விடிவு வரும்




(1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
தலையைச் சொறிந்து கொண்டாள் ஈஸ்வரி.
எவ்வளவு நேரந்தான் இப்படியே இருந்து, இருந்து யோசிக்க முடியும். எவ்வளவு நேரந்தான் மனத்தில் நினைந்து நினைந்து ஏங்கி, ஏங்கி அழமுடியும். எவ்வளவு நேரந்தான் வாசற்படிக்கட்டில் ஒற்றைக்காலை நிமிர்த்தி ஊன்றி, ஒரு கையை அதன் மேல் நீட்டி, தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டிருக்கமுடியும். எவ்வளவு நேரந்தான் அந்த மங்கல் மாலைப் பொழுது தொடர்ந்து நீடிக்க முடியும்.

உயிர்துடிக்கும் மாலை நேரத்து அல்லோல கல்லோலங்களுக்கு, பறவைகளின் கத்தல்களுக்கு, வானத்தின் வண்ணக் கோலங்களுக்கு, மாலை நேரத்து ஆலயமணியின் ரீங்காரத்துக்குப் பிறகு…அப்பால், இரவுவரும், குளிர் நிலவு வரும்; பின் விடிவும் வரும், விடிவு வரத் தானே வேண்டும்.
ஈஸ்வரி தலையை நிமிர்த்தி இருண்டு வரும் உலகைப் பார்த்தாள். பெருமூச்சு விட்டபடி எழுந்த அவள், முகம் கழுவி சாந்துப் பொட்டு இட்டுக் கொண்டாள். அடுத்த அறையில் மனக்குதூகலத்தில் தங்கை ஏதோ சினிமாப் பாட்டை முணுமுணுப்பது அவள் காதில் கேட்டது. அவளுக்கு எதற்கோ அழ வேண்டும் போலத் தவிப்பு மேலிட்டது; தங்கையின் மேல் கோபம் வந்தது.
இடையில் இரண்டொன்று தவறிவிட, அவளிலும் பார்க்கப் பத்து வயது இளையவளாக – இருபத்து மூன்று வயது கட்டுக் குலையாத பொற்சிலையாக வளர்ந்திருந்தாள். அவள் தங்கை ராணி. இன்னும் ஒரு மாதத்தில் அவளுக்குக் கலியாணம் நடக்கும். ராணியைப் பெண் பார்த்த மாப்பிள்ளை அவள் அழகில் மயங்கி சீதனத்தைக் கூட அவ்வளவு எதிர்பார்க்கவில்லையாம்.
கலியாணம்…?
ஈஸ்வரி பெருமூச்சு விட்டுக் கொண்டாள். அந்த இளமைக் காலத்து மயக்கும் அழகுகள் அவள் வாழ்வில் மீண்டும் வரப்போகின்றனவா…?
கிட்டத்தட்டப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு, பருவத்தின் எழிற் கலவைகளால் அவள் பூரணமாக வார்க்கப்பட்டுப் பளபளத்துக் கொண்டிருந்த போது அவனின், நினைவுகள் அவள் மனதில் கிளர்ச்சி ஊட்டின; வாழ்வின் மயக்குகின்ற மோகனமான ஆழமான அர்த்தத்தைக் கொடுத்தன; வாழவேண்டுமென்ற தவிப்பை ஏற்படுத்தின. அந்த நினைவுகள் தூரத்துச் சங்கீதமாய், ஊதுவத்தியின் இரம்மியமான வாசனையாய் இனித்தன.
அவள்…!
அவள் மனதில் பதிந்த அவன் கோலம்…;
அவளின் தந்தையின் தோட்டத்தில் அன்றாடம் உழைக்கும் கூலியாக அவன் வேலைக்கு வந்தான். அப்போது அவனுக்கு இருபத்திமூன்று அல்லது இருபத்தி நாலு வயது மதிக்கலாம். உழைப்பின் உரத்தால் முறுக் கேறியிருந்த கட்டுமஸ்தான உடல். அளவான தசைக் கூட்டு, அரும்பு மீசை விட்டிருப்பான்.
தோட்டத்தில் வேலை செய்யும் நாட்களில், மதிய உணவுக்காக வீட்டுக்கு அவன் வரும்போதெல்லாம் அவள் புன்னகையுடன் எதிர் கொள்வாள்; அவனும் புன்னகை பூப்பான்.
செம்பாடு படிந்த சாறத்தை மடித்துக்கட்டி, மண் வெட்டியை வலத் தோளில் வைத்து, வலது கையை அதன் மீது நீட்டி, இடதுகை ஆட அவன் ஏறு நடையில் வருவான். தசைக்கோளங்கள் குலுங்கும். மார்பு உரோமங்களில் வியர்வை படிந்த தடத்தில் செம்பாட்டுச் சுவடு படிந்திருக்கும். வெயிலில் நடந்து வந்ததால் பரந்த நெற்றியிலும், மூக்கு நுனியிலும் வியர்வை மணிகள் முத்துகளாக மினுக்கும்.
‘பெரிய கமக்காறிச்சி’ என்று அவன் அவளை அழைப்பான். அதில் இழையும் வாத்சலியத்தில் அவள் குழைவாள்; அந்தக் குரலுக்காக ஏங்குவாள்; அந்த அழைப்பில் அவள் இன்பங் காண்பாள்.
அவள் அவனுக்கு உணவு பரிமாறுவாள். ஊர் உலகத்துக் கதைகள் பேசிச் சிரித்து மகிழ்வார்கள். தங்களை மறந்து பேசிக்கொண்டு நெடுநேரம் இருப்பார்கள்.
வாயுடன் இணைத்துக் கோலிய அவன் கரங்களில், அவன் குடிப்பதற்காக அவள் தண்ணீர் ஊற்றுவாள். அவன் ‘முழுக்’, ‘முழுக் ‘ கென்று தண்ணீர் குடிப்பான். அவள் கையை நீட்டி அவனது கோலிய கரங்களில் தண்ணீரை ஊற்றிக்கொண்டிருப்பாள். அவன் தண்ணீர் குடித்து நிமிருவான். அவன் அரும்பு மீசை தண்ணீரில் நனைந்திருக்கும். அவள் சிரிப்பாள்.
ஒரு நாள்…;
அவர்களின், தம்மை மறந்த பரவச நிலையை அவள் தந்தை கண்டார்; முறைத்துப் பார்த்தார். அன்றைக்குப் பிறகு அவன் வேலைக்கு வரவேயில்லை.
அப்போதுதான் அவள் வேதனையை முதன் முதலில் அனுபவித்தாள். அவனின் அந்தக் கோலங்கள்…;
மண்வெட்டியுடன் அவன் நடக்கும் நடை;
மார்பில் படிந்திருக்கும் வியர்வைச் சுவடு;
நெற்றியில் முத்துக்களாகக் கோர்வை கட்டியிருக்கும் வியர்வைத் துளிகள்;
கோலிய கையினால் முழுக், முழுக்கென்று தண்ணீர் குடித்து நிமிரும் அந்த முகம்…
அவள் அவனை மறக்க முயற்சிக்கவில்லை. அவள் நினையாமலேயே அவன் கோலங்கள் அவள் மனதில் கிளர்ந்து மனத்தை வருடி ஏதோ செய்தன.
அப்போதெல்லாம் அவள் பெருமூச்சு விட்டுக் கொள்வாள்.
அவள் பதின்நான்கு வயதிற்குப் பிறகு – பருவம் அடைந்த பின் பாடசாலைக்குப் போகவில்லை. ஏற்கனவே தாயை இழந்திருந்த அவள் அந்த வீட்டுக்காரியாக மாறினாள். தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்குப் ‘பெரிய கமக்காறிச்சி’ ஆனாள். தங்கை படித்துக் கொண்டிருந்தாள். தந்தை தோட்டத்தை மேற்பார்வை செய்து கொண்டிருந்தார். அவள் வீட்டுக் கடமைகளைச் செய்து சமைத்துக் கொண்டிருந்தாள்.
வாசற்புறத்தில் இருமற் சத்தங்கோட்டு ஈஸ்வரி வெளியே எட்டிப்பார்த்தாள். நெற்றியில் மூன்று குறித் திருநீறு பளிச்சிட விறாந்தையில், கதிரையில் தந்தை உட்கார்ந்திருந்தார். அவள் எட்டிப்பார்ப்பதைக் காணாத அவர் பெரிய தங்கைச்சி என்று அவளைக் கூப்பிட்டார். என்னப்பா என்றவள் அந்த மெல்லிய மஞ்சள் வெளிச் சத்தில் மேலே சுவர்க்கடிகாரத்தை அண்ணார்ந்து பார்த்தாள். நேரம் ஏழுமணியென அறிந்து கொண்ட அவள், அவரது பதிலை எதிர்பாராது நேரே குசினிக்குச் சென்று தேநீர் தயாரித்தாள். ஒன்றைத் தந்தையின் கையில் கொடுத்து விட்டு, மற்றதைத் தங்கையின் அறைக்கு எடுத்துச் சென்றாள்.
தங்கை ஏதோ நாவலில் தன்னை மறந்திருந்தாள். தேனீரைத் தங்கையின் மேசையில் வைத்த அவள் ‘தங்கச்சி தேத்தண்ணி வைச்சிருக்கு; ஆறப்போகுது’ என்று சொன்னாள்.
தங்கை தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்திலிருந்து கண்களை எடுக்காமலே வெறுமே ‘ம்’ என்றாள்.
சற்றுத் தயங்கி நின்று தங்கையை ஏற இறங்கப் பார்த்தாள் ஈஸ்வரி. தங்கை அழகாகத்தான் இருந்தாள். மனமகிழ்ச்சியில் முகம் சதா ஒளி பெற்றுத் திகழ ஆடாது அசையாது அமைதியாக இருந்தாள்.
ஈஸ்வரி பெருமூச்சு விட்டுக் கொண்டு திரும்பினாள். குசினிக்குச் சென்று தனக்காக வைத்திருந்த தேனீரை எடுத்துக் குடித்தாள்.
தங்கையின் அழகை, அமைதியை ‘ம்’ என்ற அலட்சியத்தை யோசிக்க, யோசிக்க அவளுக்கு ஆத்திரம் வந்தது; அழுகை வந்தது; நான் ஏன் பிறந்தேன் என்ற விரக்தி வந்தது. தங்கையும் என்ன செய்ய முடியும்…?
இராணிக்குக் கல்யாணம் நிச்சயமான அன்று, எல்லாம் முடிந்த பின்னர், அவளது படிக்கும் அறையிற் தமக்கையைக் கட்டிக் கொண்டு அவள் அழுதாள். ‘அக்கா உன்னை விட்டிட்டுப் போகப் போறேனே’ என்று விம்மினாள். ‘அக்கா உனக்கு முன் நான்…’ என்று தவித்தாள்.
அப்போது தங்கையின் வாயைப் பொத்தி அவள் சொன்னாள்.
“இராணி, நான் சந்தோஷமாக வாழாவிட்டாலும் நீ சந்தோஷமாக இரு; நீ சந்தோஷமாக இருப்பதைப் பார்த்தே நான் சந்தோஷமாக வாழ்வேன்; என்னை இனியெவன் ஏற்பான். எனக்குத்தான் வயது போய்விட்டதே”
இராணி அழுதாள். “அக்கா, நான் மகா பாவி” என்றாள். தமக்கை தங்கையின் வாயைப் பொத்தினாள்.
ஈஸ்வரி குசினியை விட்டுப் பழையபடி தன் அறைக்குச் சென்று முகத்தை மேசையிற் கவிழ்த்துக் கொண்டாள். நினைவுக் கிளர்ச்சியில் பிறக்கும் கண்ணீர்த் துளிகளை மறைத்துக் கொண்டாள்.
தங்கை பற்றிய நினைவுத் தூண்டல்கள் அவள் மனதை வருடின. சிறிய வயதிற் தாய் இறக்க அவளே தாயாகித் தங்கையை வளர்த்ததை நினைத்தாள். பாடசாலைக்கு அவள் போகுமுன் அவளின் கூந்தலை இரட்டைப் பின்னலாகப் பின்னி ‘றிபன்’ கட்டி விடுவதை நினைத்தாள். தலைவாரிப் பேன் பார்ப்பதை நினைத்தாள். தங்கை படித்து முடித்து ஆசிரியத் தொழிலில் அமர்ந்த போது, அவளின் முதற் சம்பளத்தில் அக்காவுக்கென வாங்கிக் கொடுத்த தங்கச் சங்கிலியை நினைத்தாள்.
அவள் அதிஷ்டமற்றவளாக இருக்கும் போது தங்கையால் என்ன செய்ய முடியும்?
அவளையும் எத்தனையோ பேர் பெண்பார்க்க வந்தார்கள். நெடிய, மூன்றாங் கிளாஸ் கிளறிக்கல் மாப்பிள்ளை; சற்று வயது போன கலகல வென்று பேசிக் கொண்டிருக்கும் தமிழ் ஆசிரியர்; எங்கேயோ தூரத்தில் சில்லறைக் கடை வைத்து நடத்தும் ‘மைனர்’ போன்ற தோற்றமுடைய ஒருவர். இப்படி எத்தனை பேர்..!
இவர்கள் அவளை மணஞ்செய்ய ஒப்பினாலும் அவர்கள் எதிர்பார்த்த சீதனம்? அதைக் கொடுக்க அவள் தந்தையால் இயலாது.
அவள் எத்தனையோ முறை பெருமூச்சு விட்டிருக்கிறாள். பெருமூச்சுகள் விட்டு, விட்டு, விட்டே முப்பத்தி மூன்று வருடங்களைக் கழித்திருக்கிறாள்.
வேலிக்கப்பால் வீதியில் ஏதோவொரு அர்த்தத்தில் சைக்கிளின் மணிசத்தம் கேட்டது. ஈஸ்வரி ஜன்னலினூடாக நிமிர்ந்து பார்த்தாள். சைக்கிளிலிருந்த மீசைக்கார இளைஞன் ஏதோ சைகை செய்தான். ஏதோ நினைத்து ஒரு கணம் தடுமாறிய ஈஸ்வரி, வாசற்கதவினால் இறங்கி வேலியோரம் சென்றாள்.
பொழுது போகாத வேளைகளில் ஜன்னலோரம் வேடிக்கை பார்க்கும் ஈஸ்வரி ஒரு நாள் அவனைக் கண்டாள். அவனும் அவளைக் கண்டு ஏதோ சைகை செய்தான். அவள் புன்னகை பூத்தாள். அதன்பின் ‘நித்திய சங்கதி’ ஆகிவிட்ட நிகழ்ச்சியில் வளர்ச்சியில்..;
அன்று…;
அவன் அவளை மணந்து கொள்வதாக உறுதி சொன்னான்.
அவளும் அவனுடன் வாழ்க்கையை இணைத்துக் கொள்ளச் சம்மதம் என்றாள். இன்னும் ஒருமாதம் பாறுக்கும்படியும் கேட்டாள்.
திரும்பிவந்த ஈஸ்வரி விறாந்தையில் தந்தையைப் பார்த்தாள். அவர் சாய்மனைக் கதிரையிற் சாய்ந்து ஏதோ தன்னை மறந்த யோசனையில் ஆழ்ந்திருந்தார். இவள் நிமிர்ந்து சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தாள். அவரும் பார்த்தார். நேரம் ஒன்பது மணியாகி இருந்தது.
அவர் கதிரையிலிருந்து மெல்ல எழுந்தார். அவள் படிக்கும் அறையைப் பார்த்து ‘தங்கச்சி சாப்பிடுவோமா’ என்று கேட்டார்
அறையைவிட்டு வெளியே வந்த ராணி ஈஸ்வரியைப் பார்த்துக் கொண்டே, “அக்கா இன்றைக்கு வலு சந்தோஷமாய் இருக்கிறா அப்பா” என்றாள்.
அவரும் ஈஸ்வரியை நிமிர்ந்து பார்த்தார். ஈஸ்வரி தலைகுனிந்து கொண்டாள்; “பகிடியை விட்டிட்டுச் சாப்பிட வாங்கோ, விடியப் போகுது” என்றாள்.
– 1973, சாதாரணங்களும் அசாதாரணங்களும், முதற் பதிப்பு: அக்டோபர் 1983, நர்மதா பதிப்பகம், சென்னை.