வாழ்க்கை ரகசியம்!





மருகு முனிவர் அடர்ந்த வனப்பகுதியில் கொடிய மிருகங்களைக்கண்டு சிறிதும் அஞ்சாமல் மூலிகைகளைத்தேடிப்பறித்துக்கொண்டிருந்தார். பனிரெண்டு வயதில் வீட்டைத்துறந்து காட்டிற்குள் வந்தவர், சருகு முனிவரான குரு உதவியால் அவரது ஆசிரமத்தில் முறையாக கடவுளைக்காணும் நிலையை நோக்கித் தவமிருக்கும் முறைகளைக்கற்றார்.

குரு, சமாதி நிலையடைந்த பிறகு குரு நிலைக்கு உயர்ந்தவர், குருவை விட ஆன்மீக சாதனை புரிந்து மோட்சம் அடைய வேண்டும், சமாதி நிலை அடைய வேண்டும் என்பதை விட இந்த பூமியில் பிறக்கும் மனிதர்கள் முதுமையடையாமல் இளமையாகவே வாழ மூலிகை கண்டு பிடிக்க வேண்டும், அதற்கு தம்மை வைத்தே சோதிக்க வேண்டும் என பல சோதனைகளை செய்து வந்தார்.
உதவிக்கு சீடர்கள் யாரையும் அழைத்துச்செல்வதில்லை. சீடர்களிடம் தமது ஆராய்ச்சியைப்பற்றி கூறாமல் அவர்களுக்கு கற்றுத்தர வேண்டிய ஆன்மீக பாடங்களை மட்டும் முறையாகக்கற்றுத்தந்து விட்டு மற்ற நேரங்களில் மூலிகை பறிக்கவும், பரிசோதிக்கும் வேலைகளைப்பார்க்கவும் வேகமாக இயங்கிக்கொண்டிருந்தார்.
ஒரு நாள் மிகவும் வயதான தோற்றமுடைய முதியவர் ஒருவர் முனிவரிடம் வந்து ‘நான் இந்தக்காட்டில் வாழும் காட்டு வாசி. தங்களை குருவாக எண்ணி வந்துள்ளேன். என்னை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளுங்கள்’ என கூற, ‘இன்றோ, நாளையோ என வாழ்நாளை எண்ணிக்கொண்டிருக்கும் உனக்கு கற்றுத்தர இயலாது. இறந்து, பிறந்து வா. அப்போது பார்க்கலாம்’ என சற்று ஆணவத்துடன் கூற,’ எதற்கும் நன்றாக யோசித்து வையுங்கள். என்னுடைய உதவி தங்களுக்கு தேவைப்படும். நாளை வருகிறேன்’ என கூறிச்சென்ற பின் இரவு உறக்கம் பிடிபடாமல் , இந்த மனிதர் நமக்கு எவ்வாறு உதவ முடியும்? ‘ என ஆழ்ந்து யோசித்தார் மருகு முனிவர்.
முனிவர் எதிர்பார்த்தது போலவே முதல் நாள் வந்த முதியவர் மறு நாளும் வந்தார். வந்தவர் கையில் உணவுப்பொட்டலம் இருந்தது. முனிவரிடம் கொடுத்தவுடன் வாங்கி சுவைத்தவருக்கு பொறி தட்டியது. ‘இவரை நமது சமையல்காரராக வேலையில் அமர்த்தி விடலாம். தேவாமிர்தம் போல் உணவு சமைத்துள்ளாரே….’என முடிவு செய்தவர் ” இன்று முதல் எனக்கு சமைத்துக்கொடுத்தால் ஒரு வருடம் சென்ற பின் சிஷ்யனாக ஏற்கிறேன்” என வாக்கு கொடுத்த அடுத்த நொடியே முதியவர் சமைக்க ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்து விட்டார்.
முதியவர் சமைத்த உணவை ரசித்து, ருசித்து உண்ட முனிவரின் உடல் பத்து வயது குறைந்தது போல் காட்சியளித்ததோடு, முன்பிருந்த சோர்வும் விலகிப்போயிருந்தது. முதியவர் மீது முனிவருக்கு மதிப்பு கூடியிருந்தது.
“அடுப்பெரிக்க விறகு தீர்ந்து விட்டது. வயதான என்னால் விறகு எடுத்து வர முடியாது. நீங்களே காட்டிற்குள் சென்று விட்டு ஆசிரமம் வரும் போது விறகு கொண்டு வந்து விடுங்கள்” என பெரியவர் கூறியதும் முனிவருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
“என்னை யாரென்று நினைத்துப்பேசுகிறாய்? விறகு வெட்டுபவனைப்போலவா தெரிகின்றேன்? இன்னொரு முறை இவ்வாறு சொன்னாயென்றால் சபித்து விடுவேன். சாம்பலாகி விடுவாய், ஜாக்கிரதை” என கடிந்து கொண்ட முனிவரைப்பார்த்து சிரித்தார் முதியவர்.
அடுத்த நொடி பக்கத்திலிருந்த மரத்திலிருந்து காய்ந்து போன கிளை முறிந்து கீழே விழுந்தது. தனது செயலால் தான் விழுந்தது போல் முதியவர் சென்று எடுத்து வந்ததைக்கண்ட முனிவர் சற்று அதிர்ந்தார்.
‘இந்த மனிதர் மந்திரவாதியாக இருக்க வேண்டும். இல்லையென்றால் வேண்டும் என்பது உடனே கிடைக்காது. கொஞ்சம் ரகசியமாக இவரை கண்காணிக்க வேண்டும் ‘ என நினைத்தவாறு காட்டிற்குள் மூலிகை தேடிச்சென்று விட்டார்.
இரவு பசியுடன் ஆசிரமம் திரும்பியவருக்கு அடுப்பினருகில் உணவுப்பானை இல்லாததோடு, முதியவரையும் காணாதது கண்டு சுற்றும், முற்றும் தேடியவர் சோர்வு நீங்க இளைப்பாற படுக்கைக்கு சென்ற போது தன் படுக்கையில் ஓர் இளைஞன் படுத்து உறங்குவதைக்கண்டு கோபம் கொண்டு தன் கையிலிருந்த பிரம்பில் அவனைத்தட்டி எழுப்பினார்.
எழுந்த இளைஞன் திடீரென முனிவரின் காலில் விழுந்து “என்னை மன்னித்து விடுங்கள். பெரிய தவறு நடந்து விட்டது. தங்களுக்காக சமைத்த உணவை மத்தில் கிளறி விடுவதற்கு பதிலாக அடுப்பில் எரிந்து கொண்டிருந்த விறகை எடுத்து கிளறி விட்டேன். உணவு முழுவதும் சாம்பல் கலந்து விட்டது. நீங்கள் சபித்து விடுவீர்கள் என பயந்து அனைத்தையும் நானே சாப்பிட்டு விட்டேன். உண்ட மயக்கத்தில் தங்களுடைய படுக்கையில் படுத்துக்கொண்டேன்” என்றவரை அடி முதல் முடி வரை பார்த்தார் முனிவர்.
அழகான இளமைத்தோற்றத்தில் முதியவர் இருந்ததைக்கண்டு வியந்து பார்த்துப்புரிந்து கொண்டவர் தான் தேடியது கிடைத்த மகிழ்ச்சியில் விறகு விழுந்த மரத்தடிக்கு ஓடினார். மரத்தை மேலும் கீழும் பார்த்தார். தொட்டு வணங்கினார். ஆலிங்கனமும் செய்தார். புத்தருக்கு போதி மரம்போல முனிவருக்கு அந்த மரம் காட்சியளித்தது. அவர் பல ஆண்டுகளாகத்தேடிய அதிசய மூலிகை மருந்தே இந்த மரம் தான் என்பதைப்புரிந்தவர், இளைஞரான முதியவரைத்திரும்பிப்பார்த்த போது அவர் மறைந்திருந்தார்.
தனக்கு சமையல் செய்தவர் தாம் பல ஆண்டுகளாகத்தவமிருந்து தேடிய கடவுள் என்பதையும், கடவுள் வேலைக்காரருடைய ரூபத்திலும் வரலாம் என்பதையும், நாம் வெகு தொலைவில் தேடுவது நமக்கு அருகிலேயே இருக்கலாம் என்பதையும் இச்சம்பவத்தால் புரிந்து கொண்ட மருகு முனிவர், தம் சிஷ்யர்களுக்கும் இப்பேருண்மையைப்போதித்தார்.