வார்த்தை தவறிவிட்டால் கண்ணம்மா..!






டூரிங்க் டாக்கீஸ் என்பது இன்றைய தலைமுறையினர் பலருக்கும் தெரியாத ஒன்று. அது ஒரு ஓலைக் கொட்டகையில் சினமா காட்டப்படும் அந்தக் காலத்து ஆட்களுக்கான சின்ன அரண்மனை!.
முன்வரிசை ‘தரை டிக்கட்’ இருப்பதிலேயே அதுதான் சீப்பானது..! உட்கார குவிக்கப்பட்டிருக்கும் பள்ளத்து மணலே ஆதாரம். அங்கு மணலைக்குவித்து மேடாக்கி உட்கார்ந்தால்தான் முன்னால் உட்கார்ந்திருப்பவன் தலை மறைக்காது! திரை தெரியும்! இல்லை அவனை உருமாலையை அவிழ்க்கச்சொல்லி கெஞ்சி அழணும்! அடுத்து ‘பெஞ்ச் சீட்., சாய பின் தாங்கி இருக்காது! மொழுக்குனு இருக்கும்; பலகைதான் சீட்! அடுத்து பேக் பெஞ்ச்! அதற்கு அடுத்துதான் சேர். அதுதான் இன்றைய பாக்ஸ் பால்கனி எல்லாம்! இரண்டு சீட்டுக்குச் சேர்த்து மூன்று கை தாங்கி. கை வைத்துக்கொள்ள பொதுவிடம்!. உட்கார்ந்திருக்கும் இரண்டுபேரில் எந்த ஒருத்தனும் இரண்டு கையையும் கைப்பிடியில் வைத்து நிம்மதியாய்ப் படம்பார்த்ததாய் வரலாறு இல்லை. ஒரு கையை மடித்துதான் வைத்திருக்க வேண்டும்.
இண்டர்வல் மட்டும் மூன்று உண்டு! வழக்கமான இண்டர்வலுக்கு முன்னும் பின்னுமாக ரெண்டு சேர்த்து மொத்தம் மூன்று இண்டர்வல். ஆது புரொஜக்டரில் ரீல் மாற்ற இடைவெளி! இடையிடையே ஸ்டைடு போடுவான் . அது முடிந்து பெல் அடித்துப் படம் ஆரம்பிக்கும். விசில் கூரையைப் பிளக்கும்!
ஸ்லைடு போடப்பட்டது. அது மல்லிகா நடத்தும் டியூஷன் செண்டருக்கான விளம்பரம். அவள் தான் டிகிரி முடித்து வேலைக்காக காத்திருக்காமல் தன் கையே தனக்குதவி என டியூஷன் எடுக்கிறாள் ‘கலைமகள் டியூஷன் செண்டர்’ என்ற பெயரில்.
விளம்பரத்துக்காக சிலைடு போடச் சொன்னாள். டூரிங்க் தியேட்டர் காரனும் போட்டான். இவள் டியூஷன் செண்டருக்கு அடுத்து ஒரு டாக்டரின் சிலைடு போடப்பட, பின்னிருக்கையில் அமர்ந்திருந்த நவநீதன் அவளைக் கிண்டல் செய்யும் நோக்கில், ‘உன் டியூஷன் செண்டரில் படித்தால், டாக்டர்ட்டதான் போணும் போலனு தியேட்டர்காரனே சொல்றான் போலிருக்கே?!’ என்றான் நையாண்டியாக.
அந்த வார்த்தைகளால் கொஞ்சம் நொந்துதான் போனாள் மல்லிகா!
‘வார்த்தை தவறிவிட்டால்… அல்ல’!… “வார்த்தையைத்” …. “தவறி”… “விட்டால்”… (திமிறாய் வெளியே விட்டால்) மார்பு துடிக்கத்தானே செய்யும்?!!
துடிக்கத்தான் செய்தது மல்லிகாவுக்கு..! ஆனால்… அதற்காக மனம் உடைய வில்லை. மாறாக… இப்படி உலகம் ஆயிரம் சொல்லி உயரும் ஒருத்தனின் வளர்ச்சிக்குத் தடைபண்ணும்! அதிலும் பெண் என்றால் கேட்கவே வேண்டாம்!! தன்னம்பிக்கை கெடுக்கும் என்ன செய்யலாம்? பதிலாக என்ன சொல்லலாம்?! யோசித்தாள்..!
‘எங்களோட டியூஷன் செண்டரில் படிச்சால் கண்டிப்பா..டாக்டராகலாம்கறது டூரிங்க் டாக்கீஸ்காரனுக்குப் புரியுது! பாவம் உனக்குத்தான் புரியலை!’ என்றாள் உரக்க!. அத்தோடு நவநீதன் அங்கிருந்து அபீட்டானான்.
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |