கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 7, 2024
பார்வையிட்டோர்: 1,026 
 
 

அங்கம் 2 – காட்சி 1 | அங்கம் 2 – காட்சி 3 | அங்கம் 2 – காட்சி 4

இடம் : மாதவராயருடைய உத்தியாவனச் சோலை;

மாதவராயரும் ஸோமேசனும் வருகிறார்கள்.

காலம் : காலை.

(தகதீரமாரி இந்தினே கைஸேபதில் ஹயே – என்ற இந்துஸ்தானிப் பாட்டின் மெட்டு.)

ஸோமே :
அதிவேகமாகவோடுகின்ற மானை நோக்கு வீர்
மதியே கவர்ந்து சென்றதே! என்னாசை நண்பரே

மாத:
அகமோ குளிர்ந்த திங்கணுள்ள யாவு மின்பமே!
சுகமாக வாழலாகுமிங்கு ஸொர்க்க போகமே!

ஸோமே :
கனியே சொரிந்த மாபலா கதலி கொள்ளையாய்;
இனியேது தேவை? யோடு திங்கு தேனும் வெள்ளமாய்

மாத :
தவயோகியோரு மாசைகொண்டு தங்குகானிது
பவமேகப் பாவம் போக்கும். நன்மை யாவுமிங்குள.

ஸோமே : இந்தச் சோலை எப்படி இருக்கிறது பார்த்தீர்களா? நம்முடைய மற்ற நண்பர்களைப் போல் இல்லாமல் இது ஒன்றுதான் நம்மிடம் எப்பொழுதும் ஒரே விதமான அபிமானத்துடன் இருக்கிறது. தனவந்தன், ஏழை என்னும் பேதமில்லாமல் இது எப்பொழுதும் குளிர்ந்த நிழலையும், பழங்களையும், இன்பத்தையும் கொடுக்கிறது.

மாத : உண்மைதான்; பகுத்தறிவைப் பெற்ற மனிதனைக் காட்டிலும், அதைப் பெறாத மரஞ்செடி கொடிகளே மேலானவை; அதைப் பற்றி சந்தேகமென்ன?
(ரகுவம்ச சுதா என்ற கீர்த்தனையின் மெட்டு)

கதனகுதுகலம் – ஆதி

ஸோமே :
ப. பலவாய்க்கூடின பறவை யாடின!
மலர்வாய் வண்டினம் மோகனம் பாடின

மாத:
அ. குழலோ நாதமே குயிலின் கீதமே!
மழலை மொழியால் அஞ்சுகம் கொஞ்சின.

ஸோமே :
செவிக்கோர் பெரும் விருந்தே யிது.
உவப்பெயர் தினேனே ஓகோவின்பமே!

மாத :
பாவம் போக்கிடும் இடமே இது,
தவம் புரிந்தோமோ யாமிங்கேகவே!

ஸோமே ; அதோ கல்மேடை இருக்கிறது. அதில் கொஞ்சம் உட்கார்ந்து கொள்ளுங்கள். நேற்றிரவு எல்லாம் உங்களுடைய தேகம் அஸெளக்கியமாய் இருந்தது அல்லவா? ஆகையால் உட்கார்ந்து சிரம பரிகாரம் செய்து கொள்ளுங்கள். ஆகா அந்த வஸந்தஸேனையின் குணமே குணம் தங்கள் பொருட்டு அவள் எவ்வளவு பாடுபட்டாள். இரவு முழுதும் அவளுக்கு நித்திரையே இல்லையே!

மாத : (முகம் மாறுகிறது) நாம் காலையில் இங்கு வருவதற்குப் புறப்பட்ட பொழுது அவள் அலுத்து நித்திரை செய்து கொண்டிருந்தாள். அவளை எழுப்பாமலும் அவளிடம் சொல்லிக் கொள்ளாமலும் வந்து விட்டேன். அவள் எழுந்திருந்து என்னைப் பற்றி எவ்விதமான எண்ணம் கொள்வாளோ தெரியவில்லை. விருந்தாக நமது மாளிகைக்கு வந்திருக்கும் அவளை நாம் அலட்சியம் செய்து வந்து விட்டோம் என்று நினைப்பாளோ? கூடிய சீக்கிரம் வந்து விடுவதாயும், அதற்குமுன் அவள் போக வேண்டு மென்றால், அவளை நமது பெட்டி வண்டியில் வைத்து இவ்விடம் அழைத்து வரும்படியாகவும் சொல்லி விட்டு வந்தேன். நேரமாகிறது நாம் வீட்டிற்குப் போகலாம். அவள் ஒருவேளை நமது வரவை எதிர்பார்த்துக் கொண்டிருப்பாள்.

ஸோமே : அதோ பார்த்தீர்களா? நமது பெட்டி வண்டி வருவதை?

மாத: ஆம்! ஆம்! அவளே இங்கு வந்து விட்டாள். வந்ததற்குப் பலனாக இந்த உத்தியானவனத்தைப் பார்த்துக் கொஞ்ச நேரம் சுகமாய் இருந்து விட்டுப் போகட்டும். (தனக்குள்) இவளுடைய எண்ணம் நிறைவேறப் போகிறதில்லை. நான் என்ன செய்வேன்? பதிவிரதா சிரோன்மணியாகிய என் மனைவி கோகிலத்தின் மனத்தில் விசனம் உண்டானால் அதனால் நான் நாசமடைந்து விடுவேனல்லவா? ஆனால், இந்தப் பெண்மணி என் பொருட்டு அரசனையும் அலட்சியம் செய்து வெறுத்து, ஒரே மனதாய் என்னையே காதலித்திருப்பதை நான் எப்படி மாற்றுவேன்? இருக்கட்டும்; எவ்விதமாயினும் முயன்று இவள் மனதை மாற்ற முயன்று பார்க்கிறேன். (குணசீலன் வண்டியுடன் வருகிறான்)

ஸோமே : அடே குணசீலா! வண்டியில் யார் வந்திருக்கிறார்கள்?

குண : வஸந்தஸேனை அம்மாள்.

ஸோமே : (வண்டியின் அருகில் சென்று) நேரமானதால் நீங்கள் வரவில்லையென்று நினைத்து நாங்களே வீட்டிற்கு வர நினைத்தோம்; நல்ல வேளையாய் சமயத்தில் வந்து சேர்ந்தாய்.

குண : ஸ்வாமி மன்னிக்க வேண்டும். வண்டிக்கு அடியில் போடும் மெத்தையைப் போட மறந்து வந்து விட்டேன். பிறகு நினைத்துக் கொண்டு வீட்டிற்குப் போய்த் திரும்பி வந்து வஸந்தஸேனை அம்மாளை அழைத்து வந்தேன்; தாமசத்திற்கு நானே காரணம்; மன்னிக்க வேண்டும்.

மாத : சரி போகட்டும்; வஸந்தஸேனையைக் கீழே இறக்கி விடுவோம்.

ஸோமே : (ஒருபுறமாக) நாம் இறக்கி விடுவானேன், இவளை கால் சங்கிலியால் கட்டப்பட்டு இருக்கிறதோ? ஏன் தானாக இறங்கக் கூடாதோ? இவளுக்கு எவ்வளவு மரியாதை?

மாத : (வண்டியின் கதவைத் திறந்து பார்த்துச் சற்று அப்பால் விலகி) ஆகா என்ன ஆச்சர்யம்! யார் இது? வஸந்தஸேனையைக் காணோமே! கம்பீரமான தோற்றத்தை உடைய ஒரு புருஷன் அல்லவோ இருக்கிறான்.

(பிரதாபன் கீழே இறங்கி மாதவராயரை வணங்குகிறான்)

பிரதாபன் : ஸ்வாமி எதிர்பார்க்காத விருந்தாக நான் இந்த வண்டியில் வந்ததற்கு என்னை மன்னிக்க வேண்டும். ஆபத்திற்குப் பாபம் இல்லை என்று நியாயம் உண்டல்லவா? நான் இந்த வண்டியில் வந்திராவிட்டால் என் உயிரே போயிருக்கும்; ஆகையால் இந்தப் பிழையைத் தாங்கள் மன்னிக்க வேண்டும். (வணங்குகிறான்)

குண: (நடுநடுங்கி) இதென்ன ஆச்சரியம்! கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டதைப் போல, இவன் வண்டிக்குள்ளிருந்து வருகிறானே யார் இவன்? இதற்குள் எப்படி நுழைந்தான்? வஸந்தஸேனை எங்கே? (கையைப் பிசைந்து கொண்டு ஒரு மூலையில் நிற்கிறான்)

மாத : (பிரதாபனைப் பார்த்து) அப்படியானால் நீ வண்டியில் வந்ததைப் பற்றிச் சந்தோஷமே! நீ யார்? உனக்கு என்ன ஆபத்து நேர்ந்தது? இந்த வண்டியில் நீ எப்படி ஏறிக் கொண்டாய்?

பிரதா : நான் மாடு மேய்க்கும் குலத்தில் பிறந்தவன் என் பெயர் பிரதாபன்.

மாத : ஒகோ! நீ தானோ பிரதாபன்? போதும் போதும்; சங்கதிகள் எல்லாம் எங்களுக்குத் தெரியும். போகட்டும்; எப்படியாவது நீ உயிர் தப்பி வந்தாயே; அதுவே போதும். உனது விதியே நட்பாயிருந்து உன்னை இங்கு கொண்டு வந்தது.

பிரதா : நான் சிறைச்சாலையில் இருந்து தப்பி ஓடி வந்தேன். என்னைப் பலர் துரத்தி வந்தனர். கடைசியாக தங்கள் மாளிகைக் கதவின் மறைவில் ஒளிந்து கொண்டேன். இந்தப் பெட்டி வண்டி வந்தது. அதில் வந்து ஏறிக் கொண்டேன்.

குண : இந்த சங்கிலியின் ஓசையை வஸந்தஸேனையின் ஆபரணங்களின் ஒசையென்று நினைத்து ஓட்டிக் கொண்டு வந்து விட்டேன் முட்டாளாகிய நான்.

மாத : குணசீலா கவலைப்படாதே! நீ செய்தது பெருத்த உபகாரம்; கடவுளே இவ்விதமாக நடக்கும்படி சூழ்ச்சி செய்திருக்கிறார். நல்லது; இவரை இதிலேயே உட்கார வைத்து இவர் வீட்டில் கொண்டுபோய் விட்டுவா.

(பிரதாபன் பேரில் இருந்த சங்கிலியை விலக்கி நீக்குகிறார்)

பிரதா : ஆகா! ஸ்வாமி! தங்களுடைய குணத்தைப் புகழாதவர்களே இல்லை. அதை நான் இப்பொழுதே நேரில் காண்கிறேன். நீங்கள் விலக்கிய சங்கிலியைக் காட்டிலும் அதிக வலியுடையதும் எப்பொழுதும் நீடித்து நிற்கக் கூடியதுமான வேறு ஒரு சங்கிலியால் என் மனதைக் கட்டி விட்டீர்கள். இந்த உதவியை நான் ஒரு நாளும் மறக்க மாட்டேன். (வண்டிக்குள் உட்காருகிறான்) உத்தரவு பெற்றுக் கொள்ளுகிறேன்.

மாத : சரி சுகமாய்ப் போகலாம்; அடே குணசீலா! அரசனுடைய காவலர் வந்தாலும் வரலாம். சீக்கிரமாக ஓட்டிக் கொண்டு போ.

(குணசீலன் வண்டியை ஓட்டிக் கொண்டு போகிறான்)

மாத : நாம் இப்பொழுது செய்த காரியம் அரசனுக்குத் தெரிந்தால், நம்மை உடனே சிரச்சேதம் செய்து விடுவான். அந்தச் சங்கிலியைக் கிணற்றில் போட்டு விடுவோம். நேரமாகிறது. வஸந்தஸேனை நம்முடைய மாளிகையிலேயே இருப்பாள். நாம் சீக்கிரம் போய் அவளை வீட்டிற்கு அனுப்புவோம்; வா போகலாம். (போய் விடுகிறார்கள்)

– தொடரும்…

– 1920களில் வெளிவந்த நாவல்.

– வஸந்த கோகிலம், முதற் பதிப்பு: 2006, ஜெனரல் பப்ளிஷர்ஸ், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *