வாசு மாமாவும் சீதா மாமியும்




(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
சீதா மாமியின் காலை கொஞ்சம் தூக்கி மேலும் கீழும் ஆட்டி, ஒன், டூ த்ரீ, ஃபோர், ஃபைவ். இப்படி அடிக்கடி எக்ஸ்ர்சைஸ் செய்யுங்க உங்க கால் வீக்கம் எல்லாம் சரியாகி விடும்” என்றேன்.

கட்டிலில் படுத்திருந்த சீதா மாமிக்கு வயசு ஐம்பத்து இரண்டு. எனக்கும் மாமிக்கும் முப்பது வயது வித்தியாசம் இருந்தாலும் எங்களுக்குள் ஏற்பட்டிருந்த நட்புக்கு வயசு வித்தியாசம் கிடையாது.
“அப்படியே முடிந்தபோது செய்கிறேன் நந்தினி. உனக்குக் காபி எதுவும் கொடுக்க முடியவில்லயே என்று எனக்குக் குறையாக இருக்கிறது என்றாள் சீதா மாமி என் கையைப் பிடித்தபடி.
“உங்களுக்கு கால் சரியாகட்டும். அப்போ காபி சாப்பிடுகிறேன்” என்றேன் நெகிழ்ச்சியுடன்.
சீதா மாமியின் கணவர் வாசு அவள் சரியாக சாப்பிடுவதில்லை . நல்லா சாப்பிடச் சொல்லுங்க “. என்றார். அவருக்குக் காது கேட்காது.
ஆனால் மாமி அவருடன் பேசும் போது சைகையில் பேசிவிடுவாள். இல்லாவிட்டால் மிகவும் மெதுவாகப் பேசுவாள்.
”நல்லா சாப்பிடுங்க மாமி. உடம்பில சிவப்பணுக்கள் அதிகரிக்கவேண்டும் இல்லையா? பீட்ரூட், மாதுளை எல்லாம் சாப்பிடுங்க” என்றேன்.
மாமிக்குக் கருப்பை புற்று நோய். நோய் முற்றிப் போய் கருப்பையை எடுத்தாகிவிட்டது. ஒன்று மாற்றி ஒன்று என ஏராளமான பிரச்சனைகள். சிவப்பணுக்கள் குறைந்து போவதால் இரத்தம் அடிக்கடி ஏற்ற வேண்டியிருக்கு. இப்போது மாமிக்குக் கால் தூக்க முடியாமல் வீங்கி விட்டது நான்தான் மாமியை அடிக்கடி டாக்டரிடம் அழைத்துப் போவேன்.
“உங்களுக்கு என்னாலே தொந்திரவு “ மாமியின் கண் பனித்தது.
“அழாதீர்கள் மாமி. எல்லாம் சரியாகிவிடும்.”
”எனக்கு எதாவது ஆகலாம். நான் மாமாவை நினைத்துத்தான் அழுகிறேன்.அவருக்கு எதுவும் தெரியாது. அவரை யாராவது ஏமாற்றி விடுவா” என்றாள்.
“அவர் எல்லாம் சமாளிச்சிப்பார். அவருக்கு எல்லாம் கற்றுக் கொடுங்கள். கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள் . உங்கள் உடம்பு சீக்கிரம் குணம் அடையும்” மாமியைத் தேற்றினேன்.
”நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள் எங்கே வைத்திருக்கிறேன் என்று மாமாவிடம் சொல்லியிருக்கிறேன். ஏதாவது அவருக்கு உதவி தேவைப்பட்டால் நீங்க செய்ய வேண்டும்.”
“மாமாவை நாங்க கை விட மாட்டோம். எந்த உதவி வேண்டுமானாலும் நாங்க கண்டிப்பாக செய்வோம்” என்றேன்.
நான் வேலை இருந்ததால் என் வீட்டுக்கு வந்து விட்டேன். மாலோலா அபார்ட்மெண்டில் நான் இரண்டாவது மாடியில் இருக்கிறேன். மாமி கீழே முதல் மாடியில் இருக்கிறார். மாமா ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து சமீபத்தில் ஓய்வு பெற்றவர்..
தனக்குப் புற்று நோய் என்று தெரிந்தவுடன் மாமி அழுதாள். முழங்கால் வரைக்கும் இருந்த தலை மயிர் எல்லாம் போய் தலை மொட்டை ஆன போதும், ”என் அழகு போய்விட்டதே ! மாமி அழுதாள். நா தான் சமாதானம் சொன்னேன். மகாலட்சுமி மாதிரி இருந்த மாமி இப்போ தலையில் ஒரு ஸ்கார்ப் அணிந்து- பார்க்க மனசுக்குக் கஷ்டமாக இருந்தது. அடிக்கடி உடம்பு வேறு படுத்தும்.
நான் மட்டுமல்ல . நாங்கள் குடியிருந்த மாலோலா அபார்ட்மெண்டில் உள்ள பத்து பிளாட்களில் உள்ள எல்லோரும் மாமி சீக்கிரம் குணம் அடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர். முதல் மாடியில் குடியிருந்த இஸ்மாயில் அல்லாவின் கருணையால் மாமிக்குச் சீக்கிரம் உடல் நலம் அடையும்” என்றார்.
நான் மார்கெட் போய் திரும்பி வந்த போது மாமியின் எதிர் பிளாட்டில் வசிக்கும் கவிதா, மாமிக்கு ரொம்ப முடியாததால் ஆஸ்பிட்டலில் அட்மிட் செய்திருக்கிறார்கள் ”என்றாள்,. அப்போது இரவு வெகு நேரம் ஆகிவிட்டாதால் “காலையிலே போய் மாமியைப் பார்க்கிறேன் “ என்றேன்.
அடுத்த நாள் காலை சமையலை விரைவாக முடித்துவிட்டு ஆஸ்பிட்டலுக்குப் போகலாம் என்று கிளம்பினேன்.
அப்போது கோவிலிலிருந்து சாமி புறப்பட்டு வீதியில் உலா வந்து கொண்டிருந்தார். சீதா மாமிக்கு உடம்பு சீக்கிரம் குணம் ஆக வேண்டும் என்று உள்ளம் உருகப் பெருமாளை வேண்டிக் கொண்டேன்.
ஆஸ்பிட்டலில் மாமி இருக்கும் அறைக்குள் சென்றேன். மாமி கட்டிலில் படுத்திருந்தார். வேதனை முகத்தில் தெரிந்தது.
மாமிக்குப் பக்கத்தில் நின்ற மாமா, அவளை நோக்கி தன் ரு கைகூப்பி “நீ கஷ்டப் படாமல் போய் விடு. நான் என்னைப் பார்த்துக் கொள்கிறேன் “கண்களில் நீர் மல்கக் கூறினார்.
அனுதாபத்துடன் மாமாவைப் பார்த்தேன்.
“மாமி எப்படி இருக்கீங்க? என்று கேட்டுக் கொண்டே நான் அருகே சென்றேன். ”ஜெயந்தி வந்துவிட்டாளா?”
மாமிக்குக் குழந்தை கிடையாது. ஜெயந்தியை வளர்த்து கல்யாணம் செய்து கொடுத்தார்.
”வந்து விட்டாள். டாக்டரிடம் விசாரிக்கப் போய் இருக்காள் “
“தலைவலியாய் இருக்கிறது. கேண்டினில் போய் ஒரு காபி சாப்பிட்டு வருகிறேன் மாமா அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்.
மாமியின் சோகமான கண்கள் என்னை ஊடுருவியது..
”நா ரொம்ப துக்கத்தை அனுபவித்து விட்டேன். எனக்குச் சீக்கிரம் எனக்குச் சீக்கிரம் விடுதலை கிடைச்சிடும்”
“மனசைப் போட்டு அலட்டீங்காதீங்க. ”நீங்க சீக்கிரம் குணம் அடைஞ்சிடுவீங்க . உங்க வேதனைகளுக்கெல்லாம் ஒரு விடிவு காலம் சீக்கிரம் வரும்.”
“எனக்கா விடிவு காலம்?” மாமி வேதனையுடன் சிரித்தாள். அலை ஓய்ந்து கடலில் நீராடுவதைப் போல்தான். கல்யாணம் ஆகி முப்பது வருடம் ஆகி விட்டது. ஆரம்பத்திலிருந்து துக்கம்தான். கால் சரியில்லாத மாமனார், படுத்த படுக்கையில் இருந்த மாமியார், செவிட்டு ஊமையான நாத்தனார். இவர்கள் எல்லாம் மேலே போய் விட்டார்கள். காது கேட்காத புருஷன், நாப்பது வயசிலேயிருந்து என்னை விட்டு விலகாத சர்க்கரை வியாதி. இதெல்லாம் போதாதென்று கடைசியாக வந்த பாழாய் போன புற்று நோய். நான் அனுபவிக்கிற வேதனை எனக்குத்தான் தெரியும். துக்க வாழ்க்கை வாழ்வதற்கே என்னைக் கடவுள் படைச்சிட்டார். எ….ன..க்..கு மூ.. மூச்சு பேச முடியாமல் தடுமாறினாள்.
என் மண்டையில் பொறி தட்டியது. ”நர்ஸ் “ என்று கத்தினேன். அப்போது உள்ளே வந்த ஜெயந்தியிடம் ”நர்ஸை கூப்பிடு “ என்றேன். குனிந்து மெல்ல மாமியின் காதருகில் “நாராயணா, நாராயணா, நாராயணா, நாராயணா என்று சொல்லத்தொடங்கினேன்.மாமியின் கையை மாமா மெதுவாகப் பிடித்துக் கொண்டார்.
திடீரென்று மாமியின் கண்கள் வெறித்து நிலை கொள்ளாமல் தவித்தது. வாய் கொஞ்சம் திறக்க மாமியின் மூச்சு அடங்கியது.
அறைக்குள் வந்த டாக்டர் லட்சுமி, மாமியைச் சோதித்து விட்டு ” உயிர் போய் விட்டது ” என்றார்.
மாமா அதிர்ச்சி அடைந்தார். கண்களில் கண்ணீர் வழிய இரண்டு கையை மேலே தூக்கிக் காண்பித்துத் தன் சோகத்தை வெளிப்படுத்தினார்.
எனக்கு தலையில் இடி விழுந்த மாதிரி வேதனை ஏற்பட்டது. மாமி இன்னும் ஆறு மாசம் இருப்பாள் என்று நினைத்திருந்தேன். அதற்குள் இப்படி ஆகி விட்டதே என்று வருத்தமாக இருந்தது.
”மாமி சுமங்கலியாய் போய்ட்டா” என்றேன் கண்களில் நீர் பொங்க, ஜெயந்தி கதறி அழுதாள்.
மாமியின் உடல் ஹாலில் வைக்கப் பட்டிருந்தது. மாலாலோ பிளாட்டில் உள்ள எல்லோரும் வந்து விட்டார்கள். சிலர் வெறும் வாய் வார்த்தை மட்டுமில்லாமல் உடலாலும், பணத்தாலும் தங்களால் முடிந்த உதவியைச் செய்தார்கள். மாமியின்
உறவினர்கள் வந்து துக்கம் விசாரித்துக் கொண்டிருந்தனர்.
ஜெயந்தி துக்கத்துடன் முழங்காலைக் கட்டிக் கொண்டு அழுதாள். எனக்கும் நெஞ்சைப் பிசைந்த மாதிரி வலியாக இருந்தது..
“நாம் நினைப்பது போல் நடப்பதில்லை. எல்லாம் ஆண்டவன் செயல். சீதாதான் வாசுவுக்கு எல்லாம். அவ அவனை விட்டு விட்டுப் போய்ட்டாளே. இனிமே என்ன பண்ணப் போறான்” என்று வருத்தப்பட்டார் வாசுவின் சித்தப்பா.
”எனக்கு எல்லாமே அவதான். போன் மணி அடிச்சாலும் சரி, காலிங் பெல் அடிச்சாலும் சரி அவதான் போய் பார்ப்பா. அவ போய்ட்டா. அவள் இல்லாமல் நா எப்படி இருப்பேன் ” என்று வேதனையுடன் மாமா சொன்னது என் காதில் விழுந்தது.
மாமாவின் முகம் அளவுக்கு அதிகமான துக்கத்துடன் இருந்தது.
“மாமியின் உடல் இருந்த திசையை நோக்கி கையை காண்பித்து உணர்ச்சி பொங்க, “சீதா, நீ இல்லாமல் நானில்லை..நானும் உன்னோட வர்றேன்” என்று கத்தினார். அவரது கண்கள் சொருகியது. உடல் தரையில் பொத்தென்று விழுந்தது. உடலிருந்து பிரிந்த அவருடைய ஆத்மாவானுலகம் சென்றது.
”வாசுவுக்குச் சீதாவின் மேல் அளவு கடந்த பிரியம். இரண்டு பேரும் சேந்து மேலே போய்விட்டார்கள்” என்றார் சித்தப்பா அதிர்ச்சியுடன்.
– எதிர்வீடு (சிறுகதைகள்), வெளியீடு: FreeTamilEbooks.com