வாழ்வும் வளமும் நம் கையில் தான்…




ரோஷினி நன்றாக படிக்க கூடிய திறன் உடையவளாக இருந்தாள். என்றாலும் படிப்பில என்றும் மேம்போக்காகவே படித்துக்கொண்டு இருந்தாள். சித்தம் போக்கு சிவம் போக்கு என்றபடி எதையும் காதில் வாங்காமல் அவள்எண்ணப்படியே இருந்தாள்.
அவள் அம்மா ரோஷினியை “நன்றாகப் படி. அப்போதுதான் உன் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்” என்று பலமுறை வற்புறுத்தி கூறினாலும் காதில் வாங்கிக் கொள்வது இல்லை.
ஒரே பெண் என்று செல்லமாகவும் செல்வமாகவும் வளரும் பெண். பிளஸ்-2 வந்து விட்டாள். எல்லா சப்ஜெக்ட்லயும் பாஸ்மார்க் கட்டாயம் எடுத்துவிடுவாள். என்றாலும் நிறைய மார்க் வாங்க வேண்டும் என்று ஆசை பட மாட்டாள். “நன்றாக படித்தால் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்து விடுவாய்” என்று திரும்பத்திரும்ப கூறினாலும் அவள் மனதில் ஏறவே இல்லை.
ஆனால் அவள் மனதில் காதல் மட்டும் பதிந்தது. பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக இருந்த ராஜேஷின் காதல் பார்வைக்கு பதில் பார்வை கொடுத்தாள்.
உடன் பயிலும் மாணவி காயத்திரி. அவள் ரோஷினி யுடன் நட்பாக இருப்பவள். காயத்திரி ரோஷினியை நல்லவிதமாக கூறி திருத்த பார்த்தாள்.
தாய் சொல்லை கேட்கவில்லை. தோழி சொல்லையா கேட்கப் போகிறாள்? பரிட்சை முடிந்ததும் ஒரு நாள் அம்மாவிடம் தோழியுடன் சினிமா செல்லப் போவதாக கூறிக் சென்றாள்.
ராஜேஷுடன் சென்றுவிட்டாள். அம்மா அப்பா அனைவரும் அவளை தேடினார்கள். தோழி காயத்ரி வீட்டிற்கு சென்று நான் பார்த்தனர். அவள் வீட்டில் இருந்தாள்.ரோஷிணியுடன் சினிமாவுக்கு போக வில்லை.
ஆனால் ரோஷினி யைப்பற்றி ராஜேஷை பற்றி கூறினாள். ரோஷிணியின் அம்மா ஷோபா அது கேட்டு மயங்கி விழுந்து விட்டாள். அவள் அப்பா மதன் சோபாவை ஆஸ்பத்திரியில் சேர்த்து பெரும்பாடுபட்டு காப்பாற்றினார்.
அதன் பிறகு அவர்கள் ரோஷினி மறந்து விட்டனர். நிறைய கோயிலுக்கு போக , ஆன்மீக சொற்பொழிவுகள் கேட்க, என்று நிம்மதியாக இருக்க ஆரம்பித்தனர்.
இரண்டு வருஷங்கள் கழிந்து அதிகாலை பொழுது கதவு தட்டப்பட்டது. அப்பா மதன் கதவை திறந்தார். ரோஷினி 10 மாத இரட்டைப் பெண் குழந்தைகளுடன் நின்று கொண்டு இருந்தாள்.
அவர் அவளை உள்ளேயே விடவில்லை. எங்களை பொருத்தவரை நீ இறந்து போனவளே! உள்ளே வராதே! என்றார்.
அம்மாவும் “அப்பாவை மீறி என்னால் ஒன்றும் செய்ய இயலாது” என கூறிவிட்டாள். அதனால் ரோஷினி அவளின் அம்மாவின் அம்மா கல்யாணி பாட்டி வீட்டிற்கு சென்றாள்.
அவள் பாட்டி அவளை கண்டு வருந்தி நடந்த விவரங்களை கேட்டாள். அவளை கூட்டி கொண்டு போன ராஜேஷ் தவிக்க விட்டு விட்டு ஒரு நாள் காணாமல் போய்விட்டான். கையில் இரட்டைப் பெண் குழந்தைகள் பத்து மாதம்.
அடுத்தவர்கள் , தெரிந்தவர்கள் கொடுத்த கொஞ்ச பணத்தை பெற்றுக் கொண்டு இங்கு வந்து சேர்ந்த விவரத்தினை கூறினாள்.
அம்மாவும் அப்பாவும் அவளை ஏற்றுக் கொள்ளாததால் இங்கு வந்ததாக கூறினாள் ரோஷினி.
கல்யாணியும் அவளிடம் “நீ எதற்கும் உன் அப்பாவின் அம்மா அப்பாவை போய் பார். உன் தாத்தா உனக்கு ஏதாவது நல்லது செய்யலாம்” என்றாள்.
ஆனால் ரோஷினிக்கு தாத்தாவை நினைத்ததும் பயமாக இருந்தது. அவர் எப்போதும் ரொம்ப கடுமையாகவே இருப்பார். சின்ன தவறு செய்தால் கூட கண்டிப்பர். அதனால் சிறு வயது முதலே அவரை உதாசீனம் செய்வாள் ரோஷினி.
இப்போது எப்படி அவரிடம் போய் உதவி கேட்பது? என்று தயங்கினாள். ஆனால் கல்யாணி பாட்டி “நானும் உன்னுடன் வருகிறேன்” என்று அழைத்து சென்றாள்.
தாத்தா விநாயகம் இவளை பார்த்ததும் மிகவும் கடுமையாக ஆனார். ரோஷினி தான் செய்தது தவறு என்று மன்னிப்பு கேட்டாள்.
விநாயகம் ரோஷினியிடம்,” நீ எங்கள் வம்சமே இல்லை. உன் அப்பாவிற்கு குழந்தை பிறக்காததால் உன்னை தத்து எடுத்து வளர்த்தனர். நம் வீட்டில் அனைவரும் படித்தவர்கள். இன்ஜினியர்கள் குடும்பம். அதுபோல நீயும் படிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால் பெரிய தவறு செய்து எங்களுக்கு அவமானம் தேடி தந்துள்ளய் “ என்றார்.
ரோஷிணிக்கு இதனைக் கேட்டதும் திக்கென்று இருந்தது. நம் அம்மா அப்பாவிற்கு நாம் பிறக்கவில்லை என்ற உண்மையே தீயாக சுட்டது.
கல்யாணி பாட்டியை பார்க்க அவளும் அதனை ஆமோதித்தாள்.
எவ்வளவு பெரிய அவமானம் நம்மை வளர்த்தவர்களுக்கு ஏற்படுத்தி விட்டோம் ? ஒரு நாள் கூட இந்த உண்மையை அவர்கள் கூறினது இல்லையே ? நல்ல சாப்பாடு, துணிமணி கொடுத்து நல்ல வாழ்வு தந்து நன்றாகத்தானே நம்மை வளர்த்தனர்?
மனம் கனத்து அழுதாள். தாத்தாவின் கால்களைப் பிடித்துக்கொண்டு கதறினாள்.
ராஜம் பாட்டி தாத்தாவின் கோபத்தை தணிக்க முயன்றாள். இறுதியில் தாத்தா மனம் இறங்கி அவளுக்கு சில கண்டிஷன்களை போட்டார்.
அதாவது ரோஷினி விநாயகம் தாத்தாவின் அவுட் ஹவுசில் கல்யாணி பாட்டியுடன் இருந்து கொள்ளலாம். அவளை இஞ்சினியரிங் காலேஜில் சேர்த்துவிட்டு காலேஜ் ஃபீஸ் மட்டும் கட்டிவிடுவார். அவள் படித்து முடித்த பிறகு நான்கு வருஷங்கள் கழித்து வேலைக்கு சேர்ந்து விட்ட பின்னர் சம்பளத்தில் கொஞ்சம் கொஞ்சமாக இவர் படிக்க வைத்த பணத்தை திருப்பித் தந்துவிட வேண்டும் என்றார்.
அத்துடன் தாத்தா பாட்டியின் வீட்டு வேலைகள் அத்தனையும் அவள் செய்து தரவேண்டும் வேலைக்கு சம்பளமாக மாதம் 3000 தந்துவிடுவார் என்று கூறினார்.
ரோஷினி சம்மதித்து குழந்தைகளை கல்யாணி பாட்டியின் உதவியுடன் வளர்த்துக்கொள்ளலாம். அவுட் ஹவுசில் இருந்து கொள்ளலாம். மேல் பாடம் படித்து நமது வாழ்க்கையை சீராக்கிக் கொள்ளலாம். என்று என்று நினைத்தாள்.
இப்போது அவளுக்கு உலகம் நன்றாக புரிந்தது. அதனால் தான் செய்த தவறு இமாலய தவறு என்பதும் புரிந்தது. அதனால் இனிமேல் நன்றாக படிக்க வேண்டும் என்று பாடத்தில் கவனம் செலுத்தினள்.
குழந்தைகளை கல்யாணி பாட்டியின் பாதுகாப்பில் விட்டுவிட்டாள். அத்துடன் விநாயகம் தாத்தா ராஜம்பாட்டி ,கல்யாணி பாட்டி அனைவருடைய வேலைகளையும் ,வீட்டு வேலைகளையும் கவனித்துக் கொண்டாள்.
நான்கு வருஷங்களும் மிக கடுமையாக உழைத்தாள்.
நன்றாகப் படித்து நல்ல மார்க்கு களுடன் பாஸ் செய்தாள். கேம்பஸ் இன்டர்வியூவில் நல்ல வேலை கிடைத்தது.
மாதாமாதம் விநாயகம் தாத்தாவிற்கு பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து கடனை அடைத்தாள். முழுவதுமாக கடனை அடைத்தது அவளுக்கு மிகவும் திருப்தியாக இருந்தது.
தாத்தாவை கடவுளுக்கு நிகராக பார்த்தாள். அவளது இன்றைய செம்மையான பாதுகாப்பான வாழ்க்கையை த் தந்தவர்.
அவள் பெண் குழந்தைகளும் வளர்ந்தன. பள்ளிக்கூடத்தில் சேர்த்தாள்.
அவளது அம்மா அப்பா அவளை ஏற்றுக் கொள்ளவே இல்லை. என்றாலும் இவள் தான் செய்த தவறுகளை நினைத்து அவர்கள் நம்மீது கோபம் கொண்டதில் தவறேதும் இல்லை கோபம் கொண்டது சரிதான் என்று நினைத்தாள்.
அவர்களை மனதால் வணங்கி எப்பொழுதும் நேர்வழியில் நின்றாள். குழந்தைகளையும் செல்லமாக வளர்த்தாலும் கண்டிப்பாக வளர்த்தாள்.
ஒரு நாள் குழந்தைகளின் பள்ளி ஆண்டு விழாவில் தலைமை தாங்க அவள் பழைய தோழி காயத்திரியைப் பார்த்தாள். காயத்திரி ஒரு அனாதை ஆஸ்ரமத்தின் நடத்துனருக்கு மனைவியாக இருந்தாள். ரோஷிணியும் தன்னார்வ தொண்டு புரிந்தாள். தன்னால் இயன்ற அளவு அங்கு உதவி புரிந்தாள்.
காயத்திரியும் ரோஷிணியின் தற்போதைய நிலை குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள்.
மிகவும் நேர்மையாக, துணிந்து நல்ல வாழ்க்கை வாழ்ந்தாள். சமுதாய நலனிலும் அக்கறை செலுத்தினாள்.
தப்பு செய்வது என்பது இயற்கை, ஆனால் அதிலிருந்து திரும்பி வெளியே வந்து நல் வாழ்வு வாழ்வது மிகவும் முக்கியமானது ஆகும் என்பதனை உணர்ந்தாள்.