வாக்கு தவறியதன் விளைவு
கதையாசிரியர்: எஸ்.மதுரகவி
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 1, 2026
பார்வையிட்டோர்: 1,778
முன் ஒரு காலத்தில் ஜெர்மனி நாட்டில் ஹேமலின் என்றொரு சிற்றூரில் நடந்த சம்பவம்.
விவசாயத்தால் செழிப்பான ஊர் அது. மக்கள் அனைவரும் சண்டை சச்சரவு இல்லாமல் ஒற்றுமையாக இருந்தனர். நிம்மதியாகவும் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். ஆனால், அவர்கள் மகிழ்ச்சிக்கு எலிகள் வேட்டு வைத்து விட்டன. எலித் தொல்லையால் அவர்களின் நிம்மதி போயிற்று. வீட்டில் தானியங்களை , பருப்புகளை வேட்டையாடிய எலிகள் , சாமையலறையில் சமைத்த உணவுகளையும் ரொட்டி மற்றும் பிற தின்பண்டங்களை விட்டு வைப்பதில்லை. சுண்டெலி , பெரிய எலி , பெருச்சாளி என்று பல வகை எலிகள் . நீக்கமற எங்கும் எலிகள் .. தானியக் கிடங்குகளில் சேமித்து வைத்த தானியங்களையும் மற்ற சமையலுக்கான பொருட்களையும் எலிகள் நாசம் செய்தன. எல்லா இடங்களையும் தங்கள் வளைகள் ஆக்கிக் கொண்டு வாழ்ந்து வந்தன.
நாளுக்கு நாள் எலிகளின் கொட்டம் அதிகமாகவே , ஊர்த் தலைவர் , மற்ற பிரமுகர்கள் மற்றும் வர்த்தகர்களுடன் கலந்து ஆலோசித்து , எலிகளின் தொந்தரவிலிருந்து இந்த அழகிய கிராமத்தை விடுவிப்பவர்களுக்கு இரண்டு மூட்டை தங்க கட்டிகள் தரப்படும் என்று அறிவித்தார்.
அந்த ஊர்க்காரர்களுக்கு இந்தப் பிரச்சினையைத் தீர்க்க உபாயம் ஒன்றும் தோன்றவில்லை. ஒரு மழைக் காலப் பொழுது ஒன்றில் , பிற்பகல் வேளையில் , வித்தியாசமான உடை அணிந்த வாட்டசாட்டமான நாடோடி போன்ற ஓர் இளைஞன் எங்கிருந்தோ அந்த ஊருக்குள் வந்தான். அவன் தலையில் அணிந்திருந்த நீண்ட தொப்பியில் பறவைகளின் இறகு . அவனுடைய கைகளில் வண்ணமயமான ஒரு குழலிசைக் கருவி.
ஊர்த் தலைக்கட்டின் வீட்டின் வாசலில் நின்றான். ஊர்த் தலைக்கட்டு வெளியே வந்தார். மற்ற பிரமுகர்களும் அங்கு கூடினர்.
அந்த இளைஞன் பெரியவரிடம் பேசினான் –
‘ வணக்கம் ஐயா , எலிகளின் தொந்தரவிலிருந்து நான் இந்தக் கிராமத்தை விடுவிக்கிறேன். நீங்கள் அறிவித்தபடி வெகுமதியைக் கொடுக்க வேண்டும் ‘
தலைக்கட்டு, மற்ற பிரமுகர்களின் முகங்களை ஆராய்ந்தார். இவன் என்ன தான் செய்கிறான் என்று பார்ப்போம் என்ற குறிப்பை அவர்கள் வெளிப்படுத்தனார்கள்.
தலைக்கட்டு ‘ நீ சொன்னபடி எலிகளிலிடமிருந்து விடுதலை கொடு. உனக்கு அறிவித்த சன்மானம் தருவோம் ‘ என்றார். அந்த தெருவின் ஓர் ஓரத்தில் நின்று கொண்டு தன்னுடைய அழகிய குழலிசைக் கருவியை வாயில் வைத்து ஒரு விநோதமான மெட்டை அவன் இசைத்தான் அவன். வீடுகளிலிருந்தும் சந்து பொந்துகளிலிருந்தும் கிடங்குகளிலிருந்தும் எலிகள் ஓடோடி வந்தன. இத்தனை வகை எலிகளா நம் ஊரில் என்று ஊர்க்காரர்களே அப்போதுதான் பார்த்தனர். அவன் இசைத்துக் கொண்டே நடக்கத் தொடங்கினான். எலிகள் அவனைப் பின் தொடர்ந்தன. ஒரு எலி கூட மீதம் இல்லாமல் அவனைப் பின் தொடர அவன் இசைத்துக் கொண்டே மலையைக் கடந்து கீழே இறங்கி அங்குள்ள ஆற்றில் இறங்கினான். அவனுடைய வாசிப்புக்கு கட்டுப்பட்டு அவனைத் தொடர்ந்து வந்த எலிகள் , ஆற்று நீரீல் மூழ்கிப் போயின.
செய்தி அறிந்த கிராமத்தினர் அன்றிரவு மகிழ்ச்சியில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என இருந்தனர்.
அடுத்த நாள் காலை. இசைக் கலைஞன் , தலைக்கட்டின் வீட்டு வாசலில் வந்து ஐயா என்று குரல் கொடுத்தான். அவர் வெளியே வந்தார்.
‘வணக்கம் ஐயா வாக்கு அளித்தபடி எனக்கான வெகுமதியைக் கொடுங்கள்..‘ என்றான் இசைக் கலைஞன்.
‘எலியை விரட்டுவதற்கு யாராவது தங்கத்தைக் கொட்டிக் கொடுப்பார்களா ? போப்பா ‘ என்று கூறிவிட்டு பெரியவர் வீட்டுக்குள் சென்று விட்டார்.
இசைக் கலைஞன் ஏதும் பேசாமல் அந்த தெருவில் நடந்து சென்றான். இப்போது அவன் தன்னுடைய குழலிசைக் கருவியை வாயில் வைத்தான். வேறொரு விதமான மெட்டை வாசித்துக் கொண்டே நடந்து சென்றான். அவனுடைய வாசிப்பைக் கேட்டு அந்த ஊரின் அனைத்து வீடுகளிலிருந்தும் சிறுவர் சிறுமியர் வெளியே வந்தனர். மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பைப் போல் இசைக் கலைஞன் பின்னாலேயே சென்றனர். அவன் மலையேறிச் சென்றான். அ்கு ஒரு பெரிய குகைக்குள் சென்றான். வாண்டுகள் அனைத்தும் அந்தக் குகைக்குள் வந்து விட்டன. . இசையை நிறுத்தி விட்டு வெளியே வந்த அவன் , பெரிய கற்பாறையால் குகையை மூடினான். அவனுக்கு ஈடு கொடுத்து நடக்க முடியாத இரு மாற்றுத் திறனாளி சிறுவனும் சிறுமியும் இந்தக் காட்சியைக் கண்டனர். அவர்கள் , கிராமத்திற்குத் திரும்பி வந்து தங்கள் நண்பர்கள் குகைக்குள் அடைக்கப்பட்டதை பெரியவர்களிடம் சொன்னார்கள் . ஊரார் , துண்டைக் காணோம் துணியக் காணோம் என்பது போல் மலைப் பகுதிக்கு விரைந்தோடி வந்தனர். இசைக் கலைஞனிடம் கேட்டதை விட நான்கு மடங்கு தங்கக் கட்டிகள் அடங்கிய பைகளைத் தருகிறோம் எங்கள் பிள்ளைகளை விட்டு விடு என்று கெஞ்சினார்கள் . ஊர் தலைக்கட்டு , தங்கப் பையை உடனே கொண்டு வாருங்கள் என்று கட்டளையிட்டார். நான்கு பேர் கிராமத்தை நோக்கி ஓடினார்கள் .
இசைக் கலைஞன் எதுவும் பேசாமல் அநாயாசமாக குகையை மூடியிருந்த பாறையை நகர்த்தினான். பிள்ளைகள் வெளியே வந்தனர். பெற்றோர் , தங்கள் தங்கள் குழந்தைகளை வாரி அணைத்துக் கொண்டார்கள்.
‘ சுயநலம் எதற்கும் உதவாது . சொன்ன சொல் தவறாதீர்கள் . கொடுத்த வாக்கைக் காப்பாற்றுங்கள் ‘ என்று சொன்ன இசைக் கலைஞன் அவர்கள் ஒருவரையும் திரும்பிப் பார்க்காமல் மலையின் வேறொரு திசையை நோக்கி நடை போட்டான்.
(Pied Piper of Hamelin என்ற மேற்கத்திய நாட்டுப்புறக் கதையை அடியேனுடைய சொல் ஓவியத்தில் படைக்க முயன்றேன். ராபர்ட் பிரௌனிங் ஆங்கிலக் கவிஞர், இந்தக் கதையை கவிதையாக வடித்துள்ளார். அவன் குழந்தைகளை விடுவிக்காமல் சென்றான் என்றும் ஊதியம் பெற்று விடுவித்தான் என்றும் வெவ்வேறு விதமாக இந்தக் கதை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. நான் , ஏமாற்றியவர்களுக்கு ரேட் கேட்சர் பாடம் கற்பித்து வாக்கைக் காப்பாற்றாத அவர்களுடைய பணத்தைப் பெற விரும்பாமல் சென்று விட்டான் என்று முடித்துள்ளேன்.
உபரி தகவல் – இந்தக் கதையை நினைவு கூறும் வகையில் ஜூலை 22 – Rat Catchers day என்று பின்பற்றப்படுகிறது.)
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |
