வளர விடாதே!





தனது மூன்று மகன்களையும் ஒழுக்க சீலர்களாக வளர்க்க எண்ணினார் அந்தத் தந்தை.
ஆனால், அவர் விருப்பத்துக்கு மாறாக, மூவரும் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கினார்கள்.
அவர்களை நல்வழிப்படுத்த எண்ணிய தந்தை, ஒருநாள் தனது மூன்று மகன்களையும் தன்னுடைய தோட்டத்துக்குக் கூட்டிப் போனார்.
இளைய மகனிடம் அங்கிருந்த ஒரு சிறு செடியைக் காட்டி “இதை உன் கையால் பிடுங்கு..’ என்றார்.
அவன் மிக எளிதாக அதைப் பிடுங்கி எறிந்தான்.
இரண்டாம் மகனிடம், புதர்போல வளர்ந்திருந்த ஒரு செடியைக் காட்டி, “இதை உன் கையால் பிடுங்கு, பார்க்கலாம்’ என்றார்.
அவனும் முயற்சித்தான். சிறிது நேரப் போராட்டத்துக்குப் பிறகு, தனது பலத்தையெல்லாம் திரட்டி அந்தப் புதர்ச்செடியைப் பிடித்து இழுத்துப் பார்த்தான். அதைப் பிடுங்க முடியாமல் சற்று தூரமாகப் போய் விழுந்தான். காலில் சிறிய சிராய்ப்புடன் எழுந்து நின்றான்.
இறுதியில் மூத்த மகனிடம், ஒரு மரத்தைக் காட்டி, “இதை உன் கையால் பிடுங்கு…’ என்றார்.
அவன் சொன்னான், “அப்பா, இந்த மரம் நன்கு வேரூன்றி வளர்ந்து விட்டது. இதை யாராலும் கையினால் பிடுங்க முடியாது!’
தந்தை கூறினார், “எந்த ஒரு தீய செயலையும் அது சிறியதாக இருக்கும்போது எளிதாக அகற்றி விடலாம். அதை வளரவிட்டால், பின்னர் அதை அகற்றவே முடியாது. உங்களிடம் உள்ள தீய செயல்கள் வளர்ந்து பெரிதாக மரமாகும் முன்னே அதை அகற்றிவிடுங்கள்!’
மூவருக்கும் புத்தி வந்தது.
– செ.சத்தியசீலன், கிழன் ஏரி.(நவம்பர் 2012)