச்சிருப்பான்னு நினைக்கறேன். ஒரு பெரிய பணக்காரனை மாப்பிள்ளையா பார்த்ததும் இவனை விட்டுட்டு அவனைக் கட்டிக்கிட்டா. அதுலேர்ந்தே எனக்கு பெண்கள்னா பயம்.”
“நோ… ஆண்தான் நம்பிக்கை துரோகம் செய்யறவன்.”
“பெண் ஏமாந்தா ஆண் ஏமாற்றுக்காரன். ஆண் ஏமாந்தா பெண் துரோகி. மொத்தத்துல காதல்ல யார் வேணா ஏமாறலாம். ஆணும் சரி, பெண்ணும் சரி. அதை வெச்சு மொத்த பெண்களுமே மோசம்னு சொல்லிட முடியாதுன்னு மதுவைப் பார்த்ததுக்கு பிறகுதான் தெரிஞ்சுது. இப்போ உங்களைப் பார்த்த பிறகு என் அபிப்ராயம் முழுக்கவே மாறிடுச்சு. உங்களை மாதிரி ஒரு பெண்ணை காதலிச்சிருந்தா என் பிரண்டு ஏமாந்திருக்க மாட்டான்னு தோணுது.”
மஞ்சு அவனை திகைப்போடு பார்த்தாள். அவள் கண்கள் கலங்கியது.
“ஏன் உங்க கண்ணு கலங்குது? நா சொன்னது சரிதானே? முதல் பார்வையிலேயே நல்லவன்னு நம்பி மனசை பறி கொடுக்கறதெல்லாம் ராமனுக்கும் சீதைக்கும் தான் சரிப்படும். இது கலியுகம்ங்க. இங்க நிஜ முகங்களை விட முகமூடியணிஞ்ச முகங்கள் தான் அதிகம். அந்த உள்முகத்தை பார்க்க தெரிஞ்சவங்க ஏமாற மாட்டாங்க. என் பிரண்டுக்கு அது சாத்தியப்படல. ஏமாந்துட்டான்.”
“நிஜம்தான்…” மஞ்சு முணுமுணுத்தாள். “உங்க பேர்?”
“பாலு.”
”உங்களுக்கு ஒரு முகமா, ரெண்டு முகமா?’
பாலு சிரித்தான். ”அதை நீங்க இல்ல சொல்லணும்? என்னோட பழகினாதானே அதை கண்டுபிடிக்க முடியும்? நீங்க மதுவோட சிநேகிங்கறதால இனிமே எனக்கும் சிநேகிதிதான். வில் யூ அக்செப்ட் மை பிரண்ட் ஷிப்?”
அவன் கேட்க அவள் அதிர்ந்தாள். அதிர்ச்சி அவன் கேட்டதால் அல்ல. மதுவின் சிநேகிதி என்று அவன் சொன்னதால். சட்டென்று சிரித்தாள்.
“நா மதுவோட அக்கா மிஸ்டர் பாலு” என்றாள். பாலு இப்போது திகைத்து நின்றான்.
அத்தியாயம் – 20
மது வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தாள். இவ்வளவு நேரம் மஞ்சு ஒருவரிடம் முகம் கொடுத்து பேசியதுதான் வியப்புக்கு காரணம். அதுவும் ஒரு ஆணிடம். அப்படி என்ன பேசுகிறார் இந்த பாலு? மது தான் அங்கே போகலாமா, கூடாதா என்று தயங்கும்போதே பாலு அவளை அழைத்தான்.
“வாங்க மது. உங்க சிஸ்டர் உங்களை விட படு பிரில்லியண்ட் தெரியுமா?”
மது அவனை திகைப்போடு பார்த்தாள்.
“நா நினைச்சேன் இவங்க உங்க பிரண்டுன்னு. அப்புறம் தான் சொல்றாங்க உங்க சிஸ்டர்னு.”
மது தலைகுனிந்தாள்.
அதற்கு பிறகு சுமார் ஒரு மணி நேரம் பல பொது விஷயங்கள் பற்றி மஞ்சுவிடம் பேசினான். அவள் கருத்துக்களை கேட்டான். அவள் சொன்னதும் மனம் விட்டு பாராட்டினான். அவன் பாராட்டியபோது அவள் முகம் மலர்ந்தது. “ஓகே கிளம்பலாமா, டைமாயிடுச்சு” என்று அவன் எழுந்தபோது அவள் முகம் வாடியது.
“இவரை நம்ம வீட்டு கூட்டிட்டு வாயேன் மது” என்று அவள் சொன்னபோது வியப்பின் உச்சிக்கே சென்றாள் மது. பாலுவை நன்றியோடு பார்த்தாள்.
பாலு விடைபெற்றுச் சென்றான்.
அதன் பிறகு ஒரு வாரம் கழித்து மதுவோடு அவர்கள் வீட்டிற்கு சென்றான் பாலு. பேச்சு மெல்ல மெல்ல மாறி காதலுக்கு திரும்பியபோது மஞ்சுவின் முகம் சுருங்கியது.
”உங்களுக்கு காதல் அனுபவம் உண்டா மஞ்சு?”
பாலு ஒன்றுமே தெரியாதது போல் கேட்க, மஞ்சுவின் கண்கள் குபுக்கென்று பொங்கியது. பாலு பதறுவதுபோல் நடித்தான்.
“என்னாச்சு மஞ்சு?”
“சொல்லுங்க மஞ்சு. உங்க மனசுல என்ன கவலை?”
அவன் கேட்டதும் மஞ்சு வேகமாய் எழுந்து உள்ளே ஓடினாள்.
பாலு அறைவாசலில் வந்து நின்றான்.
“புரியுது மஞ்சு, யார் கிட்டயோ நீங்க ஏமாந்திருக்கீங்க. அதனால என்ன… விட்டுத் தள்ளிட்டு புதுசா ஒரு வாழ்க்கையை அமைச்சுக்கிட்டு சந்தோஷமா இருக்க வேண்டியது தானே?”
மஞ்சு அவனை சுட்டெரித்து விடுவதுபோல் பார்த்தாள். பிறகு பாய்ந்து வந்து அவன் சட்டையை பிடித்து உலுக்கினாள்.
“எப்டிடா எப்டி? எவ்ளோ சுலபமா சொல்ற? இனிமே என்னை எவடா கட்டுவா? அந்த பொறுக்கி ராஸ்கல் நாசம் பண்ணின இந்த உடம்பை இனிமே எவன் தொடுவான்? நீ தொடுவயா? சொல்லு… நீ என்னைக் கட்டிப்பயா?”
“மஞ்சு… என்ன இது…” மது பதற, அம்மா கையை பிசைந்தாள்.
பாலு நிதானமாக அவள் கையை எடுத்துவிட்டான். அவளை அமைதியாகப் பார்த்தான்.
“ஓகே மஞ்சு. கட்டிக்க நான் தயார். ஆனால் ஒரு நிபந்தனை. பழசை எல்லாம் நீ மறக்கணும் சரியா?”
மஞ்சு மட்டுமல்ல, மதுவும் பலமாக அதிர்ந்தாள். அம்மா நம்ப முடியாமல் அவனைப் பார்த்தாள்.
“நா உங்களை எவ்ளோ தூரம் நம்பறது பாலு?” மது மறுநாள் அவனை ஆபீஸில் சந்தித்து கேட்டதும் பாலு சிரித்தான்.
“ஸ்டண்ட் அடிக்கறேன்னு தோணுதா?”
“அப்டியில்ல… ஆனா… எப்டி பாலு சார்? எனக்கு ஒண்ணும் புரியல.”
“மஞ்சு என்ன சொன்னாங்க?’
“அவ எதுவுமே பேசல. பிரமை பிடிச்சாப்போல இருக்கா.”
“உண்மையாத்தான் சொல்றேன் மது. மஞ்சுவைக் கட்டிக்க எனக்கு முழு சம்மதம்.”
“ஏன் பாலு சார்.. உங்களுக்கு வேற பெண்ணா கிடைக்க மாட்டாங்க? அதுவுமில்லாம” மது தயங்கி நிறுத்தினாள்.
“சொல்லு மது. எதுவா இருந்தாலும் ஒளிவு மறை வில்லாம பேசிக்கறது நல்லதுதானே!”
“இன்னிக்கு ஏதோ ஒரு ஆவேசத்துல சொல்வீங்க. நாளைக்கு அவளை குத்திக் காட்டினீங்கன்னா அதுக்கப் புறம் அவளை காப்பாற்ற யாராலயும் முடியாது.”
“சத்தியமா குத்திக் காட்ட மாட்டேன் மது.”
“இது தியாகமா இல்ல ஏதாவது காரணம் இருக்கா பாலு சார் சார்?”
பாலு ஒரு வினாடி அமைதியானான். பிறகு “காரணம் இருக்கு மது” என்றான்.
மது அவனையே பார்த்தாள்.
“எனக்கு ஒரு அழகான அக்கா இருக்கா மது. என்னை விட ரெண்டு வயசுதான் பெரியவ படிச்சவ. புத்திசாலி அப்பா அவளுக்கு சகல சுதந்திரமும் கொடுத்திருந்தார். பெண்ணுன்னு மட்டம் தட்டி வளர்க்கல. அப்படிப்பட்ட அக்கா ஒருத்தனை காதலிச்சா. அப்பாகிட்ட தன் காதலைப் பத்தி சொன்னா. அப்பா எதிர்க்கல. உடனே அவங்களைப் பார்த்து பேசி கல்யாணத்தை நிச்சயம் பண்ண சம்மதிச்சார். கல்யாணத்துக்கு நாளும் குறிச்சாச்சு. நிச்சயதார்த்தம் தட புடலா நடந்துது. அந்த தைரியத்துல அக்கா அவனோட அடிக்கடி வெளிய சுத்தினா. பிக்னிக் போனா…”
“அப்டி போன ஒரு சமயத்துல அவளை ரொம்ப வற்புறுத்தி தைரியம் கொடுத்து அவளை அனுபவிச்சிருக்கான் அவ காதலன். கல்யாணத்துக்கு இன்னும் பத்து நாள்தானே இருக்குன்ற தைரியத்துல அக்காவும் சம்மதிச்சிருக்கா. ஆனா அதுக்கப்புறம் அவன் போக்குல திடீர்னு ஒரு மாற்றம். அக்காவை சந்தேகப்பட ஆரம்பிச்சான். இதுக்கு முன்னால எத்தனை பேர்னு குத்திக்காட்டி பேசினான். அக்கா அதிர்ந்து போயிட்டா. சரி அப்டி பேசினாலும் போகட்டும். கல்யாணத்துக்கு பிறகு அவனை சரிகட்டிக்கலாம்னு அக்கா நினைச்சா. ஆனா அந்த ராஸ்கல் கல்யாணத்தன்னிக்கு வரவேல்ல. ஊரே கூடியிருக்க மாப்பிள்ளையை காணோம். உன்னைக் கட்டிக்க எனக்கு இஷ்டமில்லன்னு ஒரு துண்டுச்சீட்டு மட்டும் வந்தது. அன்னிக்கு அக்காவுக்கு ஏற்பட்ட அவமானம். எங்க குடும்பத்துக்கு ஏற்பட்ட அவமானம்… அதை விவரிக்கவே முடியாது மது. அக்கா கோழையில்ல. ஆனா இந்த அதிர்ச்சியை அவளால் தாங்கிக்க முடியல. மஞ்சுவை மாதிரிதான் ஒரு அறைக்குள்ளேயே முடங்கிப் போயிட்டா. அவ மனசை மாத்த நாங்க பட்டபாடு கொஞ்ச நஞ்சமில்ல. ஆனா அவ மாறவேயில்ல. அறையை விட்டு வெளிய வரவே விரும்பல. அவ பேச்சு, சிரிப்பு, சாப்பாடு, தூக்கம், ஆரோக்கியம் எல்லாமே கொஞ்சம் கொஞ்சமா போச்சு. நாலு வருஷத்துல எலும்புக் கூடாயிட்டா. அந்த கண்றாவியைப் பார்க்க முடியாம அப்பா மாரடைப்பு வந்து காலமாயிட்டார். அவருக்கு பின்னால அம்மா. இப்போ அக்கா சாகக் கிடக்கா. இப்பவோ அப்பவோன்னு அவ உயிர் ஊசலாடிக் கிட்டிருக்கு. வீட்ல வெச்சு பார்த்துக்க முடியாம ஒரு நர்ஸிங் ஹோம்ல சேர்த்திருக்கேன். எனக்கு கல்யாணம்னு ஒண்ணு நடந்தா ஆசீர்வாதம் பண்ண வேண்டியவ அவ ஒருத்திதான். அவளும் போயிட்டா நா அனாதை. எங்கக்காவை மாதிரி மஞ்சுவும் ஆகக் கூடாது மது. ஏமாந்து போன எல்லா பெண்களையும் என்னால கட்டிக்க முடியாது. ஒருத்தரை கட்டிக்கலாம் இல்லையா? அந்த ஒருத்திதான் மஞ்சு.”
மது மிகவும் நெகிழ்ச்சியோடு அவன் கரங்களைப் பற்றிக் கொண்டாள். “நீங்க ரொம்ப உயர்ந்தவர் பாலு சார்.”
“இன்னிக்கு சாயங்காலம் உங்க வீட்டுக்கு வந்து மஞ்சுவை பெண் கேட்பேன் மது.”
“அப்போ நா அரை நாள் லீவு போட்டுட்டு போலாமா?”
“தாராளமா.”
மது மிகவும் சந்தோஷமாக ஒரு மணிக்கு புறப்பட்டாள் வீடு போய் சேரும் வரைதான் சந்தோஷம் எல்லாம்.
அத்தியாயம் – 21
ஒரு டஸன் ஆப்பிள், ஆரஞ்சு, மல்லிகைப் பூ, கல்கண்டு இத்யாதிகளோடு மதுவின் வீட்டுக்கு பாலு போனபோது வீடு மிக மிக அமைதியாக இருந்தது. அம்மா ஒரு மூலையில் அழுது கொண்டிருக்க மஞ்சு தன் படுக்கையில் சுருண்டிருந்தாள். மது மட்டும் சோகமாக அவனை வரவேற்றாள்.
“என்னாச்சு மது.”
”கல்யாணத்துக்கு அக்கா சம்மதிக்க மறுத்துட்டா பாலு சார்… ஒரே ரகளை.”
“நீ நகரு… நா பேசறேன்.”
“யாரும் என்னோட பேச வேண்டாம். அவரை போக சொல்லு மது” மஞ்சு அவன் குரல் கேட்டு கத்தினாள்.
பாலு உள்ளே போனான். அவள் அறையில் நுழைந்து கதவை சார்த்தினான். மஞ்சு பயத்தில் விறைத்துப் போனாள்.
“இப்ப உனக்கென்னாய்டுச்சு மஞ்சு? நீ நல்லாதானே இருக்க? எதுக்கு கல்யாணம் வேண்டான்னு சொல்ற?”
மஞ்சு அவனை வெறித்தாள்.
“எனக்கு இஷ்டமில்ல?”
“அதான் ஏன்?”
”கல்யாணத்துக்கு இனி நா லாயக்கில்லா தவ. ஒரு பொறுக்கி கிட்ட ஏமாந்து போனவ,”
“அந்த குற்ற உணர்ச்சியை உடைப்புல போடு மஞ்சு. கற்புன்னு எதுவுமே இல்ல. அப்டி இருந்துதுன்னா அது ஆணுக்கும்தானே உண்டு. உன்னை கெடுத்தவன் பரிசுத்த மானவனாய்டுவானா?”
“ஆனா உலகம் எங்களைத்தானே கேவலமா பார்க்குது?”
“அதுக்கு காரணம் நீங்கதான் மஞ்சு. உன்னை அனுபவிச்சவன் உன்னால என்ன செய்ய முடிஞ்சுது? தப்பு செய்தவன் அவன். ஆனா தண்டனை உனக்கா? நல்லா யோசிக்க பார் மஞ்சு. இதுவும் ஒரு விபத்துதான். சில விபத்து எதிர்பாராம ஏற்படும். சிலது நாமா ரிஸ்க் எடுத்து வரவழைச்சுக்கறது. எந்த பெண்ணும் விரும்பி கெட்டுப் போறதில்லை. ஒரு நம்பிக்கையில தான் தன்னை கொடுக்கறா. ஏமாற்றம்ங்கறது எத்தனையோ விதத்துல வருது.”
“பணம்,பொருள், நகை, வீடு வாசல், நிலம்னு எத்தனையோ ஏமாந்து போறோம். அத மாதிரி இதுவும் ஒரு ஏமாற்றம். இதுக்காக முடங்கிப் போய் உட்கார்ந்துடலாமா? பணம் போயிட்டா மறுபடி சம்பாதிக்கற தில்லையா? நகை போயிட்டா மறுபடி வாங்கறதில்லையா? கற்பு கற்புன்னு உங்களுக்கு நீங்களே தண்டனை கொடுத்துக்கறதாலதான் உங்க கற்போட விளையாடறதே ஆண்களுக்கு வாடிக்கையா போச்சு. உனக்கு ரெண்டு சாய்ஸ் தரேன் மஞ்சு. உனக்கு சாமர்த்தியமும் துணிச்சலும் இருந்தா உன்னை கெடுத்தவன் மனசை மாத்தி கல்யாணம் பண்ணிக்க. இல்லாட்டி மறுபடியும் வேலைக்குப் போ. உன் கால்ல நில்லு. பிரைட்டா இருக்கப் பார். அது போதும்.”
மஞ்சு திகைத்தாள்.
“அதெப்டி… அவன் கல்யாணமானவன்.”
“அப்போ மறந்துடு… எல்லாத்தையும் மறந்துடு. உன் உடம்புல ஒரு நிமிஷத்துக்கு எத்தனை செல் அழியுதுன்னு தெரியுமா உனக்கு? ஒரு வருஷத்துக்கு முந்தி இருந்த தோல் முழுக்க இப்போ அழிஞ்சிருக்கும். அழியறது கண்ணுக்கு தெரியாது. இப்போ இருக்கற தோல் புது தோல் புரியுதா மஞ்சு. அவன் தொட்ட தோல் அழிஞ்சு புதுசு வந்திருக்கும். நமக்கு தெரியாம நாம் அழியறோம். நாம புதுசா உருவாவறோம் மஞ்சு.”
“வெறும் நினைவுகளை வெச்சுக்கிட்ட எதுக்குவேதனைப் படணும்? தேவையில்லாத திசுக்களும் செல்களும் அழிக்கப் படணும். இல்லாட்டி உடம்பு நாறிடும். வளர்ச்சியும் இருக்காது. அதே மாதிரிதான். புத்தியிலிருக்கற வேண்டாத நினைவுகளை நம்மை உறுத்தி வேதனை படுத்தற குப்பைகளை எடுத்து வெளிய வீசப் பழகிக்கணும். இப்டி முடங்கிப் போக நீ பிறக்கலை. உன் மூளை அற்புதமானது. எவ்வளவு படிப்பு படிச்சு தனக்குள்ள அது அறிவா சேமிச்சு வெச்சிருக்கு. அதெல்லாம் அப்டியே அழிஞ்சு போகற துக்கா நீ படிச்ச? கெட்டது உடம்புதான்னா ஏன் மூளைக்கும் சேர்த்து தண்டனை கொடுக்கற? உடம்புக்கு வேணா தண்டனை கொடு.”
“மூளையை ஏன் உறைய விட்டு சித்ரவதைப் படுத்தற? அதனோட ஆக்கபூர்வமான செயல்களை ஏன் தடுக்கற? அது செய்யக் கூடிய செயல்களை செய்ய விடறதுதானே நியாயம். உன் மூளையைக் கொண்டு கிரியேடிவா நீ எவ்வளவு செய்யலாம்? எவ்வளவு பேருக்கு பயன்படறாப் போல ஏதாவது செய்யலாம்? இப்டி விட்டத்தை வெறிச்சு பார்த்துக்கிட்டிருக்கவா உனக்கு இறைவன் மூளையை கொடுத்தான்? இப்டி முடங்கி கிடக்கறது படைப்புக்கு நீ செய்யற துரோகம் மஞ்சு. எவ்ளோ நம்பிக்கையோட உன்னை இறைவன் படைச்சிருப்பான்! அவனுக்கு நம்பிக்கை துரோகம் செய்யலாமா? அப்புறம் உன்னை கெடுத்தவனுக்கும் உனக்கும் என்ன வித்யாசம். அவன் ஒரு விதமா உன்னை ஏமாத்தினான்… நீ இன்னொரு விதமா தெய்வத்தை ஏமாத்தற.”
மஞ்சு திகைத்தாள். அவன் சொன்னதெல்லாம் அவளை வேரோடு புரட்டுவது போலிருந்தது.
“கல்யாணம்தான் வாழ்க்கைன்னு நா சொல்ல வரல மஞ்சு. பழையபடி நீங்க இயல்பா இருக்கேன்னு சொல்லுங்க. உங்களை நான் கல்யாணத்துக்கு வற்புறுத்த மாட்டேன். என்னை கல்யாணம் பண்ணிக்கறதும் மறுக்கறதும் உங்க இஷ்டம். அதுல தலையிட யாருக்கும் உரிமையில்ல. பட் உங்க புத்தியை நல்ல காரியங்களுக்கு உபயோகப்படுத்துங்க. ஆக்டிவா இருங்க. மற்றவங்களுக்கு கவலையும் பாரமுமா இருக்காதீங்க. உங்களுக்கு எவனோ கொடுத்த கஷ்டத்தை நினைச்சுக்கிட்டே உங்க குடும்பத்துக்கு நீங்க கஷ்டம் கொடுக்காதீங்க. நா கிளம்பறேன். நீங்க எப்போ சரின்னாலும் எங்க ஆபீஸ்ல உங்களுக்கு ஒரு நல்ல வேலை காத்திருக்கும். அதோட நீங்க விருப்பப் பட்டா கல்யாண மாலையும் காத்திருக்கும். காதல்ங்கறது பூ மாதிரி மஞ்சு. ஒரு செடில ஒன்றுக்கு மேல பூ மலரக் கூடாதா என்ன? ஒரு பூ இருக்கும் போது வேணாம். அட்லீஸ்ட் ஒரு பூ வாடிப் போச்சுன்னா இன்னோன்னு பூக்கலாம் இல்லையா? இது இயற்கைதானே. கற்பு கற்புன்னு கத்திக்கிட்டு இயற்கையை ஏன் அடக்க முயற்சிக்கறீங்க? இயல்பா இருக்க முயற்சிசெய்ங்களேன்.”
பாலு அதற்கு மேல் அங்கிருக்கவில்லை. வேகமாக வெளியேறினான்.
“அந்த பிள்ளை சொன்னதையெல்லாம் கேட்ட இல்ல? இனிமேலாவது நீ மாறுவயாடி” அம்மா கேட்க, மஞ்சு முதன் முறையாக தாயின் மடியில் விழுந்து அழுதாள்.
“இவரைவிட ஒரு நல்ல புருஷன் உனக்கு கிடைக்க மாட்டார் மஞ்சு. சொந்த வாழ்க்கையின் அனுபவம் அவரை இவ்ளோ தூரம் பண்படுத்தியிருக்கு. தயவு செய்து யோசிச்சு நல்ல முடிவுக்கு வா.”
மது தன் பங்குக்கு தானும் புத்தி சொன்னாள்.
அழைப்பு மணி சத்தமிட எழுந்து சென்று கதசைத் திறந்தாள்.
“ஹலோ ஆர்த்தி. என்ன ஆச்சரியம். உள்ளே வா” மது முகம் மலர்ந்து வரவேற்றாள்.
“ஒரு சந்தோஷ விஷயம் மது. எனக்கு கல்யாணம். அடுத்த ஞாயிறு. என் காதலில் ஜெயிக்கப் போறேன். உனக்கு இன்விடேஷன் கொடுத்துட்டுப் போக வந்தேன். ரொம்ப எளிமையான கல்யாணம். ஒன்லி சம் பிரண்ட்ஸ். தட்ஸ் ஆல்.”
மது அவளை அக்காவுக்கும் அம்மாவுக்கும் அறிமுகப்படுத்தினாள்.
ஆர்த்தி போனதும் மஞ்சு ஏதோ யோசனையில் ஆழ்ந்தாள்.
“இவளும்தான் காதலித்தாள். நாமும்தான் காதலித்தோம். ஆனால் அந்த பெண் தன் காதலில் வெற்றி பெற்றதை போல என்னால் ஏன் பெற முடியவில்லை? என் காதல் தவறா? ஒரு நல்ல ஆணை நான் காதலிக்க வில்லையா? அல்லது அவன் மீது அதீதமான நம்பிக்கை வைத்து அவனிடம் என்னை இழந்ததனால் தோற்று விட்டேனா? ஆண்கள் அப்படித்தான் இருப்பார்கள். பெண்ணல்லவா உணர்ச்சிகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருகக வேண்டும். இருவரும் தவறு செய்தாலும் இழப்பு பெண்ணுக்கு தானே? ஆதிகாலம் முதலே இதுதானே பெண்ணின் நிலை.”
“என்ன மஞ்சு யோசனை?” மது கேட்க மஞ்சு கலைந்தாள்.
“பாலு சார்க்கு என்ன பதில் சொல்லப் போற நீ?”
“அவரை பெண் பார்க்க பெரியவங்களோட வரச் சொல்லு மது.”
மஞ்சு சொல்ல, அம்மா, மதுவின் முகம் குப்பென்று மலர்ந்தது. மது, அக்காவை கட்டிக் கொண்டாள்.
கல்யாணத்திற்கு அக்கா சம்மதித்து விட்ட விஷயத்தை மறுநாளே பாலுவிடம் சந்தோஷமாக சொன்னாள்.
“என்னிக்கு வீட்டுக்கு வரீங்க பாலு சார்?”
பாலு நாட்காட்டியை பார்த்தான்.
“அம்மா அப்பா போயிட்டாலும் எனக்கு உறவுன்னு சொல்லிக்க விழுப்புரத்துல எங்க மாமா மாமி இருக்காங்க மது. நா இப்பவே மாமாக்கு போன் போட்டு பேசி விஷயத்தை சொல்லிடறேன். மாமாவோட சவுகர்யம் கேட்டுக்கிட்டு என்னிக்குன்னு உனக்கு சொல்றேன்.”
மது மகிழ்ச்சியோடு வெளியில் வந்தாள். உண்மையில் அக்கா அதிர்ஷ்டசாலிதான் இவ்வளவு பெரிய தவறு செய்திருந்தும் கூட இறைவன் அவளை தண்டிக்கவில்லை.
மாறாக மிக மிக நல்லதொரு துணையை அவளுக்கு பரிசாக கொடுக்கப் போகிறான்!
மாலைக்குள் பாலு தன் மாமாவிடம் பேசி விட்டு மது விடம் தகவல் சொல்லிவிட்டான்.
“புதன்கிழமை நானும் மாமா மாமியும் வரோம் மது, அன்னிக்கே நிச்சயத்தார்த்தம் வெச்சுக்கலாம்.”
“சந்தோஷம் சார்.”
“கல்யாணமாகி வந்த பிறகு என் முதல் வேலை என்ன தெரியுமா?”
“என்ன?”
”உனக்கொரு கல்யாணம் பண்ணி உன்னை விரட்டறது தான்.”
மது முகம் சிவந்தாள்.
“உனக்கு காதல் கீதல் எதுவும் இல்லையே மது…”
அவன் அப்படிக் கேட்டதும் மதுவின் முகம் ஒரு வினாடி மாறியது. என்னவென்று சொல்வாள்? அக்காவின் நடத்தையால் காதல் என்றாலே முகம் சுளித்து ஓடியவளுக்குள் அவளையும் மீறி ஒரு ஆணின் நற்குணமும் பரந்த மனப்பான்மையும், கண்ணியமும், மெல்லிய நூலிழை அளவுக்கு அவன் மீது காதலை ஏற்படுத்தியிருக்கும் விந்தையை எப்படி சொல்வாள். அந்த ஆண் நீதான் என்று இனி சொல்ல முடியுமா? இந்த சின்ன குமிழும் அக்காவின் கல்யாணத்தில் உடைந்து காணாமல் போய்விடும்.
“என்ன மது யோசனை? நீ யோசிப்பதை பார்த்தால் என்னவோ உனக்குள்ள பெரிய கதையே இருக்காப்பல இருக்கு.”
“அ…அதெல்லாம் ஒண்ணும் இல்ல சார். அக்காக்கு இவளோ தூரமும் ஆனப்பறமும் அந்த விஷப்பரீட்சைக்கு என்னால தயாராக முடியுமா என்ன?”
“உனக்கு எப்டிப்பட்ட மாப்பிள்ளை வேணும் மது?”
“உங்களைப் போல சார்” மது நிதானமாக சொல்ல பாலு திகைத்துப் போனான். மது சிரித்தபடி வெளியேறினாள்.
– தொடரும்…
– விட்டில் பூச்சிகள் (நாவல்), முதற் பதிப்பு: 1999, கண்மணி வெளியீடு, சென்னை.